World Tamil Blog Aggregator Thendral: விழி தூவிய விதைகள்

Saturday 1 February 2014

விழி தூவிய விதைகள்


                                                           விழி தூவிய விதைகள்
                                                          ------------------------------கீதா

எனது கவிதை நூலுக்கு கவிஞர் .தங்கம் மூர்த்தி அவர்களின் முன்னுரை .

நேர்மையின் நிறமணிந்த கவிதைகள்

                                            ஒரு காட்டாறு
                                               ஒரு பேரருவி
                                               ஓர் ஆழ்கடல்
                                                ஓர் அடைமழை.....

                                                       ஒரு விதை
                                                       ஒரு காடு
                                                        நானே ஆகாயம்...
                                                        நானே அண்டம்
                                                       எனக்கென்ன எல்லைகள்
                                                       நான் இயற்கை
                                                        நான் பெண் -
என்றெழுதுகிறார் ஈழத்தமிழின் நவீன கவிதைக்கும் புதிய முகத்தைத் தரும் கவிஞர் அனார் .அப்படித்தான் தன்னையும் அறிமுகம் செய்கிறார் கவிஞர் கீதா .
                                      நான்
                      தேங்கிய குட்டையல்ல
                       துள்ளும் அருவி
                       பாய்ந்தோடும் ஆறு
                        --------------------------------
                      சலசலக்கும் ஓடை
                         ---------------------------

                           ஆழ்மனக்கடல் .

ஓரிடத்தில் நில்லாது ஓடிக்கொண்டிருக்கும் நீர் உற்சாகத்தின் வெளிப்பாடு .ஆரோக்கியத்தின்அறிகுறி.நீரைப்போல்உற்சாகம்,ஆரோக்கியம்,எளிமையோடு , வரும் கவிஞர் கீதாவின் ஆழ்மனக் கடலின் சிந்தனை முத்துக்களாய் இக்கவிதைகள் ஒளி வீசுகின்றன .

             பாசாங்கில்லாத மொழி ,மிரட்டாத தொனி ,நேர்மையின் நிறமணிந்த வார்த்தைகள் ,ஆழ்ந்த அக்கறை மிகுந்த சமூகக் கவலை இவற்றால் இக்கவிதைகள் நம் மனசெங்கும் புது வெளிச்சத்தைப் போல் வேகமாய்ப் பரவி நிரவி விடுகின்றன .
                       கவிஞன் அதிசயமானவன் ,ஆசீர்வதிக்கப்பட்டவன் ,மகா சக்தியுடையவன் .ஒரு கவிதை எழுத எண்ணி எழுதுகோலும் காகிதமும் எடுக்கிறார் பாவேந்தர் பாரதிதாசன் .நான் ,நீ என்று போட்டி போட்டு தன்னை எழுதச் சொல்லி எல்லாம் அவர் முன் நிற்கின்றன .வானம், ஓடை ,தாமரைப்பூக்கள் ,காடு .கழனி,கார்முகில் .ஆடும் மயில்நிகர்ப் பெண்கள் ,தென்றல் ,மயில் ,அன்னம் ,எனக் கோலங்கள் யாவும் மலைமலையாய்க் கவிஞன் முன் வந்து குவிகின்றன .புறக்கணித்த புரட்சிக்கவிஞன் இன்னலிலெ தமிழ் நாட்டினிலேயுள்ள தமிழ் மக்களின் துயரம் பற்றியே சிந்தித்தான் ,படைத்தான் .
                                 அதைப்போல் தான்  காதல் ,பிரிவு ,சோகம் ,புலம்பல் ,அழகு ,ஆபரணம் எனப் பலவற்றை வலிந்து தவிர்த்து ,மண்ணின் மீதும் மக்களின் மீதும் நிஜமான அக்கறையோடு கவி தீபம் ஏற்றுகிறார் கவிஞர்  கீதா .
ஈழ வலி எனும் தலைப்பிட்ட கவிதையில்
                             ஒரே வலிக்கு 
                                 எத்தனை வைத்தியம் ..?
                    எனக்கேட்கும் கவிஞர் இன்னும் தீராத வலியின் வேதனை உணர்ந்தே எழுதுகிறார் .வைத்தியர்களும் ,வைத்தியமுறைகளும் நம்மிடம் ஏராளம் உண்டு . ஆனால் வலி அதிகமாகிறதே தவிர குறையவில்லை .வலிகளுக்கான ஆறுதல் மருந்தாக கனவுகளின் நாட்குறிப்பிலிருந்து கவிஞர் கீதாவின் கனவு இதோ .
                      ஈழத்தமிழச்சியின் 
                     கண்ணீர் துடைக்கும் 
                    சிங்களச் சகோதரன் .
நீலவானில் மிதந்து நிலவொளியில் நனைந்து நட்சத்திரங்களோடு  கை குலுக்கி  கவிதைகளைப் படைப்பதை விட ,புழுதி மண்ணில் நடந்து ,வியர்வையில் நனைந்து ,வறுமையை உணர்ந்து ,கண்ணெதிரே காணும் வாழ்க்கையிலிருந்தே கவிதைகளைப் படைக்கிறார் கவிஞர் கீதா .

                                             உணவு விடுதியில்  மணக்கும் 
                                           உணவைப் பரிமாறும் சிறுவன் 
                                                பசியுடன் சாப்பிடல 
                                                         எனக் கூறுகையில் ....
கவிஞரின் மனம் உறுத்துகின்றது .
உயரம் எட்டாத உணவு விடுதி மேசையை எக்கி எக்கித் துடைக்கும் சிறுவனை எண்ணி ,
                          " மேசை சுத்தமாச்சு 
                            தேசம் அழுக்காச்சு ."
என்று எழுதுவார் கந்தர்வன் . சுத்தமோ அசுத்தமோ சோறு போட்டால் தேவல என்பது தான் கவிஞர்களின் எண்ணம் .
                  உடல் மொழியை எழுதுகிறேன் .புது மொழியை எழுதுகிறேன் ,புரட்சியாக எழுதுகிறேன் என்றெல்லாம் எழுதி மற்றவர்களால் கவனிக்கப் பட வேண்டுமென்ற நோக்குடன் அதிர்வு வார்த்தைகளால் நம்மை அதிர வைக்காமல் ,யதார்த்தத்தை எளிய மொழியில் கவிதையாக்குகிறார்  கவிஞர் கீதா .அவரது கனிந்த பார்வை கனலாய் மாறும் தருணங்கள் எவையெனக் குறிப்பிடுகிறார் .
                           
                                    தோலை உரசி 
                                       சுகங்காணும் 
                                        எருமைகளைக் கண்ட போது ....
                                   
                                     அப்பான்னு நெனச்சேன் 
                                         அசிங்கமாய்த்தொட்டான் 
                                                                                ---எனும் போது
                                   ஏன் இத்தனை தாமதம் ...?
                                   எங்கே ஊதியம் ...?
                                   என்ன செலவு செய்தாய் ...?
என சும்மாயிருப்பவன் வேலைக்குப் போகும் பெண்ணைப் பார்த்துக் கேட்கும் போது .....
                இவ்வாறெல்லாம் கனலாய் மாறும் நெருப்பு நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன .பெண்ணைத்தான் விரும்புகிறதைச் செய்கின்ற தானியங்கி இயந்திரமாய்ப் பாராமல்
                         பெண்ணை 
                          பெண்ணாய் பாராமல் 
                         மனிதராய்ப் பார்க்கும் நாள் 
                            எந்நாளோ ?
என வினவுகிறார் கவிஞர் .அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஓர் ஆசிரியராக மனமொன்றிப் பணியாற்றும் கவிஞருக்கு ,மாணவிகளின் அக உலகம் ,கல்வியின் புறச் சூழல் ,வகுப்பறையின் பெருமூச்சு ,அவசரத்திற்கும் ஒதுங்க முடியாத அவலம் என தன்னைச் சுற்றித் தினமும் சுழன்றடிக்கும் எண்ண அலைகள் கவிதைகளாய் ஆர்ப்பரிக்கின்றன .
                                         கற்கண்டாய் கல்விதனை 
                                         களிப்புடனே கற்பிக்கும் 
                                        ஆசிரியரே உன் 
                                           தந்தை தாய் காண் ...!
என்று ஆசிரியரை வரையறுக்கும் கவிஞர் ....
அவலம் எனும் கவிதையில்
                              ----------------
                              ----------------
                           அவதியாய் தவித்து 
                             அவசரமாய் ஓடினால் 
                                எதிர் கொண்டது 
                                    நீரில்லா கழிப்பறை .....  
                                   எனும் கவிதையில் அதிர்ச்சியிருந்தாலும் கழிப்பறையாவது இருக்கிறதே என்ற ஆறுதலுமிருக்கிறது .நம் தேசத்தில் செல்போன்களின் எண்ணிக்கை நொடிக்கு நொடி அதிகமாகி வருகின்றன .தமிழ்த்திருநாடு தன்னை பெற்ற தாயென்று கும்பிடும் நம் நாட்டில் பெண்களுக்கு போதுமான கழிப்பறைகள் இல்லை .எது அவசியம் என்பதை உணராதவர்கள் நாம் .
                         கழிப்பறை மட்டுமல்ல .கல்வியும் இல்லை என்பதை ஒரு கவிதையில் கூறும் கவிஞர் ....
                 குடிகார அப்பனால் சூடு பட்ட அம்மா ,வலியில் சுருண்டு படுத்திருக்கிறாள் .சமைக்கவில்லை ,தண்ணீரால் பசியாற்றி பள்ளிக்கு வரும் அந்தப் பிள்ளையிடம் ஆசிரியர் கேட்கிறார் ...
             ஏன் படிக்கல ...?
                ---------------------
             சாப்பிடல டீச்சர் .
               பசிக்குது .....  
எந்த வர்ணப்பூச்சுமில்லாமல் ,இந்திய தேசத்து ஏழைச் சிறுமியின் வறுமை வாழ்க்கையை இதைவிட எப்படி வரைய முடியும் .வகுப்பறைகளுக்குள் இன்னும் எழுதப்பட வேண்டிய இது போன்ற கவிதைகள் ஏராளம்  கிடக்கின்றன .
                          நிழலில் ஒதுங்கி ஓய்வெடுக்க முடியாதபடி வெப்பப் பணிகளில் விரைந்தோடும் வாழ்க்கையில் கவிதைச் சிறகசைத்து இலக்கிய வானில் இளைப்பாறுகிறார் கவிஞர் கீதா .நேர்கொண்ட பார்வையும் ,நேர்மைத்திறனும் ,ஒழுக்கநெறிகளும் ,உயர்ந்த சிந்தனைகளும் ,சமூகக் கவலையும் ,சலிப்பில்லா வாழ்க்கையும் ,துயரம் துடைக்கும் தன்னம்பிக்கையும் ,தூரக்கிழக்கின் வெளிச்சக் கீற்றுமாய் தன் கவிதைகளை ஒரு தோழியைப் போல் கரம் பிடித்துச் செல்கிறார் கவிஞர் கீதா .இருளகற்றும் கவிதைகளை அவர் இன்னும் படைக்கட்டும் .இன்னல் மிகு சமூகத்தின் மரபுகளை உடைக்கட்டும்.

எழுவதும்  எழுதுவதுமே  வாழ்க்கை !என் நெஞ்சம் நிறைந்த
 நல்வாழ்த்துக்கள் !!
                                                                                                                                                                                                                                                                           அன்புடன்                                                                                                                                   தங்கம் மூர்த்தி                                                                                                                          புதுக்கோட்டை

                                                                                                              
  எனது முதல் நூல் சிறு குழந்தைக்கு முகவரி என முன்னுரை தந்த கவிஞருக்கும் ,அணிந்துரை நல்கிய கவிஞர் முத்துநிலவன் அவர்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றி .                                             

6 comments :

  1. படிக்க ஆவலாக இருக்கிறது..எங்கு கிடைக்கும் அம்மா?

    ReplyDelete
    Replies
    1. முகவரி அனுப்புங்க அனுப்பி வைக்கின்றேன்

      Delete
  2. ஒரே வலிக்கு எத்தனை வைத்தியம் ..?
    எனக்கு பிடித்தகவிதை .அருமையான முன்னுரை !!

    ReplyDelete
  3. மிக்க மகிழ்ச்சி... அருமையான முன்னுரை...

    கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  4. மிக்க நன்றிம்மா.இப்பதான் கிரேஸ் தேன்மதுரத்தமிழ் அவர்களிடம் பேசினேன் .உங்களையும் சாரையும் மிகவும் விசாரித்தார்கள்.

    ReplyDelete
  5. எனது முகவரி
    பொ.வேல் முருகன்.க. இ. ச. இ
    36/81 வ. உ.சி தெரு,
    சிவகங்கை
    630561
    9842479623
    தயவு செய்து அனுப்பிவைக்கவும்

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...