World Tamil Blog Aggregator Thendral: தமிழ்
Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Monday, 24 April 2017

தமிழ் தெரியாது ..


எனது இருக்கை இது ...கொஞ்சம் நகர்ந்து அமருங்களேன் ...இல்ல... ஒரு ஆண் இங்க உக்கார்ந்திருந்தாரு ..அவருகிட்ட கேட்டுட்டு தான் இங்க உக்கார்ந்திருக்கேன்னு வாதம் செய்யவும் எரிச்சலாகி இங்க பாருங்கன்னு மின்னஞ்சல் ஐ காட்டியதும் விழித்த பெண் மறுபடி எழாமல் பிடிவாதம் செய்ய ..

இல்லம்மா நான் முன்பதிவு செய்துள்ளே ன்னு...நிரூபித்தபின் ...அப்படின்னா அந்த ஆள் இங்க இருந்தரேன்னு தயங்க...அருகில் இருந்த பெண் அவர் தவறா உக்கார்ந்திருந்தார் அடுத்த கம்பார்ட்மென்ட் ..அவருக்கு ..என்ற பின்னும் , சற்றும் நகராமல் ...இருக்க மெல்ல எரிச்சலுடன் அமர்ந்தேன் ...

அந்த பெண்ணின் அம்மாவின் இடத்தில் வேறு ஒரு வடநாட்டு பெண் அமர்ந்து இருந்ததால், அவர் அந்த பெண்ணை எழுந்திருக்க சொல்ல சட்டாம்பிள்ளை கணக்கா அது கியா கியான்னு இந்தியில் ஏன் இடம் இதுன்னு வாதம் செய்ய ...இதுகிட்ட பேச முடியாதுன்னு அவர்கள் சோர்ந்த நிலையில் உங்க இடம் என்றால் நீங்க தானே உட்காரனும் எழுந்திருக்க சொல்லுங்க என்றேன்...இல்லம்மா இந்தி தெரியாது அதுகிட்ட தமிழ்ல புரிய வைக்க முடியல என்றார்கள் ..

அப்பதான் இரயிலின் முகப்பில் இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டும் பெயர் எழுதியிருப்பதைப்பார்த்து எரிச்சலுடன் ஏறி அமர்ந்த வெறுப்பில் ..அந்த வடநாட்டு பெண்ணின் அடாவடித்தனம் .....மேலும் கோபத்தைத் தூண்ட ...உங்க இடம் இது உரிமையுடேன் விரட்டுங்கள் என எல்லோரும் சேர்ந்து சத்தமிட்ட உடன் அந்த பெண்ணை அழைத்து வந்த ஆள் ...இருங்க ஏன் சத்தம் போடுறிங்க அவங்களுக்கு தமிழ் தெரியாது ...நீங்க சொன்னா எப்படி புரியும்னு சொன்ன போது.தமிழ் தெரியலன்னு அவங்க தான் வருத்தப்படனும் ..தமிழின் இடத்தில், தமிழனின் உட்கார்ந்தால் இப்படிதான் விரட்டுவோம்னு சொன்ன போது.கொஞ்சம் குரல் ஏன் உயர்ந்ததுன்னு தெரியல .

Wednesday, 27 July 2016

நடமாடும் தமிழ் நூலகம்-மதிப்பிற்குரிய பேராசிரியர் கலியபெருமாள் அவர்கள்

தமிழ் நூலகம் மனித உருவெடுத்து எங்களுடன் கலந்ததுவோ..



 இன்று 27.7.16 புதுக்கோட்டையில் நடந்துகொண்டிருக்கும் பத்துநாட்கள் விழாவில் ஆறாம் நாளாகிய இன்று தமிழிசையும் நற்றமிழ் முற்றமும் நிகழ்வுகளாய்...

 அந்நிகழ்வை நிறைவு செய்ய எழுந்தார் மதிப்பிற்குரிய பேராசிரியர் கலிய பெருமாள் அவர்கள்.அவரின் எளிமை ,எல்லோரையும் என்ன பேசப்போகின்றார் இவர் என நினைக்க வைத்தது.அத்தனை ஓர் அமைதி தமிழ் முழுமையாகக் கற்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

புதுகை இலக்கியவாதிகளை பிரமிக்க வைத்து பிரமாண்டமாய் எழுந்து நிற்கிறார் மனதில். ஒன்றரை லட்சம் பாட்டுக்கள் மனப்பாடமாய் சொல்வாராம்..இப்போது சொல்லுங்கள் ..அவர் நூலகம் என்பது சரிதானே...

தமிழில் உள்ள இலக்கியங்கள் அனைத்தையும் மனப்பாடமாகப் பொழிகின்றார்...அவரின் தமிழ் மழையில் நனைந்து மீள விரும்பாது மணி பத்தரைக்கு மேல் ஆனபோதும் அகலாமல் நின்றோம். அத்தனை பாடல்களும் மறவாமல் அவரிடம் வந்து என்னை சொல்லு என்பது போல் கையேந்தி நிற்குமோ என்று எண்ணத்தோன்றுகிறது.

 தொல்காப்பியம் அட்டை டு அட்டை,பதிணென்கிழ்க்கணக்கு ,பதிணென் மேல்கணக்கு ,காப்பியங்கள்,பக்தி இலக்கியங்கள்,புராணங்கள்,தனிப்பாடல் திரட்டு,இன்னும் தமிழில் என்னென்ன இருக்கோ...இப்ப உள்ள பாடலாசிரியர்கள் பாடலும் மனப்பாடம் என்கிறார்...அவரைப்பற்றிக்கூறியவர். அவரிடம் பாடம் படிக்காதவர்கள் பாவம் செய்தவர்கள் தான் போல.

 ஒருத்தர் கூட எழமுடியாது தமிழால் கட்டிப்போட்டுவிட்டார். அத்தனை புலவர்களையும் ஒருவரிடத்திலே கண்டோம்..

 என் இனிய தோழி திருமிகு ரேணுகா தேவி அவர்கள் ”அய்யோ ”என்ற சொல் பட்ட கவலையைக்கூறி வியக்க வைத்தார்..அவரை இன்று கண்டதில் மனநிறைவு ...மேலும் பல உயர்வுகள் அவர் வாழ்வில் வரட்டும்.

 திருமிகு சந்திரசேகர் கம்பனில் பறவைகள் பற்றி அருமையாக கூறினார். 

புதுகை தமிழால் நனைந்தது இன்று.

வாழ்வில் ஒருமுறையாவதுபேராசிரியர் கலிய பெருமாள் அவர்களை எல்லோரும் நாம் சந்திக்கவே வேண்டும். தமிழில் இலக்கியத்தில் சந்தேகமா நாடுங்கள் அவரை .எத்தனை எளிமை எத்தனை அடக்கம்..


இறுதியில் பாடினார் பாருங்க...நல்ல தமிழ்பெயரை பிள்ளைக்கு சூட்டுங்கள்..என அங்கு தான் அவர் மென்மேலும் உயர்ந்து நிற்கிறார்.

Thursday, 9 October 2014

மெல்லத் தமிழ் இனி....

நேற்று தமிழ் வளர்ச்சித் துறை நடத்திய பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் நடந்தன..

மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பாகச் செய்தனர்...முடிவாக

தமிழ்த் துறைத் தலைவர் ” மனதிற்கு வேதனையாக உள்ளது...பல மாணவர்கள் தமிழில் பெரும் பிழைகள் செய்துள்ளனர்...இப்படி தமிழ் வளரும் சந்ததியிடம் இருப்பின் மெல்லத் தமிழினிச் சாகும் என்ற கூற்று மெய்யாகுமோ என வேதனையாக உள்ளது.. பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் தமிழை இவ்வளவு பிழையாக எழுதினால் என்ன செய்வது..?என்று வருத்தத்துடன் கூறினார்...

மனதில் உறுத்தல் அதிகமாகின்றது..

.ஒருவரின் தாய் மொழி பிழையாக எழுதுவதை அலட்சியபடுத்துவது என்பது மொழி அழிவின் துவக்கமல்லவா? தமிழாசிரியர்கள்,தமிழ் உணர்வாளர்களின் குழந்தைகள் கூட தமிழில் திறமில்லாத நிலை..மட்டுமல்ல தமிழை வெறுக்கும் நிலை..

உன் தமிழை வச்சுகிட்டு ஒண்ணும் செய்ய முடியாதென, தமிழ்ச்சமூகம் மனதில் பதிய வைத்துவிட்டது..மொழி பண்பாட்டின் சின்னம் ..அதை புறக்கணித்தல் என்பது கொடுமை...

மதிப்பெண்ணிற்காக தமிழ் இல்லை..வாழ்க்கைக்காக ....நம்மை நாம் உணர்வதற்காக ...கட் ஆஃப் மார்க் நோக்கி ஓடும் தமிழ்ச் சமுதாயம்...தமிழையும் அதில் இணைத்தால் தான் சற்று திரும்பியாவது பார்க்கும்..நிலை

.ஒரு பக்கம் கணினியில் தமிழ் வளரும் நிலை..

ஒரு பக்கம் வளரும் சந்ததிகளிடம் தமிழ் குறித்த அலட்சியம்...

ஒரு மாணவன் பேசினான்”ஒருவனின் தாய் மொழியை அழிக்க வேண்டுமெனில் ,அவன் மனதில் அவனது மொழி குறித்த அலட்சியத்தை,தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கி விட்டால் போதும் அது தானாக அழிந்து விடுமென்று...”

குழந்தைகளிடம் தவறு இல்லை..நாம் தான் எங்கோ தவறு செய்கின்றோம்...?கல்வியைச் சுமையாக்கி வாசிப்பது என்பதையே மாணவர்களை வெறுக்கும் நிலைக்கு தள்ளிவிட்டோம்...பிற நூல்களைப்படிப்பதைக்கூட மாணவர்கள் விரும்ப வில்லை...

என்ன செய்யப்போகின்றோம்...?.நம் குழந்தைகள் தமிழ் மொழியை நேசிக்க வைக்க..?



Thursday, 17 July 2014

தமிழ் இலக்கியங்கள்-ஆசாரக்கோவை-பெருவாயின் முள்ளியார்

                                             
         
                          

                                       தமிழ் இலக்கியங்களின் சிறப்பை தமிழர்களை விட வெளிநாட்டினரே அதிகம் உணர்ந்து தமிழ் மேல் காதல் கொண்டனர்....ஜி.யு.போப்,கால்டுவெல் போல....

திருக்குறளை தினமும் இரவில் படுக்கும் முன் படித்து விட்டே தூங்கும் வழக்கத்தைப் பின்பற்றிய விக்டோரியா மகாராணி போல தமிழை நேசித்தவர்கள் எண்ணிக்கையிலடங்கா....

திருவாசகத்தை ஆங்கிலத்தில்  மொழிபெயர்க்கக் காரணமாய் ஜி.யு.போப் அவர்கள் தனது  முன்னுரையில் இரு காரணங்களைக்  கூறுகின்றார்...

1]இந்தியாவிற்கு வரும் ஆங்கியேர்கள் தமிழ்நாட்டிற்குள் நுழையும் போது தமிழையும் ,தமிழ்நாட்டையும் கேவலமாக எண்ணக்கூடாது...தமிழ் மொழி அளவற்ற சிறப்பை உடையது...ஞானப்புதையல்களைத் தன்னுள்  உள்ளடக்கியது என்பதை படித்து உணரவேண்டும் என்பதற்காகவும்.. !

2]தமிழ் மொழியின் சிறப்பை உணராமல் ,தமிழில் பேசுவதைக் கேவலமாக எண்ணும் இக்காலத் தமிழ் இளைஞர்கள் தனது தாய்மொழியின் பெருமையை ஆங்கிலத்திலாவது படித்து உணரட்டும் என்பதற்காகவே எழுதுகிறேன் என்றாராம்...!

தமிழ் மொழியின் சிறப்பை உணர ஒரு பாடல்

நீதி இலக்கியங்களில் ஒன்றான ஆசாரக்கோவை நாம் எப்படி நடக்க வேண்டும் உணர்த்தும் அருமையான நூலாகும்...அதில் வைகறையில் செய்ய வேண்டியவை,நீராடும் முறை,ஆடை உடுத்தும் முறை,தன் உடல் போற்றும் முறை,உண்ணும் முறை என வாழ்வியல் செயல்கள் ஒவ்வொன்றையும் எடுத்தியம்பும் நூலாக உள்ளது....
சான்றாக
உண்ண வேண்டிய முறையாக

”உண்ணுங்கால் நோக்கும் திசைக்கிழக்குக் கண்ணமர்ந்து
தூங்கான் துளங்காமை நன்கிரீஇ-யாண்டும்
பிறிதியாது நோக்கான் உரையான் தொழுதுகொண்டு
உண்க உகாஅமை நன்கு”-            
                                                  ஆசாரக்கோவை-20

பொருள்

உணவை உண்கின்ற போது கிழக்குத் திசையை நோக்குமாறு அமர்ந்து,தூங்காமலும்,அசையாமலும்,நன்கு அமர்ந்து.எங்கும் வேறு ஒன்றாஇயும் பார்க்காமலும் சொல்லாமலும்,உண்ணும் உண்வைத் தொழுது,சிந்தாமல் உண்வைக் கையால் எடுத்து நன்கு உண்க .

உண்ணக்கூடாத முறையாக...

”கிடந்துண்ணார் நின்றுண்ணார் வெள்ளிடையும் உண்ணார்
சிறந்து மிகஉண்ணார் கட்டின்மேல் உண்ணார்
இறந்தொன்றுந் தின்னற்க நின்று.”

பொருள்

       படுத்தபடி உணவை உண்ண மாட்டார்,நின்ற வண்ணம் உண்ண மாட்டார்,வெட்ட வெளியில் இருந்து உண்ண மாட்டார்.விருப்பத்துடன் மிகுதியாக உண்ண மாட்டார்.கட்டிலின் மேல் அமர்ந்து உண்ண மாட்டார்.எதையும் நின்ற வண்ணம் உண்ணுதலும் கூடாது.

அவசர உலகில் உண்ணக்கூட நேரமின்றி ஓடிக்கொண்டே உண்ணுவோம் என்பதை முன் கூட்டியே உணர்ந்து ஆசாரக்கோவையை பெருவாயின் முள்ளியார் படைத்துள்ளாரோ என எண்ணும்படி  உள்ளது இச்செய்யுள்....

Tuesday, 24 June 2014

தமிழ்



தமிழ்
------------

அரசுப்பள்ளிகளில் ஆங்கிலவழிக்கல்வியில் மாணவர்களின் சேர்க்கை அதிகமாகின்றது.கவலைப்படுவதா?மகிழ்வதா?தமிழும் முழுதாய் அறியாமல்,ஆங்கிலமும் முழுதாய் அறிய முடியாமல்..கற்கும் எதிர்கால சந்ததியின் நிலை.....?!

நடந்த பொதுத்தேர்வில் தமிழில்தான் தேர்ச்சி விகிதம் மிகவும் குறைவு. காரணம் அறிய ஆய்வு நடத்தப்படுகிறதாம்...!

பள்ளிகளில் தமிழின் மதிப்பை நாமே குறைத்துவிட்டோம்.கட் ஆஃப் மதிப்பெண்ணில் தமிழையும் சேர்த்தால் மட்டுமே கொஞ்சமாவது மதிப்பு கிடைக்கும் போல.இல்லையெனில் தேர்விற்கு முதல் நாள் கடமைக்கு படித்து ஒதுக்குகின்ற நிலை தான் மேலும் நீடிக்கும்..
கவனிக்கப்பட வேண்டிய விடயம்.

இன்னும் சில வருடங்களில் தமிழ் படிக்கும் மாணவர்களே இல்லாத நிலை ஏற்படவும் வாய்ப்புள்ளது.

தமிழாசிரியர்கள் இதற்கான செயல்களில் ஈடுபட வேண்டும்...
தமிழின் சிறப்பை உணர்ந்து உணர்வோடு கற்பிக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை அரிதாகிக் கொண்டு வருகின்றது என்பது மறுக்கவியலா ஒன்று...!

தமிழ் தானே இல்லை தமிழ் தான் தாய்மொழி என்ற உணர்வை எப்போது ஊட்டப் போகின்றோம்...?

Saturday, 17 May 2014

னை,ணை



திடீர்னு என் மடிக்கணினிக்கு என்ன ஆச்சுன்னு தெரியல ...னை,ணை,லை,ளை றா ,ணா ,ன்னு தும்பிக்கை வச்ச எழுத்துக்களா வந்து என்ன பழைய காலத்துக்கு இட்டுக்கிட்டு போகுது..

எப்படி மாத்துறது?
இப்ப உள்ள குழந்தைகள் பார்த்தா நான் தமிழ் எழுத்துக்களில் மாற்றம் செஞ்சுருக்கேன்னு நினக்கத்தோணாது.!

இந்த லை  போட டீச்சர் கிட்ட என்னா மொத்து வாங்கிருக்கேன்னு நினசாலே கலங்குது.நல்ல வேளை இப்ப உள்ள குழந்தைகள் தப்பித்தார்கள்.பெரியாருக்கு தெரிஞ்சுருக்கு ..பாவம் அவரும் கஷ்டபட்டுருப்பாரு போல...
தும்பிக்கையெல்லாம் வளைச்சுட்டாரு...

இப்ப உள்ள எழுத்துக்களை எழுதவே இங்கீலீசு மீடியக் குழந்தைகள் எவன் டா இந்த தமிழ் மொழியக் கண்டுபிடிச்சான்னு திட்டிக்கிட்டே எழுதுதுங்க..
இதுல இந்த பழைய எழுத்துக்களப் பார்த்தா மயங்கியே விழுந்துடுங்களே

Friday, 16 May 2014

இனிய காலை வணக்கம்..



இணையத்தமிழ்ப் பயிற்சிப் பட்டறை-புதுக்கோட்டை.

17.05.14,18.05.14. -இருநாட்கள்

வலைத்தளத்தில் எங்களை முழுமையாக ஆர்வமூட்டிய பயிற்சிக் காலங்கள் மீண்டும்...மகிழ்வாய் மனம்...

பயிற்சிக்கு வருகைத்தரும் வலைத்தள நண்பர்களையும்,முகநூல் நண்பர்களையும் அன்புடன் வரவேற்கிறோம்.

Sunday, 13 April 2014

சித்திரைத்திருநாளில் ஓரு நற்செய்தி.



தமிழின் தொன்மையையும்,புதுகையின் தொன்மையையும் உலகறியச் செய்ய ஓர் அரிய வாய்ப்பு.
புதுகையில் வாழும்,வாழ்ந்த ,வாழப்போகும் நல் இதயங்கள் ஒன்று சேர்ந்து தமிழ்த்தேர்  இழுக்க திரள்வோம்.

பத்தாயிரம் ஆண்டுக்களுக்கு மேலான தொன்மை வாய்ந்த புதுகையின் சிறப்புகளை ஆதார பூர்வமானச் செய்திகளுடன் உலகறியச் செய்யும் முயற்சியில் நீங்களும் உங்கள் நண்பர்களும் பங்களிப்பை அளிக்க அழைக்கின்றோம்.முடியாது என ஒன்று உண்டோ தமிழரால் ...!

விரைந்து முடிக்க விரைவோம்...

அலைபேசி..9443193293

தமிழ் புத்தாண்டு

வெப்ப காற்றினால்
வியர்வையில் குளியல்.
குளமோ மனித மனம் போல் வறண்டு
நீர்தொட்டியும்...
சாதியினால் சரிகின்றது மனிதம்
மதம் பிளக்குமதை..
ஊழல் அரசியல்
ஊழலுக்குள் அதிகாரிகள்
சொல்லவே முடியாத
பெண்களின் பாதுகாப்பற்ற நிலை
சந்ததிகளை சீரழிக்கும் சமூகம்
இவைகளுக்கிடையில்
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
தை யா?,சித்திரையா?
சொல்வதா வேண்டாமா
குழப்பத்தில் தமிழரின் நிலை
என்ன கெட்டுப்போச்சு
இரண்டையும் கொண்டாடுவோம்னு ...
வாழ்த்துக்கள் குவிகின்றது..
உண்மையறியாமலே!



Friday, 28 March 2014

தமிழரின் சிறப்புகள்

நிலம் பகுத்து
முதற்பொருளும்
கருப்பொருளும்
அமைத்து
நாகரீகம் கற்பித்தவன்
நற்றமிழன்....!


தமிழனின் மொழி...தமிழ்


பாடல்....தமிழ்த்தாய் வாழ்த்து



தமிழ்நாட்டுச்சின்னம்

 விலங்கு....வரையாடு

 பறவை.......................மரகதப்புறா
மரம்.....பனை













 கருவி.......பறை..            
நடனம்....பரதம்
                                            
மலர்...செங்காந்தள்
                                           
பயிர்.....நெல்
                                                 
காய்......கத்திரிக்காய்
                                                     




 கனி.....அத்திப்பழம்
                                               


விளையாட்டு.....கபடி


தமிழனுக்கென்று
தமிழ்நாட்டுக்கென்று
தனித்தன்மை உண்டென
அறியாது வாழ்கிறது
தமிழினம்......!.

Friday, 3 January 2014

தமிழரின் புதையலாய்



ஒரு வீட்டில் என்னென்ன பொருட்கள் இருக்க வேண்டுமென பார்த்து வாங்குகிறோம்.அழிந்து போகும் பொருட்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம்.
தமிழ் செம்மொழி உயர்மொழி என பெருமை பேசும் நாம், நம் வீட்டில் அழியாச்செல்வத்தை தரக் கூடிய நம் தாய்மொழியின் சிறப்பை 

உணர்த்துகின்ற தமிழ்நூல்கள் சிலவற்றையாவது வைத்திருக்க வேண்டாமா?
அப்படியெனில் என்னென்ன நூல்கள் நாம் வைத்திருக்க வேண்டும்.அதுவும் ஒரு தமிழாசிரியர் வைத்திருக்க வேண்டிய தரமான நூல்கள் எவைஎவை என்ற என் தேடல்களுக்கு விடையாக இன்றைய கணினி பயிற்சியில் எங்கள் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் தந்த கருத்துக்கள் அமைந்தன.
உங்கள் வீட்டில் அவற்றில் சிலவாயினும் கட்டாயம் இருக்க வேண்டும்.நம் தாய்மொழியின் பெருமை உணர்த்தும் நூல்கள் நீங்கள் வைச்சுருக்கீங்களா?
பாருங்க..
 

இலக்கிய நூல்கள்
----------------------------
திருக்குறள்
சங்க இலக்கியம்
பதினெண்கீழ்க்கணக்கு
சிலப்பதிகாரம்
மணிமேகலை
கம்பராமாயணம்
நீதிநூல்கள்
தனிப்பாடல்திரட்டு

கவிதைகள்
-------------------------
பாரதியார்
பாரதிதாசன்
கண்ணதாசன்
வைரமுத்து
அப்துல்ரகுமான்
காசிஆனந்தன்
பட்டுக்கோட்டையார்
தமிழ் ஒளி

புதுக்கவிதைகள்
நவீனக்கவிதைகள்
ஹைக்கூ
ஈழக்கவிஞர்கள்

இலக்கண கண்ணாடி
--------------------------------
தொல்காப்பியம்
நன்னூல்
யாப்பருங்கலக்காரிகை
தண்டியலங்காரம்
நம்பியகப்பொருள்
புறப்பொருள் வெண்பா மாலை
நற்றமிழ் இலக்கணம்
அடிப்படைத்தமிழ் இலக்கணம்
தமிழ் இலக்கணம்
இலக்கணகொத்து

பீடுநடை போட உரைநடைகள்
-----------------------------------------------
பாரதியார் கட்டுரைகள்
புதுமைப்பித்தன்
வ.சுப.மாணிக்கம்
பெருமாள்முருகன்
எஸ்.ராமக்கிருஸ்ணன்
பொ.வேல்சாமி
ஆ.சிவசுப்பிரமணியன்
நாஞ்சில் நாடன்
மாடசாமி
தொ.பரமசிவம்

வரலாற்றுநூல்கள்
--------------------------------
மொழி வரலாறு
தமிழ் இலக்கிய வரலாறு
குழந்தை இலக்கிய வரலாறு
தமிழர் சால்பு
மயிலை சீனி.வெங்கடசாமி
கார்த்திகேசு சிவத்தம்பி

வாழ்க்கை வரலாறு
--------------------------------
பாரதியார்
என்சரித்திரம்
பாவலர் சரித்திர தீபகம்
தமிழ் புலவர் வரலாற்றுக்களஞ்சியம்
பன்னிரு திருமுறை வரலாறு

அகராதிகள்
-------------------
அபிதான் சிந்தாமணி
தமிழ் லெக்சிகன்
தமிழ் கையகராதி
க்ரியாவின் தற்காலத்தமிழகராதி
தொகையகராதி
ஆங்கிலம் தமிழகராதி
மயங்கொலிச் சொற்பொருள் அகரமுதலி
சுராவின் தமிழ்-தமிழ்-ஆங்கிலம்

கையேடுகள்
-------------------

தமிழண்ணல்
ம.நன்னன்
சு.சக்திவேல்
பயன்பாட்டுத்தமிழ்
தமிழ்நடைக்கையேடு
சொல்வழக்கு கையேடு

இதழ்கள்
----------------
நாளிதழ்கள்
தரமான வார இதழ்கள்
தரமான சிற்றிதழ்கள்

சிறந்த தமிழ் பற்றுள்ள மனித நேயமிக்க முதன்மைக்கல்வி அலுவலர் எங்களுக்கு கிடைத்திருக்கிறார்.ஒரு அதிகாரி என்ற
பயமின்றி நாங்கள் இருந்தோம்.தமிழ் தண்மையானது என்பதற்கு இவரே உதாரணம் .முகப்பூச்சு இல்லை .தமிழை நேசிப்பவள் என்பதால் உணர்ந்து கூறப்பட்ட பதங்கள்.இதன் மூலம் என் மனம் நிறைந்த நன்றியை அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

Monday, 14 October 2013

சொல் சொல்

சொல்லுன்னு எளிதாக கூறுவோம் .கிருபானந்த வாரியாரிடம் கேட்டால் எப்படி சொல்லச் சொல்றேன்னு கேட்பார்.

கம்பனின் கவிநயம் ----நூலில்
---------------------------
திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங் கில்--
திருக்குறள்

சொல்லின் பொருள்வளம் கிருபானந்தவாரியாரின் நூலில் படித்த போது வியக்காமல் இருக்க முடியவில்லை.

சொல்லுதல்---- சிறப்பு பொருள்
-------------------------------------------------------

1.அசைத்தல் - அசையழுத்தத்துடன் சொல்லுதல் .

2.அறைதல் -வன்மையாக மறுத்து சொல்லல்.

3. இசைத்தல்-ஓசை வேறுபாட்டுடன் சொல்லுதல்.

4.இயம்புதல்-மேளம் போல் ஓங்கிச் சொல்லுதல்.


5.உரைத்தல்-அருஞ்சொற்கு அல்லது செய்யுளுக்கு பொருள்

சொல்லுதல்.

6.உளறுதல்-ஒன்றிருக்க ஒன்றைச் சொல்லுதல்.

7.என்னுதல்-என்று சொல்லுதல்.

8.ஓதுதல்-காதிற்குள் மெல்லச் சொல்லுதல் .

9.கத்துதல்-குரல் எழுப்பிச் சொல்லுதல்.

10.கரைதல்-அழைத்துச் சொல்லுதல்.

11.கழறுதல்-கடிந்து சொல்லுதல்.

12.கிளத்தல்-இன்னதென்று குறிப்பிட்டுச் சொல்லுதல்.

13.கிளத்துதல்-குடும்ப வரலாறு சொல்லுதல்.

 14.குயிலுதல்
குயிற்றுதல் ]-குயில் போல் இன்குரலில் சொல்லுதல்.

15.குழறுதல்-நாத் தளர்ந்து சொல்லுதல்.

16.கூறுதல்-கூறுபடுத்திச் சொல்லுதல்.

17.சாற்றுதல்-பலரறியச் சொல்லுதல்.

18.செப்புதல்-வினாவிற்கு விடை சொல்லுதல்.

19.சொல்லுதல்-உள்ளத்துக் கருத்தைச் சொல்லுதல்.

20.நவிலுதல்-நாவினால் ஒலித்துச் சொல்லுதல்.

21.நுதலுதல்-ஒன்றைச் சொல்லித் தொடங்குதல்.

22.நுவலுதல்- நூலின் நுண் பொருள் சொல்லுதல்.

23.நொடித்தல்-கதை சொல்லுதல்.

24.பகர்தல்-பண்டங்களைப் பகுத்து விலை சொல்லுதல்.

25.பறைதல்-கமுக்கம்
(இரகசியம்)வெளிப்படுத்திச் சொல்லுதல்.

26.பன்னுதல்-நிறுத்தி நிறுத்திச் சொல்லுதல்.

27.பனுவுதல்-செய்யுளில் புகழ்ந்து சொல்லுதல்.

28 .புகலுதல்-விரும்பிச் சொல்லுதல்.

29.புலம்புதல்-தனக்குத்தானே சொல்லுதல்.

30.பேசுதல்-சாமான்யமாகச் சொல்லுதல்.

31.பொழிதல்-இடைவிடாது சொல்லுதல்.

32.மாறுதல்-உரையாடலில் மாறிச் சொல்லுதல்.

33.மிழற்றுதல்-மழலைபோல் இனிமையாகச் சொல்லுதல்.

34.மொழிதல்-சொற்களைத் தெளிவாகப் பலுக்கிச் சொல்லுதல்.

35.வலத்தல்-கேட்பார் மனத்தைப் பிணிக்கச் சொல்லுதல்.

36.விடுதல்-மெல்ல வெளிவிட்டுச் சொல்லுதல்.

37.விதத்தல்- சிறப்பாக எடுத்துச் சொல்லுதல்.

38.விள்ளுதல்-வெளிவிட்டுச் சொல்லுதல்


.39.விளத்துதல்- விளக்கிச்(விரித்து) சொல்லுதல்.

40.விளம்புதல்-விளக்கமாகச் சொல்லுதல்.

இப்ப நீங்க எப்படி பேசுறீங்க..?