World Tamil Blog Aggregator Thendral: சிறுவளூர்-அரியலூர் மாவட்டம்

Tuesday 2 September 2014

சிறுவளூர்-அரியலூர் மாவட்டம்

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ,சிறுவளூர்-அரியலூர் மாவட்டம்

20.07.1988இல் நான் முதன்முதலில் பணியேற்ற பள்ளி....

கான்வெண்டில் படித்து முடித்தவுடன் வேலைகிடைத்து பணிக்கான உத்தரவு கைகளில்..மனதில் பொங்கி வழிந்த உற்சாகத்தை அளவிட வார்த்தைகளில்லை....என்னுடன் பணி உத்தரவு பெற்றவர்களுக்கு வேறு மாவட்டங்களில் வேலை கிடைக்க எனக்கு மட்டும் என் மாவட்டத்திலேயே...காரணம் பக்கத்து வீட்டில் வசித்த, நான் அன்பாக அப்பா என அழைக்கும் முன்னால் எம்.எல்.ஏ அரியலூர் ஆறுமுகம் அவர்கள் தான்.வீடு அல்லது பள்ளியென வாழ்ந்தவள் திடீரென வேலைக்கு...கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல....

சிறுவளூர் எங்க இருக்குன்னு கூடத் தெரியாது,விசாரித்த பொழுது பேருந்து வசதி மட்டுமல்ல எந்த வசதியுமற்ற ஒரு குக்கிராமம்..அரியலூரிலிருந்து இரண்டு பேரூந்து ஏறி இறங்கி பின் 2கிலோமீட்டர் நடந்து சென்றால் வரும்  சிறுவளூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி .


.காலையில் அரியலூர்-கீழப்பழூர்-புதுப்பாளையம்-பேரூந்தில் சென்று பின் பள்ளிக்கு2 கிமீ நடைப் பயணம்,   மாலையில் புதுப்பாளையம்-வி.கைகாட்டி-அரியலூர் என முக்கோணப்பயணம்....பேரூந்து வராத சில நேரங்களில் கீழப்பழூரில் சிமெண்ட் ஆலைக்குச் செல்லும் டிப்பர் எனப்படும் லாரியில் ஏறிச் செல்ல வேண்டும்..நீள லாரி.டிரைவர் கேபினில் கிராமத்து மக்கள் சரசரவென டயரில் கால் வைத்து ஏறி விடுவார்கள் ..நான் சிரமப்படுவதைப்பார்த்து கீழப்பழூரில் உள்ள அய்யா ,ஒரு ஸ்டூல் போட்டு ஏறிக்கொள்ளம்மா என்பார்கள் 20 வயதில் கூச்சத்துடனும் ,சற்று பயத்துடனும் தான் ஏறுவேன்.
பணியில் சேர்ந்த 6 மாத காலத்திற்கு என் அப்பா வண்டியில் அழைத்து சென்று விட்டு பின் மாலை வந்து அழைத்துச் செல்வார்கள்...பிறகு நானே துணிவுடன் செல்ல ஆரம்பித்துவிட்டேன்...

காலையில்பேரூந்திலிருந்து இறங்கியவுடன் பள்ளி மாணவர்கள் எனக்காக காத்திருந்து அழைத்துச் செல்வார்கள்....ஆரம்பத்தில் நான் மட்டும் தனியாகத்தான் 2 கிமீ நடந்து செல்ல வேண்டும்...வழியில் ஊருக்கு வெளியே சில குடிசைகள்...நகரத்தில் வாழ்ந்தவளுக்கு ஏன் அந்த குடிசைகள் ஒதுங்கி இருக்கின்றன என நான் படித்த பாடங்களில் சொல்லித்தரப்படவில்லை.

.வெள்ளந்தியான கிராம மக்கள் டீச்சரு பாவம் டவுன்லேர்ந்து வருதுன்னு எனக்காக பரிதாபப்படுவார்கள்...
தொடக்கத்தில் யாருடனும் பேசப்பயந்த நான் அந்த மக்களின் உண்மையான அன்பில் மயங்கித்தான் போனேன்...
எல்லோருக்கும் பதில் கூறியபடி எனது பள்ளிப்பயணம் துவங்கும்...தலைமை ஆசிரியரோ கேட்கவே வேண்டாம் எம்.எல்.ஏ.ஆறுமுகம் அவர்களின் உறவினர்...என்னை தனது சொந்த மகள் போல பார்த்துக்கொண்டார்..ஏழு ஆசிரியர்கள் என்னுடன் வேலைப்பார்த்தனர்.ஒவ்வொரு நாளும் பள்ளிக்குச் செல்லும் போது, என் கைகளில் கீழப்பழூரிலிருந்து வாங்கிய மாணவர்களுக்குத் தேவையான ஏதேனும் சில  பொருட்கள் இருக்கும்...அதுமட்டுமின்றி, தாயி மவளுக்கு முடியல காச்சலாருக்கு நீ நாள வரப்ப காச்ச மாத்தர வாங்கியாரியான்னு கவலையா கேட்கும் கிராமத்து மக்களுக்கான மாத்திரைகளும் எனது கைப்பையில் இருக்கும் ... கடைகளே இல்லாத அந்த கிராமத்தில் நான் நடமாடும் மருந்துக்கடை ..இன்றும் மாத்திரை நிறைந்த பர்ஸ் எனது பையில் உள்ளது வழக்கம் மாறாமல்..எந்த வசதியும் இல்லாத ஒரு குக்கிராமம் அது எனக்கு நிறைய கற்றுத் தந்தது....

தண்ணீர் கொடுங்கன்னு கேட்டா ஊருக்கு வெளியிலுள்ள வீடுகளில்  யோசித்தே கொடுப்பார்கள் ...என் அம்மாவிற்கு தான் நன்றி சொல்ல வேண்டும் ....சாதி பார்க்கத்தெரியாமல் என்னை வளர்த்தமைக்கு..

ஒரு நாள் மூன்றாம் வகுப்பு மாணவியின் தங்கை 3வயது இருக்கும் ஒரு குட்டி என் சேலையைப்பிடித்து இழுத்து தலையில் பூச்செண்டாய் முடியைக்கட்டிக்கொண்டு,தன் பூனைக்கண்கள் விரிய டீச்சரு நீ ஜவுளிக்கடையா வச்சுருக்கன்னு கேட்ட போது என்னை மறந்து சிரித்தேன் ஏண்டான்னு கேட்டதுக்கு தெனம் ஒருசேல கட்டிவாரில்ல ஆத்தா சொல்லிச்சுன்னா...இன்னும் அந்தக் கண்கள் எனக்குள்.

 மறக்க முடியவில்லை எதுவும் என்னுடன் வேலை பார்த்த ஆசிரியர்கள்,அந்த கிராமம்...எல்லாம்  எனக்குள் புதைந்து எப்பவாவது வெளி வரும் நினைவலைகளில்...மழைக்காலங்களில் வேகமாகச் சென்றாலும்...காலையில் நடக்கும் பயணம் நகரத்துக்கு வெளியே உள்ள கிராமத்தின் அழகை,கிராமத்து மக்களின் வெள்ளை மனதை,அவர்களின் துன்பங்களையும் இன்பங்களையும் ரசிக்க,வியக்க ,யதார்த்த வாழ்வை உணர வைத்தது....

ஆரம்பத்தில் பழகத் தயங்கி பின் நானும் அவர்களில் ஒருத்தியானேன்...அங்கு வேலை பார்த்த ஆசிரியையின் வீட்டில் தான் மதியம் சாப்பிடுவோம்..நான் அம்மா தரும் குழம்பு,பொரியல் எடுத்துச் செல்ல அந்த ஆசிரியரோ சுடசுட சாதம் சமைக்க இருவரும் சேர்ந்து உணவருந்திய நாட்கள்......வாழ்வின் உன்னதக் காலங்கள்..

ஒரு நாள் பள்ளிக்கு அருகில் கருகிய நாற்றம் என்னவென்று பார்த்தால் தோலுரித்த பன்றியை குச்சியில் கட்டி வாட்டிக்கொண்டிருந்தார்கள் ....அருவருத்து கேட்ட பொழுது ஒரு சிறுவன் நாளைக்கு அம்மாவசல்ல பன்னிக்கறிதான்னு சிரிச்சான்...வந்த வாந்தியை கட்டுப்படுத்த நான் பட்ட சிரமம்..

.மழைக்காலங்களில் வழியெங்கும் ஈசல்களின் இறகுகளாக கிடக்கும் விசாரித்தால் ...நேற்று  ஈச வறுத்து சாப்டோம்ல என்பார்கள்....கழிப்பறை கூட இல்லாத பள்ளி...எனக்கு வாழ்க்கையை அறிமுகப்படுத்தியது...

என்னை விட உயரமாய் இருக்கும் மீசை முளைத்த மாணவர்களை
படிக்கவில்லையென அடித்து விட்டு மனம்கலங்கி கண்களில் நீர் வழிய நான் இருப்பதைப் பார்த்து அவர்கள் சிரிப்பார்கள்.....

அன்பும் நேசமும் உணர்வுகளுமாயிருந்த கிராமம் எனது ஆசிரிய வாழ்வில் முதல் கிராமம் ...இதற்கு பின் 3 கிராமங்களில் பணி புரிந்தாலும் சிறுவளூர் என்னில் பதிந்து போன கிராமமாய்....
                                                                                              தொடரும்....

ஒரு ஆசிரியரின் திருமணத்தின் போது என்னுடன் பணிபுரிந்த மங்கைஅக்கா,மஞ்சுளா,சுசி ஆகியோருடன்.....நானும்.

2 comments :

  1. அருமையான நினைவுகள்..படத்தில் நீங்கள் அழகு, உங்கள் உள்ளம் போலவே..
    வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  2. ஆசிரியை பணிக்கு முதன் முதல் சேர்ந்த சிறுவளூர் நினைவுகள் படிக்கப் படிக்க சுவாரஸ்யம்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...