World Tamil Blog Aggregator Thendral: January 2016

Wednesday 27 January 2016

இட ஒதுக்கீடு சலுகையா?உரிமையா?

இட ஒதுக்கீடு சலுகையல்ல உரிமையே.

இடஒதுக்கீடு தேவையா?எனில் ஏன் தேவை?

மதிப்பிற்குரிய சுப.வீ.அய்யாவின் காரைக்குடியில் உள்ள அவரது வீட்டில் இன்று 27.01.16 நிகழ்ந்த கூடுகையில், நிலவன் அண்ணாவுடன் கலந்து கொண்டோம்.முன்பு புதுகைக்கு ஒரு கூட்டத்திற்காக வந்த போது நிலவன் அண்ணா ..அழைத்து சென்று அறிமுகம் செய்து வைத்த போது...அவருடன் தான் பேசினோமா என்ற ஆச்சர்யத்தில் எனது நூலைக்கொடுத்து விட்டு வந்தேன்..அதை அவர் நினைவு வைத்திருந்து கூறிய போது அவரின் நினைவாற்றலை எண்ணி வியந்தேன்..

இன்று இரண்டாவது முறையாக நேரில் சந்திக்கும் வாய்ப்பு இன்று கிடைத்தது..இட ஒதுக்கீடு குறித்த வரலாறை, தேதி முதற்கொண்டு நினைவில் வைத்து பேசிய போது அனைவரும் மலைத்து நின்றோம்.

இடஒதுக்கீடு குறித்த அய்யாவின் உரை

...

இடஒதுக்கீடு என்பது முழுமையாக சமத்துவத்தை எட்டுவதற்கான இடைக்கால ஏற்பாடு...
தமிழ்நாட்டில் சமூக நீதியை அடையும் வழியில் ஒன்று...
சமமற்றவர்களுடனான சமத்துவம் என்பது ..முயல் ஆமைக்கான போட்டியையே காட்டும் ...முயலுக்கும் முயலுக்கும் போட்டி நடப்பதே உண்மையான சமத்துவம் ...சமமற்றவர்களை சமமாக நடத்துவது என்பது சமூகஅநீதி...சமநிலையில் உள்ளவர்களை சமமாக நடத்துவதே நீதி என்று கூறிய போது உண்மைதானே என்ற எண்ணம் வந்தது...
மூன்று நிலைகளில் சமத்துவம் மிக முக்கியமாக தேவை
1.கல்வி
2.வேலைவாய்ப்பு
3.அரசியல்

Tuesday 26 January 2016

kaviyarangam-கவியரங்கம்[26.1.16]

                                       சமூகநீதி கூட்டமைப்பு-நாகுடி 
                         66 ஆம் ஆண்டு குடியரசுதினவிழா-கவியரங்கம்
                                   தலைப்பு -சட்டம் பேசு

கவிஞர் சோலச்சி 10 நாட்களுக்கு முன் அழைத்து நாகுடியில் ஒரு கவியரங்கம் நீங்க கவிதை படிக்கனும்னு கேட்டபொழுது சரி என்றேன்..
என்னுடன் கவிஞர்  சோலச்சி,கவிஞர் அப்துல் ஜலீல்,
கவிஞர் புதுகைப்புதல்வன்மற்றும் சிவகவி காளிதாஸ் ஆகியோருடன் ஆலங்குடி கவிஞர் அருள்மொழி கவியரங்கத்தலைவராக இருந்தார்...

எனது சற்றே நீள்கவிதை


சட்டம் பேசு

ஏன் பேச வேண்டும் சட்டம்?
எதற்காக அறிதல் வேண்டும் சட்டம்?

எளியோரை வலியோர் வீழ்த்துவதை
தடுக்கவே சட்டம் பேசு...

உனக்குள்ள உரிமை
உன்நாட்டில் ஒலிக்கவே
சட்டம் பேசு
உன்வாழ்வை நீயே நிர்ணயம்
செய்யவே சட்டம் பேசு..

செப்படி வித்தைகளால்
சுரண்டும் ஆதிக்கச்சக்திகளுக்கு
செருப்படி கொடுக்கவே சட்டம் பேசு

தூக்கிலிடும் போதும்
என் நாட்டை காண்பது
என் உரிமை என முழங்கி
கந்திறந்தே தூக்கில் தொங்கிய
பகத்சிங்கின் வழி நின்று
சட்டம் பேசு.

பெண்ணென்று இகழ்ந்து
நாட்டைப்பிடுங்கிய ஆங்கிலேயரை
எட்டு ஆண்டுகள் மறைந்திருந்து
எட்டும் வரை படைதிரட்டி
விரட்டி ,விரட்டி சிவகங்கையை மீட்ட
வேலுநாச்சியாரின் வழி நின்று
உரிமை பேசு.

ஒன்றுபட்ட இந்தியாவின்
ஒற்றுமை குலைக்கும் தீவிரவாதிகளை
கதறவைத்து கூண்டிலேற்றவே
சட்டம் பேசு.

மொழி காக்க உயிர்தந்த
மொழிப்போர் தியாகிகளின்
வீரத்தில் நின்று சட்டம் பேசு.

உனது நிலம் அழிப்பவனை
உனது நீரைத்தர மறுப்பவனை
உனது சுற்றம் கெடுப்பவனை
தண்டிக்கவே சட்டம் பேசு.

இறையாண்மைக்கு எதிரான
கரையான்களை அழித்தொழிக்கவே
சட்டம் பேசு.

கீழ்வெண்மணி மீண்டும்
தோன்றாதிருக்கவும்
தீண்டாமை வளர்ப்பவர்களை
தீயென எரித்திடவும்
சட்டம் பேசு.

வார்த்தை சாட்டைகளாலும்
உடல் சிதைக்கும் அமிலத்தாலும்
பாலியல் வன்முறையாலும்
பெண்களைச்சிதைப்போரை
மோதி மிதித்திடவே
சட்டம் பேசு.

வாக்கு கொடுத்து
வாக்கு பெற்று வென்றவுடன்
வாக்கு மறந்தவர்களை
வாக்குகளால் தோற்கடிப்போமென்றே
சட்டம் பேசு.

உள்நாட்டு வியாபாரி அழிய
அயல்நாட்டு வணிகத்தை
ஊக்குவிக்கும்நோக்கம்
கேட்டு சட்டம் பேசு.

நீ கட்டும் வரிப்பணம்
நீராக சிதறடிக்கும்
காரணமறிய சட்டம் பேசு.

உயர்நிலையில் மாணவர்கள்
உயிர்விட்டு மாய்வதன்
வேதனை அறிய சட்டம் பேசு.

சகிக்க முடியாத சங்கடகளை
சட்டத்தால் வென்றிடவே
சட்டம் பேசு.

ஊழல் செய்து
லஞ்சம் வாங்கி
மக்களுக்கு பணிசெய்ய
மறுப்பவனை உலகறியச்செய்ய
சட்டம் பேசு.

நம்மை நாமே ஆட்சி செய்ய
அருமையான சட்டம் இயற்றிய
பாரதம் போற்றி புகழும் மாமேதை,
அண்ணல் அம்பேத்காரின்
சட்டம் பேசு.

சாக்குப்பையே பலகையாக்கி
கூனிக்குறுகி கல்வி கற்றவர்.

மாட்டுவண்டியில் ஏற்ற மறுத்தவனை
மனதிற்குள் சகித்தவர்.

அவர் தொட்ட இடத்தையெல்லாம்
தீட்டென்று கழுவியது வீணர் கூட்டம்.

குளம் நிறைய நீரிருக்க
குடிக்க நீரின்றி வாடியவர்.

பசியெடுக்க தேநீர் தர மறுத்தவர்களை
பகிஷ்கரிக்கவே  கல்வி கற்றார்.

யார் அவரை அவமதித்தனரோ?

யார் அவரை தீட்டென்றார்களோ?

யார் அவர் நின்ற இடத்தைக்
கழுவினார்களோ?

யார் அவருக்கு நீரும் தேநீரும்
தரமறுத்தனரோ?

யார் அவர் கல்விபயில்வதைத்
தடுத்தார்களோ?

அவர்களுக்கே சட்டம் இயற்றிய
மாதவப்புதல்வன்...

அவர்கள் வாயாலேயே தன்னை
புகழ வைத்த ஒழுக்க சீலர்.

அவர்களுக்குரிய இடத்தை
அவரே அறியவைத்தார்.

வடநாட்டு பெரியார்.
வடநாட்டு சாக்ரடீஸ்
வடநாட்டு பெர்னாட்ஷா
அண்ணல் அம்பேத்கர்
அருளிய சட்டம் உணர்
சட்டம் உணர வை
சட்டம் பேசு...
--------------------------------------------------------------------------------------------------------------------------






Monday 25 January 2016

உலகத்திருக்குறள் பேரவை-புதுகை

உலகத்திருக்குறள் பேரவை-புதுகை

திருமிகு தி.சு.மலையப்பன் அய்யாவின் முத்து விழா 25.1.16
.

என் இலக்கிய வாழ்வின் அடித்தளம் இங்கு தான் துவங்கியது.....என்னுடன் பணிபுரிந்த சக ஆசிரியரும் புலவருமான ச.தோ.தமிழ்மாறன் அவர்களால் நான் உலக இலக்கியப்பேரவையில் உறுப்பினர் ஆனேன்.

மாதந்தோறும் நடக்கும் கூட்டங்களுக்குச்செல்லும் போது அங்கு வருவோரின் தமிழ்ப்புலமை கண்டு வியந்து நிற்பேன்...மலை முன் தூசியென ...என் நிலை....

ஆண்டுதோறும் திருக்குறள் பேரவை நடத்தும் விழாக்களில் முதன்முறையாக திருக்குறளும் தந்தை பெரியாரும் என்ற கட்டுரை எழுதினேன்..ஆய்வுக்கட்டுரை தொகுப்பு நூலில் அது வெளிவந்த போது மனம் பறவையாய்...சிறகடித்து பறந்தது..

அடுத்த ஆண்டு சிலப்பதிகாரம் பற்றிய ஆய்வுக்கட்டுரை எழுதத்தூண்டினார் தமிழ்மாறன் அய்யா ..முதன்முதலாக மேடை ஏறியது அப்போதுதான் கட்டுரை வாசிப்பதற்காக..தவத்திரு குன்றக்குடி அடிகளாரிடமிருந்து நான் பெற்ற பரிசு.பெற்றபோது எனக்கே நம்பமுடியவில்லை...நானான்னு..இருந்தது.....

தொடர் கூட்டங்கள் கல்லூரிகளில் நடக்கும் போது ,உலகத்திருக்குறள் பேரவையின் மாநிலச் செயலரான திருமிகு தி.சு.மலையப்பன் அய்யா அவர்கள் என்னை ஊக்கப்படுத்தி பேசச்சொல்வார்கள்...

அவர்கள் கொடுத்த ஊக்கமே என்னை நான் கண்டுகொண்டு என்னிலிருந்த கவிஞரை வெளிக்கொணர்ந்தது என்றால் மிகையில்லை....

உலகத்திருக்குறள் பேரவையின் மாநில மாநாடு புதுகையில் நடந்த பொழுது ஓடி ஓடி செய்த பணிகள் மனநிறைவானவையாக...

இன்று அவருக்கு 80 வயது நிறைவடைந்துள்ளதால் அவருக்கு புதுகை திருக்குறள் பேரவையும் ,இளங்கோவடிகள் கழகமும் இணைந்து,புதுகை இலக்கிய ஆர்வலர்களும் இணைந்து நடத்திய முத்து விழா புதுகை நகர்மன்றத்தில் நடைபெற்றது..


அவ்விழாவில் புதுகையின் புகழ் பெற்றவர்களும்,தவத்திரு குன்றக்குடி அடிகளாரும்,திருமிகு அமுதன் அடிகளும்,முன்னாள் அமைச்சர் உபயத்துல்லாவும் கலந்து கொண்டு அய்யாவை சிறப்பித்தனர்....
முத்துவிழா மலர் வெளியிடப்பட்டது..
பெற்றோருக்கு செய்யும் கடமையாக மகளிர் குழு சீர்வரிசை எடுத்து சிறப்பாகக்கொண்டினோம்...இதற்கு முழுமுதற்காரணமாய் திருமிகு சந்திரா ரவீந்திரன் மாநில உலகத்திருக்குறள் பேரவை மகளிர் அணித்தலைவி சிரத்தையுடன் செவ்வனே முடித்தார்கள்....


அய்யாவின் ஆசைப்படி கோவையில் உள்ள திருக்குறளை தலைகீழாக எழுதி திருவள்ளுவரின் உருவப்படத்தை வரைந்துள்ள மாணவி ஹரிப்பிரியாவைப்பாரட்டி சிறப்பு செய்யப்பட்டது..

மனநிறைவான விழாவாக இன்று அய்யாவின் முத்து விழா சிறப்புற்றது...

Sunday 24 January 2016

வீதி கலை இலக்கியக்களம் கூட்டம்-23

வீதி கலை இலக்கியக்களம் -கூட்டம் -23

நாள்:24.01.2016

இடம்:ஆக்ஸ்போர்டு உணவகக்கலைக்கல்லூரி,புதுகை.

படித்ததில் பிடித்தது
கூட்டம் துவங்கும் முன், அனைவரும் ஒன்று சேரும் வரை படித்ததில் பிடித்தது என்ற தலைப்பில் கலந்து கொண்டவர்கள்.

கவிஞர் மீனாட்சி சுந்தரம் -முகில் எழுதியுள்ள ”யூதர்கள்”நூலில் அவரின் சந்தேகங்களை எழுப்பினார்...
திருமிகு தமிழ் ஓவியா
 திருமிகு மீனாட்சிசுந்தரம்
திருமிகு  தமிழ் இளங்கோ

கவிஞர் குருநாதசுந்தரம்-”மகிழ்நன் கவிதைகள்”சிலவற்றை பகிர்ந்து கொண்டார்
                        “சொற்களற்ற பாதையில் கடக்கையில்
                          வழித்துணையாய் வருகின்றன
                         அவளின் விழிகள்”
கவிஞர் வைகறை:”மகிழ்நன் கவிதைகளில் தனக்கு பிடித்த கவிதையைக்கூறினார்.


மாணவக்கவிஞர் நட்ராஜ்”வைரமுத்து எழுதிய ”கள்ளிக்காட்டு இதிகாசம்/கருவாச்சிக்காவியம் ஆகியவைக்குறித்து அவரின் கவிதையாய்
                      “கல்லும் படித்தால்
                        கண்கலங்கும் இல்லையெனில் 
                        அது கல்”

என்றும், மேலும் பூபாலன்,அம்சப்ரியா கவிதைகள் குறித்தும் பேசினார்.

கவிஞர் ரேவதி”முகில் எழுதிய ”ஹிட்லர்,சந்திரபாபு”ஆகிய நூல்கள் குறித்தும்,பாலகுமாரனின் உடையார் நாவல் குறித்தும் பேசினார்.

திருச்சியில் இருந்து வந்து கலந்து கொண்ட வலைப்பதிவர் தமிழ் இளங்கோ ”ஏழைப்படும்பாடு”என்ற சுத்தானந்த பாரதியின் நூல் குறித்து பேசினார்.

மாணவக்கவிஞர் தமிழ் ஓவியா ”இராமையாவின் குடிசை” என்ற ஆவணப்படம் குறித்து பேசினார்.

கவிஞர் கீதா ,கார்த்திகைப்பாண்டியனின் விகடன் பரிசு பெற்ற மொழிபெயர்ப்பு நூல் ”எருது”குறித்து பேசினார்.

கூட்ட நிகழ்வுகள்

வரவேற்புரை:அனைவரையும் இம்மாத கூட்ட அமைப்பாளரான கீதா கவிதை நடையில் வரவேற்றார்.

அஞ்சலி
அண்மையில் மறைந்த மக்கள் கலை இலக்கிய இசையமைப்பாளரான கே.ஏ.குணசேகரன் அவர்களுக்கு வீதி கூட்டம் சார்பாக அஞ்சலி செலுத்தப்பட்டது.

பாடல்:கவிஞர் .சோலச்சி ,மானமுள்ள தமிழினமே/மதுவால் அழிந்தது தமிழகமே என்ற பாடலைப்பாடினார்.

தலைமை:திருமிகு குருநாதசுந்தரம் தமிழாசிரியர்

கவிதை ஒன்றினை வாசித்து தனது உரையைத்துவங்கினார்...வீதி கூட்டம் துவங்கியதை நினைவு கூர்ந்து ,வீதி சிறப்பான பாதையில் நடைபோடுகின்றது என மகிழ்ந்தார்.

கவிதை
கவிஞர் நிலாபாரதி

     வீணா போன வேட்டி என்ற தலைப்பில் சாட்டையடி வார்த்தைகளால் சுழட்டி தாக்கியது அருமை.

             ”கட்டிக்காப்போமெனும் பெயரில்
              உருவிக்கொண்டு[று] விடாதீர்கள்
           ஆதிமனிதனின் ஆடையான கோவனத்தை” 
என வேட்டிகள் தினம் கொண்டாடுவோரின் அக்கறைச்சாடினார்..

”சடுகுடு” என்ற தலைப்பில்

டாஸ்மார்க் தமிழகத்தின்
அக்மார்க்”

  என தேர்தல் நிகழ்வுகளை படம்பிடித்துக்காட்டினார்..
அனைவரும் கவிதையின் வீரியத்தைப்பாராட்டினர்.

கவிஞர் மீராசெல்வகுமார்.
புகை படிந்த போதி மரங்கள் என்ற கவிதையையும்,கவிதை என்றால் என்ன சிறந்த கவிதை என்ன செய்யும் என்ற கர்ப்பம் யாதெனில் என்ற கவிதையையும் வாசித்து அனைவர் மனதையும் கவிதையால் கட்டிப்போட்டார்.

மாணவ அறிமுகத்தில் சாம்ராஜ் தனது அஹிம்சை கவிதையை சிறப்பாக வாசித்தார்.

சிறுகதை -புதுகை செல்வா

தலைப்பிடப்படாத கதை யென சென்னை வெள்ளத்தில் கண்ட நிகழ்வுகள் மனதில் காட்சிப்படுத்தும் வரிகளால் தனது சிறுகதையை வாசித்த விதம் நன்று.கட்டுமானத்தொழிலாளர்களின் சொற்களைப்பயன்படுத்தியது கதைக்கு வலு சேர்த்தது.

நூல் அறிமுகம்:கவிஞர் துரைக்குமரன்
           
                        ராய் மார்க்சம் எழுதி தமிழில் சிரில் அலெக்ஸ் மொழி பெயர்த்த  ” உப்பு வேலி “என்ற நூலின் சிறப்பைக்கூறிய போது ,உப்பு அரசியலைப்பற்றி புரிந்து கொள்ள முடிந்தது...சுதந்திரப்போராட்டத்திற்கும்,உப்புக்காய்ச்சும் போராட்டமான தண்டியாத்திரைக்கும் உள்ள தொடர்பை அழகாக எடுத்துரைத்தவிதம் சிறப்பு.நூலை படிக்க வேண்டிய ஆவலைத்தூண்டியது.

புதியவர்கள் அறிமுகம்.


கூட்டத்திற்கு புதிதாக வந்தவர்கள் தகளை அறிமுகம் செய்து கொண்டனர்.
திரைப்படப்பாடலாசிரியர் சங்கத்துணைத்தலைவர் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தார்

அனுபவம்:
மனித வள பயிற்றுநர்:திருமிகு கிருஷ்ணவரதராஜன் 

தனது வாழ்வில்,, தான் தலைநிமிர்ந்து நிற்கும் படி, வெற்றி பெற்ற அனுபவங்களைப்பகிர்ந்து கொண்டார். நம்மீது நாம் கொண்ட உயர்வான எண்ணங்களே நம்மை உயர்வடைய வைக்கும்..என்று தான் அடைந்த வெற்றியை நகைச்சுவையுடன் கலகலப்பான பேச்சினால் அனைவர் மனதையும் கவர்ந்தார் .”வெற்றி தரும் நினைவாற்றல் பயிற்சி”என 50க்கும் மேற்பட்ட நிகழ்வுகளை  மாணவர்களுக்கு அளித்துள்ளார்.தற்போது இவரும் இவரது மனைவி அனு வரதராஜனும் இணைந்து ,அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்துக்கொண்டுள்ளனர்.அவரது பணி சிறக்க அனைவரும் வாழ்த்துகளுடன் பாராட்டினர்.

இலக்கியவாதி அறிமுகம்.



ஆங்கில ஆசிரியர் கஸ்தூரிரங்கன் ஆங்கில இலக்கியவாதியான ”தாமஸ்ஹார்டி”யை அறிமுகம் செய்த விதம் அருமை...அவரின் துன்பியல் நாவல்களுக்கான காரணத்தை ஆய்ந்து கூறினார்.அறிவியல் சார்ந்து எழுதும் படைப்பாளிகளான சந்தோஷ் நாராயணன்,லெக்‌ஷ்மிசரவணக்குமார் ஆகியோரின் எழுத்துகளைப்பரிந்துரை செய்தார்.

சிறப்பு விருந்தினர் அறிமுகம்:கவிஞர் நா.முத்துநிலவன்


சிறப்பு விருந்தினரான திருமிகு வெங்கட்நாகராஜ் அவர்களைப்பற்றியும் அவர்களின் வலைத்தளம் குறித்தும் அறிமுகம் செய்ததுடன்,
“ மனுசங்கடா நாங்க மனுசங்கடா” என்றமறைந்தகே.ஏ. குணசேகரன் அவர்கள் இசையமைத்த பாடலைப்பாடினார்.

சிறப்பு விருந்தினர்:திருமிகு வெங்கட்நாகராஜ் தமிழ்வலைப்பதிவர் .தில்லி



venkatnagaraj..blogspotcom  என்ற வலைத்தளத்தை 2009 ஆம் ஆண்டு முதல் எழுதிவருகின்றார்.இவரது வலைத்தளம் கண்கவரும் வண்ணப்படங்களுடன் வட நாட்டு மக்களின் வாழ்வியலை நமக்கு அறிமுகம் செய்கின்றது...

20 வயதில் மத்திய பணியின் காரணமாக தலைநகர் தில்லி சென்றதாகவும்,இதுவரை 16  மாநிலங்களுக்கு சென்றுள்ளதாகவும்,மேலடாக்,அருணாச்சலப்பிரதேசத்தின் தவாங் நகரைப்பற்றியும்,பயணங்கள் புத்துணர்வு அளிப்பதையும்,பயணங்களில் தாம் பெற்ற அனுபவங்களையும் அழகாக எடுத்துரைத்தார்.மலை வாழ் மக்களுடனான  அவரது அனுபவங்கள் வியப்பையும் ,ஆச்சர்யத்தையும் அளித்தன.இமாசலப்பிரதேச நகரில் அதிகாலை 5 மணிக்கு அவ்வூரின் இருப்பை அறிய முயன்ற நிலையில், யாருமற்ற மலையில் அதிகாலையில் டீக்குடிக்க வருவோருக்காக காத்திருந்த டீக்கடைக்காரரைப் பற்றி கூறிய போது நாங்களும் அவருடன் பயணம் செய்த உணர்வை உண்டாக்கியது..வலைப்பதிவில் என்ன எழுதலாம் என்பதையும் எளிமையாக எடுத்துரைத்தார்..இவரது வருகையால் வீதிக்கூட்டம் பெருமை கொண்டது..


இயற்கை உணவு:கவிஞர் நீலா ஆலங்குடியில் துவங்கி உள்ள இயற்கை உணவகத்திலிருந்து காய்கறி சூப்,நவதானிய சுண்டல்,வாழைப்பூ வடை,வரகரசி பாயாசம் ஆகிய  இயற்கை உணவுகளை முத்து நிலவன் அண்ணா வரவழைத்து ....அனைவரின் வயிற்றையும் நிறைத்து விட்டார்...

ஆற்றோட்டமென கூட்ட நிகழ்வுகள்  அனைவர் மனதையும் நிறைத்தன என்பதை யாராலும் மறுக்கமுடியாது.
நன்றியுரை :கவிஞர் வைகறை
விழாவிற்கு வந்து சிறப்பித்த அனைவருக்கும் ,தனது வார்த்தை மழையால் நன்றி கூறி நனைத்து மகிழ்ந்தார்....

வீதியின் 23 ஆவது கூட்டம் நிறைவுற்றது...

கூட்ட அமைப்பு :கவிஞர் மு.கீதா,கவிஞர் வைகறை.














Monday 18 January 2016

வீதி கலை இலக்கியக் களம்-22

வீதி கலை இலக்கியக் களம்-22

நாள்:27.12.15

இடம்:ஆக்ஸ்போர்டு உணவகக்கலைக்கல்லூரி,புதுகை

தலைமை :கவிஞர் நா.முத்துநிலவன்

சிறப்பு அழைப்பாளர்:கவிஞர் .இரா .தனிக்கொடி
[கொம்பன்,தாரைத்தப்பட்டை திரைப்பட பாடலாசிரியர்]

சிறுகதை:கவிஞர் மூட்டாம்பட்டி இராஜூ

கவிதை:கவிஞர்கள் மீரா.செல்வகுமார்,பவல்ராஜ்,ரேவதி.

ஓவியக்கட்டுரை:திருமிகு நா. சுப்ரமணியன்.

அமைப்பாளர்கள்:திருமிகு பொ.கருப்பையா மற்றும் நாகநாதன்.


நிகழ்வுகள்

*வரவேற்பு- கவிஞர் பொன் .கருப்பையா அவர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்றார்.
*அஞ்சலி-வெள்ளத்தில் உயிரிழந்தோருக்காக ஒருநிமிடம் அஞ்சலி வீதி அமைப்பின் சார்பில் செலுத்தப்பட்டது.






*தலைமை உரை-கவிஞர் நா,முத்துநிலவன் அவர்கள் தனது உரையில் இவ்வாண்டின் டிசம்பர் மாதம் பல உணர்வுகளை உள்ளடக்கியதாக ,மகிழ்வு ,சோகம் ,வேதனை அத்தனையும் கலந்த மாதமாக உள்ளது.

கவிஞர் இரா,தனிக்கொடியின் தாரைத்தப்பட்டை திரைப்படப்பாடல் வெளியீடு நடந்துள்ளது.

புதுகையில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் திறக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் மனநிலையைக்கூறும் பசங்க-2 படம் வெளிவந்துள்ளது.

வெண்மணியின் துயரங்களை டிசம்பர் 25 நினைவூட்டியது..

கரைபுரண்ட வெள்ளம்....மனிதநேயத்தை வெளிக்கொணர்ந்தது..என தனது நெகிழ்வான நினைவலைகளாக தலைமைஉரையை நிகழ்த்தினார்.

கவிதை-

கவிஞர் மீரா செல்வகுமார் ”நல்லா  வருவீங்க”என்ற சென்னை வெள்ளத்திற்கு பிறகான மக்களின் திருந்தாத நிலையை எடுத்துக்காட்டியது..,இரண்டாவது கவிதை  சென்னை -புதுகை பேருந்து பயணத்தின் காட்சிகளை கண்முன் நிறுத்தியது.
கவிஞர் பவல்ராஜ் அவர்கள் தனது வழக்கமான நகைச்சுவையான பாணியில் கவிதைகளைத்தந்தார்.
’மழைக்கு ஒதுங்க/பயமாய் இருக்கிறது/பள்ளிக்கூடம் ”என்ற கவிதை கட்டிடம் கட்டியவர்களின் ஊழலை உணர்த்தியது.

கவிஞர் ரேவதி ”பெண்சாதி படும் படும் சேதி “என்ற தலைப்பில் குடிகாரக்கணவனின் மனைவியின் வேதனைகளைக்கூறினார்.
”தொலைந்தது போதும்”என்ற கவிதை   நாம் தொலைத்த இளமை அனுபவகளை நினைவூட்டியது...அருமை.

சிறுகதை-

”பூனைத்தலை”-மூட்டாம்பட்டி ராஜு
 

கழிவகற்றும் பணி செய்பவர்களின் அவலத்தையும்,மக்களின் அக்கறையின்மையையும் தனக்கே உரிய பாணியில் படைத்திருந்தார்..பாலிதீன் பை அவருக்கு நசுங்கிய பூனைத்தலையாக காட்சியளித்தது நல்ல கற்பனை..

ஓவியக்கட்டுரை



 ஓவியர் சுப்ரமணியன் அவர்கள் குழந்தைகள் கிறுக்குவதை தடை செய்யாதீர்கள்.அது அவர்களின் ஓவியம்...உங்களுக்கு வேண்டுமானால் புரியாமல் இருக்கலாம்..எனத்துவங்கி. சித்தன்ன வாசலின் பெருமைகளை எடுத்துக்கூறி வியக்க வைத்தார்.ஓவியங்களின் தன்மைகளை விரிவாக விளக்கியதுடன் அவரது அழகான அன்பைக்காட்டும் ஓவியமொன்றை காட்சிப்படுத்திய போது வீதி கலை இலக்கியக்களம் என்பது இன்றுதான் நிரூபித்துள்ளது...என்றார் கவிஞர் நா.முத்து நிலவன்.

வெள்ளநிவாரணப்பணி அனுபவம்



விதைக்Kalam-குழுவினர் யு.கே.கார்த்திஸ்ரீமலையப்பன்,கஸ்தூரிரங்கன்,செல்வக்குமார் ஆகியோர் கடலூருக்கு வெள்ள நிவாரணப்பணிகளுக்காக ரூ 4,00,000 மதிப்புள்ள பொருட்களை எடுத்துச்சென்று நேரில் கொடுத்து வந்த போது ஏற்பட்ட சிரமங்களையும்,மக்களின் உணர்வுகளையும் எடுத்துக்கூறினர்.

சிறப்பு அழைப்பாளர் உரை



கவிஞர் தனிக்கொடி அவர்கள் தனது உரையில் வீதிகள் இணையும் இடம் சதுக்கம் என்பர் அதுபோல் இலக்கியவாதிகள் இணையும் இடமாக வீதி செயல்படுவது சிறப்பு...கவிதைகள்,சிறுகதை,கட்டுரைகளுக்கு ஆரோக்கியமான விமர்சனங்கள் கூறப்படுவது அவர்களை மேலும் எழுதத்தூண்டும் வகையில் உள்ளது.

பெண்கள் எழுதவேண்டும்..பெண்ணின் இருப்பு இங்கே ஆணைச்சார்ந்தே உள்ளது...பெண்களின் கைகளில் யுகாந்திரமாக சோற்றுமணமே வீசிக்கொண்டுள்ளது என்ற அம்பையின் வார்த்தைகளை நினைவுகூர்ந்தார்.ஆண்கள் வெளியே சென்றவுடன் அவர்கள் அவர்களாக வாழ்கிறார்கள்..

ஆதவன் தீட்சண்யாவின் வீட்டுக்குள்ளே ஒரு சேரி சமையலறை என்ற வார்த்தைகளைக்கூறி இன்றும்அது ஆண்கள் தீண்டப்படாத இடமாக கருதப்படுவதை  எடுத்துரைத்தார்.
தாய்மை என்பதே அடிமைத்தனத்தின் உச்சம்..இதனால் ஆண்கள் தங்களது பொறுப்புகளை பெண்கள் மீது சுமத்திவிடுகிறார்கள்...என்றார்.....
நன்றியுரை
கவிஞர் வைகறை நன்றி கூற வீதியின் 22 ஆவது கூட்டம் மிகச்சிறப்புடன் முடிந்தது..




Thursday 14 January 2016

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்

அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துகள்
--------------------------------------------------------------------

பொங்கலே வா..
தேர்தல் வரப்போகின்றது
தேவையென்ன கூறு..

நிலம் மட்டும் கேட்காதே
ரியல் எஸ்டேட் ஆகிவிட்டது

நீர் வேண்டுமென்காதே
மூழ்கிய சென்னை கதறுகின்றது...

விவசாயி மகனெல்லாம்
அவமானமென நிலம் தொட மறுக்கின்றார்..

மாடு பிடிப்பதை விட
நாடு பிடிப்பது எளிதாய்...

தடை ,அனுமதி,தடையென
மயங்கி நிற்கிறது
மத்திய அரசு..

குக்கரில் வெந்திட 
மனமுவந்தே வா

பொங்கலோ பொங்கலென
பொங்கலே வா வா..

paradesi@newyark....திருமிகு ஆல்ஃபின் அவர்களுடன் ஒரு சந்திப்பு

வலைப்பூ நண்பர் திருமிகு ஆல்ஃபி அவர்களுடனான சந்திப்பு

”ஏழைக்கு கடன் கொடுத்தவன் இறைவனுக்கு கடன் கொடுக்கிறான்” -பைபிள்

என்ற பைபிளின் வாக்கியத்தை மனதார ஏற்று அதன் படி தன்குடும்பத்திற்கு தேவைக்கு போக மீதி உள்ள வருமானத்தை ஏழைகளுக்காக செலவிடுகிறேன் என்ற ,அமெரிக்காவில் தலைசிறந்த நிறுவனத்தில் துணைத்தலைவராகப்பணியாற்றும் வலைப்பூ நண்பர் திருமிகுஆல்ஃபி அவர்கள், நேற்று புதுகையில் உள்ள வலைப்பூ நண்பர்களைக்காண ,தனது நண்பர் தமிழ்பேராசிரியர் பிரபாகர் அவர்களுடன் மாலை 6 மணியளவில் ஆக்ஸ்போர்டு உணவகக்கலைக்கல்லூரிக்கு வந்திருந்தார்..

இச்சந்திப்பிற்கு புதுகை கணினி தமிழ்ச்சங்க ஒருங்கிணைப்பாளர் கவிஞர் நா,முத்துநிலவன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்...
கணினி தமிழ்ச்சங்க உறுப்பினர்களுடன், மாணவர்களும் அவரைக்காணும் ஆவலில் வந்திருந்தனர்..

தமிழ் வழியில் படித்ததால் ஆங்கிலம் பேச முடியலன்னு சொன்னா நான் ஒத்துக்கவே மாட்டேன்...இதற்கு உதாரணம் நான் தான்..தமிழ்வழியில் படித்து ஆங்கில இலக்கியத்தை கல்லூரியில் தேர்வு செய்து...ஆங்கிலத்தில் பேச இவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளே இன்று இவர் பலருக்கு அமெரிக்காவில் பணி செய்ய, தேர்வு செய்யும் தகுதியைக்கொடுத்து தலைவராக்கி உள்ளது...

நான் சென்னையிலிருந்து யாருடன் வந்தேன் தெரியுமா என்ற போது யாராக இருக்கும் என்று யோசித்த போது அவரே திரு சகாயம் அவர்களுடன் வந்தேன் என்ற போது இவரின் நேர்மை வெளிச்சமாகியது..

கூடலூருக்கு அருகே உள்ள மலைக்கிராமத்தை தேர்வு செய்து அங்குள்ள மலைவாழ் குழந்தைகளுக்கு தேவையான அனைத்து செலவுகளையும் செய்து படிக்க வைக்கின்றார்...இந்த பொங்கலை அவர்களுடன் கொண்டாட இப்போது சென்று கொண்டுள்ளார்..

எளிமையும் ,நேர்மையும் ,ஏழைகளுக்கு இரகும் குணமும் கொண்ட இவரது பண்பு அனைவரையும் வியக்க வைத்தது..

மாணவர்களுக்கு அயல் நாட்டில் பணி பெற தேவையான ஆலோசனைகளையும் வழங்கினார்..

முயற்சி இருந்தால் விண்ணையும் தொடலாம் என்பதற்கு இவரே உதாரணம்...

மதுரை .அமெரிக்கன் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக இருக்கும் இவரது தோழர் திருமிகு பிராபகர் அவர்களின் பேச்சும் பயனுள்ளதாக அமைந்தது







Monday 11 January 2016

மாறுதலாய்.....ஒரு கவிதை...

மாறுதலாய்.....ஒரு கவிதை...
=========================
வருடலுக்காய் ஏங்கி

சிலிர்ப்பை நாடிய தவத்திற்கு..

பார்வையாலோ,

வருகையாலோ,

இதமான தொடுதலாலோ...

யாதுமற்ற உன் தடத்தினாலோ....

சீண்டி பார்க்குமுனது வாசத்தினாலோ..

ஏதோ ஒன்றாய்...

நிறைகிறாய் என்னுள்...நீ

Saturday 9 January 2016

சமத்துவப்பொங்கல் விழா-2016

சமத்துவப்பொங்கல் விழா-

அசோக் நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி புதுக்கோட்டை..

இன்று9.1.16 சனிக்கிழமை புதுகையில் உள்ள அசோக்நகர் நடுநிலைப்பள்ளியில் சமத்துவப்பொங்கல் கொண்டாடுகின்றோம் நீங்கள் அவசியம் வந்து கலந்து கொள்ள வேண்டும் என புதுகை செல்வா சார் அழைத்தார்..

குழந்தைகளோடு பொங்கல் கொண்டாட கசக்குமா என்ன?
பள்ளிக்கு சென்றதும்..அங்குள்ள தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் வரவேற்று ,சுறுசுறுப்பாக பொங்கல் கொண்டாட ஆயத்தம் செய்து கொண்டிருந்தனர்.

பள்ளி இயற்கை சூழ ,தூய்மையாக இருந்தது...விழும் குப்பைகளை தலைமையாசிரியரே எடுத்து தூயமை செய்தார்...முன் மாதிரியான ஆசிரியர் என்பதற்கு இவரே உதாரணம்.


அமைதியாக சின்னக்குழந்தைகள் ஒருபக்கம் அமர்ந்திருக்க...பெரிய பையன்களும் சிறுமிகளும் அவர்கள் வீட்டு விழா போல வேலைப்பார்த்துக்கொண்டிருந்தனர்..


பொங்கல் செய்ய தேவையான பொருட்களை குழந்தைகளே அவரவர் வீட்டில் இருந்து கொண்டு வந்ததாகவும் ...பத்தாதற்கு ஆசிரியர்கள் வாங்கி செய்தோம் என்ற போது...மனம் சொல்ல முடியாத மனநிலையில்...

அறிவியல் ஆசிரியர் கரும்புகளை முக்கோணமாக வைத்துக்கட்டி பொங்கல் பாத்திரத்திற்கு மேல் அழகு செய்தார்..

அவர் குழந்தைகளோடு சேர்ந்து கும்மி பாட்டு பாட குழந்தைகள் கும்மி கொட்டி வட்டமிட பள்ளி ஆசிரியர்களுடனும் குழந்தைகளோடும், நானும் கும்மி கொட்டி வட்டமிட..அடடா

சமத்துவப்பொங்கல் என்பது இதுதானோ...ஆசிரியர்கள் இஸ்லாம்,கிறித்தவ,இந்து சமயம் என மூன்று மதங்களைச்சேர்ந்த ஆசிரியர்கள் ஒன்றாய் அசோக் நகர் பள்ளியில்..

இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் இவ்வாண்டு தமிழக அரசின் நல்லாசிரியர் விருதைப்பெற்றுள்ளார்...ஒற்றுமையாக அனைத்து ஆசிரியர்களும் இணைந்து பணியாற்றிய விதம் அருமையாக இருந்தது,,




சர்க்கரைப்பொங்கல்,வெண்பொங்கல்,கதம்ப கூட்டு என தயார் செய்து படையலிட்டனர்.இவ்விழாவில் அப்பகுதி கவுன்சிலர்,சகோதரர் பஷீர் அலி,பெற்றோர்கள்,செல்வா சாரின் மனைவியும் மகளும்...கலந்து கொண்டு விழாவைச்சிறப்பித்தனர்..

குழந்தைகள் பொங்கலை ரசித்து உண்டனர்..எப்படிப்பா இருக்கு என்றேன்...ரொம்ப சூப்பரா இருக்கு டீச்சர் என்றனர்..

இவ்வாண்டு பொங்கல் விழாவை குழந்தைகளுடன் கொண்டாடியது மறக்க முடியாத ஒன்று...
வாழ்த்துகள் அப்பள்ளி ஆசிரியர்களுக்கும்.,செல்வா சாருக்கும்..