World Tamil Blog Aggregator Thendral: August 2020

Monday 31 August 2020

பதில்கூறு

கணிகைநான்
குலமகள் ஆக விரும்பியே
உன்னில் கலந்தேன்...
வானம் வசமானது
 உனது அண்மையால்
உலகே கிடைத்ததாக
உயிர்ப்புடன் வாழ்ந்த என்
மனம் புரியாமல்...
என்ன வாழ்க்கை வாழ்ந்தாய் நீ?.
உன் பேர் சொல்லபிறந்த மகள்
உன்னாலே ஆணினம் வெறுத்து..
துறவறம் பூண்டாள்...
உதறித்தள்ளி மறந்தவனே 
நளன் வழிவந்தவன் தானே நீ.
அன்பின் மேன்மையை
அறியவேயில்லை
என்னிலும்
அவளிலும்.

சித்தார்த்தன்

சித்தார்த்தா
கட்டிய மனைவியை
கொட்டும் இரவில்
தட்டிய தூசென
விட்டுச் செல்ல 
மனம் வந்தது எப்படி..?.
நீ புத்தனாகலாம்
என்னைப்பொறுத்தவரை
பெற்ற மகவை கதறவைத்து
பற்றற்றேன் என்ற நீ
புனிதனல்ல..
நீ சென்றுவிட்டாய்
கேளாத சொற்களை
கேள்வியாய் எனைத்துளைத்தெடுத்த
வேள்வியை உணர்வாயா..
விட்டுச் செல்வது ஆணுக்கு
விந்தை கழித்து செல்வதாக...
எக்காலமும் குழந்தையை
எந்த பெண்ணும் விட்டுவிடாள்
குரங்கு சுமக்கும் குட்டியாக
கங்காருவின் குட்டியாக
நினைவிலும் தோளிலிலும்
சுமந்து திரிந்த என்வலி உணராய்...
சித்தாத்தா உலகம் உனைப் போற்றலாம்...
மனைவி மகவை விட்டு செல்ல
வழிகாட்டிய உன்னை தாயுலகு 
மன்னிக்காதென்றும்...
புனிதர் எல்லோருக்கும்
புனிதராக முடியாது....
சித்தார்த்தா...
மு.கீதா
புதுக்கோட்டை

Thursday 27 August 2020

வீதி

வியக்க வைக்கும் தமிழரின் மேன்மை...
ஒருவாரமாக மூன்றாம் முறையாக மீண்டும் வேள்பாரி நாவலுடன் பயணிக்கிறேன்.வீதி கூட்டத்திற்காக 'வேள்பாரியில் பெண்கள்' என்ற தலைப்பில் எனது உரைக்காக..
பொன்னியின் செல்வன் நாவல் அதிசயம் என்றாலும் என்னை அது வியக்க வைத்ததே தவிர புதைய வைக்கவில்லை... பெருமிதம் தோன்றவில்லை...
ஆனால் வேள்பாரி எனது முன்னோரின் கதை . அவர்கள் இயற்கையை உயிராக நேசித்து இயற்கையோடு இணைந்து வாழ்ந்த வரலாறு...
அவர்களின் இயற்கை அறிவு.மருத்துவ அறிவு...காணும் செடிகளை எல்லாம் தங்கள் பாதுகாப்பிற்கு,மருத்துவத்திற்கு .விளையாட்டிற்கு என பயன்படுத்திய பேரறிவு.முதுகிழவன் வேலை வாங்குகிறான் என்று அவனுக்கு கொடுக்கும் வெற்றிலையில் தும்மி இலை கொடுத்து தும்ம வைக்கும் இளைஞர்கள்... அவர்களுக்கு காமஞ்சுருக்கி இலை கொடுத்து ஆட முடியாமல் செய்வதுடன் பெண்களுக்கு காமமூட்டி சாறு கொடுத்து அவர்களைத் தூண்டி இளைஞர்களை நாணவைக்கும் குறும்பு..
குலநாகினிகளின் காட்டரணால் பாதுகாக்கப்படும் பறம்பு...என எத்தனை அதிசயங்கள்..
எழுத்து கற்றவன் என்ற பெருமிதம் கொண்ட கபிலரிடம எழுத்துன்னா என்ன எனக் கேட்டு அவருக்கு பறம்பு கற்றுக் கொடுக்கும் வாழ்க்கைப் பாடம்...
பேரரசுகளின் பேராசை புகழுக்காக எதையும் செய்யும் அகங்காரம் இன்றைய உலகமயமாக்கலால், கார்ப்பரேட் நிறுவனங்களால் அதன் வணிக தந்திரத்தால் மக்கள் அடையும் துயரம் என நிகழ்காலத்தோடு ஒப்பிட வைக்கும் மூவேந்தர்களின் சூழ்ச்சி...என விரிகிறது... 
இறுதியில் மூவேந்தர்கள் போரிட்டாலும் தனது தோழன் நீலனைக் காப்பாற்றும் முயற்சி மட்டுமே செய்யும் பாரியின் நீலனின் வீரம், வள்ளி,ஆதினியின் காதலும் அறிவும் ,காட்டின் அதிசயங்கள் என நம்மை முருகன் வள்ளியை ஈர்க்க ஏழிலைப்பாலை மரத்திற்கு அழைத்து சென்று கவர்வதைப்போல நம்மையும் நமது அறிவை, பண்பாட்டை ,வீரத்தை,காதலை,பெண்களை மதிக்கும் தன்மையைக் காட்டி கவர்ந்து மகிழவைத்து தமிழன்டா என பெருமிதம் கொள்ள வைக்கிறது..
கொரோனா விடுமுறையில் நமது குழந்தைகளுக்கு இந்நூலை அறிமுகப்படுத்தி நமது உண்மை  வரலாறை  அறிமுகம் செய்ய வேண்டும் ஒவ்வொருவரும்...
பாரி வேறு நாம் வேறல்ல ..ஆனால் எப்படி திரிந்து போனோம் யாரால் என்பதை நுட்பமாக உணரலாம்...
வாருங்கள் வீதி கலை இலக்கியக் களம்-75 பவளவிழா இணையவழி நிகழ்வில் கலந்து கொள்ள...

Wednesday 26 August 2020

வீதி கலை இலக்கியக் களம்-75

வீதி கலை இலக்கியக் களம்-75
பவளவிழா அழைப்பிதழ்.

நாள்:30.8.2020 ஞாயிறன்று
காலை:10.00-1.00 
இணையவழி நிகழ்வு
Zoom id: 507 503 9922
Password:veethi

அன்புடன் அழைக்கிறோம்...
வீதி நிறுவுநர் முனைவர் அருள் முருகன் அவர்கள் தலைமையில்...
வீதியின் முன்னோடி கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள் அரசியலோடு தொகுப்புகளை வழங்க..
தமிழரின் வீரத்தை,இயற்கையோடு,விங்குகளோடு,பறவைகளோடு இணைந்த வாழ்வை, ஆகச் சிறந்த மருத்துவ அறிவை,வேள்பாரி நாவல் கற்பிக்கும் கல்வியை, பாத்திரப் படைப்புகளை, கதைகளும் திருப்புமுனைகளும் நிறைந்த சுவாரசியத்தை,தமிழரின் நம்பிக்கைகளை , பெண்களுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தை,நட்பின் மேன்மையை குறித்து உரையாற்ற உள்ளனர்..
நமது முன்னோரின் மேன்மையை உணர அழைக்கிறோம்..இது வெறும் நாவலல்ல...நமது பண்பாட்டை உலகிற்கு அறிவிக்கும் கண்ணாடி..

Wednesday 12 August 2020

பன்னாட்டுக்கவியரங்கம்

உலகப் பெண் கவிஞர் பேரவை நடத்தும் பன்னாட்டுக் கவியரங்கம்.
நடத்தலாமா என்று  கவிஞர் அகன் அய்யா கேட்ட போது சாதாரணமாக த் துவங்கி தற்போது நாற்பது பெண் கவிஞர்கள் இணைந்து வருகிற.15.8.2020 அன்று இரு நிகழ்வுகளாக கவிதைகள் வாசிக்க உள்ளனர்...
பல நாடுகளில் இருந்து தங்கள் கவிதைகளை ஆர்வமுடன் கலந்து கொள்ளும் பெண்கள் பாரதி பாரதிதாசனின் கனவு பெண்கள்.
'அவன் நிற்கிறான்' என்ற தலைப்பில் கவிதை வாசிக்கும் நிகழ்விற்கு உங்களையும் அன்புடன் வரவேற்கிறோம்.
இந்நிகழ்வில் திருமிகு ஆறுமுகம்பேச்சிமுத்து அமெரிக்க தமிழ் ஊடகம்.அவர்கள்  வரவேற்புரை நல்க உள்ளார்.
உலகப் பெண் கவிஞர் பேரவை நிறுவனர் திருமிகு அகன் அவர்கள் முன்னுரை வழங்க உள்ளார்.
இயக்குநர் மணிரத்னம் மற்றும் பலருடன் இணைந்து பணிபுரியும் திருமிகு சிவா .அனந்த் அவர்கள் ஆகச் சிறந்த நிர்வாக இயக்குநர் , மெட்ராஸ்_டாக்கீஸ் திரைப்பட பாடலாசிரியர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்.
அமெரிக்கா,கனடா, சுவிட்சர்லாந்து, நியூஜெர்சி, லண்டன், ஜெர்மனி மற்றும் இந்தியாவைச் சேர்ந்த 40 பெண் கவிஞர்கள் 15.8.2020 அன்று கவியரங்கில் கலந்து கொண்டு கவி பாட உள்ளனர்...
இந்நிகழ்வை மு.கீதா(devatha tamil) ஒருங்கிணைக்க உள்ளேன்..
எங்களை ஊக்கப்படுத்த நீங்கள் கலந்து கொள்ள உள்ளீர்கள்.. பிறகென்ன சந்திப்போம்.. கவியரங்க நிகழ்வில்

Sunday 9 August 2020

தேநீர்

அதிகாலைத் தேநீர் அமிர்தமாய் இருக்கிறதா?
அழிந்த உயிர்களின் அரிதான குருதிச்சுவையது.
உயர்ந்து நின்ற காடழித்து
உயிர்களை குடித்தமைத்த  
தேயிலை படுக்கை
வனச்சுடுகாடு.
நாம் பச்சை படுக்கை என
வியந்து அருகில் விதவிதமாக
விழிவிரிய எடுத்தபுகைப்படங்களின்
பின்னணியில் ஒரு இரத்த வரலாறு.
சேற்றில் புதைந்த உயிர்களின் ஓலம்..
தாயே தனது குழந்தைகளை விழுங்கிய சோகம்...
நீங்கள் குடியுங்கள் ரசித்து...
கீதா

Monday 3 August 2020

பன்னாட்டுக்கவியரங்கம்

பன்னாட்டு கவியரங்கம்

என் தலைப்பு'வயல்'

வயல் குறித்துக் கவிபாட
வரப்போரம் தேடினேன்.
பாலங்கள் விழுந்த ஒலி கேட்டதுண்டு
பாளம் பாளமாய் வெடித்த வயலின்
விம்மல் ஒலி கேட்டதுண்டா?
கேளுங்கள்.
வயலின் வலியிது.

ஏன் மறந்தாய் மனிதா?
எலும்பென வரப்பெடுத்து,
உதிரமாய் நீரெடுத்து,
என்மார்பு சுரந்து,கருப்பை பிளந்து
நிலையாய் ஓரிடத்தில் உன்னை
வசிக்க வைத்த
வயல் கேட்கின்றேன்.
பச்சை பட்டுடுத்தி
பசுங்கிளிகள் கவிபாட,
சேற்று நீரில் மீன் துள்ள,
ஒற்றைக்கால் குருகு பசியாற,
சற்றும் அயராது உழைத்த
உன் பாட்டனின்வியர்வையினை
தென்றலது துடைத்து விட.
அயர்வு கலைந்து ,அசதி கலைந்து
வருவோர் போவோர்க்கெல்லாம்
வரையாது பசிநீக்கி மகிழ்ந்தானே!
ஏன் மறந்தாய் மனிதா?

புரிகிறதா? புரிகிறதா?
வயல் அழித்து,
வரட்டு நாகரிகமென
நீ தேடி ஓடியதெல்லாம்,
இன்று உனக்கு எதிராக! எதிரியாக!

உணர்வழித்து,உணவிழந்து,
உறைகின்ற வீடாக்கி
மகிழும் மனிதா..
இனி எதை உண்ணப் போகின்றாய்?
கான்கிரீட் கற்களையா?

விவசாயப் புரட்சி என்றே
விளைநிலங்களை விடமாக்கினாய்.
தொழிற்புரட்சி என்றே
தொழிற்சாலை கழிவுகளை
என் கருப்பைக்குள் புகுத்தி
கருவறுத்தாய் .
ஏன் மனிதா?
அது மட்டுமா!அது மட்டுமா!
சுரங்கம் வெட்டி, சுரங்கம் வெட்டி
கனிமங்கள் அழித்தாய்-நான்
பாதுகாத்த புதையல்கள் அழிவதை
பார்த்தே நீயும் கடக்கின்றாய்.
சோழநாடு சோறுடைத்து.
சோறின்றி விவசாயி
எலிபிடித்து உண்டநிலை
ஏன் மறந்தாய்?
மீதமிருக்கும் மிச்ச நிலத்திலும்
மீத்தேன் எடுக்க அலையும்
கூட்டத்தோடு கூடியே களிப்பாயோ!?
வள்ளுவா
'சுழன்றும் ஏர் பின்னது உலகம்' என்றாய்.
பட்டறிவு, பகுத்தறிவு ஏதுமின்றி,
கெட்டநிலையறியாது
பறந்து பறந்து ஓடுகின்றான்.
ஒரு வீடு போதாது
இருவீடு,பலவீடென
ஊர்ஊராய்ச் சேர்க்கின்றான்.
ஒரு காரு போதாதென
கார்களாய் வாங்கிக் குவிக்கின்றான்.
வயலை விற்று கார் வாங்கி
கார்ப்பரேட் முதலாளிகளின்
கால்நக்கும் ஏவலாளியானான்.
உழவனோ கூலியாய்.

நீ தூங்கும் வீட்டினிலே,
நிச்சலமான நேரத்திலே,
விதை முட்டும் சத்தம் உணர்ந்தாயோ,
விதை முட்டி முட்டி
முளைக்க முடியாமல் மரித்தவற்றின்
ஓலங்கள் கேட்டாயோ!
உழவன் உயிர் துறந்தாலும்
உணவளிக்கும் வயல் மறவான்.
தொழுதென்னை
வணங்கியே பயிரிடுவான்.
தொண்டு காலமாய்
எனக்கும் அவனுக்குமென
அறுபடாத உறவை
அறுத்தாய் நீ!
காவிரித்தாய் கைவிரிக்க
கையேந்தி அலைகின்றான்.
கைகழுவினர்,
காலால் எட்டி உதைத்தனர்.
கோமனத்துடன் எனது மகன்
உருண்டு புரண்டு அழுதானே!
உணர்விருந்தால் அவனுக்கா
உயிர்க் குரல் கொடுத்திருப்பாய்.

உப்பிட்டுத்தான் உண்கிறாயா?
உணர்வின்றி அலைகிறாயா?
ஏன் மறந்தாய் மனிதா?

பசியென்று வந்தோரை வாழவைத்து
பாரெல்லாம் கொடை கொடுத்து
வாழ்ந்த மனிதா...
இன்று
பீட்ஸா ,பர்கர் உண்டு
பீஸ்பீஸாக அறுத்துக் கிடக்கின்றாய்
தடுக்கி விழும் இடத்திலெல்லாம்
முளைத்து விட்ட மருத்துவமனைதோறும்.
பாரம்பரிய உணவு மறந்தாய்.
பாரமானாய் உலகிற்கே!

தீநுண்மி உயிர் பறிக்க காத்திருக்க,
கூட்டுக்குள் புழுவென
வீட்டுக்குள் முடங்கினாய்.

அயல்நாட்டு விதை விதைத்து,
அன்னை வயலை மலடாக்கி,
அடுத்த வேளை உணவிற்கே
அந்நியரிடம் கையேந்தும்
நிலை தாழ்ந்தாய்.
தகுமா? இது தகுமா?
நன்றி.
மு.கீதா
புதுக்கோட்டை
தமிழ் நாடு
இந்தியா.