World Tamil Blog Aggregator Thendral: May 2015

Sunday 31 May 2015

இன்று ஆய்வக உதவியாளர் தேர்வு 31.05.15

இன்று ஆய்வக உதவியாளர் தேர்வு 31.05.15

காலை 10 மணி முதல் 12.30 மணிவரை நடந்தது.பறக்கும் படை பணியில் நான் ...எனக்கு கொடுத்த அறைகளை கண்காணிக்கும் பணியில் இருந்தேன்.
மாடியிலுள்ள வகுப்பறையில் குரங்குகள்  நுழைந்து கழிப்பறையாய் மாற்றியிருந்தது .அதை துடைத்து எடுத்து பின் தேர்வர்களை எழுத கூற வேண்டியிருந்தது..வயது வித்தியாசமின்றி 55 வயது உடையவர் கூட தேர்வு எழுதினார்.
காலை 10.10க்கு ஒருவர் வேகமாக உள்ளே  நுழைந்தார்.கண்கள் இரண்டும் சிவக்க உடலில் துர்நாற்றமடித்த நிலையில் தேர்வு எழுத வந்தார்...காலையிலேயே சிறந்த குடி குடிமகனாய்...
கொஞ்ச நேரத்தில் அவருக்கு வேர்த்து வேர்த்து வடிய  மின் விசிறியை போடுங்க என்றார்...அதை போட்டதும் மின் பொறிகள் பறக்கத்துவங்கின.விடுமுறையில் தோல்வி அடைந்த மாணவர்கள்  கோபத்தில் மின்சார ஒயர்களை உருவி எரித்து...பைப்புகளை எல்லாம் உடைத்து சேதப்படுத்தி இருந்தனர்.அரசுப்பள்ளிதானே..

வியர்வை தாங்காமல் வெளியே வந்து அமர்ந்தார்...பின் வந்து கொஞ்சம் எழுதி விட்டு என்னால முடியல வெளியே போறேன்னார்...அப்படி நடுவில் விடக்கூடாதென்பதால் , அங்குள்ள பெஞ்சில் படுத்துக்கொண்டார்..அருகிலேயே போக முடியாத படி மதுவின் நாற்றம்....திடீரென அங்கேயே வாந்தி....கடகடவென ...

 அறை கண்காணிப்பாளர் ,நான் ,தேர்வு மைய அதிகாரி,காவலர்...இத்தனை பேராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை..நல்ல குறட்டை சத்தத்துடன் தூங்கினார்.முன் பின் அமர்ந்திருந்தவர்கள் வாந்தியின் நாற்றத்தில் எழுத முடியாது தவித்தனர்.பின் அவர்களுக்கு இருக்கையை சற்று தள்ளி கொடுத்தோம்.காவலர் வந்து அவரை புகைப்படம் எடுத்ததும் ஏன்ன்ன்னு திடுக்கிட்டு விழித்தார். மறுபடி தேர்வு எழுதும் இடத்தில் வாந்தி...28 வருட ஆசிரியப்பணியில் இதையும் சந்திக்க வேண்டிய கொடுமை.யாரை நோவது...தேர்விற்கு வரும்போதும் குடித்து விட்டு வந்தவரை ஒன்றும் செய்ய முடியவில்லை.

நாளை பள்ளிக்கு வரும் மாணவர்கள் இந்த நாற்றத்தை சகித்து கொண்டு கல்வியைத் தொடரவேண்டும்.

Saturday 30 May 2015

30.05.15.ஆலங்குடி கலை இலக்கிய இரவு

30.05.15 இன்று நடந்த ஆலங்குடி கலை இலக்கிய இரவில் கவிச்சரம் கவிதைகளில் என் கவிதைகள்


மௌன விரதம்
முடிவுக்கு வந்தது
வகுப்பறைக்கு

-------------
உலகை சுற்றி பார்க்க
ஆசை என்றேன்-வா
டீக்கடை வைக்கலாம்
என்கிறான்.

-------------------------------------

முத்தம் ஒன்று கேட்டாள்
கமல் முத்தம் இதழோடு இதழாக
ரஜினி முத்தம் காற்றில் பறந்து
அஜீத் முத்தமோ ஆசைக்காட்டி மகிழும்
யார் முத்தமாய் முத்தமிட
மெல்ல நெருங்கியவனிடம்
உன்மத்தமானவனே
உன்முத்தமே போதுமெனெ வெட்கித்தாள்
----------------------------------


வேதனை

ஒளியிழந்தவர்களை
ஒடுக்கி
ஒளி இழந்தது தமிழகம்...

Thursday 28 May 2015

போய் வா பவித்ரா

போய் வா பவித்ரா..

என்னிடம் அவள் வந்த போது நன்கு மஞ்சள் தேய்த்து குளித்த முகத்தில் பொட்டு வைத்து திருநீறு வைத்து இரண்டு குடுமி போட்டு அதில் நிறைய பூ வைத்து இருந்தாள்.வாம்மா என்றேன் தலையை மட்டும் நீட்டி அச்சத்தில் உடலை தன் அம்மாவிற்கு பின்புறம் மறைத்துக்கொண்டு நின்றாள்.எல்லோரையும் விட கொஞ்சம் வித்தியாசமானவளாக தெரிந்ததால் முதல் பெஞ்சில் என் மேசைக்கு அருகில் அமர வைத்தேன்..

எதற்கெடுத்தாலும் முந்திக்கொண்டு நான் சொன்னதையே சொல்வாள் ...குழந்தைகளிடம் விசாரித்த போது அவ அப்படித்தான் மிஸ்.என்றனர்.அவளுக்காக சாக்லேட் எப்போதும் மேசையில் இருக்கும் என்பது தெரிந்ததால் சொன்னதெல்லாம் செய்வாள்.சில நேரம் தமிழ் வகுப்பில் கணக்கு அல்லது அறிவியல் புத்தகத்தை எடுத்து கொண்டு இருப்பாள்.ஏன்மா என்றாள் நான் இதப்படிக்கிறேன் என்பாள்.படிப்பு என்பது அவளின் விருப்பமாய் இருந்தது.

Tuesday 26 May 2015

இதுவா பெருமை?

இதுவா பெருமை?

450 மதிப்பெண்களுக்கு மேல் உள்ளவர்கள் மட்டும் உள்ளே நுழைய அனுமதி..

எங்க பள்ளியிலேயே படித்திருந்தாலும் 450 க்கு மேல இருந்தா வாங்க...

எல் கேஜி முதல் 9 வரை எங்க பள்ளியில படிச்சாலும் அவன் சரியா படிக்கல டிஸி வாங்கிட்டு போயிடுங்க.

பீஸு கட்டலன்னா உங்க குழந்தைய டார்ச்சர் பண்ணி அவமானம் செய்வோம்.முடியலன்னா போயிடுங்க.

நாங்க டியூஷன் மாதிரி கேள்விய மனப்பாடம் தான் பண்ணச்செய்வோம்.அவனுக்கு புரிந்தாலும் புரியலன்னாலும் கவல இல்ல..

நாங்க முதல் மதிப்பெண் எடுத்தோம்னு விளம்பரம் பண்றத பாத்து பணத்த கொட்ட பெற்றோர்கள் தயாரா இருக்காக.

அவங்களே அவங்க குழந்தைய படிக்க வச்சுடுவாங்க...

அவங்க காசுல கட்டிடம் கட்டி அவங்களயே உள்ள விடாம அவமானப்படுத்துனாலும் பொறுத்துப்பாங்க...ஏன்னா அவங்க குழந்த எங்க கையில....

தடுக்கி விழுந்தா தனியார் பள்ளி நடத்த அனுமதி கொடுத்துட்டு அரசு பள்ளியில் குழந்தைகள் இல்லன்னு மூடுவது சரியா.

மிகக்குறைவான மதிப்பெண்கள் வாங்கிய குழந்தையை படிக்க வைத்து மதிப்பெண்கள் பெற பாடுபட்ட அரசுப்பள்ளி ஆசிரியரைப்பாராட்டாமல்..100%மதிப்பெண் பெற்றுவிட்டது என தனியார் பள்ளிகளை போற்றுவது முறையா?

படின்னுகூட சொல்லாத பெற்றோரைக்கொண்ட குழந்தைகளை பாராட்ட வேண்டாமா?

Monday 25 May 2015

36 வயதினிலே

36 வயதினிலே
-------------------------------
அன்பு என்ற போர்வையில் அடிமையாகி ,
குடும்பம் என்ற வலையில் சிக்கி தன்னைத்தொலைத்து ,
தனக்கென எந்த குறிக்கோளும் இல்லாத,
குடும்பத்தினரால் ஒன்றும் தெரியாதவள் என மட்டம் தட்டப்படும் மனைவியானவள்
ஒரு கட்டத்தில் தன்னைத்தொலைத்துவிட்டதை அறியும் தருணம்
அவளை மரணத்தின் வாயிலுக்கு தள்ளி,
எல்லையற்ற சுய பச்சாதாபத்தை உண்டாக்கி ,
தாழ்வு மனப்பான்மையை அதிகரிக்கையில் உண்மையிலேயே தான் அப்படித்தானோ என சிந்திக்க வைத்து விடுகின்றது.

இல்லை உனக்குள் புதைத்தவளை வெளிக்கொண்டு வாருங்கள்.சுயமரியாதை உடைய பெண்ணாக ,குடும்பத்தினரால் மதிக்கப்படும் பெண்ணாக மலருங்கள் எனக்கூறுவதாய்..அமைந்துள்ளது 36 வயதினிலே.
ஜோதிகாவை பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல.
எளிமையான அழகு ...ஆடம்பரமில்லாத தன்னம்பிக்கை மிளிரும் தன்மை.
அவசியம் பெண்கள் பார்க்க வேண்டிய படமாய்...
மனைவியை மட்டம் தட்டும் ஆண்கள் பார்க்க வேண்டிய படமாய்...
ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாய்...
உணவில் கலக்கும் விசத்தை உலகிற்கு வெளிக்காட்டுவதாய்....
இனியாவது நகையும் புடவையும் தான் பெண்களுக்கு தெரியும் என்ற கருத்தை மாற்றுவதாய்...பெண் குழந்தைகளை...வளர்ப்போம்...

வாழ்த்துகள் ஜோதிகா...மீண்டும் உங்களின் வருகைக்கும் சமூகத்திற்கு தேவையான கருத்துகளைத்தந்த பாத்திரத்தில் நடித்தமைக்கும்

Sunday 24 May 2015

விருந்தாளி

வீட்டுக்கு வந்த அழையா
விருந்தாளி...கேளாமல்
தனக்குரிய இடம் தேடி
தன்னிஷ்டமாய் அலைய
சரசரவென ஓடிவிளையாட
சட்டென்று கோவம் வந்தது.
சற்றும் கவலையின்றி
தன்னிச்சையாய் அலைவதை
தடுக்க முடியாத இயலாமையில்
தவித்தவளின் கவலை நீக்க
 படமெடுத்த தலையில்
படாரென்று அடித்து நசுங்கிய
முகத்துடன் அள்ளிச்சென்றார்
எதிர்வீட்டு சித்தாள்...
அச்சத்தால் அடித்து விட்ட
சோகம் மனதில்

Saturday 23 May 2015

அண்ணன் மகளின் திருமணத்தில்...


பல வருடங்களுக்குப்பின் அண்ணன் மகளின் திருமணத்தில் சொந்தங்கள் அனைவரும் ஒன்று கூடினோம்.கலகலன்னு குட்டீஸ்களின் லூட்டியில் பாவம் மாப்பிள்ளை பயப்படாத மாதிரியே காட்டிக்கொண்டார்.

அக்காவுடன் விருந்துக்காக வடை சுட்டுக்கொண்டிருந்த போது ஒரு வாண்டு மெல்ல வந்து பெரீம்மா எனக்குன்னு கை நீட்டியது.சத்தம் போடாமல் இங்கேயே சாப்பிடுடா..எல்லா குட்டீஸும் வந்துட்டா அப்றம் பரிமாறுகையில் பத்தாதுடான்னு கெஞ்சிய போது சரிசரின்னு தலையாட்டிவிட்டு கடைசி வடை சாப்பிடும் போது ஓடி எல்லாருக்கும் காட்டி விட்டு போய்ட்டான்.அவ்ளோ தான் பின் வந்த எல்லோருக்கும் தனியா தனியா கொடுக்க வேண்டியதாச்சு.

கலந்த கூல்டிரிங்ஸ் எல்லாம் காலி பண்ணிட்டு மெல்ல ஒண்ணு தலையை நீட்டி அத்தை உங்க பங்க குடிச்சிட்டீங்களான்னு வந்து வாங்கிட்டு போயிடுச்சு
.

பத்து குட்டீஸுக்கு மேல் அதிர்ந்தது வீடும் மண்டபமும்,மகிழ்வில்மனமும்.

சிறுவயதில் செய்த செயல்களைக்கூறி ஒருவருக்கொருவர் வாரிக்கொண்டு...தூங்கியவளை எழுப்பி 1 மணிக்கு டீ கொடுத்து பேசிக்கொண்டிருப்போம் வாடி என உரிமையோடு அழைக்கும் உறவுகள் மனதிற்கு இனிமைதான்.

நடுவில் உள்ள குட்டி கதிரவன் எனக்கு செல்போனில் போட்டோவில் எப்படியெல்லாம் மாற்றம் செய்யலாம் என கற்றுக்கொடுத்தபோது வியந்து கற்றுக்கொண்டேன்.எவ்ளோ விசயங்கள் குழந்தைகளுக்குத்தெரியுது என.

மனம் நிறைய குழந்தைகளின் சேட்டைகளைச் சுமந்து வந்துள்ளேன்.காது வலித்தாலும்,கத்தி கத்தி தொண்டை நொந்தாலும்,அளவிற்கு மீறிய சேட்டையை பொறுக்க முடியாமல் கோபித்தாலும் குழந்தைகள் மனதில் மணம் வீசிக்கொண்டிருக்கின்றனர்.

Friday 22 May 2015

kaaththiruppil

விழாவிற்கு சென்றவளுக்காக
காத்திருப்பில் சிதறிய
நாளிதழ்கள்.
தொட்டவுடன் வெட்கத்தில்
 சரசரத்து சிரித்து
மகிழ்ந்தன...

Saturday 16 May 2015

பிரியங்கா

புதுகை கல்லூரியில் படிக்கும் என்  முன்னாள் மாணவி பிரியங்காவின் பிரியத்தில் நான்.....அவளின் திறமை கண்டு வியக்க வைக்கின்றாள் அடிக்கடி....

நேற்று அவள் அனுப்பிய படங்களில் ஒன்று.

மூவராய் தோழிகளுடன் இருப்பாள்.அவர்களின் நட்பு பெருமைக்கொள்ளும் ஒன்றாய்....

ஒரு மாணவி தவறு செய்ய, எப்படிம்மா உங்க கிட்ட படிச்ச பொண்ணு தப்பு செய்யலாம் என என்னிடம் சண்டை போட்டவள்.

எந்த வேலையும் செய்யத்தயங்காதவள்.ஒரு நாள் பொருட்காட்சியில் ஒரு ஸ்டாலில் நின்று வணக்கம் வைத்தாள்.பொருளில்லை என்றாலும் அன்பான மனதால் பணக்காரியானவள்.

மாறாத அன்பு வைத்த என் மகளாய் ஆனவளுக்கு என்ன செய்ய முடியும் வற்றாத அன்பை தருவதை விட..

முள்ளிவாய்க்கால்


வெயிலை உறிஞ்சிய மழை
வெக்கை துடைத்து மகிழ
கவிந்த வானம்
கட்டிலில் தள்ளி மகிழ
புட்களின்  இசையில்
 புலரும் காலை மகிழ
இனிமைதான் உலகம்
எண்ணிய கணத்தில்
முள்ளாய் குத்தியது
முள்ளிவாய்க்கால்Friday 15 May 2015

பொன்னியின் செல்வன் -கல்கி

பொன்னியின் செல்வன் -கல்கி

நாடகம் மதுரை லெக்‌ஷ்மிசுந்தர ஹால் 15.5.15

எல்லோரும் பொன்னியின் செல்வன் நாவலைப்பற்றி பேசும் பொழுது சிறு வயதில் சாண்டில்யன் நாவல்களையே அதிகம் படித்த எனக்கு, என்ன அதில் பெரிதாக இருக்கப்போகின்றது என்ற நினைவு...

 2012 ஆம் ஆண்டில் என் வாழ்வின் மிகச்சோதனையான தருணத்தில் இந்நாவல் என் உயிரை எனக்கு மீட்டெடுத்து, தனக்குள் என்னை புதைய வைத்து நாவலின் கதை மாந்தர்களோடு என்னை கூட்டிச்சென்று ,இவ்வுலகை மறக்க வைத்து, என்னை வாழ வைத்தது என்றால் அது மிகையில்லை...

அதன் மீது ஏற்பட்ட காதலில் .....இருந்து மீளமுடியாமல் நந்தினியுடனும் ,வந்தியத்தேவனுடம் வாழ்ந்து கொண்டிருக்கையில்.....

மதுரையில் பொன்னியின் செல்வன் நாடகம் போடுகின்றார்களாம் என்று கூறி என்னிடம் ,உதவி தொடக்கக்கல்வி அலுவலராகப்பணி புரியும் தோழி ஜெயாவிற்கும் ,கல்கியின் மீது ஆழ்ந்த பற்றுள்ள ஆசிரியர் அனுசுயாவிற்கும் மற்றும் மருத்துவர் ஸ்ரீமதிக்கும் சேர்த்து 4 டிக்கெட்டுகள் தந்தார் கவிஞர் தங்கம் மூர்த்தி....ரூபாய் 2000 ஒரு டிக்கெட்டின் விலை என்றதும் கொஞ்சம் தயக்கத்துடனே வாங்கிக்கொண்டோம்...

நேற்று பார்த்து ஜெயாவிற்கு அலுவலக உயர் அதிகாரி வந்து விட்டதால் போக முடியாதோ என்ற கவலை வேறு இதில் சகோதரி அஞ்சலி மூர்த்தி மிகுந்த ஆவலுடன் எல்லோரும் போகலாம் என்று கூறியதும் ....நாடகத்தைக்காணும் கனவில்....

ஆனால் சோதனையாக சகோதரியால் வரமுடியாத சூழ்நிலையில் அவர்களின் டிக்கெட்டுகளைக்கொடுத்து[5000]ஆத்தாடி] நீங்களாவது பாருங்க என்றார்கள்...எட்டு டிக்கெட்டுகள் கைகளில் ஆனால் போக முடியாதபடி ஜெயாவின் நிலை...பணி அனைத்தையும் முடித்து கொடுத்து விட்டு தனது உயரதிகாரியிடம் சொல்லிவிட்டு அவர் ஓடி வருகையில் மணி 4.

புதுகையில் இருந்து மதுரைக்கு 2 மணி நேரப்பயணம் மதுரையில் சரியாக 5.55 க்குlலெக்‌ஷ்மிசுந்தர ஹால் நாடக அரங்கிற்குள் அமர்ந்த பின்னே தான், அப்பாடி வந்துட்டோம்னு என்று இருந்தது.

அதற்கு பின் 4 மணி நேர நாடகம் எங்களை சுருட்டி இழுத்துகொண்டது.வந்தியத்தேவன் அறிமுகக்காட்சியே அவனது வீரத்தை ,சுட்டித்தனத்தைக்காட்டிவிட்டது.......ஊர்மக்கள் கூடி நின்ற காட்சி,

நந்தினி வீரமாய், கர்வமாய்,பழி வாங்கத்துடிப்பவளாய்,இறுதியில் பாசத்திற்கு அடிமைப்பட்டவளாய்...அடடா அருமை அருமை....

பழு வேட்டரையரும்,பொன்னியின் செல்வனும்,பூங்குழலியும் ,நம்பியும்,ஆதித்த கரிகாலனும்,குந்தவையும்,சுந்தரச்சோழனும் ,கண்முன் வந்து நின்றதை இப்போதும் நம்ப முடியவில்லை..

.ஐந்து பாகங்களைச்சுருக்கி எப்படி முழு நாவலையும் தரமுடியும் என்ற எனது சந்தேகத்தை துடைத்தெரிந்து விட்டனர்...எல்லோரும் கதாபாத்திரமாகவே மாறியுள்ளதை உணர முடிந்தது .பின்னணிக்காட்சிகளும்,இசையும்,பாடலும் மனதைக்கொள்ளைக்கொண்டன.

நாடகம் முடிந்ததும் கிளம்ப மனமின்றி வந்தியத்தேவன் மற்றும் அனைவருக்கும் பாராட்டை மனதாரத்தெரிவித்து விட்டு கிளம்பினோம்..

வாழ்க்கையில் பார்த்த முதல் வரலாற்று நாடகம் என்பதால் அந்த அற்புதமான கணங்கள் ஒவ்வொன்றும் எங்களை  தனக்குள் புதையச்செய்து விட்டன.

மீளமுடியவில்லை எங்களால்...இன்னும் எத்தனை நாட்களுக்கு என்னை ஆளப்போகின்றதென தெரியவில்லை....

மனம் நிறைந்த நன்றியை கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களுக்கும் சகோதரி அஞ்சலி அவர்களுக்கும் மனம் நிறையக்கூறினோம்.


Thursday 14 May 2015

மழலை

ஆதி மொழியை
அள்ளி வீசுகின்றது
மழலை
புரியாமல்  விழிப்பவளை
எகத்தாளமாய் பார்க்கிறது....

Wednesday 13 May 2015

மழை மழை

மேகச்சிலந்தி
விரித்த வலையில்
விரும்பி சிக்கியது
புவனம்

கவியும் மேகம்
கவிதை பாடும் காலம்
கொட்டும் மழையில்
கடுகடுவென்று....

Monday 11 May 2015

இப்படியும் ஒருவர்....?

இப்படியும் ஒருவர்....?

ஏன் அய்யா ஓய்வு பெறும் போது சொல்லல...?
இதெல்லாம் எதுக்கும்மா...ன்னு அமைதியா  வீட்டுக்கு வந்துட்டாங்க...35  வருடங்களுக்கு மேல் தமிழாசிரியராகப்பணி.

இவரின் மாணவர் விழா எடுக்கின்றேன் என்றபோது பிடிவாதமாக மறுத்தவர்..

.த.மு.எ.க ச வில் தொடரும் பணி...

அறிவொளி இயக்கத்தில் மனநிறைவான பணி...

.புதுக்கோட்டை தமிழாசிரியர் சங்கத்தில் அனைவரையும் ஒருங்கிணைத்து சென்ற தன்மையான பணி...

எழுத்தாளராக,கவிஞராக,,கட்டுரையாளராக,சமூகச்சிந்தனையாளராக,பட்டிமன்ற பேச்சாளராக என பன்முகக்கலைஞராக பரிணமித்து..

.என்னை போன்ற இளம் கவிஞர்களுக்கு ஆதரவு காட்டி ஊக்கமும் உற்சாகமும் கொடுத்து அனைவரும் நேசிக்கும் ஒருவராக திகழும்

கவிஞர் நா.முத்துநிலவன் அய்யாவிற்கு

இன்று அறுபதாவது பிறந்தநாள்..

வழக்கம் போல் தன்னடக்கமாய் இருக்க...ஏன் சொல்லலன்னு சண்டை போட்டு இன்று சந்தித்து வாழ்த்து கூறி வந்தோம்...

Sunday 10 May 2015

என் அம்மா

என் அம்மா...
------------------------
அன்பின் மறுவடிவம்
ஆக்ரோஷத்தின் உச்சம்
விருந்தோம்பலில் மிஞ்சிட முடியாது

எல்லாமே உச்சமாய்
குழந்தைகளே வாழ்க்கையென
வாழாது வாழ்ந்தவள்.

இருந்த இடம் அதிரும்
இடிமுழங்கும் குரலால்.

குறையொன்றுமில்லையம்மா  உன்னருகில்
இருந்த போது...

வெறுமையில் தேடியுள்ளேன்
வாழ்வை உணர்ந்த போது
வெற்றிடமாய் நீ கரைந்தாய்...

உனை நினைக்கும் போதெல்லாம்
வீழ்கின்றாய் உப்புநீராய்.....

இல்லாதபோழ்தே தெரிகின்றது
இனியவளே உன்னருமை...

உன்னில் மீண்டும் கருவாகத் துடிக்கின்றேன்
உலகில் போதுமென்றன் வாழ்வு...

இன்று அன்னையர் தினமாம்
வாயேன் ஒரு முத்தமிட்டு அழைத்துச்செல்ல..
Friday 8 May 2015

கந்தர்வன் நூலக விழா

கந்தர்வன் நூலக விழாவில் வாசித்த கவிதை-

தலைப்பு-கார்ல் மார்க்ஸ்
------------------------------------------------------------
உலகின் தலை சிறந்த காதலுக்கான
இலக்கண நூலாய் மார்க்ஸ்-ஜென்னி காதல்

உலகின் தலை சிறந்த குடும்ப
வாழ்க்கை நூலாய் மார்க்ஸ்-ஜென்னி வாழ்வு

உயிரணைய ஜென்னியை கூட
புத்தக வாசிப்பில் மறந்து திளைத்தவரை

கந்தர்வன் நூலகத் திறப்பு விழாவிற்கு
கனிவுடன் அழைத்தேன்

மார்க்ஸை சந்திக்க வரிசையில்
தமிழகத்தலைவர்கள்.....

ஏழைத்தொழிலாளின் அண்மையையே
நாடினார் அவர்...

ஒரு வார்த்தை ஒரு சம்மதம் பெற
அத்தனைக் கட்சிகளும் ஆவலுடன்

வலதுடன் இடது சேர விரும்பி
வாய்ப்பை நாடி வாசலில்
வாலாட்டியபடி....

பெட்டியைக்காட்டி இளித்தது ஒன்று

மார்க்ஸை டாஸ்மார்க்கில்
கவிழ்ப்பேன் என ஆர்ப்பரித்து ஒன்று

உன்னதக்காதலை உலகுக்கு
உணர்த்தியரை உடலழகியிடம்
சிக்க வைக்கத் துடித்தது மற்றொன்று

பெற்ற குழந்தைக்கு தொட்டிலும்
செத்த குழந்தைக்கு சவப்பெட்டியும்
வாங்க இயலாத நாட்களிலும்
வறுமையில் வாடியோருக்காக
வாழ்நாளைக் கழித்தவர் அவர்

உழைக்காத,உழைப்பை நேசிக்காத
ஊழலில் உழன்று
உண்டு களித்து வீழ்வோரைக்
காணவிரும்பாது காற்றில்
கரைந்தார் வியர்வையின் தோழர்

Thursday 7 May 2015

100% சதவீத தேர்ச்சி-எங்கள் பள்ளி

100% சதவீத தேர்ச்சி-எங்கள் பள்ளி
------------------------------------------------------------------
சத்தியமா ஒரு வருடம் தான் பன்னிரண்டாம் வகுப்பை படித்தார்கள்..-

புதுக்கோட்டையில் உள்ள சந்தைப்பேட்டை-அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி.

2015ஆம் ஆண்டிற்கான மேல்நிலைப் பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

புதுக்கோட்டை நகரில் உள்ள அரசுப்பள்ளிகளில் 100% தேர்ச்சி பெற்ற ஒரே பள்ளியும்  இதுதான்.

முதல் மதிப்பெண் 1114 எம் .சௌமியா,

இரண்டாவது மதிப்பெண்1062 கே.இந்துமதி

மூன்றாவது மதிப்பெண் 1039 எம்.வெண்ணிலா

கணிதப்பாடத்தில்200/200 எம்.காயத்ரி

1000க்கு மேல் ஆறு மாணவிகள் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

தலைமையாசிரியர் ஆசிரியர்கள் அனைவரையும் பாராட்டி மகிழ்ந்தார்.

பள்ளி தேர்ச்சியை பாராட்டி புதுகையின் புகழ் பெற்ற மருத்துவர் எஸ்.இராமதாஸ் அவர்கள் மற்றும் சத்தியராம் ஜுவல்லரி இராமுக்கண்ணு அவர்களும் ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து ,இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

எஸ்.வி.எஸ்.பார்த்திபன் அவர்கள் இனிப்புடன் வாழ்த்துகளையும் தந்து மகிழ்வூட்டினார்.

ஆசிரியர்களை ஊக்குவித்த தலைமையாசிரியர் ந.பார்வதி அவர்களுக்கு ஆசிரியர்கள் பொன்னாடை அணிவித்து மகிழ்வை பகிர்ந்து கொண்டனர்.

முதல் மதிப்பெண் பெற்ற மாணவி சௌமியாவிற்கு எனது  முன்னாள் மாணவன் ராமக்கிருஷ்ணன் ரூபாய் 1000 பரிசு அளித்ததை மாணவிக்கு வழங்கி மகிழ்ந்தேன்.

ஆசிரியர்கள் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

வெற்றிக்கு காரணமான ஆசிரியர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள் 

Wednesday 6 May 2015

என்ன செய்து காப்பாற்ற என் பிறந்த ஊரை...

என்ன செய்து காப்பாற்ற எனது பிறந்த மண்ணை...?

காலையில் முருகன் கோவில் மணி ஓசையும் பஜனை மடத்தின் பாடலும் எழும்பி அனைவரையும் விழிக்க  வைக்க வைக்கும் சிறிய நகரம் அது.

நதி தனது பாதையை அந்த சிறிய ஊரில் தடம் பதிக்காத காரணத்தால் தானியப்பயிர்கள் மட்டுமே விளையும் பகுதி அது....
செக்கச்சிவந்த மிளகாய் குவியலில் ஏலம் நடக்கும் எங்கள் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் [அதுவும் எங்க வீடுதான்]குடியிருந்த கமிஷன் மண்டியில் .தோட்டத்தில் 10 அடிக்கு மேல் இருந்த சுற்றுச்சுவரை தாண்டி நிறைந்து வழியும் மிளகாய்களைப்பொறுக்கி எனது ஆத்தா அவர்களிடமே கொடுக்கச்சொல்வார்கள்....அங்கிருந்த கிணற்றை பலகையால் மூடி அதன் மேலும் நிறைந்திருக்கும் மிளகாய்கள் ...
கொத்தமல்லி ,கம்பு கேழ்வரகு ,சோளம் என சிறுதானியங்கள் நிறைந்த உரக்கடையும் அப்பா நடத்தினார்.அமைதியான சிற்றூர்.

மூன்று திரையரங்குகள் மக்களின் பொழுது போக்கு சாதனமாய் இருந்தன.
எங்கள் வீட்டு கிணற்றில் நீர், கோடையிலும் இருக்கும் காணும் தொலைவில்.
குறிப்பிட்ட வீடுகளே பெரிய வீடுகளாக இருந்தன.மருத்துவமனைகள்  மிகவும் குறைவு.குடும்ப மருத்துவர்கள் தான் இருந்தனர்.வீடுகளிலேயே பிரசவங்கள் நடக்கும் .எங்கள் தலைமுறை வரை வீட்டில் தான் பிறந்திருக்கின்றோம்.ஆபரேசன் பண்ணும் வசதி தேவைப்படாத ஊராக...

ஆதி காலத்தில் கடலாக இருந்த ஊரென தொல்லியலாளர்களால் கூறப்படும் பகுதி .ஆதாரமாக பெருமாள் கோவில் அருகே ஒரு வீட்டில் பெரிய ஆமை ஓடு இருந்ததை சிறு வயதில்பார்த்திருக்கின்றேன்.உயிரினங்களின் படிமங்களை என் தோழியின் அப்பா காண்பிக்கும் போது ஆச்சரியமாக இருக்கும்.மைன்ஸ்ல வேலை என்பாள் தோழி.
மிகப்பெரிய இயந்திரங்களைக்கொண்ட அரசு சிமெண்ட் தொழிற்சாலை கலிய பெருமாள் கோவிலுக்கு போகும் வழியில் ஆரம்பிக்கப்பட்டது.பள்ளியில் இருந்து அழைத்துச்சென்று காண்பித்தார்கள்.அதற்கான மைன்ஸ்ல தான் பணி என்றாள் என் தோழி.
தூய்மையான காற்றில் இலேசாக ஏதோ கலந்த போது கூட எதுவும் தெரியவில்லை.ஊரிலுள்ள குழந்தைகட்கெல்லாம் சளியும் தும்மலும் அதிகமாகப்பிடிக்கத் தொடங்கியது.ஒருநாள் சிறுசிறு கட்டிகளாக காற்றில் கலந்த கழிவுகள் விழத்தொடங்கிய போது தொழிற்சாலையில் கழிவை வடிகட்டாமல் விடுகின்றார்கள்..எனக்கூறி மறந்தார்கள்.கிராமத்தில் சொந்த நிலத்தில் முதலாளியாக வேலைபார்த்த மக்கள்.பேண்டு சட்டை போட்டு தூக்கு சட்டி தூக்கும் கூலித்தொழிலாளியாக சந்தோஷமாக மாறினார்கள் தனது நிலத்தை தாரை வார்த்து.

ஏறக்குறைய 20 வருடங்களில் அந்த ஊர் பதிமூன்றுக்கும் அதிகமான சிமெண்ட் தொழிற்சாலைகள்   நிறைந்த தொழில் நகரமாக மாறிவிட்டது.உள்ளூரில் ஆள் கிடைக்காமல் வெளி மாநிலங்களிலிருந்தும் ஆள்  வந்து பணி புரிகின்றார்கள்.ஊரைச்சுற்றிலும் ஜிப்சம் மண்ணை தோண்டி எடுக்கும் சுரங்கங்கள் தோண்டி படுபாதாளப்பள்ளத்தாக்கை உருவாக்கியுள்ளனர்.

மண்ணை ஏற்றி விரைந்துசெல்லும் டிப்பர் லாரிகளால் நடக்கும் விபத்துகளில் அப்பகுதி மக்கள் தங்கள் உயிர்களை அடிக்கடி இழந்துகொண்டுள்ளனர்.

காற்றில் கலந்த மாசுக்களால்....ஊரிலெங்கும் மருத்துவமனைகள் மிகப்பெரிய அளவில் ...எப்போதும் நிறைந்து வழியும் மக்களுடன் காணப்படுகின்றன.எல்லா வீடுகளிலும் நுரையீரல் பாதிக்கப்பட்ட,மக்கள்...

கிணறுகளில் கண்ட நீர் இன்று படுபாதாளத்தில் .....ஆழ்துளைக்கிணறுகளால்...இல்லாமல் போய்விட்டது..

தன் அடையாளத்தை இழந்து,அமைதியான வாழ்க்கையை இழந்து,சுவாசிக்க காற்றையும் இழந்தது.இழந்ததை உணர்ந்தும் உணராமலும் என் பிறந்த ஊர் மக்களைப்பார்க்கும் பொழுது....கண்களில் குருதி வடிகின்றது.இன்னும் சிந்நாட்களில் சுற்றியுள்ள சுரங்களால் என் ஊர் தரை மட்டமாக போய்விடுமோ என்ற கவலை அரிக்கின்றது...

இரவில் ஒளிரும் விளக்குகளால் நிமிர்ந்து நிற்கும் தொழிற்சாலைகள் என் ஊரையும், ஊர் மக்களையும் உறிஞ்சி செழிக்கின்றன.

என்ன செய்து காப்பாற்ற.....என் அரியலூரை?

என் ஊரின் வளமே அதற்கு எமனானது...

Saturday 2 May 2015

மே மாத விடுமுறை

மே மாத விடுமுறை
------------------------------------------
எதிர் புறத்தில் புதிய வீட்டு வேலை நடக்கிறது.மதியம் கட்டிடத்தொழிலாளிகள் எங்கள் வீட்டின் முன் அனைவரும் ஒன்றாய் அமர்ந்து உணவு உண்ணுவார்கள்.ஒரு விடுமுறைநாளில் மதியம்  வெளியே வந்த போது சாப்பிட வாங்கம்மா என்றார்கள் .தூக்கு வாளியில் கஞ்சியும் ஊறுகாயும் இருந்தன.மனம் வருத்தமாயிருந்தது.அவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டிருக்கலாமே என.வீட்டிலிருந்த இனிப்பை அவர்களுக்கு தந்தேன் மகிழ்வுடன் வாங்கிக்கொண்டனர்.


        இன்று   கட்டிட வேலை செய்பவர் தன் குட்டி மகளையும் அழைத்து வந்திருந்தார்.என்னடா பள்ளிக்கு போறியா என்றேன் .தலையாட்டி அங்கன் வாடி பள்ளிக்கு போறேன்னா.குவித்து வைக்கப்பட்டிருந்த ஜல்லிக்குவியலின் மேல் அமர்ந்து ஜல்லிகளைத் தூக்கிப்போட்டு விளையாடிக்கொண்டிருந்தாள்.என்னுடன் வர்றியா எனக்கேட்ட போது சற்று மிரட்சியுடன் தலையாட்டினாள்..எனது அகத்தாய்வு பயிற்சி வகுப்பு முடிந்து மாலை 6மணி அளவில் வந்த போது வேறொருக்குவியலில் அமர்ந்து தனியாக விளையாடிக்கொண்டிருந்தாள்.வீட்டிற்கு வாடா என்றேன்.மறுத்து தந்தையை நோக்கினாள் ,அவரோ நாளை கான்கிரீட் போடும் பணியில் மும்மரமாய்...

காலை முதல் மாலை வரை இந்தக்குழந்தையும் பணி புரியும் இடத்திலேயே.தனியாக..மே மாத லீவு அவளுக்கு இல்லாது இருந்திருக்கலாம்னு தோணுச்சு.