World Tamil Blog Aggregator Thendral: நூல் வெளியீடு
Showing posts with label நூல் வெளியீடு. Show all posts
Showing posts with label நூல் வெளியீடு. Show all posts

Tuesday, 21 November 2017

வேலுநாச்சியார் நூல்

எனது முதல் வேலுநாச்சியார் ஆய்வு நூல் மறுபதிப்பில்

"வேலுநாச்சியார் நாவலில் பெண்ணயச்சிந்தனைகள் "-
இளமுனைவர் பட்ட ஆய்வு நூலாக மறுபதிப்பு காண்கிறது .

எழுத்தாளர் கே.ஜீவபாரதி அவர்களின் வேலுநாச்சியார் நூலே எனது வாழ்வை புரட்டி போட்ட ஒரு நூல் அன்றிலிருந்து இன்று வரை என் குருதியில் கலந்த பெயர் ...நினைக்கும் தோறும் சிலிர்க்கும் அவரது திண்மையும் ,திறமையும் .

சமீபத்தில் சென்னையில் வேலுநாச்சியார் என்ற பெயர் கொண்ட ஆசிரியரைப்பார்த்த போது என்னவோ அவரையே பார்த்த மகிழ்வு .

ஜான்சிராணிக்கு 77 ஆண்டுகளுக்கு முன்பே சிவகங்கை சீமையை தந்திரமாகப்பி டித்த ஆங்கிலேயரை எட்டு வருடங்கள் மறைவு வாழ்க்கை வாழ்ந்திருந்து மன்னர்ஹைதர் அலியின் உதவியோடு அடித்து விரட்டிய வீரமங்கை வேலுநாச்சியார் தமிழகப் பெண்களுக்கு முன் உதாரணம் .

அவரது பன் மொழித்திறமை ஆசம்.திருமணப்பரிசாக ஒரு சிறுமி குதிரை கேட்க முடியுமா ?கேட்டவர் அவர் .
அப்படி கேட்கும் உரிமையைத்தந்தவர் அவரது தந்தையார் இராமநாதபுர மன்னர்செல்லமுத்து சேதுபதி .

அவரது பிரியத்திற்குரிய குயிலியே சுதந்திரப்போரில் முதல் தற்கொடைப்போராளி ....தாய்நாட்டிற்காக தனது உடலில் நெய்ஊற்றிக்கொண்டு ஆங்கிலேயரின் ஆயுதக்கிடங்கை சின்னாபின்னமாக்கிய தீரப்பெண்மணி.
தனது அரசிக்காக அவரைக்காட்டிக்கொடுக்க மறுத்து தனது தலையையே தந்தவள் உடையாள் எண்ணும் சிறுமி .அவளின் தியாகத்திற்கு தனது வைரத்தாலியையே பரிசாகத் தந்து பெருமைப்படுத்தியவர் வேலுநாச்சியார் .
நம் குழந்தைகளுக்கு அடையாளம் காட்டி ,அவரது பெயரை இட்டு வளர்க்க தகுதியானவர் .

சிலர் அவரை சாதிக்குள் அடைக்கலாம்.ஆனால் யாராலும் அடைக்க முடியாத மாபெரும் பெண்மணி வீரமங்கை வேலுநாச்சியார் ...
அவர் குறித்த ஆய்வை செய்ததே எனது வாழ்நாள் பயன் பெற்றதாக உணர்கிறேன் .மேன்மை பதிப்பகம் இந்நூலை அச்சிடுகிறது ...
மிக்க நன்றி அவர்களுக்கு .

Sunday, 24 September 2017

மனம் சுடும் தோட்டாக்கள் -கவிதை நூல் விமர்சனம்

எனது நான்காவது நூலான மனம் சுடும் தோட்டாக்கள்.... கவிதை நூல் விமர்சனம்..
 கவிஞர் மீரா செல்வகுமார் அவர்களின் கவிதை நடையில்.. 
"வேலைக்குப்போகும்
ஒரு சராசரிப் பெண்ணால் என்னவெல்லாம்
 செய்திடமுடியும்..
 புதுப்புது சேலைகள்..
புருவம் சிரைத்தல்
 புரணிகள் பேசுதல். தொலைகாட்சித்தொடர்
செய்யும் லீலைகளுக்காய்
கண்ணீர் சிந்துதல்?
 ஒ
ஒருவேளை
நீங்கள்
 கொஞ்சம்
முற்போக்கானவரெனில்..
புத்தகங்கள் வாசிக்கலாம்..
அறிவார்ந்த
 விமர்சனங்கள்
செய்யலாம்.
ஆடைகளில்
கொஞ்சம்
ஆணுக்கான
சாயல் கொள்ளலாம்..
அரசியல் சார்ந்த
பிண்ணனி எனில் சமூகப்பொறுப்புகளை
சுமக்கலாம்..
இவற்றில்
எந்த சம்பந்தமும்
 இல்லாத
ஒரு அரசுப்பள்ளியின்
 ஆசிரியை
எத்தனை
கோணங்களில்
விஸ்வரூபமெடுத்து
 நிற்கிறார்..
நகரின்
புதிய கடையொன்றில்
 வாங்கியிருக்கும்
ஆடையோ
அணிமணியோ
காட்டுவதற்கென்றே
கூடும்
ஆசிரிய அலுவல்
 கூட்டங்களில்
 சம்பந்தமில்லாத
 புத்தகங்களை
இவர்
ஏன் புரட்டிக் கொண்டிருக்கிறார்... மொக்கை
நகைச்சுவைகளுக்கு
கைதட்டி ஆர்ப்பரிக்கும்
ஒரு கூட்டத்தில்
அமர்ந்திருக்கும்
விரல்விட்டு
எண்ணிவிடக்கூடிய
மகளிர் இடையில்
 இவர் என்ன
குறிப்பெடுப்பார்?
 ஜல்லிக்கட்டு
 போராட்டங்களின்
 ஒவ்வொரு
மாலையிலும்
 இவர் முழங்கிக்
கொண்டிருக்கிறார்..
சக தோழர்களின்
போராட்டங்களில்
 தன் சங்கத்தை மீறி
கைதாகிறார்..
மொட்டை
வெயிலடிக்கும்
 மைதானத்தில்
 ஏதோ எழுதிக்
 கொண்டிருக்கிறார்..
அது சூரியனைச்
 சுட்டெரிக்கும் கோஷங்களாக குரலுயர்த்துகிறது..
சக மனிதன்
 ஒருவன்
மரித்துப்போனதற்கு
மண்டியிட்டு
 ஏன் அழவேண்டும்..
இறந்தவன்
மறந்தவனான பின்னும்
அவன்
குடும்பத்திற்கு
தாயாய்
ஏன் இருக்கிறார்?
மாணவிகளின்
 புத்தகங்களை சரிபார்க்கும்
சக மனுஷிகளிடை
இவர்
 ஏன்
அவளின்
சாப்பாட்டுபெட்டியின்
 எடைகுறைவை
ஆராய்கிறார்.?
 இலக்கியக் கூட்டங்களா? ஆலோசனைக் கூட்டங்களா? இவருக்கான
இருக்கை
இருகை
 நீட்டி
எப்போதும் கிடக்கிறது..
யார் இவர்..
இவருக்கும்
இந்த இடங்களுக்கும்
என்ன தொடர்பு...
புத்தனைப்போல்
போதிமரம்
தேடியெல்லாம்
 போக வேண்டியதில்லை...
அவன்
சொன்னதைப்போல
இவர்
ஆசைப்படவும் இல்லை... பேராசைப்படும்
ஒரு..
மனிதம்
நேசிக்கும் மனுஷி..
அவ்வளவே..
புதுகையின்
 இன்னொரு
அடையாளமாகவே
மாறிவிட்டிருக்கும்
 ஒரு பெண் படைப்பாளர்..
போராளி..
சமூக செயற்பாட்டாளர்.
 இன்னும்
 இன்னுமாய்
 பன்முகம் காட்டும்
தேவதா தமிழ்...
பல பாத்திரங்களை
சுமந்தாலும்
கவிஞர் என்னும்
கனமான
வேலையை
மிக அழகாய்ச்
செய்வதில்
எப்போதும்
வென்றுவிடுகிறார்...
 முகநூல்
 பக்கங்களில்
 பதிவதை
 விருப்பக்குறி
இடுவதும்
 பகிர்வதும்
 எப்பவும்
 உள்ளதுதான்..
எனினும்
 இவர் பதிவுகள்
படைத்தவர்
 பெயரை மட்டும்
மாற்றிக்கொண்டு
 உலவுவதில்
உலக சாதனை
 செய்திருக்கிறது...
 வேலுநாச்சியை
வெறிகொண்டு
எழுதிய விரல்கள்
இவருக்கு
உரித்தானது..
தவிப்புகளை
 பதியும்
இவரின்
நூல்களுக்கு
தலைப்புகளும்
 கூடவே
 தவமிருப்பதாய்
 தெரிகிறது...
 ஒரு கோப்பை
 முழுக்க
என்ன வேண்டும்
 உங்களுக்கு..
 உங்கள்
 ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு
 ஆசைகள் இருக்கலாம்...
எனக்கு
 நல்ல காப்பி
என்பேன்...
ஆயின்
இவர்
 "ஒரு கோப்பை மனிதம்"
தந்திருக்கிறார். "
விழி தூவிய விதைகள்"
 இன்னொரு தலைப்பு...
மீண்டுமொரு
 கவிதை
 ஆயுதத்தை
தூக்கிவந்திருக்கும்
 தேவதா தமிழ்
 இந்தமுறை
மனங்களை சுட
தோட்டாக்கள்
தொடுத்திருக்கிறார்...
"மனம் சுடும் தோட்டாக்களை"
நாம்
புன்னகையுடனே
வாழ்த்தி
 அனுமதிக்கலாம்...
அழகிய வடிவமைப்பு..
நெய்வேலியின்
 காகிதம் பதிப்பகம்
 நிறைவாய்
செய்திருக்கிறது
 அச்சிடலை..
நூலின்
வரவேற்பறையாய்
அயலகச் சகோதரி
கிரேஸ் பிரதிபா
 அணிந்துரை
அழகூட்டி இருக்கிறார்...
 74 பக்கங்களில்
73 தலைப்புகளில்
கவிதைகள்
. நூலுக்கென
இல்லாமல்
 மனசைப் பிசையும்
 சம்பவங்களுக்கு
 வரிகளால்
அழுத
நாட்குறிப்புகளாய்
 கொட்டிக்கிடக்கிறது
 தோட்டாக் கவிதைகள்..
ஷர்மிளா,
 ஸ்வாதி
 அருணிமா
 என
அலங்கோலப்பட்ட
 பெயர்களை
 தலைப்பாக்கி
தவிப்புகள்
சொல்லும் போது
அழும்
இவரது கவிதைகள்...
குட்டிம்மா
சின்ன கண்ணம்மா
என
சிற்றாடை கட்டி
 ஊஞ்சலாடுகிறது...
மாரியம்மாவும்
 இவர்
கவிதைக்கன்னியில் மின்னியிருக்கிறாள்.. ஞானக்கூத்தனுக்கும்
 கலாமுக்குமென
 விரிகிறது
கவிதைகள்...
இப்போதைய
பெரும்பாலான
கவிஞர்களைப்
போலவே
புதிய
வார்த்தைகளுக்கான
 மெனக்கெடல்
அதிகம்
தென்படாவிட்டாலும்
வசப்பட்ட
வார்த்தைகளை
வாசப்படுத்தியிருக்கும்
 லாவகம்
 பாராட்டுக்குரியது..
 உலகில்
இனி
காகிதங்களுக்கு
 ஏதேனும்
 தட்டுப்பாடு
 வந்து விடுமோ
 என்ற
தீர்க்க தரிசனத்தில்
 அட்டைகளை
தவிர்த்து
 அடைத்து வைத்திருக்கும்
கவிதைகள்
அவதிப்படுவது புரிகிறது..
இப்படியும் சொல்லலாம்...
கவிதைகளின்
அடர்த்தி போலவே
 அவை
அமர்ந்திருக்கும்
இடமும்
அடர்த்தியாய்
இருக்கிறது.
. வீதியில்
 ஊரில்
 மாவட்டத்தில்
 மாநிலத்தில்
தேசத்தில்
 உலகில்
எங்கெல்லாம்
பெண்
 பேசு பொருளாகும்
அவலங்கள் நிகழ்கிறதோ அப்போதெல்லாம்
நெஞ்சை நிமிர்த்தி
இவர் பேனா
தலைகுனிந்து
விடுகிறது..
புயலாய்ச்
 சீறும் கவிதைகள்
அதிகமிருக்கும்
 பாலைவனச்சூட்டில்
சோலையென
 தலைகாட்டி
 விடுகிறாள்
 சின்னக்கண்ணம்மா..
கவிஞர்
நல்ல தாயை தாண்டி
 பாட்டியான
 பரிணாம வளர்ச்சியில்
தெரியும் மகிழ்ச்சி..
 நமக்கும்...
 மேம்போக்காகவே
நகரும்
அறிமுகத்தை
கொஞ்சம்
கவிதைகளின்
பக்கமும் நாம்
 திருப்பலாம்..
 ஒரு படைப்பாளிக்கும்
 படிப்பவனுக்கும்
பெரிய வித்தியாசம்
இல்லைதான்...
படிப்பவன்
அநேகமாச்
சொல்வது
 இதுவாய்த்தான்
 இருந்திருக்கும்
நான் நினைச்சேன்
 இவர்
சொல்லிவிட்டார்...
இந்தக் கவிதையும்
 அப்படித்தான்...
 "பார்க்காமலே
பேசாமலே
பழகாமலே
பிரியாமலே
வருந்தாமலே
வாழாமலே
சிறகென
மிதந்திருக்கலாம்"
இப்படி ஒரு வரிகளை
 நீங்கள்
நினைத்துக் கொண்டே
இருங்கள்..
இவர் எழுதிவிட்டார்...
தொகுப்பு முழுவதும்
வாசிக்கையில்
ஒட்டிக்கொள்ளும்
கவிதைகளை
 தட்டிவிட முடியாதது
விந்தைதான்..
கவிதைகளை
கவிஞனின்
இதயத்தோடு
 வாசிப்பீர்கள்
எனில்
நாமும் பறக்கலாம்..
 புதுவையில் புதுமுகமும்
புதுகையில் அறிமுகமும்
 கண்ட
 "மனம் சுடும் தோட்டாக்கள்"
என்னும்
 இந்நூலை
வாசிப்புக்கென
 எடுத்து
சிறுக
என் புரிதலை
 பகிர்ந்திருக்கின்றேன்..
இந்தப்பெண்
போற்றுதலுக்கு
உரியவர்...
உணவிடும்
பெண்ணினினும்
உணர்வூட்டும் தாய்மை
 பாராட்டவும்
சீராட்டவும்
 படவேண்டியது...
மீண்டும் மீண்டும்
 புத்தகத்தின்
 பக்கங்களில்
மூழ்கும்போது
 புதுப்புது அர்த்தங்கள்.
காலமும்
வாய்ப்பும்
கைகூடுமெனில்
பின்னொரு நாளில்
இந்த நூலை
 நானே
புதிய கோணத்தில்
பார்த்ததை
 சொல்லலாம்...
இப்போது
 இவரின்
ஒற்றைக் கவிதையோடு
அறிமுகம் முடிக்கலாம்...
 "நிலம் பார்க்க நடந்தவளே..
 விண்ணில் நடை பயின்றாள்..
இமையம் தன் காலடியிலென அறைகூவினாள்.
காலெனப் பறக்கின்றாள்
காமுகர்களின் மத்தியில்..
கட்டிவைத்த மடமைகளை
காட்டுத்தீயாய் கருகிடச் செய்தாள்.. எதையும் துணிவாய் முடிக்கின்றாள் எள்ளியவர்களின் வாயடைத்து..
சந்ததி வளர்த்திடும் சக்தியானவள். சரித்திரம் படைக்கவே புறப்பட்டாள்.. சாத்திர சகதியை துடைக்கவே
சங்கென முழங்கி உயர்ந்திட்டாள்.. இனியவள் பாதை தெளிவாக
இனிதே புன்னகை புரிந்திட்டாள்.. தன்னோடு
தம்மின் குடும்பத்தையும்
தரணியே
புகழச் செய்திட்டாள்""
தலைப்பு
இக்கவிதைக்கு
பாரதி கண்ட
புதுமைப்பெண்...
 நன்றி வணக்கம்.. " ‌.

Friday, 25 August 2017

வீதி கலை இலக்கியக்களம் -42

 வீதி கலை இலக்கியக்களம் -௪௨

"மனம் சுடும் தோட்டாக்கள் "மு,கீதா ,

"ஒரு பட்டமிளகாயும் கொஞ்சம் உப்பும் "மீரா செல்வகுமார் .

கவிதை நூல்கள் அறிமுக விழா .

எளிமையாக அறிமுகம் செய்ய நினைத்து ....கவிஞர் முத்துநிலவன் அண்ணாவால்  கலை கட்டுகின்றது....

உங்கள் வரவு எங்கள்வீ தியை சிறப்பிக்கும் அவசியம் வருக...











Monday, 21 August 2017

manam sudum thottakkal-மனம் சுடும் தோட்டாக்கள் நூல் வெளியீடு

காகிதம் பதிப்பகத்தின்
 "மனம் சுடும் தோட்டாக்கள். 
"ஒரு பட்ட மிளகாயும் கொஞ்சம் உப்பும் " ,
"அழுக்கு தேவதைகள் "ஆகிய மூன்று கவிதை நூல்களின் வெளியீட்டு விழா 


புதுச்சேரி தமிழ்ச்சங்கத்தில்சிந்துவெளி அமைப்பின் மூலம் மூன்று கவிதை நூல்கள் வெளியீட்டு விழா 19.8.21 சனிக்கிழமை அன்று மாலை 6 மணியளவில் ...

 வயலோசை முனைவர் பாலதண்டாயுதம் பாடலுடன் இனிமையுடன் துவங்கியது .

 வரவேற்புரை:

 கவிஞர் முனைவர் செல்வகுமாரி அவர்கள் அனைவரையும் மகிழ்வுடன் வரவேற்றார் ....

 வாழ்த்துரை

 திராவிட இயக்கத்தின் பாரம்பரியத்தை ,சிந்துவெளி நாகரீகத்தின் சிறப்புகளை விரிவாக எடுத்துரைத்து வாழ்த்தினார் .கவிஞர் முனைவர் சிவ.இளங்கோ அவர்கள் .


           கவிஞர் சண்முகசுந்தரம் அவர்கள் நகைச்சுவையான வாழ்த்துரையால் அரங்கத்தை கலகலப்பாக்கினார் .

 நூல் வெளியீடு

                     புதுச்சேரி அரசு கொறடா திரு இரா.அனந்தராமன் அவர்கள் கவிஞர் தேவதாவின் "மனம் சுடும் தோட்டாக்கள் ", கவிஞர் மீரா செல்வகுமாரின் "ஒரு பட்ட மிளகாயும் கொஞ்சம் உப்பும் " கவிஞர் ஆயுதாவின் "அழுக்கு தேவதைகள் " ஆகிய கவிதை நூல்களை வெளியிட்டு வாழ்த்தினார் ..தமிழ் மேல் இருந்த அவரது பற்றை உணர்த்தும் வகையில் சிறப்பானதொரு வாழ்த்தை வழங்கினார் .

              நூல்களை பெற்று சிறப்பித்த தமிழ்மாமணி பூங்கொடி பாராங்குசம் அவர்கள் புதுச்சேரியில் பாவேந்தர் வாழ்வில் முக்கிய இடம் பெற்ற கவிஞர் புதுகை சிவம் அவர்களின் மகள் என்பது எனது நூலுக்கு கிடைத்த பெருமையாகக் கருதுகின்றேன் .
 நூல் பற்றிய மதிப்புரை

 முனைவர் அவ்வை .நிர்மலா , கவிஞர் மு.பாலசுப்ரமணியன் மற்றும் கவிஞர் முனைவர் ப.இரவிக்குமார் ஆகியோர் நூல்களின் சிறப்புகளை மிக அழகாக எடுத்துரைத்தனர் .
 தலைமையுரை

                     கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள் புதுகைக்கும் புதுவைக்கும் பாரதிதாசன் காலத்திலேயே இருந்த உறவை அழகாக எடுத்துக்காட்டி கவிதை நூல்கள் குறித்தும் நூலாசிரியர்கள் குறித்தும்சிறப்புடன் உரையாற்றி புதுவை மக்களின் மனம் கவர்ந்தார் .

 நிறைவுப்பேருரை பேரா.முனைவர் .நா.இளங்கோ அவர்கள் தமிழ்க்கவிதையியல் வரலாற்றில் ,வளர்ச்சியில் இன்றையக் கவிஞர்களின் பொருத்தப்பாடு குறித்து நகைச்சுவையாக சிறப்புடன் பேசினார் .

ஏற்புரை

              நூலாசிரியர்களான கவிஞர் மீரா செல்வகுமார்
 கவிஞர் கீதா @தேவதா தமிழ் மற்றும் கவிஞர் ஆயுதா ஆகியோர் ஏற்புரை வழங்கினர் .

 நன்றியுரை

                 பண்டிதர் சா.து.அரிமாவளவன் அவர்கள் நன்றி கூறினார் .

 நிகழ்ச்சி தொகுப்பு
                   திருமதி சுபாசினி அவர்கள் சிறப்புடன் நிகழ்வைத்தொகுத்தளித்தார் . 

விழாவிற்கு புதுச்சேரியின் இலக்கியவாதிகள், தோழர் தமிழ்நெஞ்சம் ஆகியோர் கலந்து   கொண்டு சிறப்பித்தனர் .



                                 சென்னையிலிருந்து சகோ முரளி@Muralee Tharan ,சுபஸ்ரீ Subhasree Muraleetharan,காரைக்குடியில் இருந்து சகோ Kanmani Sundaramoorthy,திருச்சியில் இருந்து சகோ வி.சி. வில்வம் மற்றும் கியூபா ,செஞ்சையில் இருந்து தோழி Alli Ramadass,பாண்டிச்சேரியில் இருந்து தோழி Thanam Ragothaman மற்றும் வலைப்பதிவர் கலையரசி எனது அத்தை உமாதேவி ஆகியோர் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர் .


                         விழா இத்தனை சிறப்புடன் அமையக்காரணமானவர்கள் அன்புநிறை பெண்ணியம் செல்வக்குமாரிஅவர்களும் பண்டிதர் சா.து. அரிமாவளவன் அவர்களும் தான் .எனை அறியாத புதுவையில் என்னை அறிமுகப்படுத்திய விதம் வாழ்வில் என்றும் மறக்கவியாலாது .... மனம் நெகிழ்ந்த அன்புடன் அவர்களை மறுநாள் பார்த்துகலந்துரையாடி வந்தேன் .... 

என் வாழ்வில் மறக்கமுடியாத விழா இது ...

 வாழ்த்து கூறிய அன்புள்ளங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றியும் அன்பும் ..

Tuesday, 18 July 2017

மனம் சுடும் தோட்டாக்கள்

அன்புடன் அழைக்கின்றேன் .

எனது முன்றாவது கவிதை நூல் ....

புதுகை நூல் --------புதுவையில் உதயமாக உள்ளது ...

நாள் :19.8.17 -சனிக்கிழமை

இடம் :தமிழ் சங்கம். புதுச்சேரி .

"மனம் சுடும் தோட்டாக்கள்"

கவிதை நூல் வெளியீடு ...

அழைப்பிதழ் விரைவில் ..

Tuesday, 11 July 2017

எனது இரண்டாவது நூல் "விழி தூவிய விதைகள் "

எனது இரண்டாவது நூலும் முதல் கவிதை நூலுமான

"விழி தூவிய விதைகள்"

வளரி சிற்றிதழின்2015 [௨௦௧௫] ஆண்டிற்கான கவிப்பேராசான் மீரா விருது பெற்ற நூல் ...எனது மனம் உடைந்த காலங்களில் கவிஞ்சர் சுவாதியின் தூண்டலால் பிறந்த நூல் ....இதில் மூழ்கியதால் என்னையே நான் மறந்து இந்நூலை பிரசவித்தேன் என்று தான் சொல்ல வேண்டும் .

எனது கவிதைகள் இல்லை என் உணர்வுகளை அப்பட்டமாக பிரதிபலிக்கும் நூல் .இதில் தான் பல்லாயிரக்கணக்கில் இன்றும் உலா வரும் பெண்ணியக் கவிதை "எங்கே போவேன் "என்ற கவிதை வாழ்கிறது ...

வேலுநாச்சியார் பதிப்பகம் என்ற பெயரில் நானே பதிப்பித்த நூல் .தரமான தாள்கள் இருக்க வேண்டும் என்று கூறியதும் அச்சிட்ட திருமிகு எம்.எஸ் ஆர் .ரவி சகோதரர் ....அட்டை படத்தை முப்பரிமாணத்தில் எனக்கே தெரியாமல் சிவகாசியில் அச்சிட்டு சஸ்பென்சாக காட்டினார் .

முதலில் இந்த படத்தை தேர்வு செய்த போது இது வேண்டாம்மா ...பெரிதாக்கினால் உடைந்து வரும் என்றார் ...மிகவும் தேடி இணையத்தில் எடுத்த படம் ....ஓவியர் மகேந்திரனிடம் பெரிதாக வரைந்து தாருங்கள் எனக்கேட்டு வாங்கினேன் . பின் அதை சிறிதாக்கி உடையாமல் வரும் என்று அவரிடம் கூற அட்டையாக்கி தந்தார் ....

காரசாரமான கவிதைகள்...அழகியல் தவிர்த்த நேர்மையான கவிதைகள் என்று இதற்கு முன்னுரையும் அணிந்துரையும் எழுதிய கவிஞர் முத்து நிலவன் அவர்களும் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களும் ஒரே மாதிரியான உரையை அளித்த போது மனம் அடைந்த மகிழ்வைச் சொல்ல வார்த்தைகள் இல்லை ..

தொட்டாலே எனது குழந்தையை தொடும் உணர்வு ...வேதனையான காலங்களில் மடியில் வைத்துக்கொண்டு தடவிக்கொண்டிருப்பேன் ....சிறுபிள்ளையென...



இந்நூல் புதுகை நகர்மன்றத்தில் பெண்கள் மட்டுமே அலங்கரித்த மேடையில் தோழர் பானுமதி அவர்கள் வெளியிட கவிஞர் பாலா அவர்களின் இணையர் திருமிகு மஞ்சுளா அம்மா பெற்றுக்கொண்டார்கள் ...

Friday, 1 April 2016

கவிப்பேராசான் மீரா விருது பெற்ற ”விழிதூவிய விதைகள் நூல்”

கவிப்பேராசான் விருது பெறும் விழாவிற்கு மதுரை வலைப்பதிவர்களை அன்புடன் அழைக்கின்றேன் .
 நாள்:3.4.16 ஞாயிறு
 இடம்:நற்றிணை அரங்கு [மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் அருகில்] 

’விழி தூவிய விதைகள் கவிதை” நூல் வந்த பாதை

 எனது முதல் கவிதை நூல் அட்டைப்படம் சிறப்பா இருக்கனும்னு இணையத்தில் தேடிய பொழுது இப்படம் மிகவும் பிடித்து இருந்தது..ஆனால் புத்தகத்தை அச்சிட்ட திரு.இரவி அவர்கள் இதை புத்தக அளவில் பெரிதாக்கினால் உடைந்து போயிடும்மா..வேற படம் பாருங்க என்று கூறிய பொழுது இல்ல இதுதான் வேணும் என்ற பொழுது இதை பெரிதாக வரைந்து தந்தால் போடலாம் என அரை மனதுடன் கூறினார்.

 எனக்கு ஓவியம் கற்றுத்தந்த ஓவியர் மகேந்திரனிடம் கூறிய போழுது நிச்சயமா வரையலாம் அக்கான்னு அழகாக வரைந்து தந்துவிட்டார்.. 

கவிதைகள் அச்சிடும் தாட்கள் சிறப்பாக இருக்கனும்னு வழவழப்பான தாளைத்தேர்வு செய்தேன்... எனக்கே தெரியாம அட்டைப்படத்தை முப்பரிமாணத்தில் செய்து புத்தகத்தை பளபளப்பாக்கி விட்டார்..திரு இரவி அவர்கள்...

 கவிஞர் தங்கம் மூர்த்தி,கவிஞர் முத்துநிலவன்,கவிஞர் சுவாதி,தோழி கிருஷ்ணவேணி நூலுக்கு முன்னுரை,அணிந்துரை,நட்புரை வழங்கி அணி செய்தனர்...

 கவிதை நூலை கைகளில் தொட்ட பொழுது என் மகளை முதன்முதலாய் தொட்ட உணர்வு...

 நூல் வெளியீட்டுவிழா \
நாள்:2.12.2012

 இடம்: நகர்மன்றம் புதுகை

அன்று  எனது விழிதூவிய விதைகள் நூலும், கவிஞர் சுவாதியின் மழைவெளிதனிலே நூலும் வெளியிடப்பட்டன.
வரவேற்புரையை முனைவர் கண்மணி கவிதையாக வரவேற்றார்.

 தோழர் ஓவியா அவர்கள் தலைமை ஏற்றார்.

 திருமிகு பானுமதி அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்

 தோழர் ஓவியா அவர்கள் வெளியிட கவிஞர் பாலாவின் துணைவியார் அன்புக்குரிய மஞ்சுளா அம்மா பெற்றுக்கொண்டார்கள்..

 அன்புக்குரிய பட்டிமன்ற பேச்சாளரும் தோழியுமான திருமிகு .ரேணுகாதேவி அவர்கள் நூல் குறித்து சிறப்புரையாற்றினார்கள்.

 கவிஞர் ரத்திகா விழாவில் புத்தகங்களை அறிமுகம் செய்து வாழ்த்தினார். 

கவிஞர் சுவாதி நன்றி கூறினார்.

 முழுக்க முழுக்க நகர்மன்ற மேடை பெண்களால் நிறைந்து அழகு பெற்றது..