World Tamil Blog Aggregator Thendral

Thursday, 11 November 2021

சமூகம்

இறுகிய பாறையோ
இளகிய மணலாக
வேருக்கு இடமளிக்க,

இளகாத மனிதனோ
சாதிப்பாறையால் இறுக்கமாக...
அதிகார போதையில் இறுக்கமாக..
அந்தஸ்து திமிரில் இறுக்கமாக..

Tuesday, 9 November 2021

சொற்களற்ற வீட்டில்

சொற்களற்ற வீட்டில்
சொல்ல முடியா தவிப்புடன்
காலத்தின் வரிகள் தாங்கிய
முதுமையின் விளிம்பில்
வாழும் அவர்களுக்கு
பால்ய கால நினைவுகளே 
துணையாக.
வீட்டை இடித்து
அவர்களுக்கு வசதியாக கட்ட
விரும்பும் மகனுக்கு,
தடைபோடும் காரணம்
புரியவில்லை...
யாருமற்ற வீடாகயிருந்தாலும்
முதுமையைக் கடக்க
வாழ்ந்த வீட்டை தவிர
வேறென்ன உதவிடும்.
வீடியோவில் சிரிக்கும் குழந்தைகளை
தடவி பார்த்து உள்ளுக்குள்
தவிப்பை காட்டாது சிரிக்கின்றனர்.
உடல் நலக்குறைவு செய்தி கேட்டு
அம்மாவின் மனம் கைவைத்தியம்
கூறி பதறுகிறது...
பார்த்து பார்த்து
சிறுகச் சிறுக சேமித்து
எந்த மகிழ்வையும் அனுபவிக்காமல்
சேர்த்தவை அனைத்தும்
குப்பையானதை பொறுக்க முடியாமல்
குமறுகின்றனர்...
அயல்நாட்டில் மகன், மகள் 
பெருமையல்ல,
அண்மையிருந்து அன்பாக
கரம் பிடித்து நான் இருக்கிறேன்
என்ற சொல்லைவிட.

கடல்

முட்டம் கடலில்
மூழ்கிய காலை
நனைத்து மகிழ்ந்து வரவேற்றது.
ஆரஞ்சு வண்ணம் போர்த்தி
அதிசயம் காட்டியது...
சட்டென்று சிறுமியாக்கி
மணல் வீடு கட்ட வைத்தது..
முழுதும் அணைத்து
முத்தமிட்டு கொஞ்சியது..
கொஞ்சலில் கரைந்தவளைக் கண்டு
பொறுக்காத ஆதவன் ஒளிய ,
பிரியாது பிரிந்தவளின்
பாதம் தொட்டு தொடர்ந்தது.
உடலில் படிந்த உப்பு 
கண்களில் வழிய...
வீடடைந்த என் உடை உதற
கொள்ளென சிரித்து சிதறி
வீடு நிறைந்தது...
மணலுண்ட கடல்...

Wednesday, 6 October 2021

முதல் கார் பயணம்

இன்றென் வாழ்வில் மறக்க முடியாத நாள்...7.10.21

தனியாக காரில் நான் காரைக்குடிக்கு  நேற்று மாலை சென்று காலையில் திரும்பி வீட்டை அடைந்த போது எனது சிறகுகள் படபடத்தன...

நானா! நானே நானா! காரை ஓட்டி வந்தது.நம்ப முடியாமல் மகள் நிலா, சித்தி, தம்பி அதிர்ச்சியில் உறைய... நானும் நம்ப முடியாது உறைந்து நின்றேன்..

ஊருக்குள் ஓட்டி பழக முடிவு செய்து காரை எடுத்து பிறகு ஏன் காரைக்குடி செல்லக்கூடாதென்று மாலை 5.30 மணிக்கு கிளம்பினேன்...

எதிரில் வந்த வாகன ஓட்டிகள் நான் புதிதாக காரை ஓட்டுகிறேன் என அறிந்து எனக்கிசைவாக ஓட்டினர்..அன்பு சூழ் ஓட்டுநர்களால் நான் சென்று வர சாத்தியமானது..

மாமா சைக்கிள் பழகக்கற்றுக்கொடுத்த போது விழுந்து எழுந்து பிறகு சைக்கிளில் பறக்க துவங்கிய போது முளைத்த சிறகு பிறகு முதன்முறையாக இருசக்கர வாகனத்தை ஓட்ட  கற்கத்துவங்கிய போது வளரத்துவங்கியது...
பத்தாம் வகுப்பில் வண்டி ஓட்ட அனுமதித்த அம்மா இன்று எனைப் பார்த்தால் உச்சி முகர்ந்து இருப்பார்கள்.

மழையூரில் எனது தலைமை ஆசிரியராகப் பணி புரிந்த சரஸ்வதி குமாரி அவர்கள் கார் பயிற்சி எடுத்து லைசன்ஸ் வாங்க அடித்தளமிட்டார்.. அதற்கு பிறகு சிலமுறை ஓட்டி இருந்தாலும் சொந்தக்காரில் ஓட்டுவதே குறிக்கோளாக இருந்தது.

ஒரு மாத காலமாக லக்கி ஸ்டார் டிரைவிங் கிளாஸ் சகோதரர் பிரசாத் அத்தனை பொறுமையாக காரை ஓட்ட பயிற்சி அளித்து வருகிறார் அவருக்கு முதல் நன்றி...

தம்பி சாக்ரடீஸ் காரை ஓட்ட முடியும் என்ற தன்னம்பிக்கை அளித்து பயிற்சி அளித்தது எனது அச்சத்தை நீக்கியது.

இதோ இன்றென் சிறகுகள் விரியத் துவங்கி விட்டது.... மனதில் சிறிது அச்சமும் நிறைய தன்னம்பிக்கையும் சுமந்து காரை ஓட்டி வந்தது த்ரில்லர் படம் பார்ப்பது போல....

வீட்டில் நிறுத்தி எனக்கு நானே கை கொடுத்து கொண்டேன்..

நான் வந்துவிட்டனா என உறுதி செய்து மகிழ்ந்த தோழி வேணி  என எனது வளர்ச்சியில் பேரன்பு கொண்ட உறவுகள் தோழமைகள் சூழ வாழ்தல் வரம்...

Thursday, 16 September 2021

பயணம்

பயணம் தொடர்கிறது
பேரூந்தில் இறங்கும் பயணிகள்
தொடர் வண்டியில் பிரியும் பயணிகளென
 பயணிகளுடனான வாழ்வில்
எனது இறக்கத்திற்கான
காத்திருப்பில் .
எனக்கான இடமளித்து
இதயமளித்த உள்ளங்களை அசைபோடுகிறேன்...
என்னுடன் பயணிப்பவர்களின்
எண்ண அலைகளால் பயணம்
நிர்ணயிக்கப்படுகிறது..
ஆற்றுநீரில் தவழும் சருகாய்
அமைதியான பயணத்தில்
முழுமையை நோக்கி நகர்கிறேன்..
பிறை நிலவு பூரணமாவதைப்போல..


மு.கீதா

Friday, 20 August 2021

அசுரனின் தூரிகை

அசுரனின் தூரிகை

வரிசையாக நிற்கின்றன
விலங்குகளின் அணிவகுப்பில்
நிறைகிறது சூழல்..
ஒவ்வொன்றாய் வரச்சொல்லி
வரையும் அசுரனின் கைகளில்
கோடுகளாய் குறிப்பேட்டில்
ஒளிந்து கொள்கின்றன.
சிங்கம் அருகில் ஆடு
கம்பீரமாய் சிரித்துக்கொண்டே
யானை மீது ஒட்டகம் அமர்ந்து
இன்னும் உயரமாகிறது..
முயலுடன் கை கோர்க்கும் 
டைனோசரின் நீண்ட கைகளில்
வழிகிறது பேரன்பு..
சட்டென்று அம்மம்மாவும்
சடுதியில் கோட்டிற்குள் மறைகிறார்...
அம்மா அப்பா ஆயா வட்டத்திற்குள் மறைய....மீனாக்கா புள்ளியாகிறாள்....
அசுரனது ஓவியங்களில் உயிர்க்கும் 
அவர்களைக் காண முடிந்தால்
நீங்கள் பாக்கியவான்கள்...
கீதா

Wednesday, 21 July 2021

இனியச்சொல்

மேட்டிமைத்தனம் நிறைந்த இடத்தில்
முகங்களில் கவலைசூழபரபரவென
மக்களின் சலனம்...
அச்சமற்ற முகங்களின் பின்னே,
அதிகாரமும் பணமும் மறைந்திருக்க
பொருத்தமில்லா ஆடையுடன் தயங்கி தயங்கி,
நுழையும் காலத்தின் வடுதாங்கிய
மூத்த மகளின் கைகளில் நடுக்கம்..
மூச்சுக்காற்றிற்காக தவிக்கும் முதியவனின் உயிர்ப்பிற்காக வாழ்க்கையோடு போராட்டம்..
அவளைப் புறந்தள்ளும் கைகளில் 
மரணத்தின் வாசனை..
அக்கறையாய் விசாரிப்பு
அன்பாக சேவை செய்கின்றனரா?
ஆதரவோடு நடக்கின்றனரா?
தூய்மை தூய்மையாக உள்ளதா?
எந்தக் குறையிருந்தாலும் கூறுங்கள்.
பின்னிற்கும் கண்களின் தவிப்புகளைக் காண்கையில்
எதையும் கூறிடக்கூடாதென்கிறது மனம்..
இத்தனை கவனிப்பும் உண்மையான தல்ல...
இனிமையான சொற்களைத் தீர்மானிக்கிறது
பணமும் அதிகாரமும்...
பலகணியில் காணும்
இயல்பாக வளரும் முட்காடு சிரிக்கிறது...

Thursday, 8 July 2021

தாய்

அலறல் சத்தம் தாளாமல் துடித்தாள்
அழும் குழந்தையின் பசி வெடிப்பின்.
முதுகில் குழந்தை அழ அழ
எடுத்த கணை இரையில் தைத்து 
எம்பி விழச்செய்தது....
பசி நீக்கிய தாய்க்கு முத்தம் தந்த
பச்சிளம் குழந்தையின் அண்மை
மலையைப் பெயர்க்கும் வல்லமை உடையது.
தூற்றும் காற்றை புறந்தள்ளி புறப்பட்டவளை
சற்றும் தடுக்க முடியாது புயல் ஒதுங்கியது.
இயற்கை அரவணைத்து மகிழ்ந்தது...
பாதை சமைத்தவழியில் பயணிக்கவில்லையே
என்பது ஒன்றே அவளின் கவலை....