World Tamil Blog Aggregator Thendral: November 2013

Saturday 30 November 2013

யானை டாக்டர்

அறம் தொடர்ச்சியாக--யானை டாக்டர்..

யானை டாக்டரை சொல்லாமல் விட்டது,ஏதோ குறையான உணர்வு எழுதத்தூண்டியது என்னை.என்னை பாதித்த யானை டாக்டரை பதிவு செய்ய எண்ணி  தொடர்கிறேன்.

Friday 29 November 2013

அறம்




நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்வு.அதில் நான் மிகவும் மதிக்கும் கமல்ஹாசன் அந்நிகழ்வில் பிரகாஷ் ராஜூவிற்கு ஜெயமோகன் எழுதிய ”அறம்” நூலைப் பரிசாக அளித்து அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் என்று கூறினார்.மிகுந்த ஆவலுடன் புத்தகத்தை வரவழைத்து படித்தபோது....

என்னை புதிய உலகிற்குள் மூழ்கடித்தது.அதில் உண்மை மனிதர்களின் கதைகளாய் 12 கதைகள் ..என்னை சுனாமியாய் சுழற்றி அடித்தது என்றே கூறலாம்.

ணங்கான்
இது ஒரு கதையின் பெயர்.நெல்லைப் பகுதியில் வாழும் மனிதரை பற்றிய கதை..தீண்டாமையின் மறு பக்கத்தை உணர முடிந்தது.
பெயர் கூட நாய் குட்டிகளுக்கு வைப்பது போலவே கறுப்பாக இருந்தால் கறுத்தான் ,ஏழான்....என..
 

அதில் எச்சில் பற்றி..

”அத்தனை பேரும் அதிகாரத்தால் கீழ் கீழாக அடுக்கப் பட்டிருந்தார்கள்.அடுக்குகளுக்கு எச்சில் ஓர் அடையாளமாக இருந்தது.கூலி அடிமைமீது குலமேலாள் காறித்துப்பினால்அவன் முன்னால் நிற்பது வரை அடிமை அதைத்துடைத்துக் கொள்ளக்கூடாது.காரியஸ்தன் கோபம் கொண்டு வெற்றிலைச் சாற்றை மேலாட்கள் மேல் துப்பினால் அவர்கள் பணிவுடன் சிரிக்க வேண்டும்.காரியஸ்தன் நாயர் வீட்டு உறுப்பினர் யார் வெற்றிலை வாயைக் குவித்தாலும் பணிவுடன் கோளாம்பியை எடுத்து முன்னால் நீட்ட வேண்டும்.அந்த குடும்பத்திற்கு மன்னர் குலத்தில் இருந்து யாராவது வந்தால் கையில் கோளாம்பியுடன் கரைநாயரே பின்னால் செல்ல பணிந்து நடந்துசெல்ல வேண்டும்”

அக்கதையை படித்து முடித்து பல நாட்கள் மீள முடியாது இருந்தேன்.ஆங்கிலேயரின் வரவு அடிமைகளுக்கு ஒரு மருந்தாக இருந்ததோ என்று நினைக்கும் அளவிற்கு இருந்த சாதீயக் கொடுமையை உணர முடிந்தது
 

”.யானை டாக்டர்” என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நபராகி விட்டார்.அதைப் பற்றி சொல்ல வார்த்தையில்லை.நிச்சயம் அனைவரும் படிக்க வேண்டிய நூல் தான் .அறிமுகம் செய்த உலக கலைஞனுக்கு நன்றி

Wednesday 27 November 2013

பார்த்தீனியம் அறிவோமா?







விரைவாய் கடக்கும் காலங்களில் நம் வீட்டைச்சுற்றி ,தெருவைச் சுற்றி நாம் பார்க்கின்றோமா என்றால் இல்லை என்பதே அனைவரின் பதிலாய் இருக்கும்.

அந்நிய நாடுகள் நமக்கு தந்த கேடுகளில் ஒன்று பார்த்தீனியம் செடி.இதன் பாதிப்பு அறிந்தே அரசு ஒரு வாரம் பார்த்தீனியம் ஒழிப்பு வாரம் என்று செயல் பட்டது.மக்களுக்காக செய்யும் திட்டங்களில் மக்களும் கொஞ்சம் ஆர்வம் காட்டினால் தான் அது தொடர்ந்து நன்மையைத்தரும்.

தீமைகள்
----------------
பார்த்தீனியத்தால் பாதிக்கப்பட்டவள் என்பதால் அதைப் பற்றிய தேடுதலில் கிடைத்த செய்திகள் அதிர்சியானவை.

”ஒவ்வாமை,அரிப்பு,மலட்டுத்தன்மை,ஆஸ்துமா,மூச்சுத்திணறல்,...எனத் தொடரும் தீமைகள் அதன்மூலம்...நிறைய...”

தற்போது குழந்தையின்மை அதிகம் காணப்படும் நிலையில்
அதற்கான காரணிகளீல் ஒன்றான பார்த்தீனியம் செடியை ஒழிக்க மக்களும் ஒத்துழைக்க வேண்டும்.

நான் ஆசிரியக் கூட்டங்களுக்குச் செல்லும் போதெல்லாம் அச்செடியை கொண்டு சென்று அதன் தீமைகளை சொல்லிக்கொண்டுள்ளேன்.

எங்கள் பகுதி கவுன்சிலரிடம் சொல்லி அதற்கான விழிப்புணர்வை உண்டாக்க கோரியுள்ளேன் .புதுகையில் தற்போது அதிகமாக காணப்படுகிறது.

விழித்துக் கொள்வோம்.நம் சந்ததிகளின் நலனிற்காக....!
புதுகை மக்களின் நலனில் அக்கறை உள்ளவர்கள் .இதில் கவனம் செலுத்தி விழிப்புனர்வை உண்டாக்க விரும்புகின்றேன்.செய்வோமா?
நான் செய்கிறேன்.. நீங்க..?

எழுவாய் தோழா!




நெகிழியால் புவி மூடி
குடிநீருக்கும் விலை தந்து
நிலமும்,புனலும்,காற்றும்
கழிவாலே நஞ்சாக..

ஓசோன் கிழிந்து
விண்வெளியும் குப்பையாக
செய்தியாய் செரிக்கின்றோம்...

சிதைந்த சித்திரமாய்
சிதைகின்ற பூமி
உருக்குலையும் முன்
ஞாலம் காக்க
எழுவாய் தோழா...!

வலியின்றி உயிரில்லை
வன்மையின்றி வாழ்வில்லை
மண் கீறி கருப்பைக் கிழித்து
உலகு காணும் உயிரினம்...!

தருவாய் துளிர்ப்பாய்..
பூவாய் மலர்வாய்..
தடைக்கல்லும் படிக்கல்லாய்
தனியாப் புகழ் பெறுவாய்...

”மானிடனே”

Sunday 24 November 2013

உவகையாய்

மழையாய் மேகம் மகிழ
நிலவோ நட்சத்திர விளக்கேற்ற
உரிமையாளரும் வர

ஆனந்தத்தில் ஆட்டிய வால்
நிற்காமல் தாவித்தாவி

ஊளைச்சத்தம் உவகையாய்
மாறிய காட்சி காண
கண் கோடி வேண்டும்

Saturday 23 November 2013

நன்றிக்குரியது

உரிமையாளர்
ஊருக்குச் சென்ற
விடுமுறை நாளின்று..

பூட்டிய வீட்டிற்குள்
தனிமை  தாக்க
வானை நோக்கி
மேகத்தை துணைக்கழைத்து
வாராமல் போகவே..

நிலவை அழைக்கின்றது
ஊளையிடும் குரலில்..
நன்றிக்குரியது..

”பூச்” என்ற ஓசைக்கு
விடைக்கின்ற காதுடன்
அமைதியாகி
மீண்டும் மீண்டும்..!

உரிமையாளரின் வரவை
அதைவிட எதிர்பார்க்கிறேன்
ஊளையிடும் வேதனைக்குரலை
கேட்க இயலாமல்...

Friday 22 November 2013

மலர் மாலை


விழாக்கள் இல்லாத
வெறுமை..

பூக்கடைக்காரருக்கு
பூத்தது செய்தி
மகிழ்வாய்...

லே விரசா கிளம்பு
மேலத்தெரு ராசா
பூட்டாராம்...
புண்ணியவான் கூட்டம்
குவியும் அவருக்கு..

குமறிய வயிறு நிறையும்
பூக்கடைக்காரருக்கும்.
வெட்டியானுக்கும்..

Thursday 21 November 2013

யதார்த்தம்

  தொலைவில் நாம்
  அண்மையில் மனம்

அண்மையில் நாம்
தொலைவில் மனம்


இடைநிகழ்வு
திருமணம்.....


Wednesday 20 November 2013

கொத்தடிமைகள்



கல்லிலே கலைவண்ணம்
கண்டான் தமிழன்...
கல்லில் கரைகின்றனர்
கொத்தடிமைகள்..

Sunday 17 November 2013

மீட்போமா?



அறியாமல்
அன்னையை அடகாய்..

உயிர்பல தந்தோம்
மீட்கவே...

அறிந்தே
அடகாய்மீண்டும்...

வட்டிக்கடைக்காரனுக்கு
வயிற்றுப்பசி தெரியுமா..?

இளைஞர்களோ
கதாநாயகர்களின் புகழ்பாடி..

மற்றவர்களோ
வீதிதனில் கதைபேசி..

வயிற்றில் கலக்கம்
வாராக்கடனை வசூலிக்க
என்செய்வானோ..!


உணர்விழந்து..
மானமிழந்து..
மொழியிழந்து...
தவிப்போமா..!

அன்னையை
மீட்போமா...?

Saturday 16 November 2013

கவிஞர் மு.கீதாவின் கவிதைத் தொகுப்புக்கு எனது அணிந்துரை நேர்மையான கவிதைகள்



 அணிந்துரைநா.முத்துநிலவன்
மகளாய், மனைவியாய்,  தாயாய்,  ஆசிரியராய்,  இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்தப்படும் கோடிக்கணக்கான இந்தியப் பெண்களில் தானும் ஒருவராய், சமூக உணர்வுள்ள சிறந்த மனிதருள் ஒருவராய்,  தன் சுயஅனுபவங்களையே, கொஞ்சமாய்க் கற்பனை கலந்து(?) நெஞ்சைச் சுடும் கூர்மையான வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் போட்டு, நேர்மையான கவிதைகளாய்த் தந்திருக்கிறார் கீதா.
இதற்காகவே இவரது படைப்புகளை
வரவேற்க வேண்டும்.   
ஏனெனில்,  நான் ஏற்கெனவே மும்பைக் கவிஞர் புதிய மாதவியின் ”ஹேராம்“ கவிதைத் தொகுப்பிற்குத் தந்த முன்னுரையில் சொன்னதுபோல, “எழுதும் பெண்கள் நம் சமூகத்தில் குறைவு. அதிலும் சமூக உணர்வோடு எழுதும் பெண்கள் மிகவும் குறைவு. அதிலும் அரசியலை-பெண்ணியக் கருத்துகளைச் சரியாகப் பாடுவோர் மிகமிகவும் குறைவு. இந்த மிகமிகவும் குறைவான எண்ணிக்கையில் கீதா இடம் பெற்றிருப்பதே முதலில் பாராட்டுக்கு உரியது தானே? 
கவிதைக்குரிய அழகியல் சற்றுக் குறைவாகவே இருந்தாலும், எடுத்த பொருளைக் கவிதையாக்கிக் கொடுத்த முறையில் பாசாங்கில்லை. இவை நேர்மையான கவிதைகள் என்பதற்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
அமெரிக்காவின் அதிகாரம், க்யூபாவின் தன்மானம், அரபு நாடுகளின் கச்சா எண்ணெய், ஆப்பிரிக்காவின் அடிமை வாழ்வு, சிங்களரின் சித்ரவதை, ஈழத் தமிழரின் விடுதலை என பல்வேறு உலகளாவிய பாடுபொருள்களையெல்லாம் தொட்டுச் செல்லும் கீதா, கொத்தடிமைகள், குவாரியில் குழந்தைகள், நெகிழியால் நிகழும் சுற்றுச் சூழல் கேடு, என நேரடி உலகத்தின் நெஞ்சைத் தொட்ட இடங்களையும் பாடுகிறார்.
தனது ஆசிரியப் பணியில் ஓவிய வீடு,  ஏதும் புரியல டீச்சர், எனும் கவிதைகளைத் தந்த கீதாவின் மாணவப் பிள்ளைகள் பாக்கியம் செய்தவர்கள்!
மழலை கொடுத்த இனிப்பை
மாணவிகளுக்கு ஊட்ட
பிறந்தன எனக்கு  நாற்பது குழந்தைகள் ..எனும் கீதாவிற்குள் பார்த்தால், சமுத்திரக்கனி அவர்களே! தயா இருக்கிறார்தானே? இது உண்மையான சாட்டை!
எடுத்த எடுப்பிலேயே கீதா தன்னைப் பற்றிச் சொல்லிவிடுகிறார் -
நான் தேங்கிய குட்டையல்ல
துள்ளும் அருவி ..
பாய்ந்தோடும் ஆறு எனும் போது 
பேண்ணே நீ ஒரு புண்ணிய ஆறு,
        உன்னைத் தடுக்க ஒருகை நீண்டால்,
        பொங்கு புறப்படு பொடிப்பொடி யாக்கு” – என்ற, கவிஞர்களின் வேடந்தாங்கலான அன்னம்மீரா தான் நம் ஆழ்ந்த பெருமூச்சுக்கிடையே அழியாத நினைவாகத் தோன்றுகிறார்!
ஈழவலி                                                          
ஒரே வலிக்கு
எத்தனை வைத்தியம் என்று கேட்கும் கீதாவின் கேள்வி எனக்குள் பல ஆயிரம் கேள்விகளை  எழுப்பியது! நமது காலத்தின் பெரும் சோகம் இதுதானே?
நமக்கு வேண்டியவர்களுக்கு உடல்நலமில்லை யென்றால், அக்கறை யுள்ளவர்கள் எல்லாம் ஏதாவது வைத்தியத்தைச் சொல்லிக்கொண்டேதான் இருப்பார்கள். அது போலும் நிலையில் நான் சொல்வது, “அக்கறையா சொல்றவங்க சொல்றத யெல்லாம் கேட்டுக்கங்க... ஆனா, மருத்துவர் சொல்வதை மட்டும் மறக்காம செய்ங்க... என்ன நா சொல்றது சரிதானே? உடம்பப் பாத்துக்கங்க”  என்பதுதான்!
 கட்டிடக் கூண்டுக்குள்
மனிதப் பறவைகள்
நகரம்   - எனும் கவிதையில் வரும் கீதாவின் கற்பனை, எழுத்தாளரும் காவல் துறைத் தலைவராக இருந்தவருமான திலகவதியின் எழுத்தோடு தழுவி நிற்பதில் ஒன்றும் வியப்பில்லை! இதே பொருளில் கல்மரம் எனும் நாவலை எழுதி சாகித்திய அகாதெமி விருதையே பெற்றுவிட்டார் திலகவதி என்பதை கீதா கவனிக்க வேண்டும். கீதாவின் பல நல்ல கவிதைகள் குட்டி குட்டியாக இருக்கிறதோ? இன்னும் விவரித்து நீட்டி எழுதலாமோ? என்று எனக்குத் தோன்றியதையும் இந்த இடத்தில் சொல்லி வைக்கிறேன்.
பல்லாயிரம் கோடியில்
நான்கு வழிச்சாலை
தவறேதும் செய்யாமல்
மரண தண்டனையில்
தருக்கள்  எனும் இடத்தில் மீண்டும் கவிஞர் மீராதான் நினைவுக்கு வருகிறார். மனிதனைப் பட்டினி போட்டு மாட்டின்மேல் கருணைகாட்டும் ஜீவ காருண்யம் யாருக்கு வேண்டும்? அதுபோல, மரத்தை வெட்டாமல் மனிதவாழ்வு கிடையாது!  என்ன..? ஒரு மரம் வெட்டினால் பத்து மரங்களையாவது நட்டு வளர்க்க வேண்டும் என்று சட்டம் கொண்டுவர வேண்டும் என்பதே என் கருத்து.
அறிந்தே அடகாய்
மீண்டும்  என்பது ஒரு நல்ல அரசியல் கவிதை.
       காட்டினில் மாநாடு  கவிஞர் சிற்பி பாணியிலான ஒரு கதைக் கவிதை. தமிழில் கதைக் கவிதைகள் மிகவும் கம்மி. நீங்கள் தொடர்ந்து எழுதலாம் கீதா!
ஒவ்வொரு புத்தாண்டும்
இதே சபதம் தான் - எனும் கவிதையில் ,  நக்கல் நையாண்டி,
கேட்க முடியுமா ?
கேட்க முடியுமா ? எனும கவிதை எழுப்பும் தர்ம ஆவேசம்,
பெண்ணை
பெண்ணாய் பாராமல்
மனிதராய் பார்க்கும் நாள்
எந்நாள் வரும்? எனும் கவிதையின் பெண்ணுரிமைக் குரல்,
உணர்ந்து உணர வைக்க முயன்றால்
என் இனமே எனக்கெதிரி
எத்தனை வேலுநாச்சிகள் …!   - எனும் கவிதையில் ஆற்றாமை என விதம் விதமான பாடுபொருள்களை எடுத்துக்கொண்டு வெளுத்து வாங்குகிறார்.
இன்னும், கனவுகளின் நாட்குறிப்பு, தடைக்கல்லும் படிக்கல்லாய், மரணம், ஐந்தறிவினம், மிதியடி ஆகியவையும் நல்ல கவிதைகளின் வரிசையில் இடம்பிடிக்கின்றன.
உணவைப் பரிமாறும் சிறுவன்
சாப்பிடல எனக் கூறுகையில் -
பூப்பறிக்கும் பிஞ்சு விரல்கள்
தீக்குச்சி அடுக்கி நொந்து போகையில் -
உறுத்துகின்றது  எனும் கீதாவின் கவிதை வரிகளைப் படிக்கும்போது, புதுமைப்பித்தனின் மனித எந்திரம் சிறுகதையும், சார்லிசாப்ளினின் மாடர்ன் டைம்ஸ் மௌனப்படமும் கவிஞர் சகாராவின்; ‘நதிக்கரையில் தொலைந்த மணல்” (2001) கவிதைத்தொகுப்பின் முதல் கவிதையும் நினைவிலாடுகிறது
அவசரமாய்ப் போகும்போது
ரோட்டில் கிடந்த முள்ளை
எடுத்துப் போடாமல் வந்ததற்கு
மனசு குத்தியதுண்டா?’ - என்று தொடங்கி அடுக்கிக் கொண்டே போய்
பாதையைக் கடக்கையில்
அணிற்பிள்ளை குறுக்கிட
பதறியடித்து
பிரேக் போட்டதுண்டா?
அப்படியானால் வாழ்த்துகள்,
இன்னும் நீங்கள்
மனிதராய் இருக்கிறீர்கள்! - என்று முடியும் போது நம்மை நமக்குள்ளேயே பார்க்க வைத்துவிடுவார் சகாரா! இன்னும் பலப்பல சந்தோஷம் மற்றும் துயரங்களுக்குப் பின்னும் - கீதா மனுஷியாய்த்தான் இருக்கிறார் என்பது மட்டுமல்லாமல் நல்ல கவிஞராகவும் பரிணமித்து வருகிறார் என்பதற்காகவும் கவிஞர் சகாராவுடன் சேர்ந்து நாமும் வாழ்த்துவோம்.
வேலுநாச்சியார்கள் வீணாய்ப் போவதில்லை!  
கால மாற்றத்தில் ஆலமரம் விழுதுகள் வழி வாழுமேயன்றி வீழ்ந்து விடுவதில்லை! கீதா, வேலுநாச்சியாரின் விழுது! அடுத்தடுத்த படைப்புகள், அரசியல் பார்வையோடு சமூகம்பாடும் அழகியலாக வளருமென்று நம்புகிறேன், வளர வேண்டி வாழ்த்துகிறேன்!
அன்புத் தோழன்,
நா.முத்து நிலவன்
புதுக்கோட்டை 622 004        
-----------------------------------------------------------------------------



மறையும் மனித நேயம்

குழந்தைகள் தினம்
மாணவிகளுடன் மகிழ்வாய் வாழ்த்துகள் பகிர்ந்து மகிழ்ந்த தருணத்தில் ஒரு மாணவி காதில் பேப்பரை நுழைத்துக்கொண்டாள்.மிகவும் அமைதியான சிறுமி.எப்படியென்று அவளுக்கே தெரியவில்லை.அவள் அம்மாவிற்கு தெரிவித்த போது அவர்கள் வெளியூரில் சித்தாள் வேலை செய்வதால் வர இயலாது,பேருந்தில் அனுப்பி விடுங்க என சாதாரணமாக கூறி விட்டு அவளை அலைபேசியிலேயே திட்டினார்கள் .என் மாணவியை அவள் அம்மாவாகவே இருந்தாலும் என் முன் திட்டுவதை பொறுத்துக்கொள்ள இயலாமல் அவர்களை திட்டாதீர்கள் என கூறி அவளை கூட்டிக்கொண்டு அரசு மருத்துவமனைக்குச் சென்றோம் அங்கு மருத்துவர் பணி முடித்து சென்று விட்டதால் அவரின் கிளினிக்கல பார்க்க சென்றோம்.பள்ளி மாணவி என்றும் விரைவாக பார்த்து விட்டு செல்ல வேண்டும் என தெரிந்தவர்கள் மூலம் கேட்டுக் கொண்டோம்.

சிறிது நேரம் கழித்து அழைத்தனர் அதற்குள் அங்கிருந்தவர்கள் எப்படி விட்ட காதுக்குள்ளன்னு துளைத்து எடுத்து டீச்சர கஷ்ட படுத்துறன்னு சொல்ல ஆரம்பிக்கவும் ,அவள் அமைதியான பெண் தெரியாம போயிடுச்சு கேட்டு கஷ்ட படுத்தாதீங்கன்னு சொல்லி டாக்டரைப் பார்க்க உள்ளே சென்றோம்.
அவர் ஏன் இப்படி செஞ்ச என்ற கேள்வியுடன் பேப்பரை எடுத்து விட்டு ஊசி ,மாத்திரை ,சொட்டு மருந்து என எழுதிக்கொடுத்தார் அவரிடம் மாணவியின் அம்மா சித்தாள் வேலை வெளியூரில் உள்ளார் வரமுடியாத நிலை என்று நான் கூறியதை காதில் வாங்கிகொள்ளவே இல்லை.
அனைத்தையும் வாங்கி ஊசி போட்டுக்கொண்டு வந்தோம்.ரூ169 கொடுங்கன்னு கேட்டார் அங்கு பணி
புரிபவர்.கொடுத்துவிட்டு வந்தேன்.பணம் ஒரு பொருட்டல்ல எனக்கு.
ஆனால் மனதில் ஒரு உறுத்தல் அவர் ஒரு அரசு மருத்துவர்,மனித நேயத்தோடு இருந்தால் அரசு பள்ளி மாணவிக்கு இலவசமாகவே மருத்துவம் பார்த்திருக்கலாம்.ஆனால்....?!மனித நேயத்தை
எல்லோரிடமும் எதிர்பார்க்க முடியாது,மருத்துவரிடமும் கூடவா?

மழையோடு


மழைக்கால
சன்னலோர பயணத்தில்
சாரல் முகம் தடவ
சில்லென்ற தென்றலில்
சிலிர்த்த உடல் பூவென மலர
மகிழ்ந்த மழை வேகமாய்
உள்நுழைந்தது நனைத்திடவே!

தடுக்க எண்ணி சன்னல் சாத்த
மேற்கூறைவழி கள்ளனாய்
மேல்நனைக்க
மழைக்கு உதவியது
அரசு பேருந்து...!

விட்டிறங்கி கலந்தேன்
மழையோடு மழையாய்....

மகிழ்வாய்..

படிக்க முடியல டீச்சர்

குழந்தைகளின் சமூகம் எப்படி உள்ளதென அறிய முற்பட்ட ஒரு நாளில்
தமிழ் வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களை மாணவர் அம்மாவென அழைப்பதாலேயே அவர்களிடம் மிக நெருக்கமாகிவிடுகின்றனர் மாணவர்கள்.எனக்கும் அந்த பாக்கியம் உண்டு.


எப்போதும் மாணவர்களின் உளம் நிறைந்த ஆசிரியராக வாழ்கிறேன் என்ற மகிழ்வு உண்டு.ஆனாலும் இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்ற ஆசை அடிக்கடி தோன்றும்.
 வெளியூர் செல்லும் போது கடைகளில் பார்க்கும் பொருட்களில் இது என் மாணவர்களுக்கு பயன்படுமா என்ற பார்வையிலேயே பொருட்களை வாங்குவேன்.
மாணவிகளின் பிரச்சனைகளை அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் குழந்தைகள் தினத்தன்று மாணவிகளுக்கு சாக்லேட் வாங்கித்தந்து வாழ்த்து கூறினேன் .அவர்களிடம் உங்களுக்கு ஏதும் குறை இருந்தால் ஒரு தாளில் எழுதி தரவும் உங்கள் பெயர் தேவையில்லை என்று கேட்ட போதுமிகுந்த  தயக்கத்துடன் எழுதி கொடுத்தனர்.அவற்றை படித்த போது மனம் கலங்காமல் இருக்க முடியவில்லை.

 எத்துணை பாரங்கள் இந்த பிஞ்சுகளின் மனதில். பாடம் கற்பித்தல்,செயல்பாடுகள் செய்யச்சொல்லி வாங்குதல் என்ற வேலைப்பளுவில் மாணவர்களின் மனதை புரிந்துகொள்ள நேரம் கிடைப்பதில்லை.

மாணவிகளின் மனச்சுமைகளில் சில...

பொதுவான பிரச்சனைகள்

வறுமை ,நினைவாற்றல் குறைவு,பசியின்மை,வீட்டு வேலை ,தோழிகளின் பிரிவுஎன தொடர்கிறது.சில கடிதங்கள் அதிர்வைத் தந்தது.

ஒரு மாணவியின் கடிதம்

அம்மா ,எனக்கு அப்பாயில்லம்மா அம்மா மட்டும் தான்.அம்மாவிற்கு மனநிலை சரியில்லை. நான் பெரியம்மா வீட்டில் இருந்து தான் படிக்கிறேன்.அண்ணன் இதய நோயாளி.அக்கா காலேஜ் படிக்குதும்மா.அண்ணன் கஷ்டப்பட்டு படிப்ப நிறுத்திட்டு வேல பாக்குறாங்க.அப்பா இறந்தவுடன் பெரியம்மா வீட்டில் தான் வளர்கிறேன் .நான் ஏதாவது சொன்னா என் கூட படிக்கிறவங்க அப்பாவ கூட்டி வரேன் அம்மாவ கூட்டிவாரேன்னு சொல்வாங்கம்மா. நான் யாரை கூட்டி வருவது.பெரிய பிள்ளைங்க கூட அம்மா ஊட்டிவிட்டாதான் சாப்பிடுவேன்னு சொல்லும் போது ,எனக்கு, எங்க அம்மாவ 5 வயசுக்கு மேல நாம தொட்டது கூட இல்லையேன்னு அழுகையா வருதும்மா.என்னப் போல யாரும் அம்மா அப்பா இல்லாம வளரக்கூடாதும்மா.ஆனா என் பிரண்ட்ஸ்கிட்ட என் கவலைய சொல்லவே மாட்டேன்மா நான் நல்லா படிச்சு பெரிய ஆளா வந்து காட்டுவேன்மா.இந்த வாய்ப்பு கொடுத்ததுக்கு நன்றிம்மா.....

இதை படித்த போது அந்த குழந்தையின் வேதனையை சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்ல.

ஒன்பதாம் வகுப்பு மாணவியின் மடலொன்று

அம்மா,நான் பள்ளிக்கு வரும் போதும் போகும் போதும் 4 பேர் கிண்டல் செய்யுறாங்க.இவர்களில் 2 பேர் ரூ 500 தர்றேன் வாரியானு கேட்குறாங்கம்மா.ஆட்டோ சேக் வந்து என்ன கல்யாணம் பண்ணிக்கன்னு யாரும் இல்லாதப்ப வந்து மிரட்டுறாம்மா. வீட்ல யாரும் இல்லாதப்ப வந்து என்னிடம் தவறா நடக்குறாங்க அம்மா கிட்ட சொல்ல பயமாயிருக்கும்மா எனக்கு உதவி செய்யுங்கம்மா.

என்ன சொல்வதென்றே தெரியாமல் அப்படியே உறைந்து விட்டேன்.எத்தனைச் சிக்கல்களுக்கு மத்தியில் இந்த குழந்தைகள் பள்ளிக்கு வருகின்றனர்.இதை வெளியில் சொல்ல முடியாமல் மனதிலேயே வைத்து புழுங்குவது எத்தனைக் கொடுமை.
இது மட்டுமல்ல அப்பாகுடிகாரர் பெரும்பாலான குழந்தைகளுக்கு அம்மாவின் துன்பம் தாங்கிக்கொள்ள முடியலன்னு சில குழந்தைகள்.விடுதியில் படிக்கும் குழந்தைகளின் ஏக்கங்களைச் சொல்லி மாளாது.

இந்த பிரச்சனைகள் தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு அரிதாகவே இருக்கும்.வேறு வகையான குழப்பங்கள் அவர்களைச் சூழ்ந்திருக்கும் .வளரும் சந்ததிகள் கவலையில்லாமல் வளர வாய்ப்பில்லையா?

Tuesday 12 November 2013

ஒரு கேள்வி

பார்வை கடத்தலில்
ஒரு கேள்வி

எப்போது என்னுடன்
ஏக்கமாய் புத்தகங்கள்..!?

பார்வைக் கனல்



கனிந்த பார்வை
கனலாய் மாற
தன்மான உணர்வு
தனலாய் தகிக்கின்றது...

பறக்க பறக்க
பணி முடித்து
பேருந்து நெரிசலில்
வியர்வை வழிய
வெறுப்புடன் நிற்கையில்
தோலை உரசி
சுகம் காணும்
எருமைகளைக் கண்டபோது

கனிந்த பார்வை
கனலாய் மாறியது...
 
வீட்டில் நுழையும்
ஏன் இவ்வளவு தாமதம்?
எங்க சுத்திட்டு வர
தாக்கும் கேள்விக்கணையால்
கனிந்த பார்வை
கனலாய் மாற
 
தன்மான உணர்வு
தனலாய் தகிக்கின்றது...!

புகைப்படம்: பார்வைக் கனல்


கனிந்த பார்வை
கனலாய் மாற 
தன்மான உணர்வு
தனலாய் தகிக்கின்றது

பறக்க பறக்க 
பணி முடித்து

பேருந்து நெரிசலில்
வியர்வை வழிய 
வெறுப்புடன் நிற்கையில்
தோலை உரசி
சுகம் காணும்
எருமைகளைக் கண்டபோது

கனிந்த பார்வை
கனலாய் மாறியது
வீட்டில் நுழையும் 
ஏன் இவ்வளவு தாமதம்?
எங்க சுத்திட்டு வர
தாக்கும் கேள்விக்கணையால்
கனிந்த பார்வை
கனலாய் மாற
தன்மான உணர்வு
தனலாய் தகிக்கின்றது...!

Monday 11 November 2013

பரிசாய்...


தருகின்றன....
----------------
தாவரங்கள்
பூக்களையும்,காய்களையும்,
கனிகளையும்.

விலங்குகள்
உணவையும்,பாசத்தையும்.

மனிதர்கள்
--------------?

Sunday 10 November 2013

எச்சில்

 
மோகத்தில்
    தேன்
கோபத்தில்
 அருவருப்பு
 
      “எச்சில்”

Friday 8 November 2013

ஐந்தறிவினம்

புள் கூறியது
அழுகின்ற பார்ப்பை
அணைத்து ஆறுதல் கூறு...

பெற்ற மகவை
சாக்கடை,குப்பையில் வீச
நெல்மணி,கள்ளிப்பால் புகட்ட
மனசாட்சி மறந்த
மனித இனம்
ஆறறிவால் செய்யும்...

நாமோ
முயன்று கூடு கட்டி
நலமுடன் வளர்த்து
பறக்கும் வரை காக்கும்
பகுத்தறிவற்ற
”ஐந்தறிவினம்”

மிதியடி



தவமேன் என் கால்பட
அகலிகையா ...நீ?
மிதிக்கும் கால்களுக்கும்
இதமாய் நீ...!

உனக்கும் உணர்வுண்டு
நைந்தே காட்டுவாய் எதிர்ப்பை.
உணர்வில்லா தமிழனோ....!

Wednesday 6 November 2013

காலம்




இலையுதிர்காலம்

மழை வரம் வேண்டி
மரங்களின்
”உறுப்பு தானம்”!







 வசந்தகாலம்

புத்தாடைக் கட்டி
புதுப்பெண்ணாய் சிலிர்க்கும்
மரத்திற்கு
“திருமணநாளோ”!

Monday 4 November 2013

தரு





பல்லாயிரம் கோடியில்
நான்கு வழிச்சாலை
தவறேதும் செய்யாமல்
மரணதண்டனை
தருக்களுக்கு.....




Sunday 3 November 2013

ஏன்”பா”

அப்பா
அம்மா நமக்கு வரம்
அணைக்காமல் அடிக்கலாமா?

நான் இருப்பேன்
தள்ளாடும் வயதில்
ஊன்றுகோலாய்...!

கல்வி போதுமெனக்கு
கற்றதன் பாதையில்
 உற்றவர்களை  காத்திடுவேன்...!

எதிரிகளை இனங்கண்டு
வீழ்த்தும் சக்தியும்..!

ஆடை கிழித்து உறுப்புகளை
உபத்திரவப்படுத்தும் உறுப்புதனை
அறுத்தெறியும் சக்தியும்..!

ஆணினம் தனை நண்பனாய்
ஆக்கும் சக்தியும்...

வன்முறைதனை
வருடும் தென்றலாய்
வகுத்திடும் சக்தியும்.
.பெற்றே
காத்திடுவேன் காலமெல்லாம் ....

உங்களை....!
காத்திடவே உதித்த என்னை
என்கனவினைக் கருக்கி
கருவிலேயே சிதைத்தது....

ஏன்”பா”?!

Saturday 2 November 2013

எண்ணக்கோவைகள்

எண்ணக்கோவைகளை
வண்ண மாலையாக்கி
அன்பை பகிர்ந்த மடல்கள்..

உணர்வுகளை உசுப்பிய எழுத்துக்கள்
மனதைக் கீறிய மடலில்....

உறவுகளின் உணர்வுகளையும்,
முகங்களையும் பிரதிபலிக்கும்
கண்ணாடியாய்.....

அழகான கையெழுத்து
ஆசையுடன் படிக்கத்தூண்ட

கோழிக்கால் எழுத்தோ
எப்போது முடியுமென்க...

யாருமறியா மருத்துவரின் எழுத்தோ
மருந்துக் கடைக்காரருக்கு மட்டும்
எப்படி..?
கையெழுத்து வேலை வாங்கித்தந்ததுண்டு...!

பள்ளியோடு பலருக்கும்
கல்லூரியோடு சிலருக்கும்
 தற்கொலையாகின்றது ....!

அழிந்து போன கடிதங்களில்
கையெழுத்தின் சுவையறியுமோ
இக்கால சந்ததி...?

வேதனையே

அலைபேசி சேமிப்பில்
அழிக்கா முடியா எண்
எண்ணுக்குரியவரின்
“இறப்பை”
உணர்த்தும் அது
இருந்தாலும்,அழித்தாலும்
வேதனையே....