World Tamil Blog Aggregator Thendral: February 2014

Thursday 27 February 2014

பெண்

இன்று தினமணி 28.2.2014 செய்தித்தாளில்ஆம்பூர் அருகே 12.7.2012 இல் பகலில் வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த 10 வயது சிறுமியை தனது பேத்தியை விட்டு அழைத்து வரச் சொல்லி 60 வயது மிருகம் ஒன்று பாலியல் வன்முறை செய்து, வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியும் உள்ளது .இவ்வழக்கின்  தீர்ப்பாய் வேலூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை தீர்ப்பளித்துள்ளது .

Tuesday 25 February 2014

மரணம்



நகரத்தில் மெளனமாய்
அடுத்த வீடறியாமல்
இழப்பின் வலியை
 மனதிற்குள்ளேயே அடக்கும்
நாகரீக மரணமாய் ....!

கிராமத்தில் நுழையும்போதே
எதிர்கொள்ளும் ஒப்பாரி நம்மை..
இழவு வீட்டின் சோகத்தை
ஒவ்வொரு வீடும் சுமக்கும்.
உணர்வுகளை மறைக்காமல்
உள்ளத்தை வெளிக்காட்டும்
கதறுகின்ற ஒப்பாரியிலும்
நாகரீகமின்றி மூக்கைச்சிந்தி
துடைக்கும் பட்டிக்காட்டுத்தனத்திலும்
ஊடாடும் கிராமத்தின்
 மனித நேயம் ...!









Sunday 23 February 2014

இடிந்த கரை

இடிந்த கரை
இடியாமலிருக்க
சுதேசிகளுடன்
சுவாசப்போராட்டத்தில்
கரை மீன்களுடன்
குஞ்சுகளும் ......

பேசுபொருளாய்

பேசுபொருளாய்
ஆண்கள் புகழ் பெற்றால்
சேர்ந்தும்...
பெண்கள் புகழ் பெற்றால்
சேர்த்தும் ...
தோழியின் கூற்று
ஆம் என்றே
கூறித்தொலைய வேண்டியுள்ளது
மறுக்கவியலா உண்மையை....

Friday 21 February 2014

” எப்படியும் சொல்லலாம்” நூல் வெளிவந்துள்ளது.

பேச்சாளராய் அறிமுகம்
எழுத்தும் வலிமையாய்
கவிதையிலுமா..?
சமூக அக்கறையுடன்
காசுக்கு விலையாகா
மனிதநேயமுடையவராய்...

”அந்தகேள்விக்குவயது 18”,”பத்துகிலோ ஞானம்”,”இவனுக்கு அப்போது மனு” என்று பெயர் ஆகிய நூல்களின் ஆசிரியரான திரு .எட்வின் அவர்களின்
” எப்படியும் சொல்லலாம்” நூல் வெளிவந்துள்ளது.

”மலட்டு மரம்
 பூத்தது
 ஒலிப்பெருக்கி”

என்ற ஹைக்கூவோடு துவங்கி அவரது பாதையில் நம்மை வழிநடத்துகின்றது.ஆற்றில் மணலாறு பாய்வதை அழகாக

”பழகிக் கொள்ள
வேண்டியதுதான்
கானலில் நீந்த”

என்ற வரிகள் கண்முன் காட்டுகின்றது பாலைவன ஆற்றை...!

எள்ளலுடன்,சமூக அக்கறையுடன்,இயற்கையை நேசிக்கும் தன்மையுடன்,வறுமையைக்கூட மனம் கனக்கும் நகைச்சுவையுடன்.....இவரின் கவிதைகள் மனதைக் கொள்ளை கொண்டு போகின்றன...

”அரச்சிடலாம் துவையல்
இருக்கு
.........
..............
வறுகடலை
கொஞ்சம் சுள்ளியோடு
இருக்கு
ராமாயி தந்த குருனையும்
காய்ச்சிடலாம் கஞ்சியும்
எதிர்வீடு போன மக
நனச்சிராம கொண்டு வரணும்
நெருப்ப....”

தவறி தீண்டாத ஜாதியில்
பிறந்த காரணத்திற்காய்
மலம் தின்ற அவஸ்தையை  .... இவரின் கவிதை சாட்டையடியாய் நமக்கு உரைக்க வைக்கின்றது.

”ஓடப்பரெல்லாம் உதையப்பராகி விட்டால்” என்ற பாரதிதாசனின் வரிகளை நினைவூட்டுவதாய் ஒரு கவிதை...

”தெரு தாண்டும் வரை
.............................

கைகளில் தான்
இருக்கிறது
செருப்பு”

பெண்ணியச்சிந்தனைகளை மிக ரசனையுடன் கூறும் கவிதையாய்....
”.......................
......................
 அப்பா வண்டுன்னா சரி
எப்பவேணாலும்
 போகலாம்
வீட்டுக்கு “

ஒவ்வொரு கவிதையும் சிந்திக்க வைப்பதாய் படைத்துள்ள விதம் பாரட்டுக்குரியது...

சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.....
வாழ்த்துக்களும் ,பாராட்டுக்களும் தோழருக்கு பகிருங்கள் நூலைப் படித்து....

Thursday 20 February 2014

பசி

தோல்அதிர்ந்தது
இசையிலும்..

பசியிலும்....

Wednesday 19 February 2014

மனிதம்1

சிறுவயது நினைவலைகளில்
சந்துவழி வந்து
சந்துவழியே மலக்கூடை
சுமந்து சென்ற தோட்டிச்சி
அடிக்கடி வருகின்றாள்...!

விடியும் முன்
வீட்டருகே கிடக்கும்
சாணி எடுத்து கரைத்து
கோலமிடுவாள் அக்கா...

அறியாமல்ஓருநாள் இருட்டில்
பன்றிவிட்டையை கரைத்து
விட்ட கையை கழுவிக்கொண்டே
இருப்பாள் எப்போதும்.....!

சோப்புவாங்கியேகாசு கரையுதென
திட்டும் அம்மாவிடம் கேட்டேன்
தோட்டிச்சி பாட்டிக்கு சோப்பு
வாங்க யாரு காசு கொடுப்பாரென....?

Tuesday 18 February 2014

முல்லை திரிந்த பாலையாய்.....


வைகறையில் துயிலெழுப்பும்
குயிலின் கூவலொவொன்று....

கதிரவனின் வரவைக்கூறும்
கரகரக்கும் புள்ளொன்று...

கீச்சு கீச்சென்று நடுநடுவே
இசை ஒத்தூதும் சிட்டுக்குருவிகள்...

உறுமிக்கொண்டே குட்டிகளோடு
விரைந்தோடும் தாய்பன்றியால்
தாவிப்பறக்கும் சேவல்
தன்மீது படர்ந்திடுமோ
பயத்தில் குஞ்சுகள் தடுக்க
கால்கள் தள்ளாடும்
கோழி ஒன்று....

கழுத்தில் கட்டிய
கயிறு தொடர
துள்ளி ஓடும் கன்றுகுட்டியின் அருகே
சரசரவென ஊறும் சர்ப்பத்தை
அலட்சியப்படுத்தி செந்நிறக்கால்களும்
வெண்பொதி உடலுமாய்
தலைதூக்கி நடக்கும்
கொக்கொன்று....

நகரத்தின் நடுவே
நிழல் தரும் கருவேலங்காடு
கதிரவனையும் நுழைய விடாமல்
இயற்கையின் மிச்சமாய்.....

காற்றின் நீர்ப்பசையை உறிஞ்சிடும்
நிலத்தின் நீர்வளத்தை துடைத்தழிக்கும்
இயற்கையை சீரழிக்குமென்றே
வைது கொண்டேயிருந்தேன்
பார்க்கும் காலமெல்லாம்...

சட்டென்று ஓருநாளில்
திருமண சமையலுக்காய்
திருமரணம் அடைந்த
கருவேலங்காட்டின் இழப்பாய்....
புட்களின் இசை..
பறக்கும் ஓசை...
மிச்சமாய் எச்சமாய்
விழுந்து கிடந்த கூடுகள்
மருத நில விலங்களின் ஓட்டங்கள்..
முகத்திலறையும் பகலவனின் கீற்றுகளை
பார்த்த கணத்தில்
வெறுமையானது மனம்
முல்லை திரிந்த பாலையாய்.....


Sunday 16 February 2014

வெட்கம்



என்னவெட்கம்
தேநீருக்கு ?அவசரமாய்
மேலாடை ..!

பால்யங்களின் புதையல்கள்

கறம்பக்குடி த.மு.எ.க.ச நடத்திய கவிதைப்பயிலரங்கில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.மிகவும் மனதிற்கு இனிய நிகழ்வுகளாக அனைத்தும்.இதற்கு காரணமான ஆசிரியர் ஸ்டாலின் சரவணன் மற்றும் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் .
அங்கு வைக்கப்பட்டிருந்த கவிதைகளை காட்சிகளாக வண்ண ஓவியங்களை படைத்த மாணவி காது கேளாத,வாய் பேசமுடியாத ஆங்கில இலக்கியம் பயிலும் கல்லூரி மாணவி என்று அறிந்ததும் கலங்காமல் இருக்க முடியவில்லை.அவளின் ஓவியங்கள் அனைத்தும் பேசின.முத்தாய்பென அமைந்தது சுழலும் கவியரங்கம் அருமை அருமை...
என் சிறிய பங்களிப்பாய்...



கவிதையொன்று......
 

இழந்த உறவுகளின்
இருப்பென
நினைவு சின்னங்களாய்..

இருக்கும் உயிர்களின்
இறந்த காலத்தை உணர்த்தும்
பொக்கிஷங்கள்...
மகிழ்வான தருணங்களை
கூறாமல் கூறும்..

முதன்முதலில்
 அணிந்த ஆடை
நடந்த நடைவண்டி
குடித்த பால்புட்டி
இப்போதும் விளையாடக்
காத்திருக்கும் நாய் பொம்மையும்
சொப்புச்சாமான்களும்...குழந்தைமையை
பறைசாற்றி மீண்டும்
 குழந்தையாகத்துண்டும்...

மரப்பாச்சியின் உடைந்தகை
மறைந்துவிட்ட அண்ணனுடன்
ஆக்ரோஷமாய்சண்டையிட்டு
 உடைத்த காலத்திற்குள்
சட்டென்று எனை இழுக்க..

அத்தை மகளுடன்
அடித்துப்பிடித்து வம்பாய்
பெற்ற வெற்றியைக்கூறும்
புழுதி படிந்த பல்லாங்குழி...

கனவிலும் கொத்தி மிரட்டிய
பாம்பினை நினைவூட்டும்
நைந்த பரமபதம்...

விடுமுறையில்
மாமா வீட்டிலிருந்து
அம்மாவிற்கு எழுதிய
மடலொன்று கிழிந்த நிலையில்
மறைந்துவிட்ட அம்மாவின்
நாட்குறிப்பில் பாதுகாப்பாய்...

எத்தனையோ எத்தனையோ
மனக்குழியில் புதைந்தவைகளை
மீட்டெடுக்கின்றன
பழையகுப்பைகளான
பால்யங்களின் புதையல்கள் ...


Friday 14 February 2014

“ பூனை எழுதிய அறை”

கவிஞர்கள் பற்றிய உரையாடலில் எட்வின் சார் கல்யான்ஜியை படியுங்கள் என்றார்.புத்தகக் கண்காட்சியில் அவரின்
“ பூனை எழுதிய அறை”
 நூலை வாங்கி வந்தேன்.தூக்கம் வராத ஒரு இரவுப்பொழுதில் கல்யாண்ஜியின் நூலைப் படித்தேன்.ப்ப்பாபா என்ன சொல்வது இது கவிதை .அவர் உணர்ந்த உணர்வுகளை எளிதாக கடத்தி விட்டார் என்னில்.
”தேக்கும் ,பூக்கும்” எனத் துவங்குகிறது...

“வாசிக்க வேண்டிய ஒரு
புதிய புத்தகமாக இருளில்
புரளத் துவங்கியது
பூனை எழுதிய அறை...’

ஏனோ பூனை எனக்குப் பிடிக்காது..அதன் இதமான மென்மையையும் மீறி அதனின் திருட்டுத் தனம்....அதற்காக என்னிடம் கேட்டு குடிக்கனும் என கூறவில்லை...எனை ஏமாற்றுகிறது...என அதன் இயல்பை உணராமல் வெறுப்பேன்...மேலும் ஆசையாக வளர்த்த லவ் பேர்ட்ஸ் சிலவற்றைக் கொன்று தின்று விட்ட கோபமும்....!

ஆனால் இப்போது பூனையைப் பார்க்கும் போதெல்லாம் எந்த அறையில் எழுதப் போகின்றதோ என வியக்க வைத்து விட்டார் கல்யாண்ஜி.

கோப்பையில் விழுந்த பூச்சி கூட கருப்பொருளாகி கவிதை படைக்கின்றது.
சிறு வயதில் சேகரித்த லாடம் தரும் தொடர்வலைகள்...ஒவ்வொருவரும் தன் பால்யக் கால சேமிப்புகளை நினைவூட்டும்....கவிதையைப்
படித்த சில கணங்களில் நான் சேகரித்து வைத்துள்ள வாழ்த்து அட்டைகளைத் தேடி எடுத்த என்னை, நொடியில் பள்ளிவயதிற்கு இட்டுச் சென்றன.....அவை.
அவரின் கவிதைகள் கண் முன் காட்சியை நிலைநிறுத்துகின்றது கண்ணாடியாய்.....

மனதை கவ்வி கொள்ளும் தூங்கும் மழலையின் புன்சிரிப்பாய் ,கல்யாண்ஜியின் கவிதைப் பூக்கள்.....

அறிமுகம் செய்த எட்வின் தோழருக்கு நன்றி...

Monday 10 February 2014

நம்ப முடியவில்லை



2012 ,டிசம்பர் 6ஆம் நாள் கணினி யில் எனது வேலு நாச்சியார் வலைத்தளத்தை  எந்த வித முன் அனுபவம் இல்லாமல் விளையாட்டாய் துவங்கினேன்
.எனது கவிதை நூலான விழிதூவிய விதைகள் வெளியான (2.12.2012 )சில தினங்களில் இவ்வலைத்தளத்தை ஆரம்பித்தேன் .முன் அனுபவம் இல்லாமல் துவங்கியதால் அது வளர்ச்சியின்றி நடை பழகாத குழந்தையாகவே இருந்தது

Thursday 6 February 2014

நல் மேய்ப்பர்களாய் ....



வழி தவறி ஓடத்துடித்த
ஆட்டுக்குட்டிகளை
அன்பால் அரவணைத்து விட்டோம்
நல்  மேய்ப்பர்களாய் ....

கோழிக்குஞ்சுகளாய்
எம்  சிறகுகளில்
நுழைந்து கொண்ட
மகிழ்வை சொல்ல
வார்த்தைகளைத்  தேடுகின்றேன்
தென்றலாய் .......


தலைமறைவு .......

எதிரியை
எதிர் கொள்ளாது பூமிக்குள்
தலை மறைக்கும்
நெருப்புக் கோழியாய் ...

பிரச்சனைகளில்
மனிதர்களின்
தலைமறைவு .......

Saturday 1 February 2014

தெளிவு

கானில் கதிரவனின்
கீற்றுகளாய் ...!

அனுபவங்களே
அடையாளப்படுத்துகின்றன
மனங்களை ....!


விழி தூவிய விதைகள்


                                                           விழி தூவிய விதைகள்
                                                          ------------------------------கீதா

எனது கவிதை நூலுக்கு கவிஞர் .தங்கம் மூர்த்தி அவர்களின் முன்னுரை .

நேர்மையின் நிறமணிந்த கவிதைகள்

                                            ஒரு காட்டாறு
                                               ஒரு பேரருவி
                                               ஓர் ஆழ்கடல்
                                                ஓர் அடைமழை.....

                                                       ஒரு விதை
                                                       ஒரு காடு
                                                        நானே ஆகாயம்...
                                                        நானே அண்டம்
                                                       எனக்கென்ன எல்லைகள்
                                                       நான் இயற்கை
                                                        நான் பெண் -
என்றெழுதுகிறார் ஈழத்தமிழின் நவீன கவிதைக்கும் புதிய முகத்தைத் தரும் கவிஞர் அனார் .அப்படித்தான் தன்னையும் அறிமுகம் செய்கிறார் கவிஞர் கீதா .
                                      நான்
                      தேங்கிய குட்டையல்ல
                       துள்ளும் அருவி
                       பாய்ந்தோடும் ஆறு
                        --------------------------------
                      சலசலக்கும் ஓடை
                         ---------------------------

                           ஆழ்மனக்கடல் .