World Tamil Blog Aggregator Thendral: September 2017

Sunday 24 September 2017

மனம் சுடும் தோட்டாக்கள் -கவிதை நூல் விமர்சனம்

எனது நான்காவது நூலான மனம் சுடும் தோட்டாக்கள்.... கவிதை நூல் விமர்சனம்..
 கவிஞர் மீரா செல்வகுமார் அவர்களின் கவிதை நடையில்.. 
"வேலைக்குப்போகும்
ஒரு சராசரிப் பெண்ணால் என்னவெல்லாம்
 செய்திடமுடியும்..
 புதுப்புது சேலைகள்..
புருவம் சிரைத்தல்
 புரணிகள் பேசுதல். தொலைகாட்சித்தொடர்
செய்யும் லீலைகளுக்காய்
கண்ணீர் சிந்துதல்?
 ஒ
ஒருவேளை
நீங்கள்
 கொஞ்சம்
முற்போக்கானவரெனில்..
புத்தகங்கள் வாசிக்கலாம்..
அறிவார்ந்த
 விமர்சனங்கள்
செய்யலாம்.
ஆடைகளில்
கொஞ்சம்
ஆணுக்கான
சாயல் கொள்ளலாம்..
அரசியல் சார்ந்த
பிண்ணனி எனில் சமூகப்பொறுப்புகளை
சுமக்கலாம்..
இவற்றில்
எந்த சம்பந்தமும்
 இல்லாத
ஒரு அரசுப்பள்ளியின்
 ஆசிரியை
எத்தனை
கோணங்களில்
விஸ்வரூபமெடுத்து
 நிற்கிறார்..
நகரின்
புதிய கடையொன்றில்
 வாங்கியிருக்கும்
ஆடையோ
அணிமணியோ
காட்டுவதற்கென்றே
கூடும்
ஆசிரிய அலுவல்
 கூட்டங்களில்
 சம்பந்தமில்லாத
 புத்தகங்களை
இவர்
ஏன் புரட்டிக் கொண்டிருக்கிறார்... மொக்கை
நகைச்சுவைகளுக்கு
கைதட்டி ஆர்ப்பரிக்கும்
ஒரு கூட்டத்தில்
அமர்ந்திருக்கும்
விரல்விட்டு
எண்ணிவிடக்கூடிய
மகளிர் இடையில்
 இவர் என்ன
குறிப்பெடுப்பார்?
 ஜல்லிக்கட்டு
 போராட்டங்களின்
 ஒவ்வொரு
மாலையிலும்
 இவர் முழங்கிக்
கொண்டிருக்கிறார்..
சக தோழர்களின்
போராட்டங்களில்
 தன் சங்கத்தை மீறி
கைதாகிறார்..
மொட்டை
வெயிலடிக்கும்
 மைதானத்தில்
 ஏதோ எழுதிக்
 கொண்டிருக்கிறார்..
அது சூரியனைச்
 சுட்டெரிக்கும் கோஷங்களாக குரலுயர்த்துகிறது..
சக மனிதன்
 ஒருவன்
மரித்துப்போனதற்கு
மண்டியிட்டு
 ஏன் அழவேண்டும்..
இறந்தவன்
மறந்தவனான பின்னும்
அவன்
குடும்பத்திற்கு
தாயாய்
ஏன் இருக்கிறார்?
மாணவிகளின்
 புத்தகங்களை சரிபார்க்கும்
சக மனுஷிகளிடை
இவர்
 ஏன்
அவளின்
சாப்பாட்டுபெட்டியின்
 எடைகுறைவை
ஆராய்கிறார்.?
 இலக்கியக் கூட்டங்களா? ஆலோசனைக் கூட்டங்களா? இவருக்கான
இருக்கை
இருகை
 நீட்டி
எப்போதும் கிடக்கிறது..
யார் இவர்..
இவருக்கும்
இந்த இடங்களுக்கும்
என்ன தொடர்பு...
புத்தனைப்போல்
போதிமரம்
தேடியெல்லாம்
 போக வேண்டியதில்லை...
அவன்
சொன்னதைப்போல
இவர்
ஆசைப்படவும் இல்லை... பேராசைப்படும்
ஒரு..
மனிதம்
நேசிக்கும் மனுஷி..
அவ்வளவே..
புதுகையின்
 இன்னொரு
அடையாளமாகவே
மாறிவிட்டிருக்கும்
 ஒரு பெண் படைப்பாளர்..
போராளி..
சமூக செயற்பாட்டாளர்.
 இன்னும்
 இன்னுமாய்
 பன்முகம் காட்டும்
தேவதா தமிழ்...
பல பாத்திரங்களை
சுமந்தாலும்
கவிஞர் என்னும்
கனமான
வேலையை
மிக அழகாய்ச்
செய்வதில்
எப்போதும்
வென்றுவிடுகிறார்...
 முகநூல்
 பக்கங்களில்
 பதிவதை
 விருப்பக்குறி
இடுவதும்
 பகிர்வதும்
 எப்பவும்
 உள்ளதுதான்..
எனினும்
 இவர் பதிவுகள்
படைத்தவர்
 பெயரை மட்டும்
மாற்றிக்கொண்டு
 உலவுவதில்
உலக சாதனை
 செய்திருக்கிறது...
 வேலுநாச்சியை
வெறிகொண்டு
எழுதிய விரல்கள்
இவருக்கு
உரித்தானது..
தவிப்புகளை
 பதியும்
இவரின்
நூல்களுக்கு
தலைப்புகளும்
 கூடவே
 தவமிருப்பதாய்
 தெரிகிறது...
 ஒரு கோப்பை
 முழுக்க
என்ன வேண்டும்
 உங்களுக்கு..
 உங்கள்
 ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு
 ஆசைகள் இருக்கலாம்...
எனக்கு
 நல்ல காப்பி
என்பேன்...
ஆயின்
இவர்
 "ஒரு கோப்பை மனிதம்"
தந்திருக்கிறார். "
விழி தூவிய விதைகள்"
 இன்னொரு தலைப்பு...
மீண்டுமொரு
 கவிதை
 ஆயுதத்தை
தூக்கிவந்திருக்கும்
 தேவதா தமிழ்
 இந்தமுறை
மனங்களை சுட
தோட்டாக்கள்
தொடுத்திருக்கிறார்...
"மனம் சுடும் தோட்டாக்களை"
நாம்
புன்னகையுடனே
வாழ்த்தி
 அனுமதிக்கலாம்...
அழகிய வடிவமைப்பு..
நெய்வேலியின்
 காகிதம் பதிப்பகம்
 நிறைவாய்
செய்திருக்கிறது
 அச்சிடலை..
நூலின்
வரவேற்பறையாய்
அயலகச் சகோதரி
கிரேஸ் பிரதிபா
 அணிந்துரை
அழகூட்டி இருக்கிறார்...
 74 பக்கங்களில்
73 தலைப்புகளில்
கவிதைகள்
. நூலுக்கென
இல்லாமல்
 மனசைப் பிசையும்
 சம்பவங்களுக்கு
 வரிகளால்
அழுத
நாட்குறிப்புகளாய்
 கொட்டிக்கிடக்கிறது
 தோட்டாக் கவிதைகள்..
ஷர்மிளா,
 ஸ்வாதி
 அருணிமா
 என
அலங்கோலப்பட்ட
 பெயர்களை
 தலைப்பாக்கி
தவிப்புகள்
சொல்லும் போது
அழும்
இவரது கவிதைகள்...
குட்டிம்மா
சின்ன கண்ணம்மா
என
சிற்றாடை கட்டி
 ஊஞ்சலாடுகிறது...
மாரியம்மாவும்
 இவர்
கவிதைக்கன்னியில் மின்னியிருக்கிறாள்.. ஞானக்கூத்தனுக்கும்
 கலாமுக்குமென
 விரிகிறது
கவிதைகள்...
இப்போதைய
பெரும்பாலான
கவிஞர்களைப்
போலவே
புதிய
வார்த்தைகளுக்கான
 மெனக்கெடல்
அதிகம்
தென்படாவிட்டாலும்
வசப்பட்ட
வார்த்தைகளை
வாசப்படுத்தியிருக்கும்
 லாவகம்
 பாராட்டுக்குரியது..
 உலகில்
இனி
காகிதங்களுக்கு
 ஏதேனும்
 தட்டுப்பாடு
 வந்து விடுமோ
 என்ற
தீர்க்க தரிசனத்தில்
 அட்டைகளை
தவிர்த்து
 அடைத்து வைத்திருக்கும்
கவிதைகள்
அவதிப்படுவது புரிகிறது..
இப்படியும் சொல்லலாம்...
கவிதைகளின்
அடர்த்தி போலவே
 அவை
அமர்ந்திருக்கும்
இடமும்
அடர்த்தியாய்
இருக்கிறது.
. வீதியில்
 ஊரில்
 மாவட்டத்தில்
 மாநிலத்தில்
தேசத்தில்
 உலகில்
எங்கெல்லாம்
பெண்
 பேசு பொருளாகும்
அவலங்கள் நிகழ்கிறதோ அப்போதெல்லாம்
நெஞ்சை நிமிர்த்தி
இவர் பேனா
தலைகுனிந்து
விடுகிறது..
புயலாய்ச்
 சீறும் கவிதைகள்
அதிகமிருக்கும்
 பாலைவனச்சூட்டில்
சோலையென
 தலைகாட்டி
 விடுகிறாள்
 சின்னக்கண்ணம்மா..
கவிஞர்
நல்ல தாயை தாண்டி
 பாட்டியான
 பரிணாம வளர்ச்சியில்
தெரியும் மகிழ்ச்சி..
 நமக்கும்...
 மேம்போக்காகவே
நகரும்
அறிமுகத்தை
கொஞ்சம்
கவிதைகளின்
பக்கமும் நாம்
 திருப்பலாம்..
 ஒரு படைப்பாளிக்கும்
 படிப்பவனுக்கும்
பெரிய வித்தியாசம்
இல்லைதான்...
படிப்பவன்
அநேகமாச்
சொல்வது
 இதுவாய்த்தான்
 இருந்திருக்கும்
நான் நினைச்சேன்
 இவர்
சொல்லிவிட்டார்...
இந்தக் கவிதையும்
 அப்படித்தான்...
 "பார்க்காமலே
பேசாமலே
பழகாமலே
பிரியாமலே
வருந்தாமலே
வாழாமலே
சிறகென
மிதந்திருக்கலாம்"
இப்படி ஒரு வரிகளை
 நீங்கள்
நினைத்துக் கொண்டே
இருங்கள்..
இவர் எழுதிவிட்டார்...
தொகுப்பு முழுவதும்
வாசிக்கையில்
ஒட்டிக்கொள்ளும்
கவிதைகளை
 தட்டிவிட முடியாதது
விந்தைதான்..
கவிதைகளை
கவிஞனின்
இதயத்தோடு
 வாசிப்பீர்கள்
எனில்
நாமும் பறக்கலாம்..
 புதுவையில் புதுமுகமும்
புதுகையில் அறிமுகமும்
 கண்ட
 "மனம் சுடும் தோட்டாக்கள்"
என்னும்
 இந்நூலை
வாசிப்புக்கென
 எடுத்து
சிறுக
என் புரிதலை
 பகிர்ந்திருக்கின்றேன்..
இந்தப்பெண்
போற்றுதலுக்கு
உரியவர்...
உணவிடும்
பெண்ணினினும்
உணர்வூட்டும் தாய்மை
 பாராட்டவும்
சீராட்டவும்
 படவேண்டியது...
மீண்டும் மீண்டும்
 புத்தகத்தின்
 பக்கங்களில்
மூழ்கும்போது
 புதுப்புது அர்த்தங்கள்.
காலமும்
வாய்ப்பும்
கைகூடுமெனில்
பின்னொரு நாளில்
இந்த நூலை
 நானே
புதிய கோணத்தில்
பார்த்ததை
 சொல்லலாம்...
இப்போது
 இவரின்
ஒற்றைக் கவிதையோடு
அறிமுகம் முடிக்கலாம்...
 "நிலம் பார்க்க நடந்தவளே..
 விண்ணில் நடை பயின்றாள்..
இமையம் தன் காலடியிலென அறைகூவினாள்.
காலெனப் பறக்கின்றாள்
காமுகர்களின் மத்தியில்..
கட்டிவைத்த மடமைகளை
காட்டுத்தீயாய் கருகிடச் செய்தாள்.. எதையும் துணிவாய் முடிக்கின்றாள் எள்ளியவர்களின் வாயடைத்து..
சந்ததி வளர்த்திடும் சக்தியானவள். சரித்திரம் படைக்கவே புறப்பட்டாள்.. சாத்திர சகதியை துடைக்கவே
சங்கென முழங்கி உயர்ந்திட்டாள்.. இனியவள் பாதை தெளிவாக
இனிதே புன்னகை புரிந்திட்டாள்.. தன்னோடு
தம்மின் குடும்பத்தையும்
தரணியே
புகழச் செய்திட்டாள்""
தலைப்பு
இக்கவிதைக்கு
பாரதி கண்ட
புதுமைப்பெண்...
 நன்றி வணக்கம்.. " ‌.

Thursday 21 September 2017

கலைப் பண்பாட்டு நிறுவனம் பயிற்சி

கலை பண்பாட்டுத்துறையின் மூலம் மூன்று நாள் பயிற்சி 20.9.17-22.9.17 வரை

காலை மதிப்பிற்குரிய மாவட்டக் கல்வி அலுவலர் , இராணியார் அ.ம.மே.நி.பள்ளியின் தலைமைஆசிரியர் மற்றும் CCRT யின் DRP திருமிகு ரெங்கராஜன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.

முகாமில் முதல் நாள் நிகழ்வில் ஆய்வாளர், முனைவர், யு.ஜி.சி.விருது பெற்றவர்.... இந்தியாவில் எங்கு ஆய்வாளர்கள் கூட்டம் நடந்தாலும் மரியாதையுடன் அழைக்கப்படக்கூடிய மதிப்பிற்குரிய மன்னர் கல்லூரியின் பேராசிரியர் சந்திரபோஸ் அவர்கள் கருத்துரை வழங்கினார்.
பல்லாண்டுகளாக ஆய்வு செய்த மகதப்பேரரசு வட நாட்டில் இருந்து தென்னாட்டிற்கு இடம் பெயர்ந்த வரலாற்றை சான்றுகளோடு விவரித்தார் கள்.
இந்தியாவில் ஆதியில் இருந்தவர்கள் நாகர்களே . அவர்கள் ஆயிரக்கணக்கான பிரிவில் உலகெங்கும் சிதறி வாழ்ந்துள்ளனர்.
மேலும் நாகர் என்ற பெயரில் சங்க இலக்கியச்சான்றுகளை எடுத்துரைத்த போது மலைத்து நின்றோம்.

நாகர்களின் வாழ்க்கை முன்னேற்றமே நாகரீகமானது என்றார்.

10 ஆண்டுகளுக்கு மேலாக ஆய்வுக்காக அர்ப்பணித்து செய்த அவரது பணி பாராட்டத்தக்கது.
வாழ்த்துகள் சார்.

அத்தோடு என்னால் விட முடியாது எங்கிருந்தோ வட மாநில அரசின் வரலாற்றை ஆய்வு செய்த நீங்கள் கீழடிக்காக செய்தது என்ன என்றேன்?

கீழடி ஆய்வாளர்கள் எனக்கு பிறகு வந்த சமீபத்திய மாணவர்கள் தான்.... எனக்கு தெரிந்தவர்கள் தான் என்றார்...
கீழடி ஆதாரங்கள் உண்மை எனில் தமிழ் நாட்டை சேர்ந்த ஆய்வாளர்கள் அனைவரும் அமர்நாத் அவர்களுக்காக குரல் கொடுக்காதது ஏன் என்றேன்?

உண்மை அறிந்தவர்கள் சுயநலவாதி யாக இருப்பதால் தான் இந்த நிலமை என்றார்.

ஒன்றும் அறியாத நாங்கள் குரல் கொடுப்பதை விட நீங்கள் ஆதாரங்களோடு குரல் எழுப்பினால் உங்கள் பின் அனைவரும் போராடுவார்களே என்றேன்....போராடிக்கொண்டே தான் இருக்கிறோம் எல்லாம் அரசியல்.....

இப்படி உண்மை அறிந்தும் மௌனமாய், சுயநலமாக இருப்பது தமிழினத்திற்கு செய்யும் துரோகமில்லையா என்று எனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன்........

ஆய்வாளர்கள் மனது வைத்தால் முடியும்....
வித்தியாசமான பயிற்சி தான்.....கலைப் பண்பாட்டு பயிற்சி.இரண்டாம் நாள்.

 தஞ்சாவூர் பெரிய கோவில், சரஸ்வதி மகால் களப்பயணம்.

எத்தனை முறை பார்த்தாலும் பிரமிப்பையே தரும் தஞ்சாவூர் பெரிய கோவில்...
எந்த பொறியியல் கல்லூரியில் படித்து இருப்பார்கள்.
இப்பதான் தரம் குறைவான கல்வி  தருகின்றோமா...

100ஆண்டுகள் வரை வாழும் வன்னி மரம்....

1000 ஆண்டுகளுக்கு மேலான கோவில்.

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைக்குள் இருக்கும் மண் தன்மை போல் தான் இத்தனை ஆண்டுகள் ஆகியும் கோவில் தன் நிலை மாறாமல் உள்ளது ....என்ற செய்தி.

பட்டு போல் மென்மையாக இருக்கும் சரஸ்வதி மகால் சுவர்கள்....அதை பாதுகாக்காமல் தங்கள் பெயர்களை கீறி எழுதியுள்ள மக்கள்.....
அங்கு உள்ள அருங்காட்சியகம்....
பல்லாண்டுகளுக்கு முன்பே மனித உடல்.விலங்குகளின் உடல்....அறுவை சிகிச்சை பற்றிய தகவல்கள்... பின்னர் ஏன் மருத்துவம் தமிழில் இல்லாது போனது?

அரிதான கலை பொருட்கள்....

தஞ்சாவூர் மாவட்டத்தின் சிறப்புகளை எடுத்துரைக்கும் ஒளி ஒலி காட்சி....

சரபோஜி மன்னரின் தர்பார் மண்டபம்....

கண்கள் போதவில்லை....



























...

Tuesday 19 September 2017

லீவு வேண்டாம்

அம்மா அடிச்சிக்கிட்டே இருக்காங்க..
வீட்ல இருக்க பிடிக்கல...
ஏழாம் வகுப்பு மாணவி ...கலைவாணி..
ஏன் அடிக்கிறாங்க?
விளையாடும் பொழுது கடைக்கு அடிக்கடி போகச் சொல்றாங்க நான் போலன்னா அடிக்கிறாங்க....
அப்படியா.... ஓகே இனி நீ கடைக்கு போக வேண்டாம்..அம்மாவே கடைக்கு போகட்டும்.நீ அம்மாவோட வேலைகளை மட்டும் செய்தால் போதும்.
பசங்களா அம்மா என்னென்ன செய்வாங்க?
காலைல வாசக்கூட்டி கோலம் போடுவாங்க ....
ஓகே நீ இனி செஞ்சுடு...
பாத்திரம் தேய்ச்சி..அடுப்பு மோடைய தொடச்சி டீ போடுவாங்க...
சரி அதையும் செஞ்சுடு...
வீட்டக்கூட்டி காலப்பலகாரம் செய்வாங்க
ஓகே அதயும் செஞ்சிடு..
ஒரு மாதிரியாக என்னைப்பார்த்துக்கொண்டே.....நின்ற கலைவாணியின் முகம் ..என்னடாஇதுன்னு....
சரிடா அப்பறம் என்ன செய்வாங்க....
மறுபடியும் பாத்திரம் தேய்ச்சி,துணி துவச்சி ,கடைக்கு போய் காய் வாங்கி ....மத்தியானத்துக்கு சமைப்பார்கள்...
சரி அதையும்.... நான் சொல்றதுக்குள்ள ..... அம்மா நான் கடைக்கே போய்டுறேன்னு சரண்டர் ஆன குழந்தைய....
சபாஷ் வாவழிக்கு என்றேன்......
இன்னும் நிறைய பேசனும்....குழந்தைகளிடம் நேற்று மாலை குழந்தை நேயப்பள்ளி ஒருங்கிணைப்பாளர் தோழர் கவிதா மற்றும் தோழர் புதுகை செல்வா இருவரும் பள்ளிக்கு வந்து குழந்தைகளின் உரிமைகள் குறித்து பள்ளியில், வீட்டில் , சமூகத்தில் என்னென்ன என்று கலந்துரையாடும் முன் நடந்த உரையாடல்....
மிக அருமையாக இருவரும் மாணவிகளிடம் உரையாடினார்கள்.
தலைமையாசிரியரிடமும் குழந்தைகளின்,ஆசிரியர்களின் உளவியல் சிக்கல்களை கேட்டு அறிந்தனர்....
வேறு ஒரு தளத்திற்கு .....பாதை அமைத்து உள்ளனர்.....
கல்வியாளர் வசந்தி தேவி அவர்களின் கனவு குழந்தை நேயப்பள்ளியாக ஒவ்வொரு பள்ளியும் மாற்ற வேண்டும்.....தடம் பதிப்போம்.....





தங்கச்சி வீட்டுக்கு வாங்க

வாவ் அசத்தல் "தங்கச்சி வீடு."
புதுக்கோட்டை சாந்தநாதபுரம் 3ஆம் வீதியில்...s s hospital சாலையில்..
புதிய பேருந்து நிலையம் எதிரில்..
இனி புதுக்கோட்டை பெண்கள் கொஞ்சம் சமையலறை தாண்டி புத்தகம் படிக்கலாம்... சமூகப் பணிகளில் ஈடுபடலாம்.
சமையலறையில் இருந்து விடுவிக்கிறார் சகோதரி ரேகா (புதுகை செல்வா).
இதமான வரவேற்பில்....
"தங்கச்சி வீடு"
சாதம் நீங்க குழம்பு நாங்க என அழைக்கிறார்கள்....
இருவர் தாராளமாக சாப்பிடக்கூடிய வகையில்....
சுவையான அசைவ,சைவக்குழம்புகள் மணக்கிறது....வீட்டுத்தயாரிப்பில்.....
அசைவம்
மட்டன் குழம்பு-1 கப் -₹70
நாட்டுக்கோழி கோழிக் குழம்பு1கப்-₹60
மீன் குழம்பு-1கப்-₹50
கருவாட்டு குழம்பு1 கப்-₹40
நண்டு குழம்பு 1கப்₹40
-----+++++++----
கிரேவி
சிக்கன் கிரேவி1கப்-₹50
இரால் கிரேவி 1கப்-₹50
நண்டு கிரேவி1கப்-₹50
_----------------
சைவம்
சாம்பார்1கப்-₹20
வத்தக்குழம்பு1கப்-₹20
ரசம் 1 கப்-₹10
கூட்டுப் பொரியல்1கப்-₹10
வறுவல்1கப்-₹10
மோர்.1கப்-₹10
--------------
இதற்கு மேல் வேறென்ன வேண்டும்......
மனம் நிறைந்த வாழ்த்துகள் மா.. மென்மேலும் வளர..

இன்று இரவு பேலியோ உணவாக செக்கு எண்ணெயில் தயாரிக்கப்பட்ட சிக்கன், இறால் கிரேவி ..... வாங்க சாப்பிட....







Saturday 16 September 2017

மகளிர் மட்டும்

மகளிர் மட்டும்

பெண்களின் உலகு பேரழகு நிறைந்ததாக காட்சி படுத்தியதற்கு ஒரு கைதட்டல்.

தோழமைகள் இழந்த பெண்கள் மீண்டும் சந்திக்கும் தருணங்கள் வீணையின் இசையாய்....
சாரலாய் நம்மை நனைக்க வைக்கிறது.
முகநூல் மூலம் இணைக்க வைக்கும் ஜோதிகாவின் அட்டகாசமான நடிப்பில் இளமை துள்ளுகிறது.

புடவையும் நகையும் சுதந்திரமில்லை என்பதை பெண்கள் உணரும் காலம் விரைவில் வரவேண்டும்.

குடும்பம் பெண்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கி ஒரு நோயாளியாக ஆக்கிவிடுவதை பல வீடுகளில் காண்கிறோம்.

பட்டாம்பூச்சி யென பறந்து திரியும் பெண்கள் திருமணத்திற்கு பிறகு விட்டில் பூச்சியாய் மாறி தன் சுயத்தை அழித்து கொள்வதை அழகாக காட்டியுள்ளனர்.

ஆணாதிக்க சமூகத்தில் இப்படி எல்லாம் சிந்திக்க ,பெண்களை முழுமையாக உணர்ந்தவர்களால் தான் முடியும்.

தன் தனித்துவத்தை இழந்த பெண்களே தியாகிகளாக குடும்ப குத்துவிளக்குகளாகப் போற்றப்படுகின்றனர்.

அரிதாக சில பெண்கள் இன்னும் பள்ளி நட்பை விடாது .... தொடர்கின்றனர்.

பெண்களுக்கு அவர்களுக்காக மட்டும் சில தினங்களை ஒதுக்கி கொடுத்தால் வாழ்க்கை இனிமையானதாக மாறும் என்பதை மறுக்க இயலாது.

ஒரு ஏக்கப்பெருமூச்சோடு படத்தைப் பார்த்த பெண்கள் வெளியேறியதைக்கண்டேன் .

ஊர்வசி ,பானுப்ரியா , சரண்யா.வாழ்ந்துள்ளனர்.அவர்களுடன் நடித்த ஆண்கள் இன்னும் பேத்தி வயது பெண்களுடன் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கையில்....
பெண்கள் தங்கள் உடல் நலத்தை கூட கவனிக்காது குடும்பத்தில் மூழ்கி தன்னை பற்றி உணரும்போது உடல்.மனம்.சுயம் எல்லாம் இழந்ததை உணர்கையில் சுயபச்சாதாபம் கொள்வது உளவியல் சிக்கல்.

36 வயதினிலே ஜோ வா இது..... மீண்டும் குஷி ஜோவாக மிளிர்கிறார்.

அழகென்பது உடல் சார்ந்தது இல்லை என்பதை பெண்களும் ஆண்களும் உணரும் காலம் எப்போது?

ஒளிப்பதிவு மிகச் சிறப்பு.

80 களில் இன்ஹேலர், பரோட்டா தமிழகத்தில் வரவில்லை என்று நினைக்கிறேன்.

புறம் மறுக்க பட்ட பெண்கள் வெளிக்காற்றை சுதந்திரமாக சுவாசிக்கும் காலம் எப்போது என்று கேட்க நினைக்கையில் ஹாசினியின் நினைவு முள்ளாய் மனதில்.

பெண்களுக்குஇந்த பூமியில் வேறு எந்த விலங்குகளாலும் ஆபத்தில்லை ஒன்றைத் தவிர.........

ஆனாலும் அவள் ஆதிசக்தியாக உருவாகி வருவதை தடுக்க இனி யாராலும் முடியாது.


வாழ்த்துகள் மகளிர் மட்டும் குழுவினருக்கு.

Thursday 14 September 2017

மதிப்பிற்குரிய நீதியரசர் அவர்களுக்கு...

மதிப்பிற்குரிய நீதியரசர் அவர்களுக்கு..... அரசு பள்ளிகளில் எத்தனை மனநலம் குறைவாக பாதிக்கப்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர்.தெரியுமா.

எங்கள் பள்ளியில் அப்படிப்பட்ட மாணவிகளை அன்பு ஒன்றின் மூலமாக வே....அவளை முன்னேற்றி உள்ளோம் தெரியுமா?

.பல வீடுகளில் இப்போது தான் முதல் தலைமுறையே பள்ளியின் வாசலை மிதிக்கின்றனர்.

தங்கள் குழந்தைகளை மதிய உணவிற்காக வும்.பாதுகாப்பிற்காகவும் மட்டுமே அனுப்பும் பெற்றோர் எத்தனை பேர் தெரியுமா?

இன்னும் பலருக்கு கல்வியின் முக்கியத்துவம் அறியாதவர்களின் குழந்தைகளுக்கு நாங்கள் கற்றுக் கொடுக்கிறோம்.

நாட்டின் சிறந்த மனிதர்களாக ஆக்கும் முயற்சி எங்களுடையது.

மதிப்பெண் நோக்கி ஓடத்துவங்கும் பொழுது எத்தனை குழந்தைகள் விரட்டி அடிக்கப்பட்டு எங்களை நாடுகின்றனர் தெரியுமா?

படித்த பெற்றோரின் கல்வியின் முக்கியத்துவம் தெரிந்த பெற்றோரின் குழந்தைகளும்
வாழ்க்கையே பிரச்சினையாக இருக்கும் பெற்றோரின் குழந்தைகளும் ஒன்று அல்ல.

எஙகளுக்கு பள்ளி ப்பணி மட்டுமல்ல..... அரசுப் பணி அத்தனைக்கும் ஆசிரியர்கள் தான் செய்ய வேண்டும்.

ஒரு குழந்தை வளர்கையில் கண்டிக்காமல் இரு என்று கூறுவது அந்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கும் என்பது தெரியுமா?

இப்போது இருக்கும் சமூகச்சீரழிவை உண்டாக்கும் பல காரணிகளோடு ஒத்துழைக்காத பெற்றோரின் குழந்தைகளை வைத்து கொண்டு நாங்கள் படும் வேதனையை என்னவென்று கூறுவது?

நாங்கள் மதிப்பெண் வாங்கும் இயந்திரங்களை உருவாக்கவில்லை.
அடிமட்ட மக்களின் பிரச்சனையில் கை கோர்க்கிறோம்.

ஹாசினி பேசுகிறேன்...

ஹாசினி பேசுகிறேன்.

அம்மா உங்கள் மகளை இழந்து வருத்தப்பட வேண்டாம்.தினம்தினம் பெண் குழந்தைகளை கொடுமையாக வன்முறை செய்யும் இந்த நாட்டில் இருந்து விரைவில் இறந்ததை எண்ணி நிம்மதி அடையுங்கள்.

உங்களிடம் பேசனும் போலருக்கு அம்மா.

என்னை அவன் தூக்கி சென்ற போது ஏனோ அடிவயிற்றில் மின்சாரம் தாக்கியது போல் உணர்ந்தேன்.
அவன் படுத்திய பாடுகளை ..... எப்படி கூற அம்மா....

அவன் என் உடல் எங்கும் கடித்தான்.எப்படி வலித்தது தெரியுமா?.. வலியில் கத்தியபோது வாயில் துணியை வைத்து அடைத்து விட்டான்.அண்ணா வேண்டாம் என்று கதறிய போதும் விகாரமான முகத்தை என் உடலெங்கும் தேய்த்தான்.
அம்மான்னு துடித்து உதைத்த என் கால்களை விரித்து அய்யோ அம்மான்னு கண்ணீர் விட்டு கதறிய பின்னும் என் பிறப்பு உறுப்பில்.......
வீடெங்கும் சிதறிய ரத்த துளிகளை துடைத்தான்.மயங்கிய என்னை அய்யோ இன்னும் என்ன செய்வானோ என்று மனம் பதறியது....

வீட்டில் இருந்த சாக்கை எடுத்து வந்து அதில் என்னை அமுக்கினான்....நீட்டிய கால்களை உடைத்து கட்டினான்....இப்பவாவது என் அம்மா கிட்ட விட்டு விட மாட்டானான்னு ஆசைப்பட்டேன் மா..
ஆனால் என் மீது சில்லென்று தண்ணீர் போல் நனைத்தது.....அய்யோ பெட்ரோல் வாசம் வருதே அம்மா நான் உன்னை இனி பார்க்கவே மாட்டேனா.... எறிந்து கொண்டே துடித்தேன் மா.ஏனோ ஒரு நாள் நான் கம்பிமத்தாப்பில் சுட்டுக்கொண்டபோது நீ பதறி அழுத நினைவு வர கருகி கருகிப் போனேன் மா.

கடைசிவரை அப்பாவை பார்க்கத் தோணவில்லை.... அம்மா.

Wednesday 13 September 2017

ஆசிரியர்கள் போராட்டம் ஏன்?

ஏன் போராட்டம்?
  88 இல் நான் பணியில் சேர்ந்த போது ₹610 மட்டுமே ஊதியம்.
ஒரு மிதிவண்டி வாங்க கூட கடனில் தான் வாங்க வேண்டிய நிலை.நான் பணி புரிந்த அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிறுவளூர் பள்ளிக்கு வீட்டில் இருந்து பேரூந்து நிலையத்திற்கு ஒரு கி.மீ தூரம் நடந்து வந்து பின் பேரூந்தில் கீழப்பழுவூர் வந்து அங்கு இருந்து பேரூந்து இல்லையெனில் சிமெண்ட் ஆலைக்குக்கல் ஏற்றிச்செல்லும் லாரியில் ஏற முடியாமல் ஏறி புதுப்பாளையம் என்ற ஊரில் இறங்கி அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து 9.10 மணிக்குள் சிறுவளூர் ஊ.ஒ.து.பள்ளிக்கு சென்று.மாலை அதே போல் இரண்டு கிலோமீட்டர் நடந்து லாரி அல்லது பேரூந்தில் ஏறி கைகாட்டி என்ற இடத்தில் இறங்கி அங்கிருந்து அரியலூருக்கு வர வேண்டும்.
தாமதமாக எப்போதும் சென்றதில்லை...அந்த ஊரில் கடைகள் எதுவும் கிடையாது என்பதால்.... மாணவர்களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் மக்களுக்கு தேவையான மருந்துகள் வாங்கிச் செல்வது வழக்கம்.
கிராமத்தில் பணி புரியும் ஆசிரியர்கள் நிலை மிகக் கொடுமை.
மழையூரில் பணி புரிந்த போது கழிப்பறை இன்றி வீடு வீடாக சென்று கொடுமை.
ஆசிரியர்கள் போராட்டத்தால் ஊதிய உயர்வு கிடைத்தது என்பது உண்மை.
பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் மூலம் ஊ.ஒ..பள்ளிகள் பஞ்சாயத்து கீழ் வருவதை தடுக்க தில்லியில் ஜந்தர் மந்திர் என்ற இடத்தில் 1993 இல் நடந்த போராட்டத்தில் மாண்புமிகு நரசிம்ம ராவ் அவர்கள் ஆட்சியில் கண்ணீர் புகை க்குண்டு வீசிய போதும், இந்தியா முழுவதும் திரண்ட ஆசிரியர்கள் கொதித்து எழுந்து போராடி வெற்றி பெற்றோம்...

இன்னும் தில்லி ஜந்தர் மந்திர் போராட்டத்தின் போது  அடைத்து வைத்த கதவை உடைத்து எறிந்து சென்ற போராட்ட வீரர்கள் கண்ணீர் புகைக்குண்டுக்கு பயப்படாமல் முன்னேறிய காட்சி அடிக்கடி கண்முன் தோன்றும்.
எங்கள் முன்னோர்கள் போராடி பெற்ற பலன்களை இழந்து விடக்கூடாது என்ற உண்மையான தவிப்பில் களம் இறங்கி உள்ளோம் GPF இல் உள்ளவர்கள் CPS ஆல் பாதிக்க பட்ட சகோதர சகோதரிகளுக்காக...

சகோதரர் வைகறை இறந்த பொழுது அந்த குடும்பம் எந்த வித வருவாயும் இன்றி தவித்த நிலையில் அவர்களுக்கு உதவி செய்ய என்ன பாடுபட்டோம் என்று எங்களுக்கு தான் தெரியும்.
6 வயது சிறுவன் தன் தந்தையை இழந்து பொருளாதாரமும் இல்லாமல் அவர் மனைவி எப்படி துடித்திருப்பார்.

இது போல் எத்தனை சகோதர சகோதரிகள் துயரத்தில் உள்ளனர்.
ஐந்து வருடங்கள் மட்டுமே பதவியில் இருந்து தமிழ் நாட்டை சுரண்டி சேர்க்கும் எம்.எல்.ஏ., எம்.பிக்கு ஊதிய உயர்வு ஓய்வூதியம் வழங்கும் பொழுது...
ஆசிரியர்கள் எந்த விதத்தில் குறைந்து போனார்கள்....
சமூகப் பிரச்சினைகளுக்கு போராடவில்லை என்ற வருத்தம் எனக்கும் உண்டு.இருந்தாலும் இன்று அவர்கள் ஊதியத்தில் பிடித்து வைத்து உள்ள 16000 கோடி ரூபாய் எங்கே என்று கேட்கும் உரிமை அவர்களுக்கு உண்டு....

ஆசிரியர்களைக்குறை கூற நினைப்பவர்கள் முழுமையாக தெரிந்து கொண்டு கூறுங்கள்...
இதோ இன்று நீட் தேர்வு எதிர்ப்பு க்குரல் எழுப்பி உள்ளனர்.....

இனி சமூகத்திற்காக போராடவும் களம் இறங்குவார்கள்.....













இந்த
ஆசிரியர்கள் போராட்டம் வெல்லட்டும்....நீட் தேர்வு அழியட்டும்...