World Tamil Blog Aggregator Thendral: October 2013

Wednesday 30 October 2013

நாம் சிரிக்கும் நாளே திருநாள்


ஏன் அம்மா
நாம்வெடித்து மகிழ்வதெப்போ..?


 அடுத்த ஆண்டு காசுவரும்
 ஆசையா  நீ கேட்ட வெடிகளை
கட்டாயம் வாங்கிடலாம் என்றாள்

மத்தாப்பூ குச்சிகளை பெட்டியில்
வச்சுகிட்டேகேட்டாள்..தங்கச்சி
எனக்கும் நிறைய மத்தாப்பூவென..

இயலாத புன்சிரிப்பில் தங்கமே
தவறாமல் வாங்குவோம் என்றாள்..

வெடி மருந்தை அடுக்கிக் கொண்டே
கிழிந்த முந்தானையால் முகம் துடைக்க
எத்தனித்த வேளையிலே...

பட்டாசுடன் பட்டாசாய்
என் அம்மாவும்வெடித்துசிதறினாளே..

கையில் தீயுடன் தங்கையும்
காலில் நெருப்புடன் நானும்
தூக்கி எறியப்பட்டோமே..

வெடித்த வான்வெடியில்
என் அம்மாவின் சதைத்துண்டுகள்
வானத்தில் பூப்பூவாய் தெறித்து
அன்பு மகனே ..ஆசையா நீ கேட்ட
வானவெடியெ பார்த்துக்கோ என்றது

எஞ்சோட்டு சிறார்களே
எங்களையும் நினைப்பீரோ நீங்க வெடிக்கும் வெடியில்
 எங்களின் சதைத்துண்டுகள் கலந்திருக்கும்..
அதன் வடிவில் நாங்க நீங்க

வெடிப்பதை பார்த்து மகிழ்வோம்..அப்போது
 நாம் சிரிக்கும் நாளே திருநாள் 


வாழ்த்து மடல்

குறுஞ்செய்தி வாழ்த்து
குழுவாய் நொடியில்
அனைவருக்கும்...

எறும்பென ஓடும் எழுத்துக்கள்
எளிதாய் அழிந்து போகும்...

குழந்தமை நினைவுப் புதையல்களின்
தூசியைத் தட்டியது
கசங்கிய “வாழ்த்து மடலொன்று”

அதன் அழகிற்காய்
அனுப்பாமல்
பெட்டிக்குள்ளேயே...

எத்தனை வருடங்கள் சிறையில்?
எப்போது விடுவிப்பாய்....என
கேளாமல் கேட்டது..

என் நினைவுகளின்
பெட்டகம் நீ..
யாருக்காய் உனை
வாங்கினேனோ
அவர்களே நீயாய்
என்னுடனே உறை....


Monday 28 October 2013

நள்ளிரவில் கேட்கும் அழுகுரல்

சுனாமி சுருட்டிய
உயிர்களின் ஓலமாய்
அலையோசை...

சொந்தங்களைத் தேடி
கரைதனில் நாடி
ஆர்ப்பரிக்கும்
ஆழி அலை..

உலகின் கண்ணீர் துளி
ஈழம்

பூஞ்சோலை சிறார்களைப்
பாதுகாக்க ஏலாமல்
பாடையாய் போனோமே என
பதுங்கு குழியின்
விம்முகின்ற ஓசை..

உறவிழந்து ,உறுப்பிழந்து
உணர்விழந்து.உயிரிழந்த
தமிழினத்தின்
குருதி படிந்து
மறுகித் துடிக்கும்
ஈழ மண்ணின்
மெளன அழுகுரல்....

அலைகளின் ஓசையில்
அமிழ்ந்தே ஒலித்திடும்
நள்ளிரவில் கேட்கும்
அழுகுரலாய்..

Sunday 27 October 2013

உறுத்தலும்,ஒறுத்தலும்.

உறுத்தலும் ஒறுத்தலும்
-----------------------------
விபத்தில் அடிபட்ட
உயிர்தனை தவிர்த்து
தாண்டி வருகையில்
தன்னலம் நெஞ்சில்
முள்ளாய்...

குடிநீர் குழாய் உடைந்து
வீணாகும் புனலை
பார்த்துக் கொண்டே
நித்தம் கடக்கையில்..

பட்டாம் பூச்சிகளாய்
பறக்கும் மழலைகள்
பாரம் சுமந்து
பள்ளி சிறைதனில்
எழுத்துக்களால் அடக்கி
ஆளப்படுகையில்..

உணவு விடுதியில் மணக்கும்
உணவை பரிமாறும் சிறுவன்
பசியுடன் சாப்பிடல என
கூறுகையில்..

பூப்பறிக்கும் பிஞ்சு விரல்கள்
தீக்குச்சி அடுக்கி
நொந்து போகையில்
உறுத்துகின்றது...

பலரும்
உறுத்தலை ஒறுத்தலால்
மாறாமல் இயங்குகின்றது
உலகு...Saturday 26 October 2013

வீழ்வேன் என்று நினைத்தாயோ!


அவள்
-------------
யாதுமாகி நிற்பவளின்
கூற்றாய்...


தேங்கிய குட்டையல்ல
துள்ளும் அருவி
பாய்ந்தோடும் ஆறு
அள்ளிச் செல்வேன் அனைத்தையும்...

சலசலக்கும் ஓடை
சலியாது வளம் நல்குவேன்
ஆழ்மனக்கடல் நான்
கவலைகளைத் தேக்கி
சுனாமியாய் துன்பங்களை சுருட்டி
சுகங்களையே தருகின்றேன்...

இதமான தென்றல்
இனியவளே அனைவருக்கும்
சுழன்றடிக்கும் சூறாவளி
வீழ்த்த எண்ணும் பகைவருக்கு...

மழைக்கால நெருப்பாய்
மனதிற்கு இதமானவள்
மறந்தும் அணைக்க நினைத்தால்
சுட்டெரிக்கும் சூரியன் நான்...

உயிரினத்திற்கு மட்டுமல்ல
உயிரற்றவைகட்கும்
தோழமை நான்...

புதைத்தாலும்
பூமியில் விதையாய்

அழித்தாலும்
அனலில் தங்கமாய்

சிதைத்தாலும் சித்திரமாய்
மறைத்தாலும்
தமிழ் மறையாய்
வையத்துள் நிலையாய்
நிலை பெற்றிடும் என்னை


வீழ்வேனென்று நினைத்தாயோ...!

Thursday 24 October 2013

விடம்

விடம்

கடைசி சொட்டு
அருந்தும் போது
என்ன நினைத்தாய் தோழி..

சாய்ந்து கொள்ள தோள்
வேண்டுமென்றா?

வாங்கி வைத்த துணிகளை
வடிவமைக்காமல்
விட்டோமேயென்றா..?

யாரேனும் வந்து மூழ்கும்
உன்னை கரை சேர்க்க மாட்டர்களாவென
கை நீட்டி துடித்திருப்பாய்...

இன்றில்லாத பணம்
நாளை வரலாம்.இனி
நீ வருவாயோ ஹேமா..

அமைதியான புன்சிரிப்பு
அதிராத கனிபேச்சு
அடக்கமான வாழ்வு
அடங்கியே போனதேனம்மா
உன் மூச்சு..


 நம்ப மறுக்கின்றது மனம்
கடன் கல்லறைக்கு உன்னை
கட்டி இழுத்த கொடுமையை..

பணம் பிணமாக்கிய
கொடூரத்தை...

பதின்மூன்று அகவையானவள்


பதின்மூன்று அகவையானவள்

வகுப்பிலேயே
நில்லாள்
பட்டாம் பூச்சியெனவே
பறப்பாளவள்
பள்ளி வளாகத்திலும்
வீட்டிலும்.
கண்டித்தாலும்
ரசிப்போம் அவளின்
வெகுளித்தனத்தை.

சில நாட்கள் விடுப்பில் ..அவள்
என்னாச்சும்மா ?
கேள்விக்கு விடையாக
வெட்கத்தையே பதிலாக்கினாள்..

மேலும்
துழாவிய போது
கண்களில் கண்ணீருடன்
குழறலாய் கூறினாள்.
தன் சிறகுகள்
வெட்டப்பட்டதை......

Wednesday 23 October 2013

பாரதி கண்ட கனவு நனவாகவில்லை

புதுகை மணிமன்றம் அறக்கட்டளை சார்பில் பாரதி நினைவை போற்றும் விழா 11.09.2013 அன்று பாரதி கண்ட கனவு நனவாகவில்லை என்ற தலைப்பில் வழக்காடு மன்றம் நடந்தது.

பாரதி கண்ட கனவு நனவாகவில்லை என்பது என் வழக்கு.
வழக்கின் சாரம்சம்
------------------------
      விடுதலை பெறும் முன்னே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென கனவு கண்டான் மகாகவி.பெற்ற சுதந்திரத்தைப் பேணி காத்தோமா?பன்னாட்டு வணிகம் சுனாமியாய் சிறு வணிகர்களை  தூக்கி எறிந்து கொண்டுள்ளதே...அடிமையாகிக் கொண்டுள்ளோமே... மீண்டும் கனவு காண பாரதி பிறக்க வேண்டுமோ?

 பெண்ணியத்தில் பாரதியின் கனவு நனவாகியுள்ளதா ?

     பாரதி பெண்களைப் போற்றினானே.....புதுமைப் பெண்ணாய் கனவு கண்டானே.....இன்றைய பெண்களின் நிலைமை என்ன?
         
               “ஓடி விளையாடு பாப்பா-நீ
                ஓய்ந்திருக்க லாகாது பாப்பா
           
                 பாதகஞ் செய்பவரைக் கண்டால்-நீ
               பயங்கொள்ளலாகாது பாப்பா

               மோதி மிதித்துவிடு பாப்பா-அவர்
              முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா”
                
     என்றான் பாரதி.....            
    
           உமிழும் முன் அமிலம் வீசும் ஆண்மகனை அறியவில்லை பாரதி!

.கல்வி கற்றிருக்கிறார்கள், புகழின் உச்சியில் இருக்கிறார்கள் என்று எதிரணியினர் வாதிடலாம். நான் கூறுவது அடிமைத்தளையில் சிக்கி ஆணாதிக்கத்தில் மூச்சு திணறி வெளிவர முடியாது ,குடும்ப ஆழியில் தடுமாறும் பெண்ணினம் பற்றி....

 இன்றைய பெண்களின் நிலை

                பெண் சிசுக்கொலை முற்றிலும் தடுக்கப் பட்டுவிட்டதா?உசிலம்பட்டி நினைவில் வருகிறதே கூற முடியாமல்.
.குழந்தை மணம்?
அண்மையில் கூட 16வயது பென்ணிற்கு நிகழ இருந்த திருமணம் தடுக்கபட்ட செய்தி வந்துள்ளதே.

       ” கொலை செய்வதை விட கொடுமையானது குழந்தைமணம் ”

எனச் சாடினான் .100 ஆண்டுகளுக்கு மேல் ஆயிற்று.குறைந்துள்ளதே என்பார்கள். விடம் சிறிதானாலும் விடம் தானே?

யூனிசெப் நிறுவன ஆய்வு..

சேலம் ,கிருட்ணகிரி,தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் குழந்தைத்திருமணம் அதிக அளவில் நிகழ்வதாக கூறுகிறதே...

 ”  வீரபாண்டி ஒன்றியத்தில் 16 வயது நிர்மலாவின் திருமணம் யாராலும் தடுக்க முடியவில்லை.நெய்க்காரப்பட்டி 15வயது கவிதாவின் திருமணம் அவரது ஆசிரியரால் தடுக்கப்பட்டுள்ளது .

    குழந்தை மணத்தை பெற்றோர்கள் விரும்பக் காரணம் என்ன?பாலியல் ரீதியான துன்பத்திலிருந்து குழந்தையை பாதுகாக்க திருமணமே வழி என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.குறைந்த வயதில் திருமணம் செய்து கொடுத்தால் குறைவான வரதட்சணை போதுமாம்.மேலும் சின்ன குழந்தை யாரைக் காட்டினாலும் எதிர்க்காமல் தலை காட்டும்ல.
 பெண்குழந்தைகளே இன்று வலிய ஆண்களிடம் சென்று மாட்டிக்கொள்ளத் தூண்டுகின்றதே இக்காலத் திரைப்படங்கள் .இதன் குறிக்கோள் காதலை வளர்ப்பதே நோக்கமாக உள்ளதே .காதல் தவறல்ல .அது முறையானதாக இருந்தால்.ஒரு திரைப்படத்தில் ஒரு அழியாக்காதல்ஒன்று பிறந்து சில மாதங்களே ஆன ஆண் குழந்தை ஒரு பெண் குழந்தை தொட்டவுடனே அந்த அழியாக்காதல் தோன்றிவிடுகிறதாம்....இந்த வெட்கக்கேட்டை நாமும் பார்த்து சிரிப்போம். ஏன் இவ்வளவு கோபம் எனக் கேட்கலாம் .பள்ளிக்கு வரும் மாணவியர் சிலர் மாற்றுத்துணியுடனே பள்ளி வருகின்றனர்.கனவிலேயே நடக்கின்றனர்  .எப்படா ஆசிரியர்களையும் ,பெற்றோரையும் ஏமாற்றலாம் என்பது போலவே அவர்களின் நடத்தை உள்ளது.

                 பள்ளிக்குழந்தைகள் காதலிப்பதும் அதற்காகவே பிறவி எடுத்தாற்போல நடப்பதும் போராடுவதும் தான் வாழ்க்கைஎன்ற கருத்து நிலை நாட்டப்படுகிறது.திரைப்பட நாயகிகள் அணியும் ஆடைகளையும் அணிகலன்களையும்போலவே குழந்தைகளுக்கு அணிவித்து ஆட விடுவதும்,தரமற்ற பாடல்களைப் பாடவைப்பதும் பெற்றோரின் அறியாமையை என்ன சொல்வது?இதில் அலைபேசி வேறு மாணவர்களைக் குட்டிச்சுவராக்க! 
            இது மட்டுமா தொலைக்காட்சிகளில் பெண்களின் நிலையோ மிகமிக கேவலம்
ஒரு AXE ன் விளம்பரத்தில் அந்த வாசனை திரவியத்தை பூசிய ஆணிடம் ஆதி வாசிப் பெண் முதல் நாகரீகப் பெண் வரை நாடி ஓடுவதாகக் விளம்பரம் வருகின்றது”
.பெண்களைப் பற்றிய என்ன சிந்தனை இவர்களுக்கு?

பாரதி கண்டால் 

“மோதி மிதித்து விடு பாப்பா “

என்றே ஆத்திரம் கொள்வான்.உரசலும்,தொடலும்,பார்வை வக்கிரங்களும்,அசிங்கமான சொல் அம்புகளும் குடும்பத்தில்,பணியில் ,சமூகத்தில் பெண்களை தாக்கி மனச்சிதைவிற்கு உள்ளாக்குவதை ஏற்றுக்கொள்வானா அந்த முண்டாசுக் கவி?

பாஞ்சாலியின் கூற்றாய் முழங்கினானே....

”பேயரசு செய்தால் பிணம் திண்ணும் சாத்திரங்கள்” என அடிமைப் பட்ட பெண் இனத்தின் அழுங்கிய உணர்வின் வெளிப்பாடும்,விடுதலையின் வெளிப்பாடும் பாஞ்சாலியின் குரலில் காட்டினானே....

”கற்பு நிலையென்று சொல்ல வந்தால்
இரு கட்சிக்கும் அதை பொதுவில் வைப்போம்”

என்றானே ஒத்துக்கொள்வார்களா!முடியுமா?

பெண்களை சக்தியாக,தேவியாகக் கொண்டாடிய அவனால் இந்நிலையைப் பொறுத்துக் கொள்ள இயலுமா?

                       ” உலகம் முழுவதும் ஒரு வருடத்தில் 20 இலட்சம் பெண் குழந்தைகள் கடத்தப் பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப் படுகின்றனர்”

என்பது Freedom Firm என்ற உலகு தழுவிய அமைப்பின் பொறுப்பாளர் அனிதா அவர்களின் ஆய்வு கூறுகிறது.
               இந்தியாவில் 10 ஆண்டுகளில் 33இலட்சம் பெண்குழந்தைகளும் ,,தமிழகத்தில் மட்டும் 2 இலட்சம் பெண் குழந்தைகளும்காணவில்லையாமே....இதுவா பரதி கண்ட கனவு.?
                                 பெண்ணுக்கு எதிரியாக குடும்பத்தில்,உறவினரில்,நண்பர்களில், அண்டைவீட்டாரிடத்தில் என விடக் காளான்கள் முளைத்து தூணிலும் துரும்பிலுமாய் காணப்படுகின்றனரே இருக்க வேண்டிய கடவுள் எங்கே?எங்கே?
வீட்டில் அம்மாவிற்கும்,மனைவிக்கும் வித்தியாசம் உணரும் ஆண்களுக்கு வெளியில் காணப்படும் பெண்கள் எல்லாம் போகப் பொருளாய்த் தெரிவதால் தானே
 2 வயது குழந்தை முதல் 70 வயது மூதாட்டி வரை பாலியல் வன்புணர்வு செய்ய முடிகின்றது
காதலில் தன்மறுப்பைக் காட்டினால் அமிலம் வீசி சிதைக்கத் தோணுகிறது.

நிர்பயா,அமுதா, என பட்டியல் நீண்டு கொண்டே போகின்றதே...நீதி கிடைக்கலாம் வழியின்றி..ஆனால் பாதிப்பு பெண்களுக்குத்தானே..

பிரபல வார இதழில்
ஆண் திமிர் அடக்கு” என்ற கட்டுரையில். இந்த பூமியிலேயே பெண்கள் வாழ்வதற்கு மிகவும் அபாயகரமான நாடுகளில் ஒன்று இந்தியா என பி,பி,சி யின் ஆவணச் செய்தி குறித்து கூறப்பட்டுள்ளதே...
.பெண்ணைத் தெய்வமாக மதிக்கும் நாட்டில் தான் நிலப் பாகுபாடின்றிபாலியல் வன்முறையாட்டம் நிகழ்ந்து கொண்டுள்ளது .
20 நிமிடங்களுக்கு 1பெண் இந்தியாவில் இக்கொடுமைக்குள்ளாகின்றாள் மறுக்க முடியுமா?
அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த
மிக்கலா கிராஸ் என்ற மாணவி அளித்தப் பேட்டியில்
          ” நான் இந்தியாவில் இருந்த நாட்களில் 48 மணி நேரத்தில்2முறை பாலியல் வன்முறையில் இருந்து தப்பித்தேன்.இந்தியா அழகான நாடு .ஆனால் ஆண்கள் அருவெறுப்பாக நடந்து கொள்கிறார்கள்”
என குமறியுள்ளார். .இதுவா பாரதியின் கனவு.....
காரணம் என்ன?
சமூகத்தில் ஆணும் பெண்ணும் சம உரிமை உள்ள உயிரியல் கூட்டாளிகள் என்பதை ஆண் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை ,கற்றுத்தரப் படவில்லை.பெண் தன்னை விடத் தகுதி குறைந்தவள் என்ற எண்ணமே ஆண்களின் மனதில் மேலோங்கி உள்ளது.

வாச்சாத்தி முதல் சிதம்பரம் பத்மினி ,திண்டிவனம் ரீட்டா மேரி என நீளும் பட்டியல் காவல்துறை பலாத்காரங்களும்,சூரியநெல்லி போன்ற அரசியல்வாதிகள் சம்பந்தப்பட வழக்குகளையும் பார்க்கும் போது பெண்கள் வாழத்தகுதியற்ற நாடாக உள்ள இந்தியாவில்

எங்கே பாரதியின் கனவு நனவாகியுள்ளது?

கனல் கனல்  என்பவரின் முகநூல் கவிதையொன்று
மகளிர் மொழியாக

கற்பாம்
ஒழுக்கமாம்
விதவையாம்
வேசியாம்
யாரடா தந்ததிந்த பட்டம்?
 கொண்டு வா அவனை இந்த பக்கம்..

மலடியாம்
வறடியாம்
மகவு ஈனாப் பெண்டீராம்
எவனடா தந்திந்த பட்டம் ?
இழுத்து வா அவனை இந்த பக்கம்..

தீட்டாம்
புனிதமாம்
திருட்டுப் பயல்களே
எவனடா வச்சதிங்கு சட்டம்?
பிடித்து வா அவனை இந்த பக்கம்..

அச்சம்,மடம்,நாணம்.துவரம் பருப்பென்றாம்
எவனடா வச்சதிங்கு சட்டம்?
அடித்து வா அவனை இந்த பக்கம்..

அடுப்படியே திருப்பதி
வாசல்படியே வைகுந்தம்
எவனடா சொன்னதிந்த சொலவடை?
பிடித்து வா சொர்க்கம் இந்த பக்கம்..

பெட்டை கோழி கூவியா
பொழுது விடியப்போகிறது?
சொன்னவனைக் கொண்டு வா இந்த பக்கம்..
சேவல் முட்டையிடப் போவதையும்
பார்ப்போம்.

உங்கள்
சாத்திரம் ,சடங்குகள்,சம்பிரதாயங்கள்
புழுகுகள், புழுக்கைகள்
புராணக்குப்பைகள்
எங்களை அடிமைகள்
என்றே சொல்லட்டும்.
முதுகெலும்பில்லா  புழுக்களே
உங்களை புதைபட புதைபட
நசுக்கியே கொல்வோம்”
 என்கின்றது.பாதிக்கப் பட்ட பெண்ணினத்தின் ஆக்ரோசமான வெளிப்பாட்டையல்லவா  காட்டுகிறது.
ஆனால் உன்மை நிலை இப்படி எத்தனை பேர் பாடினாலும் பென்ணின் மீது செலுத்தப்படும் அடக்குமுறை கடலலை போல ஓயாமல் பெருகும் போது
எங்கே பாரதியின் கனவு முழுமையாக நனவாகியுள்ளது? 
என்று என் வழக்கை முன் வைத்தேன்.

இதற்கு நடுவரின் தீர்ப்பு
பெண்களுக்கு எல்லா சுதந்திரமும் கிடைத்துவிட்டது.அவர்கள் இரவில் வெளியே ஏன் செல்ல வேண்டும?அரைகுறையான ஆடைகளை அணிவதே அவர்களின் துன்பத்திற்கு காரணம்.இனி அவர்கள் பாதுகாப்பான நேரங்களில் பாதுகாப்பான இடங்களுக்கே செல்ல வேண்டும் .என்பதே தீர்ப்பானது.

பார்வையாளர்களின் கருத்துக்களைக் கேட்ட போது
தமிழாசிரியரும் ,கவிஞரும்,பட்டிமன்ற பேச்சாளருமான

திரு.முத்துநிலவன்.அய்யா தனது கூற்றாக

ஆடை தான் பெண்களின் மேல் ஏற்படும் பாலியல் வன்முறைக்கு காரணமெனில் 2 வயது குழந்தையும்,சீருடை அணிந்த குழந்தையும் பாலியல்
வன்முறைக்கு ஆளாகியுள்ளனரே.அவர்களிடம் எந்த ஆடையைக் கண்டனர் ஆண்கள் .ஆண்களின் வக்கிரமான எண்ணங்களே இதற்கு காரணம்.இதை நாம் ஒத்து கொள்ள வேண்டும்.ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு தான் காரணம் என்று கூறினார்.மனித நேயமுள்ளவராய்...
இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த திரு பொன்.க அய்யாவும் இதை ஏற்றுகொண்டார்.பெண்ணியம் பற்றி பேச விரிந்த பார்வை வேண்டும் என்றார்.இவர்களை போன்றவர்களால்

மனிதம் வாழ்கிறது இன்னும்.நன்றி

கூறுவோமே

காலையில் கூறும்
களிப்பான வணக்கம்
கலக்கமான மனதையும்
கலகலப்பாக்குகின்றது

Saturday 19 October 2013

பொறுமை

நாற்காலிகளுக்கே
நன்றி
நவில வேண்டியுள்ளது.
பல நேரங்களில்.

எது சுதந்திரம்?

இன்று சுதந்திர தினம்
பல நாட்களுக்கு முன்பிருந்தே
பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக
பேருந்து நிலையம்

 புகைவண்டி நிலையம்
மக்கள் கூடும் இடங்கள்

 அனைத்திலும்
பலமாக பாதுகாப்பு வலையங்கள்
கொடி ஏற்றி முடியும் வரை
வன்முறைகள் ஏதும் 

நிகழ்ந்து விடக்கூடாதென்று
காவல் துறையினரின் 

மனதுக்குள் வேண்டுதல்கள்
அறுபத்தேழாவது சுதந்திர தினம்
அதிக பாதுகாப்புகளோடு
அமைதியாக கொண்டாடப்பட்டது
செய்தி

.கொடியேற்ற வீட்டை விட்டு
 வெளியே வந்தேன்.
.சாலையின் மத்தியில்
 வேப்பம் பழத்தை சுவாரசியமாக
 இரு கால்களால் பிடித்து
சுவைத்துக் கொண்டிருந்த 

அணிலொன்றின் பார்வை
என்னை கேலி செய்வது போல்

 இருந்ததை
என்னால் தவிர்க்க முடியவில்லை....

மோகம்

தலைவா திரைப்படம்
தடைநீங்கி திரையில்...
 

தலைகுனிந்து வணங்கி
தன் உயிர் தந்தன ஆடுகள்
நான்கு ஆடுகள் பலியாகின
திரையரங்க வாயிலில்!
 

நாற்பது பேர் மொட்டை
பால் குட அபிசேகம்
கலக்கிட்டோம்ல
ரசிகனின் பெருமைகள்
 

பாரதி இருந்தால்...
என்று தணியும் இந்த
திரைப்பட மோகம்...!
என்றே முழங்கியிருப்பான்.
 

கோடிக்கணக்கில் வருமானம்
வந்தால் போதும்
தெருக்கோடியில் நிற்கட்டும்
ரசிகனின் குடும்பம்...!

Monday 14 October 2013

எப்படி தள்ள?

சாதி,மதம் பாராத
சான்றாளன்.

ஏழை,பணக்காரன்
வேறுபாடு காட்டாத
மார்க்ஸின் தோழன்

யாதும் ஊரே
யாவரும் கேளீர்
இவனுக்கே பொருந்தும்

வேனிற்கால பகைவன்
மழைக்காலத் தோழன்.

எப்போதும் ஒரே
இசையையே முணுமுணுப்பான்..
ம்ம்ம் மென...

என் அனுமதியின்றி
என்னை சுவைப்பவன்..

பழச்சாறு மறுத்து
மனிதச் சாறையே
உறிஞ்சுபவனை..


 எப்படி தள்ள?

சொல் சொல்

சொல்லுன்னு எளிதாக கூறுவோம் .கிருபானந்த வாரியாரிடம் கேட்டால் எப்படி சொல்லச் சொல்றேன்னு கேட்பார்.

கம்பனின் கவிநயம் ----நூலில்
---------------------------
திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங் கில்--
திருக்குறள்

சொல்லின் பொருள்வளம் கிருபானந்தவாரியாரின் நூலில் படித்த போது வியக்காமல் இருக்க முடியவில்லை.

சொல்லுதல்---- சிறப்பு பொருள்
-------------------------------------------------------

1.அசைத்தல் - அசையழுத்தத்துடன் சொல்லுதல் .

2.அறைதல் -வன்மையாக மறுத்து சொல்லல்.

3. இசைத்தல்-ஓசை வேறுபாட்டுடன் சொல்லுதல்.

4.இயம்புதல்-மேளம் போல் ஓங்கிச் சொல்லுதல்.


5.உரைத்தல்-அருஞ்சொற்கு அல்லது செய்யுளுக்கு பொருள்

சொல்லுதல்.

6.உளறுதல்-ஒன்றிருக்க ஒன்றைச் சொல்லுதல்.

7.என்னுதல்-என்று சொல்லுதல்.

8.ஓதுதல்-காதிற்குள் மெல்லச் சொல்லுதல் .

9.கத்துதல்-குரல் எழுப்பிச் சொல்லுதல்.

10.கரைதல்-அழைத்துச் சொல்லுதல்.

11.கழறுதல்-கடிந்து சொல்லுதல்.

12.கிளத்தல்-இன்னதென்று குறிப்பிட்டுச் சொல்லுதல்.

13.கிளத்துதல்-குடும்ப வரலாறு சொல்லுதல்.

 14.குயிலுதல்
குயிற்றுதல் ]-குயில் போல் இன்குரலில் சொல்லுதல்.

15.குழறுதல்-நாத் தளர்ந்து சொல்லுதல்.

16.கூறுதல்-கூறுபடுத்திச் சொல்லுதல்.

17.சாற்றுதல்-பலரறியச் சொல்லுதல்.

18.செப்புதல்-வினாவிற்கு விடை சொல்லுதல்.

19.சொல்லுதல்-உள்ளத்துக் கருத்தைச் சொல்லுதல்.

20.நவிலுதல்-நாவினால் ஒலித்துச் சொல்லுதல்.

21.நுதலுதல்-ஒன்றைச் சொல்லித் தொடங்குதல்.

22.நுவலுதல்- நூலின் நுண் பொருள் சொல்லுதல்.

23.நொடித்தல்-கதை சொல்லுதல்.

24.பகர்தல்-பண்டங்களைப் பகுத்து விலை சொல்லுதல்.

25.பறைதல்-கமுக்கம்
(இரகசியம்)வெளிப்படுத்திச் சொல்லுதல்.

26.பன்னுதல்-நிறுத்தி நிறுத்திச் சொல்லுதல்.

27.பனுவுதல்-செய்யுளில் புகழ்ந்து சொல்லுதல்.

28 .புகலுதல்-விரும்பிச் சொல்லுதல்.

29.புலம்புதல்-தனக்குத்தானே சொல்லுதல்.

30.பேசுதல்-சாமான்யமாகச் சொல்லுதல்.

31.பொழிதல்-இடைவிடாது சொல்லுதல்.

32.மாறுதல்-உரையாடலில் மாறிச் சொல்லுதல்.

33.மிழற்றுதல்-மழலைபோல் இனிமையாகச் சொல்லுதல்.

34.மொழிதல்-சொற்களைத் தெளிவாகப் பலுக்கிச் சொல்லுதல்.

35.வலத்தல்-கேட்பார் மனத்தைப் பிணிக்கச் சொல்லுதல்.

36.விடுதல்-மெல்ல வெளிவிட்டுச் சொல்லுதல்.

37.விதத்தல்- சிறப்பாக எடுத்துச் சொல்லுதல்.

38.விள்ளுதல்-வெளிவிட்டுச் சொல்லுதல்


.39.விளத்துதல்- விளக்கிச்(விரித்து) சொல்லுதல்.

40.விளம்புதல்-விளக்கமாகச் சொல்லுதல்.

இப்ப நீங்க எப்படி பேசுறீங்க..?


Sunday 13 October 2013

ம்ம்ம்ம்

இன்று13.10.13
ஸ்ரீவெங்கடேஸ்வரா பள்ளியில் த.மு .எ.க.ச வின் கிளைக் கூட்டம் நடந்தது.
இலக்கிய ஆர்வலர்களின் கூட்டம் என்பதால் நகைச்சுவைக்கு பஞ்சமின்றி சிரித்துக் கொண்டேயிருந்தோம்.
செவிக்குணவாய் கவிதைகள்,கட்டுரைகள்,சொற்பொழிவு,கருத்து புதுமையென ஐந்து நட்சத்திர ஓட்டல் விருந்து வழங்கப்பட்டது.
அதில் என் பங்காய் .......

ம்ம்ம்ம்ம்ம்
-------------
ஆதியில்
உடல்மொழி வாய்மொழியானது.

வார்த்தைகளால் விரிந்தது ஞாலம்

சொற்களால்
உலகை ஆளவும்
வீழ்த்தவும் இயலும்.

ஒரு சொல்லால்
மனம் மகிழும்
மனம் உடையும்.

மனதை வருடும் சொல்லோ
மலையென நம்பிக்கை ஊட்டும்.
 
இந்தியாவை உலகின் முன்
தலைநிமிர வைத்தது
விவேகானந்தரின் சொற்களன்றோ..!

சுதந்திரத்திற்கு வழியானது
காந்தியின் பதங்களே..!

தமிழரின்
தன்மான உணர்வைத்தூண்டியது
தந்தை பெரியாரின்கூற்றுக்களே..!

இசைவு சொற்களையே
இவ்வுலகு நேசிக்கும்..

எப்போதும் விரும்பாது
எதிர்மறை சொற்களை..

செயல்களை விடப்
பதங்களே
பதம் பார்க்கின்றன
மனதை...

வார்த்தைகளின் அகத்தில்
அன்பு,வெறுப்பு,
நட்பு,பகை,இன்னும்.இன்னும்....


சொற்களை விடுங்கள்.

‘ம்’ ஓரெழுத்து போதும்...

இசை துவங்கும் முன்
சுருதி கூட்ட எழும்
ஒற்றை எழுத்து...

மென்மையான’ம்’மில்
எதிர்ப்பார்ப்பது நடக்கும்..

அழுத்தமான ‘ம்ம்’மிலோ
நடந்தாலும் நடக்கலாம்...

வன்மையான ‘ம்ம்ம்’மில்
நடக்கவே நடக்காது...

நேசத்தில் ‘ம்’
நினைத்தது நிகழும்..

கோபத்தில்’ம்’
தொடராதே இனி எனும்..

வாதையில் ‘ம்ம்’
வலியின் துயரைக்கூறும்..

அம்மாவின் ‘ம்’

 அன்பையே காட்டும்..

அப்பாவின் ‘ம்’மோ
கண்டிப்புக்கே அதிகம் தோன்றும்..

எல்லாக்குழந்தைகளின் ‘ம்’மும்
ஐஸ்கிரீமிலேயே நிறைவடையும்...

காதலில்’ம்’ன் வலிமை
கற்பனைக்கெட்டாதது..

பகலில் கணவனின்’ம்’
இரவில் மனைவியின் ‘ம்’ஐ தரும்..

இனிமை இல்லறத்திற்கு
வேறென்ன வேண்டும்...

ஆதலால்
‘ம்’ மட்டுமே சொல்வோம்
‘ம்கும்’ தவிர்ப்போம்....

நன்றி.

Saturday 12 October 2013

துணையை நாடி

கொண்டை வைத்த
கருப்பு குருவி
நித்தம் நித்தம்
கொத்தி அழைக்கிறது
துணையென எண்ணி
கண்ணாடியில்
 தன் நிழலை

சிதறி கிடக்கும்
 எச்சங்கள்  கூறும்
குருவியின்
எல்லையற்ற முயற்சியை

Friday 11 October 2013

சுயம்

எனக்கு நல்லது செய்வதாய்
எண்ணி என்னை கேளாமல்
என்னில் குறுக்கிடும்
சிலரை சொல்ல முடியாமல்
மனதில் வெறுக்கின்றேன்

இது தானா கல்வி?

இது தானா கல்வி?
தி இந்து.

இன்று தி இந்து நாளிதழில் இதுதானா கல்வி ?எழுத்தாளர் எஸ் .ராமக்கிருஷ்ணண் அவர்களின் கட்டுரை வந்துள்ளது.என் கருத்தையும் பதிவு செய்து அவருக்கு அனுப்பியுள்ளேன்.

வணக்கம்.
தங்களின் கட்டுரை படித்தேன்.வருங்கால சமுதாயத்தை சரியாக உருவாக்கும் சூழ்நிலை இங்கு இல்லை என்பதை தெளிவாக காட்டியுள்ளீர்கள்.உண்மைதான் கல்வி வணிகப்பொருளாக மாறியதன்
விளைவு கல்லூரிப்பேராசியரை சாதாரணமாக வெட்டிக்கொல்லும் மனப்பான்மை கொண்ட இளைஞர்கள் உருவாகின்றனர்.சமூகம் இதை ஒரு செய்தியாக செரித்து அதன் வழியில் போய்க் கொண்டே உள்ளது.
100%தேர்ச்சி, முதல் தரமான கல்லூரிகளில் சேர்க்க வேண்டும் என்ற பெற்றோர்களின் பேராவல்.மாணவர்களை மதிப்பெண் இயந்திரங்களாக,மனித நேயமற்ற தன்னலமானவர்களாக உருவாக்கும் நிலை.சமூக அக்கறை இன்றி அனைவரும் அடுத்தவர்களை குறை கூறிக்கொண்டு வாழ்க்கையை கடத்துகின்றனர்.
தனியார் பள்ளி ஒன்றில்பணம் கட்டவில்லை என்பதால் 4ஆம் வகுப்பு குழந்தைக்கு விடைத்தாளை கொடுக்க மறுத்துள்ளனர்.எவ்வளவு கொடுமையான செய்தி.சிறந்த உள்கட்டமைப்புள்ள பள்ளியில் தன் குழந்தை படிக்க வேண்டும் ,சமுதாய அந்தஸ்து போன்றவை இந்தப்பள்ளிகளின் கொடுமைகளை மனதில் புழுங்கிக்கொண்டே
வெளியில் சொல்லமுடியாமல் தவிக்கும் பெற்றோர்.கல்வியில் மதிப்பெண்களை நோக்கியே ஓடவைக்கும் ஆசிரியர்களின் நிலை.பெற்றோர் ஆசிரியர் சமூகம் மூவரும் ஒருங்கிணைந்தால் மட்டுமே தரமான மாணவர்களை உருவாக்க முடியும்.முயற்சிப்போம்.
நன்றி சார்.

Wednesday 9 October 2013

விடியாத காலைப்பொழுது

காலையில் இனிமையாக
கூவி எனை எழுப்பும்
கருப்புக்குருவிகள்
வீட்டின் முன் அறையில்
வீரமாய் சன்னலில்
வீற்றிருக்கும் இடுப்பளவு
கருப்பு குதிரை பொம்மையில்
கலக்கமின்றி முட்டையிட்டு
குஞ்சு பொரித்து மகிழ்வாய்
குஞ்சுகளுடன் பறந்து சென்றன
இருமுறை குஞ்சு பொரித்து
இனிய சந்ததி வளர்த்து
மகிழ்வுடனே சென்றன.

வெறுமை தாக்க
காத்திருந்த என்னை நாடி
மீண்டும் சிறிய அலகில்
கூடமைத்து முட்டையிட்டு
காத்தனவே !
எப்போது போவேனென
எதிர்பார்த்து வாசலில்
எட்டி எட்டி காத்திருக்கும்
வம்படியாய் அதை நோக்கி
வாயேன் உள்ளே
என்றாலும் போ போ
என்றே எதிர்நோக்கும்!


ஓர் அதிகாலையில்
முத்தாய் மூன்று குஞ்சுகள்
சுறுசுறுப்பாய் பறந்து பறந்து
இரை தேடி ஊட்டி
வளர்த்தன!

நேற்றிரவு வீடு திரும்பிய
நேரம் நிசப்தம் எனைத்தாக்க
புரியாமல் உள்ளே நுழைய..

கதறிய குருவிகளின் ஓலம்
கேட்டு மனம் கலங்கி
வெளியே வந்தால்
என்செய்வேன்! என்செய்வேன்!

பொல்லாத பூனை தன்


பசியாற்ற கண் திறவா குஞ்சுகளை
புசித்து விட்ட கொடுமைதனை...

பாதுகாப்பேனென எனை நம்பி
பார்ப்புகளை பொரித்து
பத்திரமாய் போய்வாவென
எனை வழியனுப்பிக்காத்திருக்கும்
குருவிகளுக்கு எப்படி ஆறுதல் கூற?

 பூனையின் பசியை நோக்கவோ..
கதறும் தாய்க்குருவியை காணவோ..
இயலாத
கையறு நிலையில் மனம்
கலங்கித் தவிக்கின்றேன்...

காப்பாற்றவில்லையே நீயென
கதறும் குரலைக்

கேட்க முடியாமல் என்
காலைப்பொழுதுகள்
விடிகின்றன!....

நிதர்சனம்

முகமூடியணிந்தே
முகம் காண்கிறோம்
முழுமையறியாமலே!
மனம் மூழ்கும் அன்பினில்!
விலக்கும் வெறுப்பினில்!

முகமூடி தவிர்த்து
முழுமை உணர்ந்து
உறவு கொள்வோம்
ஏற்றோ!ஏற்காமலோ!

த.மு.எ.ச.விழா

20.09.2013அன்று த.மு.எ.ச.திருக்கோகர்ணம் கிளையின் சார்பாக
முன்னையரிந்து வருங்காலம் முழங்கியவன்
தன்னையறிந்து தமிழ்க்கவிதை ஓதியவன்
பாரதத்தின் மகாகவியாக-தமிழ்
பா ரதத்தில்வலம் வந்த
முண்டாசு கவிஞனுக்கு நினைவு கூர் விழா!
மற்றும்
தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற
திரு .தங்கம்மூர்த்தி அவர்களுக்கு பாராட்டு விழா!
குற்றாலச் சாரலாய்,இனிய சங்கீதமாய்,குழவியின் புன்சிரிப்பாய் மனதை வருடிச் சென்றது.
பாராட்டும் முகத்தான் எனது எளிய கவிதையுடன்!

சங்கம் வைத்து தமிழ் வளர்த்தது மதுரை
தங்கம் வளர புகழ் பெற்றது புதுகை!
மருத்துவ
தங்கம் தந்த தவப்புதல்வன்
திருமகள் பெற்ற வெற்றிமகன்
பண்புகளின் களஞ்சியம்-வியப்பில்லை
பாலாவின் மாணாக்கரன்றோ!

அன்பிற்கினிய அஞ்சலியை தேவியாய் 

 அடைந்ததனால் இல்லறக்கவலையின்றி
அகிலம் போற்ற சிறக்கின்றார்
அளிக்க வேண்டும் முதல்வாழ்த்து அவருக்கே!

காவியம் படைத்த பாரதியின்
பாதையை மாற்றியவர் நிவேதித்தை-இவர்
காவியம் படைக்கவே தொன்றினரோ
காவியாவும் நிவேதிதாவும்!

காட்சிக்கு எளிமையாய்
கருத்தினில் இனிமையாய்
காண்பவர் மனதைக்
கொள்ளை கொள்ள
கேட்பாரை கேளாரை
போதை கொள்ள வைக்கும்
வெண்கலக் குரலோன்!

இவர் புகுஞ் சபைகள் தோறும்
இவர் குரல் ஒன்றே ஓங்கும்-இவரின்
நண்பர்கள் படைகண்டு
நலிந்தவர்கள் பலருண்டு
நட்புக்கே இலக்கணமாய் சிறக்கின்றது
இவர் வாழ்க்கை!

வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவோருக்கும்
வெகுளியான புன்னகையே பகிர்ந்திடுவார்!
வந்த எண்ணம் ஈடேறாமல்
வலியிழந்து செல்வோர் சிலர்
வகையின்றி செல்வோர் பலர்!

கடந்து வந்த பாதைதனில்

 கற்களோடு முட்களாயினும்
மலர்பாதையாய் வெற்றி
மாலைகள் சூடிடுவார்!

அன்பில் வணங்கும் அழகிய நாணல்
ஞானத்தலைவன்
நாநயச்செல்வன்

பதவிகள் தேடி ஓடுபவரில்லை-இவரை
பதவிகள் நாடி வரும் விந்தையென்ன?
பட்டிமன்றம் நடத்திடலாம்
தங்கம்மூர்த்தியின் புகழிற்கு காரணமென்ன?
வெண்கலக்குரலா?
நாவினில் தவழ்ந்திடும் தமிழா?
பண்பான மனித நேயமா?
பட்டிமன்ற பேச்சுக்களா?

தாயுமானவனாய் தன் பள்ளிதனில்
திகழ்வதாலா?
தடையின்றி கொட்டுகின்ற கவிதைகளாலா?
அப்பப்பா தலைப்புகள் தலைசுற்ற வைக்கின்றன!

அழைத்தது தேசம் அன்புடனே...
அரைப்பணியின்றி அறப்பணியெனவே-தன்னை
ஆசிரியப்பணிக்கு அர்ப்பணித்ததால்
தேசம் தலை வணங்கி 

 தேசிய விருதளித்தது......

தூற்றூவார் தூற்றல் கேட்டும்
சோர்விலாப் பணிகள் செய்தாய்
ஆற்றலால் அன்னை நாட்டில்
அரியதோர் விருது பெற்றாய்
ஏற்றதோர் தகுதியென்றே
இதயமுள்ளோர் வாழ்த்தினரே!

போற்றுவார் நாட்டினரே
பண்புள்ளோர் இயல்புதானே!

அன்புடனே வாழ்த்துக்கள் குவிய
அச்சம் வேண்டாம்-இவை
தமிழ் மகளின் பா மலர்களே!

புதுகையின் பெருமைக்கு
மேலும் ஓர்மைல்கல்
சீரிய விருது பெற்ற
சீராளன் தங்கம் மூர்த்தியும்
புதுமை போற்றும் புதுகையின்
அழியாச்செல்வமென

”தடம் பதிப்போம்
தலை நிமிர்வோம்’

முள்


மெல்லினத்தில்
வல்லினம்
ரோஜாமுள்

Tuesday 8 October 2013

என் .... கனவுகளின் நாட்குறிப்பு

மறைந்து போன
முதியோர் ,அனாதை
இல்லங்கள்..

முதுமைக்குத் தலைவணங்கும்
இளமை..

போதை நீக்கிய பொழுது போக்கில்
இளைய சமுதாயம்..

மூடிய மதுக்கடைகளின்
துருப்பிடித்த கதவு..

மக்களின் நலனே
வாழ்க்கையாய்
எண்ணும் தலைவர்கள்..

அரசின் சலுகைகள்
லஞ்சமின்றி மக்களிடம்..

ஈழத்தமிழச்சியின்
கண்ணீர் துடைக்கும்
சிங்களச் சகோதரன்..
ஆயுதம் தொலைத்த
அமெரிக்கா..

அன்பின் நிழலில்
அனைத்து நிலப்பரப்பும்..

என்று கனவாகும்...?

முகநூல் நட்பு

முகம் காணும் நட்பே
முறிந்து போகின்றது.

முகமறியா முகநூல் நட்பு
முணுமுணுக்கும்
அச்சத்துடனே ஏற்கிறேன்..

முகநூல் திறக்காதேயேன..
என் நலம் விரும்பும் ஆண்களின்
ஆலோசனைகள்..

எனக்கு புரியவில்லை
ஆண்களை ஆண்களே
நம்புவதில்லையோ ....!!

பாம்பின்கால் பாம்பறியும்!

Monday 7 October 2013

தமிழாசிரியரா நீங்கள்?


ஒரு வீட்டில் என்னென்ன பொருட்கள் இருக்க வேண்டுமென பார்த்து பார்த்துவாங்குகிறோம்.அழிந்து போகும் பொருட்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம். தமிழ் செம்மொழி உயர்மொழி என பெருமை பேசும் நாம், நம் வீட்டில் அழியாச்செல்வத்தை தரக் கூடிய நம் தாய்மொழியின் சிறப்பை உனர்த்துகின்ற தமிழ்நூல்கள் சிலவற்றையாவது வைத்திருக்க வேண்டாமா?
அப்படியெனில் என்னென்ன நூல்கள் நாம் வைத்திருக்க வேண்டும்.அதுவும் ஒரு தமிழாசிரியர் வைத்திருக்க வேண்டிய தரமான நூல்கள் எவைஎவை என்ற என் தேடல்களுக்கு விடையாக இன்றைய கணினி பயிற்சியில் எங்கள் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் தந்த கருத்துக்கள் அமைந்தன.
உங்கள் வீட்டில் அவற்றில் சிலவாயினும் கட்டாயம் இருக்க வேண்டும்.நம் தாய்மொழியின் பெருமை உணர்த்தும் நூல்கள் நீங்கள் வைச்சுருக்கீங்களா?
பாருங்க..


இலக்கிய நூல்கள்
திருக்குறள்
சங்க இலக்கியம்
பதினெண்கீழ்க்கணக்கு
சிலப்பதிகாரம்
மணிமேகலை
கம்பராமாயணம்
நீதிநூல்கள்
தனிப்பாடல்திரட்டு

கவிதைகள்

பாரதியார்
பாரதிதாசன்
கண்ணதாசன்
வைரமுத்து
அப்துல்ரகுமான்
காசிஆனந்தன்
பட்டுக்கோட்டையார்
தமிழ் ஒளி

புதுக்கவிதைகள்
நவீனக்கவிதைகள்
ஹைக்கூ
ஈழக்கவிஞர்கள்

இலக்கண கண்ணாடி

தொல்காப்பியம்
நன்னூல்
யாப்பருங்கலக்காரிகை
தண்டியலங்காரம்
நம்பியகப்பொருள்
புறப்பொருள் வெண்பா மாலை
நற்றமிழ் இலக்கணம்
அடிப்படைத்தமிழ் இலக்கணம்
தமிழ் இலக்கணம்
இலக்கணகொத்து

பீடுநடை போட உரைநடைகள்

பாரதியார் கட்டுரைகள்
புதுமைப்பித்தன்
வ.சுப.மாணிக்கம்
பெருமாள்முருகன்
எஸ்.ராமக்கிருஸ்ணன்
பொ.வேல்சாமி
ஆ.சிவசுப்பிரமணியன்
நாஞ்சில் நாடன்
மாடசாமி
தொ.பரமசிவம்
வரலாற்றுநூல்கள்

மொழி வரலாறு
தமிழ் இலக்கிய வரலாறு
குழந்தை இலக்கிய வரலாறு
தமிழர் சால்பு
மயிலை சீனி.வெங்கடசாமி
கார்த்திகேசு சிவத்தம்பி

வாழ்க்கை வரலாறு

பாரதியார்
என்சரித்திரம்
பாவலர் சரித்திர தீபகம்
தமிழ் புலவர் வரலாற்றுக்களஞ்சியம்
பன்னிரு திருமுறை வரலாறு

அகராதிகள்

அபிதான் சிந்தாமணி
தமிழ் லெக்சிகன்
தமிழ் கையகராதி
க்ரியாவின் தற்காலத்தமிழகராதி
தொகையகராதி
ஆங்கிலம் தமிழகராதி
மயங்கொலிச் சொற்பொருள் அகரமுதலி
சுராவின் தமிழ்-தமிழ்-ஆங்கிலம்

கையேடுகள்
தமிழண்ணல்
ம.நன்னன்
சு.சக்திவேல்
பயன்பாட்டுத்தமிழ்
தமிழ்நடைக்கையேடு
சொல்வழக்கு கையேடு

இதழ்கள்

நாளிதழ்கள்
தரமான வார இதழ்கள்
தரமான சிற்றிதழ்கள்
சிறந்த தமிழ் பற்றுள்ள மனித நேயமிக்க முதன்மைக்கல்வி அலுவலர் எங்களுக்கு கிடைத்திருக்கிறார்.ஒரு அதிகாரி என்ற பயமின்றி நாங்கள் இருந்தோம்.தமிழ் தண்மையானது என்பதற்கு இவரே உதாரணம் .முகப்பூச்சு இல்லை .தமிழை நேசிப்பவள் என்பதால் உணர்ந்து கூறப்பட்ட பதங்கள்.இதன் மூலம் என் மனம் நிறைந்த நன்றியை அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

கன்னித்தமிழ் கணினிப்பயிற்சி

கணினித்தமிழ் பயிற்சி

வெங்கடெஸ்வரா தொழில் பயிற்சிக்கல்லூரியில் 2 நாட்கள் நடக்குது வரனும்என்று நான் பெரிதும் மதிக்கும் முத்துநிலவன் அய்யாவும் ,சுவாதியும் அழைத்தபோது நான் சாதாரணமாகவே சரி, நாமும் கத்துக்க சரியான வாய்ப்பு என்ற நினைவில் பயிற்சிக்கு சென்றேன் .
2 நாட்களும் டீ குடிக்க, மதியம் சாப்பிட என எதுவும் நினைவிற்கு தோன்றவில்லை.

நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த புதுகை தமிழாசிரியர் கழகம் எங்களை புதிய உலகத்தில் தூக்கி போட்டுவிட்டனர்.
25வருட ஆசிரியப்பணியில் இவ்ளோ ஆர்வத்துடன் நிமிடம் போவது கூடத்தெரியாமல் ஒரு பயிற்சியில் கலந்து கொண்டதேயில்லை.

மின்னஞ்சல் வலைப்பூ பற்றி அழகாக தெளிவாக விளக்கமாக விரைவாக கூறி பயிற்சியில் கலந்து கொண்ட40 பேர்களும் மின்னஞ்சல் துவங்கவைத்துவிட்டார் முனைவர் பழனியப்பன் அய்யா.

பிரமிப்பு நீங்கும் முன் அடுத்து வந்தார் திண்டுக்கல்தனபாலன்
அவர் வலைப்பூ விரிவாக்கம் பற்றி கேட்ட, கேட்காத கேள்விகளுக்கெல்லாம் விடை தந்தார்.உண்மையில் வலைப்பூவில் இத்தனை சிறப்புள்ளதா? நம்பவே முடியவில்லை.நிறைந்த பொறுமையுடன் விளக்கியதுடன் இன்னும் கூறவேண்டும் நேரமில்லையே என்ற அரைகுறை மனதுடனே சென்றார்.
முதல்நாள் பயிற்சி இனிதே முடிந்தது .மின்னஞ்சல் துவக்கிய ஆசிரியர் பலர் இரவே வலைப்பூவும் துவங்கிவிட்டனர் என்றால் பாருங்களேன்.

6.10.13காலை 9மணிக்கு வந்துவிட்டோம்.ஒரு வலைப்பூவில் எழுதுவதால் என்னென்ன செய்ய முடியுமென்பதை திரு.எட்வின் அவர்கள்கூறிய போதுதான் அதன் வீச்சு எவ்வளவு பரந்தது?அப்பப்பா நம்ப முடியவில்லை.
சமுக அவலங்களை, மனக்குமறல்களை உலகுக்கு தெரிவிக்கும் கருவியாக வலைப்பூ அமைவதை உணரமுடிந்தது .
அவர் கூறிய அனைத்து செய்திகளும் உண்மையை,எழுத்துலக அரசியலை,வெட்டவெளிச்சமாக்கியது.
அழகாக பாரதி ,வா.ரா சந்திப்பை ”,அப்போது ஆங்கிலத்தில் பேசிய வா.ரா.வை பாரதி இன்னும் எத்தனை காலம் தான் தமிழனும் தமிழனும் சந்திக்கும் போது ஆங்கிலத்தில் உரையாடுவான்”
என வெகுண்டதை கூறி, 100 வருடங்கள் ஆயிற்று ,ஆனால் இன்னும் தமிழன் மாறவில்லையே என்ற ஆதங்கத்தை வெளிக்காட்ட வலைப்பூ பயன்படுவதை அழகாக உணர்வுபூர்வமாக, மெய்பாடுகளுடன், அவர் அருவியென கொட்டியபோது இமைக்க மறந்து செவியின் சுவை உணர்ந்தோம்.

அடுத்து முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் கருத்துக்கள் எங்களை பண்படுத்துவதாகவும் ,பக்குவப்படுத்துவதாகவும் அமைந்தது.அவர் தந்த பயனுள்ள கருத்துக்களை தனியாகவே தந்துள்ளேன்

சிற்பியே உன்னை செதுக்குகிறேன் என கூறிக்கொண்டு சுண்ணக்கட்டிகளால் மாணவர்களின் கண்களை மூடுகின்றோம்” என்ற யதார்த்தை, தொன்மையில்கருத்துக்கள் வெளிப்பட்ட முறைகளை ,அழகாக படக்காட்சியுடன் விளக்கினார்.

”ஒரு அறிவியல் ஆசிரியர் ஆய்வகம் சென்று பொருட்களை கையாளுவது போல ஏன் ஒரு தமிழாசிரியர் பள்ளியில் உள்ள நூலகத்தில் உள்ள நூல்களை கையாளுவதில்லை?” என்று கேட்ட போதுதான் எங்கள் தவறை உணர்ந்தோம்

தமிழாசிரியர்கள் வைத்திருக்க வேண்டிய நூல் பட்டியல்களையும் தந்த போது ,எங்களை மட்டுமல்ல நாங்கள் உருவாக்கும் மாணவர்களுக்கும்அவர் வழிகாட்டியாக உள்ளதை உணர்ந்து மகிழ்ந்தோம்.

அடுத்து கரந்தை யிலிருந்து வந்த ஜெயக்குமார் அவர்கள்
நம் வாழ்க்கை செய்திகளை ,மகிழ்வை ,துக்கங்களை
பகிர்ந்து கொள்ள வலைப்பூ பயன்படுவதை விளக்கினார்.

தோழர் ராசி பன்னீர் செல்வம் அவர்கள் மின்னஞ்சலை வடிவமைத்த சிவா,வலைப்பூ தோன்றிய முறை பற்றியும்,
சங்க இலக்கிய பாடல்களை நவீன வாசிப்பிற்கு உட்படுத்துவது குறித்தும் அவருக்கே உள்ள பாணியுடன் சிறப்பாக விளக்கினார்.

தமிழாசிரியர்கள் தங்களின் இணைய அனுபவங்களை
கேளாரும் கேட்ப மொழியும் சொல்லென பகிர்ந்தனர்.

திறமை இருந்தும் குடும்பச்சூழல்களால் அதை வெளிப்படுத்தமுடியாத ஆசிரியர்களுக்கு இந்த பயிற்சி மிகுந்த பலனைத்தரும் என்பதில் மாற்றமில்லை .
இதற்கு காரணமாக இருந்த ,தானும் உயர்ந்து ,தன்னைச்சார்ந்தோரையும் உயர்த்தும் சிறந்த பண்புள்ள
முத்துநிலவன் அய்யாவிற்கு என் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுதல்களும்.

இப்பயிற்சிக்கு காரணமாயிருந்த அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகள்.