World Tamil Blog Aggregator Thendral: vaikai karai வைகைக் கரையில் நம் முன்னோர்களின் தடம்...

Sunday 30 August 2015

vaikai karai வைகைக் கரையில் நம் முன்னோர்களின் தடம்...

தமிழனின் பாரம்பரியம்
----------------------------------------

                             நம்ப முடியவில்லை தமிழனின் நாகரீகமான வாழ்க்கை மண்ணுக்குள் புதைந்து,மெதுவாக வெளிப்படும் உண்மையை.....

மதுரையில் நடக்கும் தொல்லியல் ஆய்வு தொடர்பான செய்திகள் கேள்விப்பட்டு காணவேண்டும் என்ற ஆவலில் ஒரு பயணம் ....

மதுரைக்கு அருகில் உள்ளது மணலூர். பாண்டியர்களின் தலைநகர் என்று கூறப்படும் மணலூரில் தென்னந்தோப்பிற்குள் ஒரு வரலாற்று நாகரீகம் புதையுண்டு இருப்பதைப்பார்த்த போது...மனம் சொல்லவியலாத உணர்வில் .....பேருந்து நுழையவியலாப் பாதையில் உள்ளே செல்லும்போது மனம் 2500 வருடங்களுக்கு முன் வாழ்ந்த நம் மக்களின் வாழ்க்கை கண்முன் கலங்கலாக விரிகின்றது.....


தற்போதுள்ள அறிவியல் முன்னேற்றங்கள் கொஞ்சமும் இல்லாத அந்த காலத்தில் போக்குவரத்து வசதிகளற்ற காலத்தில் கடல்வழியின் மூலம் அந்நியநாடுகளுடன் வாணிகம் செய்த வணிகர்கள் வாழ்ந்த இடமாக இருக்கும் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்...
அவர்கள் பயன் படுத்திய மட்பாண்டங்கள்...அவர்களின் கலைத்திறனுக்கு எடுத்துக்காட்டாய் திகழ்கின்றன....

தந்தத்தால் ஆன பகடையும் ,ஓட்டையிடப்பட்ட முத்தும் அவர்களின் செல்வச்செழிப்பை பறைச்சாற்றிக்கொண்டுள்ளன.

சதுரசதுரமான பள்ளத்தில் தனது வரலாற்றை எடுத்துக்காட்டி உண்மையை உலகறியச்செய்கிறது...ஆதிமனிதன் பயன் படுத்திய பாண்டங்கள்....
ஒவியமும் தமிழ் பிராமி எழுத்துகளும்அவ்வூர் மக்கள் நூற்றுக்கணக்கானவர்கள் தங்கள் மண்ணின் பெருமை உணராமல் மண் எடுக்கும் பணியைச்செய்கின்றனர்...

சுமார் 2200 ஆம் ஆண்டில் இருந்து 2500 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் குடியிருந்தப் பகுதியாக உள்ளது...வரிசையான வீடுகள்,தரைத்தளமாக ,கனமான தட்டோடுகள்,மேற்கூரைக்கு ஆணி அறையப்பட்ட செம்மண் ஓடுகள்,அகலமான் செங்கல்,வீடுகளை ஒட்டி பெரும் அகலத்தில் நீண்ட சுவர்கள்,தண்ணீர் வழிந்தோட வடிகால்கள்,வட்டவடிவ உறையிடப்பட்டக் கிணறு என அகழ்வாராய்ச்சிலேயே முழுமையான குடியிருப்பு பகுதி கிடைத்திருப்பது இதுவே முதல்முறையாகும் என்கின்றனர் தொல்லியலாளர்கள்.
மண்பாண்டத்தின் வழவழப்பான பகுதி....அவர்களின் திறமையை உணர்த்துகின்றது.கூடாரமிட்டு நம் மக்களின் வரலாறை வெளிக்கொணரும் முயற்சியில் தொல்லியாளர்கள்....

உறைகிணறு
வீட்டுக்குள்ளேயே கிணறு  வைத்துள்ளனர்.தோண்டப்பட்ட பள்ளங்களை ஆய்வு முடிந்த பின் சமன் செய்து நில உரிமையாளர்களிடமே தந்து விடுவார்களாம்....இனி தோண்ட எண்ணியுள்ள இடங்களில் இன்னும் பல அரிதான உண்மைகள் வெளிப்படும் என நம்புகின்றனர்....

காலத்தால் புகழ் பெற்ற தமிழனின் பெருமையைக்கண்ணாரக்கண்டு திரும்புகையில் அங்கு வந்த ஒன்பதாம் வகுப்பு மாணவன் ஒருவனிடம் ஆய்வாளர் என்னப்பா தெரிஞ்சுது எனக்கேட்க,அவன் மொக்கையா இருந்துச்சுன்னு சொன்னது தான்....மனதின் வேதனையை உண்டாகியது...நம் வரலாறை நம் சந்ததிகளிடம் உணர்த்தாமல் அந்நிய நாட்டின் பெருமையைப்பேசி மாய்கின்றோம்.....

அங்கு தேவையற்றுக்கொட்டிக்கிடந்த மண்பாண்டத்தின் சிறு பகுதி என்னிடத்தில் 2500 ஆண்டுகால வாழ்க்கையை கூறியபடி....
9 comments :

 1. ஆஹா! புல்லரிக்கின்றது கீதா. உடன் சென்று பார்த்ததோடு பகிர்ந்து கொண்டதற்கும் பாராட்டும் நன்றியும். நம் மக்கள் உணராமல் இருப்பது வேதனை.. பாட திட்டத்தில் சேர்த்தால் நல்லது.

  ReplyDelete
 2. உண்மையில் நாம் கொடுத்துவைத்தவர்கள் என்றே கொள்ளலாம். நல்ல ஒரு இடத்திற்குச் சென்று, எங்களையும் கூட்டிச் சென்று காண்பித்தமைக்கு நன்றி. புத்தர் சிலைகளைத்தேடிச் செல்லும்போது முதன்முதலாக அந்தச் சிலையைத் தொட்டுப் பார்ப்பேன். சுமார் ஆயிரமாண்டு கால வரலாற்றுடன் ஈடுபாடு கொள்ள நமக்கு வாய்ப்பு கிடைத்ததே என உணர்ந்து மகிழ்வேன். தாங்கள் சொன்னது போல பலர் ஆய்வின் முக்கியத்துவத்தை உணரவில்லை என்பது வேதனைக்குரியது. குறிப்பாக உணரவேண்டியவர்கள்கூட.

  ReplyDelete
 3. --///-தோண்டப்பட்ட பள்ளங்களை ஆய்வு முடிந்த பின் சமன் செய்து நில உரிமையாளர்களிடமே தந்து விடுவார்களாம்....இனி தோண்ட எண்ணியுள்ள இடங்களில் இன்னும் பல அரிதான உண்மைகள் வெளிப்படும் என நம்புகின்றனர்....///
  இவ்விடங்களை அந்நிலையிலேயே பாதுகாத்து
  பொது மக்கள் பார்வைக்கு விட்டால் ,
  நம் முன்னோரின் பெருமையினை பாமரரும் அறிவார்கள் அல்லவா

  ReplyDelete
 4. ஆச்சரியமாக வியப்பாக இருக்கின்றது! புல்லரிகக்வும் செய்கின்றது சகோதரி! நீங்கள் உடனே சென்று கண்டதும், இங்கு விவரித்ததும் அதுவும் அழகான புகைப்படங்களுடன்....பார்க்க ஆவலாக இருக்கின்றது. ஆனால் மூடிவிடுவார்களோ? எத்தனை நாட்கள் இவை இப்படி இருக்கும்? பொதுமக்கள் பார்வையிட அனுமதி உண்டா..? எல்லோரும் பண்டைய தமிழரின் வாழ்வியல் அறிவார்கள்தானே! அங்கு அவர்கள் வாழ்ந்த முறையைப் பற்றி தொல்லியலாளர்கள் ஒரு குறிப்பு எழுதி வைத்தால் நன்றாக இருக்கும் இல்லையா சகோதரி?!

  மிக்க நன்றி சகோதரி தாங்கள் இங்கு பகிர்ந்ததற்கு....

  ReplyDelete
 5. அந்தப் பையனின் பதில் வேதனை அளிக்கின்றது ! ம்ம் என்ன செய்ய...அவர்களின் சிந்தனைகள், பார்வைகள் எல்லாமே மாறி உள்ளது மட்டுமல்ல திரைப்படங்கள் கட்டிப் போட்டுள்ளன...

  ReplyDelete
 6. அரிய தகவல்கள் அறியத்தந்தமைக்கு நன்றி
  தொல்லியல் ஆய்வில் இறங்கி இருக்கும் தங்களுக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 7. நன்று சகோதரி.
  ஆம் திரைப்படங்கள் கட்டிப் போட்டுள்ளன சகோ.

  ReplyDelete
 8. படங்களுடன் விரிவாக விளக்கியது நேரில் சென்று பார்த்த உணர்வைத் தந்தது! ஒன்பதாம் வகுப்பு மாணவன் இப்படி இருப்பதற்கு காரணம் நமது கல்வி முறைதான்! விருப்பம் இன்றி திணிக்கையில் இப்படி கூறுகின்றான்!

  ReplyDelete
 9. காலாண்டு விடுமுரையில் செல்ல திட்டமிட்டுள்ளேன்.... பதிவு உடனே செல்ல தூண்டுகிறது

  ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...