World Tamil Blog Aggregator Thendral: பள்ளி
Showing posts with label பள்ளி. Show all posts
Showing posts with label பள்ளி. Show all posts

Saturday, 14 January 2023

துயர வகுப்பு

அரசுப்பள்ளி மாணவிகளின் துயரங்கள் நிறைந்த வகுப்பு 
நேற்று காலை எட்டாம் வகுப்பு மாணவிகளுடன் சில மணித் துளிகள் இருக்க விரும்பிச் சென்றேன்.. 

அவர்கள் மிகவும் சேட்டை செய்கிறார்கள் கட்டுப்படுத்தவே முடியவில்லை என்று குற்றச்சாட்டுகள். அதனால் என்ன தான் பிரச்சினை என்று அறிந்து கொள்ள உரையாடலைத் துவங்கினேன்.

அவர்களிடம் இக்கால மாணவிகள், மாணவர்களின் இயல்பை குறித்து மூன்று குழுவாக பிரிந்து பேச வேண்டும் என்று கூறினேன். 
ஒரு குழு மாணவிகள், பெண்கள் அக்காலத்தில் படிக்க வாய்ப்பு இல்லை இக்காலத்தில் படிக்க வாய்ப்பு உள்ளது, இருந்தாலும் சிலர் படிப்பதில்லை. அவர்கள் செல்லிற்கு அடிமையாக இருக்கிறார்கள் என்றாள்.
 இன்னொரு மாணவி ஆண்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக ஆடை அணிகிறார்கள் அலங்கரித்துக் கொள்கிறார்கள் என்று கூறினார் . 
நான் இது பொதுவாக எல்லோரும் கூறும் கருத்து நான் உங்களிடம் இன்னும் ஆழமாக எதிர்பார்க்கிறேன் .
நீங்கள் என்ன விரும்புகிறீர்கள்? எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் ?என்று கேட்டேன்.
 இக்கால பெண்கள் பேண்ட் சர்ட் போட்டுக்கிட்டு கடை தெருவுல சுத்துறாங்க .அதனாலதான் அவர்களுக்கு பாதிப்பு வருது என்றாள்.
 அப்படி என்றால் பெண்கள் விரும்பி ஆடை அணியக்கூடாது விரும்பிய இடத்திற்கு போகக்கூடாது என்று கூற வருகிறாயா?
 ஆண்கள் சுதந்திரமாக செல்லும்போது பெண்கள் ஏன் செல்லக்கூடாது? உன்னுடைய கருத்து சென்ற தலைமுறையின் கருத்து .நமது மூலையில் சலவை செய்யப்பட்ட கருத்து. இது உன் அம்மா கூறலாம். நீ பெண்களுக்கு எங்கு சென்றாலும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று கருதுவது நியாயம்.
 சமூகம் பெண்களை உடல் பொருளாக பார்க்கிறது அதனால் அவர்களுக்கு பாதிப்பு வருகிறது ஆண்கள், பெண்களை சமமாக கருத அவர்கள் குழந்தையிலிருந்து கற்றுத் தர வேண்டும்.
 ஆண் பெண் சமத்துவம் குழந்தை பருவத்தில் இருந்து வரவேண்டும். இருவரும் வேலைகளை பகிர்ந்து செய்வது இயல்பாக வேண்டும் என்று கூறினேன்.
இப்படி பேசிக்கொண்டு இருக்கும் போது ஒரு மாணவி அம்மா நான் சொல்கிறேன் என்று எங்கள் வீட்டில் அப்பா அண்ணன் நான் தம்பி தான் இருக்கிறோம் அம்மா கோபித்து கொண்டு ஊருக்கு போய் பல வருடங்கள் ஆச்சு.எங்கள் அப்பா தான் எங்களை வளர்க்கிறார்கள்.நான் இன்ஸ்டாகிராமில் இருக்கிறேன் எது செய்தாலும் அப்பா அண்ணனிடம் சொல்லி விடுவேன்.அப்பா என்னை செல்லமாக வளர்க்கிறார்.அம்மா மாதிரி இதுவும் போயிடும் என்று சிலர் திட்டும் போது வலிக்கும் அண்ணன் என்னை அம்மா போல வளர்க்கிறான்.
அவனே சில நேரங்களில் சமைப்பான்.இன்று கூட பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போதும் விடுப்பு எடுத்து பொங்கல் வேலை பார்க்கிறான் என்றாள்.
 இன்னொரு பெண் மாணவி அம்மா, நான்  பிறக்கும் முன், எனது அப்பா இறந்து விட்டார்கள். 18 வயதிலிருந்து என் அம்மா எங்களை வளர்க்கிறார்கள். என் அம்மா யாரிடம் பேசினாலும் தவறாக  பேசுபவர்கள், இப்போது என்னையும் தவறாக பேச ஆரம்பித்து விட்டனர் என்று ஒரே அழுகை. அவளை தேற்றுவதற்குள், இன்னொரு மாணவி அம்மா ,எனது அப்பா வீட்டு சண்டையில் தூக்கு மாட்டிக் கொண்டார்கள். நான் தான் காரணம் என்று எல்லோரும் என்னை அப்பாவை விழுங்கி விட்டு பிறந்த என்று கூறுவார்கள் அம்மா என்று கதறினாள்.
 இப்படி ஒவ்வொரு மாணவிக்கும் ஒரு துயரம். ஒரு மாணவி கூறுகிறாள் நான் ஒரு முறை தவறு செய்து விட்டேன் ஆனால் அதை உணர்ந்து இப்போது திருந்தி விட்டேன் ஆனால் என் வீட்டில் யாரும் என்னை நம்புவதில்லை .நான் எதை செய்தாலும் அதில் குற்றம் கண்டுபிடித்து அடிக்கிறார்கள். எனக்கு உயிரோடு இருக்கவே பிடிக்கவில்லை அம்மா என்றாள். அவளது கண்ணீரை கட்டுப்படுத்த முடியாது நானும் அழத் துவங்கினேன். இன்னொரு மாணவி எனக்கு இருவரும் இருந்து பிரயோஜனம் இல்லை அம்மா. எனது அப்பா இன்னொரு திருமணம் பண்ணிக் கொண்டார்கள், அம்மா எங்கேயோ சென்று விட்டார்கள். எங்கள் அப்பாயி தான் என்னை வளர்க்கிறார்கள். அப்பா அம்மாவை பற்றி எல்லோரும் பேசும்பொழுது எனக்கு இல்லையே என்று வருத்தமாக இருக்கும் என்று அழுத போது கையறு நிலையில் தவித்தேன் .
இப்படி 51 மாணவர்கள் இருந்த அந்த வகுப்பறையில் 40 குழந்தைகள் தனித்தனி சிக்கலிலும்ஃ பிரச்சனைகளிலும் சிக்கி கேட்பதற்கு ஆளின்றி தவித்துக் கொண்டிருந்ததை உணர்ந்தேன். 
வகுப்பே அழுது நின்ற காட்சி, என்னால் இந்த 34 வருட ஆசிரியப் பணியில் கண்டறியாத ஒன்று. மனம் கனத்து செய்வதறியாது கலங்கி கலங்கி நின்றேன் இன்னும் பல நாட்களுக்கு இந்த நினைவுகள் என்னை கனக்கச் செய்யும். 
 கனம் நிறைந்த அந்த பொழுது அந்த குழந்தைகள் வாழ்வில் எல்லாவற்றையும் பெறுவதற்கு துணை நிற்க வேண்டும். உன்னை கேவலமாக பேசுபவர்கள் முன் நீ நேர்மையாக வாழ்ந்து அவர்கள் உன்னிடம் பேசவே தயங்கும்படி வளர்ந்து காட்ட வேண்டும் என்று ஆற்றுப்படுத்தவே முடிந்தது.
 ஒரு அரசு பள்ளியின் துயர வகுப்பாக அமைந்தது. இன்னும் எத்தனை மாணவிகள் இப்படி ஆறுதலுக்கான கரங்களையும், மனதையும் நாடி நிற்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் இத்தனை துயரங்களையும் வென்று சாதிப்பார்கள் என்ற நம்பிக்கை அவர்களுக்கு கொடுக்க என்னால் முடியும்.
 ஆசிரியர்கள் தோழர்கள் பாடம் நடத்துவதை விட ,மாதத்தில் ஒரு நாள் குழந்தையின் சிக்கல்களை, பிரச்சனைகளை கேளுங்கள் அவர்களின் துயரங்களை துடைக்கும் கரங்களை நாடுகிறார்கள் கேட்கவாவது காதுகள் கிடைக்கட்டும் 
கண்ணீருடன் ,
மு.கீதா புதுக்கோட்டை.

Friday, 5 June 2020

தேர்வு

முக கவசமிட்டு தேர்வு எழுது மகளே...

உயிருக்கு ஆபத்தான நிலை தான் ஆனாலும்
பதினைந்து ஆம் தேதி தேர்வு நிச்சயம்..

. ஆம் நீ தேர்வு எழுதவில்லை என்றால் இங்கு வாழத் தகுதியில்லை...
தேர்வு எழுத வந்தால் உயிருக்கு பாதுகாப்பு உண்டா அம்மா என்று கேட்காதேமா...
அது உன் பொறுப்பு என்று சொல்லி விட்டார்கள்....என்னை மீறி கொரோனா வராது என்று உறுதி அளிக்க முடியவில்லை மா.
தேர்வு எழுத நுழையும் முன் உனது உடல் வெப்பநிலை சரியா என்று சோதிப்போம் . பயந்து கேள்விக்கான விடைகளை மறந்து விடாதே... கைகளை நன்கு கழுவ மறந்து விடாதே.
நீ மனப்பாடம் செய்ததெல்லாம் மறந்து இருப்பாய் கொரோனா விடுமுறையில்... ஆனால்.... மதிப்பெண் நீ பெற வில்லை என்றால் தேர்ச்சி இல்லை என்று அமைதியாக அறிவிப்போம்.. அதற்கெல்லாம் நீ பயந்து தற்கொலை நாடிவிடாதே மகளே...
பயமின்றி எழுது தேர்வு எழுதும் மேசையை தொடாமல் எழுது.
அருகில் இருக்கும் தோழியை நீண்ட நாட்கள் கழித்து கண்ட மகிழ்ச்சியில் தொட்டு உரையாடி விடாதே...நீ மட்டும் அல்ல உனது அறையில் இருப்பவரெல்லாம் கைகளைக் கழுவி ,முகக் கவசம் அணிந்துள்ளனரா என்று எச்சரிக்கையாக எழுது.
தேர்வு முக்கியம்....உனது உயிரை விட....கொரோனா அதிகரிக்கத் தான் செய்யும்...அதோடு வாழப் பழகிக் கொள்ள சொன்னோமே....நீ அறியவில்லையா?
அவசரத்தில் பேரூந்தில் யாரையும்,தொடாமல்  வா...கொரோனா ஒளிந்து கொண்டு உன்னை தாக்க தயாராகவே காத்திருக்கிறது.
திரும்ப வீட்டுக்குச் சென்று கவனமாக இரும்மா.
கொரோனா அச்சத்தில் படிக்க மறந்து விடாதே....நீ மேல்நிலைப் படிக்க இத்தேர்வு முக்கியம் என்பதால் தான் உனது உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலையிலும் தேர்வு எழுத சொல்கிறோம்..
எங்களையும் மீறி கொரோனா தாக்கினால் முதலில் எங்களை கொல்லட்டும் என்று கொரோனாவிடம் கெஞ்சுவதைத் தவிர வேறு வழியின்றி தவிக்கிறோம்.

பெண் குழந்தையை இரவில் தொலைத்துவிட்ட தாயின் தவிப்போடு.....பணி செய்ய காத்திருக்கிறோம்....

கீதா

Wednesday, 16 November 2016

முன் மாதிரிப்பள்ளி-செவ்வாய்ப்பட்டி ஊ.ஒ.ந.நி.பள்ளி கரம்பக்குடி ஒன்றியம்.புதுக்கோட்டை





ஒன்பது மஞ்ச வேன் வந்த ஊர்ல இப்ப ஒண்ணு தான் வருது அதையும் வராம பண்ணிடுவோம்..

தன்னம்பிக்கையோடு கரம்பக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமிகு சந்திரா அவர்கள் சொன்ன போது நம்பவே முடியவில்லை தான்..ஆனால்...

27.10. 16 இன்று கரம்பக்குடியில் உள்ள செவ்வாய்ப்பட்டி ஊராட்சி ஒன்றியநடுநிலைப்பள்ளிக்கு பள்ளிப்பரிமாற்றத்திட்டத்தின் படி காலை 8.00 மணிக்கு கிளம்பி  குழந்தைகளின் நடனங்களால் வாகனம் அதிர அதிர 9.00 மணிக்கு இருபது மாணவிகளுடன் ,எங்கள் பள்ளித்தலைமையாசிரியர் ,பொறுப்பாசிரியர்கள் கிருஷ்ணவேணி மற்றும் கீதா[நான்] ஆகியோர் சென்றோம்..

பள்ளியின் நுழைவாயிலில் மாணவர்களும் பள்ளித்தலைமையாசிரியருடன் அனைத்து ஆசிரியர்களும் வந்து வரவேற்றனர்..

சாரண ,சாரணீய மாணவர்களின் சீருடை அணிவகுப்பு மரியாதை மிக நேர்த்தியாக ,சிறந்த காவலர்கள் அணிவகுப்பிற்கு இணையாக மாணவர்கள் அணிவகுத்து சென்ற விதம் மிக அருமை...

கொடியேற்ற நிகழ்விற்கு பின் , அனைவருக்கும் மாணவர்களே தயாரித்த பூங்கொத்து கொடுத்து, வரவேற்று, இறைவணக்கக் கூட்டம் நடந்தது.
சந்தைப்பேட்டைபள்ளியின்  தலைமையாசிரியர் திருமிகு அமுதா அவர்கள் வாழ்த்துரை வழங்க,மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளோடு அன்றைய நாள் துவங்கியது..



மாணவிகளின் கைகளில் நூல் கண்டைக் கொடுத்து நட்சத்திரமாக வடிவமைத்து பின் அழகாகப்பிரித்து அவர்களின் நட்பை வலுப்படுத்திய விதம் அருமை.

வகுப்பறையா அல்லது விண்வெளியா என மலைத்து நின்றோம். அறியலின் முன்னேற்றங்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கி உலகத்தை மாணவர்களுக்கு காட்டி வருகின்றது.

தலைமையாசிரியர் திருமிகு சந்திரா அவர்கள் எட்டாம் வகுப்பு தமிழ்ப்பாடத்தை மிக அருமையாக ஸ்மார்ட் கிளாஸாக எடுத்தார்..பாட அறிமுகம் செய்ய திருமிகு அழகேஸ்வரி ஆசிரியரின் சைகை மொழி நடிப்பு மிகவும் பாராட்டுதற்குரியது..
வீர சிவாஜியின் வசனத்தை மாணவர்கள் நடித்து காட்டி வகுப்பிற்கு மெருகூட்டினர். 
















உணவுத்திருவிழா கண்காட்சியை உயர்திரு உதவிக்கல்வி அலுவலர் கரம்பக்குடி அவர்கள் திறந்து வைத்தார்கள்....கூடுதல் உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் அவர்களும் ,வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளர்களும் கலந்து கொண்டு கண்காட்சியைச்சிறப்பித்தனர்.





















மாணவர்கள் காய்கறிகளை பல உருவங்களாகச்செதுக்கி அதன் பயன்களை ஆங்கிலத்திலும் ,தமிழிலும் எடுத்துரைத்த விதம் மிகச்சிறப்பு...ஆங்கில எழுத்துகள் ஏ முதல் இசட் வரை உள்ள பெயர்களைக்கொண்ட காய்கள் மற்றும் பழங்களைத் தேடித்தேடி அதை கண்காட்சியில் வைத்து அதன் சிறப்புகளை மாணவர்களைக் கூற வைத்த தலைமையாசிரியரையும்,உடன் ஒத்துழைத்த ஆசிரியர்களையும் மனம் நிறைந்து பாராட்டலாம்.

வகுப்பறைச்சுவர்கள் கண்கவரும் ஓவியங்களோடு கருத்தையும் கவர்ந்தன.
பள்ளிக்கு முன் மிகப்பெரிய விளையாட்டு மைதானம் அமைந்து தூய்மையான காற்றையும் ,பள்ளிக்கு ஒரு பிரமாண்டத்தையும் தந்து கொண்டுள்ளது.

கழிப்பறைகள் மிகத்தூய்மையாக இருந்ததைக்கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை.   

மாணவர்கள் சுற்றுப்புறச்சூழலை மிகத்தூய்மையாக வைத்திருக்கிறார்கள்.
ஒவ்வொருவரும் பொறுப்புணர்ந்து செயல்படுகின்றனர்...அவர்களே இந்நாட்டின் விதைகள் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.

உள்ளூர் மக்களின் ஒத்துழைப்பும்,தங்கள் பள்ளிக்காக ஆசிரியர்கள் அனைவரும் மாதம் ரூபாய் 500 பங்களித்து பள்ளிக்குத்தேவையான வசதிகளைச்செய்வது அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எல்லாம் ஒரு எடுத்துக்காட்டு.
தனியார் மூலம் தொடுதிரை கணினி வகுப்பு அமைத்துள்ளது தலைமையாசிரியரின் அர்ப்பணிப்புக்கு கிடைத்த பரிசு எனலாம்.

தமிழ்நாடு அரசு நல்லாசிரியர் விருது கொடுத்து தலைமையாசிரியர் திருமிகு சந்திரா அவர்களை கௌரவித்துள்ளது.தனக்கான அரசு அளித்த பரிசுத்தொகையினையும் அப்பள்ளிக்கே தந்து மகிழ்ந்த அவரை என்ன சொல்லி பாராட்டுவது எனத்தெரியாமல் திகைக்கின்றேன்.

இத்தனைக்கும் காரணம் தன்னுடன் பணிபுரியும் சக ஆசிரியர்களே என எளிமையாகக்கூறி ,அவர்களை பொறுப்பு மிக்க ஆசிரியர்களாக உருவாக்கியுள்ளார்.அத்தனை ஆசிரியர்களும் மாணவர்களும் கொண்டாடும் அப்பள்ளியின் தலைமையாசிரியர் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஓர் மிகச்சிறந்த உதாரணம்.

செவ்வாய்ப்பட்டிக்குள் வந்த ஒன்பது மஞ்சள் வாகனங்களை அழித்து அவ்வூருக்கு திறமையான குழந்தைகளை உருவாக்கி தந்து வருகின்றார்.
படிப்பிலும் ,ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கும் மாணவர்களை உருவாக்கி வரும் அத்தனை நல்ல உள்ளங்களுக்கும்
மனம் நிறைந்த வாழ்த்துகள்.  



Monday, 14 November 2016

குழந்தைகள் தின விழா14.11.16


குழந்தைகள் தின விழா14.11.16

இன்று எங்கள் பள்ளியில் குழந்தைகள் தினவிழா மிகச்சிறப்பாக நடந்தது..
 
மாணவிகள் பாடல் ,நடனம்,பேச்சு என அசத்தி விட்டார்கள்.
 
ஆசிரியர்கள் மாணவிகளுக்காக பாடல் பாடி மகிழ்வித்தனர்...
 
மாணவிகள் கைதட்டி ,ஆர்ப்பரித்து மகிழ்ந்த கணங்கள்...வாழ்வின் இனிமையானவையாக..