World Tamil Blog Aggregator Thendral: January 2015

Thursday 29 January 2015

பட்டுக்கோட்டையார் மக்கள் இயக்கம்

”பட்டுக்கோட்டையார் மக்கள் இயக்கம் ”புதுக்கோட்டை 14ஆம் ஆண்டு இலக்கியத்திருவிழா

நாள்:31.01.15
நேரம் :மாலை 4.00மணி
இடம் :நகர்மன்றம்.புதுகை

இவ்விழாவில் நமது அய்யா கவிஞர்.கி .பாரதிதாசன்.நிறுவனர்,கம்பன் கழகம் பிரான்சு .அவர்கள் எழுதியுள்ள ஏக்கம் நூறு,கனி விருத்தம் ஆகிய இரு நூல்கள் இயக்குநர் திலகம் கே.பாக்கியராஜ் அவர்கள் தலைமையில் வெளியிடப்பட உள்ளன.அனைவரையும் வருக வருக என மகிழ்வுடன் அழைக்கின்றோம்.நன்றி.
மௌனம்

தொலைந்த வார்த்தைகளைத்
தேடியதில் புதையலாய்
மௌனம்....
ஆழி விழுங்கிய இருளென...

Sunday 25 January 2015

என்ன செய்யப்போகின்றோம்..?

என்ன செய்யப்போகின்றோம்..?

விஜய் டி.வி நீயா?நானா?விவாத மேடையில்

நாம் வாழும் நிலம் வீணாகக்கூடாதே என்ற கவலையில் விவசாயிகளும்...நஞ்சானாலும் பி.டி விதைகள் சிறந்தவை என வாதாடுபவர்களைக்காண்கையில் விழித்துக்கொண்டே கிணற்றில் விழு எனக்கூறுவதாய் உள்ளது..

இன்னும் கொஞ்ச நாள் நம்மாழ்வார் வாழ்ந்திருக்கலாம்னு தோணுது...
விவசாயியின் கவலை நம் கவலையாக எப்போது மாறும்...?

உண்மை எளிமையாகவும் ,தீமை ஆடம்பரமாகவும் வீற்றிருந்ததைக்காண முடிந்தது.

இதன் ஒப்பீடாய் மனதிற்குள் மருத்துவம் பற்றிய சிந்தனையாய், சித்த மருத்துவம் பக்க விளைவுகளற்ற மருந்தினையும்,ஹோமியோபதி பக்க விளைவுகளைத்தரக்கூடிய மருந்தினையும் உள்ளடக்கிஉள்ளதையும்..நாம் சித்த மருத்துவத்தை ஒதுக்கிவிட்டு ஆங்கில மருத்துவத்தைப் பின்பற்றுவது, நமது பாரம்பரிய ஆரோக்கியத்தை நாம் இழந்து கொண்டிருப்பதை உணர்த்துகின்றன..என்பதையும் உணரமுடிந்தது..Saturday 24 January 2015

கீரைக்காரி

தோல் அடுக்கிய சுருக்கங்கள்
தோள்கள் சுமக்கும் கீரைக்கூடையை
காய்த்த கரங்கள்
இறக்கிவைக்கும் காலம் வரலயா?

வரண்ட புன்னகையை விடையாய்
வீசிச் செல்கின்றாள்....
வற்றாத அன்புடையாள்...


Tuesday 20 January 2015

உறக்கம்

இளஞ்சூடான மெத்தையில்
இதமாய் போர்வைக்குள்
புதைகையில்......

வழியில் சாக்கடையில் நனைந்து
வாலைச்சுருட்டி படுத்திருந்த
நாய்க்குட்டியின் முனகலும்

நடைபாதையில் நடுங்கி உறங்கும்
குழந்தையின் முனகலும்
 இம்சிக்கின்றது தூங்கவிடாது...

நரம்பில் ஊடுறுவும் குளிரென...

Sunday 18 January 2015

சொல்லவியலா...வலியாய்..


துள்ளி விளையாடிக்கொண்டிருந்த
ஒரு ஞாயிற்றுக்கிழமையின்
இரவுப்பொழுதில் வலியோடு என்னில் உறைந்தாய்
உனக்கும் எனக்கும் பிணக்கில்லை...
ஏற்றுக்கொண்டேன்...நீ தந்த வாதையை
மெல்ல என்னை பிசைந்து
பிழிந்தெடுத்தாய்....காலந்தவறாது

இத்தனை வருடங்கள்
பாடாய்ப்படுத்தி போகையிலும்
உச்சி முதல் பாதம் வரை சூடாக்கி
நினைவுகளை மறக்கச்செய்து
எப்போது வருவாயோ என்ற பதற்றத்திலேயே
தவிக்கவிட்டு,வந்தாலும் அச்சுறுத்தி,
தனிமை வலியை அதிகமாக்கி,
என் சுறுசுறுப்பை உறிஞ்சி,
சோம்பலாய் படுக்கையிலேயே
சொந்தமனமும் வெறுக்க,
எதிலும் பிடிபடாது,
எல்லாவற்றிலும் எரிச்சலூட்டி,
உடலைத் துவைத்த துணியாய்
உயிரோடு பிழிந்து,உடல் நடுங்க
மனதில் நிறையும் பதற்றத்தை
இம்சையை தாங்கவியலாத் துயரத்தோடு
வலிகளால் நான் துடிக்க துடிக்க
 வதைத்துச் செல்கின்றாய்...
.என்னில் வாழ்ந்த நீயே
போதும் உன்னுடனான வாழ்வு
போய் வா...


Saturday 17 January 2015

38 ஆவது புத்தகக் கண்காட்சி

சென்னையில் 38 ஆவது புத்தகக்கண்காட்சி

நான் கலந்து கொள்ளும் 2ஆவது புத்தகக்கண்காட்சி..700 ஸ்டால்கள்..ஏயப்பா...

எனது நூல் இருந்த கீதம் பதிப்பகத்தில்...
 13மற்றும் 15 ஆகிய இரு நாட்களும் கலந்து கொள்ளும் வாய்ப்புக்கிடைத்தது.

7வீதிகள் ஒவ்வொரு வீதிக்கும் ஒரு பெயர்..வேலுநாச்சியார் வீதின்னு ஒரு வீதிக்குப்பெயர்...கீதம் பப்ளிகேஷன்ஸ் நடத்தும் தம்பி சிங்காரம் 2 ஸ்டால்கள் முத்துநாடு பதிப்பகம்,கீதம் பப்ளிகேஷன்ஸ் என 2 ஸ்டால்கள் வைத்திருந்தார்கள்...

எங்கு பார்த்தாலும் புத்தகங்கள்..குழந்தைகள் முதல் முதியோர் வரை மகிழ்வுடன் ,வியப்புடன்,வாங்கமுடியாத ஆதங்கத்துடன் என புத்தகப்பிரியர்கள் நிறைந்து வழிய...உள் நுழைந்தேன்...நானும் .

இம்முறை ஸ்டால் எண்கள் மற்றும் வாங்க வேண்டிய புத்தகங்கள் பட்டியல்களை எழுதி வைத்து இருந்ததால்  சிரமமின்றி புத்தகங்களை வாங்க முடிந்தது ..நடந்து நடந்து கால்கள் வலித்தாலும் ..கண்கள் தேடிக்கொண்டே இருந்தன...

முத்துநிலவன் அய்யா வலைப்பூ நண்பர்கள் சந்திப்பு அன்னம் பதிப்பக ஸ்டாலில் ஏற்பாடு செய்திருந்தார்கள்...

இப்பொழுதெல்லாம் எந்த நிகழ்வு மற்றும் விழாக்களில் முகநூல் நண்பர்கள்,வலைப்பூ நண்பர்கள் சந்திப்பு நிகழ்வும் சேர்ந்து கொள்கின்றது.
அன்னம் ஸ்டாலில் முத்து நிலவன் அய்யா,மகாசுந்தர் சார்,சகோதரி தேன் மதுரத்தமிழ் கிரேஸின் தந்தை,தம்பி கோவை ஆவி ,சகோ துளசிதரன் தில்லையகத்து கீதா,குடந்தை சரவணன் சார்,அய்யா செல்லப்பன்,சகோ தளிர் சுரேஷ்,சமீபத்தில் கண்ணகி காவியம் நூல் வெளியிட்ட அய்யா,எழுத்தாளர் ஜெயபிரகாசு,சகோ பால கணேஷ்,ம.பொ.சி பேத்தியும் எனது முகநூல் நண்பருமான பரமேஸ்வரி திருநாவுக்கரசு,மூங்கில்காற்று டி.என் முரளீதரன் சார்,சகோ கிருஷ்ண வரதராஜன் மற்றும் அனு ....இன்னும் பலநண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.


 கண்காட்சிக்கு வந்திருந்த திரு. இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்கள்


புத்தகக்கண்காட்சிக்கு வெளியில் எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு ஆதரவாக குரல் கொடுக்க குழுமியக்கூட்டத்தை காவல்துறை முதலில் தடுத்தாலும் பிறகு அனுமதிஅளித்து நகர்ந்தனர்..அமைதியாக தனது எதிர்ப்பைக்காட்டிய குழுவினருடன் நானும் கலந்து கொள்ள வாய்ப்புகிடைத்தது.


எதிர்பார்த்ததை விட வழக்கம் போல் கூடுதலாகப் புத்தகங்கள் வாங்கி, தூக்கி வரமுடியாததால் தம்பியிடம்  அனுப்ப சொல்லி வந்துவிட்டேன்.வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவமாய் புத்தகக்கண்காட்சி..

சென்ற வருடம் சென்றிருந்த போது தங்கம் மூர்த்திசாரின் புத்தகத்தை அன்னம் ஸ்டாலில் பார்த்ததும்  மகிழ்வாய் உணர்ந்தேன் ...இம்முறை முத்துநிலவன் அய்யாவின் நூல்களும் ,கீதம் பதிப்பகத்தில் எனது நூலும் இருந்ததைக் கண்டதும் வந்த மகிழ்வை அளவிட முடியாது...

புத்தகப்பிரியர்கள் அனைவரும் பார்க்க வேண்டியக்கண்காட்சி...


ஒரு கோப்பை மனிதத்தில் ...ஒரு துளி

அன்புள்ள மு.கீதா ( தேவதா தமிழ் ) அத்தை அவர்களுக்கு
தங்கள் “ ஒரு கோப்பை மனிதம்” படித்தேன். முற்றிலும் களைப்புற்று, நா வறண்ட நிலையில் ஒரு கோப்பை தேநீர் தந்த நிறைவை அடைந்தேன். நீங்கள் “என்னுரையில்” என் மனதில் தைத்த அம்புகள் என குறிப்பிட்டிருந்தீர்கள். அந்த அம்புகள் தைத்த வலி “ பருவத்தின் வாயிலில்” கவிதையில்
“ கண்ணீரில் மிதந்த கண்களுடன்
குழறலாய்க் கூறினாள்
சிறகுகள் வெட்டப்பட்டதை”
எனும் பொழுதும், “ எரிமலைக்குழம்பாய்” மற்றும் “ சமத்துவம் “ கவிதையிலும் உணர முடிந்தது.
பாலை நிலத்திற்கு இலக்கணத்தில் வரையறை இல்லை என நினைக்கிறேன். உங்கள் கவிதையில்
“ எனக்கும் மண்ணுக்குமான
உறவை மனிதன்
தீர்மானிக்க பிறந்த
பாலை. “
என பாலை நிலத்திற்கு இலக்கணம் கூறியது மிகவும் பிடித்திருந்தது.
பல கேள்விகளுக்கு சமுதாயம் பதிலளிப்பதில்லை. கேள்விகளை தட்டிக்கழித்துவிடுகிறது அல்லது கேட்பவரை அலட்சியப்படுத்துகிறது. சிலசமயம் பிறப்போடு முடுச்சு போட்டு தப்பித்துவிடுகிறது.
“தோட்டிச்சி பாட்டிக்கு சோப்பு
வாங்க யார் கொடுப்பா காசு?”
என்று நீங்களும் கேள்வியை சமுதாயத்தை நோக்கி வீசியிருக்கிறீர்கள். விடையையும் “ மனுதர்மம்” என்ற கவிதையில் கூறியுள்ளீர்கள். ஆனால் பலசமயம் சமுதாயம் விடைகளையும் ஏற்றுக்கொள்வதில்லை!. உங்களது “இந்து நாம்...?” கனவு பலிக்கட்டும்.
விதையின் விடாமுயற்சியை நமக்கு சொல்லியிருக்கிறார்கள். ஆனால் மழையை, மழைக்கு தாயான வானத்தை மறைத்திருப்பார்கள். மாணவர்கள் வேண்டுமானால் ஏணியாய் இருந்த ஆசிரியர்களை மறந்திருக்கலாம். ஆனால் நீங்கள் மறக்கவில்லை.
“ விண் தொடும் விதையின்
முயற்சிக்கு
கை கொடுக்கும் விண்....
மழை”
என பாடுகிறீர்கள். அருமை!
அந்நிய மண்ணில் நமது தொழிலாளர் அவலங்களை எழுதியுள்ளீர்கள். நமது நாட்டில் தொழிலாளர் படும் அவலங்களையும் நீங்கள் எழுத வேண்டும். எங்கள் இடிந்தகரையை பாடியதற்கும் நன்றி!.
நிச்சயமாக இக்கவிதை நூலை படித்தவர்கள் ஒரு கோப்பை மனிதம் பருகியிருப்பார்கள் அல்லது பரிமாறியிருப்பார்கள். சமுதாயம் முழுவதும் மனிதம் பரிமாறப்பட வேண்டும் என்பதே என் ஆசை.
அன்புடன்
முத்துதிலக்.
— 

Friday 16 January 2015

ஹைக்கூ

கவலைகளின் சுருக்கங்களை
நீவி எடுக்கின்றது
பொக்கைவாய்ச் சிரிப்பு.

Monday 12 January 2015

pongal vazthu-பொங்கல் கவிதை

வலைப்பூ நண்பர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்
-------------------------------------------------------------------------------------------------------

காடு கரை தந்ததை
களிப்புடனே அறுத்திட்டு
போகியன்று கழித்து
சூரியனுக்கு பொங்கலிட்டு
மனம்பொங்க மகிழும் விழா..

மாடு கண்ணு குளிப்பாடி
மஞ்ச குங்குமம் பூசி
மனசார நன்றி சொல்லும்
மகத்தான திருவிழா...

நகரத்துச் சொந்தமெல்லாம்
கிராமம் தேடி நாடி வரும்
தைப்பொங்கல் திருவிழா..

Sunday 11 January 2015

புதுகையில் நல்லிணக்க பொங்கல் விழா


புதுகையில் நல்லிணக்க பொங்கல் விழா

இன்று புதுக்கோட்டை மாவட்ட திருவருள் பேரவையும் ,புதுக்கோட்டை மாவட்ட வர்த்தகக்கழகமும் இணைந்து நடத்திய நல்லிணக்க பொங்கல் விழா இன்று 12.1.15 மாலை புதுக்கோட்டை மாவட்ட வர்த்தகக் கழக சில்வர் ஹாலில்  நடந்தது..

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்க...திரு சீனு.சின்னப்பா அவர்களின் தலைமையின் கீழ் நிகழ்ந்த இவ்விழா....உலகத்தோருக்கு ஒரு முன் மாதிரியான விழாவாகும் .இவ்விழாவில் மத வேறுபாடின்றி இந்து,முஸ்லீம்,கிறித்தவர்கள் ஆகிய அனைவரும் கலந்து கொண்ட நல் விழா...

இவ்விழாவில் மும்மதத்தைச் சேர்ந்த மூவருக்கு மனித நேய மாண்பாளர் விருதுகளும்,மேலும் மூவருக்கு இளம் நல்லிணக்க நாயகர்கள் என்ற விருதுகளும் தகுதி வாய்ந்தோருக்கு அளிக்கப்பட்டுள்ளது...

இளம் நல்லிணக்க விருது வாங்கியவர்கள்

முகநூலில் உள்ள நண்பர்கள் திரு .தங்கம் மூர்த்தி...
,டாக்டர் .கே.எச்.சலீம்,
மற்றும் திரு .ஆரோக்கியசாமி..ஆகியோர்...

மும்மதத்தினரும் இணைந்து கொண்டாடிய இவ்விழாவில் பொங்கல் பரிசு 6 பேருக்கு கொடுக்கப்பட்டது.இவ்வாறே கிறிஸ்துமஸ் ,ரம்ஜான் ஆகிய பண்டிகைகளிலும் அனைவரும் இணைந்து கொண்டாடுவர்..
இறுதியில் பொங்கலுடன் சிறப்பான உணவு வழங்கப்பட்டது..

மனிதத்திற்கு மதம் ஒரு தடையில்லை என்பதை இவ்விழா உணர்த்தியது...இவ்விழா சிறப்புடன் நடக்க முக்கியக்காரணமாக சொல்லின் செல்வர்.திரு சம்பத்குமார் சார் அவர்களே காரணம்..இன்று அவர்களுக்கு பிறந்த நாள் என்பதை கூறி வாழ்த்தினார்...தங்கம் மூர்த்தி சார்...மனம் நிறைந்த விழாவாக இன்றைய விழா அமைந்தது...

 இன்று மாலை எனை அழைத்து இவ்விழாவில்  என்னை கவிதை படிக்கச்சொன்ன திரு .சம்பத் குமார் சாருக்கு மனம் நிறைந்த நன்றி.

என் கவிதை
----------------------
தைமகளே வருக!
செந்தமிழ்ப்பா பாடியுன்னை
மெய்யுருக வரவேற்கின்றேன்.

மதம் கொண்ட மனம் விடமாக
மதத்தால் பிரிந்த மனங்களை
தைமகளே நீ தை..மகளே

இனத்தால் பிளவுண்ட இதயங்களை
மனத்தால் தமிழரென்று கூறியே
தைமகளே நீ மனதைத் தை மகளே

உழவரெல்லாம் எலி உண்ண
இளைஞரெல்லாம் எலி பிடித்த கையோடு
இருக்கும் நிலை மறந்து
தமிழ் மறந்து வாழ்ந்திடும்
தமிழினத்தை ஒன்றிணைத்து
தைமகளே நீ தை மகளே..

எவர் வந்து பிரித்தாலும்
எந்நாளும் தமிழினம்
இணைந்தோங்கும் நாளின்று என்றே
இணையில்லா தைமகளே
பொங்கும் மனதுடன்
நல்லிணக்கப்பொங்கல் விழாவில்
வாழ்த்துகின்றோம்..
வாழ்க நீ!வளர்க நீ!

Saturday 10 January 2015

27.12.14 கம்பன் விழா கவியரங்கில்

கம்பன் விழா கவியரங்கில்

சூர்ப்பனகைத்தோளில் நிழற்படக்கருவி...தலைப்பில்

27.12.14 அன்று மாலை மணப்பாறையில் சிறப்புரை முடித்த மாலையில் வீட்டுக்கு வந்தவுடன் 5மணி அளவில் நான் மிகவும் மதிக்கும் சம்பத்குமார் சாரின் அழைப்பு...இன்று நடக்க உள்ள கம்பன் விழா கவியரங்க நிகழ்வில் ரேவதி என்பவர் வரவில்லை அவருக்கு மாற்றாக நீங்கள் “சூர்ப்பனகைத் தோளில் நிழற்படக்கருவி” என்ற தலைப்பில் கவிதை படியுங்க உங்களால் முடியும்னு நம்பிக்கை கூறி வைத்துவிட்டார் அலைபேசியை..ஒரு நிமிடம் நம்ப முடியாமல் நாமா? கவிச்சான்றோர்கள் நிறைந்த அவையிலா ?அதுவும் குறுகிய காலத்திற்குள்ளாகவா...வேறு வழியில்லை ...யோசிக்க கூட நேரமில்லை 6.30மணிக்கு போகனும் ...உட்கார்ந்து எழுதத்துவங்கி விட்டேன்...பிரதி எடுக்க நேரமின்றி விழா நடந்து கொண்டிருக்கையில் எழுதிக்கொண்டிருந்தேன்..

கவிஞர்கள் தங்கம் மூர்த்தி,தஞ்சை இனியன் ,சக்திஸ்ரீ,ஆகியோருடன் நானும் .

கவிதை-சூர்ப்பனகைத் தோளில் நிழற்படக்கருவி

சூர்ப்பனகை நினைக்குமுன்னே
நினைத்ததெல்லாம் நிகழ்த்திடுவான்
இப்போதவள் கேட்டதையெண்ணி
மலைத்தே மீண்டும் கேட்டான்
கேட்டதென்ன தங்காய்..?

நல்லவங்களா இருக்குறது தப்பா சார்?

நல்லவங்களா இருக்குறது தப்பா சார்?
-
வங்கியில் உங்களுக்கு கல்விக்கடனுக்கான subsidy கிடைக்கலன்னு சொன்னாங்க..நீங்க தரச்சொன்ன படிவம் எல்லாம் தந்த பின்னும் ஏன்  சார் எனக்கு கிடைக்கலன்னு கேட்டேன்.

,மேலதிகாரியிடம் ஏன் சார் நான் தான் இதுவரை ஒழுங்கா கட்டி வரேன்ல...பிறகு ஏன் எனக்கு மட்டும் வரலனு சொல்றீங்கன்னு கேட்டேன்.

அவரும் ஆமாம் மேடம் நாமும் எங்களின் உயர் அலுவலகத்திற்கு உங்கள் சார்பா கேட்டோம் அவங்க.அரசு உத்தரவில் யார் பணம் கட்டாம நிலுவையில் வச்சிருக்காங்களோ அவங்களுக்கு மட்டும் உதவித்தொகை கொடுக்கச்சொல்லி உத்தரவு,அதனால இவங்களுக்கு இல்ல என்றார்களாம்.

..எங்க போய் முட்டிக்கிறது...என்னைக் கட்ட வேண்டாம் ,தள்ளுபடி பண்ணிடுவாங்கனு சிலர் தடுத்தப்ப...அது தவறு, வாங்குனோம்ல கட்டுவது நம் கடமைனு சொல்லி தவறாம கட்டுனதுக்கு அரசு தரும் பரிசு...இது...

இந்த உண்மை தெரிஞ்சவங்க கடன கட்டாம உதவித்தொகை வாங்கிட்டாங்க...மனசாட்சிக்கு பயந்து கட்டுனா...இப்படியாம்..

அதுவும் வாங்குன தொகையை விட 3 மடங்கு கட்டனும் போல அவ்ளோ வட்டி....வட்டி மேல் வட்டினு....

யாரும் தனியார் வங்கி கல்விக்கடன் தருதுன்னு நம்பி வாங்கிடாதீங்க...

மேலதிகாரியிடம் நல்லவங்களா இருக்குறது தப்பா சார்னு கேட்டதுக்கு சங்கடமா சிரித்தார்...நம்ம அரசு இப்படி இருக்கு ...னு

இனி கட்டுவதும் கட்டாததும் உங்கள் கையில்..

Friday 9 January 2015

கோலம்
 கோல..ப்டியே...

குயிலாய் கூவினான்
கோல்பிடிக்கும் வயதான்...

Wednesday 7 January 2015

இவர்களுக்கு எத்தனை மார்க் போட..

இவர்களுக்கு எத்தனை மார்க் போட..

எழுத்தே தெரியாதவள்..பிழையாக இருந்தாலும் சுயமாக எழுதுகின்றாள்..தானே தவறின்றி படிக்க விரும்புகின்றாள்..

புத்தகத்தை வெறுத்தவள் இன்று புத்தகத்தை விடாது நேசிக்கின்றாள்.

முரணாய் பிறந்தவள் அன்பால் இயல்பாகின்றாள்...தனித்து இருந்தவள் குழந்தைகளுடன் கலந்து சிரிக்கின்றாள்..

தன் பெயர் எழுதத்தெரியாது ஐந்தாம் வகுப்பு வரை ஆங்கிலப்பள்ளியில் படித்து என்னிடம் வந்தவள் இன்று அழகாக கேள்விக்கு பதில் எழுதுகின்றாள்...

இங்கு இவர்களுக்கு நான் எத்தனை மதிப்பெண்கள் வழங்க?

அரசு கூறுவது போல் செய்ய வேண்டுமெனில் தவறின்றி வாசிக்கவும் எழுதவும் தெரிந்தால் மட்டுமே முழு மதிப்பெண் வழங்க வேண்டும்..

ஆனால் இவர்கள் ஒரு வார்த்தை சரியாக எழுதினாலே மகிழ்ந்து முழு மதிப்பெண்களும் சாக்லைட்டும் தந்ததால் தான் இவர்கள்...இப்போது முன்னேறியுள்ளனர்...

அவர்களின் மனங்களில் படிப்பதை சுகமாக்கினாலே போதும் என்று சொல்கிறது என் மனது...

எனவே முழுமதிப்பெண்களே வழங்குகின்றன என் கைகள்...ஏனெனில் இவர்கள் கவனிக்கப்பட வேண்டிய தெய்வங்கள்...

Tuesday 6 January 2015

குழந்தைகளுக்கு மதமில்லை..

குழந்தைகளுக்கு மதமில்லை..

இன்று 7 ஆம் வகுப்பு தமிழ் பாடத்தில் ந.பிச்சமுர்த்தி எழுதிய பொங்கல் வழிபாடு செய்யுள் வகுப்பு...பொங்கலைப்பற்றி கூறி இன்று வகுப்பில் கொண்டாடலாம் எனக்கூறியிருந்தேன்..

ஒரே ஜேஜேன்னு பரபரன்னு ஓடியாடியபடி இருந்தனர்.பள்ளியில் இருந்த அனைத்து ஆசிரியர்களையும் அழைத்துள்ளனர்..நானறியாமலே...ஒரு வழியாக நான் உள்ளே நுழைந்த போது கோலமிட்டு.வாழையிலையில் தேங்காய், வெற்றிலை,பாக்கு, பூ,பழம் வைத்து வகுப்பறையையே வீடாக மாற்றியிருந்தனர்.கரும்பலகையில் பொங்கல் பானைகள்...கரும்புடன் திகழ ...நான்கு பாத்திரங்கள் நிறைய  சர்க்கரைப்பொங்கல் நிறைந்து வழிந்தது..ஏதும்மா எனக்கேட்டதற்கு வீட்டிலேயே செய்து கொண்டுவந்துவிட்டோம் மிஸ் என்றார்கள்...

Monday 5 January 2015

நம்புவோம்

நம்புவோம்...

பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களை விசாரிக்க புதிய குழு நாடெங்கும் அமைக்க அரசின் முடிவு வரவேற்கத்தக்கது...

15 பேர் கொண்ட  அந்த குழுவில் 5 பெண்களும் இடம் பெறுவார்கள்...நியாயம் கிடைச்ச்ச்ச்ச்சிரும்....ல

”ஆசிட் ஊத்தியவனுக்கு 7 வருட சிறைத்தண்டனை...ஊற்றப்பட்டவளுக்கோ ஆயுள் தண்டனை...
7வருடம் ரொம்ப அதிகம் வேண்டாம்.. ஒரு நிமிடம், அவன் முகத்திலும் ஆசிட்டை அந்தப்பெண்ணே ஊற்றினால் என்ன...?”

வெற்றிகள் விற்பனைக்கு அல்ல-முனைவர் சங்கரராமன்

”வெற்றிகள் விற்பனைக்கு அல்ல”-முனைவர் சங்கரராமன்

விஜயா பதிப்பகம் 20,ராஜவீதி,கோயம்புத்தூர்.விலை ரூ 45/

ஒரு நூல் வாசித்ததும் நம் மனதில் ஏதேனும் ஒரு மாற்றத்தை நிகழ்த்தும் போது அந்நூலாசிரியர் வெற்றியடைகின்றார் ..

வசீகரமான எழுத்தாற்றலால்...மகிழ்வையும், சோகத்தையும், தன்னுள் கொண்ட நூல்கள் வரிசையில்..மனதில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் நூலாய் இந்நூல் அமைந்து மனதில் இடம் பிடிக்கின்றது...

கருத்து பெட்டகமாய் அமையும் தன்னம்பிக்கை நூல்களின் வரிசையில்..இயல்பாய் நம்முடன் அமர்ந்து கையைப்பிடித்துக்கொண்டு வெற்றியை நோக்கி நம்மை அழைத்துச்செல்கின்றது..

எடுத்த உடனே “நிராகரிப்பை நிராகரியுங்கள்” என்ற தலைப்பே சாட்டையடியாய் நம்மை உறுத்துபவைகளைத் துடைத்தெறிகின்றது...
    
                    ”  நீங்கள் பிறந்தது
                 உங்கள் பிறந்த நாள் அல்ல
          உங்களுக்குள் இருக்கும் திறமைகள்
          என்று பிறந்ததோ அதுவே
             உங்கள் பிறந்த நாள்”
எனக்கூறும் வரிகள் நாம் எப்போது பிறந்தோம் அல்லது எப்போது இனி பிறப்போம் என்ற வினாவை நமக்குள் சுழல விட்டு சுய அலசலை உருவாக்குகின்றது...அருமை...தம்பி.

14 தலைப்புகளில் அருமையாக உண்மைச்சம்பவங்களைக் கதைகளாகக் கூறி மனதை பக்குவப்படுத்தி தோழமையோடு வெற்றியின் படிக்கட்டில் அமர வைக்கும் முயற்சியில் எழுத்தாளரும் தம்பியுமான சங்கரராமன் வெற்றி பெறுகின்றார்.
கல்லூரியில் ஆசிரியராகப்பணி புரிந்து கொண்டே தன்னம்பிக்கை சொற்பொழிவுகளால் மாணவர்களின் வெற்றிக்கு வழி காட்டும் ஆசிரியராக பேச்சாளராக அடையாளம் கொண்டவர்..இந்நூல் மூலம் சிறந்த எழுத்தாளராகவும் மனதில் இடம் பிடிக்கின்றார்..ஒவ்வொரு ஆசிரியர் மற்றும் மாணவர்கள் கைகளிலும் மட்டுமல்ல அனைவரின் கைகளிலும் தவழ வேண்டிய நூலாக அமைந்துள்ளது
         
  ” வெற்றிகள் விற்பனைக்கு அல்ல” எனும் இந்நூல் .வாழ்த்துகள் சகோதரா மேலும் வெற்றிகள் உங்களைச்சரணடைய...கார்மேகம்

கார் மேகம் வெண்பொதியாய் மாற
தலைகாட்டுமினி
உடல்வழியே ....

Sunday 4 January 2015

அழகு....

அழகு....

உண்ண மாட்டேனென
அழுதுகொண்டே உணவிற்காய்
வாய் திறக்கும் செல்லம்...

பேசமாட்டேனென சண்டையிட்டு
கால்களைக்கட்டிக்கொள்ளும்
குழவி..

பனித்துளி சுமந்த
தாமரையாய்..

Friday 2 January 2015

Raman Vijayan---மனித நேயமுள்ள விளையாட்டு வீரர் இராமன் விஜயன்


பாராட்டப்பட வேண்டிய மனிதராக...

தமிழ்நாட்டின் மிகச்சிறந்த கால்பந்தாட்ட வீரர் இராமன் விஜயன்...

தமிழ் நாட்டில் காரைக்குடிக்கு அருகில் உள்ள கண்ட்ரமாணிக்கம் என்ற கிராமத்தில் இருந்து இந்திய அணியின் மிகச்சிறந்த கால்பந்தாட்ட வீரர்...தோழர் இராமன் விஜயன்....

இவர் உருவாக்கியுள்ள கிராமத்து குழந்தைகளைக்கொண்ட கால்பந்து அணியினர் தற்பொழுது சிங்கப்பூரில் போட்டிகளில் வாகை சூடி வந்துள்ளனர்.இந்த அணி உருவாக்க அவர் பட்ட சிரமங்கள் எண்ணிலடங்கா...

விளையாட்டில் பிரகாசிக்கும் வீரர்கள் அனைவரும் பணி கிடைத்தவுடன் ....விளையாட்டை மறந்து விடுவது தான் தமிழகத்தில் சிறந்த அணி உருவாகாததற்கு காரணம்.மேலும் தமிழ்நாட்டில் புரொபசனல் கிளப் கால்பந்தாட்டத்திற்கு என இல்லை.எனக்கூறும் இவர்..1993இல்.இந்தியன் வங்கியில் பணி கிடைத்து 3 வருடங்கள் பணி புரிந்து ...தனது குறிக்கோளை நோக்கி செல்வதற்காக பணியைத்துறந்து ..கால்பந்தாட்ட வீரர்களை உருவாக்கும் பயிற்சியாளராக மற்ற வீரர்களுக்கு முன் உதாரணமாகத்திகழ்கின்றார்.

சமீபத்தில் நடைபெற்ற இந்திய சூப்பர் லீக் குழுவைத்தேர்வு செய்யும் உறுப்பினராகக் கலந்து கொண்டு அணி வீரர்களைத்தேர்வு செய்துள்ளார்..

தான் பிறந்த கிராமத்தைச்சுற்றியுள்ள குழந்தைகளைத்தேர்வு செய்து பயிற்சி அளித்து தற்பொழுது தன் முயற்சியால் சிதம்பரத்தில் கல்வி கற்றுக்கொடுக்கின்றார்....நல்ல மனங்கள் கொண்ட நண்பர்கள் இவரது முயற்சிக்கு தோள் கொடுக்கின்றனர்....இவரால் உருவாக்கப்பட்ட இந்த அணிதான் தற்போது சிங்கப்பூரில் போட்டிகளில் கலந்து கொண்டு அரை இறுதி வரை வந்துள்ளது....பேரூந்தில் செல்வதையே பெருமையாக நினைக்கும் குழந்தைகளை விமானத்தில் அமரவைத்து வெளிநாட்டிற்கு அழைத்து சென்று வியப்பில் ஆழ்ந்த குழந்தைகளை பார்த்து ரசிக்கும் மனித நேயமுள்ள சிந்தனையாளர்....

என் பள்ளிக்கு வந்திருந்த அந்தியூர் மலைப்பகுதிக் குழந்தைகளைப்பற்றி அறிந்த போது ..அவர்களில் நன்கு விளையாடக்கூடிய குழந்தைகளுக்கு பயிற்சி அளித்து கொண்டுவரலாம் எனக்கூறியுள்ளார்...

தான் தனது என்று வாழும் மக்களின் நடுவில் ..தமிழ்நாட்டில் கால்பந்திற்கென ஒரு குழுவை உருவாக்கி உலகப்புகழ் பெற வைக்க வேண்டும் என்ற குறிக்கோளை நோக்கி போராடிக்கொண்டிருக்கும் அவரது கனவு பலிக்க வாழ்த்துகள்...

 இன்று நியூஸ் 7 தொலைக்காட்சி அவரது நேர்காணலை காலை 8.00 அளிவில் ஒளிப்பரப்பியது..