World Tamil Blog Aggregator Thendral: 2022

Tuesday 8 November 2022

film pathombatham noottandu

பத்தொன்பதாம் நூற்றாண்டு
Pathombatham noottandu 2022malayalam film 
Prime video 
கேரள மாகாணத்தில் தாழ்த்தப்பட்டவர்களை நம்பூதிரிகள் சாஸ்திரம் எனக் கூறி செய்த கொடுமைகளை உண்மை சம்பவத்தின் அடிப்படையில் வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம்.
19 ஆம் நூற்றாண்டில் திருவாங்கூர் ஈழவ குடும்பத்தில் பிறந்து மகாவீரனாக வாழ்ந்த ஆராட்டுபுழா வேலாயுத பணிக்கரின் வீரத்தை போராட்டங்களை ,ஈழவக்குடும்பத்தில் பிறந்த முலைவரி கட்ட மறுத்த வீராங்கனை நங்கேலியின் தீரத்தை ,உயர்சாதியினர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இழைத்த  வன்மத்தை அக்கிரமங்களை கண்முன் காட்டும் வலியின் உச்சம்.
மார்பைமறைக்க பெண்கள் படும் துயரங்களை ஆங்கிலேயர்களுடன் இணைந்து அவர்களுக்கு செய்த துரோகங்களை காட்சிப்படுத்தி உண்மையை முகத்தில் அறைந்து நாம் வந்த வரலாற்றைக் காட்டும் திரைப்படம் இக்கால இளைஞர்கள் கட்டாயம் காண வேண்டிய படங்களில் ஒன்று.
வேலாயுத பணிக்கராக வாழ்ந்துள்ள சிஜுவில்சன்,நங்கேலியின் வீரத்தை உணர்த்திய காயாடு லோகரை மனதார பாராட்ட வேண்டும்.
கற்பனையை வரலாறாக்கி பணம் கொழிக்கும் திரைத்துறையில் உண்மை வரலாற்றை உலகுக்கு எடுத்துக்காட்டிய இயக்குநர் வினையனுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் பார்க்க வேண்டிய படம்.

மலையாளத்திரைப்படங்கள் உண்மைக்கு அணுக்கமாக உள்ளதும் தமிழ்த் திரைப்படங்கள் இன்னமும் நாயக் பிம்பத்தினை வைத்தே பிழைப்பு நடத்துவதும் முரண்களின் உச்சம்.

Thursday 20 October 2022

நானும் தீபாவளியும்

நானும் தீபாவளியும்
சிறுவயதில் தீபாவளிஎன்பது அத்தனை ஆனந்தமானது .துணி எடுத்து தைத்து தருவார்கள்.தீபாவளிக்கு மட்டும் தான் புத்தாடை.நான்கு நாட்கள் முன்னதாகவே சொசைட்டியில் வெடி வாங்கி வந்து விடுவோம்.. அதை தினமும் காலையில் காயவைத்து எடுத்து வைக்க வேண்டும்.அப்பா தீபாவளி முதல் நாளில் நான் தம்பி மாமா வீட்டு பிள்ளைகள் சீனு ஆஷா எல்லாருக்கும் பிரித்து தருவார் .சில நேரங்களில் எங்கள் இருவருக்கு மட்டும் கிடைக்கும்.துப்பாக்கி வைத்து பொட்டுவெடி வெடிப்பதும் ஒத்தைவெடி வெடிப்பதும் நீண்ட நேர மகிழ்வைத் தரும்.
ஒரு வாரமாக முறுக்கு ஓலைபக்கோடா தட்டை மிக்சர் அதிரசம் தேங்காய் பர்பி ,சோமாஸ் , மைசூர் பாகு என வீடு அதகளம் ஆகும்.சிறுவயதில் மகிழ்வைத்தந்த பலகாரங்கள் வளர்ந்த பிறகு எவன் இதைக்கண்டுபிடிச்சான்னு கோவமா. வரும் வேலை பெண்டு எடுக்கும்.
தீபாவளி அன்று காலை நான்கு மணிக்கு ஆத்தா எழுந்து எண்ணெய் வெடி வைத்து சாமி கும்பிட்டு தலையில் வைத்து விடுவார்கள்...பெரிய செப்புத் தவலையில் தண்ணீர் கொதிக்கும் ஆவி பறக்க குளித்து விட்டு வெடியை முதலில் வைப்பது யாரென்று எங்களுக்கும் பக்கத்து வீடுகளில் செல்வி வீடு கண்ணகி வீடுகளுக்கும் போட்டி நடக்கும்.இதில் தம்பி முதலில் வெடி வைக்கணும்னு துடித்துக் கொண்டு இருப்பான்.

மறுபடி புத்தாடைகள் பலகாரங்கள் வைத்து சாமி கும்பிட்டு (தீபாவளி பலகாரங்களை சுடும் போதே சாப்பிடலாம் என்பதால் காலியாகிக்கொண்டே இருக்கும்.

பத்து வீடுகளுக்கு மேல் சென்று தர தனித்தனி பாத்திரங்களில் எடுத்து வைப்பார்கள் அந்த கால இரும்பு டின்களில் வரிசையாக பலகாரம் எண்ணி அடுக்கி இருக்கும்.
முதலில் மும்தாஜ் வீட்டுக்கு பிறகு கண்ணகி வீடு, செல்வி வீடு கொடுத்தபின் அடுத்த தெருவில் எஸ் ஆர் மாமா வீடு ஆத்தாவின் அண்ணன் வீடு என்பதால் நல்லதா பார்த்து ஆத்தா வைத்திருப்பார்கள்.
அடுத்தது மாமா வீடு அங்கு மாமா வீட்டு பிள்ளைகள் மற்றும் எங்களுக்கும் புத்தாடை இருக்கும்.காலில் விழுந்து கும்பிட்டு ஆடையுடன் ஒரு ரூபாய் பணமும் வாங்கிக் கொண்டு அடுத்தது ஆத்தாவின் அக்கா வீடான சத்திரத்திற்குச் செல்வோம்..அங்கு ஒரு தாத்தா காதில் கடுக்கனுடன் இருப்பார்கள்.அங்கு பெரியம்மா லெச்சுமி அக்கா எல்லாரையும் பார்த்துவிட்டு பலகாரம் கொடுத்து அவர்கள் தரும் தீபாவளி காசையும் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வருவோம்..
அப்பறம் வெடி வெடிப்பது தான் வேலை மதியம் மாமா வீட்டிற்கு அனைவரும் சென்று விடுவோம்.மாலை ஏதாவது ஒரு திரைப்படம் ...இப்படியாக தொலைக்காட்சி வரும் வரை சொந்தங்களுடன் கழிந்தது.மறுநாள் கௌரி நோன்பு மிகவும் சுத்தபத்தமாக ஆத்தி இப்போ நினைச்சாலும் கண்ணீர் வரும் வேலை வேலை என்று அடி நிமிர்த்தி விடுவார்கள்.
தொலைக்காட்சி வந்த பிறகு காலையில் பத்து மணிக்குள் அனைத்தையும் முடித்துவிட்டு சாலமன் பாப்பையா பட்டி மன்றம் என தொடர்ந்து டிவி தான்...டிவி பார்க்கும் போது ஏதாவது வேலை சொன்னால் வரும் பாருங்க கோவம்...காலை உதைத்து கொண்டு செய்வோம்.
வேலைக்கு வந்த பிறகு இந்த ஆவல் இல்லை என்றாலும் சேலை எடுக்கப்போவதே திருவிழாவிற்கு செல்வது போல அனைவரும் போவோம்.அதென்னவோ மலைபோல் குவித்து வைத்தாலும் அடுத்ததைப் பார்த்து இறுதியாக முதலில் பார்த்ததை வாங்கி வருவோம்...சினிமாக்கு போவது தான் பிடித்த பொழுது போக்கு.

பதினோராம் வகுப்பு படிக்கும் போது தேவகோட்டை சித்தப்பா வீட்டிற்கு வர பெரியார்  அறிமுகம்  ஆனார்... அதெப்படி சாமி கும்பிடாமல் இருப்பது ....

பாலகுமாரன் ரமணிசந்திரன் நாவல் படிக்கும் போது கடவுளர் கதைகள் நூலை படிக்க நேர்ந்தது... இருந்தாலும் விழாக்கள் கொண்டாட்டம் தான்.வாசிப்பு தெளிவைக் கொடுக்க தீபாவளிக்கு சித்தப்பா வீட்டிற்கு வரத்துவங்கினோம் பிறகு தீபாவளி அன்று ஏதாவது சுற்றுலா செல்வது வழக்கமானது . உறவினர்கள் சூழ அது தனி கொண்டாட்டமானது.. ஒவ்வொரு தீபாவளியும் எங்களுக்கு சுற்றுலாக்காலமானது.
காலையில் மாணவர்கள் ஏன் நீங்கள் தீபாவளி கொண்டாட  மாட்டீர்கள் என்று கேட்ட போது அசுரன் என்பது தமிழரைக் குறிக்கும் மேலும் ஒருவர் இறந்த நாளை கொண்டாடுவது என்பது பிடிக்காததால் . பொங்கல் தான் எங்களுக்கு மட்டும் அல்ல தமிழர்களின் திருநாள் அதை மிகச் சிறப்பாக கொண்டாடுவோம் என்றேன்.

ஒவ்வொரு இடத்திற்கும் தீபாவளியின் காரணங்கள் வெவ்வேறாக உள்ளது . ஆனால் பொங்கல் அப்படி அல்ல இயற்கையைக் கொண்டாடுவது என்றேன்.சிறுவயதில் பொங்கலும் நான்கு நாட்கள் பெண்டெடுக்கும் விழா தான்.முதல் நாள் முற்றம் வைத்த பெரிய வீட்டை கிணற்றில் இருந்து தண்ணீர் இறைத்து கழுவி பித்தளை பொருட்களை விளக்கி போகி அன்று மாலை கொழுக்கட்டை செய்து சாமி கும்பிட்டு நிமிர்ந்தால் அடுத்த நாள் காலையில் மீண்டும் வீட்டைக் கழுவி மறுபடி அத்தனை விளக்கு பித்தளைப் பாத்திரங்களைப் கழுவி சாமி கும்பிட்டு நிமிர்ந்தால் மீண்டும் மூன்றாவது நாளாக வீட்டுச்சாமிகும்பிட காலையில் மாவு இடித்து அதிரசம் செய்து ஆமைவடை உளுந்து வடை சுழியன் செய்து சாமி கும்பிட வேண்டும்...
இந்நாட்களில் மாதவிலக்கு வந்து விட்டால் அவ்ளோதான் மூதேவி நாளும் கிழமையுமா ஒதுங்கி நிக்குது பாருன்னு அம்மாவின் கோவம் ஏன்னா அவ்ளோ வேலையும் அவர்களே செய்யனும்னு ...பரந்த மாதிரிகாட்டி நானும் புத்தகமும்னு ஜாலியா உலக்கைக்கு பின் எனது நாட்கள் கழியும்..

அசைபோடும் எண்ணங்கள்
தொடரும்
மு.கீதா
புதுக்கோட்டை

Friday 9 September 2022

காதல்

எட்டிப் பிடித்து ஒட்டிக்கொள்ளச் செல்கிறாள்..
அத்தனை வேகத்துடனும் பிடிவாதத்துடனும்.
உலகே கைவிட்ட மனதோடு செல்பவளின்
கரம்தொட பறந்து செல்கிறேன்.
அவளின் பறத்தல் வேகமானது.
உடைந்த மனதை ஒட்டும் சொற்களைத் தாங்கி விரைகிறேன்..
சில்லுக்கண்ணாடி மனதுடன்
குருதி வடிய செல்பவளை 
சில நொடிகள் காணாது
குலைகிறேன்..
இத்தனை வீரியம் காட்டுபவள்
சற்று பொறுத்திருந்தால் கரம் பிடித்திருப்பேனெனக்கதறுகிறேன்...
விநாடிகளைத்தொலைத்தவளாய்.
மரணத்தைக்காதலித்தவளை
கண்டால் கரம் கொடுங்கள்..

Tuesday 9 August 2022

ஆனந்த வல்லி -லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

ஆனந்தவல்லி -நாவல்
ஆனந்தவல்லி நாவலை லட்சுமி பாலகிருஷ்ணன் அவர்கள் எழுதியுள்ளார்கள். இந்த நாவல் 2022 புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் சிறந்த நாவலுக்கான போட்டியில் விருது பெற்ற நாவல்.
ஐந்து வயது பெண் குழந்தையை தனது பணத்தாசைக்காக தந்தையே திருமணம் செய்து கொடுக்கிறார்.மணமகன் வர முடியாத சூழலில் திருமணம் நடக்கிறது.பருவம் வராத குழந்தை என்று தெரியாத நிலையில் நிச்சயதார்த்தம் முடிவதால் மணமகன் வேறு வழியின்றி திருமணத்தை ஏற்கிறார்.பருவம் வந்த பிறகு அழைத்துச் செல்கிறேன் என்று வேலூரில் உள்ள கும்பினி படையில் வேலைக்குச் செல்கிறார். ஆனால் ஆனந்தவல்லியின் தந்தையோ மனைவி தனது தாய் வீட்டிற்குச் சென்ற போது  தனது மகளை வறுமை கடன் என்று பொய் சொல்லி அரண்மனைக்கு ஏவல் பெண்டிராக  விற்று விடுகிறான் .தாய் தனது உறவினர்களுடன் அரண்மனை அதிகாரிகளுடன் முறையிட்டு போரிட அவர்கள் மறுத்து விடுகிறார்கள்.
காலங்கள் செல்ல மனைவியை அழைத்துச் செல்ல வரும் கணவன் அவளது நிலை கேட்டு "தனது மனைவியை மீட்டுத் தாருங்கள்" என கணவன் ஆங்கிலேயருக்கு எழுதிய மடலே இந்நாவல் உருவாக காரணமாக அமைந்துள்ளது.
  நாவல் ஆசிரியர் அந்த ஒரு கடிதத்தின் பாதிப்பால் உண்மையை நோக்கி, வரலாற்றின் பாதையில் பயணித்து இந்த நாவலை அந்தக் காலச் மணிப்பிரவாள நடையில் நாவலை  எழுதியுள்ளார், பலதார மணம் எத்தனை இயல்பான ஒன்றாக இருந்துள்ளது என்பதை நாவல் உணர்த்துகின்றது
அக்கால பெண்களின் நிலை எவ்வளவு கொடுமையாக இருந்துள்ளது என்பதை கூறும் நாவல் இது, பெண்களை அடிமைகளாக விற்பதும், மூடநம்பிக்கையை எதிர்க்கும் ஆங்கிலேயர்கள், அவர்களும் பெண்களை அடிமையாக வாங்குவதும்,அன்பளிப்பாகக்கொடுப்பதும் என்பது மிக கொடுமையான ஒன்று.  பெண்கள் விஷயத்தில் யாராக இருந்தாலும் அடிமைப் பொருளாகவே கருதியுள்ளனர் . பாதிக்கப்பட்ட அரண்மணை ஏவல்  சிறுமிகள் இருவர்  தற்கொலை செய்ய முயற்சிக்கும் பொழுது இந்நாவலின் நாயகி ஆனந்தவல்லி கூறும் வார்த்தைகள் "நாம் வாழறதுக்கான மொத்த அர்த்தமும் காலுக்கு நடுவால இருக்கற ஒத்தை ஓட்டைக்குள்ளரத்தான் ஒளிஞ்சிருக்கா என்ன? என்ற கேள்வி இந்த சமூகத்தை நோக்கி எழுத்தாளர் எழுப்பும் தீக்கங்கு.
பெண்கள் கணவன் இறந்த பிறகு உடன்கட்டை ஏறுவது தனது மைந்தருக்கும் சகோதரருக்கும் நன்மையைத் தரும் என கூறுவதும், அவர்கள் அணிந்திருக்கும் நகைகளை சடங்கு செய்பவர் பார்த்து எவ்வளவு தேறும் என கணிப்பதும்  பெண்ணின் மரணத்தின் கூட இரக்கமில்லாத தன்மையைக்கொண்ட சமூகத்தின் தோலை உரித்துக்காட்டுகிறது.
தற்கால பெண்கள் அவசியம் படிக்க வேண்டிய நாவல் இது. இந்த நாவலைப் பரவலாக நாம் எடுத்துச் செல்ல வேண்டும் .
இக்கால குழந்தைகள் கல்வியை துச்சமாக மதித்து, திரைப்படங்களைப் பார்த்து சிறு வயதிலேயே திருமணம் செய்து கொள்வது அதிகமாக உள்ளது. குழந்தை திருமணம் மீளவும் நடக்கிறதோ என்ற அச்ச உணர்வு தோன்றுகிறது.
இப்படிப்பட்ட வரலாற்று உண்மைகள் பெண்கள் கடந்து வந்த பாதையை, நம் பெண் சமூகத்திற்கு , வருங்கால சந்ததிக்கு கூறி இந்த முன்னேற்றத்திற்கு காரணமானவர்கள், அவர்கள் பட்ட அவமானங்கள், போராட்டங்கள் இதையெல்லாம் பெண் குழந்தைகள் உணர வைக்க வேண்டும்  பெண் ஒரு சடப் பொருளாக, போக பொருளாக , அடிமைப் பொருளாக வாழ்ந்த காலத்தை உணர்த்தும் நாவல். மிகச் சிறப்பாக கதாபாத்திரங்களை படைத்து, நாமும் அந்த உணர்வுகளை அடையுமாறு விறுவிறுப்பான கதை ஓட்டத்துடன் நாவலை எழுதியிருப்பது பாராட்டுதற்குரியது.
மனம் நிறைந்த வாழ்த்துக்கள் சகோதரி லட்சுமி பாலா கிருஷ்ணன் அவர்களுக்கு .
அன்புடன்
மு.கீதா
புதுக்கோட்டை.

Tuesday 7 June 2022

பெண்

மூளைச்சலவையை
மனத்தடையை உடைப்பது 
என்பது இடிபாடுகளில் சிக்கிய உடலை பிய்த்தெடுப்பது போல..
சமூகத்தினைப் புரட்டிப் போடும்
நெம்புகோலென கிளம்பியவள்,
எதிர்கொள்கிறாள்
சிற்றீசல்களின் கணைகளை.
குடும்பத்தை விட்டு சுத்துறியே
சமைப்பது எப்போது?
புள்ளக்குட்டியெல்லாம் மறந்து
அலையுது பாரு!
இதெல்லாம் தேவையா?
போய் பூவச்சி புடவையை கட்டி
பொம்பளயா லட்சணமா இரு!
அகராதி புடிச்சது
எதற்கெடுத்தாலும் கேள்வி கேட்கும்!
ஊட்டுக்காரன் கேட்கவே மாட்டான் போல!
சரி, நமக்கு வசப்படுமான்னு பார்ப்போம்!
மெல்லத் திரும்பி காலணித்தூசைத் 
தட்டிவிட்டு புன்னகைத்து கடக்கிறாள்
எரிமலைத்துண்டாய்..

Monday 18 April 2022

விதையாக

எங்கு வாழ்ந்தாலும் 
வேர்ஊன்றி வளரும்
விதையாக,
ஆதி விதை
 வாழ்ந்த இடம் நோக்கிப்
படரும் கொடியாக,
அன்பெனும் கனிசுமந்து
அள்ளித்தரும் மாரியாய்,
கருணை சுரந்து உயிர்களைக் 
காணும் விழிகளுக்கு
"யாதும் ஊரே யாவரும் கேளிர்"