World Tamil Blog Aggregator Thendral: April 2016

Saturday 30 April 2016

மீள்வேனா....

மீளவே விரும்புகிறேன்
மீளவிடாது ஆழ்த்துகின்றன
 நினைவலைகள்...
 மறக்கவே நினைக்கின்றேன்
மறக்கவிடாமல் வீழ்த்துகின்றன
எண்ணச்சுழல்கள்...
 பழுத்த இலையாய்
துளிர் வீழ்ந்த தருணங்கள்
செல்லை அரிக்கும்
செல்லாக

Thursday 28 April 2016

நினைவஞ்சலி கூட்டம்...தேதி மாற்றம்

முக்கிய அறிவிப்பு
-------------------------------

 நினைவஞ்சலி கூட்டம்...தேதி மாற்றம்
 --------------------------------------------------------------

4.5.16 அன்று புதன்கிழமை மாலை 5.30 மணி அளவில் .

புதுக்கோட்டை ஆக்ஸ்போர்டு உணவகக் கல்லூரியில்...

[புதிய பேருந்து நிலைய மாடியில்]

 நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்கவும்,கூடுதலான நண்பர்களின் வருகையை விரும்பியும் சனிக்கிழமை நடக்க இருந்த கூட்டம்...

4.5.16 புதன்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.....என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

 நல்ல நோக்கத்திற்காக இம்மாற்றம் செய்யப்படுவதால் ,அன்புடன் ஏற்று கூட்டத்தில் கலந்து கொண்டு வைகறையின் நினைவுகளை பகிர்ந்து கொள்ள வேண்டுகின்றேன்.

 தங்களது பொருளாதார உதவியை அனைவரும் செலுத்துகிறோம் என்று தங்களது அன்பை அனைவரும் வெளிக்காட்டிக்கொண்டிருக்கும் இந்நிலையில்,

 சகோ கஸ்தூரிரங்கன் அவர்கள் கூறியபடி வைகறையின் குழந்தைக்கு நாம் செய்யக்கூடிய உதவித்தொகையை ரூ 5,00,000 என்று நிர்ணயம் செய்து அதை நிறைவேற்றும் பணியில் வீதி உறுப்பினர்கள் களம் இறங்கி உள்ளனர். 

இலக்கியம் வாழ வைக்கும் என்பதை உணர்த்தும் காலம் இது.... 

கவிதையையே உயிராய் நேசித்த மகா கவிஞனுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி..

 ஜெய்குட்டிக்கு வைகறையை நாம் தர இயலாது....ஆனால் அவர் அவனுக்கு அளிக்க நினைத்த வாழ்க்கையைத் தர முயற்சி செய்வோம்..

 சிறு துளிகூட அவனது வாழ்வில் வசந்தத்தைத் தரட்டும்..

 உதவிடும் கைகளை வாழ்த்தி ,,,அஞ்சலிக்கூட்டத்தில் கலந்து கொள்ள அழைக்கின்றோம்..

Tuesday 26 April 2016

வைகறை -நினைவு அஞ்சலி கூட்டம்

                                                        வீதி
                                     கலை இலக்கியக்களம்
                         வைகறை நினைவஞ்சலி கூட்டம்

 வரும் சனிக்கிழமை மாலை 5.30 மணி அளவில் ஆக்ஸ்போர்டு உணவகக்கல்லூரியில் நடக்க உள்ளது.

வைகறையின் மகன் வீதியின் செல்லக்குழந்தை..அவனது எதிர்கால கல்வி வளர்ச்சிக்கு துணை செய்வதை, வீதி தன் கடமையாக நினைக்கின்றது... 

ஏதேனும் செய்ய வேண்டும் .என்ன செய்வது என்பதை அன்று முடிவெடுப்போம்...

 தனக்கென காப்பீட்டு தொகை,பென்சன் எதுமில்லாது மறைந்து விட்ட நிலையில்.வைகறையின் இழப்பை பொருளாதார அளவில் ஈடுகட்ட முயல்வோம்.

நாம் செய்ய வேண்டுமென ஒவ்வொருவரும் எண்ணுவதை கூடிச்செய்தால் ஜெய்சனுக்கு பயன்படும்..

 நன்றி

Saturday 23 April 2016

வைகறை என்ற ஜோசப் பென்சிஹர்

சகோதரர் திருப்பதி, வைகறையைப்பற்றி எழுதக்கேட்டுக்கொண்டதன் பேரில்...
வைகறை என்ற ஜோசப் பென்சிஹர் ------------------------------------------------------------- நீண்ட நெடிய உருவமும்,
மாறாத புன்சிரிப்பும்,
கவிதைகளுடன் கலந்த வாழ்வும்,
யாரையும் புண்படுத்தாத நல்ல உள்ளமும்,கொண்ட வைகறை   திருச்செந்தூருக்கு அருகில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அடைக்கலாபுரத்தில் 3.3.1979 இல் பிறந்தார்.

ஒரு தம்பி ...மட்டுமே உடன்பிறந்தவர். .

கல்வி
1984-1992 ஆம் ஆண்டுகளில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை, அடைக்கலாபுரம் புனித ஆரோக்கிய அன்னை நடுநிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். பின்னர் 1992 -1996 ஆம் ஆண்டுகளில் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு பள்ளியில் 9 முதல் 12 ம் வகுப்பு வரை படித்தார். பின்னர் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகில் அமைந்துள்ள வானரமுட்டியில் அமைந்துள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் (DIET) 1996-1998 கல்வி ஆண்டில் தனது ஆசிரியர் பயிற்சிப் படிப்பை நிறைவு செய்தார். பின்னர் பாளையங்கோட்டையில் இருக்கும் பிரதர்ஸ் யூனியன் கிறிஸ்தவ துறவிகளால் நடத்தப்படும் கிறிஸ்து ராஜா மேல் நிலைப்பள்ளி யில் ஏறத்தாழ பத்து ஆண்டுகள் management staff ஆக பணி புரிந்தார். பின்னர் தூத்துக்குடி நகரில் அமைந்துள்ள St.Mary's higher secondary school (RC.aided) பள்ளியில் முதன் முதலாக அரசுப்பணியில் சேர்ந்து (ஒரு வருடம்) பணியாற்றினார். பின்னர் அவருக்கு சீனியாரிட்டி அடிப்படையில் அரசு பள்ளியில் வேலை கிடைத்ததால், ஏற்கனவே ஒரு வருடமாக பார்த்து வந்த aided school வேலை விட்டு விட்டு தர்மபுரி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் 

Friday 22 April 2016

நோய் மட்டுமா காரணம்?

நோய் மட்டுமா காரணம்?
 வைகறை தாங்க முடியா வலியால் துடித்து மட்டுமல்ல ,
கடுமையான மன உளைச்சலாலும் நீ துடித்ததை நான் அறிவேன்...

 உன் அன்பையே உன்னை கொல்லும் கருவியாகப்பயன்படுத்திய நல்ல உள்ளங்களின் அலட்சியப்படுத்தலை, நீ அலட்சியப்படுத்த துணிவில்லை உனக்கு...

மருகி மருகி நீ புலம்பிய புலம்பல் என் காதில் ஒலித்துக்கொண்டே உள்ளது... 


கடுமையான மன உளைச்சலே உனது நோயை அதிகப்படுத்தியிருக்குமோ என தவிக்கின்றேன்..

 எப்படியெல்லாம் உன்னை காயப்படுத்த முயன்றார்கள்...கலங்காதேபா என்ற போதும் எனக்காக, இல்லம்மா நான் இனி கலங்க மாட்டேன்..
நான் சரியா இருக்கேன்..என்னை புரிந்து கொள்ளும் நாள் வரும் என்று கூறி மனதில் புழுங்கினாயே...
 உன்னையே நினைத்து வழும் உன் மனைவியை எண்ணி பார்க்கலயே பா... எத்தனை அன்பான குடும்பமாக வாழ்ந்தீர்கள்...

கண் பட்டு விட்டதோ என கலங்குகின்றேன். நாங்க இருக்கோம்மா என்று ஆறுதலாக கூறிய பொழுது என் வீட்டுக்காரர் இருக்கமாட்டாரே அக்கான்னு கதறி அழுதவளை கண் கொண்டு பார்க்க முடியலயே..

 உன் வேதனையில் கிடைக்கும் மகிழ்வு ..எத்தனை காலம் நீடிக்கும்.... மனசாட்சி கொல்லும் நாள் வரும்....வரையில் மீண்டும் ஒரு வைகறை மாளாதிருக்கட்டும்...

Saturday 16 April 2016

வீதி-26

நாங்க ரெடி!நீங்க ரெடியா?
 வீதிக்கு வர....
 நாள்:17.4.16
இடம்:நம்ம ஆக்ஸ்போர்டு உணவகக்கல்லூரி.புதுக்கோட்டை
 [புதிய பேருந்து நிலைய மாடியில்]
 நாளைய தினத்தை தமிழ்ச்சுவைப்பருக கிளம்பிட்டீங்க தானே. 

இலக்கியங்களோடு இலக்கியமாக....
 வீதிக்கு கிடைத்த பொக்கிஷமான, கவிஞர் வைகறையின் அக்கறையுடனான ஈடுபாட்டில் நாளைய வீதி கலகலக்க போகிறது.
 உவகையுடன் அழைக்கின்றோம் உவப்புடனே வாருங்கள் .

அமைப்பாளர்கள் :கவிஞர் வைகறை,கவிஞர் சோலச்சி.

Thursday 14 April 2016

பறத்தல்

ஒரு சுணங்கல்
 ஒரு சலிப்பு
ஒரு அயர்வு
ஒரு கத்தல்
ஒரு சொட்டு வியர்வை
ஒரு நொடி கோபம்
ஒரு சோம்பல்
எதுவுமில்லாமல்
காற்றுக்கடலில்
சிறகுதுடுப்பால்
காற்றலைகளை தள்ளி
 கீழ்மேல் மிதக்கும்
 பறத்தல் ......
வாழ்க்கையதுவே
.

Wednesday 13 April 2016

அம்பேத்கர்

வகுப்பின் மூலை உனை நினைவூட்டிக்கொண்டு
வாழ்வில் அவமானங்களையே படியாகக் கொண்டு
 பெற்ற வெற்றிக்கு தலைவணங்குகின்றேன்.
 யாரெல்லாம் ஒதுக்கினார்களோ
யாரெல்லாம் அவமானப்படுத்தினார்களோ
யாரெல்லாம் அடிமை படுத்தினார்களோ
அவர்களுக்கே சட்டமியற்றி
சாட்டையை திருப்பிய தலைவா....
உங்களை மறந்ததால் நாடு
உன்னதமிழந்து
 ஊழலுக்குள் மூழ்கி தடுமாறுகின்றது.... 
மீண்டும் உனது பிறப்பிற்காக
 காத்துக்கொண்டு....

Tuesday 12 April 2016

வேண்டுமா...?

வேண்டுமா...?
 வேலை முடிந்ததும் அலையாம
சீக்கிரமா வீட்டுக்கு போனும்.

 நண்பர்களை கட் பண்ணனும்.
சே..என்ன கொடுமை..

 அரிசி பருப்பு வாங்கி தந்து
 சமைச்சத பிடிக்கலன்னாலும்
அன்போடு பாராட்டனும்..

 எத்தனை எடுத்துக்கொடுத்தாலும்
 நிறைவடைய மாட்டாள்.
என்ன சொன்னாலும்
 எதிர்ப்பு தான்..

 செலவு பண்ணா சேர்க்கனும்பா.
சேர்க்கனும்னா கஞ்சூஸ்ம்பா.
நல்ல பேர் வாங்குறதுக்குள்ள
நாக்கு தள்ளி, வழுக்கை விழுந்திடும்.
 குழந்தைகள நினச்சா பக்குன்னு இருக்கு
மற்ற அப்பாக்களோட ஒப்பீடு செஞ்சே
கொன்னுடும்..
 வாலில்லா குரங்குகளே
குழந்தைகள் வடிவில் இருப்பதைப் பார்த்தால்..
 அதுக்கு சீட்டு வாங்கி
பள்ளிக்கூடம் அனுப்பி
பட்டம் வாங்கி,
வேலை வாங்கி
கல்யாணம் பண்ணி முடிக்கிறதுக்குள்ளே
மாரடைப்பு வந்து போய் சேர்ந்துடுவோம்...
 இத்தனைக்கவலைகளும் ஒன்றாய் சேர ,
அத்தனை பேரும்
 அட்சதை தூவி வாழ்த்த
வந்தது திருமணம்..
மணமகன் கனவில்...

Sunday 10 April 2016

கள்ளம்

குழந்தமையில் விதையாக நுழைந்திருக்கலாமது
அப்பாவின் பேனா மறைத்து வைத்த கணத்தில்...
 அம்மாவின் வளையலை உடைத்து விட்ட கணத்தில் வேர்விட்டிருக்கலாமது.....
 என்னுடனே வளர்ந்த அது தனது வேரை
 ஆழப்படுத்தியிருக்க வேண்டும்..
வகுப்பறையில் புத்தகங்களுக்கு நடுவில்
கதைப்புத்தகங்களை வாசித்த கணத்தில்..

 தனிப்படிப்பிற்கு செல்லாமல்
சிற்றோடையில் நனைந்த கணத்தில்
குற்ற உணர்வுகளை தனது கிளைகளால்
துடைத்து விடும் முயற்சியிலது..

 பள்ளித்தேர்வின் போது
அச்சமின்றி திரையரங்கில் அமர
அது தான் இடம் தேடியிருந்திருக்க வேண்டும்...

நண்பர்களோடு வெண்புகை வளையங்களை விடும் கணம்
தனது வேரை நிலைநிறுத்திய
வெற்றிப்புன்னகையோடது..

 பருவத்தின் அலைக்கழிப்பில்
தாவணியின் பின்னோடச்செய்து
பள்ளியைத்துறக்கச்செய்ததை
 இக்கணம் உணர்த்துகின்றது...

 மெதுவாய் மதுவை சுவையுணர்த்தி
 மெல்ல எனை அதில் மூழ்கடிக்க வைத்து
 விருட்சமாய் வளர்ந்து
கிளையசைத்து சிரிக்கின்றது..
 அதுவாய் நானும் ,
நானாய் அதுவும் மாறிய போழுதில்
மரணத்திற்கு கள்ளத்தனமாய்
வாசலை திறந்து வைத்த கள்ளத்தை
வேரோடு சாய்க்கும் திராணியற்ற நிலையில் ....
 மரணத்தை தழுவியபடி...
எனது பயணம்..

Sunday 3 April 2016

கவிப்பேராசான் மீரா விருது 2015 விழா

வளரி இதழ் வழங்கிய
 கவிப்பேராசான் மீரா 2015 விருது விழா

மதுரையில் மிகச்சிறப்பாக நிகழ்ந்தது..

 என்னுடன் தாங்களே விருது பெரும் மகிழ்வோடு வீதி இலக்கிய உறவுகள் கவிஞர் முத்துநிலவன் ,கவிஞர் மகாசுந்தர்,கவிஞர் மீரா .செல்வகுமார்,கவிஞர் வைகறை,திரைப்பட பாடலாசிரியர் புதுகைப்புதல்வன்,கவிஞர் நாகநாதன்,கவிஞர் சோலச்சி,கவிஞர் நீலா,அண்ணி மல்லிகா,கவிஞர் அமிர்தாதமிழ்,குட்டி கவிஞர் எழிலோவியா,குட்டீஸ் லாவண்யா,ஆர்யா,ஆதவன்,அக்கா மங்கையர்கரசி ஆகியோர் மகிழ்வோடு கலந்து கொண்டனர்.

 எனது அழைப்பில் வலைப்பூ நண்பர்கள்.திருமிகு செந்தில்குமார்,திருமிகு பகவான் ஜி,திருமிகு மதுரைசரவணன்,திருமிகு சிவா[கலகல வகுப்பறை],வலிபோக்கன்,தமிழ்வாசிப்பிரகாஷ்..கவிஞர் ஞானசூரி சுகன்யா, 

தனது அரிதான நேரத்திலும் கலந்துகொண்டு சிறப்பித்த தோழி ஜெயா,திருமிகு எமர்சன்,. இன்னும் சிலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 விழாவில் தோழி ஆதிரா முல்லை,கவிஞர் பர்வதவர்த்தினி,கவிஞர் கூரா அம்மாசையப்பன்,ஆகியோரை நேரில் சந்தித்தது வாழ்வின் பெருமகிழ்வு.. 

கவிஞர் மீராவின் நினைவலைகளை திருமிகு தி.சு நடராசன் எங்களிடம் கடத்திய விதம் மிகச்சிறப்பு,

தலைமை வகித்த திருமிகு செல்லாவின் பேச்சு அருமையாக இருந்தது.. 

கவிஞர் முத்துநிலவன் அண்ணா தங்கைகளுக்கு கிடைத்த விருது தனக்கே கிடைத்த விருதாக உணர்கின்றேன் எனக்கூறி அகமகிழ்ந்தார்.

 வாழ்த்துரை வழங்கிய அனைவரும் நூல்கள் குறித்து அருமையாக பேசினார்கள்.
எங்கே போவேன்? கவிதையை அரங்கில் வாசித்த கவிஞர் மலர்மகள் அவர்களுக்கு நன்றி..
 கவிஞர் ஆதிரா முல்லை தனது தனித்துவ மிக்க பேச்சால் அனைவரையும் கவர்ந்தார்..
தோழி கிரஸுக்கும் சேர்த்து நான்.ஏற்புரை வழங்கிய தருணம் இனிமையானது வளரி இதழ் ஆசிரியருக்கும்,
எங்களது கவிதைகளை தேர்வு செய்த ஆசிரியர் குழுவினருக்கும்,
தங்களது மதிப்பு மிக்க காலத்தை எனக்காக ஒதுக்கி என்னுடன் வந்து கலந்து கொண்டு நிறைவான மகிழ்வை அளித்து தோழமைகளுக்கும் மனம் நிறைந்த நன்றி..

கிரேஸிடமிருந்து போட்டோக்களை சுட்டுட்டேன் நன்றிமா...Friday 1 April 2016

கவிப்பேராசான் மீரா விருது பெற்ற ”விழிதூவிய விதைகள் நூல்”

கவிப்பேராசான் விருது பெறும் விழாவிற்கு மதுரை வலைப்பதிவர்களை அன்புடன் அழைக்கின்றேன் .
 நாள்:3.4.16 ஞாயிறு
 இடம்:நற்றிணை அரங்கு [மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் அருகில்] 

’விழி தூவிய விதைகள் கவிதை” நூல் வந்த பாதை

 எனது முதல் கவிதை நூல் அட்டைப்படம் சிறப்பா இருக்கனும்னு இணையத்தில் தேடிய பொழுது இப்படம் மிகவும் பிடித்து இருந்தது..ஆனால் புத்தகத்தை அச்சிட்ட திரு.இரவி அவர்கள் இதை புத்தக அளவில் பெரிதாக்கினால் உடைந்து போயிடும்மா..வேற படம் பாருங்க என்று கூறிய பொழுது இல்ல இதுதான் வேணும் என்ற பொழுது இதை பெரிதாக வரைந்து தந்தால் போடலாம் என அரை மனதுடன் கூறினார்.

 எனக்கு ஓவியம் கற்றுத்தந்த ஓவியர் மகேந்திரனிடம் கூறிய போழுது நிச்சயமா வரையலாம் அக்கான்னு அழகாக வரைந்து தந்துவிட்டார்.. 

கவிதைகள் அச்சிடும் தாட்கள் சிறப்பாக இருக்கனும்னு வழவழப்பான தாளைத்தேர்வு செய்தேன்... எனக்கே தெரியாம அட்டைப்படத்தை முப்பரிமாணத்தில் செய்து புத்தகத்தை பளபளப்பாக்கி விட்டார்..திரு இரவி அவர்கள்...

 கவிஞர் தங்கம் மூர்த்தி,கவிஞர் முத்துநிலவன்,கவிஞர் சுவாதி,தோழி கிருஷ்ணவேணி நூலுக்கு முன்னுரை,அணிந்துரை,நட்புரை வழங்கி அணி செய்தனர்...

 கவிதை நூலை கைகளில் தொட்ட பொழுது என் மகளை முதன்முதலாய் தொட்ட உணர்வு...

 நூல் வெளியீட்டுவிழா \
நாள்:2.12.2012

 இடம்: நகர்மன்றம் புதுகை

அன்று  எனது விழிதூவிய விதைகள் நூலும், கவிஞர் சுவாதியின் மழைவெளிதனிலே நூலும் வெளியிடப்பட்டன.
வரவேற்புரையை முனைவர் கண்மணி கவிதையாக வரவேற்றார்.

 தோழர் ஓவியா அவர்கள் தலைமை ஏற்றார்.

 திருமிகு பானுமதி அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்

 தோழர் ஓவியா அவர்கள் வெளியிட கவிஞர் பாலாவின் துணைவியார் அன்புக்குரிய மஞ்சுளா அம்மா பெற்றுக்கொண்டார்கள்..

 அன்புக்குரிய பட்டிமன்ற பேச்சாளரும் தோழியுமான திருமிகு .ரேணுகாதேவி அவர்கள் நூல் குறித்து சிறப்புரையாற்றினார்கள்.

 கவிஞர் ரத்திகா விழாவில் புத்தகங்களை அறிமுகம் செய்து வாழ்த்தினார். 

கவிஞர் சுவாதி நன்றி கூறினார்.

 முழுக்க முழுக்க நகர்மன்ற மேடை பெண்களால் நிறைந்து அழகு பெற்றது..

குட்டிமா

பூக்களை ரசிக்கும்
பூவென கைபிடித்து \
குதித்தாடி வந்தவள்
சட்டென்று கத்தியபடி
கால்களினூடே ஒளிகிறாள்...
 வாலை கால்களுக்குள் நுழைத்தோடும்
நாயைப்பார்த்து 
பயப்படாதே குட்டிமா...
அது நல்ல நாயென்றேன்..
 நம்பமுடியாமல்
நல்லன்னா என்னான்னு கேட்டவளுக்கு
விளங்க வைப்பதெப்படியென முழித்தவள்.
தயங்கியபடி தெரியாதே என உண்மையைக்கூறி ..
 நீ நல்ல பிள்ளையா?
கெட்டப்பிள்ளையா? என்றேன்
நல்லப்பிள்ளை என்றவளிடம்
 நல்லன்னா என்னன்னு கேட்டேன்? 
என்னபதில் வருமென்ற ஆவலில்....
 சட்டென்று தயங்காமல்
தன் குழந்தமையை நிரூபித்தபடி
தெரியாதென்றே
ஓடுகிறாள் குட்டிமா..