World Tamil Blog Aggregator Thendral: September 2014

Friday 26 September 2014

-வேண்டாம் விடுமுறை...

வேண்டாம் விடுமுறை...

இன்று பள்ளியின் முதல் பருவ நிறைவுத்தேர்வு....முடிந்தது..இனி 6ஆம் தேதிதான் பள்ளிக்கூடம் திறப்பு...

யாரெல்லாம் சந்தோசம்மா வீட்டுக்கு போகப்போறீங்க கை தூக்குங்கன்னதும் ...எல்லா குழந்தைகளும் அமைதியா...ஏய்ய் ..பொய் சொல்லாம சொல்லு ...யாரு வருத்தமா போறீங்கன்னதும் எல்லாரும் கைதூக்கினார்கள்....

ஏன்டாம்மா வீடு பிடிக்கல காரணம் சொல்லுன்னு சொன்னதும்..

*வீட்ல அம்மா வேலைக்கு போய்டுவாங்க தனியா இருக்கனும் என் ஒரு குரல்..

*எப்ப பார்த்தாலும் வேலை செய்யலன்னு திட்டிக்கிட்டே இருப்பாங்க,செய்யலன்னா அடிப்பாங்கன்னு ஒரு குரல்....

*டி.வி.யே பார்க்க கூடாதுன்னுவாங்க நாங்க என்னதான் செய்றதுன்னு ஒரு குரல்

*நண்பர்களையெல்லாம் பாக்க முடியாது கஷ்டமாருக்கு டீச்சர்னு ஒரு குரல்...


*போரடிக்கும் டீச்சர்னு ஒரு குரல்...

Thursday 25 September 2014

வந்தாயோ..

பாராமல்
 பார்த்துச் சென்ற விழிகளும்
தொடாமல்
தொட்டுச் சென்ற விரல்களும்
மனதினுள் உன் வருகையை அறிவித்தபடி....

Tuesday 23 September 2014

Monday 22 September 2014

பறக்கிறேனே அம்மாநனைந்து நடுங்கிய
கறுப்புக்குஞ்சை
கையில் தந்து
காக்கா தூக்காமல்
காத்திடுவெனென
எதிர்வீட்டார் கூற

பிறந்த குழந்தையை
அணைப்பதுபோல் உள்ளங்கையில்
அடக்கி வாளிக்குள் வைக்க

சிலமணித்துளிகளில்
அட நான் பறக்கிறேனே .....அம்மாவென
பறந்து கண்ணாடியை முட்டி
 பயப்பட வைத்து....

தாய்க்குருவி அலற
காற்றில் தவழ்ந்தது
காக்கையை ஏமாற்றி...

Sunday 21 September 2014

ஓங்கி ஒலிக்கும் குரலாய்...


ஓங்கி ஒலிக்கும் குரலாய்...


அழியும் கலையை மீட்டெடுக்கும் முயற்சியில்
        ”  பைந்தமிழ் அறக்கட்டளை”யின் மூலம் புதுகையில்....

தமிழனின் இசைக்கருவி..உலகில் உள்ள அனைவரையும் தாளமிட வைக்கும் பறை....

                                            புத்தர் கலைக்குழு அளிக்கும்
                                             ”பறைப்பயிற்சி முகாம்”

வருகின்ற விடுமுறையில் மூன்று நாள்கள் புதுக்கோட்டையில்......

நாள்:27.09.14,28.09.14,29.09.14

ஆர்வமுள்ளவர்கள் அணுக: 9659247363

நிலவு தேயும் நேரம்


                         

                     வீடே பரபரன்னு இருக்கின்றது….வினயாவின் வரவிற்காக…அந்த வீட்டின் செல்ல மகள் அவள்..வினயாவின் பாட்டி லெச்சுமி, இட்லிக்கடை வியாபாரத்துடன்  பேத்திக்கு பிடிக்கும்னு பணியாரமும், பலகாரங்களும்  சுட்டுக்கொண்டிருந்தாள்…அம்மா பவானியோ மகளுக்காக அறையை சுத்தம் பண்ணிக்கொண்டிருந்தாள்…பின்னே…எவ்ளோ பெரிய படிப்பு ….குடும்பக் கஷ்டத்த நினச்சு புள்ள இராப்பகலா கண்ணுமுழிச்சுல படிச்சா. டாக்டரருக்கு தான்  படிப்பேன்னு நல்ல மார்க்கு வாங்கி,இப்ப டாக்டராவும் ஆயிடுச்சுல்ல…அவள் மட்டுமல்ல வினயா ஆசையா வளர்த்த செடிகளும் அவளுக்காய் காத்திருந்தன...வினயா வர்றான்னு சொன்னதும் இந்த டாமி  கூட வால ஆட்டிக்கிட்டு வாசலயே பாக்குது....
சங்கர் தலகால் புரியாம ஓடிஓடி வேல பார்த்தான் .லெட்சுமி தன் மகன ஆச்சரியமா பார்த்தா…நம்ம புள்ளயா இவன்..ஊர்ல ரௌடின்னு பேரு வாங்கி யாருக்கும் அடங்காம திரிஞ்சவன்.அத  நினச்சு கவலப்பட்டவள பாத்து ஒரு கால்கட்ட போட்டுட்டா சரியாபோகுமுன்னு எல்லோரும் சொன்னாகன்னு நம்பி தேடித்தேடி பவானிய அவனுக்கு கட்டிவச்சா.பிறகும் அவன் திருந்தல…நித்தம் போராட்டம் தான்..

Friday 19 September 2014

மொட்டின் துயரமாய்

{ஆனந்த ஜோதி மற்றும் ஆத்ம சங்கமத்தில் வெளியான சிறுகதை}மீள்பதிவு
               

  முதல் பருவத் தேர்வு விடுமுறை கழித்து  பள்ளி துவங்கிய முதல் நாள் ....மாணவிகளைக் காணப் போகும் மகிழ்வில் ஆர்வத்துடன் வகுப்பில் நுழைந்தேன் .மலையேறுபவரைப் போல முதுகில் புத்தக மூட்டையும் ,கையில் சாப்பாட்டுக் கூ டையுமாக தோழிகளைக் காணும் ஆசையில் இங்கும் அங்கும் சிட்டுக்குருவிகளாய் மாணவிகள் ஓடிக்கொண்டிருந்தனர் .என்னைக்கண்டதும் பட்டாம் பூச்சிகளாய் பறந்தவர்கள் பூவில் அமரும் தேனிக்கள் போல அவரவர் இடத்தை சரணடைந்து சலசலத்துக் கொண்டிருந்தனர் சிற்றோடையாய் ...

Thursday 18 September 2014

வாழ்க்கை

 நறுமணங்களும் ,கசடுகளும்
நிறைந்த என் பயணத்தின்
எல்லை காணவே
விழையும்
மனம் ....துலக்கம்

 துலக்கம் -குறுநாவல்
பாலபாரதி  -  விகடன் பதிப்பு

இன்று வங்கியில் ஒரு பணி என்பதால் சென்று அங்கு தாமதிக்கும் காலத்தைக் கழிக்கும் பொருட்டு பாலபாரதியின் துலக்கம் நாவலை எடுத்து சென்றேன்....

எங்கிருக்கிறேன் என்பதையே மறக்கடித்து நாவலில் புகவைத்து விட்டது நாவலின் கரு.என்னால் மீள முடியவில்லை....ஒரு ஆட்டிசம் குழந்தையை மையமாகக் கொண்ட குறு நாவல்...

குழந்தையின் செயல்பாடுகளை கதை மூலம் தெரிவித்துள்ள பாங்கு...அருமை.

Tuesday 16 September 2014

இன்று பிறந்தார்....நமக்காக....

இன்று பிறந்தார்....நமக்காக....

தமிழர் தலை நிமிரக்காரணமானவர்.இன்னுமும் அடிமை மோகத்தில் வாழும் தமிழருக்கும் தன்மானம் உண்டு என்று அறைகூவியவர்.

சுதந்திரப்போராட்டத்தில் தன் பதவிகளை எல்லாம் தூக்கி எறிந்து கதர் மூட்டைச் சுமந்து தெருதெருவாக விற்றவர்......

பெண்களின் கையிலிருந்து கரண்டியைப் பிடுங்கி புத்தகத்தைக் கொடுங்கள் என முழங்கியவர்....

இன்றைய அரசியலுக்கு அடித்தளமிட்ட தன்னலமற்ற தொண்டர்...

கடவுளை காரணம் காட்டி மனிதரை ,மனித நேயத்தை மறந்தவர்களைத் துணிவோடு எதிர்த்தவர்...
:
”தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மணடைச் சுரப்பை உலகு தொழும் “

என பாரதிதாசனால் போற்றப்பட்டவர்....

பெண்களால் பெரியார் என பாராட்டப்பட்டவர்....

இன்றைய விஞ்ஞானத்தை அன்றே எடுத்துக்கூறிய தீர்க்கதரிசி...

அவர் தாம் பெரியார்...அவரே பெரியார்....
தலைவணங்குகின்றேன் ....அவரின் தொண்டுக்கு...

Monday 15 September 2014

சாலை


 நிலமகளின் கருப்பு புடவை
 ஓட்டைகளும்,ஒட்டுக்களுமாய்
 தறிநெய்பவளின் கிழிந்த
 துகிலென....

Sunday 14 September 2014

வலைப்பூ விருது..


விருது பெறுதல் மகிழ்வு அதனினும் மகிழ்வு பெற்ற விருதை மற்றவர்களுக்கு பகிர்ந்து அளித்து மகிழ்தல்...இதற்கெல்லாம் தனி பக்குவம் வேண்டும்....வலைப்பூ பயிற்சியில் ஆசிரியராக அறிமுகமாகி இன்று குடும்ப உறுப்பினராக மாறியுள்ள  சகோதரர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு தஞ்சையம்பதி அளித்துள்ள விருதுவலைப்பூவில் முதல் ஆளாக வந்து மற்றவர்களை ஊக்கப்படுத்தும் பண்பாளர்.ஒரே நாளில் பழகி உறவாக முடியும் இவரின் துணைவியால் மட்டுமே...மறக்க முடியாத நட்பு...இன்று நான் வலைப்பூவில் 300 படைப்புகளுக்கு மேல் எழுத அடித்தள மிட்டவர்களில் கரந்தை ஜெயக்குமார்
அவர்களும் ஒருவர்..

Friday 12 September 2014

அடர்வனமாய்


அழித்தாலும் மனதை
ஊடுறுவி உயிர்விக்கும்
இயற்கையைப் போல

உதறும் உறவுகளால்
உதிராமல் உயிர்க்கிறேன்
அடர்வனமாய்....

மழை

வானம் விளக்கேந்த
கார்மேகம் முழங்க
ஆரவாரமாய்
வீட்டிற்குள் நுழைந்து
விளையாட அழைத்த
மழைத்தாரையை உள்விட மறுக்க
அடம் பிடித்து அழுகின்றது
அதிவேகமாய்...
மழையறியுமா
இரவு பெண்களுக்கானதல்லவென.....

Thursday 11 September 2014

என்ன தப்பு?இன்று வகுப்பில் சமூகத்தில் பெண் குழந்தைகட்கு வரும் பாதிப்புகளைக்கூறி ஆபத்திற்கு உதவ,உன்னைத் தற்காத்துக் கொள்ள என்னன்ன செய்யலாம் என்ற கலந்துரையாடலில் குழந்தைகளின் பதிலாய்..ஒரு குரல்.மிளகாய்த்தூள் வச்சுக்கலாம்மா...இல்லம்மா..கத்தி வச்சுக்கலாம்மா..என்றது வேறு ஒரு குரல்...1098க்கு போன் பண்ணலாம்மா என்றது ஒரு குரல்...வேண்டாம்மான்னு ஓங்கி ஒலித்தது...ஒரு குரல் அனைவரும் நோக்க, ஆசிட் வச்சுக்கலாம்மா...அதிர்ந்து போனேன்....அன்பான குழந்தைகளின் உலகம் ..இப்படியா மாறுவது...தப்பும்மா என்றேன்...ஏம்மா தப்பு ஆண்கள் மட்டும் தன் சுயநலத்துக்காக முகத்துல ஊத்தி எத்தன பெண்கள வீணாக்குனாங்க ...நாங்க எங்க தற்காப்புக்கு வச்சுக்கிட்டா என்ன தப்பு..?
வன்முறைக்கு வன்முறைத் தீர்வல்லம்மா என.....
அப்போதைக்கு குழந்தைகளை மடை மாற்றி விட்டேன் ..ஆனால்.....?!

குழவி 8

நிலவழைத்து சோறூட்ட
அழைத்த நிலவு
வரவில்லையென
கண்ணீரில் கைகால் உதறி
கலங்கும் நிலவை
எதைக்காட்டித் தேற்ற....?

Tuesday 9 September 2014

மௌனம்

மௌனத்தை ஊடறுக்கும்
சொற்கோவைகளுக்கு
எதிர்வினையாய்....

வீழும் பழுத்த இலையென
மௌனத்தின் ஊடுறுவல்..
மனம் தொடாத
சொற்களின் பகிர்தலில்..Monday 8 September 2014

பேச்சு

பேசாமலிருப்பதால்
நிகழாமலில்லை
பேச்சு...!

Sunday 7 September 2014

திருமணத்தில்

ஏ புள்ள
அந்த ஆளுவோல
நவுரச்சொல்லு
பட்டுகிடப்பான்
புள்ளக முகத்த மரச்சிகிட்டு...

இவனுகளோட
முதுக பாக்கவ
ஓடியாந்தேன்
இம்புட்டு கஷ்டப்பட்டு

ஏ கிழவி
நீ வரலன்னு
யார் அழுதா...?

அப்றமா பாக்க வீடியோ
வேணும்ல
உனக்கெல்லாம் புரியாது
போ..போ...

அடப்பாவியோளா
வேலயெல்லாம் விட்டுப்போட்டு
பத்திரிக்க வச்சானேன்னு
வந்தா நாரமவன்
இந்த விரட்டு விரட்டுரானே..

வீட்டுக்குள்ளேவச்சு
நடத்தி போட்டாவா புடிச்சு தள்ளு
ஊரக்கூட்டி முதுக பாக்க சொல்லாத
போக்கத்தவனே.....

எங்கு தொடங்குவது?

எங்கு தொடங்குவது?

நேற்று அருங்காட்சியகம் சென்றிருந்தேன்.ஒவ்வொருமுறையும் என்னை அதிசயிக்க வைக்கின்றது...கற்பகத்தருவாய்...

புதுப்பிக்கப்பட்டு புதிதாய் மிளிரும் அதன் மரப்பலகையைக்கண்ட போது வேதனைப்படாமல் இருக்க முடியவில்லை...தன் பெயர்களைப்பொறிப்பதில் மனிதனுக்கு உள்ள ஆர்வம்...ச்சே.வரலாற்றுச் சின்னங்களில் எழுத எப்படி மனம் வருகின்றது?
நம் பொக்கிஷமல்லவா அது?அதை நாமே சிதைக்கலாமா?பொது எதுவாயிருந்தாலும் சிதைக்கலாம் என்ற என்ணத்தை எந்த வகுப்பில் கற்று தந்தோம்....

ஏதாவது செய்யனுமே..எங்கு ஆரம்பிப்பது..கல்லூரி மாணவர்களிடத்திலா?பள்ளி மாணவர்களிடத்திலா?

புதுகை இளைஞர்கள் கவனத்தில் கொள்வார்களா?ஒரு மாணவன் ஆரம்பித்தால் போதும் மற்றவர்கள் அணி திரண்டு விடுவார்கள்

அங்கு உள்ள பாதுகாப்பாளரிடம் குழந்தைகளைக்கூட்டி வருகின்றேன் எழுதியவற்றை எல்லாம் அழிக்க என்று கூறி வந்தேன்..இத்தனைக்கு எல்லா இடங்களிலும் பணியாளர்கள் உள்ளனர்...என்ன சொல்வது...?

கவிராசன் அறக்கட்டளையின் நல்லாசிரியர் விருது

05.09.2014 
நகரத்தார் திருமண மண்டபம்...
நல்லாசிரியர் விருது வழங்கும் விழா

மாலை 6 மணி அளவில் விழாத்துவங்க முன் முந்திக்கொண்டு மழை ஆரவாரத்துடன் வந்து வாழ்த்தியது.மழைவாழ்த்தைப் பெற்று விழா துவங்கியது.

அறக்கட்டளையின் அறங்காவலரும் விழா அமைப்பாளருமான முருகபாரதி அவர்கள் வரவேற்று அறக்கட்டளை எதன் அடிப்படையில் விருது பெறுவோரை தேர்ந்தெடுக்கின்றது என்பதைக்கூறி இதுவரை 8 ஆண்டுகளில்
46 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கி சிறப்பித்துள்ளதாக கூறினார்.இவ்வாண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 5 ஆசிரியர்களை தேர்வு செய்ததையும் கூறினார் .

தேசியக்கவிஞர் முனைவர்.திரு கஸ்தூரிநாதன் அவர்கள்
தலைமையேற்று சிறப்பித்தார்.

விருது பெறுவோர் அறிமுகம் துவங்கியது...

திருமிகு.சா.விஸ்வநாதன் அவர்களை அறிமுகம் செய்தார் அவரின் மாணவரே..

திருமிகு.இரா.பாலசுப்ரமணியன் அவர்களை அறிமுகம் செய்தார் பாலஸ்ரீ ஹரிமோகன் ...

திருமிகு.சி.குருநாதசுந்தரம் அவர்களை அறிமுகம் செய்தார் திரு.மகா.சுந்தர் அவர்கள்
திருமிகு.சு.சாந்தகுமாரி அவர்களை அறிமுகம் செய்தார் திரு.கஸ்தூரிரெங்கன்
அவர்கள்.
என்னை அறிமுகம் செய்தார் திரு.வள்ளியப்பன் அவர்கள்...அறிமுகத்தில்

சுதந்திரத்திற்காக பாடுபட்ட கும்பகோணத்தைச் சேர்ந்த தியாகி .மாணிக்கம் அவர்களின் பெயர்த்தி ஆவார்.
இவருக்கு பிடித்தவையாக இருப்பது குழந்தைகளும் புத்தகங்களுமே.

முருகேசன் - சுசிலா இணையரின் மகளாக 08.01.1969 ஆம் ஆண்டு, அரியலூரில் பிறந்தவர் ஆசிரியர் மு.கீதா. எம்.ஏ.தமிழ்., எம்.ஏ.பொருளியல்., முடித்து, எம்ஃபில்., எம்.எட் பட்டம் பெற்றவர். அரியலூரில்  தொடங்கி, 26 ஆண்டு காலமாய் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இதில் 17 ஆண்டுகள் கிராமங்களில் அடக்கம். தற்போது புதுக்கோட்டை, சந்தைப்பேட்டையில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றுகிறார். 

சமூகச் சிந்தனை, பகுத்தறிவுச் சிந்தனை, பெண்ணியச் சிந்தனைகள் இவரது தளம். மாணவர்களுக்குப் பாடங்கள் மட்டுமின்றி, பல்வேறு வகையிலும் அவர்களை முழு மனிதராக ஆக்கும் பொருட்டு செயற்பட்டு வருபவர். மாணவர்களுக்குப்  பொருளியல் ரீதியாகத்  தொடர்ந்துப் பங்களிப்பு செய்பவர்.  

ஆசிரியர் பணி மட்டுமின்றி, இவர் ஓர் சிறந்த எழுத்தாளரும் ஆவார். "வேலுநாச்சியார் சிந்தனையில் பெண்ணியம்" என்பது இவரின் முதல் படைப்பாகும். புதுக்கோட்டை உலகத்திருக்குறள் பேரவை வெளியிட்டுள்ள நூல் தொகுப்பில், இவரது ஆய்வுக் கட்டுரைகள் வெளியாகி உள்ளன. சென்னையில் தென்றல் சமூக நல அறக்கட்டளையின் சார்பில், கின்னஸ் சாதனைக்காக 77 மணி நேரம் கவிஞர்கள் கவிதை வாசித்தனர். அதில் சிறப்பாகக்  கவிதை வாசித்து “புரட்சித் தென்றல்” விருதைப் பெற்றவர்.   

கனல், இயல்பினி எனும் புனைப்பெயர்களில் சிற்றிதழ் மற்றும் மாத இதழ்களில் இவரின் படைப்புகள் வெளியாகி உள்ளன. வேலுநாச்சியார் பெயரில்  வலைப்பூ (Blogspot) தொடங்கி, ஏராளமான கதை,கவிதை, கட்டுரைகளை  எழுதி வருபவர்.

 முகநூலில் தேவதா தமிழ் எனும் பெயரில் சமூகச் சிந்தனைகளை வெளிப்படுத்தி வருகிறார். ஓவியம் வரைதலும், கைவினைப் பொருள்கள் தயாரிப்பதும் இவரின் கூடுதல் அம்சங்களாகும்.

பைந்தமிழ் அறக்கட்டளை எனும் அமைப்பு இவரால் உருவாக்கப்பட்டது. மேலும் புதுக்கோட்டையில் சிறப்பாகச் செயற்பட்டு வரும் மரகதவள்ளி - மணிமன்ற அறக்கட்டளை, வீதி கலை இலக்கியக் களம், உலகத் திருக்குறள் பேரவை ஆகியவற்றில் இவர் உறுப்பினராகத் தம் பங்கை ஆற்றி வருகிறார். 

சுய வாழ்க்கைக்கும், சொந்தச் சமூகத்திற்கும் ஏற்ற வண்ணம் மாணவர்களை உருவாக்குவதே இவரின் தொடர் முயற்சியாக இருக்கிறது. அதற்கேற்ப தொடர்ந்து உழைத்தும்  வரும்  ஆசிரியர் மு.கீதா அவர்களை வெகுவாகப் பாராட்டுகிறோம் என்றார்.. 

சிறப்புரையாக பேராசிரியர் மு.இராமச்சந்திரன் அவர்கள் நல்லாசிரியரின் பண்புகள் ஒரு ஆசிரியர் எப்படி மாணவர்கள் மனதில் இடம் பெற முடியும் என்பதை தனக்கெ உரிய நகைச்சுவையான பேச்சால் அரங்கத்தை அதிர வைத்தார்.

விழா இனிதே நிறைவுற்றது...

2002இல் நான் புதுகையில் உள்ள மழையூரில் ஆசிரியாகப் பணிமாறுதலில் வந்தேன்....2005இல் தற்போது பணிபுரியும் சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளிக்கு மாறுதல் பெற்றேன் இது என் 5ஆவது பள்ளியாகும்..

புதுகை என்னை எனக்கே அறிமுகம் செய்தது.ஒரு கவிஞராக என்னை உலகுக்கு அறிமுகப்படுத்தியது.என் முன்னேற்றத்தில் என் குடும்ப நண்பர்களுக்கும்,தோழர்களுக்கும்,இலக்கிய நண்பர்களுக்கும் மிகுந்த பங்குண்டு...
துன்பங்களும் துரோகங்களும் எனை சூழ்ந்த கணத்தில் ஒரு தாயாய் எனை தாங்கி நான் வீழாமல் எனை அரவணைத்த பல நல்ல உள்ளங்கள் சூழ  வாழ்வது நான் பெற்ற வரமே..


இன்று நல்லாசிரியராக என்னை அடையாளப்படுத்தியுள்ளது.
விருது பெற்றதை கூற நான் கூச்சப்பட்ட நிலையில் என் பெருமையை எனக்கே கூறி என்னை தட்டிக்கொடுத்த நல்ல உள்ளங்கள் மத்தியில் நான். இந்த விருதுக்கு நான் மேலும் தகுதியானவளாக மாற வேண்டிய கடமையும் பொறுப்பும் வந்துள்ளது..
புதுகையை எனது தாய் வீடாகக் கருதுகின்றேன் ...நன்றி புதுகை மக்களுக்கும் கவிராசன் அறக்கட்டளையினருக்கும்
   

Wednesday 3 September 2014

தனிமை

தனிமைக் கூட்டை
துன்பச்சிறகுகளால்
உடைக்க ...
வரவேற்றது
விரிந்த வானம்....!

பளிங்காநத்தம்...பள்ளியும் மேலப்பழூர் பள்ளியும்....

சிறுவளூரைத் தொடர்ந்து....

1990முதல்1993 வரை எனது ஆசிரியப்பணி பளிங்காநத்தம் என்ற ஊரில் தொடர்ந்தது..அங்கு இருந்த சில வருடங்கள்...
 வாழ்வில்மறக்க முடியாதவை..
படத்தில் என்னுடன் பணிபுரிந்த பிரேமா,பாஸ்கா,அமலி,குணசீலி,ஆகியோருடன்

அந்த ஊருக்கு பேரூந்து எப்பவாவது வரும் காலையில் ஒருமுறை மாலையில் ஒருமுறை..மட்டும்...கல்லக்குடியில் இறங்கி 3 கிமீ நடந்தே செல்ல வேண்டும் .மாதமொருமுறை நடக்கும் கூட்டத்திற்கு 7 கிமீ செல்ல வேண்டும் ..பெரும்பாலும் நடைதான்...இப்போ பேரூந்து வசதி உள்ளது...
அங்கு மாணவர்கள் பெரும்பாலோர் சல்லிக்கட்டு செல்வார்கள்...

ஒருமுறை 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடிதம் எழுதும் பயிற்சி...40மாணவர்களுக்கும் அஞ்சலட்டை வாங்கிக் கொடுத்து என் தோழிக்கு மடல் எழுத வைத்தேன்...தபால்காரர் ஏன்மா என்ன வேல வாங்கனும்னு முடிவு பண்ணிட்டியான்னு சிரித்துக்கொண்டே...முத்திரை குத்தினார்...அதில் என்ன சிறப்பெனில் அத்தனைக் குழந்தைகட்கும் அவள் பதில் எழுதி அனுப்பியது தான்...பாவம்...கை ஒடிந்தது என்றாள் சிரித்துக் கொண்டே...

அடுத்ததாக

என் வாழ்வின் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கெடுத்த பள்ளி திருமானூர் ஒன்றியத்தைச் சார்ந்த மேலப்பழூர் ....ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி....
பள்ளிக்குள் நுழைந்து விட்டால் போதும் அத்தனை கவலைகளும் பறந்து விடும்....அன்பான மாணவர்கள்...பிரியமான ஆசிரியர்கள்...வரும் வழியெல்லாம் நலம் விசாரிக்கும் கிராம மக்கள்...
திருமானூர் ஒன்றியத்தில் அது தான் பெரிய பள்ளி..

வருடம் தவறாமல் மாணவர்களுடன் சுற்றுலா....

சிவராஜ் தலைமையாசிரியருடன்
 பள்ளி ஆசிரியர்களுடன்
 பள்ளிக்கண்காட்சியில்
 பள்ளி ஆண்டுவிழாவில்...பொம்மலாட்டம் ...


ஒரே குடும்பம் போல் அத்தனை ஆசிரியர்களும் ஒற்றுமையுடன்...எப்போதும் இனி கிடைக்காது அந்த காலம் போல் என ஒவ்வொருவரும் கூறும் படி...
அங்கு படித்த மாணவன் ராமகிருஷ்ணன் இப்போது என் முகநூல் நண்பனாக....அயல்நாட்டுப்பணியில்....! பெருமையுடன் பேசுவேன் அவனுடன் வேறென்ன வேண்டும் ஒரு ஆசிரியருக்கு..

கீதா என்ற மாணவி அறிவியலில் அத்துபடி எந்த வார்த்தை எந்த பக்கத்தில் உள்ளதென கூறிவிடுவாள் ..அவள் இப்போது கணிதப்பட்டதாரி ஆசிரியர்...எப்போதும் அன்பாக பேசும் குழந்தைகள்..என்.வாழ்வின் சொத்து

கோபிநாத் என்ற மாணவனுக்கும் படிப்புக்கும் ஏக தூரம்   படிக்க பிடிக்காமல் சென்னைக்கு ஓடியே போய் விட்டான்..ஒரு வாரம் கழித்து மீண்டும் வந்த அவனிடம் என்னடா பண்ண எனக் கேட்ட போது ஒரு மளிகைக் கடையில் பொட்டலம் போட்டேன் டீச்சர் அப்றம் ஓட்டலில் மேசைத் துடைத்தேன்னான்...மடிப்புக் கலையாமல் சட்டை அணியும் பழக்கம் உள்ளவன்...மனதிற்கு வருத்தமாய் இருந்தது ..இப்போது மளிகைக்கடை வைத்துள்ளான் என கேள்விப்பட்டேன்...அவன் எனக்கு எழுதிய கடிதம் இப்போதும் பொக்கிஷமாய் என்னிடத்தில் ...நீங்க சொன்னதெல்லாம் இப்ப நினச்சு பார்க்கிறேன் என்பான் ...

சென்னையில் பொறியியலாராய் வேலைப்பார்க்கும் சிலம்பரசன்,ராணுவத்தில் பணி புரியும் சரவணன்,என்னை தெய்வமாகவே எண்ணி அன்பைப்பொழியும்...செல்வகுமார்..என..என் பிள்ளைகள் என்னுடனே...இருக்கின்றனர் ....

கொடைக்கானலில்...
 ஆழியாரில்.....
 பவானிசாகர் அணைக்கட்டில்...
 ஊட்டியில்....
 கன்னியாக்குமரியில்...


ஒருநாள் தஞ்சை வரும் பேரூந்தில் ஒரு பையன் எனக்கு அடையாளம் தெரியவில்லை ஆனால் டீச்சர் நல்லாருக்கீங்களா என்றான்...எப்படிப்பா மறக்காம இருக்க என்றேன்...ஒருமுறை சுற்றுலா செல்லும் போது பஸ்ஸில இடம் கிடைக்காம நின்னுகிட்டு இருந்தேன் நீங்க உங்க பக்கத்துல கூப்பிட்டு உக்கார வச்சீங்களே டீச்சர் உங்கள எப்படி மறக்கமுடியுமென்றான்....சின்ன செயல் அவன் மனதில் நான் நிரந்தரமாய்..இடம் பிடிக்கக் காரணமாய்....
என்ன செய்றப்பா என்றேன்...ராணுவத்துல இருக்கேன் என்றான்...மகிழ்வாய் உணர்ந்தேன்...!

 ஒரு முறை நண்பகல் நேரம் பள்ளிக்கு பள்ளிக்கல்வி இயக்குநராக இருந்த திரு .விஜயக்குமார்.அவர்கள் வந்திருந்தார்கள்...நான்   4ஆம் வகுப்பில் பதட்டத்துடன் ...உள்ளே நுழைந்ததும்... மாணவன் சங்கிலிமுருகன் என்பவனிடம் அவன் கையில் கட்டியிருந்த கைக்கடிகாரத்தில் மணி என்ன எனக்கேட்க அவன் கூலாக 1மணி என்றான்....இல்லையே என்க..என் கடிகாரத்துல இதான் சார் டைம் என்றான்..நானோ எதிர்த்து பேசுறானே எனத்தவிக்க, அங்கு இருந்த யானை முகமூடி ஒன்றை மாட்டிக்கொண்டு ஒரு மாணவி நடித்தாள்...சரியா பேசாம சிரித்துக்கொண்டே இருக்கான்னு நான் சிரிக்காம சரியா சொல்லென அதட்டினேன்...அவரோ....சிரிக்கத்தானேம்மா பள்ளி என்றார்...அவரை விடாமல் மாணவர்கள் ...பேசியதைப்பார்த்து...பசியக்கூட மறந்துட்டாங்களேன்னு வியப்படைந்து சென்றது என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று.....

ஆசிரியர்களும் மாணவர்களாய் வாழ்ந்த பொற்காலங்கள் அவை.....என் வாழ்வில் பிரியாத மக்களுடன்....இன்றும்...
                                                                                                                      
                                                                                                                                  தொடரும்

Tuesday 2 September 2014

சிறுவளூர்-அரியலூர் மாவட்டம்

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ,சிறுவளூர்-அரியலூர் மாவட்டம்

20.07.1988இல் நான் முதன்முதலில் பணியேற்ற பள்ளி....

கான்வெண்டில் படித்து முடித்தவுடன் வேலைகிடைத்து பணிக்கான உத்தரவு கைகளில்..மனதில் பொங்கி வழிந்த உற்சாகத்தை அளவிட வார்த்தைகளில்லை....என்னுடன் பணி உத்தரவு பெற்றவர்களுக்கு வேறு மாவட்டங்களில் வேலை கிடைக்க எனக்கு மட்டும் என் மாவட்டத்திலேயே...காரணம் பக்கத்து வீட்டில் வசித்த, நான் அன்பாக அப்பா என அழைக்கும் முன்னால் எம்.எல்.ஏ அரியலூர் ஆறுமுகம் அவர்கள் தான்.வீடு அல்லது பள்ளியென வாழ்ந்தவள் திடீரென வேலைக்கு...கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல....

சிறுவளூர் எங்க இருக்குன்னு கூடத் தெரியாது,விசாரித்த பொழுது பேருந்து வசதி மட்டுமல்ல எந்த வசதியுமற்ற ஒரு குக்கிராமம்..அரியலூரிலிருந்து இரண்டு பேரூந்து ஏறி இறங்கி பின் 2கிலோமீட்டர் நடந்து சென்றால் வரும்  சிறுவளூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி .

Monday 1 September 2014

சொல்

 மழையாகும்
அன்பில் ....

விதையாகும்
 சொற்கள்......