கதவுகள் திறக்கும் வானம்-
நந்தலாலா இணைய இதழில் இம்மாதம் வந்துள்ள எனது விமர்சனம்..
இந்தியப்பெண்கவிஞர்களின் கவிதைகள் -தொகுப்பு புதிய மாதவி.
விலை ரூ110/-
காவ்யா பதிப்பகம்.
----------------------------------------
விமர்சனம்
இந்தியப்பெண்ணியம் என்ற கட்டுரைக்காக திரட்டப்பட்ட கவிதைகளின் மொழியாக்கம் .
”பெண் மொழிக்குத் தேசங்கள் இல்லை, மொழிகள் இல்லை,இனங்கள் இல்லை”என்கிறார் புதிய மாதவி.பெண்கள் தங்களுக்குள் உரையாட மொழி ஒரு தடையில்லை என்பதை உணர முடிகின்றது.
“இந்தியாவில் பெண்ணியம் பேசுவதென்பது மிகவும் குழப்பமான ஒன்று.இந்தியப்பெண் பல நேரங்களில் பராசக்தியாக வழிபடப்படுகிறாள்,அதே நேரத்தில் பல சந்தர்ப்பங்களில் அவள் மிக கேவலமான அடிமையாக இழிவு செய்யப்படுகின்றாள்.ஒரு பெண் கவிஞர் என்ற வகையில் நான் அதுவா இதுவா என்கிற ஊஞ்சலாட்டத்தில் சிக்கிக்கொள்கிறேன் என்ற கவிஞர் கமலாதாஸின் கூற்றை எடுத்தாளுகின்றார்.
இந்நூல் 11 மொழிகளில்,19 கவிஞர்கள் எழுதிய 45 கவிதைகளைக்கொண்டுள்ளது.
சிந்தி -3
தெலுங்கு -1
கன்னடம்-1
உருது-1
இந்தி -2
ஒடியா-3
மராத்தி-2
பஞ்சாபி-3
சந்தாலி-1
மைதிலி-1
சிரியா-1
சில மொழிகளின் பெயர் கூட நாம் அறியாத ஒன்றாக உள்ளது...
இக்கவிதைகளில் உள்ள எல்லா மொழிகளிலும் பெண்களின் மொழி கேட்கப்படாத ஒன்றாக சமையலறையிலும்,துணி அடுக்கும் அலமாரிகளிலும் ,அவள் புழங்கக்கூடிய பொருட்களிலும் ,இடங்களிலும் அலைமோதி தவிப்பதை உணரலாம்.
சிந்தி மொழிக்கவிஞர் -மேனகா சிவ்தஷ்ஷானியின் கவிதை பெண் தன் முகத்தைத்தேடும் நேரத்தை உணர ஆரம்பித்த தருணத்தைக்கூறுகின்றது.
“அலங்கார மேசையில்
ஜாடிகள் கவிழ்ந்து கிடக்கின்றன
துண்டுகளாய் நொறுங்கிப்போய் பல வடிவங்களில்
இவை எல்லாவற்றையும்
எப்படி ஒன்றாக சேர்க்கப்போகிறேன்
இதன் கீறல்கள் வெளியில் தெரியாமல்”
உடைந்து போன பெண்ணின் மனதிற்கு உவமையாக ஜாடி கூறப்பட்டுள்ளது அருமை.
கொள்ளி வைத்தால் தான் சொர்க்கம் போகலாம்..மின்சார மயானம் வந்துவிட்ட நிலையில் நான் எப்படி சொர்க்கம் போவது என்ற கவலையை இந்திரா பூனா வாலாவின் கவிதை எடுத்துரைக்கின்றது.
தனக்கென ஒரு வீடு,சொத்து எதுவுமற்ற நிலையில் நிறுவப்படாத கல்லறையில் உயிருடன் புதைக்கப்பட்டுளதாக கூறுகிறார்...பூபதி ஹரானந்தானி.
தெலுங்கு மொழிக்கவிதையான மந்தரப்புஹேமவதியின் கவிதைகளில் காதலிக்கும் போது காதலியின் சொற்களனைத்தும் கவிதையாகவும்,மனைவியான பின் வெற்று உரையாடலாக விருப்பமற்ற சொற்களாக மாறிவிடும் யதார்த்தத்தைச்சுட்டுகின்றது.
மனைவி தயாரித்த உணவை உண்டு கொண்டே அவளை குறைகூறும் கணவனை அடையாளம் காட்டுகின்றது ஒரு கவிதை.
கவிதைகளைப் பற்றிய பொதுவான பார்வையாக
பெண்களின் அடிமைத்தனம்,வெளியே சொல்ல முடியாமல் மனதிற்குள்ளேயே புழுங்கி புழுங்கி மனநோயாளியாக வீட்டிலிருக்கும் பொருட்களுடன் பேசி வாழ்தல்,பழைய புத்தகத்தில் ஏறிய கரையானாய் பெண்களின் வாழ்க்கை..பெண்களின் வேதனைகளையே பெரும்பாலான கவிதைகள் கூறுகின்றன..மொழி வேறுபாடின்றி பெண்களின் சுதந்திரமற்ற நிலையை கவிதைகள் பறை சாற்றுகின்றன...
பெண் “கரடுமுரடான
கலாச்சார நூலேணியில்
கஷ்டப்பட்டு தொங்கிக்கொண்டிருக்கிறாள்”
என மராத்திக்கவிஞர் மல்லிக அமர்ஷேக் கூறுகின்றார்.
சில கவிதைகள் சமூகச்சிந்தனையை மையமாக கொண்டிருக்கின்றன...ஆகச்சிறந்த கவிதைகளாக அவற்றை நான் உணர்கின்றேன்...
சந்தாலி மொழிக்கவிஞர் நிர்மலா புடுல்
“இனி ஒரு போது வேண்டாம் என சொல் “சஜோனி கிஷ்கு
என சமூகத்திற்காக பாடுபட்ட பெண்கள் அடைந்த துன்பங்களை கவிதைகளாக வடிக்கின்றார்.
”கூரைகள் ஒழுகினால் ஒழுகிவிட்டு போகட்டும்
அதன் மேலேறி மராமத்து செய்யாதே
பகர்பூரின் பியாரி கெம்ப்ரொம் போல
நீயும் வல்லாங்கு செய்யப்படுவாய்
உன்மனிதர்களால்
உன்னை அவர்கள்
விட்டை விட்டு
வெளியேற்றி விடுவார்கள்”
என்பதன் மூலம் சமூகத்திற்காகப்பாடுபடும் பெண்களைசமூக விரோதியைப்போல பார்ப்பதும்,வல்லாகு செய்வது,சூனியக்காரியாக சித்தரிப்பதும்,நிர்வானப்படுத்துவதும் ஆண்களால் சர்வசாதாரணமாக நடைபெறுகின்றதை சாட்டையால் அடித்து கூறுகின்றது..
சிரியா-பெண்கவிஞர் மரமல்மஷ்ரியின் ”குழந்தைகளின் விரல் நுனியில் சாக்பீசுகள்”கவிதை
சிரியா புரட்சியைப்பற்றி
”பாடசாலையின் விளையாட்டு மைதானத்தின்
சுவர்களில் எழுதப்பட்டிருந்தது
விடுதலை என்ற சொல்
சரித்திரத்தின் சுவர்களில் விடுதலை
குருதியால் எழுதியது
அவர்களின் பெயர்களை”
“சிரியாவின் குழந்தைகள்
சவப்பெட்டியில் மூடப்பட்டுருக்கிறார்கள்
சர்க்கரை மிட்டாய்களைப்போல”
என்ற கவிதை சிரியாவில் நடைபெறும் வன்முறைகளால் குழந்தைகள் அழிக்கப்படுவதை கண்முன் கொண்டுவந்து நிறுத்துகின்றது...
“சிரியாவின் சிறைக்கூடத்தில்
பிறந்த மகன்
கற்பழிக்கப்பட்ட தன் தாயிடம் கேட்கிறான்
அம்மா” ஒரு கதை சொல்லு”
அவள் கூறும் கதையில் வரும் சன்னலைப்பற்றியும், சன்னலில் உட்காரும் பறவைகளைப்பற்றியும் கேட்க ,
” சுவரில் ஒரு சன்னலையும் குட்டிப்பையனையும்
வரைந்தாள்
கட்டிப்பயனுக்கு இரு சிறகுகளுடன்”
சிறையில் வீழ்ந்து மடியும் சிரியா நாட்டு மக்களின் நிலையை உலகிற்கு காட்சிப்படுத்துகின்றார்.
சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகள் கடந்த பின்னரும் பெண்களின் சுதந்திரம் பேச்சளவில் தான் உள்ளதென்பதை கவிதைகள் எடுத்துக்காட்டுகின்றது...மீறி சமூகத்திற்காக போராடும் பெண்களை உடல் அரசியலால் அவளை வீழ்த்தி வீட்டுக்குள் முடக்கி வைக்க சமூகம் முயல்வதை கூறுகின்றன சில கவிதைகள்...
இந்தியப்பெண்களின் கவிதைகளைத்தொகுத்து ஒரு உலகளாவியப்பார்வையில் பெண் இனத்தின் நிலைமையை உணர்த்திய கவிஞர் புதிய மாதவிக்கு அன்பு நிறைந்த வாழ்த்துகளும் ...,பாராட்டுகளும்...