World Tamil Blog Aggregator Thendral: July 2014

Thursday 31 July 2014

குழவி5இல்லாத காக்கை
போடாத உணவை
தூக்கிப்போனதாய் கூறி
குழந்தைக்கு உணவூட்டும்
 நிகழ்படத்தின்
கதை,திரைகதை,வசனம்
நடிப்பு,என பன்முக அவதாரம்
தாய்க்கு......

வாய்க்குள் உணவை
விழுங்காமலும்,துப்பாமலும்
திணறும்குழந்தையின்
 குறும்பை ரசித்து
பறக்கும் தும்பி
பார்வையாளரென.....


Wednesday 30 July 2014

பாம்பறியுமா மனிதனை...!இன்று காலை சன் டிவியில் தற்செயலாக பார்த்த போது ஒரு பேட்டி. ஆண் என ஒரு கணம் நினைத்து ஏமாந்து விட்டேன்.பெண்ணுக்குரிய எந்த தனி அடையாளமின்றி முழுக்கை வைத்த சட்டையுடன் எந்த வித அணிகலனும் அணியாமல் தெளிவாக பேசிய பெண்ணை பார்த்து வியந்து முழுமையாய் கேட்டேன்.எத்தனை வீரமான பெண்...!

மணிமேகலை

பாம்பென்றால் படையும் நடுங்கும் பழமொழி ஆனால் இவரோ குழந்தையாக எண்ணி பேசிக்கொண்டிருந்தார்.வித்தியாசமா செய்ய வேண்டும் என்பதற்காகவே பாம்பு பிடிக்கும் கலையைக் கற்றுக்கொண்டு மனிதர்களிடம் பாம்பை நேசிக்கும் தன்மையை வளர்ப்பதே குறிக்கோளாய் கொண்டுள்ளார்....

பாம்பு பழி வாங்குமா என்ற கேள்விக்கு அது எதுவும் அறியாத குழந்தை அது, நாம் அடித்தால் அந்த வலி தாங்காமல் எதிர்ப்படுபவரைக்கடிக்குமே ஒழிய....மற்றபடி அது தேடி வந்து கடிக்காது..பிற விலங்குகளைக் கடிக்க கூடாது என்பதால் தான்  அடித்தால் முழுசா அடிச்சு போடுங்கன்னு முன்பு சொல்லிருக்காங்க...என்றார்...

எந்த விதக் கருவியுமின்றி கைகளே கருவியாய் பாம்பைப் பிடிக்க பயன்படுத்துகின்றாராம்.ஒரு குழந்தை போல பாவித்து பேசும் பொழுது வியக்காமல் இருக்க முடியவில்லை.

சாரைப்பாம்பு கடித்தால் விடமில்லை என்பதை இவரின் கைகளில் கடிக்க வைத்து மறுநாள் சென்று அனைவரிடமும் காட்டி பயத்தை போக்குவாராம்....

பாம்பைப் பார்த்து பயத்தில் மனிதர்கள் அடித்துக் கொள்வதை தவிர்க்கவே பாம்பு நீண்ட நாள் வாழ்ந்தால் அதன் விடம் நாகரத்தினம் ஆகும் என்பதெல்லாம் பாம்பைக் காப்பாற்றும் சொற்களே தவிர நாகரத்தினம் ஆகும் என்பது பொய் என்றார்.

மேலும் சாரையும் சாரையும் தான் சண்டையிடும் ,சாரையும் நல்லபாம்பும் சண்டையிடும் என்பதெல்லாம் பொய் என்கிறார்...

ஒரு பெண் இத்தனை வீரமாய் ஒரு உயிரினத்தை காப்பதே குறிக்கோளாய் கொண்டு வாழ்வது பெருமையாக இருக்கிறது.இப்படியே மனிதர்கள் பாம்பைக் கொன்றுக்கொண்டே இருந்தால் டைனோசர் போல அழிந்த இனத்தில் பாம்பும் சேர்ந்து விடும் என்று கவலையுடன் கூறினார்...

கிராமங்களில் முதியோர்கள் வீட்டில் இருப்பார்கள்,அவர்களே அறியாமல் பாம்பு வந்தால் என்ன செய்ய வேண்டுமென்று கற்றுக்கொடுக்கிறேன் என்றார்...

அழகு நாடி ஓடும் பெண்களுக்கிடையில் இப்படிப்பட்ட பெண்கள் வீரத்தின் விளைநிலமாய் வாழ்கிறார்கள் ...வாழ்த்துகள் மணிமேகலைக்கு....

Monday 28 July 2014

அன்புடன் அழைக்கின்றோம்.......                                     வீதி
கலை இலக்கியக்களம் ,புதுக்கோட்டை
நாள்:29.07.14
நேரம்:காலை 10மணி
இடம்:ஆக்ஸ்போர்டு உணவகக்கலைக்கல்லூரி
           புதிய பேரூந்து நிலையம்,புதுக்கோட்டை

தலைமை:முனைவர் நா.அருள்முருகன்
வரவேற்பு:முனைவர் துரைக்குமரன்
அறிக்கை:கவிஞர் மு.கீதா
சிறுகதை:ப .முத்துப்பாண்டியன்
கவிதை:கவிஞர் சுவாதி
                அ.தமிழ்ச்செல்வன்
                கா.மாலதி
நூல் அறிமுகம்:கவிஞர் சு.இளங்கோ
நூல் விமர்சனம்:இரா.ஜெயலெட்சுமி
திரைப்படம் பற்றி:கவிஞர் பொன்னுசாமி
வலைப்பூ அறிமுகம்:எஸ்.கஸ்தூரிரெங்கன்
நன்றியுரை:மு.வள்ளிக்கண்ணு

அன்புடன் அழைப்போர்
ப.முத்துப்பாண்டியன்   --மு.வள்ளிக்கண்ணு
ஜீலை மாத ஒருங்கிணைப்பாளர்கள்

தங்கள் வருகை எங்கள் உவகை....

Sunday 27 July 2014

இப்படியும் சிலர்!ஒரு மருத்துவமனை அங்கு நோயாளிகள் அன்புடன் கவனிக்கப்படுகின்றார்கள்....
மருத்துவருக்கு நோயாளி விரும்பும் தொகையை அங்கு வைக்கப் பட்டுள்ள தட்டில் போட்டுச் செல்லலாம்....சிலர் போட்டும் ,சிலர் அதிலிருந்து எடுத்துக் கொண்டும் செல்கின்றனர்....
தட்டு உண்டியலாக மாற்றி வைக்கப்படுகின்றது...இப்போதும் நோயாளியின் விருப்பமே மருத்துவச் செலவாய்...!
நம்பமுடிகின்றதா?
ஒரு மருத்துவர் தன் வீட்டிற்கு எட்டு வாசல் வைத்துக்கட்டுகின்றார்..காரணமாய் எட்டு திக்கிலிருந்தும் வரும் நோயாளிகளின் சிரமம் தவிர்க்கவே ....என்கிறார்...அவர் வீட்டு மாடியில் ஒரு போன் உள்ளது அதில் அவசரமாய் அழைத்தால் கீழே உள்ள மொபைல் மருத்துவ வண்டி புறப்படுகின்றது மருத்துவம் செய்ய...
ஆச்சரியமாய் உள்ளதா?வேறெங்கும் இல்லை நம் தமிழ் நாட்டில் தான் அதுவும் புதுக்கோட்டையில் திரு .ரெங்காச்சாரி மற்றும் குருசாமி முதலியார் ஆகிய மருத்துவர்கள் வாழ்ந்திருக்கின்றனர் என்றார்..நடமாடும் நூலகமாய் கருதப்படுகின்ற புதுக்கோட்டையில் நூல்களுக்காக வீடு கட்டி குழந்தைகளைப்போல் பராமரித்து வரும் மதிப்பிற்குரிய ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள்...

மருத்துவர் ஜெயராமன் அவர்களின் “மகனுக்கு மடல் “என்ற நூல் வெளியீட்டு விழா மிகச் சிறப்பாய் இன்று மாலை நடந்தது.

அதில் பேசிய ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பேச்சு தகவல் களஞ்சியமாய்.....கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல்...கடகடவென அரிய ,கேட்டிராத செய்திகளை அருவி போல கொட்டுகின்றார்...என்ன சொல்வது....மார்க்ஸின் கல்லறையைக் கண்டுபிடித்த நீரஜ் சவுத்ரி யின் வரலாற்றை கேட்ட பொழுது..மெய்சிலிர்த்தது...

புத்தகங்கள் உடனான வாழ்க்கை நம்மை விரிந்த உலகிற்கு அழைத்துச் செல்லும் என்பதற்கு உதாரணமாய் அவர் திகழ்கின்றார்...

காலையில் தேசியக்கவி வி.கே .கஸ்தூரிநாதன் அவர்களின்
”அட்சய பாத்திரத்தில் அழுக்கு படியாது “     என்ற நூல் வெளியீட்டு விழா மிக இனிய நிகழ்வாக நடந்தது...

இரு நூல்களும் சமூக சிந்தனையுடன் எழுதப்பட்டுள்ள நூல்கள் காலத்தை வென்று வாழட்டும்.....

Saturday 26 July 2014

நான் நானாகவே

எப்போதும் என்னில்
அவனையே காண விரும்புகின்றான்
அவனது அகம் புறம்
அனைத்தும் அறிந்தவள்
 நான் மட்டுமே
அவனது கோணங்கி
தனத்தையெல்லாம்
பொறுமையுடன் ஏற்று
அவனில்லாத
நேரங்களில்
அனைத்தும் அழித்து
வாழ்கிறேன்
நான் நானாகவே........Friday 25 July 2014

கடுதாசி வரக்காணலியே மச்சான்....!கண்ணுமணி
பொண்ணுமணியா
வளந்த மவ,

சிட்டாப்பறந்த மவ
அரும்பரும்பா சிரிச்சு
ஆசையா வளந்த மவ.

,பள்ளிக்கூடம் போகையில
பஞ்சுமிட்டாய் வாங்கித்தர
அடம்பிடிச்சு அழுத மக

பெரியபடிப்பு படிக்க
பட்டனம்தான் போனாளே.....
வாராவாரம்  கடுதாசி
போடுவாளே...மச்சான்
இன்னும் வரக்காணலியே

பயலுவ கேலிக்கு
பயந்து பயந்து போனாளே
போமாட்டேன்னு சொன்னவள
கடுப்படிச்சு அனுப்புனியே...
சின்னமவ கேக்குறா
அக்கா எப்ப வருவான்னு?
கடுதாசி வரலியே....
காரணம்தான் தெரியலியே..

காக்கிச்சட்ட போட்டவக
உன்ன வந்து கேட்டதென்ன?
அவ போட்டா காட்டித்தேன்
விசாரிச்சதென்ன மச்சான்?
கண்ணுகலங்குறியே
கதறி துடிக்குறியே.....

கடுதாசி வரக்காணலியே மச்சான்னு
கேட்டதுக்கா சொல்லுமச்சான்...?

Thursday 24 July 2014

குழவி4

கீழ் விழுந்து புரண்டு
கண்ணீர் மல்க கதறி
வேண்டிய பொருளுக்காய்
தேம்பும் குழந்தையைத்
தேற்றும் தாய்க்கு துணையாய்
சின்ன அசைவில் தேற்றி
சிரிக்கின்றன.....

ஓடும் பல்லி,
ஊறும் எறும்பின் வரிசை,
பறக்கும் பூச்சிகள்
அசைந்தாடும் இலைகள்,
மறைந்தாடும் நிலவு.....என
இயற்கையின் மிச்சங்கள்....Sunday 20 July 2014

தமிழன்னை தரும் சிறந்த தொலைக்காட்சி விருது...!?


விஜய் தொலைக்காட்சியின் விருது வழங்கும் விழா மிக அருமையாகக் காட்சிப்படுத்தப்பட்டுக் கொண்டுள்ளது...வாழ்த்துகள்

அடுத்த முறையாவது டிடியும் கோபிநாத்தும் தொகுத்து வழங்கும் போது ஒருவர் தூய தமிழிலும்,ஒருவர் தூய ஆங்கிலத்திலும் தங்கள் உரைகளை வழங்கினால் சிறந்த தமிழ்தொலைகாட்சி விருதை விஜய் தொலைக்காட்சிக்கு தமிழன்னை வழங்குவாள்....

எல்லாவற்றிலும் முதன்மையாக,சிறப்பாக விளங்கும் விஜய் தொலைக்காட்சி இதைக் கருத்தில் கொண்டால் பிற தொலைக்காட்சிகளும் பின்பற்ற வாய்ப்பு உள்ளது...

தாய்மொழிக்கு விஜய் தொலைக்காட்சி செய்யவேண்டிய கடமை அல்லவா..?செய்யுமா?


Friday 18 July 2014

நூல்களுடன்

முகநூலும்,செல்லும்
நூல்களுடனான
உறவை துண்டித்து மகிழ்ந்தது....!

காத்திருந்த நூல்களோ
கண்களில் அன்பை தேக்கி
எப்போதும் நேசிப்பில் என்
கண்களின் தழுவலுக்காய்.....!

கணநேரம் சென்று
கனிவாய் வருடி
களிப்புடன் கலந்தேன்...
உணர்வோடு கலந்த உறவு

உள்ளத்தில் நிறைக்க
இதழோரப் புன்னகையில்
நாங்கள்.....

Thursday 17 July 2014

தமிழ் இலக்கியங்கள்-ஆசாரக்கோவை-பெருவாயின் முள்ளியார்

                                             
         
                          

                                       தமிழ் இலக்கியங்களின் சிறப்பை தமிழர்களை விட வெளிநாட்டினரே அதிகம் உணர்ந்து தமிழ் மேல் காதல் கொண்டனர்....ஜி.யு.போப்,கால்டுவெல் போல....

திருக்குறளை தினமும் இரவில் படுக்கும் முன் படித்து விட்டே தூங்கும் வழக்கத்தைப் பின்பற்றிய விக்டோரியா மகாராணி போல தமிழை நேசித்தவர்கள் எண்ணிக்கையிலடங்கா....

திருவாசகத்தை ஆங்கிலத்தில்  மொழிபெயர்க்கக் காரணமாய் ஜி.யு.போப் அவர்கள் தனது  முன்னுரையில் இரு காரணங்களைக்  கூறுகின்றார்...

1]இந்தியாவிற்கு வரும் ஆங்கியேர்கள் தமிழ்நாட்டிற்குள் நுழையும் போது தமிழையும் ,தமிழ்நாட்டையும் கேவலமாக எண்ணக்கூடாது...தமிழ் மொழி அளவற்ற சிறப்பை உடையது...ஞானப்புதையல்களைத் தன்னுள்  உள்ளடக்கியது என்பதை படித்து உணரவேண்டும் என்பதற்காகவும்.. !

2]தமிழ் மொழியின் சிறப்பை உணராமல் ,தமிழில் பேசுவதைக் கேவலமாக எண்ணும் இக்காலத் தமிழ் இளைஞர்கள் தனது தாய்மொழியின் பெருமையை ஆங்கிலத்திலாவது படித்து உணரட்டும் என்பதற்காகவே எழுதுகிறேன் என்றாராம்...!

தமிழ் மொழியின் சிறப்பை உணர ஒரு பாடல்

நீதி இலக்கியங்களில் ஒன்றான ஆசாரக்கோவை நாம் எப்படி நடக்க வேண்டும் உணர்த்தும் அருமையான நூலாகும்...அதில் வைகறையில் செய்ய வேண்டியவை,நீராடும் முறை,ஆடை உடுத்தும் முறை,தன் உடல் போற்றும் முறை,உண்ணும் முறை என வாழ்வியல் செயல்கள் ஒவ்வொன்றையும் எடுத்தியம்பும் நூலாக உள்ளது....
சான்றாக
உண்ண வேண்டிய முறையாக

”உண்ணுங்கால் நோக்கும் திசைக்கிழக்குக் கண்ணமர்ந்து
தூங்கான் துளங்காமை நன்கிரீஇ-யாண்டும்
பிறிதியாது நோக்கான் உரையான் தொழுதுகொண்டு
உண்க உகாஅமை நன்கு”-            
                                                  ஆசாரக்கோவை-20

பொருள்

உணவை உண்கின்ற போது கிழக்குத் திசையை நோக்குமாறு அமர்ந்து,தூங்காமலும்,அசையாமலும்,நன்கு அமர்ந்து.எங்கும் வேறு ஒன்றாஇயும் பார்க்காமலும் சொல்லாமலும்,உண்ணும் உண்வைத் தொழுது,சிந்தாமல் உண்வைக் கையால் எடுத்து நன்கு உண்க .

உண்ணக்கூடாத முறையாக...

”கிடந்துண்ணார் நின்றுண்ணார் வெள்ளிடையும் உண்ணார்
சிறந்து மிகஉண்ணார் கட்டின்மேல் உண்ணார்
இறந்தொன்றுந் தின்னற்க நின்று.”

பொருள்

       படுத்தபடி உணவை உண்ண மாட்டார்,நின்ற வண்ணம் உண்ண மாட்டார்,வெட்ட வெளியில் இருந்து உண்ண மாட்டார்.விருப்பத்துடன் மிகுதியாக உண்ண மாட்டார்.கட்டிலின் மேல் அமர்ந்து உண்ண மாட்டார்.எதையும் நின்ற வண்ணம் உண்ணுதலும் கூடாது.

அவசர உலகில் உண்ணக்கூட நேரமின்றி ஓடிக்கொண்டே உண்ணுவோம் என்பதை முன் கூட்டியே உணர்ந்து ஆசாரக்கோவையை பெருவாயின் முள்ளியார் படைத்துள்ளாரோ என எண்ணும்படி  உள்ளது இச்செய்யுள்....

Sunday 13 July 2014

புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகம்.தமிழ்நாட்டிலேயே இரண்டாவது மிகப்பெரிய அருங்காட்சியகம் புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகம் .


தற்போதுசீரமைக்கப்பெற்று புதுப்பொலிவுடன் திகழ்கின்றது.என் மாணவிகளுடன் இன்று அங்கு செல்லத் திட்டமிட்டு குழந்தைகளை அவர்களின் பெற்றோருடன் வரச்சொல்லியிருந்தேன்.ஆர்வமாய் பெற்றோரும் குழந்தைகளும் வந்திருந்தனர்.

புதுக்கோட்டை-திருக்கோகர்ணத்தில் உள்ள அரசு அருங்காட்சியகம் 1910 ஆம் ஆண்டில் புதுக்கோட்டையை ஆண்ட மன்னர் மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.ஏறத்தாழ 1.15 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளது.14 ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.மிகத்தெளிவாக விளக்கினர் திரு.லெக்‌ஷ்மணன்,திரு.பார்த்திபன்.ஆகியோர்.


Saturday 12 July 2014

குழவி3

நீருக்காய் காத்திருக்கின்றன
பசுமைக்குழந்தைகள்....
எழுந்திருவென புட்கள் எழுப்ப
 இசைகேட்டு எழ மனமில்லை
இன்னும் எழுப்பென வம்பாய் நானும்...!
பூமிக்குள் புதைந்த நீரை உறிஞ்சி
பூச்செடிகளுக்கு பூச்சொரிய
போட்டிக்கு வந்தது மேகமும்

நீர்விடச் சென்றவளை
 நீராட்டி மகிழ்ந்தது சாரல் கீதத்தால்....!
உணவூட்டும் தாயை நனைத்து சிரிக்கும்
குழந்தையென....

Friday 11 July 2014

வெளிநாட்டு வாழ்க்கை

குருதிகள் வியர்வையாக
வலியில் மலரும்
குடும்பத்தின் மகிழ்வு
ஊரல்லாம் கொண்டாடும்
வெளிநாட்டு வாழ்க்கை,,,!

உற்ற தாய் மனம்
உள்ளுக்குள் தவிக்கும்...!

உணர்வுகள் அடக்கி
கண்ணீரைத் தேக்கி
ஆசைகள் அறுத்து
விரல் தொடும் நாளுக்காய்
காத்திருப்பில் உயிரான மனைவி......!

அப்பாவின் கைப்பிடித்து
பள்ளிக்குச் செல்லும்
குழந்தைகளை ஏங்கும்
குவளை விழிகளுடன்காணும்
 மகள்...!

இத்தனை அன்பையும்
இளமையும் தொலைத்து...
வேதனையில்....
உழைப்பை உறிஞ்சும்
வெளிநாட்டுக்காரனின் ஏவலில்
கருகும் அவனது உள்ளம்..!
Thursday 10 July 2014

எங்கே போயினர்?


வெள்ளிக்கிழமைச் சந்தை சாலையில் நுழைய இடமின்றி குவியும் கூட்டம்.எங்கும் சத்தம்,கூச்சல்...வியாரிகளின் கூக்குரல் என கலைகட்டும்....நலம் விசாரிக்கும் வியாபாரிகளின் அன்பு.எல்லாம் இரண்டு வருடங்களுக்கு முன்பு....
இன்று ....

மயான அமைதியுடன் எந்த கூச்சலுமின்றி...கலையின்றி.....குறைந்த ஒலியுடன்......!குறைந்த மக்களுடன்...இன்னும் சில நாட்களில் சந்தைகளும் காணாமல் போய்விடும் போல...!.

Wednesday 9 July 2014

வேம்பு

சலசலவெனெ சருகுகளை,
குழந்தையின் மென்மையாய்
கொட்டிக்கிடந்த நட்சத்திரப்பூக்களை,
கோலிக்குண்டென பச்சை முத்துக்களை
அள்ளியவள், இன்று
கலகலவென சிரிக்கும்
வேம்பின் பழத்தோல்களை
வாரி அணைக்கின்றேன்.....
சிப்பிகள் பொறுக்கும்
குழந்தையாய்...

அதிகாலை

மெதுவாய்
இனிமையாய்
புட்களின் இசையுடன்
தென்றல் தவழ பறக்கும்
செந்நிறப்பந்தை
தாவிப் பிடித்து விளையாடும்
குழந்தை மனதுடன்.....

Sunday 6 July 2014

மரத்தின் குரலாய்

எனக்கும் மண்ணுக்குமான
 உறவை மனிதன்
தீர்மானிக்கத் துவங்கிய
கணத்தில்..........
 பிறந்ததே
பாலை

கானல் நீர்

கானல் நீரணைய
வாழ்வில்
ஈரமின்றியே உலர்தலாய்.
பெண்ணின் மனவெழுச்சிகள்

Friday 4 July 2014

மலிவுவாக்கம்-சென்னை

இளகா மனதால்
இளகிய கட்டிடம்
சீட்டுக்கட்டாய் சரிய
பந்தயப் பொருளாய்
மனித உயிர்கள்.......!

Thursday 3 July 2014

மனம்


அநியாயங்கள்
தலைவிரித்தாடுகையில்
தட்டிக்கேட்கவியலா
இயலாமையில்
கொதித்தடங்கும் பாலாய்
மனம்...!

Wednesday 2 July 2014

விடியல்

இயற்கையின்
தியானம் முடிந்ததோ..!

சூழல்

இலவசங்கள் அள்ளிக்கொடுத்தும்
இல்லை விருப்பம் சேர
நாற்றமெடுக்கும் சூழலால்!

வயிற்றில் செப்டிக் டேங்கைக்
கட்டிக்கொண்டே வாழ நேரிடுகின்றது
புற வாழ்வில்......!

பள்ளி மாணவர்களும்
பயணிக்கும் பெண்களும்...!

வீதி கலை இலக்கியக் களம்


வீதி கலை இலக்கியக் களம்-சூன் மாதக் கூட்டம்
-----------------------------------------------
29.06.14 அன்று வழக்கம் போல் ஆக்ஸ்போர்ட் உணவகக்கலைக் கல்லூரியில் மிகச் சிறப்புடன் நடந்தது.
இம்மாத கூட்ட அமைப்பாளர்கள் என் தோழியும் உதவிக்கல்வி அலுவலருமான திருமிகு.ஜெயலெக்‌ஷ்மியும்,திருமிகு.வீ.கே.கஸ்தூரிநாதன் அவர்களும் .
மிக பரபரப்பாக கூட்டத்தை மிகச் சிறப்பாய் நடத்த வேண்டுமென திட்டமிட்டு நினைத்தபடியே மிகமிகச் சிறப்பாய் முடித்தார்கள் .
நுழையும் முன்னே நெல்லிக்கனி தந்து அதியமானாய் ஆகி,அழகாக வரவேற்றார் ஜெயலெக்‌ஷ்மி ,தலைமையாக முன்னாள் பேராசிரியர் துரைபாண்டியன் அவர்கள் .தமிழ் அருவியாய் கொட்டியது அவரிடமிருந்து.அவர் மகளிடம் உங்க அப்பாகிட்ட பாடம் படிக்கலயேன்னு கவலை வருதுன்னேன்.

முந்தையக் கூட்ட அறிக்கையை வள்ளிக்கண்ணு அவர்கள் வாசித்தார்.
கவிதைகளால் கலக்கினர் தமிழ்ச்செல்வன்,செல்லத்துரை,ரேவதி மூவரும் ஒருவருக்கொருவர் சளைக்காமல்
தமிழ்ச்செல்வனின் வரிகளாய்..
       ” எந்திரம் உலவும் பூமி
         இதயமும் இல்லை சாமி
          ......பந்தமோ சிறிதும் இல்லை
                பசித்தவர் இரும்பை உண்பார்...”
என தொலைந்து போன மனித நேயத்தைச் சாட
அடுத்துவந்த செல்லத்துரையோ
              ஜென் துறவி,இரவைத்தேடி,நிலவைப் பின் தொடர்பவன்,வந்தது யார் என கவிச்சரம் தொடுத்தார்...
                 ” ஒளிரும் சூரியன் கூட
                   தோற்றே போகிறது
                     இரவிடம்...”
என்றவரைத் தொடர்ந்து வந்த ரேவதியோ

தலைவிதி,காதலிக்க ஒருவன் என முழங்கினார்
   ” உயிர்வரின் உக்குரல் மெய்விட்டோடும்
    காதல்வரின் கவலைகள் மெய்விட்டோடுமா?”
என்பதுடன் கல் உடைக்கும் சிறுமியின் என்ணங்களை வார்த்தை சரமெடுத்துச் சாடுகிறார்.......

நூல் அறிமுகமும்,விமர்சனமுமாய்...புத்தகப்பிரியை ராகசூர்யா முகிலின் நாவலை கொஞ்சும் மழலைத் தமிழில் அழகாக அறிமுகம் செய்தார்.விரிந்த அவரது பார்வையில் நூலின் சிறப்புகள் அனைத்தும் அருமையாக விளக்கினார்.

சுரேஷ்மான்யாவின் சிறுகதை-தாமரை
வாசித்த நிமிடங்களில் எங்களை கதைக்குள் கொண்டு செல்லும் திறனுடன்....உவமையாக தாமரை என்ற பெண்ணை வர்ணிக்கையில்

“என்ன ஒரு பனைமர அழகு,நெடுநெடுவென வானம் தொடுறாப்புல.குச்சியில கொடிசுத்தி பூ பூக்குறாப்புல என்ன அழகா வர்றா!அழகு மீனாட்சியே நேர்ல வர்றாப்புல ...”

தெய்வீக அழகை அவர் அந்த பெண்ணின் அழகை வர்ணிப்பதை

கவிஞர் ராசிபன்னீர்செல்வம் அவர்கள் பிரம்ம பிரேமம் என்ற வார்த்தையினால் விமர்சித்து,அழகிய நனவோடை உத்தியைக் கையாண்டு லா.ச.ரா.வின் அபிதாவின் நாவலுக்கிணையான நாவலைப்படைத்துள்ளதாகக் கூறினார்.

கவிஞர் சுவாதியால் அறிமுகம் செய்யப்பட்ட பஷீர் அலி அவர்கள் பழங்கால நாணயங்களைப்பற்றி அறியச் செய்திகளைக்கூறி வியப்பில் ஆழ்த்தினார்.

தேர்ந்தெடுத்த உலகசினிமாக்களை புதுகைக்கு அறிமுகம் செய்யக்கூடிய இளங்கோ அவர்கள்.
பிரேசில் நாட்டுப்படம் பற்றிய அருமையாகக் கூறிய விதம், திரைப்படத்தை நேரில் காணும் ஆவலைத்தூண்டியது.

கோதுமைப்பால் சுடச்சுட தந்து ,இனிப்பு காரம் பிஸ்கட் நிறைந்த பையில் இறையன்புவின் சிற்பங்களைச் சிதைக்கலாமா?புத்தகத்தையும் அளித்து அன்பால் திக்குமுக்காட வைத்துவிட்டார் என் தோழி .......மகிழ்வுடன் எல்லோருக்கும் தரணும் என்ற மனநிறைவோடும் அவர் அமைத்த இம்மாதக்கூட்டம்,கஸ்தூரிநாதன் அவர்கள் நன்றிகூற இனிதாய் முடிந்ததுTuesday 1 July 2014

வீரமங்கை வேலுநாச்சியார்

வீரமங்கை வேலுநாச்சியார்
தமிழகம் மறந்த வீரப்பெண்மணி.நினைத்து போற்ற வேண்டிய பெண்மணி.

தற்செயலாக என் சகோதரி புவனாவேலு நாச்சியார்நாவலைத் தந்து இந்நாவலைப்படித்து பார் என்றார்கள்.படித்து கொண்டிருக்கும் போதே என்னுள் உறைந்து என்னை சீர்படுத்திய தாயவள்.

கி.பி 1730ல் பிறந்து ,கி.பி1796வரை வாழ்ந்து மறைந்த மாணிக்கம்.

எனது இளமுனைவர் ஆய்விற்காக ஜீவபாரதி எழுதிய வேலுநாச்சியார் நாவலையே ஆய்வு செய்தேன்.அவள் கால் பட்ட இடங்களில் ,வாழ்ந்த இடங்களில் நான் நின்றபொழுது காற்றாய் அவள் நிறைந்திருப்பதை உணர முடிந்தது.அவளை உங்களுக்கு அறிமுகம் செய்வதை எண்ணி பெருமைப்படுகின்றேன்.