World Tamil Blog Aggregator Thendral: November 2014

Sunday 30 November 2014

இணையும் கரங்களின் குரலாய்

இணையும் கரங்களின் குரலாய்

இன்றைய செய்திகளில்...30.11.14

1]ஹைதராபாத் கல்லூரி மாணவர் தன் கூடப்படிக்கும் மாணவியை சீனியர் மாணவர் கேலி செய்ததை எதிர்த்ததால் அவரை தலையில் அடித்துக்கொலை செய்துள்ளார்...சீனியர் மாணவர் கைது...

2]ரோகர் என்னும் பகுதியில் பேரூந்தில் வந்த இரு சகோதரிகளை தொடர்ந்து கேலி செய்து வந்த ஒருவனை பொறுக்க முடியாது அச்சகோதரிகளே பெல்ட்டால் அடித்து உதைக்கும் காட்சியை பேருந்தில் ஒருவர் செல்போனில் படம் பிடித்த காட்சி ஒலிபரப்பானது...

முதல் செய்தி  நமக்கு கேட்டு பழகிப்போய்விட்டது .தரமற்ற.கல்வியின் சீரழிவு ..சந்ததிகளின் செயலாய்.

இரண்டாவது செய்தியில் பாதிக்கப்பட்டவர்கள்  தட்டிக்கேட்கும் வகையில் அடித்து உதைத்த போது வெல்டன் என வாழ்த்து கூறியது மனம்..

நான் கூறவந்தது இதுவல்ல..

துணையாடல்


நண்பகலில் நல்லிரவு...
பாடம் மறுத்து
விரித்த விழிகளுடன்
இணைந்து பாடிய
குழந்தைகளின் இசையில்
பேரிரைச்சலுடன் நர்த்தனமாடிய
உயிர்த்துளிகளின் தோரணங்கள்...
பலகணியில் புகுந்து
பச்சிளம் குழந்தைகளை துழாவி
அழைத்தது துணையாட...

Thursday 27 November 2014

kuraththi-குறத்திகழுத்தில் தொங்கிய
கனத்த தூளியோடும்
கையில் பிடித்த
தளர்நடையோடும்
வயிற்றில் உதைக்கும்
கருவோடும் பயணிக்கும்
 குழவிக்குறத்தியின்
குவளை தேநீருக்காய்
ஆடியபடி...

Tuesday 25 November 2014

உயிர்ப்பின் கணமாய்

மென்தொடலே
வன்தொடலுக்கு
வழியாக

கதகதப்பில்
கலந்து கண்மயங்கி

வல்லினமும்
மெல்லினமும்
உருமாறும் கணம்
உயிர்ப்பின் கணமாய்....

Sunday 23 November 2014

காடு -இயக்குனரிடம் ஒரு கேள்வி

காடு -இயக்குனரிடம் ஒரு கேள்வி

இயக்குநர் சமுத்திரக்கனி மீது  மிகுந்த நம்பிக்கை உண்டு .சமூக அக்கறைக்கொண்டவர் ,அவரது படைப்புகள் சமூகச்சிந்தனையைத்தூண்டுவதாக இருக்கும் என்பதில்  மாற்றுக்கருத்து இல்லை

.அவர் மீது உள்ள நம்பிக்கையில் இன்று காடு திரைப்படம்திரையரங்கம் சென்று பார்த்தேன் .காடு அழிப்பதை தடுக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் திரைப்படத்தை எடுத்துள்ளமைக்கு அவருக்கு என் பாராட்டுக்கள் . கதாநாயகியை அரைகுறை ஆடையில் ஆடவிடாமல் பணத்தை விட சமூக அக்கறையையே முன்னிறுத்தி துணிந்து படம் எடுத்துள்ள அவருக்கு என் பணிவான நன்றி .

Friday 21 November 2014

நான் கலெக்டராவேன் டாக்டர்...

நான் கலெக்டராவேன் டாக்டர்...

டாக்டர் என்னை குணப்படுத்திவிடுங்க நான் நிறையப்படிக்கனும் கலெக்டராகனும்..

.சத்யா...ஹோம்வொர்க் பண்ணிட்டியா...படம் வரஞ்சிட்டியா....அந்த பாடத்த படிச்சிட்டியா...
எனதூங்காது புலம்பி துடித்தவளிடம்
ஏம்மா இவ்வளவு நல்ல பிள்ளையா படிக்கனும் கலெக்டரா ஆகணும்னு எல்லாம் சொல்றியே ஏம்மா இப்படி பண்ணுன ..?

தெரியாம பண்ணிட்டேன் டாக்டர்...எப்படியாவது என்னைக் காப்பாத்திடுங்க டாக்டர் ..எங்க டீச்சர்  எனக்கு அனுமதி கொடுப்பாங்க நான் தேர்வு எழுதிடுவேன் டாக்டர்..

அக்கா நான் நல்லா வந்துடுவேன்கா...அம்மாவ இனி கவலப்படவிட மாட்டேன்கா...

ஹலோ டீச்சர்...நான் நல்லா வந்துடுவேன் டீச்சர் ...போன வருடம் முதல் மார்க் வாங்குன நந்தினியவிட 2 மார்க்காவது கூட வாங்கிடுவேன் டீச்சர்...

Thursday 20 November 2014

காரணம் யார்?

காரணம் யார்...?


திருமணம் செய்யத்துடிக்கும் குழந்தைகளை தடுக்க முடியாமல் தளர்ந்து போகின்றனர்..ஆசிரியர்கள்.

.வாழ்க்கையின் இலட்சியமே...திருமணம் தான் என்பது போல குழந்தைகள் மனதில் நஞ்சைப்பதித்தது யார்.?

..படிக்கும் குழந்தைகளிடத்தில் காதலே முக்கியமென தூண்டிவிடுவது யார்.?

.பத்தாம் வகுப்பாவது முடித்தால் பிற்கால வாழ்க்கைக்கு பயனாகும் என ஆசிரியர்கள் கெஞ்ச பிடிவாதமாய் மறுத்து மணவாழ்க்கையை தேர்வு செய்யும் குழந்தைகள்...பிற்காலத்தில் வருந்தும் போது..கையறு நிலையில் அனைவரும்...

கல்லூரிக்காதல் ,பள்ளிக்காதலாகி,இனி நர்சரிக்காதலில் வீழ்ந்து அழிந்து போகட்டும்..காசு நோக்கி ஓடும் சமூகம்...திரும்பிப்பார்க்கையில் குழந்தைகள் தன் குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருப்பார்கள்..

குழந்தைபெற்றோர்களைப்பார்த்து கண்ணீர்விடுவதைத்தவிர வேறென்ன செய்ய...கண்டித்தால் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டி தன் தலையில் மண்ணை வாரிப்போட்டுக்கொள்ளும் குழந்தைகளைப்பார்த்துக்கொண்டிருக்கத்தான் வேணுமா...?இணையும் கரங்களின் குரலாக
---------------------------------------------------------
கொடுத்தால் என்ன?

பள்ளிக்குழந்தைகள் காதலிப்பது போல் படமெடுக்கும் திரைத்துரையினருக்கும்.

திருமணவயதுக்குமுன் திருமணம் செய்து கொள்ளும் தம்பதியினருக்கும்,

அதைப்பார்த்தும் தட்டிக்கேட்காத சுற்றத்தினருக்கும்...

திருமணம் செய்துகொடுக்கும் பெற்றோர்கட்கும் கடுமையான தண்டனை கொடுத்தால் என்ன?

குறைந்த வயது திருமணத்தால் குழந்தைகளைக்கவனிக்கமுடியாமல்..வளரும் சமுதாயம் சீரழியும் நிலையைத்தடுக்கலாமே...இப்படி கொஞ்சம் பேருக்கு கொடுத்தால் அடுத்தவங்க பயப்படுவாங்கள்ல...!
Tuesday 18 November 2014

பயணம்


சிலையாகி, உருகி
அருஉருவாகி பறத்தலில்
கரைகிறது..
மனதை கவ்வும்
பதங்களின் பயணம்...
மறைந்த சந்தன காட்டின்
வாசமென...

Sunday 16 November 2014

கனவில் வந்த காந்தி -8

நல்லவேளை நான் தப்பிச்சேன்னு மைதிலி பதிவு,முத்துநிலவன் அண்ணா பதிவ படிச்சுட்டு கரந்தை அண்ணா பதிவப்பார்த்தா ஆத்தாடி 5 ஆவது ஆளா நானு...வேலு நாச்சியாரா பயப்படுவாள்னு  துணிஞ்சிட்டோம்ல..நினச்சத எல்லாம் பேசலாம் கனவிலதானே..இனி உங்கப்பாடு

01.   நீ மறு பிறவியில் எங்கு பிறக்க வேண்டும் என்று நினைக்கிறாய்?அப்படின்னு ஒண்ணு இருக்கான்னேன்...அப்ப..நீங்க எங்க பிறப்பீங்கனு கேட்டுட்டு நான் தமிழ்நாட்லதான் பிறக்கனும்னு சொல்வேன்..அவர் நிச்சயமா இந்தியான்னு சொல்லவே மாட்டாரு இப்ப இருக்குற நிலைமையப்பார்த்தா...ன்னு சொல்லிட்டு ஏன் தாத்தா எங்க வீரத்த எல்லாம் அஹிம்சைனு சொல்லி கிள்ளி எறிஞ்சுட்டீங்குன்னு கேட்பேன்..

   02.   ஒரு வேளை நீ இந்தியாவின் ஆட்சியாளனாக வந்துவிட்டால்?
 

சக்கப்போடுதான் கன்ணுக்குக்கண் பல்லுக்குப்பல் தான் குடுக்குற குடுல தப்பு பண்றவன் எல்லாம் துண்டக்காணும் துணியக்காணும்னு ஓட வைக்கனும் ...அன்று ஒரு நாள் மட்டும் பெண்கள் பாதுகாப்பா இருக்குற மாதிரி கண்டவுடன் கேள்வியே இல்ல..தண்டனைதான்...ஆமா எல்லோருக்கும் வாய்ப்புன்னு கடைகோடி மக்கள் வரை ஒரு நாள் ஆட்சியாளரா இருக்க ஒரு சட்டத்தைப்போட்டுட்டு ஒரு தடவைக்கு மேல் யாருக்கும் பதவியே கிடையாதுன்னு சும்மா நச்சுன்னு ஒரு சட்டத்த போட்டுடலாம்ல...அப்படிய்யே டாஸ்மார்க்கு பூட்டுட்டுட்டு....

03.   இதற்கு வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் எதிர்ப்பு தெரிவித்தால்? என்ன செய்வாய்?  


அங்கிய்யே இரு இங்க வராதேன்னு சொல்லிடுவேன் ..ஆனா நாடு திருந்தனும்னு அவங்களும் ஏத்துப்பாங்க...அவங்களும் ஆட்சியில வர வாய்ப்பு கொடுத்துருக்கோம்ல..


04.   முதியோர்களுக்கு என்று ஏதாவது திட்டம் வைத்திருக்கின்றாயா?


இருக்கே அனாதைக்குழந்தைகள் ஒவ்வொருவரும் ஒரு முதியவரை தத்து எடுத்துக்கச்சொல்லிடுவேன்...அவர்கள் தேவைகளை அரசே பார்த்துக்கும்.எப்பூடீடீ...05.   அரசியல்வாதிகளுக்கு என்று புதிய திட்டம் ஏதாவது?


இது கொஞ்சம் கஷ்டமாருக்கே..ம் ம் ம் என்ன திட்டம்...அரசியலுக்கு முன்பு எப்படி எங்கு இருந்தார்களோ அப்படியே ஆகட்டும்னு சொல்லி அவங்க ஊர தத்து எடுத்துக்கச்சொல்லிடுவேன்...அடிப்படை வசதி செய்து கொடுக்கலன்னா மக்களே அவுகள பாத்துக்கச்சொல்லிடுவேன்ல.

06.   மதிப்பெண் தவறென, மேல்நீதி மன்றங்களுக்குப் போனால்?


மதிப்பெண்ணே கிடையாது...போங்க..

07 விஞ்ஞானிகளுக்கென்று ஏதும் இருக்கிறதா?


இருக்கே மனுசன் மனித நேயத்தோட வாழ ஏதாச்சு கண்டு பிடிக்க சொல்வேன்..கண்டு பிடிக்கலன்னா போதும்பா உங்க கண்டுபிடிப்பால பூமி அழிஞ்சதுதான் மிச்சம் .ஆணியே பிடுங்க வேண்டான்னு வடிவேலு பாணில சொல்லிடுவேன்..
08.   இதை உங்களுக்குப் பிறகு வரும் ஆட்சியாளர்கள் செய்வார்களா?     

செய்வாங்க ஏன்னா..ஒரு நாளைக்கு ஒருத்தர் அவனவன் சுருட்டுற வழிய பாக்க இத கவனிக்க நேரம் இருக்காதுல்ல..

 09.   மற்ற நாடுகளில் இல்லாத ஏதாவது புதுமையாக?


1[பிள்ளைகளை கவனிக்காத பெற்றோரும்,பெற்றோரை கவனிக்காத பிள்ளைகட்கும் கடுமையான தண்டனைதான்.

2]குழந்தைகள் விரும்பும் கல்வியைத்தேர்ந்தெடுக்கும் உரிமை.

3]சமூக அக்கறை இல்லாத தகவல் ஒளிபரப்பு சாதனங்களுக்குத்தடை

4]பள்ளி,கல்லூரி முடித்ததும் பணி புரிந்து கொண்டே படிக்கும் வாய்ப்பு ஊதியமாகக் கல்விச்செலவை அரசே ஏற்கும்.

5] இந்தியாவுல இருக்குற பெரும் பணக்காரங்க எல்லாம் ஆளுக்கு ஒரு மாவட்டத்த தத்து எடுக்கசொல்லிடுவேன்ல..

6]உலகில் ஒற்றுமையாக வாழும் நாடுகள் தான் செல்வமிக்க நாடுன்னு ஒரு அறிவிப்பு விட்டா அமெரிக்கா பக்கம் ஒரு ஆளு இருப்பாங்க...இந்தியா தான் செல்வமான நாடுன்னு பேர் வாங்கிடும் நாம தான் யாரையும் எதிர்த்து பேசமாட்டோம்ல..

ஆத்தாடி வளவளன்னு வருதே போதும் தாத்தான்னு சொல்லிடுவேன்.10.   எல்லாமே சரியாக சொல்வது போல் இருக்கு. ஆனால் நீ மானிடனாய் பிறந்து நிறைய பாவங்களை செய்து விட்டாய். உனக்கு மீண்டும் மானிடப் பிறவி கொடுக்க முடியாது. ஆகவே வேறு என்ன பிறவி வேண்டுமென இறைவன் கேட்டால்?  

வேண்டவே வேண்டான்னு சொல்லிடுவேன்..அதையும் மீறி எடுக்கனும்னா கடவுளா பிறக்கனும்னு சொல்லிடுவேன் .கொடுப்பாரு...?

இனி யார் கனவில காந்திய வரச்சொல்லலாம்..என்ற யோசனையில்

1]இளமதி இளைய நிலா-http://ilayanila16.blogspot.in/2014/11/blog-post_2.html

2]காரஞ்சன் சிந்தனைகள்-http://esseshadri.blogspot.com/2014/11/blog-post_16.html

3]இமாவின் உலகம்-http://imaasworld.blogspot.in/2014/11/blog-post_14.html

4]தமிழ்வாசி பிரகாஷ்-http://www.tamilvaasi.com/2014/11/TOP-TEN-YOUTUBE-FREE-DOWNLOADER.html

5]வி.சி.வில்வம்-http://vilvamcuba.blogspot.in/2014/11/blog-post.html

6]கீதமஞ்சரி-http://geethamanjari.blogspot.in/2014/11/blog-post.html

7]அருணாசெல்வம்-http://arouna-selvame.blogspot.com/2014/11/blog-post_11.html

8]கோவை ஆவி-http://www.kovaiaavee.com/2014/11/three-angels.html

9]உஷா அன்பரசு-http://tamilmayil.blogspot.com/2014/11/blog-post.html

10]திடங்கொண்டு போராடு-http://www.seenuguru.com/2014/11/OMR.html

அப்பாடி இனி அவங்கபாடு...ஆமா கில்லர்ஜி சகோ ஏன் இப்படி...?ஆனாலும் ரசனையாத்தான் இருக்கு நன்றி

Saturday 15 November 2014

முன்னோர்களின் வருகையில்...

முன்னோர்களின் வருகையில்...

                                   முத்தம் குறித்த போராட்டம் படித்து தீவிரமாய் கருத்துகளுடன் முகநூலில் ..இருக்கையில் மெலிதாக நிழலாடியது யாரோ ஒருவர் நடந்து போவதாய்...யாருமற்ற நிலையில் இது சாத்தியமில்லை கற்பனையே என மீண்டும் முகநூலில்...

                                   மறுபடியும் இருவர் கடந்து செல்லும் நிழல்..கொஞ்சம் அடிவயிறு கலங்க பூட்டியிருக்கும் வீட்டில் எப்படி என்ற அதிர்ச்சியுடன் திரைச்சீலையை விலக்க...ஆத்தாடி...என் தாத்தா வின் தாத்தாக்கள் குடும்பத்துடன் உள் நுழைந்து தனக்கான காலை உணவை உரிமையுடன் எடுத்துக்கொண்டு.கொண்டு.ஒருத்தர் பிரிட்ஜை திறந்து கொண்டு..ஒருவர் பையை ஆராய்ந்து கொண்டு...சத்தமின்றி உள் நுழைந்து..

                       .ஐய்யோ என என்னை மீறி அலற பெரிய்ய்ய்ய தாத்தா என்ன கத்துறன்னு தன் ஈறு தெரிய உறும...கதவை பட்டென்று சாத்தி வெடவெடுத்து...வயசான உனக்கே இத்ன திமிரான்னு கதவை அடித்து விரட்ட பால் பாக்கெட் வழிந்தோட...ஒரு கிலோ கோதுமை  பாக்கெட்டை எடுத்துக்கொண்டு நிதானமாக சென்று மீண்டும் திரும்பி பார்த்து முதல்ல வீட்டு வேலையைப்பார் பின் முகநூல பாருன்னு திட்டாமத்திட்டிட்டு போயிட்டாக..மூவரும் ...

                            என்னத்த சொல்ல..காக்காக்கள் எச்சரித்தும் கவனிக்காம இருந்தா இப்படி அதிர்ச்சியான விருந்தினரை சமாளிக்க வேண்டியதுதான் ..நான் போறேன்பா...விடுவோமா அவர்களையும் போட்டோ பிடிச்சிட்டோம்ல..ஆனா போச் கோதுமை பாக்கெட்...

Friday 14 November 2014

14.11.14 குழந்தைகள் தின விழா


குழந்தைகளோடு குழந்தையாய் எங்கள் பள்ளியில் குழந்தைகள் தின விழாவில்
என் வகுப்பில் பவித்ரா சற்று மனவளர்ச்சி குன்றியக்குழந்தை .எல்லோரிடமும் முரட்டுத்தனம் காட்டுபவள்..எழுதுவாள் படிக்கத்தெரியாது..அவள்.பள்ளியில் சேர்ந்த பொழுது...அடிக்கடி அவளைசீண்டி எல்லா குழந்தைகளும் அவளைத்துன்புறுத்தி ரசிப்பார்கள்...எனது அறிவுறுத்தல்களுக்குப்பின் இப்போது குறைந்துள்ளது...அன்பாலும் ,பாராட்டுதல்களாலும் இப்போது படிக்க ஆரம்பித்துள்ளாள். ,மற்றக்குழந்தைகளுடன் இணைந்து செயல்படுகின்றாள்..நான் காட்டும் அன்பை என் வகுப்புக்குழந்தைகள் அனைவரும் அவள் மீது காட்டுகின்றனர்...நேற்று குழந்தைகளோடு குழந்தையாய் ஆசிரியர்களும் ஆடிப்பாடி மகிழ்ந்த நேரத்தில் அவளும் வந்து ஆடியது மனதிற்கு நெகிழ்வாய் ,மகிழ்வாய் இருந்தது....குழந்தைகள் குழந்தைகளாய் இருப்பது எத்தனை மகிழ்வான ஒன்று.. 

Thursday 13 November 2014

விசும்பு

சமாதனத்திற்கு மனமில்லை
ஓங்கிப்பெருங்குரலெடுத்து
அழவைக்கவே ஆசை
சிணுங்கும் விசும்பு

Wednesday 12 November 2014

பிளஸ் 1 வகுப்பு மாணவர் அடித்துக்கொலை...

தமிழ் - தி இந்து-13.11.14

பிளஸ் 1 வகுப்பு மாணவர் அடித்துக்கொலை...

ஆசிரியர் மாணவர் இடைவெளியே காரணம் ...படித்த போது
மனம் வேதனையானது..

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி காட்ட ஆசிரியர்களை கட்டாயப்படுத்துவதும்,மாணவர்களை கண்டிக்கும் நிலையற்று இருப்பதும் முக்கிய காரணமாகின்றது.விளைவு ஒன்பதாம் வகுப்பு ,பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே இடைவெளி அதிகமாகின்றது என்பது உண்மை .இன்னும் அதிகமாகத்தான் செய்யும்...

Monday 10 November 2014

.9.11.14 ஒரு கோப்பை மனிதம் -நூல் அறிமுக விழா

 ஒரு கோப்பை மனிதம் -நூல் அறிமுக விழா

புதுக்கோட்டையில் உள்ள நில அளவையர் அரங்கில்  09.11.14 அன்று
  இனிய பனி சூழ்ந்த மாலைப்பொழுதில் ஒரு கோப்பை மனிதம் அறிமுக விழா துவங்கியது .

தமிழ்த்தாய் வாழ்த்து

 கவிஞர் மகா.சுந்தர் அவர்களின் மகள் சுபாஷிணி இசைக்குயிலாய் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார்.

வரவேற்பு

தமிழாசிரியர்.கிருஷ்ணவேணி தனது இனிய தமிழால் அனைவரையும் வரவேற்றார்.

அடுத்து விருந்தினர்களை சிறப்பிக்கும் முகத்தான் அவர்களுக்கு நூல்கள் பரிசளிக்கப்பட்டன.

Saturday 8 November 2014

கிளம்பிட்டீங்கத்தானே

கிளம்பிட்டீங்கத்தானே..

”ஒரு கோப்பை மனிதம்” நூல் அறிமுக விழா..விற்கு..
வருக மனிதம் பருக..என அன்புடன் அழைக்கின்றேன்...புதுகையில் நில அளவையர்க்கூடம் உங்கள் வரவால் நிறைந்திட...வருக வருக என வரவேற்கின்றேன்....


Friday 7 November 2014

இன்னும் எத்தனை மணி நேரம்..?

இன்னும் எத்தனை மணி நேரம்..?

இட்லிக்கான சண்டையில் ஒரு உயிர் ஊசலாடிக்கொண்டு.

.நான் நல்லா வந்துவிடுவேன்..மறுபடி தேர்வு எழுதுவேன் சிறப்பாக. என் ஆசிரியர் மிகவும் நல்லவர்..நான் அவசரப்பட்டு செய்துவிட்டதற்கு அவர் என்னை மன்னிக்க வேண்டும் என தீக்குளித்த குழந்தையின் புலம்பல்...இன்னும் எத்தனை மணி நேரங்களோ  தெரியவில்லை..

மூழ்கடிக்கும் பணிச்சுமையிலும் மனதை பிசையவைக்கின்றாள்..எப்போதும் புன்னகைப்பூக்கும் அவளின் தங்கையின் வேதனை நிறைந்த  முகத்தைக்காண முடியாமல் தவிர்க்கின்றேன்..விடாப்பிடியாய் மனதில் அமர்ந்து கொண்டு கலங்க வைக்கின்றாள்.
சென்ற மாதம் கல்லூரியில் நடந்த போட்டிக்கு அழைத்துச்சென்ற  குழந்தைகள் மூவரில் அவளும் ஒருத்தி...பேச்சுப்போட்டிக்குத் தயாராக வந்து மேல்நிலை மாணவிகள் மட்டுமே பங்கேற்க முடியும் என்ற நிலையில் அவள் பார்வையாளராக புன்னகைக்கும் முகத்துடன் என் அருகிலேயே..இருந்தாள்.அவளை மேலும் பட்டை தீட்டி சிறந்த பேச்சாளராக ஆக்க வேண்டும் என நானும் அவளின் ஆசிரியரும் கொண்ட கனவைச்சிதைத்து கரைந்து கொண்டுள்ளாள்..

 ...12 நாட்களாக அவள் படும் வேதனையைச் சொல்ல முடியாது கதறும் அவளின் அக்கா  இனி எப்படி இட்லியை பார்ப்பாள்...காலனின் தோற்றமாய் தெரியுமே..அவளுக்கு...பணிக்குச்செல்லும் அவசரத்தில் வாங்கி வைத்த இட்லியை சாப்பிட்டுச்சென்றதால் புரிந்து கொள்ளாத தங்கையின் முடிவு அந்த சகோதரிகளின் வாழ்வில் மிகப்பெரும் துயரமாய்...கணவனின் ஆதரவை இழந்த அந்த தாய் பெற்ற வயிறு தீயாய் எரிய தனது குழந்தை மீண்டு வருவாள் என்ற தீவிர நம்பிக்கையில்..

Tuesday 4 November 2014

ஒரு கோப்பை மனிதம் பருக அன்புடன் அழைக்கின்றோம்....
ஒரு கோப்பை மனிதம் பருக அன்புடன் அழைக்கின்றோம்....

புதுகையில்” ஒரு கோப்பை மனிதம் நூல்” அறிமுகவிழா
நாள்:09.11.14 ஞாயிறு
இடம்:நில அளவையர் கூடம் புதுக்கோட்டை[புதிய பேருந்து நிலையம் பின்புறம்]

Monday 3 November 2014

ஒரு கோப்பை மனிதம் -முனைவர் வா.நேரு அவர்களின் பார்வையில்

 

 அண்மையில் படித்த புத்தகம் : ஒரு கோப்பை மனிதம் (கவிதை நூல்)
ஆசிரியர்                                         : மு.கீதா (தேவதா தமிழ்)
வெளியீடு                                       : கீதம் பப்ளிகேஷன்ஸ்,சென்னை-96  044-24960231
முதல் பதிப்பு                                 :2014 ,மொத்தப்பக்கங்கள்: 72 விலை ரூ 60.00

                              ஆசிரியராகப் பணியாற்றும் மு.கீதா அவர்களின் கவிதைத் தொகுப்பு நூல் இது. தன்னுடைய velunatchiyar.blogspot.com  வலைப்பூவிலும், முக நூலிலும் எழுதிய கவிதைகளின் தொகுப்பு எனக்குறிப்பிடுகின்றார் நூலாசிரியர். " "சமூகத்தோடு என்னைப் பிணைத்த எனது எண்ணங்களே கவிதைகளாய் நெய்து உங்கள் மனங்களை வலைவீசிப் பிடிக்கின்றன . எனை வார்த்த கவிதைகளும் , என்னால் வார்க்கப்பட்ட கவிதைகளும் தொகுப்பாய் மலர்ந்துள்ளன " என்று சொல்லும் என்னுரையே கவித்துவமாகத்தான் இருக்கிறது.

                       கவிதை என்பது சமூகம் சார்ந்ததாக, நம்மைச்சுற்றி நிகழும் அவலங்களை எடுத்துக்காட்டுவதாக அமையும்போதுதான்  கவிதையாக நம்மைப்போன்றோருக்கு தோன்றுகிறது. மு.கீதா அவர்களின் கவிதைகள் பலவும் அப்படி சுட்டிக்காட்டுகின்றன, நல்ல கவித்துவமும் கற்பனையும் மிக்க வரிகளால் ., எடுத்துக்காட்டாக ஒரு கவிதை 'பருவத்தின் வாசலில்'

"பள்ளியிலும் வீட்டினிலும்
        பட்டாம்பூச்சியான
               பறத்தலுடன்
ரசனையான வெகுளிச்சிறுமி
சிந்நாட்கள் காணாத நிலையில்
      சின்னதொரு சிரிப்புடன்

       வெட்கமுமாய் மீண்டும்
           துழாவிய போது
கண்ணீரில் மிதந்த கண்களுடன்
            குழறலாய்க் கூறினாள்
சிறகுகள் வெட்டப்பட்டதை  " நமது நாட்டைப் பொறுத்த அளவில் ,பெண் குழ்ந்தைகளுக்கு சிறகுகள் வெட்டப்பட்டு, சிந்தனைகளுக்கு விலங்கிடப்படுவதுதானே ,பருவமடைதல். அதை மிக நேர்த்தியாகக் கூறுகின்றார்.

                       அனுபவத்தை அப்படியே கவிதையாக ஆக்குகின்றார் சில கவிதைகளில். 'மழையோடு ' பக்கம் (14), 'தொடர் வண்டிப் பயணத்தில் ஒரு நாள்' பக்கம் 22, 'சுட்டிக்காற்று' பக்கம் 55 போன்றவை அனுபவம் சார்ந்த கருத்து சொல்லும் கவிதைகளாய் இந்த நூலில் . சில வரிக் கவிதைகள் என்றாலும் , சில கவிதைகள் சுருக்கென ஊசி குத்துவது போல எதார்த்ததை எடுத்துரைக்கின்றன. எடுத்துக்காட்டாக 'பேசு பொருளாய் ' கவிதை பக்கம் 57, 'கானல் நீர் ' கவிதை பக்கம் 61 போன்றவை.

                        பெண் கவிதை எழுதுவது குறைவு , அதிலும் பகுத்தறிவு , மத மறுப்பு சம்பந்தப்பட்ட கவிதைகள் எழுதும் பெண் கவிஞர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். அப்படிப்பட்ட ஒருவராக மு.கீதா திகழ்கின்றார் என்பது மகிழ்ச்சிக்குரியது .

இந்து நாம் ...?

நான்கு வர்ணம்
ஒன்று இணைந்து
ஒரே வர்ணமாகையில்
சாதியோழிந்து
சனங்கள் சேர்ந்து
மகிழ்ந்தொலிப்போம்
இந்து நாம் என்று ......   பக்கம் 64.
சுடுகாட்டில் கூட ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு சுடுகாடு என்று வைத்துக்கொண்டு 'இந்து நாம் ' என்று பேசுவது எவ்வளவு அபத்தமானது என்பதனை சாதி ஒழியட்டும் ,பிறகு இந்து என்று பேசுவோம் என்று அழுத்தமாகச்சொல்கின்றார் இக்கவிதையில். அதனைப் போலவே 'மனுதர்மம்' என்னும் கவிதை

"காலில் பிறந்தோன்
உந்தியில் உதித்தோனுக்கும்
உந்தியில் பிறந்தோன்
மார்பில் பிறந்தோனுக்கும்

தீட்டென்று தீயிட்டுக்கொள்ள
மூடர்களே மூவருமே தீட்டு
நெற்றி பிறந்தோனுக்கென
சூளூரைத்தது மனுதர்மத்தின்
                         உயிர் நாடி  "  பக்கம் 28
நெற்றியில் பிறந்தோமென்று சொல்லிக்கொள்பவர்களின் மேலாண்மையையும், மற்றவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதையும் மிகச்சுருக்கமாக ஆனால் தெளிவாகச்சொல்லும் கவிதையாக இக்கவிதை

              சமூகத்தின் கோரமுகத்தைக் காட்டுவதாக 'பட்டாசு கனவில் 'பக்கம் 15, ' பார்க்க முடிகின்றதா உங்களால்' பக்கம் 20, ;'கானல் நீராய் 'பக்கம் 24, 'கதவு இல்லா குடிசையில் ' பக்கம் 27 போன்ற கவிதைகள்,

 " பார்க்க முடிகின்றதா உங்களால் " கவிதையில் கடைசியில்
" ஆண் இனத்தின்
   அவமான சின்னங்களை
   நிலம் பிளப்பது போல்
   நீர் விழுங்குவது போல்
  தீ உண்ணுவது போல்
எழும்பும் பெண்ணினம் " எனும்  வரிகள் அநீதி கண்டு கனல் கக்கும் வரிகளாக இருக்கின்றன.

                          26,10.2014 மதுரையில் நடைபெற்ற வலைப்பதிவர்கள் 3-வது  மாநாட்டில் இந்த நூலை புதுக்கோட்டை கவிஞர் நா.முத்து நிலவன் வெளியிட நான் பெற்றுக்கொண்டேன். இந்த நூலைப் படிக்க, படிக்க சொல்வதற்கு நிறைய இன்னும் இருப்பதை உணர்கின்றேன். திருச்சியைச்சார்ந்த திராவிடர் கழக்த்தோழர் வி.சி.வில்வம் அவர்களின் சகோதரி , இந்த நூலின் ஆசிரியர் மு.கீதா அவர்கள். " ஆசிரியர் தொழிலை மிகவும் அர்ப்பணிப்போடு, ஈடுபாட்டோடு செய்யக்கூடியவர், குழந்தைகளோடு குழ்ந்தையாக அமர்ந்து , குழ்ந்தைகள் மனதில் இடத்தைப்பிடித்து, பாடத்தைக் கற்பிப்பவர். சமச்சீர் கல்வி வருவதற்கு முன்பே , பலவிதமான முயற்சிகள் மூலம் கற்பித்தலை மேம்படுத்தியவர். நல்ல ஓவியர். பகுத்தறிவாளர், பெரியாரியலைப் பின்பற்றுபவர் " என்று தன் சகோதரியைப் பற்றிய செய்திகளைச்சொன்னார் வி.சி.வில்வம். மு.கீதாவின் 3-வது நூல் இது. இன்னும் பல நூல்களைப் படைக்கும்  ஆற்றல் உடையவராக மு.கீதா திகழ்கின்றார். இன்னும் பல நூல்களைப் படைக்க வேண்டும்.

            " எப்போது ஒரு கலை சமகால நிகழ்வுகளைப்  பதிவு செய்கிறதோ அப்போதுதான் அது உண்மையான படைப்பாகிறது " என்று வைகறை தன்னுடைய மதிப்புரையில் கூறுவதுபோல , சமகால நிகழ்வுகளைப் பதிவு செய்த ஒரு கவிதைப்புத்தகமாக, " பண்பட்டுப்போன உள்ளம் அவருக்கு(மு.கீதாவுக்கு). மகிழ்ச்சி , பரிதவிப்பு, ஆதங்கம், ஆக்ரோஷம், வேதனை என ரசித்து ருசித்து அறுசுவையுடன் படைத்திருக்கிறார் இவ்விருந்தை " என அணிந்துரையில் கனடாவின் இனியா கூறுவதைப்போல பல உணர்வுகளின் வடிகாலாக இக்கவிதைகள் இருக்கின்றன.
                            முன்ன்ரையில் ' உங்கள் கவிதைகளை உங்கள் வலைப்பதிவில் நித்தம் ரசித்துப் பருகிவரும் எனக்கு விதவிதமான பின் விளைவுகள் ஏற்படுகின்றன. அவை உடனடிப்புன்னகை, நீடித்த சிந்தனை எனப்பல வகைப்படுகின்றன " என மைதிலி (makizhnirai.blogspot.com)  கூறுவதைப் போல நீடித்த சிந்தனை அளிக்கும் கவிதைகள் பலவற்றை உள்ளடக்கியதாக இத்தொகுப்பு உள்ளது.

                       புதுக்கோட்டை கவிஞர் நா.முத்துநிலவன், அவரது வாழ்க்கை இணையர் மல்லிகா(பி.எஸ்.என்.எல்) அவர்களோடு நிறையத்தோழர்கள், தோழியர்கள் வலைப்பதிவர் 3-வது மாநாட்டிற்கு வந்திருந்தனர். அதில் பல தோழியர்கள் தங்களுக்கென வலைத்தளங்களை வைத்துள்ளனர். தொடர்ந்து படைப்புகளை, தங்களது கருத்துக்களை வலைத்தளங்களில் பதிகின்றனர் என்பது பாராட்டிற்குரியது. புதுக்கோட்டை கணினி தமிழ்ச்சங்கம் என்பது இவர்களையெல்லாம் ஒருங்கிணைக்கும் அமைப்பாக இருக்கிறது என்பதும், இவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து, உற்சாகப்படுத்தும் , வழிகாட்டும் பெருமைக்குரியவராக கவிஞர் நா.முத்து நிலவ்ன் இருக்கின்றார் என்பதும்  மகிழ்ச்சிக்குரியது. நமது பாராட்டுக்குரியது. புதுக்கோட்டை கணினி தமிழ்ச்சங்க உறுப்பினர்களை எல்லாம் சந்திக்கின்ற வாய்ப்பாக 'ஒரு கோப்பை மனிதம் ' நூல் வெளியிட்டு விழா அமைந்தது.

                        'ஒரு கோப்பை மனிதம் ' கவிதை நூலைப் படித்துப்பாருங்கள். விலை ரூ 60-தான். வாங்கிப் படிக்கலாம்.மற்றவர்களையும் படிக்கச்சொல்லலாம். படித்துவிட்டு நூலின் முகவரிக்கு நாலு வரி எழுதிப்போடலாம். அதுவே உண்மையான ஊக்குவிக்கும் செயலாக இருக்கும்.


 

பெண்களின் கையில்..

பெங்களூரில் 3வயது 6வயது தொடரும் வன்புணர்வு...இன்னும் சட்டம் பாதுகாக்கும் என்றே எத்தனை நாள் நம்பியிருப்பது....

பெண்களின் கைகளிலிருந்து
கரண்டியைப்பிடுங்கி
கத்தியைக்கொடு
அறுத்து வீசட்டும் என்றே
கூறியிருப்பார் பெரியார்
இன்றிருந்தால்...

Sunday 2 November 2014

இணையும் கரங்களின் நோக்கம் மற்றும் கொள்கைகளாக...

இணையும் கரங்களின் நோக்கம் மற்றும் கொள்கைகளாக...
--------------------------------------------------------------------------------------
1]பாதிக்கப்பட்ட குழந்தைகள் பட்டியல் சேகரித்தல்.தேவையான உதவிகளைச் செய்தல்.

2]குழந்தைகளுக்கான சட்டங்கள் என்னென்ன என்ற விவரப்பட்டியல் தயாரித்தல்.

3]பள்ளிகளில் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு பயிற்சிகள்,கல்வித்துறையுடன் இணைந்து அளித்தல்.

4]கல்லூரி மாணவர்கள் கொண்ட அமைப்பு உருவாக்கல்.

5]ஆண் குழந்தைகட்கும் பெண் குழந்தைகட்கும் உள்ள சமூகக்கடமையை உணர்த்தும் பாடத்திட்டம் ,செயல் திட்டங்கள் கல்வியில் சேர்க்க வலியுறுத்தல்.

6]பாதிக்கப்பட்ட குழந்தைகட்கு உளவியல் வழிகாட்டல்கள்.

7]அவரவர் பகுதியில் உள்ள இளைஞர்களோடு இணைந்து பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்ட வகை செய்தல்.

8]யதார்த்த வாழ்வை உணர்த்த முயற்சி எடுத்தல்.

9]மாணவ வழிகாட்டிகளை உருவாக்கல்.வளரும் சமுதாயம் உணர்ந்தால் மாற்றம் நிச்சயம் வரும்.

10]குழு உறுப்பினர்கள் பொறுப்புணர்வுடன் செயல் படுதல்.

11]இது குழந்தைகட்கான சேவையை அடிப்படையாகக் கொண்டு துவங்கப்பட்டுள்ளது.இதை தவறான  வழிகளுக்கு பயன்படுத்தாமல் கண்ணியம் காத்தல்.

12]வன்முறையால் எப்போதும் தீர்வு கிடைக்காது என்பதை உணர்ந்து நமக்கான பாதையில் தீர்வு நோக்கி நடத்தல்.

இது என்னில் தோன்றியுள்ள கருத்துகள்...நீங்களும் கூறலாம்.மேலும் தொடர்வோம்..

இணையும் கரங்கள்-செயல் பாடுகள்

இணையும் கரங்கள்

கீழ் உள்ள செயல் பாடுகளில் உள்ள விவரங்களை திரட்டும் வேலையைத்துவங்குவோம்.

நமது குழுவில்

1]வழக்கறிஞர்கள் இருப்பின் சட்டம் தொடர்பான செய்திகளைத்திரட்டி தர வேண்டுகின்றேன்.

2]ஆசிரியர்கள்  குழந்தைகட்கு தேவையான கல்விமுறை பற்றிய மாற்றங்கள் குறித்து  கருத்துகள் வழங்கினால் உரிய வழியில் கொண்டு சேர்ப்போம்.

3]மருத்துவர்கள் இருப்பின் பாதிக்கப்பட்ட குழந்தைகட்கு எவ்வாறு மருத்துவ மற்றும் மனநல உதவி வழங்கலாம் என்பதை கூறும்படி கேட்டுக்கொள்கின்றேன்.

4]வாய்ப்பு உள்ள இளைஞர்கள் பள்ளி மாணவ குழு உருவாக்கலாம்..அவர்கள் வசிக்கும் பகுதிகளில்...
இது பொழுது போக்க அல்ல என்பதை குழு உறுப்பினர்கள் மாணவர்களுக்கு உணர்த்த வேண்டும்.

5]கல்லூரி மாணவர்களில் பொறுப்புள்ள மாணவர்களை இணைக்க வேண்டுகின்றேன்.குறைவான மாணவர்கள் போதும்.நற்சிந்தனை உள்ளவர்களாக இருப்பது முக்கியம்.

6]பாதிக்கப்பட்ட குழந்தைகள் விவரங்கள் சேகரிப்போம்.

.நிதானமாக செயல்படுவோம் .ஒவ்வொரு அடியும் வளர்ச்சியை நோக்கி செல்லும் வகையில்.

Saturday 1 November 2014

ஒன்று திரளுவோமா?

ஒன்று திரளுவோமா?

சமூகநன்மை மட்டுமே கருத்தில் கொண்டு, முக்கியமாக குழந்தைகள் நலனைப்பாதுக்காக்க எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் செயல்பட முடியுமா..

“இணையும் கரங்கள்”
‘.
.குழு அமைக்கலாமா?

பேச மட்டுமின்றி செயலில் இறங்க கரம் கோர்க்குமா முகநூல் தோழமைகள்...சமூகச்சீர்கேடுகளுக்கெதிராகப்போர் தொடுக்க...இந்த சிந்தனை நீண்ட நாட்களாக மனதில் ஓடிக்கொண்டே உள்ளது..உண்மையான சமூகச்சிந்தனையாளர்களா நாம் அல்லது..சிந்தனையாளர்கள் என காட்டிக்கொள்வதற்காக பேசுபவர்களா..?ஒன்று திரள முடியுமா...எவ்ளோ தூரம் பயணிக்க முடியும் ..இந்த பயணத்தில்...புரியல ..ஆனா ஏதாவது செய்யனும்னு தோணுது...உணர்ச்சி வசப்பட்டு தோன்றிய சிந்தனை அல்ல...உள்ளூற ஓடிக்கொண்டிருக்கும்... பிறந்ததற்கு ஏதாவது நன்மை செய்து விட்டு போக வேண்டும் என்ற நினைவுகளின் தாக்கம்..இது எல்லோருக்கும் உள்ளே ஓடிக்கொண்டிருக்கும் குருதி ஆற்றின் ஈரம்..

இணையும் கரங்கள் வலிமையாக இருப்பின் நிச்சயம் வெல்வோம் என்று மட்டும் தோணுது...