World Tamil Blog Aggregator Thendral: September 2016

Friday 23 September 2016

சொல்

ஒரு வார்த்தையை வீணாக்கிட்டீயே அக்கா..

இன்று தம்பி வில்வத்துடன் பேசிக்கொண்டிருந்த போது என்னக்கா...இந்த வார்த்தையை வீணடிச்சிட்டீயே..
இதற்கு உரியவர்களிடம் சொல்லியிருந்தா...மகிழ்ந்திருப்பாங்களே என்ற கூறினார்கள்...

பொட்டில் அடித்த மாதிரி இருந்தது..வார்த்தைகளை நாம் எவ்வளவு எளிதாக செலவு செய்கின்றோம்...

செலவழிக்கின்ற வார்த்தைகளால்...நாம் பெறும் பயன்கள் என்ன?தீமைகள் என்ன?யோசித்து வார்த்தைகளை விட கற்றுள்ளோமா?

விலங்குகளோ,பறவைகளோ தேவையற்று ஒலிப்பதில்லையே....

சொல்லாத சொல்லுக்கு விலையேதுமில்லை என்ற கண்ணதாசனின் வரிகள் எத்தனை உண்மை...

Tuesday 20 September 2016

மாதவம் செய்தவர்கள்

படிக்கும் பருவத்தில் பள்ளியில்
பதற்றமாய் இருக்கும்
வழியின்றி அருவருப்பின் உச்சத்தில்
சென்று மீள்வோம்..

பணியிடத்தில் அதற்கென்று இடமே
பார்த்திராத பொழுது மறைவிடங்கள்
நாடுவோம்..

பயணத்தில் படக்கென்று இறங்கி போகமுடியாது
பரிதவித்து அடக்கியிருப்போம்...
அதற்காக உள்ளே எதுவும் இறக்காது
ஆற்றுப்படுத்துவோம்...வயிறை...

நகரங்கள் கிராமங்கள்
எல்லாமே மாறுதலின்றி
ஒரே நிலைதான்....என்ன

கிராமங்கள் மறைவிடம்
கொடுக்கும்...

காலங்கள் மாறவில்லை
முப்பது வருடங்களாகியும்
என் சந்ததியும் அலைகின்றனர்..
எப்போதும் வீட்டுக்குள் அவசரமாய்த்தான்
நுழைவோம்...

இப்போதும் கூட்டங்களுக்குச் செல்லுகையில்
இருக்குமாவென சந்தேகத்தோடு சென்று
இல்லாது அலைவோம்...

மாதவம் செய்து பிறந்த பெண்கள்
நாங்கள்...


Sunday 18 September 2016

”க ”இலக்கிய சந்திப்பு

                                             ”க” இலக்கிய சந்திப்பு
கரம்பக்குடியில்18.9.16 நேற்று த.மு.எ.க.ச வின் கரம்பக்குடி கிளை சார்பாக 
க இலக்கிய சந்திப்பின் முதல்கூட்டம் நடத்தப்பட்டது.

  தமிழோடு கலந்து ஒரு நாள் முழுவதும் இருந்தது மறக்க முடியாதது.
நான்கு அமர்வுகளாக நடத்தப்பட்ட நிகழ்வில்  எழுத்தாளர் அண்டனூர் சுரா அவர்களின் ”ஒரு நாடோடிக்கலைஞன் மீதான விசாரணை”நூலும்,எழுத்தாளர் புலியூர் முருகேசன் அவர்களின் நூலும் சிறப்பாக கவிஞர் சுரேஷ்மான்யா மற்றும் த.மு.எ.க.ச.வின் மாவட்டத்தலைவர் திருமிகு இரமா.இராமநாதன் அவர்களாலும்  மிகச்சிறப்பாக விமர்சனம் செய்யப்பட்டன.

கவிதைகளாலும் பாடல்களாலும் நிகழ்வை த.மு.எ.க. ச உறுப்பினர்கள் அலங்கரித்தனர்.மறக்க முடியாத அந்நிகழ்வில் வாசிக்கப்பட்ட என் கவிதை...

                                        ”க” இலக்கிய சந்திப்பு

க- ஓரெழுத்து அகராதி
      உயிரின் முதலும்
    மெய்யின் முதலும்
    புணர்ந்து பிறந்த
    காதலின் வடிவம்
  உயிர் மெய்யின் உருவம்.

க- இதயத்திலிருந்து பிறக்கும்
     வல்லினத்தின் முதல்
      ஓசையின் வடிவம்

க-கல் என்பதன் முதன்மை
     ”கல்”மலையின் சிறுதுளி
      “கல்”மனித வளர்ச்சியின் வேர்.

க-தமிழனின் உயர்வை
    உலகுக்கு உணர்த்திய
    கலாமின் முதலெழுத்து

க-தமிழனின் வண்ணம் கூறும்
   உழைப்பின் நிறம் கூறும்
  தமிழ்ச்சொல்லின் முதலெழுத்து.

க-என்று எழுதினேன்
எனையா என்றருகில் வந்தது
காடு
அழுகையுடன் அழிந்து போன
கதை கூற.

க- என்றெழுத
ஓடி வந்தது குளம்
மனம் வெடித்து பிளந்து போன
நிலை கூற.

க-என்றதும்
காற்று கடிதில் வந்து
முதலில் எனைக்குளிப்பாட்டு
இல்லையெனில் அழிந்து போவீர்
என அச்சுறுத்தியது.

க-கர்நாடகாவின் முதலெழுத்து
தண்ணீருக்கான நம்
கண்ணீரின் தலையெழுத்து.

க-க க போ எனச் சொல்லிப்போகும்
காமெடி பீசு அல்ல.

க -கவிதையின் முதல்
    கதையின் முதல்
   கட்டுரையின் முதல்
    கலை இலக்கியத்தின் முதல்

ஓ....கரம்பக்குடியின் முதலும் அதுவே
      க- இலக்கியச்சந்திப்பு இன்றி
     கரம்பக்குடி இல்லையெனும் படி
      உடலாய் உயிராய்
     உயிர்மெய்யாய் வளர வாழ்த்துகள் .

நிகழ்வு திருமிகு ஸ்டாலின் சரவணன் மற்றும் அவர்களின் முயற்சியால் மிக அருமையாக இருந்தது ..வாழ்த்துகள் அனைவருக்கும்.வாய்ப்பை நல்கிய ஸ்டாலினுக்கு நன்றி.





  

Saturday 17 September 2016

பெரியார் பிறந்தநாள் விழா மற்றும் வண்ண ஆடைகள் வழங்கும் விழா..

பெரியார் பிறந்தநாள் விழா மற்றும் வண்ண ஆடைகள் வழங்கும் விழா..

இன்று புதுக்கோட்டை அரசு உயர் துவக்கப்பள்ளியில் பெரியார் பிறந்தநாளான இன்று அங்கு பயிலும் பெண்குழந்தைகள் அனைவருக்கும் புதிய ஆடைகள், ஐக்கிய நல கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆன சகோதரர் பஷீர் அலி அவர்களால் வழங்கப்பட்டது.

விழாவில் சகோ மீனாட்சி சுந்தரம் வரவேற்க,பள்ளித்தலைமை ஆசிரியர்,வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளர்,திருமிகு செல்வா,கவிஞர்.செல்வா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

முயற்சி உடையோருக்கே எல்லாம் கிடைக்கும் என்பதை அழகாக எடுத்துக்காட்ட, நூறு ரூபாய் பணத்தைக்காட்டி இது யாருக்கு வேண்டும் என்றார்..குழந்தைகள் தயங்க..ஊக்கமூட்டி முன் வந்த குழந்தைக்கு சட்டென்று உனக்கு தான் இந்த பணம் என்ன செய்ய போறே என்று சகோ பஷீர் அலி அவர்கள் கேட்க இதை நான் உண்டியலில் சேர்த்து வைப்பேன் அன்று அந்த சின்னஞ்சிறு சிறுமி கூறிய போது ...மனம் நெகிழ்ந்து போனது.

சகோ பேச்சியம்மாள் நன்றியரை வழங்க விழா சிறப்புடன் நிறைவுற்றது.

மாணவிகளின் கண்களில் கண்ட பூரிப்பை காண் கண்கோடி வேண்டும்...மனம் நிறைந்த நன்றி ...சகோ பஷீர் அலி அவர்களுக்கும்.அவரது அமைப்பினருக்கும்..
















Thursday 15 September 2016

இரவு-2

இரவு -2
--------------

மென்மழைத்தூறலில் இரவின்று கவிய
இலைகள் தாங்கிய முத்துகள் சிதற

முனகலில் பறவைகள் நனைந்ததைக்கூற
கண்மலர் மூட கனவுகள் காத்திருக்க

 பொங்கும் அழகுடன் முகிலினில்
மறைந்தவள் மென்மையாய் ஒளிர...
 விண்மீன்கள் இறைந்திட்ட பாதைகளில்
காற்றென் கூந்தலைக்கலைக்க
 
 இசையின் துணையோடு
 நெடுந்தூர  பயணத்தில்

நரம்பினை ஊடுறுவும் குளிரினை
ரசித்தபடி மென்முறுவலோடு...
.
மெல்லச்சிவக்கும் பாதையின் முடிவில்
அடர்வன புட்களின் சிறகசைப்பில் ....
 
மென்பனி மெத்தையில்
சிறகுகள் விரித்து நீல்வானம் தொடுவதாக...






Wednesday 14 September 2016

இன்று பலி தான்யா

இன்று பலி தான்யா 15.9.16
---------------------------

சுடச்சுட படிப்போம் குருதி வழியும் நாக்குடன்

இன்னும் எத்தனை பெண்களை பலி கொடுக்க போகிறோம்..காதல் வெறியர்களுக்கு...

ஒருத்தனையாவது நடுத்தெருவில் கல்லால் அடிச்சி கொன்றிருந்தால்...மற்றவன் யோசிப்பானோன்னு கோவம் வருது..

காவல் துறை ....அமைதி காக்கட்டும்

சட்டம் தன் கடமையைச்செய்யாமல் போகட்டும்.

அம்மா ஆட்சியில் பெண்களை அநியாயமாக பலிகொடுத்தோம் என்ற அவப்பெயர் சூழட்டும்...

பெண் அரசு செய்யும் போதே இப்படி எனில் ...தமிழ்நாட்டில் பெண்ணினம் இல்லாது அழிந்தே போகட்டும்...

பெண்ணைப்பெற்ற ஆண்கள் பயந்து பயந்து சாகட்டும்.

திரைப்படங்கள் இன்னும் ஆண்களை வெறியர்கள் ஆக்கட்டும்..

நாம் முகநூலில் புலம்பியே வெந்து மடிவோம்..

இரவு -1

இரவு -1
-----------------
இனிமையான கனவுகளே
இரவில் எனை தீண்டட்டும்

குளிரும் பனியில்
கம்பளிக்குள் உடல்மறைத்து
தலைநீட்டி வெதுவெதுப்பாக ...
குளிர்காய்வதாக...

கொளுத்தும் வெயிலில்
குடையென விரிந்த நிழலில்
வியர்வை துடைக்க
தென்றல் துடித்து வருவதாக

கொட்டும் மழையில்
உடலது நனைய 
மனமது சிலிர்க்க
தலைசிலுப்பி முகம் மூழ்கும் நீரில்
துள்ளி விளையாடுவதாக....

நேசிக்கும் துணையோடு
கைகோர்த்து தொலைதூரம்
மலைச்சாரலில் நடப்பதாக ...

மழலை கைவிரித்து
எனை அள்ளி மகிழ்வதாக...

புத்தகங்களில் மூழ்கி
புத்திறம் படைப்பவளாக..

இனிமையான கனவுகளே
இரவில் எனை தீண்டட்டும்...




Tuesday 13 September 2016

கவிஞர் ஞானக்கூத்தனுக்கு புகழஞ்சலி-

புதுக்கோட்டை மாவட்ட த.மு.எ.க.ச கூட்டம் நடத்திய புகழஞ்சலி

கவிஞர் ஞானக்கூத்தனுக்கு கவிதாஞ்சலி
நாள்:13.9.16
இடம்:அறிவியல் இயக்கக்கூடம் புதுகை.



சொல்லில் அடங்காது ஓங்கி நிற்கின்ற
சர்ரியலிசக் கவியே
”கடதபற”வல்லினமே

”சூரியனுக்கு பின்பக்கம் ”
காணச்சென்றாயோ

அன்று வேறு கிழமை” என்றாய்
இன்று கிழமைகளற்று மறைந்தாய்.

”கடற்கரையில் சிலமரங்களை”
பென்சில் படங்களாய்”த் தந்தாய்-அவை
ஞானக்கூத்தன் கவிதைகளாய் ”மலர்ந்தன .

ஒட்டக்கூத்தன் வழி வந்தவனோ..
ரெங்கநாதன் ஞானக்கூத்தனானாய்.

மரபில் தாலாட்டி வளர்ந்தவனே
மண்ணில் புதுக்கவிதையாய்த் தழைந்தவனே
மரபுக்கும் புதுக்கவிதைக்கும் பாலமாய் நீ...

உனக்கென தனிமொழி,தனிநடை
 தந்து தலைநிமிர்ந்தவனே..


அங்கதமும்,பகடியும் உன்னில் சரணடைந்தனவோ
நீயின்றி அலைகின்றன காற்றில்...

உன்கவிதைகள் எனக்களித்த காட்சிகளையா
நீ யாதறிந்து கவிதைகள் யாத்தனை..

அழகாகச் சொன்னாய்
அறியாமையின் கதவுகள் இரண்டு
ஒன்று அறியாமை
மற்றொன்று அதனை அறியாமை

உனையறியா கவி உலகு
வாழ்வதும் அறியாமையாலா...

என்ன பொருளில் எழுதினாயோ
எனக்கென்ன பொருள் தந்ததுவோ
வேறு பொருளும் உண்டோ...
விரிந்து விஸ்வரூபமாகும்
அச்சம் தரும் கவிதைகள் உனது.

”மருதானி  பூசிய  சிறுவிரல் போல் சிவந்திருக்கும் 
பழங்களுக்கு கூச்சலிடும் பறவைகள் சூழும் ஆலின் கீழ்”
என கதை கூறியவனே
பிரிந்த கதையைத் தேடிச்சென்றாயோ

”மெல்ல பிரிகிறது ஜூலையின் பிற்பகல்” என்றாய்
நீயும் ஜூலையுடன் கலந்தாயோ
சொல்வாயோ காரணம்..

உன் அகவை வரையிலாவது வாழ்ந்திருக்கலாம்
முத்துக்குமாரனும்,திருவுடையானும்
ஆகச்சிறந்த கவிகள் கண்முன் மறைந்தீரே

தமிழ் இருக்கும் வரை
உங்கள் கவிதைகளால் நீவிர் வாழ்வீர்

”என் உளம் நிற்றி நீவிர்”





புதுக்கோட்டை த.மு.எ.க.ச நடத்திய புகழஞ்சலிக்கூட்டம்.

புதுக்கோட்டை த.மு.எ.க.ச நடத்திய புகழஞ்சலிக்கூட்டம்.

இன்று [13.9.16 ]காலை புதுகை அறிவியல் இயக்கக் கூடத்தில் மறைந்த கவிஞர்கள் நா.முத்துக்குமார்,ஞானக்கூத்தன் மற்றும் பாடகர் திருவுடையான் ஆகியோருக்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டது..

அரங்கு முழுக்க உணர்வுகளின் வெளிப்பாடாக அனைவரும் அஞ்சலி செலுத்தினர்..

நிகழ்விற்கு திருமிகு இரமா ராமநாதன் அவர்கள் தலைமையேற்க,திருமிகு சண்முகப்பழனியப்பன் அவர்கள் முன்னிலை வகித்தார்.
 
 

மாவட்ட செயலர் மதியழகன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.




 

கவிஞர் நா.முத்துக்குமார் குறித்து கவிஞர் தங்கம்மூர்த்தி அவர்களும்,
கவிஞர் ஞானக்கூத்தன் குறித்து கவிஞர் ராசிபன்னீர்செல்வம் அவர்களும்,
பாடகர் திருவுடையான் குறித்து கவிஞர் நா.முத்துநிலவன் மற்றும் கவிஞர் நீலாவும் நினைவலைகளைப்பகிர்ந்து கொண்டார்கள்.









கவிஞர்கள் குறித்த கவிதைகளை கவிஞர் இந்துமதி,கவிஞர் சுரேகா,கவிஞர் கபார்கான்,கவிஞர் பாக்யா,கவிஞர் கபார்கான்,கவிஞர் கீதா,முனைவர் மாதவன்,கவிஞர் கவிபாலா,கவிஞர் காசாவயல்கண்ணன் ஆகியோர் கவிதாஞ்சலியால் நினைவு கூர்ந்தனர்.


கூட்டத்தில் கொள்கைக்காகவே வாழ்ந்துமறைந்த திருவுடையான் குடும்பத்திற்கு நிதி உதவி செய்து காக்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
 
 
 
 
கூட்டத்தை இனிய பாடல்களால் பாடகர்கள் சுபாஷிணி,ராஜலெட்சுமி,கவிஞர் வெள்ளைச்சாமி,முனைவர் மகா.சுந்தர் ஆகியோர் அணி செய்தனர்.
 
 
கவிஞர் ஸ்டாலின் நன்றியுரைக்க கூட்டம் இனிதே முடிந்தது.

Saturday 10 September 2016

வித்தியாசமானவரின் வித்தியாசமானப்பள்ளி

வித்தியாசமானவரின் வித்தியாசமானப்பள்ளி

இன்று 10.9.16 கவிஞர் தங்கம்மூர்த்தி அவர்களின் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் உணவுத்திருவிழா மற்றும் கண்காட்சி

உள்ளே நுழையும் போதே பழங்கள் மற்றும் காய்கறிகளால் ஆன ஆடை அணிந்த மழலைகளின் வரவேற்பு....





விருந்தோம்பலில் இவரை மிஞ்ச இனி ஒருவர் பிறக்க வேண்டும்...உபசரித்துக்கொண்டே உணவுத்திருவிழாவிற்கான பணிகளைச்செய்ய ஆசிரியர்களுக்கு அறிவுறுத்திய தன்மை இவரது நிர்வாகத்திறமைக்குச் சான்று...

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள் கண்காட்சியைத்துவக்கி வைத்தார்.
உணவு மற்றும் உடல்நலம் தொடர்பான கையெழுத்து பிரதி வெளியிடப்பட்டது..

குழந்தைகள் எதை சாப்பிட வேண்டும் எதை சாப்பிடக்கூடாதென தெளிவாகக்கூறிய போது அப்பள்ளிக்குழந்தைகளைப்பற்றி பெருமையாக இருந்தது.

இதுவரை உணவுத்திருவிழா என்றால் நிதி திரட்டும் வழிகளில் ஒன்றாக இருந்ததை மாற்றி பாரம்பரிய உணவுகளை குழந்தைகளை அறிய வைத்து ,,அவர்கள் வாயிலாகவே அனைவருக்கும் கூறவைத்தது மிகச்சிறப்பு.

குழந்தைகள் கேழ்வரகு கஞ்சி,கம்பங்கஞ்சி,உளுந்தங்கஞ்சி ,கேப்பை அடை ,தானியங்கள் அடை,முடக்கத்தான் சூப்,முருங்கைக்கீரை சூப்னு எண்ணிலடங்கா வித்தியாசமான உணவுகளை இன்று ஒரே நேரத்தில் காணவும் , சுவைக்கவும் வைத்தனர்...

ஒவ்வொரு குழந்தையும் மூலிகைகள் பற்றியும் அதைக்கொண்டு உணவுத்தயாரிக்கும் முறைகளையும் அருமையாகக்கூறினர்.

நம் பாரம்பரிய உணவு மருந்தாக இருந்ததை இன்று பள்ளிக்குழந்தைகள் உணர்த்தியது போற்றுதற்குரியது..

தனியார் பள்ளிகள் குறித்து உள்ள பொதுப்பார்வையை தகர்த்தெறிந்து குழந்தைகளின் நலன் சார்ந்த பள்ளியாக ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி புதுக்கோட்டையில் திகழ்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

மனம் நிறைந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்...இவ்விழாவிற்கு காரணமான ஸ்ரீவெங்கடேஸ்வரா பள்ளி தாளாளர் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களுக்கும்...பள்ளி ஆசிரியர்களுக்கும்..




மிக்க நன்றி கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களுக்கு...

மிக்க நன்றி கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களுக்கு...

அக்கா இன்று சம்பளம் கொடுத்தாங்க....ரோஸ்லின்

கவிஞர் வைகறையின் மனைவி ரோஸ்லினுக்கு சென்றமாதம் கவிஞர் தங்கம்மூர்த்தி அவர்கள் தனது வெங்கடேஸ்வரா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் ஆசிரியப்பணி அளித்துள்ளார்..என்பது அனைவரும் அறிந்ததே...

இன்று மாலை கவிஞர் வைகறையின் மனைவி ரோஸ்லின் அலைபேசியில் அழைத்து அக்கா இன்று சம்பளம் கொடுத்தாங்க அக்கான்னு சொல்லிட்டு ஒரே அழுகை ஏண்டாம்மா...நல்ல விசயம் தானேன்னு கேட்டபோது இல்லக்கா...கவரில் சம்பளம் ரூ10,000/ இருந்தது அக்கா..நான் அந்தளவு வேலை பாக்கலக்கா..இப்பதான் கத்துகிறேன்னு சொல்லிட்டு கண்கலங்கிய போது மனம் நெகிழ்ந்து போனேன்...

இனி நீ யாரிடமும் கையேந்தி நிற்க வேண்டாம்மா...உன் குடும்பத்தை நீயே பார்த்துக்கலாம்னு ஆறுதல் கூறி உன் அம்மாவின் கைகளில் கொடுத்து ஆசீர்வாதம் வாங்கிக்கோ என்றேன்..இல்லக்கா முதன்முதலில் உங்களிடம் தான் சொல்ல நினச்சேன்னு சொல்லிட்டு விசும்பியதை உணர்ந்தேன்..கவலப்படாதேம்மா ..
எல்லோரும் இருக்கோம்..பார்த்துக்குவோம்டான்னு சொன்னேன்..

அரசு வேலை வாங்கும் வரை இனி ரோஸ்லினைப்பற்றி கவலை வேண்டாம்னு சொன்னபடியே செய்த கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களுக்கும் ,திருமிகு அஞ்சலிதேவி தங்கம்மூர்த்தி அவர்களுக்கும் வைகறையின் நட்புகளும் உறவுகளும் மனம் நெகிழ்ந்த நன்றிதனை சமர்ப்பிக்கின்றோம்...

Wednesday 7 September 2016

அள்ளித்தந்த புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கம்..

அள்ளித்தந்த புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கம்..

சந்தைப்பேட்டை அரசு மேல் நிலைப்பள்ளியில் 7.9.16 நேற்று மாலை புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கத்தின் மூலம் முப்பெரும் விழா எங்கள் பள்ளியில் நடைபெற்றது..

விழாவில்பள்ளியின் இன்ராக்ட் ஒருங்கிணைப்பாளர் திருமிகு அஞ்சலிதேவி தங்கம்மூர்த்தி அவர்கள் ஒருங்கிணைக்க பள்ளி மாணவிகள் இன்ராக்ட் பதவியை பொறுப்பேற்றனர்..















விழாவில்
திருமிகு கிருஷ்ணவேணி அவர்கள் வரவேற்றார்
திருமிகு பானுமதி கண்ணன் அவர்கள் தலைமை ஏற்றார்.
திருமிகு முத்துச்சாமி அவர்கள் முன்னிலை வகித்தார்.
திருமிகு அ.லெ.சொக்கலிங்கம் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
திருமிகு சுபா கருணாநிதி அவர்கள் நன்றியுரை வழங்கினார்

வாழ்த்துரை வழங்கியவர்கள்.

திருமிகு இராஜலெட்சுமி நெடுஞ்செழியன் அவர்கள்
திருமிகு அஞ்சலிதேவி தங்கம் மூர்த்தி அவர்கள்
திருமிகு பார்வதி இராமதாஸ் அவர்கள்
திருமிகு ப்ளாரன்ஸ் ஜெயபரதன் அவர்கள்

ஏற்புரை
திருமிகு கோ.அமுதா அவர்கள்
தலைமையாசிரியர் அ.ம.மே.நி.பள்ளி சந்தைப்பேட்டை

1]பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்றை வழங்கி மாணவிகள் சுத்தமான குடிநீர் பருக வழி அமைத்தனர்.

2]மோட்டார் அடிக்கடி பழுதாகிறது என்று கூறியதும் மின் மோட்டார் ஒன்றை புதிதாக வாங்கித்தந்து எங்களை வியக்க வைத்தனர்.

3]மாணவிகளின் நலன் சார்ந்து பல நல்ல கருத்துகளையும் வாழ்த்துரையும் வழங்கினர்.

பள்ளிக்கு புரவலர் திட்டம் பற்றி கூறியதும் முதன்முதலாக ரூ1000/நிதியை உடனே வழங்கினார் புதுக்கோட்டைமகாராணி ரோட்டரி சங்கத்தின் தலைவி திருமிகு பானுமதி கண்ணன் அவர்கள்..அவர்களுக்கு சளைத்தவர்கள் இல்லையென மகாராணி ரோட்டரி சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ரூ1000/ தர,

புதுக்கோட்டை மௌண்ட்சியான் பள்ளியின் தாளாளர் திருமிகு ப்ளாரன்ஸ் ஜெயபரதன் அவர்கள் ரூ3000/தந்து அசத்தினார்..

அன்புக்கு பஞ்சமில்லாத எங்கள் பள்ளி செல்வத்தில் தான் குறையாக உள்ளது..அதைப்போக்கும் முயற்சியின் முதல்கட்டமாக தலைமையாசிரியரின் வேண்டுகோளை ஏற்று ஒரே நாளில் ரூ 10,000/ பள்ளியின் புரவலர் திட்டத்தில் இணைந்து பள்ளியின் முன்னேற்றத்திற்கு உதவிய சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்க உறுப்பினர்களுக்கு பள்ளி மனம் நிறைந்த வாழ்த்துகளையும் நன்றிகளையும் சமர்ப்பிக்கின்றது...