World Tamil Blog Aggregator Thendral: November 2015

Saturday 28 November 2015

குழந்தைநேயப்பள்ளி -மண்டல அளவிலான கலந்துரையாடல்

சமூகக் கல்வி நிறுவனமும் ,யூனிசெப் அமைப்பும் சேர்ந்து நடத்திய..

குழந்தைநேயப்பள்ளி -மண்டல அளவிலான கலந்துரையாடல்



இடம்-தஞ்சை
நாள்-28.11.15

இன்று தஞ்சையில் குழந்தைநேயப்பள்ளியை உருவாக்குவது குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் திருமிகு மணிமாறன் அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்....அவருடன் சமூகக்கல்வி நிறுவனத்தைச்சேர்ந்த ஷ்யாம் சுந்தர்,வானதி பாலசுப்பிரமணியன் ஆகியோரும் சேர்ந்து நிகழ்வை முறைப்படுத்தினர்...

கல்வியாளர்களும்,ஆசிரியர்களும்,குழந்தை நலனில் அக்கறை கொண்ட பெற்றோர்களும்,கலந்து கொண்டு நிகழ்ச்சியைச்சிறப்பித்தனர்...

நிகழ்ச்சிக்கு புதுகையிலிருந்து 5 பேர் கலந்து கொண்டோம்...எங்களை அழைத்து சென்ற புதுகை செல்வா,உதவி தொடக்கக்கல்வி அலுவலர் ஜெயா,ஆசிரியர்கள் ராஜேஸ்வரி மற்றும் ஷமீம் ஆகியோருடன் நானும்






சமூக உணர்வாளரும் ,நல்ல எழுத்துக்குச் சொந்தக்காரருமான திருமிகு இரா.எட்வின் அவர்கள் தலைமை தாங்கி குழந்தைகளைக்கொண்டாட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.



குழந்தைமையை உணர்ந்தவர்கள் கூடிய நிகழ்வில் மாவட்ட ஆசிரியப்பயிற்சி நிறுவனத்தின் முதல்வர்....ஆடிப்பாடியது மறக்கவியலா ஒன்று....இந்த எளிமையே குழந்தைகள் விரும்பக்கூடிய ஒன்றாகிறது..

உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்கள் பாடியதும்,குழந்தைகள் விரும்பும் செயலுக்கு உதாரணம் காட்டியதும் மிகச்சிறப்பாக இருந்தது...

ஆசிரியர்களுக்கு முன்னோடியாகவும்,எடுத்துக்காட்டாகவும் திகழும் கீச்சாங்குளத்தை சேர்ந்த தலைமை ஆசிரியர் திருமிகு. பாலு மற்றும் நெடுவாசல் பள்ளித்தலைமையாசிரியர் திருமிகு.கருப்பையா ஆகியோரின் அனுபவங்கள்...அனைவர் மனதிலும் நீங்கா இடம் பெற்றன....

ஒருகிராமத்தையே தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றிய ஆசிரியர் திருமிகு ஆனந்த்...பாராட்டுக்குரியவர்..

ஆசிரியர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டது அனைவருக்கும் நல்ல அனுபவத்தை தந்தது...






மாற்றத்தை நோக்கிய பாதையில் ஆசிரியர்கள் அடி எடுத்து வைத்துள்ளனர்....சிறிய அளவிலான ஆசிரியர்கள், பெருந்திரளான ஆசிரியர்கள் மனதில் குழந்தை நேயப்பள்ளியின் முக்கியத்துவத்தை விதைக்க இந்நிகழ்ச்சி காரணமாக இருக்கப்போவதை உணர முடிந்தது...

விரைவில் குழந்தைகட்கு தேவையான தரமான கல்வி கிடைக்க,தாய்வழிக்கல்வியை முன்னிறுத்தி ,அரசுப்பள்ளிகளை வளர்க்கும் முயற்சியில் ஈடுபடும் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி.

விகடனில் பார்த்த பல முகங்களை நேரில் கண்டதில் மன நிறைவே..அதிலும் மகள் வானதியை சந்தித்து மறக்க முடியாத ஒன்று.

இவ்வாய்ப்பை தந்த புதுகை செல்வா சாருக்கும்,எனக்காக வந்து எங்களை அழைத்து சென்ற சகோதரி ஜெயாவிற்கும் நன்றி கூறவில்லை ,மனம் நிறைந்த மகிழ்வை பகிர்ந்து கொள்கின்றேன்..

Friday 20 November 2015

கற்பிக்கவோ?கற்கவோ?

கற்பிக்கவோ?கற்கவோ?
----------------------------------------

இன்று காலை முதல் பிரிவேளையில் குழந்தைகளிடம் சற்று பேசலாம் என ஒவ்வொருவராக வீட்டில் என்ன பணிகள் செய்கின்றீர்கள் எனக்கேட்டேன்...
பொதுவாக என் வகுப்பு மாணவிகளிடம் லீவில் என்ன ஜாலியா இருந்தீங்களான்னு கேட்டா போங்கம்மா.லீவே வேண்டாம்மா என்பார்கள்..

ஏன்மா என்றால்...
அம்மா வேளை சொல்லிக்கிட்டே இருப்பாங்கம்மா...என்றாள் ஒருத்தி...வீடு என்பது அனைவருக்கும் பொதுவானது அதில் அம்மா மட்டும் வேலை செய்ய மற்றவர்கள் ஓய்வில் இருப்பது முறையாம்மா என்றதற்கு இல்லம்மா அப்பதான் கடைக்கு போயிட்டு வருவேன்மா மறுபடி மறுபடி கடைக்கு போக சொல்வாங்க ,திட்டிக்கிட்டே இருப்பாங்க, வீடு வேண்டாம்மா என்ற போது அதிர்ச்சியாகத்தான் இருந்தது...

நான் சிறுவயதில் லீவுன்னா அதை என் உறவுகளுடன் எப்படியெல்லாம் கொண்டாடினோம், ஏன் இந்தக்குழந்தைகள் வீட்டில் இருப்பதை விரும்பவில்லை...

விடுமுறை அவர்களை வீட்டுக்குள் அடைக்கின்றது...பிடித்த சேனலை டிவியில் பார்க்க அம்மா,தாத்தா,பாட்டிகள் அனுமதிப்பதில்லை,
வீட்டில் பணி செய்வதை குழந்தைகள் விரும்பவே இல்லை என்பதை உணர்ந்தேன்...

வீட்டில் உனக்கும் வேலை செய்ய வேண்டியக்கடமை உள்ளதும்மா.நீ கட்டாயம் ஏதாவது உதவி அம்மாவிற்கு செய்ய வேண்டும்மா..என அறிவுறுத்திய போது ஏற்றுக்கொண்டனர்..

பெற்றோர்கள்..குழந்தைகளை சிறிதளவாவது வீட்டுப்பணிகளில் பயிற்சி அளிக்க வேண்டும் என்பதை உணரவில்லை...வளர்ந்த பின் தாங்கள் வீட்டு வேலை செய்வதை குழந்தைகள்..அவமானமாக ,வேண்டாத ஒன்றாக எண்ணத்தலைப்படுகின்றனர்...

அடுத்து எத்தனை பேர் சாப்பிடாமல் பள்ளிக்கு வருகின்றனர் என்று கேட்ட போது ,ஒரு குழந்தை தினமும் சாப்பாடு எடுத்து வருவதில்லை என்றனர்..ஏன்மா எனக்கேட்டதற்கு அப்பா காலையில் 3 மணிக்கும் ,னஅம்மா காலையில் 6 மணிக்கும் குழந்தைகள் எழு முன்னே வேலைக்கு சென்றுவிடுவார்களாம்...மதியம் 12 மணிக்கு வந்து சமைத்து வைத்துவிட்டுச்செ்றுவிடுவார்களாம் அதனால் இக்குழந்தை மதியமும் உணவு கொண்டு வருவதில்லை...கூடப்படிக்கும் குழந்தைகளே தினமும் தங்களது உணவை பகிர்ந்து கொடுத்துள்ளனர்...

சத்துணவு சாப்பிட வேண்டியது தானே என்றதற்கு..பலர் அதை சாப்பிடுவதில்லை என்பதும் ,கட்டாயத்திற்காக வாங்கி வீட்டிற்கு எடுத்து சென்று கொட்டுகின்றனர்..அது அடிக்கும் வாடை பிடிக்கல என்கிறார்கள்..சத்துணவு சமைப்பவர்களிடம் கேட்டால் அரிசியே அப்படி வருகிறது நாங்கள் என்ன செய்வது என்கின்றனர்..
மொத்தத்தில் சத்துணவு பாதிக்குழந்தைகள் சாப்பிடாமல் எடுத்துச்சென்று கொட்டுவது அல்லது அவர்கள் வீட்டு விலங்குகளுக்கு போடுகின்றனர்,,

பாலீஷ் செய்த வெள்ளை அரிசியால் சர்க்கரை நோய்தான்மா வரும் சத்துணவு உடலுக்கு நல்லதும்மா என்று சமாளித்தேன்..காலையில்நான் சாப்பிட எடுத்துச்சென்ற உணவைக்கொடுத்து சாப்பிடச்சொன்னேன்...சாப்பிட்டு ஒரு குதியலுடன் அவள் டப்பாவைக்கொடுத்த போது இவள் தினமும் காலையில் சாப்பிட என்ன செய்யலாம் என்ற கவலை வந்தது..

மாணவர்கள் தங்களின் பெற்றோர்களுக்கு தண்னீர் எடுத்துக்கொடுத்தல்,கூட்டுவது ,தங்களது துணிகளைத்தாங்களே துவைத்துக்கொள்வது,கடைக்குச்செல்வது,சில குழந்தைகள் சமைப்பது என செய்வதாகக்கூறினர்..

குழந்தைகளை பெற்றோர்களுக்கு உதவி செய்வது அவர்களின் கடமை என்று உணர்த்திய பின், காலையில் நான் குறித்துக்கொடுக்கும் கேள்விகளைப் படித்து விட்டால் மதியம் முகமூடி அணிந்து விளையாடலாம் என்ற பின் அவர்கள் என்னைக்கவனிக்கவே இல்லை குழுவாக அமர்ந்து சமர்த்தாகப்படிக்க ஆரம்பித்து விட்டனர்.

மதியம் பத்து முகமூடிகளைக்கொடுத்து அவர்களையே குழுவாக நடிக்க சொன்னேன்..அவர்களே நாடகத்தை உருவாக்கிட வேண்டும் என்றேன்..




..முகமூடிகளை அணிந்து விளையாடிய மாணவிகளுக்கு நடுவில், மண்டையோடு முகமூடி அணிந்து ஒருத்தி வர அழகிய முகமூடி அணிந்த பெண் ,அவளை விளையாட்டில் சேர்க்க கூடாது அவள் அசிங்கமாக மண்டையோடு முகத்துடன் இருக்கிறாள் என்றாள் உடனே கூட இருந்த எலி ,சிங்க,புலி,சிறுமி.எல்லோரும் அவளை சமாதானப்படுத்தி அழகு என்பது மனதைப்பொறுத்தது,,...முகத்தைப்பொறுத்தது அல்ல..நம் செயல்களைப்பொறுத்தது என்று கூறி அவளையும் சேர்த்துக்கொள்ளலாம் என்றது அவளும் மனம் மாறி சரி எல்லோரும் சேர்ந்து விளையாடலாம் என்றாள்...

ஓவ்வொரு குழுவும் ஒரு கருத்தை வலியுறுத்தி நடத்தபோது தான் என் கற்பித்தல் செழுமையடைவதை உணர்ந்தேன்...
கற்றுக்கொடுக்கின்றனர் குழந்தைகள் நாளும் நாளும் எனக்கு...

Wednesday 18 November 2015

சங்க இலக்கியம்-புதுக்கவிதையாய்

சங்க இலக்கியம் எட்டுத்தொகை,பத்துப்பாட்டு என பதினெட்டு நூல்கள் அடங்கிய பதினெண்மேற்கணக்கு நூல் என அழைக்கப்படுகின்றது..இப்பாடல் 

எட்டுத்தொகை நூலாகிய


நற்றிணையில் இடம் பெற்றுள்ள பாடல்.நற்றிணை என்னும் இந்நூல் தனிப்பாடல்களாக பலராலும் பாடப்பட்டு பின்னர் தொகுக்கப்பட்டது. இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். எட்டுத்தொகை நூல்கள் இவையெனப் பாடும் வெண்பாவால் முதலிடம் பெற்றுத்திகழ்வது நற்றிணை ஆகும். நல் என்ற அடைமொழி பெற்றது. இதனை நற்றிணை நானூறு என்றும் கூறுவர். இந்நூல் 9 அடி முதல் 12 அடிகள் வரை அமைந்த 400 பாடல்களைக் கொண்டது. இந்நூலைத் தொகுத்தவர் யாரெனத் தெரியவில்லை. தொகுப்பித்தவன் "பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி" ஆவான். நற்றிணைப் பாடல்கள் அகப்பொருள் பாடல்களாகும்.நன்றி விக்கிபீடியா



1- குறிஞ்சி-கபிலர்
               
தலைவிக்கூற்று

[தலைவனின் பிரிவைத் தோழி தலைவிக்கு உணர்த்திய போது தலைவி சொல்லியது]

பாடல்

நின்ற சொல்லர்;நீடுதோறு இனியர்;
என்றும் என் தோள்பிரிபு அறியலரே;
தாமரைத் தண் தாது ஊதி,மீமிசைச்
சாந்தில் தொடுத்த தீம்தேன் போல,
புரைய மன்ற,புரையோர் கேண்மை;
நீர் இன்று அமையா உலகம் போலத்
தம் இன்று அமையா நம் நயந்தருளி,
நறுநுதல் பசத்தல் அஞ்சிச்
சிறுமை உறுபவோ?செய்பு அறியலரே




            கவிதை


நிலையான சொல்லோன்
 இனிமைக்கே உரியவனென்
தோள்பிரியான்

தாமரையின் மகரந்தமுகர்ந்து
மலைச்சந்தன மரத்தில்
வண்டு ஒளித்திடும் தேனென
உயர்ந்தோர் நட்பு உயர்வுடையதாய்

நீரின்றி வாழா உலகமாய்
அவனின்றி வாழ்வோமோ நாம்
பிரிவின் வேதனை மாய்க்குமோவென
செய்வதறியா தவிக்குமவர்
பிரிந்தே சிறுமையடையாரே.

பொருள்-

என்றும் மாறாத சொல்லுடையத்தலைவன்,இனிமையானவன்,என் தோளைப்பிரிவதை விரும்பாதவன்.
தாமரைமலரின் மகரந்தத்தை வண்டானது உறிஞ்சி மலைப்பகுதியில் இருக்கும் சந்தன மரத்தில் சேர்க்கும் தேனைப்போன்ற உறுதியானது உயர்ந்தோரின் நட்பு.
நீரின்றி உலகம் இயங்காததைப்போல நாமும் தலைவனின்றி வாழ மாட்டோம்,
பிரிவின் வேதனையைத்தாங்கமாட்டோம் என்பதால் தலைவன்  நம்மை விட்டுச்செல்ல மாட்டார்..நம்முடனே இருப்பார் என்று  ,தலைவனின் பிரிவைக்கூறிய தோழிக்கு ,தலைவி கூறியது.


இது என் சிறு முயற்சி...தொடர்வோம்..குறையிருப்பின் திருத்திக்கொள்ளும் காத்திருத்தலுடன்..

Sunday 15 November 2015

யார் மீது தவறு?

யார் மீது தவறு?

வட மாநிலத்தில் ஒரு இளைஞன்...பெண்ணிடம் பாலியல் வன்முறை செய்ய முயன்றான் என்பதற்காக அவனை பொதுமக்கள் அடித்து துவைத்து செருப்பு மாலைப்போட்டு அரைகுறை ஆடையுடன் நடுத்தெருவில் இழுத்து வரும் செய்தியைப்பார்த்த போது மனம் வலித்தது....

யார் மீது தவறு ?

பெண் என்றாலே போகப்பொருள் என்ற கற்பிதத்தை ஆண்கள் மனதில் பதிய வைத்தது யார்?

பெண்கள் ஆண்களின் உடைமைகள் என்ற எண்ணத்திற்கு வலுவேற்றியது யார்?

பெண்களுக்கு என்று எந்த வித தனிப்பட்ட ஆசைகளும் எண்ணங்களும் சுயமரியாதை இருக்க கூடாதென்ற எண்ணத்தை ஊன்றியவர்கள் யார்?

பெண்களுக்கு சமூகச்சிந்தனைகள் தேவையில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்தது யார்?

பெண் என்பவள் தாழ்த்தப்பட்ட குலத்தினும் தாழ்ந்தவள் எனத்தாழ்த்தியது யார்?

பெண்களை அலங்காரப்பொருளாக்கி மகிழ்வது யார்?

பெண்களே தங்களை அழகு பொம்மைகள் என எண்ண வைத்தது யார்?
ஆண்களின் ஆசை தனிக்கும் கருவியாகப்பெண்களைப்பயன் படுத்திக்கொள்ளலாம் என்ற உரிமையை யார் கொடுத்தது?

கல்வி கற்ற பெண்கள் கூடத்தெளிவின்றி வாழக்கற்றுக் கொடுத்தது யார்?

பெண்களைப்பொதுப்பொருளாக்கி மகிழ்வது யார்?

எந்த பெண்ணாயினும் உடல்ரீதியான பேச்சால் வீழ்த்தலாம் என நினைத்து வெற்றி பெற்றது யார்?

அந்த இளைஞன் ஒரு அம்பு மட்டுமே...இவனை அடித்தால் வேறு ஒருவன் எழுவான் பெண்களை பாலியல் வென்முறை செய்ய...அவனை என்ன செய்வது...

சமூகப்புரட்சி நடந்தால் ஒழிய பெண் என்பவள் ஒரு போகப்பொருளாகவே தானும் எண்ணி வீழ்வாள்...

பெண் என்பவள் சகமனுஷி என்ற எண்ணத்தை விதைத்தால் ஒழிய பெண்களின் மீதான வன்முறை அழிய வாய்ப்பே இல்லை...குடும்பமும் சமூகமும் இந்த எண்ணத்தில் இணைந்து பயணித்தால் மட்டுமே பெண்ணும் ஆணும் தெளிவாக வாய்ப்புண்டு..




Saturday 14 November 2015

நந்தலாலா இணைய இதழ்-வலையெழுத்து

நந்தலாலா இணைய இதழ்-வலையெழுத்து

வலையில் வீழ்வோமா?
                    எனது வலையில் வீழும் அன்பு இதயங்களுக்கு மனம் நிறைந்த வணக்கம்….
             உங்களுடன் சிலநாள் அகமும் புறமும் மகிழ …மண்ணில்  கலந்த மழையாய்….வசப்படும் வார்த்தைகளால்…வலைப்பூக்களின் வாசத்தில் மகிழப்போகின்றேன்…இவ்வரிய வாய்ப்பைத் தந்த நந்தலாலா இணைய இதழாசிரியருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்….

             வலைப்பூக்களை அறிமுகம் செய்யும் இவ்வரிசையில் யாரை அறிமுகம் செய்யப்போகின்றீர்கள் எனக்கேட்டதும்…வலைப்பதிவர் விழா 2015 இல் நடந்த போட்டிகளில் கலந்து கொண்டு கட்டுரைப்போட்டியில் சுற்றுச்சூழல் குறித்த
 ”கான் ஊடுருவும் கயமை”
என்ற தலைப்பில் எழுதி பரிசை வென்ற அன்புக்குரிய சகோதரி கீதமஞ்சரிவலைத்தள ஆசிரியர் ,

கீதாமதிவாணன் சட்டென்று நினைவிற்கு வந்தார்.ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து கொண்டு நமது இதயங்களை எல்லாம் வார்த்தை வலையில் வீழ்த்தி அங்குள்ள பறவைகளை, விலங்குகளை,பூக்களை நமக்கு அறிமுகம் செய்யும் ,இயற்கையை நேசிக்கின்ற இவரின் பதிவுகள் ஒவ்வொன்றும் நம்மை வியப்பின் எல்லையைத்தொடவைக்கும்…ஆழ்ந்த, விரிவான,அறிவுப்புதையல்களை தன்னுள் கொண்டிருப்பவை… இவரை இன்று அனைவருக்கும் அறிமுகம் செய்வதில் மட்டில்லா மகிழ்வடைகின்றேன்…
மேலும் தொடர....
http://www.nanthalaalaa.com/search/label/வலையெழுத்து

குழந்தைகள் தினவிழா..

விக்டரி அரிமா சங்கம்...புதுகை

குழந்தைகள் தினவிழா போட்டி

நேற்று புதுகை நகர்மன்றத்தில் நடந்த குழந்தைகள் தினவிழாவில் பேச்சுப்போட்டி,கட்டுரை,ஓவியப்போட்டிகள் நடந்தன...

மூன்று நிலைகளில் 6-8,9-10,11-12 போட்டிகள் நடந்தன...பேச்சுப்போட்டிக்கு நடுவர்களாக நான்,அனுசுயா,மற்றும் மாலதி மூவரும் கலந்து கொண்டோம்..
அழகான தலைப்புகள் அன்பால் உலகை வெல்வோம்,ஆ’கலாம் ஆகலாம்,சேவையால் சிகரம் தொடுவோம் ஆகிய தலைப்புகளில் குழந்தைகள் மிக அருமையாகப்பேசினர்...
கடலரசி என்ற மாணவி அனைவர் மனதையும் கவர்ந்து போட்டிகளில் முதல்பரிசை வென்றார்...
குழந்தைகளுடன் குழந்தைகள் தினத்தை இனிமையாகக் கழித்தோம் மூவரும்...
எங்கள் பள்ளி மாணவிகள் ஓவியப்போட்டி மற்றும் கட்டுரை போட்டிகளில் பரிசுகளை வென்றனர்...
சிவயோகமதி என்ற மாணவியின் அம்மா என்னிடம் உங்களைப்பார்க்கத்தான் வந்தேன்மா..என் மகள் எப்போதும் உங்களைப்பற்றித்தான் பேசிக்கொண்டே இருக்கிறாள்.அம்மா இப்படி இருக்கச்சொன்னாங்கன்னு,அதைச்செய்யச்சொன்னாங்கன்னு நீங்க சொன்னதத்தான் கேட்குறா...மிகவும் மகிழ்ச்சிம்மா இந்தப்பள்ளியில் சேர்த்ததற்கு பெருமைப்படுகின்றேன்..என்று கூறிய போது ,சரியா பணியைச்செய்கின்றோம் என்ற மனதிருப்தி வந்தது...இதைவிட வேறென்ன வேண்டும் ஒரு ஆசிரியருக்கு...ஒரு நல்ல அம்மாவாக என் மாணவிகளுக்கு இருப்பதால் வரும் மனநிறைவு..எதற்கும் ஈடாகாது..
இந்த வாய்ப்பை நல்கிய புதுகை விக்டரி அரிமா சங்க நிர்வாகிகளுக்கு மிக்க நன்றி..





Thursday 12 November 2015

கடவுளைக்கண்டேன்..2

                                     

                                 
                                 நம்ம சகோ கில்லர்ஜிக்கு நகச்சுத்தி வந்தாலும் வந்தது...அதுக்கு ஆபரேஷன் பண்ணிக்கிட்டு மருத்துவர்கள் முழிக்க,.....

                சைடு கேப்ல இவரு சொர்க்கலோகம்?![அங்கேயா போவாரு...கில்லர்ஜின்னு பேர வச்சுக்கிட்டு]போயியியி..கடவுளைப்பார்க்க ,அந்தக்கடவுளோ பாவம் இவரோட வேண்டுதல்களையே நிறைவேற்ற முடியாது..பின்ன இந்தியாவுல மதம் ஜாதிங்குற வார்த்தையே இல்லை சொன்னா செயிலுன்னு சொல்ல கடவுளு தலையில கைய வச்சுக்கிட்டு...இந்தப்படுபாவிய பிடிக்க முடியாது போலன்னு அவரு ஒரு பந்தயம் வைக்க....
               சொர்க்கத்துலேர்ந்து என்னைப் பார்த்து...மாட்டிவிட்ட சகோவ என்ன பண்ணலாம்...இருக்கட்டும் எப்படியும் ஆபரேஷன் முடிந்து வெளியே வரும் போது கவனிச்சுக்கலாம்...இப்ப கடவுள பார்க்கலாம்னு  நினைச்ச உடனே விஷ்க்னு சொர்க்கத்துல நானு... கள்ளச்சிரிப்போட நம்ம சகோ கில்லர்ஜி....

                             பக்கத்துல அநியாயத்துக்கு அணிகலன்களோட வரிசையா எல்லா மதக்கடவுளும்....உட்கார்ந்துருக்காக...யாரப்பாத்து கேக்கலாம்னு போனா ...எதுக்கு வம்பு மொத்தக்கடவுள்களையும் ஒரே சமயத்துல பார்த்து கேட்டுடலாம்னு ..முடிவு பண்ணேன்...

ம்ம் கூறும் உமது ஆசைகளைன்னு திருவிளையாடல்ல வர்ற சிவபெருமான் சிவாஜி ஸ்டைலில் எல்லோரும் கேட்க...

எல்லாத்தையும் நிறைவேத்துவீகளான்னு வழக்கம் போல கிராஸ் கேள்வி கேட்க ....ம்ம்ம்ம்ம்னு உருமிவிட்டு கேளும் கேளும் கேட்டுப்பாரும்னு அதட்ட...அய்யோடான்னு பயந்துகிட்டே கேட்க ஆரம்பித்தேன்..

1]நிசமாவே பூமியில இத்ன கடவுள்  இருந்தும் நடக்குற அநியாயத்த யாரும் கேக்கலயே இனி ஒரு கடவுளாவது கேட்பீகளா?..

2]மனுசனுக்கு ஆறறிவு வேண்டாம் ஐந்தறிவே போதும்ஆறாவது அறிவ அழிக்க முடியுமாக்கடவுளே...,அத வச்சுக்கிட்டு இவன் படுத்துற பாடு தாங்க முடியல...

3]பெண்களைக்குறை சொல்லாத...இருங்க இருங்க பெண்கள் குறை சொல்லும் படி நடக்காத ஆண்களைப்படைப்பீர்களா..சாமி..

4]நீங்க எல்லாம் ஒண்ணா சேர்ந்து நம்ம சரத்குமாரு ஸ்டைல நிறுத்துறா சண்டைய...எல்லா மதமும் ஒண்ணுதாண்டா...மனுசனப் பிரிச்சவன வெட்டுறான்னு சொல்லோனும் முடியுமா,...?

5]எத்தன முறை சின்ன வயசுல உங்கள சுத்திசுத்தி வந்து எல்லாரும் நல்லாருக்கனும்னு வேண்டிக்கிட்டேன்...ஆனா என்ன மட்டும் நல்லா வைக்காத உங்களுக்கு தண்டனைக் கொடுக்க ஆசைப்படுறேன் முடியுமா சாமி?இல்ல இழந்து போன என் மகிழ்ச்சியெல்லாம் திருப்பி கொடுத்துடுங்க.....எலுமிச்சம்பழ விளக்கே ஆயிரக்கணக்குல ஏத்தியிருக்கேன் ..கொஞ்சம் கூட கருணை காட்டலியே பா...

6]இந்தியா கடன்ல இருக்கு உங்க பக்கத்துல இருக்குற  திருப்பதி வெங்கடாச்சலபதிக்கு ஆயிரம் கோடிக்கணக்குல நகை இருக்குன்றாக....கொஞ்சம் இரக்கப்பட்டு இந்தியாவோட கடனை அடைக்க சொல்லிடுங்க சாமி...


7]கண்டங்கள் எல்லாத்தையும் முடிஞ்சா ஒண்ணா  இணைச்சு இந்த அயல்நாட்டுக்காரங்ககிட்டஇருந்து, ஆமா சாமி ஆ ஊ ன்னா  எல்லைத்தாண்டினேன்னு பிடிச்சுட்டு போயி கொடுமைப்படுத்துறாய்ங்க....ஒண்ணா சேர்த்தாச்சுன்னா இந்த பிரச்சனையே இல்லல்ல...இந்தியாவ குப்பை கொட்டுற நாடா எந்த நாடும் நினைக்காதுல்ல..கொஞ்சம் காதக்கொடுங்க[ நம்ம பிரதமருக்கு அயல்நாட்டுலேயே இருக்காருன்னு கெட்டப்பேரு மாறிடும்ல...]


8]காலக்கடிகாரம் இருந்தா ஒரே சுத்தா சுத்தி என்ன சின்ன வயசுல கொண்டி உட்டுறுக அட எல்லாரையும் தான்....செய்த தப்பயெல்லாம் செய்யமாட்டோம்ல...ஆனா புதுசா தப்பு பண்றத தடுக்க முடியாது சாமி..

9]கொஞ்ச நாளைக்கு பணக்காரர்கள்டேருந்து எல்லாத்தையும் புடுங்கி வறுமையில் வாடும் ஏழைகளிடம் கொடுத்துடுங்க..கஷ்டம்னா என்னன்னு அவங்களும் உணரட்டும் என்ன நாஞ் சொல்றது...அதுக்குள்ள கன்னத்துல கைய வச்சுக்கிட்டா என்ன பண்றது சாமியோவ்...


10]பேசாம எல்லாரும் ஒண்ணா சேர்ந்து மனுசப்பயல்க கிட்ட நாங்க எல்லாம் ஒரே உருவம் தான் இனி நீங்க அடிக்கிட்டா யாரு காரணமோ அவங்களுக்கு எண்ணெய்க்கொப்பரைதான்னு நேர்ல வந்து சொல்லிட்டு போயிடுங்க சாமிகளா..என்னோட இந்த சின்ன ஆசையெல்லாம் நிறைவேத்திட்டீகன்னா...தந்தை பெரியாரே நேர்ல வந்து நீங்க இருக்கீங்கன்னு சொல்லவச்சுடுறேன் சாமியோவ்..



அய்யோடா ஏனிப்படி சாமியெல்லாம் ஓடுறாங்கன்னு  தெரியலயே...

இன்னும் பத்து பேரு ஆசையக்கேட்போமா..யாரப்புடிக்கலாங்கோ

  1] அன்பு அண்ணன் முத்துநிலவன்
    http://valarumkavithai.blogspot.com


2]அன்பு சகோதரி கீதமஞ்சரி
           http://geethamanjari.blogspot.in

3]அன்புசகோதரர் தளிர்சுரேஷ்
          http://thalirssb.blogspot.com

  4]நம்ம தம்பி கஸ்தூரி
      http://www.malartharu.org

5]அன்புச்சகோதரி இளையநிலா
   http://ilayanila16.blogspot.com

6]அன்புத்தோழி தென்றல் சசிகலா
  http://veesuthendral.blogspot.in

7]அன்புத்தோழர் ஜோக்காளி
  http://www.jokkaali.in

8]அன்புச்சகோதரி மாலதி
http://malathik886.blogspot.in

9]உணர்வான தோழியும் சகோதரியும் ஆன ஜெயா
  http://jayalakshmiaeo.blogspot.in

10]கொடுத்து சிவந்த கரங்களை உடைய நம்ம விசு ஆசம் சார்
http://vishcornelius.blogspot.com


அப்பாடி ஒருவழியா இவங்க கிட்ட ஒப்படைச்சாச்சு இனி கில்லர்ஜி பிழைப்பது இவர்கள் கையில் கொஞ்சம் பார்த்து ஆசைய சொல்லுங்க எல்லாரும்...


Tuesday 10 November 2015

சந்தைப்பேட்டை அ.ம.மே.நி.பள்ளியில் நாணயவியல் கண்காட்சி

சந்தைப்பேட்டை அ.ம.மே.நி.பள்ளியில் நாணயவியல் கண்காட்சி

இரண்டு மாதங்களுக்கு முன் எங்கள் பள்ளியில் நாணயவியல் கண்காட்சி









நடந்தது...சூழல் காரணமாக என்னால் உடனே எழுத முடியவில்லை...ஆனால் அதன் சிறப்பை கூறவேண்டும் என்ற எண்ணம் இன்று வடிவில்...

ரூபாயில் எத்தனை மாற்றங்கள்...
டீச்சர் இந்த 50 ரூபாய்களில் ஏதும் வித்தியாசங்கள் தெரிகிறதா ?.என நாணயவியல் கழகத்தலைவர் திருமிகு பஷீர் அலி அவர்கள் கேட்ட போது ஒண்ணும் தெரியலயே சார் என்றேன்....நல்லா உற்றுப்பாருங்கள் என்றார் அப்போதும் ம்கும் என்றேன்...சிரித்துக்கொண்டே பாரளுமன்றம் தெரிகிறதா ?என்றார்...ஆம் என்றேன்...

மேலே உள்ள கொடியைப்பாருங்கள் என்றார்..பார்த்தபோது வியந்தேன்..ஒரு நோட்டில் பாராளுமன்றத்தின் மேல் கொடிக்கம்பம் மட்டுமே இருந்தது,மற்றொன்றில் ஏதோஒரு கொடி பறந்தது,வேறு ஒன்றில் நம் தேசியக்கொடி பறந்தது....நாம் தினமும் புழங்கும் ரூபாயில் நுணக்கமாக எத்தனை விசயங்கள் உள்ளன..என மலைத்தேன்.

மேலும் பல நாடுகளில் தமிழ்மொழி மூன்று, நான்காம் இடத்தில் இருக்க இந்திய ரூபாயில் மட்டும்..கீழே உள்ளது என...தமிழ்மொழிக்கு மரியாதை இல்லை என்பதை வேதனையோடு பகிர்ந்து கொண்டார்...

125 நாடுகளுக்கும் மேற்பட்ட நாணயங்கள் ரூபாய் நோட்டுகளைச் சேகரித்து பொக்கிஷமாக வைத்துள்ளார்..
அனைத்துக்குழந்தைகளும் இதைக்கண்டு அறிந்து கொள்ள வேண்டும் என்பதையே நோக்கமாகக்கொண்டு செயல் படுகின்றார்.கண்காட்சியைப்பார்த்த பின் மாணவிகளிடம் கேள்விகள் கேட்டு பரிசுகளை அள்ளித்தந்தார்...

நாம் பார்த்தே இராத, பார்க்கவே முடியாத அரிய பழங்கால நாணயங்களைக்காட்டிய போது அதிசயத்து நின்றோம்...

எளிமையான ,பழகுவதற்கு இனிமையான,தன்னால் முடிந்த உதவிகளை அனைவருக்கும் செய்வதுடன்,மேலூம் பலரிடமிருந்து பெற்று வழங்கியும் ...மதிப்பிற்குரிய மனிதராக திருமிகு பஷீர் அலி வாழ்ந்து வருகின்றார்...எனக்கு தெரியாத எவ்வளவோ நல்ல விசயங்கள் அவரைப்பற்றி கேள்வி படுகின்றேன்..

பள்ளிகளில் யாரும் விரும்பினால் அழைக்கலாம்..
பஷீர் அலி: 9626232725

Saturday 7 November 2015

தீபாவளி தேவையா ?தேவை இல்லையா?-பட்டிமன்றம்

                              6.10.15 வெள்ளிக்கிழமை காலை  ஆறாம் வகுப்பிற்குச்சென்றதும்..குழந்தைகள் தங்களுக்குள் ஏதோ கதைத்துக்கொண்டே இருந்தனர்...என்னம்மா என்றேன்..அம்மா நிறைய பேர் வரலம்மா என்றார்கள் ஏன் என்றதற்கு தீவாளிக்கு டிரஸ் வாங்கப் போயிட்டாங்கம்மா என்ற போது தான் ,ஒரு பட்டி மன்றம் வைக்கலாமா? என்றேன் உடனே அய்ய்ய்  வைக்கலாம்மா என்னதலைப்பு என்றார்கள் தீபாவளி தேவையா? தேவையில்லையா ?என்றேன்...தேவைதான்மான்னு கோரஸாக குரல் ஒலித்தது..யாரெல்லாம் தேவையின்னு பேசப்போறீங்கன்னு கேட்டதும்சிலரைத்தவிர அனைத்துக்கைகளும் உயர்ந்தன...மதியம் பட்டிமன்றம்னு சொல்லி ஆனா அதற்குள் சொன்ன எழுத்துவேலையெல்லாம் முடிச்சிடனும்னு சொன்னதும் ஓகேம்மான்னு ...குரல் கொடுத்தனர்..
மதியம் தயாராக கையில் குறிப்பெல்லாம் வச்சிருந்தனர்..சரி ஆரம்பியுங்கன்னு சொன்னதும்
 ஜனனி:அம்மா..தீபாவளி அன்று புது டிரஸ் கிடைக்கும்,பலகாரமெல்லாம் கிடைக்கும் நாங்க எல்லார் வீட்டுக்கும் போவோம் தீபாவளிக்குத்தான் ,சந்தோசமா பட்டாசெல்லாம் வெடிப்போம் அதனால தீபாவளி வேணும்ம்மா..

சிவயோகமதி:தீபாவளிக்கு அதிக செலவாகும் கடன் வாங்கித்தான் டிரஸ் பட்டாசு வாங்கனும்,வெடி வெடிக்கும் போது கையில பட்டு விபத்து வரும் அதனால தீபாவளி வேண்டாம்மா.

கவிதாஅம்மா அன்று தானே குழந்தைகள் சந்தோசமா இருக்கும் அதை ஏன் வேண்டான்னு சொல்லனும்மா வேணும்மா

அபிஸ்ரீ:அம்மா தீபாவளி அன்று அதிக விபத்தெல்லாம் நடக்கும்மா ...நம்ம சந்தோசத்துக்காக மத்தவங்க ஏன்மா பாதிக்கப்படனும் ..அதனால வேண்டாம்மா..அப்படி கடன் வாங்கி கொண்டாடனும்மாம்மா...
திவ்யா:அம்மா...எல்லோரும் அன்று வீட்டுக்கு வருவாங்க...சொந்தக்காரங்கள எல்லாம் பாக்கலாம் அதனால வேணும்மா..
ராஜபூரணி:வாங்க முடியாத குழந்தைகள் மற்றவர்கள் புது டிரஸ் போட்டுருக்கறத பாத்து ஏங்குவாங்கல்ல மா அதனால வேண்டாம்மா..

பரிதுல் பர்ஜானா...தீபாவளின்னா சந்தோசம்னு எல்லாரும் விருப்புவாங்க அதனால வேணும்மா
 சரி தீபாவளிய ஏன் கொண்டாடுறாங்கன்னு கேட்டேன்.
லலிதா : கிருஷ்ணர் நரகாசுரன கொன்றபோது நரகாசுரன் தான் இறந்த நாளை எல்லாரும் கொண்டாடனும்னு வேண்டிக்கிட்டானாம் அதனாலதான் கொண்டாடுறோம் .

நல்லவனோ கெட்டவனோ ஒருவன் இறந்த நாளைக்கொண்டாடுவது சரியா..என்று கேட்டதும்...இல்லம்மா கொண்டாடக்கூடாதும்மா..என்றனர் கோரஸாக..

தமிழர் திருநாள் எது என்றேன் ..பொங்கல் என்றனர்...தனக்கு உதவி செய்த சூரியனுக்கும் மாட்டுக்கும் நன்றி சொல்லி விழா கொண்டாடும் தமிழினம் தீபாவளியைக்கொண்டாடுவது முறையா என்றேன்...அனைவரும் யோசிக்கத்தொடங்கினர்..காலங்காலமாக கொண்டாடுகின்றார்கள் என்பதற்காகவே ஒரு விழாவை கொண்டாடலாமா என்றபோது அமைதி காத்தனர்,,

சிவயோக மதி: அம்மா நாம் வெடிகிற வெடிகளைச்செய்வதும் குழந்தைகள் தான்மா அதை வெடிக்கும் போது அவர்களையே வெடிப்பது போல் இருக்கும்மா...படிக்க போகாம அவங்க வெடி தயாரிக்கப்போறாங்கம்மா..தீபாவளி வேண்டாம்மா..என்றாள்..


மூன்று குட்டீஸ் சேர்ந்து ஒரு நாடகமும் போட்டனர் ...பேசவே பேசாத ரோகிணியும் முத்து லெட்சுமியும் வந்து பேசியது மகிழ்வாயிருந்தது...

வகுப்பே தீபாவளி கொண்டாடுவது தவறு என்றது...இக்குழந்தைகள் மனதில் விதைத்தான் தூவியுள்ளேன்..எந்த விழாவையும் காரணம் புரிந்து கொண்டாட வேண்டும்...இக்குழந்தைகளின் குடும்பங்கள் மிகவும் வறுமையான சூழ்நிலையில் இதில் கடன் வாங்கி ஆடம்பரமாகக்கொண்டாடி  பின் தவிக்கலாமா?

ஊடகங்களும் சமூகமும் தீபாவளிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மனிதநேயத்திற்குக்கொடுத்தால் தமிழினம் சிறப்படையாதா?யோசிப்போம்..