World Tamil Blog Aggregator Thendral: நானும் தீபாவளியும்

Thursday, 20 October 2022

நானும் தீபாவளியும்

நானும் தீபாவளியும்
சிறுவயதில் தீபாவளிஎன்பது அத்தனை ஆனந்தமானது .துணி எடுத்து தைத்து தருவார்கள்.தீபாவளிக்கு மட்டும் தான் புத்தாடை.நான்கு நாட்கள் முன்னதாகவே சொசைட்டியில் வெடி வாங்கி வந்து விடுவோம்.. அதை தினமும் காலையில் காயவைத்து எடுத்து வைக்க வேண்டும்.அப்பா தீபாவளி முதல் நாளில் நான் தம்பி மாமா வீட்டு பிள்ளைகள் சீனு ஆஷா எல்லாருக்கும் பிரித்து தருவார் .சில நேரங்களில் எங்கள் இருவருக்கு மட்டும் கிடைக்கும்.துப்பாக்கி வைத்து பொட்டுவெடி வெடிப்பதும் ஒத்தைவெடி வெடிப்பதும் நீண்ட நேர மகிழ்வைத் தரும்.
ஒரு வாரமாக முறுக்கு ஓலைபக்கோடா தட்டை மிக்சர் அதிரசம் தேங்காய் பர்பி ,சோமாஸ் , மைசூர் பாகு என வீடு அதகளம் ஆகும்.சிறுவயதில் மகிழ்வைத்தந்த பலகாரங்கள் வளர்ந்த பிறகு எவன் இதைக்கண்டுபிடிச்சான்னு கோவமா. வரும் வேலை பெண்டு எடுக்கும்.
தீபாவளி அன்று காலை நான்கு மணிக்கு ஆத்தா எழுந்து எண்ணெய் வெடி வைத்து சாமி கும்பிட்டு தலையில் வைத்து விடுவார்கள்...பெரிய செப்புத் தவலையில் தண்ணீர் கொதிக்கும் ஆவி பறக்க குளித்து விட்டு வெடியை முதலில் வைப்பது யாரென்று எங்களுக்கும் பக்கத்து வீடுகளில் செல்வி வீடு கண்ணகி வீடுகளுக்கும் போட்டி நடக்கும்.இதில் தம்பி முதலில் வெடி வைக்கணும்னு துடித்துக் கொண்டு இருப்பான்.

மறுபடி புத்தாடைகள் பலகாரங்கள் வைத்து சாமி கும்பிட்டு (தீபாவளி பலகாரங்களை சுடும் போதே சாப்பிடலாம் என்பதால் காலியாகிக்கொண்டே இருக்கும்.

பத்து வீடுகளுக்கு மேல் சென்று தர தனித்தனி பாத்திரங்களில் எடுத்து வைப்பார்கள் அந்த கால இரும்பு டின்களில் வரிசையாக பலகாரம் எண்ணி அடுக்கி இருக்கும்.
முதலில் மும்தாஜ் வீட்டுக்கு பிறகு கண்ணகி வீடு, செல்வி வீடு கொடுத்தபின் அடுத்த தெருவில் எஸ் ஆர் மாமா வீடு ஆத்தாவின் அண்ணன் வீடு என்பதால் நல்லதா பார்த்து ஆத்தா வைத்திருப்பார்கள்.
அடுத்தது மாமா வீடு அங்கு மாமா வீட்டு பிள்ளைகள் மற்றும் எங்களுக்கும் புத்தாடை இருக்கும்.காலில் விழுந்து கும்பிட்டு ஆடையுடன் ஒரு ரூபாய் பணமும் வாங்கிக் கொண்டு அடுத்தது ஆத்தாவின் அக்கா வீடான சத்திரத்திற்குச் செல்வோம்..அங்கு ஒரு தாத்தா காதில் கடுக்கனுடன் இருப்பார்கள்.அங்கு பெரியம்மா லெச்சுமி அக்கா எல்லாரையும் பார்த்துவிட்டு பலகாரம் கொடுத்து அவர்கள் தரும் தீபாவளி காசையும் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வருவோம்..
அப்பறம் வெடி வெடிப்பது தான் வேலை மதியம் மாமா வீட்டிற்கு அனைவரும் சென்று விடுவோம்.மாலை ஏதாவது ஒரு திரைப்படம் ...இப்படியாக தொலைக்காட்சி வரும் வரை சொந்தங்களுடன் கழிந்தது.மறுநாள் கௌரி நோன்பு மிகவும் சுத்தபத்தமாக ஆத்தி இப்போ நினைச்சாலும் கண்ணீர் வரும் வேலை வேலை என்று அடி நிமிர்த்தி விடுவார்கள்.
தொலைக்காட்சி வந்த பிறகு காலையில் பத்து மணிக்குள் அனைத்தையும் முடித்துவிட்டு சாலமன் பாப்பையா பட்டி மன்றம் என தொடர்ந்து டிவி தான்...டிவி பார்க்கும் போது ஏதாவது வேலை சொன்னால் வரும் பாருங்க கோவம்...காலை உதைத்து கொண்டு செய்வோம்.
வேலைக்கு வந்த பிறகு இந்த ஆவல் இல்லை என்றாலும் சேலை எடுக்கப்போவதே திருவிழாவிற்கு செல்வது போல அனைவரும் போவோம்.அதென்னவோ மலைபோல் குவித்து வைத்தாலும் அடுத்ததைப் பார்த்து இறுதியாக முதலில் பார்த்ததை வாங்கி வருவோம்...சினிமாக்கு போவது தான் பிடித்த பொழுது போக்கு.

பதினோராம் வகுப்பு படிக்கும் போது தேவகோட்டை சித்தப்பா வீட்டிற்கு வர பெரியார்  அறிமுகம்  ஆனார்... அதெப்படி சாமி கும்பிடாமல் இருப்பது ....

பாலகுமாரன் ரமணிசந்திரன் நாவல் படிக்கும் போது கடவுளர் கதைகள் நூலை படிக்க நேர்ந்தது... இருந்தாலும் விழாக்கள் கொண்டாட்டம் தான்.வாசிப்பு தெளிவைக் கொடுக்க தீபாவளிக்கு சித்தப்பா வீட்டிற்கு வரத்துவங்கினோம் பிறகு தீபாவளி அன்று ஏதாவது சுற்றுலா செல்வது வழக்கமானது . உறவினர்கள் சூழ அது தனி கொண்டாட்டமானது.. ஒவ்வொரு தீபாவளியும் எங்களுக்கு சுற்றுலாக்காலமானது.
காலையில் மாணவர்கள் ஏன் நீங்கள் தீபாவளி கொண்டாட  மாட்டீர்கள் என்று கேட்ட போது அசுரன் என்பது தமிழரைக் குறிக்கும் மேலும் ஒருவர் இறந்த நாளை கொண்டாடுவது என்பது பிடிக்காததால் . பொங்கல் தான் எங்களுக்கு மட்டும் அல்ல தமிழர்களின் திருநாள் அதை மிகச் சிறப்பாக கொண்டாடுவோம் என்றேன்.

ஒவ்வொரு இடத்திற்கும் தீபாவளியின் காரணங்கள் வெவ்வேறாக உள்ளது . ஆனால் பொங்கல் அப்படி அல்ல இயற்கையைக் கொண்டாடுவது என்றேன்.சிறுவயதில் பொங்கலும் நான்கு நாட்கள் பெண்டெடுக்கும் விழா தான்.முதல் நாள் முற்றம் வைத்த பெரிய வீட்டை கிணற்றில் இருந்து தண்ணீர் இறைத்து கழுவி பித்தளை பொருட்களை விளக்கி போகி அன்று மாலை கொழுக்கட்டை செய்து சாமி கும்பிட்டு நிமிர்ந்தால் அடுத்த நாள் காலையில் மீண்டும் வீட்டைக் கழுவி மறுபடி அத்தனை விளக்கு பித்தளைப் பாத்திரங்களைப் கழுவி சாமி கும்பிட்டு நிமிர்ந்தால் மீண்டும் மூன்றாவது நாளாக வீட்டுச்சாமிகும்பிட காலையில் மாவு இடித்து அதிரசம் செய்து ஆமைவடை உளுந்து வடை சுழியன் செய்து சாமி கும்பிட வேண்டும்...
இந்நாட்களில் மாதவிலக்கு வந்து விட்டால் அவ்ளோதான் மூதேவி நாளும் கிழமையுமா ஒதுங்கி நிக்குது பாருன்னு அம்மாவின் கோவம் ஏன்னா அவ்ளோ வேலையும் அவர்களே செய்யனும்னு ...பரந்த மாதிரிகாட்டி நானும் புத்தகமும்னு ஜாலியா உலக்கைக்கு பின் எனது நாட்கள் கழியும்..

அசைபோடும் எண்ணங்கள்
தொடரும்
மு.கீதா
புதுக்கோட்டை

No comments :

Post a Comment

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...