World Tamil Blog Aggregator Thendral: சங்க இலக்கியம்
Showing posts with label சங்க இலக்கியம். Show all posts
Showing posts with label சங்க இலக்கியம். Show all posts

Wednesday, 18 November 2015

சங்க இலக்கியம்-புதுக்கவிதையாய்

சங்க இலக்கியம் எட்டுத்தொகை,பத்துப்பாட்டு என பதினெட்டு நூல்கள் அடங்கிய பதினெண்மேற்கணக்கு நூல் என அழைக்கப்படுகின்றது..இப்பாடல் 

எட்டுத்தொகை நூலாகிய


நற்றிணையில் இடம் பெற்றுள்ள பாடல்.நற்றிணை என்னும் இந்நூல் தனிப்பாடல்களாக பலராலும் பாடப்பட்டு பின்னர் தொகுக்கப்பட்டது. இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். எட்டுத்தொகை நூல்கள் இவையெனப் பாடும் வெண்பாவால் முதலிடம் பெற்றுத்திகழ்வது நற்றிணை ஆகும். நல் என்ற அடைமொழி பெற்றது. இதனை நற்றிணை நானூறு என்றும் கூறுவர். இந்நூல் 9 அடி முதல் 12 அடிகள் வரை அமைந்த 400 பாடல்களைக் கொண்டது. இந்நூலைத் தொகுத்தவர் யாரெனத் தெரியவில்லை. தொகுப்பித்தவன் "பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி" ஆவான். நற்றிணைப் பாடல்கள் அகப்பொருள் பாடல்களாகும்.நன்றி விக்கிபீடியா



1- குறிஞ்சி-கபிலர்
               
தலைவிக்கூற்று

[தலைவனின் பிரிவைத் தோழி தலைவிக்கு உணர்த்திய போது தலைவி சொல்லியது]

பாடல்

நின்ற சொல்லர்;நீடுதோறு இனியர்;
என்றும் என் தோள்பிரிபு அறியலரே;
தாமரைத் தண் தாது ஊதி,மீமிசைச்
சாந்தில் தொடுத்த தீம்தேன் போல,
புரைய மன்ற,புரையோர் கேண்மை;
நீர் இன்று அமையா உலகம் போலத்
தம் இன்று அமையா நம் நயந்தருளி,
நறுநுதல் பசத்தல் அஞ்சிச்
சிறுமை உறுபவோ?செய்பு அறியலரே




            கவிதை


நிலையான சொல்லோன்
 இனிமைக்கே உரியவனென்
தோள்பிரியான்

தாமரையின் மகரந்தமுகர்ந்து
மலைச்சந்தன மரத்தில்
வண்டு ஒளித்திடும் தேனென
உயர்ந்தோர் நட்பு உயர்வுடையதாய்

நீரின்றி வாழா உலகமாய்
அவனின்றி வாழ்வோமோ நாம்
பிரிவின் வேதனை மாய்க்குமோவென
செய்வதறியா தவிக்குமவர்
பிரிந்தே சிறுமையடையாரே.

பொருள்-

என்றும் மாறாத சொல்லுடையத்தலைவன்,இனிமையானவன்,என் தோளைப்பிரிவதை விரும்பாதவன்.
தாமரைமலரின் மகரந்தத்தை வண்டானது உறிஞ்சி மலைப்பகுதியில் இருக்கும் சந்தன மரத்தில் சேர்க்கும் தேனைப்போன்ற உறுதியானது உயர்ந்தோரின் நட்பு.
நீரின்றி உலகம் இயங்காததைப்போல நாமும் தலைவனின்றி வாழ மாட்டோம்,
பிரிவின் வேதனையைத்தாங்கமாட்டோம் என்பதால் தலைவன்  நம்மை விட்டுச்செல்ல மாட்டார்..நம்முடனே இருப்பார் என்று  ,தலைவனின் பிரிவைக்கூறிய தோழிக்கு ,தலைவி கூறியது.


இது என் சிறு முயற்சி...தொடர்வோம்..குறையிருப்பின் திருத்திக்கொள்ளும் காத்திருத்தலுடன்..