ஈரோடு தமிழன்பன் வாசகர் வட்டம் அமெரிக்கா (FETRA),
அமெரிக்க தமிழ் வானொலி,
ஒரு துளிக்கவிதை புதுச்சேரி,
மகாகவி ஈரோடு தமிழன்பன் பிறந்தநாள் விழாவில் வாசித்த கவிதை.
------------------------------------
மந்திரச் சொற்களால்
எந்திர மனங்களை
தந்திரமாய் கட்டுவிக்கும்
தமிழின் அன்பன்
தரணி போற்றும் தமிழன்பன்.
மாயச் சொற்களால் மயக்கவெண்ணாது,
மனிதம் தழைக்க
கனித்தமிழால் போராடிய
மகாகவி.
அதிகார வர்க்கத்தின்
எதேச்சாதிகார கொள்கைகளை
எதிர்த்து முழங்கியவன்
என்றும் புகழுக்காக பாடாத
ஏற்றக்கவியவன்.
சிந்தையொன்று செயலொன்றென
மந்தையாய் வாழ்வோரின்
மனங்களைப் பதப்படுத்தும்
சொல்லேர் உழவனவன்!
சூரியக் கதிர்களாய்
சுட்டெரிக்கும் கவிதைகள்
தமிழனின் மானத்தை
தலைநிமிரச் செய்யும்.
தண்ணிலவின் ஒளியென
தகதகக்கும் கவிதைகளோ
செந்தமிழின் செழுமைக் காட்டி
எந்தமிழ் எந்தமிழ் என்றே
எக்காளமிட்டு பெருமிதம்
கொள்ளச்செய்யும்.
சீர்மிகு தமிழால்
சீரற்ற எண்ணங்களை
சொல்லேரெடுத்து உழுது
ஏற்றம் கொள்ள வைக்கும்
தமிழ் உழவ..
உன்புகழ்பாட
தமிழ்த்தாய் ஆணையிட
பாடவந்தேன்.-உன்னைப்
பாடுவதும் தமிழைப் போற்றுவதும்
ஒன்றே !ஒன்றே!
தமிழாய் வாழும் மகாகவியே
தலைவணங்கி போற்றுகின்றேன்
தயங்காது ஏற்றருள்வாய் நீயும்...
நன்றி.
மு.கீதா
புதுக்கோட்டை