அரசுப்பள்ளி மாணவிகளின் துயரங்கள் நிறைந்த வகுப்பு
நேற்று காலை எட்டாம் வகுப்பு மாணவிகளுடன் சில மணித் துளிகள் இருக்க விரும்பிச் சென்றேன்..
அவர்கள் மிகவும் சேட்டை செய்கிறார்கள் கட்டுப்படுத்தவே முடியவில்லை என்று குற்றச்சாட்டுகள். அதனால் என்ன தான் பிரச்சினை என்று அறிந்து கொள்ள உரையாடலைத் துவங்கினேன்.
அவர்களிடம் இக்கால மாணவிகள், மாணவர்களின் இயல்பை குறித்து மூன்று குழுவாக பிரிந்து பேச வேண்டும் என்று கூறினேன்.
ஒரு குழு மாணவிகள், பெண்கள் அக்காலத்தில் படிக்க வாய்ப்பு இல்லை இக்காலத்தில் படிக்க வாய்ப்பு உள்ளது, இருந்தாலும் சிலர் படிப்பதில்லை. அவர்கள் செல்லிற்கு அடிமையாக இருக்கிறார்கள் என்றாள்.
இன்னொரு மாணவி ஆண்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக ஆடை அணிகிறார்கள் அலங்கரித்துக் கொள்கிறார்கள் என்று கூறினார் .
நான் இது பொதுவாக எல்லோரும் கூறும் கருத்து நான் உங்களிடம் இன்னும் ஆழமாக எதிர்பார்க்கிறேன் .
நீங்கள் என்ன விரும்புகிறீர்கள்? எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் ?என்று கேட்டேன்.
இக்கால பெண்கள் பேண்ட் சர்ட் போட்டுக்கிட்டு கடை தெருவுல சுத்துறாங்க .அதனாலதான் அவர்களுக்கு பாதிப்பு வருது என்றாள்.
அப்படி என்றால் பெண்கள் விரும்பி ஆடை அணியக்கூடாது விரும்பிய இடத்திற்கு போகக்கூடாது என்று கூற வருகிறாயா?
ஆண்கள் சுதந்திரமாக செல்லும்போது பெண்கள் ஏன் செல்லக்கூடாது? உன்னுடைய கருத்து சென்ற தலைமுறையின் கருத்து .நமது மூலையில் சலவை செய்யப்பட்ட கருத்து. இது உன் அம்மா கூறலாம். நீ பெண்களுக்கு எங்கு சென்றாலும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று கருதுவது நியாயம்.
சமூகம் பெண்களை உடல் பொருளாக பார்க்கிறது அதனால் அவர்களுக்கு பாதிப்பு வருகிறது ஆண்கள், பெண்களை சமமாக கருத அவர்கள் குழந்தையிலிருந்து கற்றுத் தர வேண்டும்.
ஆண் பெண் சமத்துவம் குழந்தை பருவத்தில் இருந்து வரவேண்டும். இருவரும் வேலைகளை பகிர்ந்து செய்வது இயல்பாக வேண்டும் என்று கூறினேன்.
இப்படி பேசிக்கொண்டு இருக்கும் போது ஒரு மாணவி அம்மா நான் சொல்கிறேன் என்று எங்கள் வீட்டில் அப்பா அண்ணன் நான் தம்பி தான் இருக்கிறோம் அம்மா கோபித்து கொண்டு ஊருக்கு போய் பல வருடங்கள் ஆச்சு.எங்கள் அப்பா தான் எங்களை வளர்க்கிறார்கள்.நான் இன்ஸ்டாகிராமில் இருக்கிறேன் எது செய்தாலும் அப்பா அண்ணனிடம் சொல்லி விடுவேன்.அப்பா என்னை செல்லமாக வளர்க்கிறார்.அம்மா மாதிரி இதுவும் போயிடும் என்று சிலர் திட்டும் போது வலிக்கும் அண்ணன் என்னை அம்மா போல வளர்க்கிறான்.
அவனே சில நேரங்களில் சமைப்பான்.இன்று கூட பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போதும் விடுப்பு எடுத்து பொங்கல் வேலை பார்க்கிறான் என்றாள்.
இன்னொரு பெண் மாணவி அம்மா, நான் பிறக்கும் முன், எனது அப்பா இறந்து விட்டார்கள். 18 வயதிலிருந்து என் அம்மா எங்களை வளர்க்கிறார்கள். என் அம்மா யாரிடம் பேசினாலும் தவறாக பேசுபவர்கள், இப்போது என்னையும் தவறாக பேச ஆரம்பித்து விட்டனர் என்று ஒரே அழுகை. அவளை தேற்றுவதற்குள், இன்னொரு மாணவி அம்மா ,எனது அப்பா வீட்டு சண்டையில் தூக்கு மாட்டிக் கொண்டார்கள். நான் தான் காரணம் என்று எல்லோரும் என்னை அப்பாவை விழுங்கி விட்டு பிறந்த என்று கூறுவார்கள் அம்மா என்று கதறினாள்.
இப்படி ஒவ்வொரு மாணவிக்கும் ஒரு துயரம். ஒரு மாணவி கூறுகிறாள் நான் ஒரு முறை தவறு செய்து விட்டேன் ஆனால் அதை உணர்ந்து இப்போது திருந்தி விட்டேன் ஆனால் என் வீட்டில் யாரும் என்னை நம்புவதில்லை .நான் எதை செய்தாலும் அதில் குற்றம் கண்டுபிடித்து அடிக்கிறார்கள். எனக்கு உயிரோடு இருக்கவே பிடிக்கவில்லை அம்மா என்றாள். அவளது கண்ணீரை கட்டுப்படுத்த முடியாது நானும் அழத் துவங்கினேன். இன்னொரு மாணவி எனக்கு இருவரும் இருந்து பிரயோஜனம் இல்லை அம்மா. எனது அப்பா இன்னொரு திருமணம் பண்ணிக் கொண்டார்கள், அம்மா எங்கேயோ சென்று விட்டார்கள். எங்கள் அப்பாயி தான் என்னை வளர்க்கிறார்கள். அப்பா அம்மாவை பற்றி எல்லோரும் பேசும்பொழுது எனக்கு இல்லையே என்று வருத்தமாக இருக்கும் என்று அழுத போது கையறு நிலையில் தவித்தேன் .
இப்படி 51 மாணவர்கள் இருந்த அந்த வகுப்பறையில் 40 குழந்தைகள் தனித்தனி சிக்கலிலும்ஃ பிரச்சனைகளிலும் சிக்கி கேட்பதற்கு ஆளின்றி தவித்துக் கொண்டிருந்ததை உணர்ந்தேன்.
வகுப்பே அழுது நின்ற காட்சி, என்னால் இந்த 34 வருட ஆசிரியப் பணியில் கண்டறியாத ஒன்று. மனம் கனத்து செய்வதறியாது கலங்கி கலங்கி நின்றேன் இன்னும் பல நாட்களுக்கு இந்த நினைவுகள் என்னை கனக்கச் செய்யும்.
கனம் நிறைந்த அந்த பொழுது அந்த குழந்தைகள் வாழ்வில் எல்லாவற்றையும் பெறுவதற்கு துணை நிற்க வேண்டும். உன்னை கேவலமாக பேசுபவர்கள் முன் நீ நேர்மையாக வாழ்ந்து அவர்கள் உன்னிடம் பேசவே தயங்கும்படி வளர்ந்து காட்ட வேண்டும் என்று ஆற்றுப்படுத்தவே முடிந்தது.
ஒரு அரசு பள்ளியின் துயர வகுப்பாக அமைந்தது. இன்னும் எத்தனை மாணவிகள் இப்படி ஆறுதலுக்கான கரங்களையும், மனதையும் நாடி நிற்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் இத்தனை துயரங்களையும் வென்று சாதிப்பார்கள் என்ற நம்பிக்கை அவர்களுக்கு கொடுக்க என்னால் முடியும்.
ஆசிரியர்கள் தோழர்கள் பாடம் நடத்துவதை விட ,மாதத்தில் ஒரு நாள் குழந்தையின் சிக்கல்களை, பிரச்சனைகளை கேளுங்கள் அவர்களின் துயரங்களை துடைக்கும் கரங்களை நாடுகிறார்கள் கேட்கவாவது காதுகள் கிடைக்கட்டும்
கண்ணீருடன் ,
மு.கீதா புதுக்கோட்டை.