World Tamil Blog Aggregator Thendral: ம்ம்ம்ம்

Sunday 13 October 2013

ம்ம்ம்ம்

இன்று13.10.13
ஸ்ரீவெங்கடேஸ்வரா பள்ளியில் த.மு .எ.க.ச வின் கிளைக் கூட்டம் நடந்தது.
இலக்கிய ஆர்வலர்களின் கூட்டம் என்பதால் நகைச்சுவைக்கு பஞ்சமின்றி சிரித்துக் கொண்டேயிருந்தோம்.
செவிக்குணவாய் கவிதைகள்,கட்டுரைகள்,சொற்பொழிவு,கருத்து புதுமையென ஐந்து நட்சத்திர ஓட்டல் விருந்து வழங்கப்பட்டது.
அதில் என் பங்காய் .......

ம்ம்ம்ம்ம்ம்
-------------
ஆதியில்
உடல்மொழி வாய்மொழியானது.

வார்த்தைகளால் விரிந்தது ஞாலம்

சொற்களால்
உலகை ஆளவும்
வீழ்த்தவும் இயலும்.

ஒரு சொல்லால்
மனம் மகிழும்
மனம் உடையும்.

மனதை வருடும் சொல்லோ
மலையென நம்பிக்கை ஊட்டும்.
 
இந்தியாவை உலகின் முன்
தலைநிமிர வைத்தது
விவேகானந்தரின் சொற்களன்றோ..!

சுதந்திரத்திற்கு வழியானது
காந்தியின் பதங்களே..!

தமிழரின்
தன்மான உணர்வைத்தூண்டியது
தந்தை பெரியாரின்கூற்றுக்களே..!

இசைவு சொற்களையே
இவ்வுலகு நேசிக்கும்..

எப்போதும் விரும்பாது
எதிர்மறை சொற்களை..

செயல்களை விடப்
பதங்களே
பதம் பார்க்கின்றன
மனதை...

வார்த்தைகளின் அகத்தில்
அன்பு,வெறுப்பு,
நட்பு,பகை,இன்னும்.இன்னும்....


சொற்களை விடுங்கள்.

‘ம்’ ஓரெழுத்து போதும்...

இசை துவங்கும் முன்
சுருதி கூட்ட எழும்
ஒற்றை எழுத்து...

மென்மையான’ம்’மில்
எதிர்ப்பார்ப்பது நடக்கும்..

அழுத்தமான ‘ம்ம்’மிலோ
நடந்தாலும் நடக்கலாம்...

வன்மையான ‘ம்ம்ம்’மில்
நடக்கவே நடக்காது...

நேசத்தில் ‘ம்’
நினைத்தது நிகழும்..

கோபத்தில்’ம்’
தொடராதே இனி எனும்..

வாதையில் ‘ம்ம்’
வலியின் துயரைக்கூறும்..

அம்மாவின் ‘ம்’

 அன்பையே காட்டும்..

அப்பாவின் ‘ம்’மோ
கண்டிப்புக்கே அதிகம் தோன்றும்..

எல்லாக்குழந்தைகளின் ‘ம்’மும்
ஐஸ்கிரீமிலேயே நிறைவடையும்...

காதலில்’ம்’ன் வலிமை
கற்பனைக்கெட்டாதது..

பகலில் கணவனின்’ம்’
இரவில் மனைவியின் ‘ம்’ஐ தரும்..

இனிமை இல்லறத்திற்கு
வேறென்ன வேண்டும்...

ஆதலால்
‘ம்’ மட்டுமே சொல்வோம்
‘ம்கும்’ தவிர்ப்போம்....

நன்றி.

No comments :

Post a Comment

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...