World Tamil Blog Aggregator Thendral: அகம்
Showing posts with label அகம். Show all posts
Showing posts with label அகம். Show all posts

Sunday, 29 January 2017

நானும் பேலியோவும்.

நானும் பேலியோவும்

கடந்த 7 வருடங்களாக…தைராய்டு நோயால் உடலெடை அதிகரித்து எப்போதும் சோம்பலுடன் ,தூக்கமும் நானும் இணை பிரியாதவர்களாய் இடம் கிடைத்தால் படுத்துகொள்ளவேண்டும் என்றே தோன்றும்
விளைவு எடை கூடிக்கொண்டே போக..

எடை குறைக்க யோகா வகுப்பிற்கு சிலநாள்,ஜிம் கிளாஸிற்கு சிலநாள்,இப்படியான எனது எடைக் குறைப்பு முயற்சியில்…

காலை முழுதும் உணவைத் தவிர்த்து…சிறுதானியங்கள் சேர்த்து என பல வழிகளில் அதனுடன் போராட…வெற்றி என்னவோ உடல் எடைக்கே கிடைத்தது…

Wednesday, 17 August 2016

அம்மாவின் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் நிலா...

அம்மாவின் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் நிலா...
 26 வருடங்களுக்கு முன் என் வாழ்வில் தென்றலாய் பிறந்தவள்.

 ஒரு ரோஜாப்பூவை கையில் தந்து மகளென்றார்கள்...

பெயர் முதலில் ஹேமா என்றும், பின் ஷர்மிளா என்றும்  அழைக்க,

 தம்பியின் நண்பனிடம் ஒரு வார்த்தையில் பெயர் சொல் என்றால் ”பா”என்றே அழைப்பான் இப்போழுதும்.

 எல்.கே.ஜிக்கு இவளை சேர்க்க சென்ற பொழுது இவளிடம் பெயர் என்ன எனக்கேட்க ”குஷ்பூ”என இவளே இவளுக்கு பெயர் வைக்க,

 நல்ல தமிழ் பெயர்களைத்தேடி “கலைநிலா”என்று பெயரிடப்பட்டவளுக்கு இன்று பிறந்தநாள்...

 அடுத்த குழந்தை பிறந்தால் அன்பு பகிர வேண்டுமே என்பதால் ஒரே குழந்தையாய் வளர்ந்தவள் உங்களின் வாழ்த்துகளால் வளம் பெறட்டும்.






Saturday, 23 April 2016

வைகறை என்ற ஜோசப் பென்சிஹர்

சகோதரர் திருப்பதி, வைகறையைப்பற்றி எழுதக்கேட்டுக்கொண்டதன் பேரில்...
வைகறை என்ற ஜோசப் பென்சிஹர் ------------------------------------------------------------- நீண்ட நெடிய உருவமும்,
மாறாத புன்சிரிப்பும்,
கவிதைகளுடன் கலந்த வாழ்வும்,
யாரையும் புண்படுத்தாத நல்ல உள்ளமும்,கொண்ட வைகறை   திருச்செந்தூருக்கு அருகில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அடைக்கலாபுரத்தில் 3.3.1979 இல் பிறந்தார்.

ஒரு தம்பி ...மட்டுமே உடன்பிறந்தவர். .

கல்வி
1984-1992 ஆம் ஆண்டுகளில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை, அடைக்கலாபுரம் புனித ஆரோக்கிய அன்னை நடுநிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். பின்னர் 1992 -1996 ஆம் ஆண்டுகளில் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு பள்ளியில் 9 முதல் 12 ம் வகுப்பு வரை படித்தார். பின்னர் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகில் அமைந்துள்ள வானரமுட்டியில் அமைந்துள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் (DIET) 1996-1998 கல்வி ஆண்டில் தனது ஆசிரியர் பயிற்சிப் படிப்பை நிறைவு செய்தார். பின்னர் பாளையங்கோட்டையில் இருக்கும் பிரதர்ஸ் யூனியன் கிறிஸ்தவ துறவிகளால் நடத்தப்படும் கிறிஸ்து ராஜா மேல் நிலைப்பள்ளி யில் ஏறத்தாழ பத்து ஆண்டுகள் management staff ஆக பணி புரிந்தார். பின்னர் தூத்துக்குடி நகரில் அமைந்துள்ள St.Mary's higher secondary school (RC.aided) பள்ளியில் முதன் முதலாக அரசுப்பணியில் சேர்ந்து (ஒரு வருடம்) பணியாற்றினார். பின்னர் அவருக்கு சீனியாரிட்டி அடிப்படையில் அரசு பள்ளியில் வேலை கிடைத்ததால், ஏற்கனவே ஒரு வருடமாக பார்த்து வந்த aided school வேலை விட்டு விட்டு தர்மபுரி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் 

Wednesday, 9 March 2016

வணக்கம் சகோதரி இளமதி

வணக்கம் சகோதரி இளமதி -----------------------------------------------------

எனது ஒரு கோப்பை மனிதம் நூலுக்கு அணிந்துரை நீங்கள் எழுதித்தந்தால் சிறப்பாக இருக்கும் முடியுமாம்மா...என்று நான் கேட்ட பொழுது ,கொஞ்சம் அவசரமா இருக்கேன்மா...வீட்டுக்கு வந்து விட்டு பேசவா என்றார்...ஓகேமா என்றேன்.

 மாலையில் அவரிடமிருந்து வந்த செய்தியில் நீங்கள் அழைத்த போது என் கணவருக்கு மிகவும் முடியாமல் மருத்துவமனையில் இருந்தேன்மா அதான் உடனே பேச முடியவில்லை என்ற போது சிரமம் கொடுத்துவிட்டோமே என்று வருத்தப்பட்டேன். இந்நிலையில் என்னால் அணிந்துரை எழுதி தரவியலாது என மிகவும் வருத்தப்பட்டு எழுதியிருந்தார்.பரவால்லமா நீங்கள் கணவரின் உடல் நிலையைப்பாருங்கள் என்றேன்.

 அவர்களின் ilayanila16.blogspot.com வலைப்பூ கண்கவரும் செய்திகளை,கவிதைகளை,ஓவியங்களை,கைவினைக்கலையை தாங்கி வரும் அழகான வலைப்பூ. இத்தகைய சிரமத்திற்கிடையேதான்கவிஞர் கி. பாரதிதாசன் அய்யாவிடம் தமிழ் செய்யுள் எழுதும் முறைகற்று மரபு பாக்களை அருமையாக எழுதி வருபவர்.

 பல வருடங்களாக விபத்து ஒன்றில் அடிபட்டு கோமாவில் இருந்த கணவரை எப்படியும் பிழைக்க வைத்துவிட வேண்டும் என்ற வைராக்யத்தோடு வாழ்ந்த வரும் வீரப்பெண்மணி...
 இவருக்கு உறுதுணையாக இருந்த அன்னையையும் இழந்து துக்கத்தோடு, சோதனைகள் நல்லவர்களுக்கு தான் அடிக்கடி வரும் போல...அவருக்கும் முடியாமல் போன நிலையிலும் தன் கணவரை கண்ணும் கருத்துமாக காப்பாற்றி வந்த இளையநிலா என்ற இளமதி..

இன்று தன் கணவரை இழந்து நிற்பது மனதை கனக்கச்செய்கின்றது... கலங்காதே சகோதரி ... இவ்வேதனையில் இருந்து அவர்கள் மீண்டு வர காலம் துணை செய்யட்டும்....

Saturday, 26 December 2015

அவளதிகாரம்

அவளதிகாரம்

காற்றில் சமைத்த உணவை சாப்பிடவில்லை
ஓவியக்காரில் அவளோடு அமரவில்லை
எனக்கு காய்ச்சலென்று அவளெடுத்தமுடிவிற்கு
கட்டுப்பட்டு குத்திக்கொண்ட விரல் ஊசிக்கு
வலியில் துடித்து அழவில்லை...என
காரணங்கள் வரிசையில் நிற்க...

செருமிக்கொண்டே தோளில்
சாய்ந்து எனை அடிக்க
ஆள் தேடுகின்றாள்....

Thursday, 22 October 2015

ippadiyum seyyalaamee-இப்படியும் செய்யலாமே

தமிழர் திருமணம்

-நாம் அட்சதைத்தூவ அரிசியைப்பயன்படுத்துவதில்லை....அதனால் நெல்லை தருகின்றோம் நெல் போல் தழைத்து வாழ்க என வாழ்த்துங்கள் என்றார்...தேவாரத்தையும் ஆழ்வார் பாசுரங்களையும் இனிமையாகப்பாடிய படி..மணமக்கள் திருமணம் முடிந்து மேடையில் இருந்து இறங்கி அனைவரையும் நோக்கி வணங்கியபடி வர அவர்களை மனதார வாழ்த்தி நெல்லைத்தூவினர் அனைவரும்..
அம்மி என்பது தாய்க்குச்சமம்..குழவி என்பது குழந்தையாகக்கருதப்படுவதால் தமிழர்கள் அம்மி மிதிப்பதென்பது ஆறாயிரம் வருடங்களுக்கு முன் வந்த ஆரியர்களால் உருவாக்கப்பட்டது....அதனால் நாம் இன்று அம்மியைப்போற்றி வணங்கி மகிழ்கின்றோம்..என்றார்...

செம்புலப்பெயர் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே என்ற சங்க இலக்கியப்பாடலைப்பாடி மணமக்களை மாலை மாற்றி கொள்ளச்சொன்ன போது மனம் நெகிழ்ந்து போனது...

தாய்த்தமிழ் பள்ளி வைத்து நடத்திய ,தமிழ் மேலும் தமிழர் மேலும் அக்கறை கொண்ட ,கைவினையும் கலைநயமும் ஒருங்கே கொண்ட,அக்யுபஞ்சர் மருத்தவராக பலகலைகளிலும் திறமையுள்ள அக்கா புவனேஸ்வரியின் அன்பு மகள் பொன்னீஸ்வரிக்கு இன்று திருமணம்...நிறைவாக நடந்தது...என்ன சொல்றாங்கன்னே புரியாமல் திருமணம் செய்வதை விட நமக்கு புரிந்த தாய்மொழியில் வாழ்த்தி திருமணம் செய்வதென்பது மனநிறைவான ஒன்று...
விருந்தில் குட்டிச்சட்டியில் வைத்த தயிர் நம் மண்ணின் மணத்தைக்காட்டியபடி வைக்கப்பட்டது...எதிலும் புதுமை விரும்பும் அக்கா தன் மகளின் திருமணத்திலும் புதுமை செய்து மனத்தில் நிறைந்து விட்டார்..

Monday, 17 August 2015

நினைவலைகளில்-18.8.90-ஒரு ரோஜா பூத்த தினம்

நினைவலைகளில்-18.8.90-ஒரு ரோஜா பூத்த தினம்
-------------------------------------------------------

நாற்பது கிலோமீட்டர் பஸ்ல போய் வேலை பாக்குறியா ..அய்யய்யோ...நீ ரொம்ப வீக்கா இருக்குற ...பெட் ரெஸ்ட்ல இருந்தாத்தான் உடல் நலமாயிருக்கும் . அசையக்கூடாது வேகமா நடக்கக்கூடாது...இப்படி இருந்தா என்னிடம் வாங்க இல்லன்னா வரவேண்டாம்..கறாராக சொன்ன மருத்துவரை பார்த்து விட்டு வெளியே வரும்போது..அம்மாவிடம் அம்மா இவங்க என்னம்மா இப்படி பயமுறுத்துறாங்க..நான் நல்லாத்தானே இருக்கேன்..போம்மா..நம்மூரு டாக்டரிமே பாத்துக்கலாம்மான்னு சொல்லிட்டு திரும்பி பாக்காம வீட்டுக்கு வந்துட்டேன்...

தினமும் வீட்டிலிருந்து பேருந்து நிலையத்திற்கு ஒருகிலோ மீட்டர்..பின் இரண்டு பஸ் ஏறி இறங்கி  இரண்டு கிலோமீட்டர் பயணம்..அரியலூரிலிருந்து சிறுவளூர் பள்ளிக்குச்சென்று வருவது என்பது...எளிமையானதல்ல ..ஏனெனில் அவ்வூருக்குள் பேரூந்து வசதியே இல்லை..

இப்படி தினமும் ஆறு கிலோ மீட்டர் நடந்து தான் சென்றேன்...ஒன்பது மாதக்கருவுடன்...
எங்கள் வீட்டில் குடியிருந்த விஜயலெட்சுமி டாக்டர் தான் என்னை கவனித்துக்கொண்டார்கள்.இளங்கோவன் நர்சிங்ஹோமில் அட்மிட் பண்ணிக்கலாம்னு சொன்னாங்க..அப்போது அவங்களுக்கு சொந்தமா நர்சிங்ஹோம் கிடையாது...

மேலும் அரியலூரில் அப்போது1990 ஆபரேஷன் வசதியும் இல்லை ..தஞ்சை அல்லது திருச்சிக்குத்தான் வரவேண்டும்..
நான் வேலைப்பார்த்த பள்ளியின் தலைமையாசிரியர் என்னை அவரது மகள் போல் கவனித்துக்கொண்டார்கள்...முதன் முதலாக அவர்கள் வீட்டில் தான் கேழ்வரகு கூழ் வைத்து குழந்தைக்கும் உனக்கும் நல்லதும்மா சாப்பிடுங்க என்றார்...மிகவும் கஷ்டப்பட்டு தான் சாப்பிட்டேன்.

தினமும் இளநீர் கொடுத்து குடிக்கச்சொல்வார்கள் சக ஆசிரியர்கள்.
டாக்டர் சொன்ன தேதி வந்தவுடன்...அருகில் குடியிருந்த அனைவரிடமும் சொல்லிக்கொண்டு மருத்துவமனை வந்தோம் ...டிரைவர் இவங்க என்ன டூருக்கு போற மாதிரி டாட்டா காட்டிட்டு வர்றாங்கன்னு...கிண்டல் பண்ணிக்கிட்டே வந்தார்.

மருத்தவமனையில் 3 பெட் இருந்தாலும் நான் மட்டுமே இருந்தேன் என்னை பார்க்கவந்த உறவினர்கள் கவலையோடு காலியாக இருந்த பெட்டில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள்..ஒரு மாமி ஏன்மா இடுப்ப சாட்டையால் அடிக்கிற மாதிரி இருக்கான்னு கேட்டாங்க ..இல்ல மாமின்னு படுத்துருந்தேன்...

டாக்டர் வந்து வலி வருவதற்கான ஊசி போட்டு சென்றார்கள்...அப்போதும் வலி வராமல் தூக்கம் வருதுன்னேன்...எல்லோரும் இவ டெலிவரிக்கு வந்தா நாம முழிச்சிட்டுருக்கோம் ..இவ என்னடான்னா தூங்குறாளேன்னு திட்டிக்கிட்டே இருந்தத கேட்டுக்கிட்டே தூங்கிட்டேன்..அவசரம்னா தஞ்சை செல்ல  வெளியே நின்றிருந்த காரில் ஏறி  காலையில் வீட்டுக்கு வந்துட்டேன்..
.வலி வந்தா வாங்கன்னு சொல்லிட்டதால...
பத்துநாள் கழித்து லேசா வலி வர அம்மா உனக்கு கார் எல்லாம் வைக்க முடியாது போ அண்ணன் கூட ஸ்கூட்டர்ல என்றார்கள்..

டாக்டர் அன்றும் வலி வருவதற்கு ஊசி போட்டுட்டு வலிக்குதான்னாங்க இல்ல டாக்டர் தூக்கம் வருதுன்னேன் ..பாரேன் இவள ..டெலிவரி நேரத்துல தூக்கம் வருதுங்குறான்னு...வெளியே நின்னுக்கிட்டு இருந்தவங்க எல்லாம் திட்ட ஆரம்பிச்சிட்டாங்க..

என்னுடன் இருந்த சுமதி மாமி கீதா தூங்காதன்னு முகத்துல அடிச்சிக்கிட்டே இருக்காங்க..டாக்டர் மூணு மணி நேரமா போராடுறோம் நீ கொஞ்சம் ஒத்துழைச்சா தான் உன்னையும் குழந்தையையும் காப்பாத்த முடியும்னு ...சத்தம் போடுறாங்க...

குழந்தை மேலும்கீழும்  ஏறி இறங்குது...நீ கொஞ்சம் ஒத்துழை இல்லன்னா ஆயுதம் போட்டு எடுக்க வேண்டியிருக்கும்னு பதறுகின்றார்கள்...ஒரு நர்ஸ்.நான் படுத்திருந்த பெட்டில் ஏறி என்மீது கால் வைத்தது தான் தெரியும்...
குழந்தையின் சத்தம் கேட்டது மயக்கத்தில்...என்ன குழந்தைன்னு கேட்கிறேன்..அரை மயக்கத்தில் ம்கும் ஒண்ணும் சொல்ல மாட்டேன்..நீ செய்த அட்டகாசத்திற்குன்னு கோபித்துக்கொண்டு டாக்டர் வெளியே போயிட்டாங்க...
வெளியே பெண் குழந்தைனு சொல்ற சத்தம் கேட்டதும் மகிழ்வுடன் கண் அயர்ந்தேன்..கண்விழித்த போது ஒரு ரோஜாப்பூவை என் அருகில் படுக்க வைத்திருந்தார்கள்..
பிரசவ வலின்னா என்னன்னு இப்போதும் எனக்கு தெரியாது.ஒரு வேளை நான் இன்னும் அதிகமா வைக்கும் போலன்னு நினைத்திருந்ததால் இந்த வலியை சாதாரணமாக நினச்சிட்டேன் போல...

18.8.90 சனிக்கிழமை மதியம் 3.20 மணியளவில் என் வாழ்வின் தேவதையாய்  என் பக்கத்தில் படுத்து என்னை பார்த்து புன்னகைத்த போது....அத்தனை நேர போராட்டமெல்லாம் ..பனி போல கரைந்தது....

ஹேமான்னு பேர் வச்சு,
ஷர்மின்னு கூப்பிட்டு,
தம்பியின் நண்பன் பா  ன்னு [ஒரு வார்த்தையில் பேர் சொல்டா என்றதற்கு] கூப்பிட்டு ,
பள்ளியில் கலைநிலான்னு அழகாக அனைவராலும் அழைக்கப்பட்ட என் மகளுக்கு இன்று பிறந்தநாள்..

இன்று அவளுக்கு இருபத்தைந்தாவது ஆண்டு பிறந்த நாள்..

உங்களின் வாழ்த்துகளால் அவள் பல்லாண்டு வாழட்டும்..

வாழ்வில் வெற்றியே கிடைக்கட்டும்.



































Tuesday, 28 July 2015

amma

அம்மா..............
எட்டாண்டுகளாச்சு
எனைவிட்டுச்சென்று
நம்பவே முடியலம்மா

நீதான் என் தைரியம்
நீதான் என் மகிழ்வு
நீதான் என்னுயிர்
நீதான் என்வாழ்க்கை
நீதான் நான் என்பது
 உனை இழந்த பின்னே
உணர்கின்றேன்ம்மா

உன்னை காயப்படுத்திய வடு
என்னை கொல்லாமல் கொல்கிறதம்மா
காலம் உன்னிடமிருந்து என்னை
காலன் பிரித்த கொடுமை
தாங்காது துடிக்கிறேன்மா....
உன்னிடம் வரவே
உன்கை தொடவே
என் பேராசையாய்
உள்ளதம்மா...

அம்மா
வரம் கேட்கிறேன்மா
மீண்டும் நான் கருவாய்
உன்னில் பிறக்க...
என்னைச்சுமப்பாயா அம்மா....

Sunday, 28 June 2015

நினைவுகள்


சிதறிக் கிடக்கும் பொருட்களை
அள்ளி வீசிய சில்லறைகளை
அவிழ்த்து போட்ட ஆடைகளை
கவிழ்ந்து கிடக்கும் பொம்மைகளை
அடுக்கி வைக்க மனமில்லாதபடி
அழகுக்குட்டியின் மழலையை
அள்ளி வீசுகின்றன...அலையலையாய்...