World Tamil Blog Aggregator Thendral: 2017

Sunday 10 December 2017

மாணவன் பாலா

10.12.17.
சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்.
19 வருடங்கள் கழித்து பார்க்கிறான் கறாரான ஊபர் டிரைவராக Osthi Bala என்கிற பாலு.
1990முதல் 2002 வரை அரியலூர் மாவட்டம் மேலப்பழுவூரில் பணிபுரிந்த போது ... என்னிடம் படித்த பாலு என்கிற வாலு.
இவன் அண்ணன்  என்மீது அதிக பிரியமாக இருக்கும் Selva Kumar  .
அதே சேட்டை, அதிகாரம் , எப்போதும் வாய் ஓயாமல் பேசும் பேச்சு.
சின்ன வண்டில லக்கேஜ் ஏத்த கூடாதுன்னு சண்டை போட்டுக்கொண்டு வண்டியை எடுத்தவன்.என்னை பார்த்ததும் நீங்கள் கீதா டீச்சர் தானேன்னு ஆச்சரியமாக கேட்டான் .
நான் யாருப்பா நீ என்றேன் . என்ன டீச்சர் என்னை தெரியவில்லையா நான் தான் பாலு என்றான்.
அப்பா மாதிரியே  நீயும் கார் வாங்கிட்டியா என்றேன்.
நான் தான் அப்பவே டிரைவராக தான் ஆவேன்னு சொன்னேன்ல என்றான்.
பாருங்கள் உங்களப்போல வலதுகை ல வாட்ச் கட்டிருக்கேன் என்கிறான்.என்னா அடி அடிப்பீங்க டீச்சர் அதனால் தான் நல்லா இருக்கேன் என்கிறான்.
சென்னை ட்ராஃபிக் ல அட்டகாசமாக வண்டி ஓட்டியவனை பார்த்து ரசித்து கொண்டே வந்தேன்.
சொந்த காரில் ஜம்முன்னு என்னை இறக்கி விட்டு பணம் வாங்கவே மாட்டேன்னு கண்கலங்க மறுத்தவனின் அன்பிற்கு என்ன கைம்மாறு செய்வது.
மாணவர்கள் மனதில் நிற்கும் ஆசிரியராக வாழ்கிறேன் என்பதை விட வேறு என்ன வேண்டும்?.

Thursday 23 November 2017

புதுக்கோட்டை புத்தக திருவிழா

அன்புடன் அழைக்கிறோம்
புதுக்கோட்டை புத்தக திருவிழா விற்கு...
தமிழ் நாடு அறிவியல் இயக்கம் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களின் சிறப்பான திட்டமிடலில் மிக அருமையாக இன்று இரண்டாவது புத்தக திருவிழா காலை 9.30 மணிக்கு துவங்கும் உள்ளது.
இவ்வாண்டு மாணவர்களுக்கு உண்டியல் வழங்கி சலுகை விலையில் புத்தகங்கள் வாங்க அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.இரண்டுஇலட்சத்திற்கும் மேல் மாணவர்கள் சேமித்து புத்தகங்கள் வாங்க உள்ளனர்.
விழாவிற்காக puthukkottai book fair என்ற செயலி நேற்று வெளியிடப்பட்டது.
மாணவர்கள் கலைநிகழ்ச்சிகள் புதுகையை கலக்கப்போகிறது.
சிறந்த பேச்சாளர்கள் செவி விருந்தளிக்க உள்ளனர்.
மனதை விசாலமாகட்டும் புத்தகங்களை குழந்தைகளுக்கு தந்து அவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றுவோம்.வாருங்கள்.

Tuesday 21 November 2017

அன்புடன் அழைக்கின்றோம்

வீதி கலை இலக்கியக்களம் மற்றும் வலைப்பதிவர் சந்திப்பு குறித்த கூட்டத்திற்கும்   புதுக்கோட்டை புத்தகத்திருவிழாவிற்கும்

நாள் :26.11.17.
காலை :10மணி 
இடம் :ஆக்ஸ்போர்டு சமையர்கலைகல்லூரி.புதுக்கோட்டை.புதிய பேரூந்து நிலைய மாடியில்.

வீதி கலை இலக்கியக்களம் 45 ஆவது கூட்டம் .

குழந்தைகள் இலக்கிய சிறப்புக்கூட்டம்

சிறப்பு விருந்தினர் :கவிஞர் மு.பாலசுப்ரமணியம் புதுச்சேரி
                   சிறுவர் இலக்கியப்படைப்பாளர் ,விருதாளர் ,பொறியியலாளர் .


வீதி உறுப்பினர்களுடன் வலைப்பதிவர்களும் சங்கமிக்கும் சிறப்பு விழா ..

வருக வருக .

நன்றி

கூட்ட அமைப்பு கவிஞர்  மீரா செல்வகுமார்


வேலுநாச்சியார் நூல்

எனது முதல் வேலுநாச்சியார் ஆய்வு நூல் மறுபதிப்பில்

"வேலுநாச்சியார் நாவலில் பெண்ணயச்சிந்தனைகள் "-
இளமுனைவர் பட்ட ஆய்வு நூலாக மறுபதிப்பு காண்கிறது .

எழுத்தாளர் கே.ஜீவபாரதி அவர்களின் வேலுநாச்சியார் நூலே எனது வாழ்வை புரட்டி போட்ட ஒரு நூல் அன்றிலிருந்து இன்று வரை என் குருதியில் கலந்த பெயர் ...நினைக்கும் தோறும் சிலிர்க்கும் அவரது திண்மையும் ,திறமையும் .

சமீபத்தில் சென்னையில் வேலுநாச்சியார் என்ற பெயர் கொண்ட ஆசிரியரைப்பார்த்த போது என்னவோ அவரையே பார்த்த மகிழ்வு .

ஜான்சிராணிக்கு 77 ஆண்டுகளுக்கு முன்பே சிவகங்கை சீமையை தந்திரமாகப்பி டித்த ஆங்கிலேயரை எட்டு வருடங்கள் மறைவு வாழ்க்கை வாழ்ந்திருந்து மன்னர்ஹைதர் அலியின் உதவியோடு அடித்து விரட்டிய வீரமங்கை வேலுநாச்சியார் தமிழகப் பெண்களுக்கு முன் உதாரணம் .

அவரது பன் மொழித்திறமை ஆசம்.திருமணப்பரிசாக ஒரு சிறுமி குதிரை கேட்க முடியுமா ?கேட்டவர் அவர் .
அப்படி கேட்கும் உரிமையைத்தந்தவர் அவரது தந்தையார் இராமநாதபுர மன்னர்செல்லமுத்து சேதுபதி .

அவரது பிரியத்திற்குரிய குயிலியே சுதந்திரப்போரில் முதல் தற்கொடைப்போராளி ....தாய்நாட்டிற்காக தனது உடலில் நெய்ஊற்றிக்கொண்டு ஆங்கிலேயரின் ஆயுதக்கிடங்கை சின்னாபின்னமாக்கிய தீரப்பெண்மணி.
தனது அரசிக்காக அவரைக்காட்டிக்கொடுக்க மறுத்து தனது தலையையே தந்தவள் உடையாள் எண்ணும் சிறுமி .அவளின் தியாகத்திற்கு தனது வைரத்தாலியையே பரிசாகத் தந்து பெருமைப்படுத்தியவர் வேலுநாச்சியார் .
நம் குழந்தைகளுக்கு அடையாளம் காட்டி ,அவரது பெயரை இட்டு வளர்க்க தகுதியானவர் .

சிலர் அவரை சாதிக்குள் அடைக்கலாம்.ஆனால் யாராலும் அடைக்க முடியாத மாபெரும் பெண்மணி வீரமங்கை வேலுநாச்சியார் ...
அவர் குறித்த ஆய்வை செய்ததே எனது வாழ்நாள் பயன் பெற்றதாக உணர்கிறேன் .மேன்மை பதிப்பகம் இந்நூலை அச்சிடுகிறது ...
மிக்க நன்றி அவர்களுக்கு .

Sunday 19 November 2017

புத்தகங்களே துணை .

புத்தகங்களே துணை என்ற தலைப்பில் புதுக்கோட்டை மாவட்ட50ஆவது நூலக வார விழாவில் நடந்த கவியரங்கில் வாசித்த கவிதை.

எழுத்து பூக்களால் நிறைந்த
எண்ணச்சோலையின்
எழில் வனம்.

அடர் வனத்தின்
மணமுணர்த்தும்
மனோரஞ்சிதம்.

பருக பருகத் தீராத
போதை தரும்
மதுக்கோப்பை.

தூக்குக் கயிற்றையும்
முத்தமிடத் தூண்டும்
துணிவின் ஊற்று.

கேட்பதை யெல்லாம்
கேளாமல் வழங்கும்
அட்சயப் பாத்திரம்.

சிதறுண்ட தேசத்தை
சித்திரமாக்கும்
தேவகானம்.

பதரென்று எதையும்
விலக்க முடியாத
அமிழ்தம்.

களரான மனதையும்
வளமாக்கி
பண்படுத்தி
தளராமல் காத்திடும்
உன்னத சக்தி.

புத்தகங்கள் வெடிகுண்டென
வெடித்த வரலாறு உண்டு.

வீணாய் மடியும்
மாந்தர்களுண்டு.

வீணாய்ப் போன
புத்தகங்கள் எதுவுமில்லை.

வாழ்ந்த புத்தகங்கள்
வாழ்கின்ற புத்தகங்கள்
எல்லாவற்றையும் விட

சாகாவரம் பெற்ற
புத்தகங்களே
சாதிக்கும்
வல்லமை தந்திடும்.

சாதனையாளர்களை
சமைத்திடும்
சமூகச்சிற்பியது.

ஓவியங்கள் அழகாகும்
வண்ணங்களால்.

மனித மனங்கள்
வண்ணமயமாகும்
நூல்களால்.

எண்ணங்களின் தூவல்களை
விசிறி மனவீட்டை
ஜொலிக்கச் செய்திடும்
மாயவித்தைக்காரன்.

அலைபேசிக்கருவியை
ஆர்வமுடன் இயக்கும்
குழந்தைகளின் கரங்களில்,
தவழ்ந்திடத் துடிக்கும்
புத்தகங்களைத் தந்திடுங்கள்.
அவர்களின் மனங்களை
மலரச்செய்யும்
தப்பாமல்.

நூல் தொட்ட கைகளே
தைத்திடும்
சமூகக்கிழிசல்களை.

நூல்களைத் தொட்டு
தைத்திடுவோம்
வாரீர்..

Friday 17 November 2017

அறம்-திரை விமர்சனம்

இது சினிமா...'அறம்'

இப்படக்குழுவினரே காலத்தின் பிரதிபலிப்பு..
முதலில் அட்டகாசமான நடிப்பால் மதிவதனியாகவே வாழ்ந்துள்ள மதிப்பிற்குரிய தோழர் நயன்தாரா அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.


ஒரு பெண்ணை அறிவுடைய வராக,தன்னம்பிக்கை மிக்கவராக,ஆளுமைத்திறனுடையவராக,துணிச்சல் மிக்கவராக,சுயம் உடையவராக, சுயமரியாதை உடையவராக,எளியவராக,மக்களுக்காக போராடுபவராக,சமூக அக்கறை உடையவராக,அதிகாரத்திற்கு அஞ்சாத வராக.....காட்டியுள்ள இயக்குநருக்கும்..படக்குழுவினருக்கும் மனம் நிறைந்த மரியாதையுடன் கூடிய நன்றியை முதலில் கூறிக்கொள்கிறேன்.

இத்தனை ஆண்டுகளாக ஊடகங்கள் காட்சிப்படுத்திய பெண்மயத்தை உடைத்து எறிய, காசுக்கு விலை போகாத அசாதாரண துணிச்சல் வேண்டும்.

அரைகுறை ஆடையில் கவர்ச்சிக்காக பயன்படும்பொருளாகவே திரையில் காட்டப்படுபவளை முதன்முதலாக மக்களோடு மக்களாக ஒரு மதிக்கக் கூடிய மனிதியாக படைத்த நல்ல உள்ளங்களுக்கு ஒரு ஹாட்ஸ் ஆஃப்.
காலத்தின் கட்டாயம் அறம்.
விஷச் செடிகளுக்கு நடுவே முளைத்த மூலிகை.
நாயக வழிபாட்டை உடைத்தெறியும் நிதர்சனம்.
குரலற்றவர்களுக்கான இடி முழக்கம்.
காமிராக்கள் கருப்பும் அழகென காட்டும் அற்புதம்.
எது தேவை என மக்களுக்கு உதவும் சிறு துரும்பு.
குழியில் வீழ்ந்து கிடக்கும் திரைக்கதையை, புறக்கணிக்கப்பட்ட மக்களை, ஒடுக்கப்பட்ட மக்களின் வேதனைகளை, மக்களின் சுயமரியாதையை,உண்மையை மீட்க வந்த கரம், அறம்.
சுயநலமான அரசியல் வாதிகள்,அதிகாரிகளின் முகத்திரையை கிழித்திடும் கூர்வாள்.
சமூக நலன் இல்லாத இலக்கியம் இருந்தால் என்ன? அழிந்தால் என்ன?
அறம் இந்தியாவின் உண்மை முகத்தை, உலகுக்கு பறை சாற்றும் ஆதிப் பறை.
மக்களுக்கு எதுவும் தெரிந்துவிடக்கூடாதென்றே சாராயம் மட்டுமே தெரியவைக்கும் கொடுமையை தகர்க்கும் சாட்டை.
மக்களுக்கான அரசு முதலாளித்துவ அரசாக மாறிவிட்ட நிலையில் தங்களைத்தாங்களே வழிநடத்திக் கொள்ள நிமிரும் உன்னதம்.
கரிசல் காட்டு காவியம்.
சிறந்த கதையமைப்பால், ஆகச் சிறந்த இயக்கத்தால், மதிவதனியின் மட்டுமல்ல படத்தில் நடித்த ஒவ்வொருவரும் அதில் வாழ்ந்துள்ளனர்.
படம் பார்க்கும் முன் இருந்த மனதை தூக்கி எறிந்து,படம் முடியும் போது அனைவரையும் படத்தில் வாழ வைத்த இயக்குநரை என்ன சொல்லி பாராட்டுவது.
இத்தனை அழகாய் கருமையான முகங்களை காட்ட இந்தப்பட ஒளிப்பதிவாளரால் தான் முடியும்.
விண்தொடும் அறிவியலின் தோல்வியில்
புறக்கணிக்கப்பட்ட மக்களின் வெற்றி உள்ளது என்பதை உலகுக்கு உரைக்கட்டும்.
ஒவ்வொரு வினாடியும் வாழ்ந்த உணர்வு.
அகனிக்குஞ்சை மனக்காட்டில் விதைத்துள்ள 'அறம்'திரைப்படக்குழுவினருக்கு மனம் நிறைந்த நன்றியும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..


Saturday 11 November 2017

தமிழ் நாடு பாடப்புத்தகம் தயாரிப்பு பணி

தமிழ் நாடு பாடப்புத்தகம் தயாரிப்பு பணி.
என் பங்களிப்பு.ஒரு கவிதையோடு...
மதிப்பிற்குரிய கல்வி செயலாளர் முன்னிலையில் வழங்கிய மறக்க முடியாத தருணம்..

பாடநூல் எதற்காக
கற்பிக்கவோ
வழிகாட்டவோ அல்ல.
குழந்தையின் மனம் திறக்கும்
சாவியது....

சாவியை பட்டென்று நுழைத்து#பாதங்களால்_நிறையும்_வீடு
கடலை வீட்டுக்குள்
நிரப்பின
ஆழி தொட்ட பாதங்கள்.

கடல் மணம் முகர்ந்து
துள்ளியது
கடை மீன்
பாதங்களை நாடி தவழ்ந்தது.

பெரிய பாதங்களை நாடும்
குட்டி பாதங்களென.. விடாதீர்கள்
தொடாமலே வாடிவிடக்கூடிய
அணிச்சமலரணையது.
மென்மையாக புகுத்தி
மெதுவாய் திருப்புங்கள்..
இறுக மூடிய மனக் கதவுகளை
தானாக திறக்க உரைத்திடுமது.

சாவியை தொலைத்து விடாதீர்கள்
சாதனைகளை,சாதனையாளர்களை
சாதிக்க உதவும் ஏணியது.

சாவி அனுப்பும் கேள்வி க்கணைகள்
குத்தி குதறாமல்
மயிலிறகால் வருடி
மனமதைத் திறந்து
முகையை விரித்து
முழுமையாய் மணம் வீசி
மலரவே செய்யட்டும்...
சாவிகளை வார்த்து
சரித்திரம் படைக்க வந்தோரே
சமுதாயம் செதுக்கும்
சிற்பிகளே
சாவிகளை பதமாய்
சமைத்திடுங்கள்
புத்தம் புது உலகு
சத்தமின்றி படைக்கட்டும் அது...

திட்டமிட்டு சிறப்பாக தயாரிப்பு நடக்கிறது.

Thursday 2 November 2017

Where shall I go?

எனது எங்கே போவேன்?
கவிதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த கவிஞர் மணிமொழிக்கு மிக்க நன்றி
Todays girl child's cry...
continues without a full stop as the pain of violence.In Facebook and what's up,20,000 shares have been shared for this poem in Tamil.
Where shall I go?
-----+++++----++++++
I thought it was dad
but his touch was bad.
Moved with him
thinking
was a brother
but was an embarraser.
Spoke to uncle affectionately
but he behaved ungenerously.
All the inter relationships
call for illegal relationships
Being a teacher
he too cuddled
saying
if refused
marks will get
dwindled.
A helping hand
of a friend
gave a caressing care
without an end
asking to rest
the numbing lust
curled with frightenedness
in the absence of consciousness
shot film in
cell phone hot
because
he too belongs
to the same gender lot.
To scream out wild
surrendered to Lord intensified
fondled with a
so called concerning touch
said the saint
God will support much.
I ululate and race
where shall I pace?
All the people shout
that equality has sprout
when shall woman
be treated as human?
When shall sexual violence
attain deep silence?

Translated by
Manimozhi
_______________________________
‌இன்றைய பெண் குழந்தையின் கதறலாய்...முடியாது தொடரும் வன்முறையின் வலியாய் .முகநூல் மற்றும் வாட்ஸ் அப்பில் 20000 பகிர்வுகள் பகிரப்பட்ட கவிதை.

எங்கே போவேன்?
அப்பான்னு நினச்சேன்
அசிங்கமாய்த் தொட்டான்
சகோதரன்னு பழகினேன்
சங்கடப்படுத்தினான்
மாமான்னு பேசினேன்
மட்டமாய் நடந்தான்

உறவுகள் அனைத்தும்
உறவாடவே அழைக்கின்றது...
பாதுகாப்பை நாடி
பள்ளிக்குச் சென்றேன்
ஆசிரியனும் அரவணைத்து
மறுக்காதே மதிப்பெண்ணும்
குறையுமென்றான்...
நட்புக் கரமொன்று
நண்பனாய் தலைகோதி
தூங்கென்றான்
மரத்த மனம்
மருண்டு சுருண்டு
மயங்கித் தூங்கையில்
கைபேசியில் படமெடுத்தான்
அவனும் ஆண்தானே...
கதறி அழ
கடவுளைச் சரணடைந்தேன்
ஆறுதலாய் தொட்டுத்தடவி
ஆண்டவன் துணையென்றான்
சாமியாரும்...
அலறி அடித்து
ஓடுகின்றேன்
எங்கே போவேன்?
சமத்துவம் வந்ததென
சத்தமாய்க் கூவுகின்றார்
பெண்ணை
பெண்ணாய் பாராமல்
மனிதராய் பார்க்கும் நாள்
எந்நாளோ?
பாவிகளின் பாலியல் வன்முறை
எப்போது ஓயுமோ?

Monday 30 October 2017

அதிகாலை

வலசைப் போகும் பறவையின் லாவகத்தில்
அதிகாலையை சுவைக்க நடக்க ....
நடைப்பாதையை கழுவி
காத்திருந்தது அது..
தென்றலை துணையாக செல்ல
கட்டளையிட்டது......
விடுமுறை கேட்டு துள்ளிடும்
குழந்தைகளாய்...
 வரவேற்றன தளிர்கள்....
கதகதப்பாய் அணைத்து உறங்கும்
நாய்க்குட்டிகளோடு உறங்க
எழுந்த ஆசையை
செல்லமாய் அதட்டி...
நீரலைகளிலில் பறந்த வானத்திற்கு
நீண்ட கண்முத்தங்களை
பறக்கவிட்டு.....
தொட்டு மகிழ்ந்த
சாரலுக்கு...
தாராளமாய் அனுமதிக்க
பட்டுத்தெறித்த மழை
பரவசமாய் விடுமுறை
பரிசை அன்போடு தந்து
சிரித்தது....

Sunday 29 October 2017

வீதி கலை இலக்கியக் களம் 44

இன்றைய வீதி கலை இலக்கியக் களம் 44 ஆவது கூட்டம் எதிர் பார்த்ததை விட மிகச் சிறப்பாக நடைபெற்றது.

புதுக்கோட்டை பிலிம் சொசைட்டி நிறுவனர் கவிஞர் இளங்கோ அவர்கள் தலைமை ஏற்றார்.

கவிஞர் மலையப்பன் வரவேற்புரை வழங்க, கவிஞர் சிவக்குமார் நன்றியுரை நல்கினார்.


அரபு நாட்டில் பணிபுரியும் தோழர் சாதிக பாட்ஷா அவர்கள் வீதியில் கலந்து கொண்டு பாராட்டினார்கள்.

நிகழ்வு துவங்கும் முன் கவிஞர்கள் இளங்கோ ஜெர்மானிய படம் குறித்தும் ,மலையப்பன் அஸ்ஸாமில் பார்த்த மலையாள திரைப்படம் டேக் ஆஃப் மற்றும் மாம் படங்கள் குறித்தும், நாகநாதன், சிவக்குமார், பேராசிரியர் விஜயலெக்ஷ்மி ஆகியோர் தங்களது அனுபவ உரைகளையும் வழங்கினார்கள்.

2016 ஆம் ஆண்டு  புதுக்கோட்டை மாவட்டத்தில் வெளிவந்த நூல்கள் குறித்த விமர்சன நிகழ்வு.

கவிஞர் சுராவின் "ஒரு நாடோடி கலைஞன் மீதான விசாரணை"என்ற சிறுகதை தொகுப்பை அருமையாக விமர்சனம் செய்தார் பேராசிரியர் விஜயலெக்ஷ்மி.

முனைவர் நா.அருள்முருகன் அய்யாவின்"பாறைஓவியங்கள்"என்ற ஆய்வு நூலை கவிஞர் மீரா செல்வகுமார் தனக்கே உரிய கவிதை நடையில் மிகச் சிறப்பாக விமர்சனம் செய்தார்.

கவிஞர் ஸ்டாலின் சரவணன் எழுதிய"ஆரஞ்சு மணக்கும் பசி"கவிதை நூலை கவிஞர் கீதா ஆய்வுரையாக சமர்ப்பித்து பாராட்டினார்.


கவிஞர் சச்சின் எழுதிய"ஷெர்லாக் ஹோம்ஸ் ஜேம்ஸ் பாண்ட் ஆகிறார்"என்ற கவிதை நூலை கவிஞர் ரேவதி அனைவரும் பாராட்டும் படி விமர்சனம் செய்தவிதம் மிகச் சிறப்பு.


கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களின்"தேவதைகளால் தேடப்படுகிறவன்"கவிதை நூலை திருமிகு இரா.ஜெயலெட்சுமி அவர்கள் கலகலப்பாக.... அனுபவித்து ரசித்து சொன்ன விதம் வீதியை மகிழ வைத்தது.

கவிஞர் சோலச்சியின் "காட்டுநெருஞ்சி"நூலை மாணவர் சூர்யா சிறப்பாக விமர்சனம் செய்தார்.

கவிஞர் தூயன் அவர்களின் "இருமுனை"சிறுகதை தொகுப்பை கவிஞர் ஸ்டாலின் சரவணன் மிக அருமையாக விமர்சனம் செய்தது அந்நூலை வாசிக்கும் ஆர்வத்தை தூண்டியது.


கவிஞர் நீலாவின்"அலையும் குரல்கள்"கவிதை நூலை மாணவர் அஜீத் குமார் மதுவின் தீமைகள் குறித்து விமர்சனம் செய்தது சிறப்பு.


கவிஞர் மிடறு முருகதாஸ் அவர்களின்"மிடறு"கவிதை நூலை கவிஞர் இந்துமதி விமர்சனம் செய்த விதம் பாராட்டுக்குரியது.

இறுதியாக மருத்துவர் ஜெயராமன் அவர்களின்"நான் ஏன் பதவி விலகினேன்"என்ற அண்ணல் அம்பேத்கர் அவர்களின் உரைகள் அடங்கிய நூலை கவிஞர் ராசி பன்னீர் செல்வம் அவர்கள் அறிமுகம் செய்தபோது அண்ணல் அம்பேத்கர் பற்றிய வியப்பில் வீதி திளைத்தது.


பத்து புத்தகங்கள்.... அதன் படைப்பாளர்கள்..... மிகச் சிறந்த விமர்சனங்கள் என வீதி ஆகச் சிறந்த களமாக இன்று திகழ்ந்தது.
இளைஞர்கள் பலரின் வருகை மகிழ்வைத் தந்தது.
விமர்சனம் செய்தவர்கள் படைப்பாளர்களுக்கு நூல் பரிசளித்து கௌரவித்தார்கள்
கவிஞர் பாலா கவிஞர் கந்தர்வன் ஆகியோர் இருந்த சூழலை தற்போது காண்பதாக..... படைப்பாளர்கள் ஒன்றிணைந்து....ஒருவரை ஒருவர் ஊக்குவிக்கும் பண்பு பாராட்டுதற்குரியது என்று வீதியை கவிஞர் பன்னீர் செல்வம் அவர்கள் வாழ்த்தினார்கள்.
வீதி தனது பாதையில் வளர்ச்சி அடைந்து முன்னேறி உள்ளது என்று கவிஞர் ஸ்டாலின் சரவணன் பாராட்டினார்.
வீதி தனது வளர்ச்சியில் எங்களையும் வளர்த்து கொண்டு நடை போடுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

Saturday 21 October 2017

22.10.17 விஜய் (விஷ) டிவி

விஜய் (விஷ)டிவிக்கு
இன்று தமிழ் பெண்கள் அழகா?கேரளப் பெண்கள் அழகா?
நீயா நானா கோபிநாத்
நாட்டில்
தீர்க்க வியலா
பிரச்சினைகள்
கடலலையாக..
கல்லா கட்ட
பொம்பளய வச்சி
சம்பாதிக்கும்
நாதாரிகளே
அழகு என்பது
அகத்தில்..

அந்நியரை
எதிர்த்து போரிட்டாளே
வேலுநாச்சியார்....
அவளிடம் உள்ளது
போர்க்குண அழகு...

முதல் தற்கொடைப்போராளி
குயிலியின்
தியாகம் அழகு.

ஒற்றை காலுடன்
சிகரம் தொட்டாளே
அருணிமா
அவளின் உடைந்த
காலில் உள்ளது
தன்னம்பிக்கை அழகு.


கேவலமான
ஆணாதிக்கவாதியால்
ஆசிட் தாங்கிய
முகத்துடன்
அன்பை பொழியும்
லெட்சுமியின்
மனம் உறுதியழகு

சாக்கடையை
மனதில்
சுமக்கும்
உங்கள்
அழகு எப்படி?

அவளதிகாரம்

அவளதிகாரம்

ஏஏஏ அம்மம்மா
கடைக்கு போய்
நான் கேட்குறத
 வாங்கி கொடு...

ஏஏஏ அம்மம்மா
நான் சொல்றதை
சொல்றியா...

ஏஏஏ அம்மம்மா
உனக்கு
அ,ஆவன்னா
தெரியுமா தெரியாதா....

ஏஏஏ அம்மம்மா
ஆங்க்ரி பேர்டு
விளையாட்டு
தெரியுமா தெரியாதா

ஏஏஏ அம்மம்மா
கீத்தா கீத்கீத்கீத்தா
சொன்னபேச்சு
கேட்டியா
மாட்டியா.....

Wednesday 4 October 2017

"மனம் சுடும் தோட்டாக்கள்."
கவிதை நூல் விமர்சனம்.

ஒரு நூல் விமர்சனத்தை இப்படி கூட வித்தியாசமான முறையில் அளிக்கலாம்.. என்று காட்டிய கவிஞர் மீரா செல்வகுமார் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி....

இத்தனை படங்களை எங்கிருந்து எடுத்திருப்பார்...
என் வாழ்க்கையை எனக்கே அழகாக காட்டியமைக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் நன்றிகளும்...

Sunday 24 September 2017

மனம் சுடும் தோட்டாக்கள் -கவிதை நூல் விமர்சனம்

எனது நான்காவது நூலான மனம் சுடும் தோட்டாக்கள்.... கவிதை நூல் விமர்சனம்..
 கவிஞர் மீரா செல்வகுமார் அவர்களின் கவிதை நடையில்.. 
"வேலைக்குப்போகும்
ஒரு சராசரிப் பெண்ணால் என்னவெல்லாம்
 செய்திடமுடியும்..
 புதுப்புது சேலைகள்..
புருவம் சிரைத்தல்
 புரணிகள் பேசுதல். தொலைகாட்சித்தொடர்
செய்யும் லீலைகளுக்காய்
கண்ணீர் சிந்துதல்?
 ஒ
ஒருவேளை
நீங்கள்
 கொஞ்சம்
முற்போக்கானவரெனில்..
புத்தகங்கள் வாசிக்கலாம்..
அறிவார்ந்த
 விமர்சனங்கள்
செய்யலாம்.
ஆடைகளில்
கொஞ்சம்
ஆணுக்கான
சாயல் கொள்ளலாம்..
அரசியல் சார்ந்த
பிண்ணனி எனில் சமூகப்பொறுப்புகளை
சுமக்கலாம்..
இவற்றில்
எந்த சம்பந்தமும்
 இல்லாத
ஒரு அரசுப்பள்ளியின்
 ஆசிரியை
எத்தனை
கோணங்களில்
விஸ்வரூபமெடுத்து
 நிற்கிறார்..
நகரின்
புதிய கடையொன்றில்
 வாங்கியிருக்கும்
ஆடையோ
அணிமணியோ
காட்டுவதற்கென்றே
கூடும்
ஆசிரிய அலுவல்
 கூட்டங்களில்
 சம்பந்தமில்லாத
 புத்தகங்களை
இவர்
ஏன் புரட்டிக் கொண்டிருக்கிறார்... மொக்கை
நகைச்சுவைகளுக்கு
கைதட்டி ஆர்ப்பரிக்கும்
ஒரு கூட்டத்தில்
அமர்ந்திருக்கும்
விரல்விட்டு
எண்ணிவிடக்கூடிய
மகளிர் இடையில்
 இவர் என்ன
குறிப்பெடுப்பார்?
 ஜல்லிக்கட்டு
 போராட்டங்களின்
 ஒவ்வொரு
மாலையிலும்
 இவர் முழங்கிக்
கொண்டிருக்கிறார்..
சக தோழர்களின்
போராட்டங்களில்
 தன் சங்கத்தை மீறி
கைதாகிறார்..
மொட்டை
வெயிலடிக்கும்
 மைதானத்தில்
 ஏதோ எழுதிக்
 கொண்டிருக்கிறார்..
அது சூரியனைச்
 சுட்டெரிக்கும் கோஷங்களாக குரலுயர்த்துகிறது..
சக மனிதன்
 ஒருவன்
மரித்துப்போனதற்கு
மண்டியிட்டு
 ஏன் அழவேண்டும்..
இறந்தவன்
மறந்தவனான பின்னும்
அவன்
குடும்பத்திற்கு
தாயாய்
ஏன் இருக்கிறார்?
மாணவிகளின்
 புத்தகங்களை சரிபார்க்கும்
சக மனுஷிகளிடை
இவர்
 ஏன்
அவளின்
சாப்பாட்டுபெட்டியின்
 எடைகுறைவை
ஆராய்கிறார்.?
 இலக்கியக் கூட்டங்களா? ஆலோசனைக் கூட்டங்களா? இவருக்கான
இருக்கை
இருகை
 நீட்டி
எப்போதும் கிடக்கிறது..
யார் இவர்..
இவருக்கும்
இந்த இடங்களுக்கும்
என்ன தொடர்பு...
புத்தனைப்போல்
போதிமரம்
தேடியெல்லாம்
 போக வேண்டியதில்லை...
அவன்
சொன்னதைப்போல
இவர்
ஆசைப்படவும் இல்லை... பேராசைப்படும்
ஒரு..
மனிதம்
நேசிக்கும் மனுஷி..
அவ்வளவே..
புதுகையின்
 இன்னொரு
அடையாளமாகவே
மாறிவிட்டிருக்கும்
 ஒரு பெண் படைப்பாளர்..
போராளி..
சமூக செயற்பாட்டாளர்.
 இன்னும்
 இன்னுமாய்
 பன்முகம் காட்டும்
தேவதா தமிழ்...
பல பாத்திரங்களை
சுமந்தாலும்
கவிஞர் என்னும்
கனமான
வேலையை
மிக அழகாய்ச்
செய்வதில்
எப்போதும்
வென்றுவிடுகிறார்...
 முகநூல்
 பக்கங்களில்
 பதிவதை
 விருப்பக்குறி
இடுவதும்
 பகிர்வதும்
 எப்பவும்
 உள்ளதுதான்..
எனினும்
 இவர் பதிவுகள்
படைத்தவர்
 பெயரை மட்டும்
மாற்றிக்கொண்டு
 உலவுவதில்
உலக சாதனை
 செய்திருக்கிறது...
 வேலுநாச்சியை
வெறிகொண்டு
எழுதிய விரல்கள்
இவருக்கு
உரித்தானது..
தவிப்புகளை
 பதியும்
இவரின்
நூல்களுக்கு
தலைப்புகளும்
 கூடவே
 தவமிருப்பதாய்
 தெரிகிறது...
 ஒரு கோப்பை
 முழுக்க
என்ன வேண்டும்
 உங்களுக்கு..
 உங்கள்
 ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு
 ஆசைகள் இருக்கலாம்...
எனக்கு
 நல்ல காப்பி
என்பேன்...
ஆயின்
இவர்
 "ஒரு கோப்பை மனிதம்"
தந்திருக்கிறார். "
விழி தூவிய விதைகள்"
 இன்னொரு தலைப்பு...
மீண்டுமொரு
 கவிதை
 ஆயுதத்தை
தூக்கிவந்திருக்கும்
 தேவதா தமிழ்
 இந்தமுறை
மனங்களை சுட
தோட்டாக்கள்
தொடுத்திருக்கிறார்...
"மனம் சுடும் தோட்டாக்களை"
நாம்
புன்னகையுடனே
வாழ்த்தி
 அனுமதிக்கலாம்...
அழகிய வடிவமைப்பு..
நெய்வேலியின்
 காகிதம் பதிப்பகம்
 நிறைவாய்
செய்திருக்கிறது
 அச்சிடலை..
நூலின்
வரவேற்பறையாய்
அயலகச் சகோதரி
கிரேஸ் பிரதிபா
 அணிந்துரை
அழகூட்டி இருக்கிறார்...
 74 பக்கங்களில்
73 தலைப்புகளில்
கவிதைகள்
. நூலுக்கென
இல்லாமல்
 மனசைப் பிசையும்
 சம்பவங்களுக்கு
 வரிகளால்
அழுத
நாட்குறிப்புகளாய்
 கொட்டிக்கிடக்கிறது
 தோட்டாக் கவிதைகள்..
ஷர்மிளா,
 ஸ்வாதி
 அருணிமா
 என
அலங்கோலப்பட்ட
 பெயர்களை
 தலைப்பாக்கி
தவிப்புகள்
சொல்லும் போது
அழும்
இவரது கவிதைகள்...
குட்டிம்மா
சின்ன கண்ணம்மா
என
சிற்றாடை கட்டி
 ஊஞ்சலாடுகிறது...
மாரியம்மாவும்
 இவர்
கவிதைக்கன்னியில் மின்னியிருக்கிறாள்.. ஞானக்கூத்தனுக்கும்
 கலாமுக்குமென
 விரிகிறது
கவிதைகள்...
இப்போதைய
பெரும்பாலான
கவிஞர்களைப்
போலவே
புதிய
வார்த்தைகளுக்கான
 மெனக்கெடல்
அதிகம்
தென்படாவிட்டாலும்
வசப்பட்ட
வார்த்தைகளை
வாசப்படுத்தியிருக்கும்
 லாவகம்
 பாராட்டுக்குரியது..
 உலகில்
இனி
காகிதங்களுக்கு
 ஏதேனும்
 தட்டுப்பாடு
 வந்து விடுமோ
 என்ற
தீர்க்க தரிசனத்தில்
 அட்டைகளை
தவிர்த்து
 அடைத்து வைத்திருக்கும்
கவிதைகள்
அவதிப்படுவது புரிகிறது..
இப்படியும் சொல்லலாம்...
கவிதைகளின்
அடர்த்தி போலவே
 அவை
அமர்ந்திருக்கும்
இடமும்
அடர்த்தியாய்
இருக்கிறது.
. வீதியில்
 ஊரில்
 மாவட்டத்தில்
 மாநிலத்தில்
தேசத்தில்
 உலகில்
எங்கெல்லாம்
பெண்
 பேசு பொருளாகும்
அவலங்கள் நிகழ்கிறதோ அப்போதெல்லாம்
நெஞ்சை நிமிர்த்தி
இவர் பேனா
தலைகுனிந்து
விடுகிறது..
புயலாய்ச்
 சீறும் கவிதைகள்
அதிகமிருக்கும்
 பாலைவனச்சூட்டில்
சோலையென
 தலைகாட்டி
 விடுகிறாள்
 சின்னக்கண்ணம்மா..
கவிஞர்
நல்ல தாயை தாண்டி
 பாட்டியான
 பரிணாம வளர்ச்சியில்
தெரியும் மகிழ்ச்சி..
 நமக்கும்...
 மேம்போக்காகவே
நகரும்
அறிமுகத்தை
கொஞ்சம்
கவிதைகளின்
பக்கமும் நாம்
 திருப்பலாம்..
 ஒரு படைப்பாளிக்கும்
 படிப்பவனுக்கும்
பெரிய வித்தியாசம்
இல்லைதான்...
படிப்பவன்
அநேகமாச்
சொல்வது
 இதுவாய்த்தான்
 இருந்திருக்கும்
நான் நினைச்சேன்
 இவர்
சொல்லிவிட்டார்...
இந்தக் கவிதையும்
 அப்படித்தான்...
 "பார்க்காமலே
பேசாமலே
பழகாமலே
பிரியாமலே
வருந்தாமலே
வாழாமலே
சிறகென
மிதந்திருக்கலாம்"
இப்படி ஒரு வரிகளை
 நீங்கள்
நினைத்துக் கொண்டே
இருங்கள்..
இவர் எழுதிவிட்டார்...
தொகுப்பு முழுவதும்
வாசிக்கையில்
ஒட்டிக்கொள்ளும்
கவிதைகளை
 தட்டிவிட முடியாதது
விந்தைதான்..
கவிதைகளை
கவிஞனின்
இதயத்தோடு
 வாசிப்பீர்கள்
எனில்
நாமும் பறக்கலாம்..
 புதுவையில் புதுமுகமும்
புதுகையில் அறிமுகமும்
 கண்ட
 "மனம் சுடும் தோட்டாக்கள்"
என்னும்
 இந்நூலை
வாசிப்புக்கென
 எடுத்து
சிறுக
என் புரிதலை
 பகிர்ந்திருக்கின்றேன்..
இந்தப்பெண்
போற்றுதலுக்கு
உரியவர்...
உணவிடும்
பெண்ணினினும்
உணர்வூட்டும் தாய்மை
 பாராட்டவும்
சீராட்டவும்
 படவேண்டியது...
மீண்டும் மீண்டும்
 புத்தகத்தின்
 பக்கங்களில்
மூழ்கும்போது
 புதுப்புது அர்த்தங்கள்.
காலமும்
வாய்ப்பும்
கைகூடுமெனில்
பின்னொரு நாளில்
இந்த நூலை
 நானே
புதிய கோணத்தில்
பார்த்ததை
 சொல்லலாம்...
இப்போது
 இவரின்
ஒற்றைக் கவிதையோடு
அறிமுகம் முடிக்கலாம்...
 "நிலம் பார்க்க நடந்தவளே..
 விண்ணில் நடை பயின்றாள்..
இமையம் தன் காலடியிலென அறைகூவினாள்.
காலெனப் பறக்கின்றாள்
காமுகர்களின் மத்தியில்..
கட்டிவைத்த மடமைகளை
காட்டுத்தீயாய் கருகிடச் செய்தாள்.. எதையும் துணிவாய் முடிக்கின்றாள் எள்ளியவர்களின் வாயடைத்து..
சந்ததி வளர்த்திடும் சக்தியானவள். சரித்திரம் படைக்கவே புறப்பட்டாள்.. சாத்திர சகதியை துடைக்கவே
சங்கென முழங்கி உயர்ந்திட்டாள்.. இனியவள் பாதை தெளிவாக
இனிதே புன்னகை புரிந்திட்டாள்.. தன்னோடு
தம்மின் குடும்பத்தையும்
தரணியே
புகழச் செய்திட்டாள்""
தலைப்பு
இக்கவிதைக்கு
பாரதி கண்ட
புதுமைப்பெண்...
 நன்றி வணக்கம்.. " ‌.

Thursday 21 September 2017

கலைப் பண்பாட்டு நிறுவனம் பயிற்சி

கலை பண்பாட்டுத்துறையின் மூலம் மூன்று நாள் பயிற்சி 20.9.17-22.9.17 வரை

காலை மதிப்பிற்குரிய மாவட்டக் கல்வி அலுவலர் , இராணியார் அ.ம.மே.நி.பள்ளியின் தலைமைஆசிரியர் மற்றும் CCRT யின் DRP திருமிகு ரெங்கராஜன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.

முகாமில் முதல் நாள் நிகழ்வில் ஆய்வாளர், முனைவர், யு.ஜி.சி.விருது பெற்றவர்.... இந்தியாவில் எங்கு ஆய்வாளர்கள் கூட்டம் நடந்தாலும் மரியாதையுடன் அழைக்கப்படக்கூடிய மதிப்பிற்குரிய மன்னர் கல்லூரியின் பேராசிரியர் சந்திரபோஸ் அவர்கள் கருத்துரை வழங்கினார்.
பல்லாண்டுகளாக ஆய்வு செய்த மகதப்பேரரசு வட நாட்டில் இருந்து தென்னாட்டிற்கு இடம் பெயர்ந்த வரலாற்றை சான்றுகளோடு விவரித்தார் கள்.
இந்தியாவில் ஆதியில் இருந்தவர்கள் நாகர்களே . அவர்கள் ஆயிரக்கணக்கான பிரிவில் உலகெங்கும் சிதறி வாழ்ந்துள்ளனர்.
மேலும் நாகர் என்ற பெயரில் சங்க இலக்கியச்சான்றுகளை எடுத்துரைத்த போது மலைத்து நின்றோம்.

நாகர்களின் வாழ்க்கை முன்னேற்றமே நாகரீகமானது என்றார்.

10 ஆண்டுகளுக்கு மேலாக ஆய்வுக்காக அர்ப்பணித்து செய்த அவரது பணி பாராட்டத்தக்கது.
வாழ்த்துகள் சார்.

அத்தோடு என்னால் விட முடியாது எங்கிருந்தோ வட மாநில அரசின் வரலாற்றை ஆய்வு செய்த நீங்கள் கீழடிக்காக செய்தது என்ன என்றேன்?

கீழடி ஆய்வாளர்கள் எனக்கு பிறகு வந்த சமீபத்திய மாணவர்கள் தான்.... எனக்கு தெரிந்தவர்கள் தான் என்றார்...
கீழடி ஆதாரங்கள் உண்மை எனில் தமிழ் நாட்டை சேர்ந்த ஆய்வாளர்கள் அனைவரும் அமர்நாத் அவர்களுக்காக குரல் கொடுக்காதது ஏன் என்றேன்?

உண்மை அறிந்தவர்கள் சுயநலவாதி யாக இருப்பதால் தான் இந்த நிலமை என்றார்.

ஒன்றும் அறியாத நாங்கள் குரல் கொடுப்பதை விட நீங்கள் ஆதாரங்களோடு குரல் எழுப்பினால் உங்கள் பின் அனைவரும் போராடுவார்களே என்றேன்....போராடிக்கொண்டே தான் இருக்கிறோம் எல்லாம் அரசியல்.....

இப்படி உண்மை அறிந்தும் மௌனமாய், சுயநலமாக இருப்பது தமிழினத்திற்கு செய்யும் துரோகமில்லையா என்று எனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன்........

ஆய்வாளர்கள் மனது வைத்தால் முடியும்....
வித்தியாசமான பயிற்சி தான்.....கலைப் பண்பாட்டு பயிற்சி.இரண்டாம் நாள்.

 தஞ்சாவூர் பெரிய கோவில், சரஸ்வதி மகால் களப்பயணம்.

எத்தனை முறை பார்த்தாலும் பிரமிப்பையே தரும் தஞ்சாவூர் பெரிய கோவில்...
எந்த பொறியியல் கல்லூரியில் படித்து இருப்பார்கள்.
இப்பதான் தரம் குறைவான கல்வி  தருகின்றோமா...

100ஆண்டுகள் வரை வாழும் வன்னி மரம்....

1000 ஆண்டுகளுக்கு மேலான கோவில்.

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைக்குள் இருக்கும் மண் தன்மை போல் தான் இத்தனை ஆண்டுகள் ஆகியும் கோவில் தன் நிலை மாறாமல் உள்ளது ....என்ற செய்தி.

பட்டு போல் மென்மையாக இருக்கும் சரஸ்வதி மகால் சுவர்கள்....அதை பாதுகாக்காமல் தங்கள் பெயர்களை கீறி எழுதியுள்ள மக்கள்.....
அங்கு உள்ள அருங்காட்சியகம்....
பல்லாண்டுகளுக்கு முன்பே மனித உடல்.விலங்குகளின் உடல்....அறுவை சிகிச்சை பற்றிய தகவல்கள்... பின்னர் ஏன் மருத்துவம் தமிழில் இல்லாது போனது?

அரிதான கலை பொருட்கள்....

தஞ்சாவூர் மாவட்டத்தின் சிறப்புகளை எடுத்துரைக்கும் ஒளி ஒலி காட்சி....

சரபோஜி மன்னரின் தர்பார் மண்டபம்....

கண்கள் போதவில்லை....



























...