World Tamil Blog Aggregator Thendral: March 2015

Saturday 28 March 2015

ஆரோவில் மழலையர்ப்பள்ளியின் ஆண்டு விழா




Aeroville kids -international play school.

இரண்டாம் ஆண்டு ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா இன்று புதுகை நகர்மன்றத்தில் காலை 10.30 மணி அளவில் துவங்கியது.சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர்.குட்டீஸ்கள பார்ப்பது வரமே...சரியென்றேன்...என்னுடன் ரமா.ராமநாதன் சாரும்,பாஸ்டின் சாரும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர்.
பள்ளியின் முதல்வரான வசந்தா அவர்கள் பம்பரமாக சுழன்று விழாப்பணிகளைச் சுறுசுறுப்பாகச் செய்தார்.குழந்தைகளுக்குச் சிறப்பாக ஒப்பனை செய்து இருந்தனர்.அனைத்து ஆசிரியர்களும் குழந்தைகளோடு குழந்தையாக இயங்கினார்கள்.
குழந்தைகளே வரவேற்புரை,நன்றியுரை,அறிமுகம் செய்தல்  ஆகியவற்றைச் செய்தது மிகச்சிறப்பாக இருந்தது.மழலை மொழியில் அவர்கள் பேச மறந்து போனதை எடுத்துக்கொடுத்தார் முதல்வர்.

pre k.g குழந்தைகள் கண்ணன் ராதை வேடமணிந்து மேடைக்கு வந்தனர்...சிறு குழந்தைகள் அச்சத்தில் அழுது கொண்டே இருந்தனர்.அழுத பிள்ளையை மேடைக்கு நடுவே விட அவன் மீண்டும் ஓட ,ஒரு குழந்தை கால்களை உதைத்து கொண்டு அழ பெற்றோர் மேடையில் ஏற்ற ஆசிரியர் பிடிக்க அவன் கீழே இறங்குவதிலேயே குறியாய் இருந்து இறங்கிவிட்டான்.ஒரு ஆட்டிஸக்குழந்தை கீழே அமர்ந்து கொண்டு புல்லாங்குழலை வைத்து விளையாடிக்கொண்டிருந்தது.பத்து ஜோடிகளில் ஒரு ராதை மட்டும் ஆடி நடனத்தை முடித்தாள்...குழந்தைகள் மேடையில் நிற்பதையே பெருமையாகக் கருதி பெற்றோர்கள் தங்களது செல்லில் படம் பிடித்துக்கொண்டிருந்தனர்.

அடுத்து வந்த குதிரைக்குட்டி ஆட்டத்தில் குதிரையைத் தவிர அனைத்து குழந்தைகளும் ஆடினர்.ஒருவன் தனது அப்பாவையே பார்க்க அவர் ஆடு என்க மாட்டேனென்று தலையசைத்து சிரித்துக்கொண்டே நடனத்தை முடித்தான்.

l.k.g குழந்தைகளின் ஆண்டாள் நடனம் ஒரு சிறு கதைநடனமாக இருந்தது.சிவன் பார்வதி,பிரம்மா சரஸ்வதி இருபுறமும் நிற்க நடுவே சயனநிலையில் திருமாலும் திருமகளும்..இவர்களுக்கு பூச்சொரிந்து கொண்டு இருவர் இருவராக 6 குழந்தைகள்.பிள்ளையார் உட்கார்ந்து கால்களை உதறிக்கொண்டு முகமூடி அணியமாட்டேனென அடம் பிடித்து ஓடி வந்து விட்டார்.ஒரு வேளை தனக்கு மட்டும் ஜோடி கொடுக்கலன்னு கோவம் போல. பார்வதி மேல் பூவைத்தூவிக்கொண்டிருந்த அய்யரை முறைத்துக்கொண்டேயிருந்தாள்...சிவன் எனக்கென்ன என கவலையின்றி நின்றுகொண்டு இருந்தார்...சிறு குழந்தைகள் அசைந்தாலே கவிதைதானே....அழகாக இருந்தது...இவர்களை எப்படித்தான் ஆடப்பழக்கினார்கள் என்பது புதிர்தான்.

u.k.g குழந்தைகளின் அறுவடை குறித்த நாட்டுப்புறப்பாட்டு நடனம்  மிக அருமையாக இருந்தது...வயலில் ஏர் உழுவதிலிருந்து அறுவடை செய்வது வரை நடனத்திலேயே காட்டினர்...மாடுகளாக மாணவர்களே நடித்தது அருமை.

இறுதியாக பட்டமளிப்பு விழா....இப்படி நான் பார்ப்பது முதல் முறை என்பதால் எனக்கு வியப்பாக இருந்தது....வித்தியாசம் காட்ட எப்படி எல்லாம் முனைகின்றார்கள்....ஏழு பட்டங்கள் பெற்றிருந்தும் பட்டமளிப்பு விழாவிற்குச் சென்றிராத நான் இன்று இந்தக்குழந்தைகளின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டது புதிய அனுபவமாக இருந்தது.அழகாக உடையணிந்து பெற்றோர் பெருமிதத்துடன் நிற்க விழா சிறப்புடன் முடிந்தது.
குழந்தைகளைக்கையாளுவதென்பது ஒரு கலையே , இப்பள்ளியின் ஆசிரியர் குழந்தைகளை கோபிக்காமல் இயங்கிய விதம் மிகச்சிறப்பு...

வாழ்த்துகள் ஆசிரியர்களுக்கும் குழந்தைகட்கும்....

Thursday 26 March 2015

வகுப்பறை சிரிப்பு

இன்று பள்ளியில் காலை முதல் படித்துக்கொண்டேயிருந்ததால் மாறுதலுக்கு நாடகம் நடிக்கலாமா என்றதும் குழந்தைகள் ஆர்வமுடன் குழுமினார்கள் .

முதலில் திருவிளையாடல் நாடகமாம்.பாண்டீஸ்வரி சிவனாகவும் சஃப்ரின் பானு பார்வதியாகவும் அமர குடுகுடுவென திருச்செல்வி மண்டிபோட்டு அமர்ந்தாள் இது யாரு என கேட்க அவள் தான் நந்தியாம்.முருகனுக்கு ஒல்லியான அருந்ததியும்,பிள்ளையாருக்கு சற்று பூசிய ஷெரின் பானுவும் உயிர் குடுத்தார்கள்.டஸ்டர் கட்டையை தூக்கி கொண்டாள் ஒருத்தி .ஏன் என்றதற்கு நாரதர் கையில் வைத்திருக்கும் கட்டையாம்.மயில் தோகை ஒன்றை ஒருத்தியின் தலையில் சூடி அவள்தான் முருகனின் வாகனமாம்.எனக்கு மாம்பழம் கொடுக்கலல்லன்னு கோச்சுகிட்டு முருகன் சுத்த போக பிள்ளையார் சுத்தி சுத்தி வசனத்த மறக்க பார்வதி மெதுவா வசனத்த சொல்லிக்கொடுக்க திடீர்னு நாடகத்துல ஔவைப்பாட்டி வந்து சுட்டப்பழம் வேணுமா இல்லாக்காட்டி சுடாத பழம் வேணுமான்னு கேட்க தலையில் அடித்துக்கொண்டார் நாரத டைரக்டர்.

இப்படியாக மூன்று நாடகம் முடிந்து நான்காவது நாடகத்தில் நடிக்க நடித்த அனைவரும் அமர்ந்து கொண்டு நடிக்காத குழந்தைகளை தள்ளினர்.ஏன்மா என்றதற்கு நாங்களே நடிச்சிட்டு இருக்கோம்ல அவங்களும் நடிக்கட்டும்னு என்றபோது அவர்களின் பெருந்தன்மையை எண்ணி மகிழ்வாயிருந்தது.மன வளர்ச்சி குறைவான பவித்ராவிற்கு ஒவ்வொரு வார்த்தையாக மனம் கோணாமல் சொல்ல வைத்து நடிக்க வைத்தார்கள்...திடீர்னு எந்தவித முன் தயாரிப்பும் இன்றி நடத்தப்பட்ட நாடகங்கள்...

வகுப்பு கலகலன்னு இருந்தது..யாருதான் இந்த பாடப்புத்தகத்த கண்டுபுடிச்சாங்களோன்னு இருக்கு...

Wednesday 25 March 2015

கிணறு



நீர் தளும்பி வழியும்
கிணற்றருகே கட்டியிருந்த கோழியொன்று
அரிசி போட்டு ஆசையாய்
 கொஞ்சிய சிந்நாட்களில்
கொதிக்கும் அகன்றச்செப்பு குவளையில்
 முங்கி கழுத்தறு பட்டு கதறியதை
 செப்புத்தவளையும் வரண்ட கிணறும்
 உணர்த்தியபடி.....

சினிமாவிற்கு போக நிபந்தனையாய்
குளியலறை தொட்டி நிறைய
இழுத்து இழுத்து வேகமாய் கொட்டியதை
மீண்டும் ஊற்றமாட்டாயா என்பது போல்...
மீள்பதிவு செய்யச்சொல்லியபடி...

கிணற்றருகே துவைக்கும் கல்லே
என் கனவுகளைச் சுமந்து
ரகசியமாய் நீருக்குச்சொல்லும்..
என் சோகங்களை சுமந்து.
கண்ணீரில் நிரம்பித்தளும்புமது...

சற்றே இடறினாலும்
எனை விழுங்கும்  கட்டையிருக்கையில்
பயமின்றி அமர்கையில்
துணைக்கு பட்டுக்கோட்டையாரும்
ராஜேஷ்குமாரும்  ரமணிச்சந்திரனும்...
எப்போதும் என்னுடன்...

அடுத்த தெரு கலாக்கா
ஆசைப்பட்டவனை மறக்கவியலாது
பொத்தென்று குதித்து
மிதந்த கதையை அச்சத்துடன்
கூறி கிரீச்சிடும்....
நீரிலாடும் கலாக்காவின்
நிழல்...பயமுறுத்தியபடி

கற்பனைகள் உடைகையில்
கனவுகள் சிதறுகையில்
அம்மாவின் வசையால்
ஆதங்கத்துடன் விம்முகையில்
ஆறுதலளிக்கும் தோழியெனப்..
 பகிர்கையில் வியக்கிறாள்
பாட்டிலில் பார்த்து ரசிப்பவள்...

 வாழ்வின் ரகசியங்களை
ஆழ்மனதில் தேக்கி பொங்கி வழிந்த
நீரையெல்லாம் தொலைத்து
சுவடற்று காற்றில் கலந்தது
புதுவீடாய் எழும்பி...

Tuesday 24 March 2015

தேர்வு

பொதுத்தேர்வு
பொறுப்பில்லாம தாமதமா வர்ற
பொங்கியசீற்றத்திற்கு
கலங்கியக்குரலில் பதற்றமாய்
அப்பா விபத்தால ஆஸ்பத்திரியில
அவசரமா சமைச்சிட்டு
வாரதுக்குள்ள முத பஸ்ஸு
போயிடுச்சு மன்னிச்சுடுங்க
அழுதவளிடம் கேட்க வேணும்
மன்னிப்பு
அதிகாரம்

Sunday 22 March 2015

கவியரங்கக்கவிதை 21.30.15 விழிப்போமா?


கவிதைக்கு கரு தேடி
கண்ணயர்ந்த காலம்

வான்வெளியில் மிதந்து
வான் புகழ் தமிழகம் நோக்க

தாங்குமோ தமிழகம்
தரைதட்டிப்போகுமோ பயிர்கள்
தமிழகத்தின் நெற்களஞ்சியப்
பசுமை வயல்களில் இனி
பாயுமோ ஆறென
மீத்தேன் உருளைகள்

காய்ந்து கருகுமினிக்
காயும் கனியும்
நாளும் நாளும்.

நிலத்தடி நீரை உறிஞ்சி
நிலக்கரி மீதில் படர்ந்த
மீத்தேன் வாயுவை உறிஞ்ச
அரசின் துணையுடன்
அமைதியாய் நுழையுது
அரியானாவின் நிறுவனமொன்று

காவிரி மறந்த நிலமாய்
நீரற்று வெடித்து விரிய
விலைநிலமானது விளைநிலம்

நிலக்கரித்தோண்டவே
கள்ளத்தனமாய் நுழையுது
காலனாய்.....

உணவுக்கொடை தந்தோர்
உண்ண வயல் எலியின்றி
சோமாலியா நாடென
உருமாறிடுமோ தமிழகம்.

தேனியில் கூடும் தேனிக்களின்
தேனிசை நாதமற்று இனி
நியுட்ரினோவின் சத்தமே
நித்தம் நித்தம் ஒலிக்குமோ..

மலையைக் குடைந்து
சுரங்கம்  அமைத்து
நியுட்ரினோவின் நிறை காண
பிரபஞ்சத்தின் தோற்றமறிய
பித்தேப்பிடித்து அலையுது
மூளைப்பெருத்த ஞானிக்கூட்டம்

மனிதன் வாழும் நிலமழித்து
மந்தி மான் வாழும் வனமழித்து
ஆர்ப்பரிக்கும் அலைக்கழிக்கும்

மலை வீழ்ந்தது
வயல் அழிந்தது
கடலும் வீழ வீழ்ந்ததே
கூடங்குளம்....

சுவாசிக்க வழியின்றி
மீன்களும் மீணவர்களும்
துடிக்க துடிக்க
சூழுமோ அணுக்கதிர்கள்
தமிழகத்தை...

தமிழ் மொழி மறந்த
தமிழினம் தமிழ்நாடும் இழந்து
தவிக்கும் காலம் வரும் முன்
விழிப்போம் காப்போம்
நம் தமிழையும் ,தமிழ்நாட்டையும்..


Saturday 21 March 2015

ஆனந்த ஜோதி ஆண்டு விழா

21.03.15இன்று ஆனந்த ஜோதி இதழின் ஐந்தாம் ஆண்டு விழா

மிகச்சிறப்புடன் நிகழ்ந்தது.காலை கல்லூரி மாணவர்களுக்கு கவிதைப்போட்டி,கட்டுரைப்போட்டி.பல்குரலில் பேசும் போட்டிகள் நடந்தன.ஆர்வமுடன் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.மாலை வெற்றிப்பேரொளி அவர்களின் தலைமையில் ஐந்து கவிஞர்கள் கவிதை வாசித்தோம்...

முனைவர் சொ.சுப்பையா அவர்களின் தலைமையில்,எழுத்தாளர் பொன்னீலன் மற்றும் முனைவர் கு.வெ.பாலசுப்ரமணீயன் ஆகியோர் சிறப்புரை வழங்க,கவிஞர் பாலாவின் மனைவி திருமதி மஞ்சுளா பாலா அவர்கள் முன்னிலை வகிக்க , ஐந்து நூல்கள் வெளியிட்டு நிகழ்வும் ,நூல் விமர்சனங்களும் வழங்கப்பட்டது.

ஆனந்த ஜோதியில் தொடந்து எழுதிய கவிஞர்கள்,சிறுகதை மற்றும் கட்டுரை ஆசிரியர்களில் சிறப்புடன் செய்தவர்களைத்தேர்ந்தெடுத்து பாராட்டிச்சான்றிதழ் வழங்கப்பட்டது.

                          “கவிக்குயில் கீதா”

 என என்னை பாராட்டி  எழுத்தாளர் பொன்னீலன் அவர்கள் முன் சான்றிதழ் வழங்கப்பட்ட போது மனம் நெகிழ்ந்து போனது.எனை வளர்த்த ஆனந்தஜோதி இதழ் தந்த இப்பரிசு என் வாழ்வில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதுகின்றேன்.ஆனந்தஜோதி இதழ் ஆசிரியரான மீரா.சுந்தர்  அவர்கள் நிறையக்கவிஞர்களை உருவாக்கி வருகின்றார்.பொன்னீலன் அவரை இலக்கிய வள்ளல் எனப் பாராட்டி மகிழ்ந்தார்.ஆசிரியர் தனக்கு சக்கரை நோய் இருப்பதாகக் கூற அதற்கு பொன்னீலன் அவர்கள் அது தேசிய நோய் ,இந்தியாவில் உள்ள அனைவருக்கும் உள்ளது. நம் தாய் உணவுகளான சிறுதானியங்களை மறந்து,கருப்பு அரிசியை வர்ணபேதம் காட்டி பட்டைத்தீட்டி வெள்ளையாக்கி உண்பதன் விளைவு இந்திய மக்கள் அனைவருக்கும் வெள்ளைத்தந்த பரிசு சர்க்கரை நோய் என்றார்.

இலக்கியங்கள் சமூகத்தைஉயர்த்தும்,உயிர்ப்பிக்கும் கருவி...எனப் புகழ்ந்து  தூப்புக்காரி எழுதியதால் மலர்வதியின் சமூகம் தற்போது பேசப்படுகின்றது என்றும் சவரம் செய்யும் கவிஞரின் நூல் குறித்தும் பேசி அவர்கள் தற்போது உயர்வடையத்துவங்கி உள்ளார்கள் எனவும் உணர்வுடன் அவர் பேசிய போது அரங்கமே அமைதியாக அவரின் பேச்சில் மயங்கியது. கவிஞர் பொன்னையா அவர்கள் நன்றிக்கவிதை வாசிக்க விழா இனிதே நிறைவுற்றது.



Friday 20 March 2015

மாயமானாய்

மாயமானாய்....
---------------------------
அருகில் இருப்பதைத் தொலைவிலும்
தொலைவில் இருப்பதை அருகிலும்
போட்டு காலமாடும் சூதாட்டம்...

துன்பத்தை அழித்து இன்பத்தையும்
இன்பத்தைப் பிடுங்கித் துன்பத்தையும்
ஈந்து பல்லிளித்து நிற்கிறது....

சிறுவயது ஆசைகளை
முதிர் வயதில் தந்து
அனுபவிக்கவியலா  துக்கத்தையளித்து
 தள்ளியே நிற்கிறது..

இருப்பவன் மனமற்றும்
இல்லாதவன் முழுமனதுடனும்
கையறு நிலையில்
கரை கட்டி வைக்கின்றது...

காலவெள்ளத்தில் மூழ்கும் போது
காப்பாற்றி கைதூக்கி
கரைசேரவும் உதவுகின்றது...

இறுதியில்
இதுவும் கடந்து போகுமென
 கூறாமல் கூறுகின்றது




Wednesday 18 March 2015

WHERE DO WE GO NOW?-நதீன் லபாகி


WHERE DO WE GO NOW?-நதீன் லபாகி
----------------------------------------------
லெபனான் நாட்டு திரைப்படம்.

லெபனான் நாட்டிலுள்ள குக்கிராமம் பற்றிய  திரைப்படம்.கிறித்தவர்களும் இஸ்லாமியர்களும் சரிசமமாக வாழும் இக்கிராமத்தில் தேவாலயமும் மசூதியும் அருகருகே இருக்கிறது.ஊருக்கு வெளியே இரண்டு மதங்களுக்குமான இடுகாடுகளும் அருகருகே உள்ளன.மதமோதல்களால் கொலை நடப்பதும்,பின் இயல்பாக வாழ்வதுமான மக்களின்  வாழ்க்கை.

படத்தின் துவக்க காட்சியாக வீட்டு ஆண்களை இழந்த கிறித்தவப்பெண்களும்,இஸ்லாமியப்பெண்களும் கையில் பூங்கொத்துகளையும் தங்கள் அன்பானவனின் புகைப்படத்தையும் ஏந்தி இடுகாட்டை நோக்கிச் செல்வதாக அமைகிறது.மனதைப்பிழியும் கவிதை வரிகளுடன் துவங்குகிறது படம்.

 கிராமத்திற்கு தேவையான பொருள்களை வாங்கி விற்கும் இரண்டு இளைஞர்கள் டிஷ் ஆண்டனா ஒன்றை எடுத்து வந்து பழைய தொலைக்காட்சிப்பெட்டியை சரி செய்து கிராம மக்கள் அனைவரும் பார்க்கும் படி செய்கின்றார்கள்...

ரேடியோவிலும் ,தொலைக்காட்சியிலும் வரும் மதச்சண்டைகள் தங்கள் கிராமத்திலும் நிகழ்ந்து விடுமோ என்ற அச்சத்திலேயே வாழும் அக்கிராமப் பெண்கள் படும்பாடு ..அவற்றின்.இணைப்புகளை அறுத்து,எவ்வளவோத் தடுத்த போதும் சண்டை துவங்கும் சூழ்நிலை.

உக்ரைன் நாட்டு அழகிகளை அழைத்து வந்து தங்கள் கிராமத்து ஆண்களை  திசைத்திருப்ப முனைகின்றனர்.
தற்செயலாக அந்த இளைஞரில் ஒருவன் இறந்து விட மீண்டும் சண்டை மூள்கிறது,...
தடுக்க எண்ணி ஆயுதங்களை ஒளித்து வைக்கிறார்கள் பெண்கள்.ஆண்கள் உண்ணும் ரொட்டியில் தூக்க மருந்தை கலந்து தருகிறார்கள்.

இறுதியாக அவர்கள் செய்யும் செயல் தான் அதிர்ச்சியின் உச்சிக்கு அழைத்துச் செல்கிறது.இஸ்லாமியப்பெண்கள் எல்லோரும் கிறித்தவர்களாகவும்,கிறித்தவப்பெண்கள் அனைவரும் இஸ்லாமியப்பெண்களாகவும் மாறிவிடுகிறார்கள்.

நாங்கள் இப்போது எதிரி மதத்தைச் சார்ந்தவர்கள் தானே?முதலில் எங்களைக்கொன்று விட்டு மற்றவர்களைக் கொல்லப்போங்கள் ...என்று கதறுகிறார்கள்.ஆண்கள் திகைத்து நிற்க..செத்துப்போன இளைஞனின் அம்மாவும் ,அண்ணியும் இப்போது இஸ்லாமியர்கள்.அண்ணன் கிறித்தவர்.

 செத்துப்போன இளைஞன் இஸ்லாமியனா?கிறித்தவனா?என்ற கேள்வியுடன் நாங்கள் எங்கே செல்வது என்ற கேள்வியுடன் படம் முடிகின்றது.

2011இல் வெளிவந்து 2012 இல் கேன்ஸ் திரைப்பட விழாவில் இரண்டு விருதுகளைப் பெற்றது.டொரண்டோ,ஓஸ்லோ,தோஹா திரைப்படவிழாக்களில் மக்களுக்குப் பிடித்த படங்கள் என்ற பரிசினைத் தட்டிச்சென்றது.
புதுகையில் பிலிம் சொசைட்டி நடத்தும் திரு எஸ்.இளங்கோ அவர்கள் மாதாமாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் உலக சினிமாக்களில் சிறந்த திரைப்படங்களை வெளியிடுவார்கள்.இம்மாத மகளிர் தினச்சிறப்பு நிகழ்வாக இப்படத்தைக்காண வாருங்கள் என்று அழைத்தார்.

லெபனான் நாட்டு பெண் இயக்குநர் நதீன் லபாகி என்பவர்  இப்படத்தை இயக்கியுள்ளார்.

Sunday 15 March 2015

இணையும் கரங்களின் கண்டனமாக...

இணையும் கரங்களின் கண்டனமாக...

கொல்கத்தாவில் 72 வயது கன்னியாஸ்திரி 8 மிருகங்களால் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.தி இந்து[16.3.15 தமிழ்ச் செய்தி

ஆடைக்குறைப்பு தான் பெண்களின் பாலியல் வன்முறைக்கு காரணம் என கூறும் ஆண்கள் இக்கொடூரத்திற்கு என்ன காரணம் சொல்லப்போகிறார்கள்.

பிணத்தைக்கூட புணரத்துடிக்கும் மிருகங்களுக்கிடையேத்தான் பெண்கள் வாழ வேண்டிய நிலை...

பெண் உடல் மட்டுமே பிரதானமாகக்கருதும் ஆண்கள் எப்போது மிருக நிலையிலிருந்து மனித நிலைக்கு வரப்போகிறார்கள்..மன்னிக்கவும் எந்த மிருகங்களும் இப்படியொரு கொடூரத்தைச்செய்யாது....அதனின் கீழானவர்கள்...
இந்தியாவின் மகள் படத்தை தடை செய்தால் மட்டும் போதுமா...?

Saturday 14 March 2015

தேரை


எப்போதும் எனைப் பிதுங்கிய
விழிகளால் அச்சுறுத்துகின்றது
வீட்டில் சுதந்திரமாய் நுழைந்து..

அச்சத்துடனே நுழைகின்றேன்
அழையா விருந்தாளியினை எண்ணி..

புத்தகத்தின் மீதமர்ந்து வாசிக்கவும்
சமையலறைக் கதவருகில் உண்ணவும்
வண்டியின் மீதமர்ந்து பயணிக்கவும்
ஆசைப்பட்டே நுழைந்திருக்கவேண்டுமது...

அஞ்சியே  எட்டிநின்று போ,போவென்க
பாய்ந்து பாய்ந்து பயமுறுத்துவதற்காக
பீச்சியடிக்கும் தண்ணீரைகண்டு அருவறுத்தே
பதறுகின்றேன்..

இருக்கும் இடத்திற்கேற்ற
வண்ணம் கொண்டு அட்டையென
ஒட்டி மெல்ல ஒதுங்குமது
என்னுடன் விளையாட...

தினம் தினம் போராட்டமான
விளையாட்டுதான் விரட்டும் வரை

கல்லுக்குள் காலமெல்லாம் உறங்குமென
காதுக்குள் ரகசியமாய்க்  கூறி
சிறுவயதில் நான் உணவருந்த
சின்னஞ்சிறு கயிற்றில் கட்டி
தொங்கவிட்டு துன்புறுத்தியதாகக்
கூறிய மாமாவை விட்டுவிட்டு
எனை மிரட்ட வந்ததுவோ...


Thursday 12 March 2015

ஆலவாயன்

ஆலவாயன்-பெருமாள் முருகன்

காளியும் பொன்னாவும் இணை பிரியாது பன்னிரண்டு வருடங்கள் வாழ்ந்தாலும் அவர்களுக்கு குழந்தை இல்லை என்ற குறையால் அவர்களை இந்த சமூகம் என்ன பாடுபடுத்துகின்றது ...இறுதியில் தனதுஅண்ணன் ,அப்பா,அம்மா,மாமியார்ஆகியோரின் வற்புறுத்தலால் கரட்டூர் மலைக்கோவில் திருவிழாவில் பதினான்காம் நாள் விழாவிற்கு பொன்னா சென்றுள்ளாள் என்பதை அறிந்த கணத்தில்காளி தான் ஆசையாக வளர்த்த பூவரசு மரத்தில் தூக்கு போட்டுக்கொள்வதாக மாதொருபாகன் என்ற தனது நாவலில் எழுத்தாளர் பெருமாள் முருகன் முடித்திருப்பார்....

இதன் தொடர்ச்சியாக

காளி சாவதை ஏற்காத மக்களுக்காக  காளி இறவாமல் உயிரோடு இருந்து பொன்னாவுடன் வாழ்வதைக்கூறுவதாக அர்த்தநாரி என்ற நாவலையும்,காளி இறந்து விட்டால் அதன் பின்  பொன்னாவின் வாழ்க்கையைக்கூறும் ஆலவாயன்  என்ற நாவலையும் எழுத்தாளர் பெருமாள் முருகன் படைத்துள்ளார். காளியாகவும் பொன்னாவாகவும் வாழ்ந்திருக்கிறார் என்பதை இம்மூன்று நாவல்களும் நமக்கு உணர்த்துவதுடன் அக்கால மக்களின் வாழ்வியலை எடுத்துக்காட்டுவதாகவும் அமைந்துள்ளன.

ஆலவாயன் நாவலில் இழந்துவிட்ட தன் ஆசைக்கணவனை காணும்பொருளிலெல்லாம்  காணும்   பொன்னா, இறந்துவிடாமல்இருக்க பொன்னாவின் தாய் நல்லாயியும்,மாமியார் மாராயியும் கண்விழித்து பாதுகாக்கிறார்கள்.துவண்டு துவண்டு மயங்கிவிழும் பொன்னா சில நாட்கள் கழித்து காளி பார்த்து பார்த்து வளர்த்த கத்திரிக்காய்ச் செடிகளைப் பாதுகாக்க முனையும் போது உயிர்க்கிறாள்.
தனியொருத்தியாக தனக்குள்ளே வாழும் காளியுடன் பேசிக்கொண்டு, நிலைகுலைந்து வாழும் பெண்ணாக பொன்னா திகழ்கின்றாள்.பன்னிரண்டு வருடங்களுக்குப்பின் பொன்னாவின் நீண்ட கால ஏக்கம் வயிற்றில் கருவாக துளிர்க்கின்றது.தன் வயிற்றில் இருப்பது காளியின் குழந்தை என்றே நம்பும் பொன்னாவை ஊரார்  தூற்றி விடக்கூடாது என்பதற்காக ஊர்க்கூட்டம் அமைத்து செய்யும் சடங்கைப்பற்றி நாவலில் ...

ஊர்த்தலைவர் கூட்டத்தினரைப்பார்த்து

“இன்னைக்கு ஊர்க்கூட்டம் எதுக்குன்னு எல்லாருக்கும் தெரீம் .இது பொம்பள சம்பந்தப்பட்ட விசியம்.அதனால் பொம்பளைவ கூட்டம் வந்து சேர்ந்திருக்குது.பொம்பளைவள நாம ஊர்க்கூட்டத்துக்குக் கூப்பிடறது வழக்கமில்ல. இது சாங்கியம் நடத்தற கூட்டம்.அதனால எல்லோரும் வந்திருக்கிறாங்க .நெறஞ்ச கூட்டம் இது.அதே மாதிரி சம்பந்தப்பட்டவங்க மனசு நெறையறாப்பல இது நடக்கோணும் .செரி சக்கரக்கத்தி உம் வேலய ஆரம்பிக்கலாம் நீ”என்றார் ஊர்க்கவுண்டர்.

தீப்பந்தம் ஒன்று மரத்து விரிந்திருந்த இடத்திற்கு பக்கத்தில் வந்தது.சாணியில் ஒரு பிள்ளையாரைப் பிடித்து வைத்தான் பின் தேங்காயை உடைத்து நிறை சொம்புத்தண்ணியில் விட்டான் .அரிக்கஞ்சட்டியில் பிசைந்து வைத்திருந்த சோற்று உருண்டையை அதன் முன் வைத்தான்.பொன்னாவை அழைத்துவரச்சொன்னான்.பிள்ளையாருக்கு முன்னால் வந்து நின்றதும்

சொம்புத்தண்ணீரை விளாவச்சொன்னான் பின் செஞ்சோற்று உருண்டைகள் மூன்றைக்கொடுத்து ப் பில்ளையாரைச்சுற்றி மூன்று பக்கம் போடச்சொன்னான்.ஊரைப்பார்த்துக் கும்பிடச்சொன்னதும் தலையை லேசாக நிமிர்ந்து கைகளைக்குவித்தாள்.அவளை ஒருபக்கம் போய் நிற்கசொல்லிவிட்டுச் சக்கரைக்கத்தி சத்தமாகத் தொடங்கினான்.

“பெரியவங்க சின்னவங்க பொண்டு பிள்ளைவ எல்லாரும் கூடியிருக்கிற இந்த ஊர்ச்சபைக்கு கும்புடுங்க சாமீ..இன்னைக்கு இந்தச் சேதிக்கூட்டம் போட்டுருக்கிறது என்னத்துக்குன்னா ,இன்னைக்கு ரெண்டு மாசம் எட்டு நாளைக்குப்பின்னால வைகாசி மாசம் இரவத்தி ரண்டா நாளு வெசாலக்கிழம அன்னைக்கு வெடிகாலம் நம்மூரு பெரியக்காட்டு ராமசாமிக்கவுண்டரு மாராயி கவுண்டச்சி அவுங்க மகனும்,பொன்னாயிக்கவுண்டச்சி ஊட்டுக்காரருமான காளிக்கவுண்டரு தன்னுசிர மாச்சிக்கிட்டாருங்க சாமீ.

.அதுக்கப்புறம் ரண்டு மாசம் கழிச்சு ப் பொன்னாயிக்கவுண்டிச்சி அவுங்களுக்கு ஓங்கரிப்பும் வந்து சேர ஊரு பண்டிதக்காரிச்சி நாடிபாத்துக் கரு உருவாயிருக்குதுன்னு சொல்லீட்டாங்க சாமீ...இப்ப மூணாவது மாசம் நடக்குதுங்க.பத்து பாஞ்சு நாளு முன்ன பின்ன இருக்கலாமுங்க சாமீ.

ஊருக்கு மின்னால பொன்னாயிக்கவுண்டச்சி இந்த கருவு தன்னூட்டுக்காரருக்குத்தான் உருவாச்சுன்னும் இப்ப மூணு மாசம் நடக்குதுன்னும் சொல்ல மூணு சோத்துருண்டைய போட்டுருக்கறாங்க சாமீ.அவங்க வயித்துல வளர்ற கருவு காளிக்கவுண்டரு பேரு சொல்லோனும்.சூரியனும் சந்திரனும் சாட்சி சாமியோவ்.பத்தூட்டு பங்காளிவரும் இத ஏத்துக்கிட்டு இங்க வந்துருக்கறாங்க.சொந்தம் பந்தம் உத்தாரு ஒரம்பர,மானம் மச்சான் எல்லாரும் வெளியூர்ல இருந்து இங்க வந்திருக்கிறாங்க .அவிய எல்லாரும் கருவு காளிக்கவுண்டரு பேரு சொல்லறது தான்னு ஏத்துக்கிட்டிருக்காக சாமியோவ்.வராத ஊட்டுல,காட்டுல,உள்ளூர்ல,வெளியூர்ல இருக்கறவங்களுக்கும் இது சம்மதம் தானுக .அதனால இத இந்தூரும் ஏத்துக்கணும் சாமீ”என்று எல்லோருக்கும் கேட்கும்படி சொல்லி சற்றே இடைவெளி விட்டான்....   
கணவனை இழந்த பெண் கருவுற்றிருந்தாள் அவளை மதிக்கும் விதமாக இந்த சடங்கு நடத்தப்பட்டுள்ளது என்பதை இந்நூல் வாயிலாக அறிய முடிகின்றது.
கவலையால் உருக்குலையும் பொன்னாவிற்கு வாழ்க்கையின் மேல் ஒரு பிடிப்பைத்தருகின்றது அந்தக் குழந்தை.பன்னிரண்டு வருடங்களாக தான் பட்ட துன்பத்தைபோக்கவந்த குழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சியும் பொன்னாவால் உற்று நோக்கப்படுவதை நாவல் கூறுகின்றது.
எழுத்தாளர் நாவலில் வாழும் மக்களுடன் நம்மையும் பிணைக்க வைக்கின்றார்.....கிராம மக்களின் எளிமையும்   இயல்பான வாழ்க்கையையும் அழகாக எடுத்துக்காட்டுகின்றது..
ஆலவாயன்

Wednesday 11 March 2015

கற்பிக்கவோ?

கத்தியதால்
கற்பழித்தேன்
கொலை செய்தேன்
காமுகனின் கூற்று
கற்பிக்கவோ இனி
கத்தியால் அறுக்க...

Monday 9 March 2015

சருகு

மயான அமைதி நிறைந்த
 அறையில்எழுத்துகளின்
 பிரசவங்கள்

மணலைக்கடத்தும்
காற்றை விரட்டும் சருகு
அறைக்குள் நுழைந்த கணத்தில்
வெளியேறியது.....

பூக்களின் வருத்தங்களைக்
காணப்பொறுக்காது...

Saturday 7 March 2015

மகளிர் தினம் 2015

பெண்குழந்தைகள் பயமின்றி விளையாடும்
பரந்த வெளி வடிவமைப்போம்

அச்சத்துடனே ஆணை நோக்காது
அன்புடனே கலந்து பழக
அவள் துணியட்டும்.....

ஆதிக்கம் அழித்து
ஆதரவாய் கைக்கோர்ப்போம்
இருபாலருமே.....

மகளிர் தின வாழ்த்துகள் கூறிக்கொண்டிருக்கும் தோழமைகட்கு என் மனம் நிறைந்த நன்றி


Thursday 5 March 2015

5.3.15 mulu nila mutram-முழு நிலா முற்றம்

முழு நிலா முற்றம் -2 ஆவது கூட்டம்

இன்று முழு நிலா முற்றம் கூட்டம்  மாலை 7மணி அளவில் நிலவின் மேற்பார்வையில் கவிஞர் நீலா தலைமையேற்க இனிதாகத்துவங்கியது...

 ’
கவிஞர் அமிர்தாவின் மகள் செல்வி எழில் ஓவியா  புகலிடம் தேடிப்பறவையாய்” என்ற ஈழப்பாடலொன்றைப்பாடி அனைவர் மனதையும் ஒரு நிமிடம் உறைய வைத்தாள்...அவரின் இரண்டாவது மகள் கூட்டத்தையே வலம் வந்து கலகலப்பாக்கினாள்.


முத்துநிலவன் அய்யா ” பண்டை புகழும்...”என்ற நாட்டுப்பாடலொன்றைப்பாடி மேலும் இனிமைக்கூட்டினார்.
கவிஞர் பொன்.கருப்பையா அவர்கள்” காலநில மாறிப்போச்சு “ என்ற சுற்றுச்சூழல் பற்றிய பாடலொன்றை பாடி அசத்தினார்.


கவிஞர் மாலதி அவர்கள் தாய் மற்றும் நிலவு குறித்த கவிதைகள் வாசித்தார்.

கவிஞர் மகா.சுந்தர் அவர்கள் பாரதி மற்றும்  தமிழ் குறித்த மரபுக்கவிதைகளை வாசித்தார்.

அனைவருக்கும் தேநீரும் பிஸ்கட்டும் வந்து வயிற்று பசியைக்குறைத்தது.

கவிஞர் நீலா எழுதிய கவிதையை அச்சிட்ட அட்டையை பெண்கள் தின சிறப்பு என கவிஞர் மல்லிகா அவர்கள் வழங்கினார்கள்.

கவிஞர் நீலா அவர்கள்” சொல்லி[ல்] முடியாத கதை “ என்ற மது பற்றிய சிறுகதையை வாசித்தார்.

கவிஞர் வைகறை,கவிஞர் அப்பாஸ்,கவிஞர்.வையாபுரி,கவிஞர் அமிர்தா,கவிஞர்  ரேவதி,கவிஞர் உப்பைத்தமிழ் கிறுக்கன் ஆகியோரின் கவிதைகளால் நிலா முற்றம் நிரம்பி வழிந்தது.













நிகழ்ச்சியில்” பாஷோ”ஹைக்கூ இதழை முத்துநிலவன் அய்யா வெளியிட கவிஞர் நீலா அவர்கள் பெற்றுக்கொண்டார்.

பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகனின் தொடர்ச்சியான” ஆலவாயன்”
நாவலில் பிடித்த ஒரு பகுதியை கவிஞர் கீதா கூறினார்.

கவிஞர் சுரேஷ் மான்யா சிறுகதை குறித்து விளக்கி கவிஞர் நீலாவின் சிறுகதையில் உள்ள சிறப்புகளை கூறி சிறந்த விமர்சனத்தை அளித்தார்.

கவிஞர் சூர்யா சுரேஷ்,கவிஞர்.சிவா,புதுக்கோட்டை நாணயவியல் கழகத்தைச்சேர்ந்த பஷீர் அலி,கவிஞர் பொன்னையா,கவிஞர் காசிநாதன்,கவிஞர் சோலச்சி மற்றும் நிறைய புதுக்கவிஞர்கள் வந்திருந்து நிகழ்வைச் சிறப்பித்தனர்.

அறந்தாங்கியில் ஒரு பள்ளியின் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு எனக்காக இக்கூட்டத்தில் கலந்து கொள்ள விரைந்தோடி வந்த தோழி ஜெயாவின் அன்பு மனதை நெகிழ வைத்தது

தமிழ்ச்சுவை அருந்திய நிலவோ மேலும் ஒளிர்ந்து தன் மகிழ்வை எதிரொளித்தது..

கீதா மற்றும் வைகறை நன்றி கூற முழுநிலா முற்றம் இனிதே முடிந்தது..





Monday 2 March 2015

மகளிர் தினம் 2

மகளிர் தினம் 2

அவசரமாய்ப் பணி முடித்து
அள்ளிச்செருகிய ஆடையுடன்
பயணத்தில் தற்காத்து
பருவமடையாக் குழந்தைகள்
பாலியல் கொடுமை
கண்டுச் செல்கின்றாள்
மகளிர் தினம் கொண்டாட...

மகளிர் தினம் 1

மகளிர் தினம் கொண்டாடி
தாமதமாய்த் திரும்பியவளுக்கு
 காத்திருந்தன அர்ச்சனைப்பூக்கள்...