World Tamil Blog Aggregator Thendral: January 2014

Thursday 30 January 2014

கைம்மாறென


நடை பழக்கிய
நற்றாய்க்கு
ஈருருளி 
பழக்கும் சேய் ....

சோலைவனம்


 வண்ணப் பூக்களில் சில
தென்றலில் அசைந்தாடும்
மகிழ்வோடு
 மமதையோடு ...

தேன் அகத்தில்அடக்கிய
 கர்வத்தில் திளைத்தே ....

புயலில் சிக்கிடும் நிலையை
புரியாமல்  வரவேற்கிறது 

பாதுகாப்பை புறந்தள்ளி 
தவிக்கும் கண்களை
தவிர்த்து நகைக்கின்றது ...

வாடவே விரும்பும் மலரை
வாடாமல் காப்பற்ற
வழியின்றி வகையின்றி
செயலற்ற சோலை ..... வனம் ...




Monday 27 January 2014

தெரியவில்லை



நான் செய்தது சரியான்னு தெரிய வில்லை .....இப்படி கூற  வேண்டி வரும் என நினைத்ததும் இல்லை .காலையில் ஏழாம் வகுப்பு மாணவி ஓடி வந்தாள் ..+1படிக்கும் அக்கா பள்ளிக்கு வெளியே ஒரு பையனுடன் பேசுனாங்க உடனே கிளம்பிப் போய்ட்டாங்க நீங்க கேளுங்கம்மா என்று  பதட்டமாய்க் கூறினாள்  .என்ன செய்வதென தெரியாமல் அவளது தோழிகளை  கேட்டால் அவள் அம்மா கடையில் இருக்காங்க அழைச்சிட்டு போனது அவ மச்சான் னு சொன்னார்கள் நானும் சரின்னு விட்டு விட்டேன் .மாலை பள்ளி முடிந்ததும்  வெளியே சென்ற பெண் உள்ளே நுழைந்தாள்  .என்னவென்று விசாரித்த போது இது வழக்கமான ஒன்று அவளைஅன்பாக கூறினாலும் திருந்தவில்லை மேலும் கேட்டு ஏதாவது பிரச்சனை என்றால் என்ன செய்வது என்று வகுப்பு ஆசிரியர்கள் வெறும் பார்வையாளராக இருக்கும் நிலை என்னால் பொறுக்க  முடியாமல் அவளை கூப்பிட்டு சற்று கண்டிப்பாய் அவள் செய்வது தவறு எனக் கூறினேன் சக ஆசிரியர்கள் என் செயலை தேவையில்லாத ஒன்றாய்க்  கருதுகின்றனர். நான் செய்யாமல் விட்டால் சரியான ஆசிரியரல்ல .ஆசிரியர் இரண்டாவது பெற்றோர் எனில் இப்படி தடம் மாறும் குழந்தைகளை  கண்டிக்காமல் விடுவது முறையா ?.மீண்டும் குழந்தைத் திருமணத்திற்கு திரைப்படங்களும் ,தகவல் தொடர்பு சாதனங்களும் தூண்டுகின்றன .எல்லா படங்களிலும் பள்ளிக் குழந்தைகளே காதல் செய்வதே குறிக்கோளாய்க் காட்டுகின்றன .தனக்கென ஒரு ஆள் இல்லையென்றால் அது கேவலமாய் கருதும் நிலையை குழந்தைக ள் மனதில் தூண்டிவிட்டனர் .இப்படி எங்கள் பள்ளியில் மேலும்சில மாணவிகள் நீங்கள் யார் எங்களைக் கேட்பது என்ற எண்ணத்தில்நடந்து கொண்டுள்ளனர் . பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழந்தைகள்கெட்டுப் போவதைப் பார்த்து கொண்டு அமைதியாக இருக்க வேண்டுமா ?கேட்டால் தற்கொலை செய்து கொள்வேன்னு மிரட்டுகின்றனர் ,தவறான பாதையில் செல்வது அறிந்தும் ஒன்றும் செய்ய முடியாமல் கண்ணீர் வடிக்கின்றனர்சில பெற்றோர் .இது மட்டுமல்ல கண்டிப்பதே தவறு என்பது போல் எங்களின்  .இந்நிலை எங்கள் பள்ளியில் மட்டுமல்ல அனைத்து பள்ளிகளிலும் நடக்கின்றது .குழந்தைகளை சீராக்குவது ஆசிரியரின் கடமை அல்லவா இப்படி அவர்களை கட்டிப் போட்டால் வருங்காலச் சமுதாயத்தின் நிலை ?

Sunday 26 January 2014

65வது குடியரசு தினத்தில் ..........வேர்களின் நினைவில் ........


"ஊழலும் ,சாதியும் ஒழியட்டும்"

"எங்கள் ஊரில் மாணிக்க முதலியார் என்ற தியாகி இருந்தார் .அவர்தான் எங்கள் ஊரில் காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகளுக்குத் தளபதி.எப்போதும் ஏதாவது அரசியல்நடவடிக்கைகளை நடத்திக் கொண்டே இருப்பார் .
கதர் ஜிப்பா ,காந்தி தொப்பி அணிந்து ,கையில் மூவர்ணக் காங்கிரஸ் கொடியுடன் "மகாத்மா காந்திக்கு ஜே " என்று அவர் கோஷம் போட்டுக் கொண்டே சென்றது இன்னும் என் கண்ணுக்குள் திரைப்படக் காட்சி போல ஓடுகிறது .

Tuesday 21 January 2014

இன்று காலை தற்செயலாக சன் டி .வி சூரிய வணக்கம் பார்க்கநேர்ந்தது .



சீனாவைச் சேர்ந்த பெண்ணுடன் நேர்காணல் அவர் பேசிய தமிழ் மழலையின் குரலாய் .....தமிழ் எத்தனை இனிமையானது  என்பதை  பிற நாட்டினர் பேசுகையில் தான் உணர முடியும் .பிறமொழி கலப்பின்றி தூய தமிழில் ...பேசினார் .

அவரிடம் தமிழில் எத்தனை எழுத்துக்கள் என கேள்வி கேட்கப் பட்டது .இரு நூற்று நாற்பத்தேழு என அழகாக யோசித்துக் கூறினார் .இதிலென்ன பிரச்சனை என கேட்கின்றீர்களா , பேட்டி எடுத்த பெண் சரியா சொல்லிட்டீங்களே! என அவரை பெருமை படுத்துவது போல் எனக்கு கூட தெரியாது எனகூறியதுதான் கொடுமை .
 தமிழ் நாட்டைச் சேர்ந்த தமிழ் மொழியை உலகமெங்கும் பரப்புவதாக கூறும் தொலைக்காட்சியில் பணி புரியும் பெண் இப்படி கூறலாமா ?தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கை கூட தெரியாமல் தமிழ் நிகழ்ச்சி நடத்தும் கொடுமை .....தலையெழுத்து.உலக நாடுகள் அனைத்தும் பார்த்து சிரிக்காதா ?சொல்லிட்டு சிரிப்பு வேற ...
அவர் சீன வானொலியில் பணியாற்றுபவர் போல ,அவர்கள் ஒலி பரப்பும் தமிழ் ஒளிபரப்பில் பிறமொழிச்சொற்கள் கலந்திருக்குமா?என்ற கேள்விக்கு உறுதியாக இல்லை என்று கூறுகையில் மகிழ்வாக இருந்தது .எங்களால முடியாதுப்பான்னு இவர்கள் சிரித்துக் கொண்டே ...தலையில் அடித்துக் கொண்டேன் ...
 .ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாய் இப்படித்தான் தன் தாய் மொழி பற்றிய அறிவின்றி தமிழ் நாட்டு சந்ததிகள் இருப்பார்கள் போலன்னு தாய்  மொழியை உயிராய் என்னும் உலக  மக்கள் நினைக்க தோன்றும் படியா பேசுவது ...?

அடுத்து முக்கிய கேள்வி இங்குள்ள ஆண்கள் அழகாக இருக்காங்களா ?அந்தப் பெண் கேள்வி புரியாமல் வேற ஏதோ சொல்ல மீண்டும் இதே கேள்வி கேட்க உங்க மனதிருப்திக்காக நீங்க அழகாக இருக்கீங்கன்னு கூறினார் .

ஏன்டா இதை பார்க்க நேர்ந்தது என வருத்தப் படுவதைத்  தவிர வேற என்ன செய்வது ...?

Monday 20 January 2014

தூற்றுதலின் பயனாய்


நெல்லில் பதர்
சொல்லில் அலர்

37வது புத்தக கண்காட்சி






இது நாள் வரை எத்தனையோ திருவிழாக்களுக்கு சென்றுள்ளேன் . மனதை நிறைக்கும் விழாவாக எதுவும் இல்லை .பல வருடங்களாக கனவாய் இருந்தது நிறைவேறியது .இன்னும் கண் முன் கண்டகாட்சிகளின்  தாக்கம் மறையவில்லை .
இது நனவு தானா என்று அடிக்கடி என்னும் படி என்னைக் கவர்ந்தது .777 கடைகள் .அறிவு தேடலின் விளைவாய் அலைகடலென மக்கள் கூட்டம் .குழந்தைகள் கூட புத்தகங்களை தேடிய காட்சி ....!
ஒவ்வொரு கடையை விட்டும் வெளியே  வர மனமின்றி வந்தோம் நானும் சுவாதியும் ...முதல் நாளிலேயே பை கொள்ளாத புத்தகங்களுடனும்,எழுத்தாளர் எஸ் ,ராமகிருஷ்ணன் பேச்சுடனும் என மகிழ்வாய் ...!
மறு நாளும் புத்தகங்களோடு புத்தகமாய் ...
நிறைய எழுத்தாளர்கள்எங்களுடன் வீட்டிற்கு வந்துள்ளார்கள் ....என்னுடன் பேச ...விரைவில் பேசும் ஆவலுடன் நானும் ....!
இத்தனைக்கும் முத்தாய்ப்பாக
 டைரக்டர் எஸ் .பி.முத்துராமன் அவர்களைக் கண்டோம் ...எவ்வளவு எளிமை ..!யாராலும் நம்ப முடியாது. சாதாரணமாக அரங்கில் அமர்ந்திருந்தார்.சுவாதியின் திருமணம் அவர் தலைமையில் நடந்ததென அறிந்தேன் .ஆண்டுகள் பல ஆன பின்னும் சுவாதியை மறக்காமல் அதே அன்புடன் பேசியபோது... .அவரிடம் என் வியப்பை எப்படி சார் இத்தனை எளிமையாய் என கேட்டே விட்டேன் .நிறைய மனிதர்கள் எளிமையாய், யாரும் அறியாமல் வாழ்வதாக கூறினார்.வியப்பின்எல்லையில் நான்...

Saturday 18 January 2014

ஜீவா


இன்று கலை இலக்கிய கூட்டம்
-----------------------------------------------
கவிதை வாசிக்க கருப் பொருள் தெரியாத நிலையில் அங்கே சென்ற பின்னே தான் ஜீவா அவர்களுக்கான விழா என அறிந்தேன்.அப்போது உருவான கவிதை....

ஜீவா
இந்தியாவின் சொத்து
காந்தியின் கூற்றிது...

எல்லாமும்,எல்லாருக்கும்
எனக் கூறியவரே
சொத்தாய் மாறிய
முரண்...

சொத்தாய் ஆனவர்களை
சொத்தையாய் எண்ணி

காலணியார்க்கு
பகிர்ந்தோம் இந்தியாவை...!

Sunday 12 January 2014

பொங்கிடும் பொங்கல் அனைவருக்கும் மகிழ்வையே தரட்டும் .வாழ்த்துக்கள் .

நல்ல நூல் பட்டியல்



இவர்களுடன் பேசி  பாருங்கள்
1) ச.தமிழ்ச்செல்வன் --வெயிலோடு,அரசியல் எனக்கு பிடிக்கும் ,வாளின் தனிமை .
2)நாஞ்சில் நாடன்--தலைகீழ் விகிதங்கள் ,தெய்வங்கள் ,ஓநாய்கள் ,ஆடுகள் ,பேய்க்கொட்டு ,சதுரங்கக்குதிரை,எட்டுத்திக்கும் ,மதயானை ,குழந்தைகள் .
3)இந்திராபார்த்தசாரதி -குருதிப்புனல் ,மழை ,நந்தன்கதை ,போர்வை போர்த்திய உடல்கள் .
4) கந்தர்வன் -மீசைகள்,சாசனம் ,பூவுக்கு கீழே .
5)லா .ச.ரா.-அபிதா,பச்சைக்கனவு,பாற்கடல் ,சிந்தாநதி,த்வளி ,புத்ரா ,ஏகாந்தரசம் .
6) எஸ் .போ .அய்யா -ஈழம் தவம்
7)வண்ண நிலவன் -கடல்புரம் ,எஸ்தர் ,பாம்பும் பிடாரனும் ,சம்பாநதி
8)மௌனி-ஆழ்கடல் மொழி
9)தி.ஜா.-அம்மாவந்தாள்
10)அப்துல்காதர் -அயல்மகரந்தச்சேர்க்கை
11) சிங்காரம் -புயலிலே ஒரு தோனி
12)க்ருஸ் -ஆழி சூழ் உலகு .
13)கரிச்சான் குஞ்சு -பசித்த மானுடன்
14)புதுமைப்பித்தன் ,கு,ப .ரா ,மௌனி சிறுகதை தொகுப்புகள் .
15)சுந்தர ராமசாமி -பள்ளம் ,பிரசாதம்
16)சி.சு.செல்லப்பா -வாடிவாசல்
17)கி.ரா -கிடை ,வேஷ்டி ,கதவு,கரிசல் காட்டு கடுதாசி ,பிஞ்சுகள் .
18)பூமணி -வெக்கை ,அடமானம் .வயிறுகள் ,பிறகு ,நைவேத்தியம் ,வரப்புகள் ,வாய்க்கால் .
19)வண்ணதாசன் -கலைக்க முடியாத ஒப்பனைகள் ,சமவெளி,மனுஷா மனுஷா ,கனிவு ,நடுகை ,உயரப்பறத்தல் ,கிருஷ்ணன் வைத்த வீடு .
20)பிரபஞ்சன் -மகாநதி,ஆண்களும் பெண்களும் ,ஒரு ஊரில் சில மனிதர்கள் ,வானம் வசப்படும்
21)ஜெயகாந்தன் சிறுகதைகள் .
22)ஜெயமோகன் -காடு,ரப்பர் ,விஷ்ணுபுரம் ,நிழலைத்தேடி  .ஏழாம் உலகம் ,அறம் .
23)எஸ் .ராமகிருஷ்ணன் -கேள்விக்குறி ,துணையெழுத்து
24)மலர்வதி-தூப்புக்காரி
25)தொ.பரமசிவம் -அறியப்படாத தமிழகம் ,பண்பாட்டுச்சிதைவுகள் .விடுபூக்கள் .இன்னும் .....

ஆலங்குடி முகநூல் நண்பர்கள் குழு உதயம்


நாள் :12.01.2014
இடம் :ஆலங்குடி

அக்கறைக்கும் அலட்சியத்திற்கும்
அரட்டைக்கும் ,அரசியலுக்கும்
சங்கடத்திற்கும் ,சந்தோசத்திற்கும்
காமெடிக்கும் ,கலாய்ப்பிற்கும்
நுழைவாயிலாய் முகநூல் ..

அதில் குப்பைகளை தவிர்த்து
மலர்களைத் தூவி
மனதை நிறைக்க
மலர்ந்த குழுவிற்கு
கருவாய் அமைந்த
நல்ல உள்ளங்களுக்கு

வாழ்த்துக்கள் .....!






Saturday 11 January 2014

புரியாத புதிர் ....


நீ ஒழிந்தால் நிம்மதி
உனைப் பிரிந்தாலே மகிழ்வெனக்கு
சண்டையில் முகம் திருப்பி
ஆளுக்கொரு மூலையில் ..
யாரிடம் செல்வதென
தவிக்கும்  குழந்தை ...

சில மணித்துளிகள் கரைந்தபின்
அவருக்கு பிடித்த சமையலும்
அவளுக்கு  பிடித்த பூவும் ...

இப்போதும் தவிக்கும்
உண்மை யாதென ..

ஊடலும் கூடலும் 
இல்லறத் தத்துவம் 
முதுமொழி கூறும்
அனுபவ வாக்காய் ...

Wednesday 8 January 2014

மறக்க முடியாத நாளாக ....


இன்று என் வாழ்வில் மறக்க முடியாத நாளாக அமையும் என்பதை எதிர் பார்க்கவில்லை .எத்தனையோ சுழல்கள் என் வாழ்வில் .எதிர் நீச்சல் போட்டே மீண்டு வருகின்றேன்.காலச்  சூழலில் சிக்கி முழ்கும் போதெல்லாம் என் மாணவிகள் கரையேற்றி விடுகின்றனர் .


என் மீது இத்தனை அன்பை பொழிவார்கள் என எதிர் பார்க்கவில்லை .பள்ளியில் நுழைந்ததுமே வாழ்த்துமழை.ஏன் டீச்சர் சொல்லலன்னு சில குழந்தைகள் .இத்தனை ஆண்டுகளாய் என்ன சாதித்தோம் என தோன்றியதுண்டு .மாணவிகள் அதற்கு பதிலாய் என் பிறந்த நாளை தங்களின் பிறந்த நாளாய் கொண்டாடி மகிழ்ந்த போது மனம் நெகிழ்ந்து கண் கலங்கி விட்டேன் .எதையும் எதிர் பார்க்காத தூய்மையான அன்பில் கரைந்து நின்றேன் .பனியில் நனைந்த மழைத்துளிகள் பூவானம் தூவி வரவேற்று இதயம் நிறைந்த வாழ்த்துக்களை கூறாமல் கூறிய மதிய நேரத்தில் எனை வகுப்பிற்கு அழைத்து கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர் .மாணவிகளின் ஆரவாரத்தில்அதிர்ந்தது வகுப்பு .கைம்மாறாய் என்ன தர முழுமையான அன்பைத்தவிர ....
  .

Tuesday 7 January 2014

பொங்கல் வழிபாடு

இன்றுஎன் வகுப்பு மனம் நிறைந்த வகுப்பாய் கொண்டாட்டங்களுடன் அமைந்தது.ஆரவாரத்திற்கும் பஞ்சமில்லை .இப்படி என் மாணவிகள் வகுப்பில் இருந்து நான் பார்த்ததே இல்லை.ஒவ்வொரு நாளும் எனக்கு கற்றுக்  கொடுக்கிறார்கள் குழந்தைகள் . புத்தாண்டில் எப்படி

Monday 6 January 2014

இயற்கையின் கண்ணீரில்



உரங்களால்சிறுத்த நெற்பயிரின் 
உயரத்தை இயற்கையாய்
உயர்த்திய நம்மாழ்வார்

மக்களோடு மாக்களையும்
நேசித்த மாமனிதன்

இயற்கை உரமாய்
மண்ணோடு மண்ணாய்

Saturday 4 January 2014

இயலுமா?

அரசியல் ஆண்களுக்கு
அரிசியியல் பெண்களுக்கு
என்னே சமத்துவம்..!
இரண்டிலும் இருவரும்
இணையும் காலமே
சமத்துவம்...
இயலுமா?இந்தியாவில்...!


Friday 3 January 2014

தமிழரின் புதையலாய்



ஒரு வீட்டில் என்னென்ன பொருட்கள் இருக்க வேண்டுமென பார்த்து வாங்குகிறோம்.அழிந்து போகும் பொருட்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம்.
தமிழ் செம்மொழி உயர்மொழி என பெருமை பேசும் நாம், நம் வீட்டில் அழியாச்செல்வத்தை தரக் கூடிய நம் தாய்மொழியின் சிறப்பை 

உணர்த்துகின்ற தமிழ்நூல்கள் சிலவற்றையாவது வைத்திருக்க வேண்டாமா?
அப்படியெனில் என்னென்ன நூல்கள் நாம் வைத்திருக்க வேண்டும்.அதுவும் ஒரு தமிழாசிரியர் வைத்திருக்க வேண்டிய தரமான நூல்கள் எவைஎவை என்ற என் தேடல்களுக்கு விடையாக இன்றைய கணினி பயிற்சியில் எங்கள் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் தந்த கருத்துக்கள் அமைந்தன.
உங்கள் வீட்டில் அவற்றில் சிலவாயினும் கட்டாயம் இருக்க வேண்டும்.நம் தாய்மொழியின் பெருமை உணர்த்தும் நூல்கள் நீங்கள் வைச்சுருக்கீங்களா?
பாருங்க..
 

இலக்கிய நூல்கள்
----------------------------
திருக்குறள்
சங்க இலக்கியம்
பதினெண்கீழ்க்கணக்கு
சிலப்பதிகாரம்
மணிமேகலை
கம்பராமாயணம்
நீதிநூல்கள்
தனிப்பாடல்திரட்டு

கவிதைகள்
-------------------------
பாரதியார்
பாரதிதாசன்
கண்ணதாசன்
வைரமுத்து
அப்துல்ரகுமான்
காசிஆனந்தன்
பட்டுக்கோட்டையார்
தமிழ் ஒளி

புதுக்கவிதைகள்
நவீனக்கவிதைகள்
ஹைக்கூ
ஈழக்கவிஞர்கள்

இலக்கண கண்ணாடி
--------------------------------
தொல்காப்பியம்
நன்னூல்
யாப்பருங்கலக்காரிகை
தண்டியலங்காரம்
நம்பியகப்பொருள்
புறப்பொருள் வெண்பா மாலை
நற்றமிழ் இலக்கணம்
அடிப்படைத்தமிழ் இலக்கணம்
தமிழ் இலக்கணம்
இலக்கணகொத்து

பீடுநடை போட உரைநடைகள்
-----------------------------------------------
பாரதியார் கட்டுரைகள்
புதுமைப்பித்தன்
வ.சுப.மாணிக்கம்
பெருமாள்முருகன்
எஸ்.ராமக்கிருஸ்ணன்
பொ.வேல்சாமி
ஆ.சிவசுப்பிரமணியன்
நாஞ்சில் நாடன்
மாடசாமி
தொ.பரமசிவம்

வரலாற்றுநூல்கள்
--------------------------------
மொழி வரலாறு
தமிழ் இலக்கிய வரலாறு
குழந்தை இலக்கிய வரலாறு
தமிழர் சால்பு
மயிலை சீனி.வெங்கடசாமி
கார்த்திகேசு சிவத்தம்பி

வாழ்க்கை வரலாறு
--------------------------------
பாரதியார்
என்சரித்திரம்
பாவலர் சரித்திர தீபகம்
தமிழ் புலவர் வரலாற்றுக்களஞ்சியம்
பன்னிரு திருமுறை வரலாறு

அகராதிகள்
-------------------
அபிதான் சிந்தாமணி
தமிழ் லெக்சிகன்
தமிழ் கையகராதி
க்ரியாவின் தற்காலத்தமிழகராதி
தொகையகராதி
ஆங்கிலம் தமிழகராதி
மயங்கொலிச் சொற்பொருள் அகரமுதலி
சுராவின் தமிழ்-தமிழ்-ஆங்கிலம்

கையேடுகள்
-------------------

தமிழண்ணல்
ம.நன்னன்
சு.சக்திவேல்
பயன்பாட்டுத்தமிழ்
தமிழ்நடைக்கையேடு
சொல்வழக்கு கையேடு

இதழ்கள்
----------------
நாளிதழ்கள்
தரமான வார இதழ்கள்
தரமான சிற்றிதழ்கள்

சிறந்த தமிழ் பற்றுள்ள மனித நேயமிக்க முதன்மைக்கல்வி அலுவலர் எங்களுக்கு கிடைத்திருக்கிறார்.ஒரு அதிகாரி என்ற
பயமின்றி நாங்கள் இருந்தோம்.தமிழ் தண்மையானது என்பதற்கு இவரே உதாரணம் .முகப்பூச்சு இல்லை .தமிழை நேசிப்பவள் என்பதால் உணர்ந்து கூறப்பட்ட பதங்கள்.இதன் மூலம் என் மனம் நிறைந்த நன்றியை அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

Thursday 2 January 2014

தொடர்வண்டி பயணத்தில்



பசுமை போர்வையை
கிழித்து நுழைந்தது
மரவட்டையென ...

இயற்கையை இதயத்தில்
தேக்கி கண்களை
நிறைக்க ...

அகத்தின்கண்

தேதி மாறிய பயணச்சீட்டு
தடைசெய்து பாதியில்
இறக்கிவிட்டது
பழுத்த இலையொன்றை ...

ஊதுபத்தி விற்று
உழைப்பை நேசிப்பவனாய்
ஊனக்கண் இழந்த
ஞானக்கண் தோழன் ...

சரசரவென குட்டிக்கரணம்
சட்டென்று அடித்தது
கழைக்கூத்தாடும்  குழந்தையொன்று

தட்டைநீட்டி கையேந்தி
தவிக்கவிட்டது மனதை ..

அரசியல் அரட்டை ,
குடும்பச்சண்டை, ஊழல்,
கொலை, கொள்ளையென
கதம்பமென சொல் தோரணம் ...!

ஒவ்வொரு நிறுத்தத்திலும்
கருத்தரிப்பும் பிரசவமும்
கணக்கின்றி ....

பயணத்தின் எச்சங்களாய் ..
கசங்கிய செய்தித்தாள் ,
காலியாய் உருண்டோடிய
நெகிழி உருளை ,
குடித்த குவளையுடன் ,

காற்றில் நிறைந்த
சொல்தோரணங்கள்
மிச்சமென ....!