World Tamil Blog Aggregator Thendral: August 2015

Monday 31 August 2015

bloggers meet.2.9.15வலைப்பதிவர் விழா-கூட்டம் 6

வலைப்பதிவர் விழா-கூட்டம் 6
நாள் 2.09.15 புதன்கிழமை
இடம்:ஆக்ஸ்போர்டு உணவகக்கலைக்கல்லூரி .புதுகை
காலம்..மாலை 5.30-8.00 மணி

வலைப்பதிவர் திருவிழாவை சிறப்பாக நடத்தக்கூட்டங்கள் நடத்தப்பட்டு ஆலோசனைகள் பெறப்படுகின்றது.அதன் தொடர்ச்சியாக நாளை ஆறாவது கூட்டம் நடக்க உள்ளது.நாளை நடக்க உள்ள கூட்டத்தில் குழு அமைப்பது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.இது நம் புதுகைக்கு பெருமை சேர்க்கும் வகையில் சிறப்பானதொரு விழாவாக அமைய அனைவரும் இணைந்து செயல் பட விரும்புகின்றோம்.தமிழ் இணையத்தளம் தொடர்பான பலரும் இதில் இணைய ஆர்வமுடன் உள்ளனர்...உங்களின் ஒத்துழைப்பு அவசியம் தேவை என்பதால் நாளை நடக்க உள்ள கூட்டத்தில் வலைப்பதிவர்கள் அனைவரும் கலந்து கொள்ளும் படி கேட்டுக்கொள்கின்றோம்.
பதிவர்கள் பதிவு நடந்து கொண்டுள்ளது ...அதில் பதிந்து தங்களின் வரவை உறுதி செய்யவும் கேட்டுக்கொள்கின்றோம்...

Sunday 30 August 2015

vaikai karai வைகைக் கரையில் நம் முன்னோர்களின் தடம்...

தமிழனின் பாரம்பரியம்
----------------------------------------

                             நம்ப முடியவில்லை தமிழனின் நாகரீகமான வாழ்க்கை மண்ணுக்குள் புதைந்து,மெதுவாக வெளிப்படும் உண்மையை.....

மதுரையில் நடக்கும் தொல்லியல் ஆய்வு தொடர்பான செய்திகள் கேள்விப்பட்டு காணவேண்டும் என்ற ஆவலில் ஒரு பயணம் ....

மதுரைக்கு அருகில் உள்ளது மணலூர். பாண்டியர்களின் தலைநகர் என்று கூறப்படும் மணலூரில் தென்னந்தோப்பிற்குள் ஒரு வரலாற்று நாகரீகம் புதையுண்டு இருப்பதைப்பார்த்த போது...மனம் சொல்லவியலாத உணர்வில் .....பேருந்து நுழையவியலாப் பாதையில் உள்ளே செல்லும்போது மனம் 2500 வருடங்களுக்கு முன் வாழ்ந்த நம் மக்களின் வாழ்க்கை கண்முன் கலங்கலாக விரிகின்றது.....


தற்போதுள்ள அறிவியல் முன்னேற்றங்கள் கொஞ்சமும் இல்லாத அந்த காலத்தில் போக்குவரத்து வசதிகளற்ற காலத்தில் கடல்வழியின் மூலம் அந்நியநாடுகளுடன் வாணிகம் செய்த வணிகர்கள் வாழ்ந்த இடமாக இருக்கும் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்...
அவர்கள் பயன் படுத்திய மட்பாண்டங்கள்...அவர்களின் கலைத்திறனுக்கு எடுத்துக்காட்டாய் திகழ்கின்றன....

தந்தத்தால் ஆன பகடையும் ,ஓட்டையிடப்பட்ட முத்தும் அவர்களின் செல்வச்செழிப்பை பறைச்சாற்றிக்கொண்டுள்ளன.

சதுரசதுரமான பள்ளத்தில் தனது வரலாற்றை எடுத்துக்காட்டி உண்மையை உலகறியச்செய்கிறது...ஆதிமனிதன் பயன் படுத்திய பாண்டங்கள்....
ஒவியமும் தமிழ் பிராமி எழுத்துகளும்அவ்வூர் மக்கள் நூற்றுக்கணக்கானவர்கள் தங்கள் மண்ணின் பெருமை உணராமல் மண் எடுக்கும் பணியைச்செய்கின்றனர்...

சுமார் 2200 ஆம் ஆண்டில் இருந்து 2500 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் குடியிருந்தப் பகுதியாக உள்ளது...வரிசையான வீடுகள்,தரைத்தளமாக ,கனமான தட்டோடுகள்,மேற்கூரைக்கு ஆணி அறையப்பட்ட செம்மண் ஓடுகள்,அகலமான் செங்கல்,வீடுகளை ஒட்டி பெரும் அகலத்தில் நீண்ட சுவர்கள்,தண்ணீர் வழிந்தோட வடிகால்கள்,வட்டவடிவ உறையிடப்பட்டக் கிணறு என அகழ்வாராய்ச்சிலேயே முழுமையான குடியிருப்பு பகுதி கிடைத்திருப்பது இதுவே முதல்முறையாகும் என்கின்றனர் தொல்லியலாளர்கள்.
மண்பாண்டத்தின் வழவழப்பான பகுதி....அவர்களின் திறமையை உணர்த்துகின்றது.கூடாரமிட்டு நம் மக்களின் வரலாறை வெளிக்கொணரும் முயற்சியில் தொல்லியாளர்கள்....

உறைகிணறு
வீட்டுக்குள்ளேயே கிணறு  வைத்துள்ளனர்.தோண்டப்பட்ட பள்ளங்களை ஆய்வு முடிந்த பின் சமன் செய்து நில உரிமையாளர்களிடமே தந்து விடுவார்களாம்....இனி தோண்ட எண்ணியுள்ள இடங்களில் இன்னும் பல அரிதான உண்மைகள் வெளிப்படும் என நம்புகின்றனர்....

காலத்தால் புகழ் பெற்ற தமிழனின் பெருமையைக்கண்ணாரக்கண்டு திரும்புகையில் அங்கு வந்த ஒன்பதாம் வகுப்பு மாணவன் ஒருவனிடம் ஆய்வாளர் என்னப்பா தெரிஞ்சுது எனக்கேட்க,அவன் மொக்கையா இருந்துச்சுன்னு சொன்னது தான்....மனதின் வேதனையை உண்டாகியது...நம் வரலாறை நம் சந்ததிகளிடம் உணர்த்தாமல் அந்நிய நாட்டின் பெருமையைப்பேசி மாய்கின்றோம்.....

அங்கு தேவையற்றுக்கொட்டிக்கிடந்த மண்பாண்டத்தின் சிறு பகுதி என்னிடத்தில் 2500 ஆண்டுகால வாழ்க்கையை கூறியபடி....
Wednesday 26 August 2015

வலைப்பதிவர் திருவிழா -கூட்டம் 5

வலைப்பதிவர் திருவிழா -கூட்டம் 5

வலைப்பதிவர் திருவிழாவிற்கு நன்கொடை கொடுத்தவர்கள் பட்டியல்.

1]திருமிகு.நா.முத்துநிலவன்

2]திருமிகு.மு.கீதா

3]திருமிகு.கஸ்தூரிரங்கன்

4]திருமிகு.கருணைச்செல்வி

5]திருமிகு.மாலதி

6]திருமிகு.மதுரை ரமணி வலைப்பதிவர்

7]திருமிகு.பொன்.கருப்பையா

8]திருமிகு.மகா.சுந்தர்.

9]திருமிகு அ.பாண்டியன்


வலைப்பதிவர் விழாவில் கலந்து கொள்ள நாற்பதுக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர்.விழாக்குறித்த கூட்டங்கள் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றன...புதுகைக்கு பெருமை சேர்க்கும் விழாக்களில் ஒன்றாக வலைப்பதிவர் திருவிழா அமைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன...விரைவில் அனைவரும் பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்...


Monday 24 August 2015

முழு நிலா முற்றம்-8

முழு நிலா முற்றம்-8

நாள்:29.08.15[சனிக்கிழமை]
இடம்:
இனியநிலா இல்லம்,
122 சத்தியமூர்த்திநகர்,
புதுக்கோட்டை.

அமைப்பு:கவிஞர் சோலச்சி.

வேகமாக வளரும் நிலவை ஏனிந்த அவசரமென்றேன்.... புதுகையில் அனைவரையும் காணும் ஆவலில்என்றாள்.சென்ற மாதம் உங்களை சந்தித்து கலைந்தபின் பிரிவின் வேதனையில் கரைந்து மறைந்து, பின் காணும் ஆவலில் விரைவாய் வளர்கின்றேன் என்றாள்...

என்ன வேண்டுமுனக்கு என்றேன்..இனிக்கின்ற செந்தமிழின் சுவைதனை கவிதையாகவும் ,இசையாக பாடி மகிழ்ந்து,இயலாக பேசிக்கலக்கும் ஆவலில் காத்திருக்கின்றேன் தோழி...இதைத்தவிர வேறென்ன வேண்டுமென ஆசையாக உரைத்தவளை ஏமாற்றாது அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகின்றோம்.
புதுவீடு


பார்த்துப் பார்த்து
ரசித்து ரசித்து
தடவிக்கொடுத்து
மெல்ல வளர்கையில்
மனதிற்குள் மகிழ்ந்து
கொஞ்சம் ஊனப்பட்டாலும்
கோபப்பட்டு பதறி

முழுதாய் வளர்ந்து
முன்னே நிற்கையில்
மாப்பிள்ளையின் கைப்பிடித்து
மருகிச்செல்லும் மகளைப்
பெற்றவனாய்
தள்ளிநின்று ரசித்து கடக்கின்றான்
புதுமனைப்புகும் விழாவில்...


Sunday 23 August 2015

23.0815 .வீதி கலை இலக்கியக்களம் கூட்டம் -18

வீதி கலை இலக்கியக்களம் கூட்டம் -18 

நாள் 23.08.15


   இன்று வீதி கலைஇலக்கிய கூட்டம் கவிஞர் மு.கீதா தலைமையில் மிகச்சிறப்பாக நிறைவாக நடந்தது.

காலை 9.30 மணி அளவிலிருந்தே அனைவரும் வரத்துவங்கினர்....
முதல் நிகழ்வாக

படித்ததில் பிடித்தது
               
                      கவிஞர் முத்துப்பாண்டியன் ,கவிஞர் சோலச்சியும்,கவிஞர் சோலை மாயவன்[பொள்ளாச்சி] மூவரும், தாம் படித்த நூலைப்பற்றி  கூறினர்.

வரவேற்பு

கவிஞரும் கூட்ட அமைப்பாளருமான வைகறை சிறப்பு அழைப்பாளர்களான பொள்ளாச்சியிலிருந்து வந்து கலந்து கொண்ட கவிஞர் அம்சப்ரியா , கவிஞர் பூபாலன் மற்றும் கவிஞர் சோலை மாயவன் ஆகியோரை அறிமுகம் செய்து வரவேற்று,கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் சிறப்பாக வரவேற்றார்.

சிறப்பு நிகழ்வு-கவிதைப்போட்டி

தலைப்பு-”தணலில் வளரும் சாதி’

 பத்து மணிக்கு அரங்கில் இருந்தவர்களுக்கு தலைவர் மு.கீதா அவர்கள் தலைப்பைக் கூறி, பதினோரு மணிக்குள் எழுதி தந்திடக் கூறினார்.

கவிதை

தனக்கே உரிய நகைச்சுவை உணர்வோடு கவிதைகளை கவிஞர் பவல்ராஜ் வாசித்தார்.அதிலொன்று
          ” கட்டாயத்தலைக்கவசத்தை
            ஆதரிக்கின்றேன்
             கடன் தொல்லை”

  என சிறப்பான ஏழு கவிதைகளை வாசித்து நிகழ்வை கலகலப்பாக்கினார்...

சிறுகதை

                   படைப்பாளி பாத்திரங்களோடு ஒன்றி எழுதினால் மட்டுமே அனைவர் மனதிலும் அக்கதை இடம்பிடிக்கும். அப்படிப்பட்ட கதையான
“ பிச்சைப்புகினும்”  என்ற மதுவால் கல்வி மறுக்கப்பட்டு அப்பாவால் பிச்சை எடுக்க செல்லும் சிறுமியின் கதையை  கவிஞர் சோலச்சி உணர்வோடு படித்த விதம் மிக அருமை.

கட்டுரை

”சிலம்பில் மன்னராட்சி “என்ற தலைப்பில் புலவர் ஜெயா அவர்கள் சிலப்பதிகாரத்தில் மன்னராட்சியினை சிறப்புடன் விளக்கினார்.

பாராட்டிக் கௌரவித்தல்
*”முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே”என்ற நூலிற்காக சென்னை பாரதி இலக்கியப்பேரவையால் விருது பெற்ற கவிஞர் நா.முத்து நிலவன்.

*கணையாழி இதழில் சிறுகதைக்கான போட்டியில் முதல் பரிசு பெற்ற கவிஞர் தூயன்.

*இம்மாதத்தில் ”முதல் பரிசு”
 என்ற சிறுகதை நூலை வெளியிட்ட கவிஞர் சோலச்சி.

*இரு கவிதை நூல்களை[பனைமரக்காடு,நாட்குறிப்பற்றவனின் ரகசியக்குறிப்புகள்] வெளியிட்ட ஈழபாரதி.

ஆகிய நால்வருக்கும் பொன்னாடைப்போர்த்தி கௌரவிக்கப்பட்டது.

கவிஞர் பொன்.க அவர்கள் விருது பெற்ற கவிஞர் நா.முத்துநிலவன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மகிழ்ந்தார்.

சிறப்பு விருந்தினர்களுக்கு சிறப்பு செய்தல்

* ”சிற்பி விருது” 2014 ஆம் ஆண்டிற்காக பெற்றுள்ள கவிஞர் அம்சப்ரியா அவர்களுக்கும்,
சிறப்புரையாற்றிய கவிஞர் பூபாலன் அவர்களுக்கும் நினைவுப்பரிசு வழங்கி பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.

*கவிஞர் முத்துநிலவன் சிறப்பு விருந்தினர்களுக்குப் பொன்னாடை அணிவித்து,புத்தகம் வழங்கி பாராட்டினார்.

*கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள்  விருந்தினர்களுக்குப் பொன்னாடை அணிவித்து  பாராட்டினார்.

சிறப்புரை-கவிஞர் பூபாலன்.

 கவிதையின் தோற்றம் வளர்ச்சி பற்றி விரிவானதொரு ஆய்வு நோக்கில் சிறப்புரையாற்றினார்பூபாலன்.எளிமையான  உரை நிகழ்த்தி அனைவர் மனதையும் கவர்ந்த விதம் அருமை.

இலக்கிய ஆளுமை அறிமுகம்-கவிஞர் கஸ்தூரிரங்கன்

 எழுத்தாளர் பிரேம்சந்த் பற்றி அவரது கதையைக்கூறி அவரது தன்மையை அழகாக எடுத்துக்கூறினார்....எளியோருக்கான எழுத்தாளராக ,உண்மை சார்ந்து எழுதியதால் அவர் பட்ட சிரமங்கள்,இறுதிவரை வறுமையால் பாதிக்கப்பட்டு வாழ்ந்தது.என மிகச்சிறப்பானதொரு இலக்கிய ஆளுமையை அறிமுகம் செய்த விதம் அருமை.

தமிழ் இலக்கியங்கள் ஆங்கில மொழி,பிற மொழிகளில் மொழி பெயர்க்கப்பட வேண்டும் ,தமிழ் மொழியின் வளத்தை உலகோர்க்கு அறிமுகம் செய்ய மொழி பெயர்ப்புக்குழு உருவாக்க வேண்டும் என்றார்...அனைவராலும் அக்கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அவரது வேண்டுகோளை புதுக்கோட்டை தமிழாசிரியத்தலைவர் கும.திருப்பதி அவர்கள் நிச்சயம் செய்வோம் என உறுதி அளித்தார்.

நூல்விமர்சனம்-கவிஞர் செல்வக்குமார்.

கவிஞர் மகேஸ்வரி எழுதிய “விடியல் வெளிச்சம்”என்ற நூலைப்பற்றி தனக்கே உரியப்பாணியில், கவிதைநடையில் விமர்சனம் செய்த விதம் மிகச்சிறப்பு.

ஏற்புரை

ஏற்புரை வழங்கிய  எழுத்தாளர் மகேஸ்வரிக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டப்பட்டது.

சிறப்புரை -கவிஞர் அம்சப்ரியா

                          வீதி என்ற பெயரின் சிறப்பைக்கூறி.மாணவர்களை மதிப்பெண்கள் என்ற வன்முறையால் அவர்களை அடக்கி ஒடுக்கி விடுகிறோம்...வகுப்பறை விட்டு வெளியே உள்ள அவர்களின் உலகம் மிக அழகானது...சொற்கள் ஏற்க படாத போது அது பல்வேறு வழிகளில் வெளிப்படுவதை அழகான எடுத்துக்காட்டுகள் மூலம் கூறிய போது சிறந்த ஆசிரியராக பரிணமித்தார்.

தனது ஊரில் ரேஷனுக்காகப் பல ஆண்டுகள் போராடி இல்லாத நிலை,நூலகத்திற்காக பல்லாண்டுகள் போராடி பெற்றும் இருந்தும் இல்லாத நிலை,கேளாமலே ஊருக்குள் நுழைந்த டாஸ்மார்க்கால் பெறப்படும் வருமானம் தனது ஊருக்கு பயன்படாமல் எங்கே போகின்றது?என்ற வேதனை...இச்சமூக சீர்கேட்டை எல்லாம் பதிவு செய்யக்கூடிய கவிதைகளே மாற்றங்களுக்கு வழி கோலுகின்றன ...என்று சிறப்பானதொரு உரை வழங்கி, வீதி கூட்டத்திற்கு தனது வாழ்த்துகளை வழங்கினார்.,

அவரின் முயற்சியால் உருவாகிக்கொண்டிருக்கும் கவிதை நூலகத்திற்கு நூல்கள் வீதி சார்பாக வழங்கப்பட்டது.

இறுதியாக கவிதைப்போட்டி முடிவு .

கவிஞர் மு.கீதா தனது உரையில் குழந்தைகளே பெரும்பாலான கவிதைகளுக்கு கருவாகின்றனர்.அவர்களின் உலகம் கவலையில்லாதது.பெரியவர்களாகும் போது நாம் நம் குழந்தைமையைத்தொலைத்து கவலைசூழ் உலகில் வாழவேண்டிய நிலை.அக்கவலைகளை போக்கவே இலக்கியம் உதவுகின்றது  .
           
                       மகிழ்வான சொற்களால் நிறைந்த இந்த அரங்கு அனைவரையும் மகிழ்வில் ஆழ்த்தியுள்ளது...வீதி கூட்டம் சிறப்பானதொரு பாதையில் செல்கின்றது என்பதை இவ்வரங்கு நிரூபிக்கின்றது ..இதற்காக உழைத்த அமைப்பாளர்கள் வைகறைக்கும் ஜெயாவிற்கும் வாழ்த்துகள் கூறி பாராட்டினார்.

போட்டியில் எழுதப்பட்ட கவிதைகளைச் சிறப்பு விருந்தினர்கள் தேர்வு செய்தனர்...தேர்வான 12 கவிதைகளை எழுதியவர்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.

கொம்பன் பாடலாசிரியர் தனிக்கொடி அவர்கள் கவிதை குறித்து சிறப்பாக பேசினார்.

மாணவி தமிழ் ஓவியா  இனிய பாடலைப்பாடி அசத்தினார்.கவிஞர் தங்கம் மூர்த்தி ,தனது ஓயாத பணிகளுக்கிடையேயும் பொள்ளாச்சியிலிருந்து புதுகைக்கு வந்தவர்களைப்பாராட்ட வேண்டி,நிகழ்ச்சிக்கு  வந்து பாராட்டி வீதிக்கூட்டத்தை சிறப்பித்தார்.

திருச்சியிலிருந்து வந்து கவிஞர் சுகன்யா ஞானசூரி இக்கூட்டத்தில் கலந்து கொண்டு கவிதைப்போட்டியில் பங்கேற்று பரிசு பெற்று இந்நிகழ்விற்கு பெருமை சேர்த்தார்

நன்றியுரை  கவிஞர் ஜெயா தனது நன்றி உரையில் பயணங்கள் ரசனையானது,பண்பாட்டைக்கடத்தக்கூடியது,நேசங்களை உருவாக்கக்கூடியது . இனிமையான பயணம் செய்து பொள்ளாச்சியிலிருந்து  வந்து இக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்த சிறப்பு விருந்தினர்களுக்கு நன்றி கூறி,கூட்டத்தை நிறைவாக்கிய அனைவருக்கும் தனது மகிழ்ச்சி நிறைந்த நன்றிதனை சமர்பித்தார்.