புதுகை மணிமன்றம் அறக்கட்டளை சார்பில் பாரதி நினைவை போற்றும் விழா 11.09.2013 அன்று பாரதி கண்ட கனவு நனவாகவில்லை என்ற தலைப்பில் வழக்காடு மன்றம் நடந்தது.
பாரதி கண்ட கனவு நனவாகவில்லை என்பது என் வழக்கு.
வழக்கின் சாரம்சம்
------------------------
விடுதலை பெறும் முன்னே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென கனவு கண்டான் மகாகவி.பெற்ற சுதந்திரத்தைப் பேணி காத்தோமா?பன்னாட்டு வணிகம் சுனாமியாய் சிறு வணிகர்களை தூக்கி எறிந்து கொண்டுள்ளதே...அடிமையாகிக் கொண்டுள்ளோமே... மீண்டும் கனவு காண பாரதி பிறக்க வேண்டுமோ?
பெண்ணியத்தில் பாரதியின் கனவு நனவாகியுள்ளதா ?
பாரதி பெண்களைப் போற்றினானே.....புதுமைப் பெண்ணாய் கனவு கண்டானே.....இன்றைய பெண்களின் நிலைமை என்ன?
“ஓடி விளையாடு பாப்பா-நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா
பாதகஞ் செய்பவரைக் கண்டால்-நீ
பயங்கொள்ளலாகாது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா-அவர்
முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா”
என்றான் பாரதி.....
உமிழும் முன் அமிலம் வீசும் ஆண்மகனை அறியவில்லை பாரதி!
.கல்வி கற்றிருக்கிறார்கள், புகழின் உச்சியில் இருக்கிறார்கள் என்று எதிரணியினர் வாதிடலாம். நான் கூறுவது அடிமைத்தளையில் சிக்கி ஆணாதிக்கத்தில் மூச்சு திணறி வெளிவர முடியாது ,குடும்ப ஆழியில் தடுமாறும் பெண்ணினம் பற்றி....
இன்றைய பெண்களின் நிலை
பெண் சிசுக்கொலை முற்றிலும் தடுக்கப் பட்டுவிட்டதா?உசிலம்பட்டி நினைவில் வருகிறதே கூற முடியாமல்.
.குழந்தை மணம்?
அண்மையில் கூட 16வயது பென்ணிற்கு நிகழ இருந்த திருமணம் தடுக்கபட்ட செய்தி வந்துள்ளதே.
” கொலை செய்வதை விட கொடுமையானது குழந்தைமணம் ”
எனச் சாடினான் .100 ஆண்டுகளுக்கு மேல் ஆயிற்று.குறைந்துள்ளதே என்பார்கள். விடம் சிறிதானாலும் விடம் தானே?
யூனிசெப் நிறுவன ஆய்வு..
சேலம் ,கிருட்ணகிரி,தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் குழந்தைத்திருமணம் அதிக அளவில் நிகழ்வதாக கூறுகிறதே...
” வீரபாண்டி ஒன்றியத்தில் 16 வயது நிர்மலாவின் திருமணம் யாராலும் தடுக்க முடியவில்லை.நெய்க்காரப்பட்டி 15வயது கவிதாவின் திருமணம் அவரது ஆசிரியரால் தடுக்கப்பட்டுள்ளது .”
குழந்தை மணத்தை பெற்றோர்கள் விரும்பக் காரணம் என்ன?பாலியல் ரீதியான துன்பத்திலிருந்து குழந்தையை பாதுகாக்க திருமணமே வழி என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.குறைந்த வயதில் திருமணம் செய்து கொடுத்தால் குறைவான வரதட்சணை போதுமாம்.மேலும் சின்ன குழந்தை யாரைக் காட்டினாலும் எதிர்க்காமல் தலை காட்டும்ல.
பெண்குழந்தைகளே இன்று வலிய ஆண்களிடம் சென்று மாட்டிக்கொள்ளத் தூண்டுகின்றதே இக்காலத் திரைப்படங்கள் .இதன் குறிக்கோள் காதலை வளர்ப்பதே நோக்கமாக உள்ளதே .காதல் தவறல்ல .அது முறையானதாக இருந்தால்.ஒரு திரைப்படத்தில் ஒரு அழியாக்காதல்ஒன்று பிறந்து சில மாதங்களே ஆன ஆண் குழந்தை ஒரு பெண் குழந்தை தொட்டவுடனே அந்த அழியாக்காதல் தோன்றிவிடுகிறதாம்....இந்த வெட்கக்கேட்டை நாமும் பார்த்து சிரிப்போம். ஏன் இவ்வளவு கோபம் எனக் கேட்கலாம் .பள்ளிக்கு வரும் மாணவியர் சிலர் மாற்றுத்துணியுடனே பள்ளி வருகின்றனர்.கனவிலேயே நடக்கின்றனர் .எப்படா ஆசிரியர்களையும் ,பெற்றோரையும் ஏமாற்றலாம் என்பது போலவே அவர்களின் நடத்தை உள்ளது.
பள்ளிக்குழந்தைகள் காதலிப்பதும் அதற்காகவே பிறவி எடுத்தாற்போல நடப்பதும் போராடுவதும் தான் வாழ்க்கைஎன்ற கருத்து நிலை நாட்டப்படுகிறது.திரைப்பட நாயகிகள் அணியும் ஆடைகளையும் அணிகலன்களையும்போலவே குழந்தைகளுக்கு அணிவித்து ஆட விடுவதும்,தரமற்ற பாடல்களைப் பாடவைப்பதும் பெற்றோரின் அறியாமையை என்ன சொல்வது?இதில் அலைபேசி வேறு மாணவர்களைக் குட்டிச்சுவராக்க!
இது மட்டுமா தொலைக்காட்சிகளில் பெண்களின் நிலையோ மிகமிக கேவலம்
“ ஒரு AXE ன் விளம்பரத்தில் அந்த வாசனை திரவியத்தை பூசிய ஆணிடம் ஆதி வாசிப் பெண் முதல் நாகரீகப் பெண் வரை நாடி ஓடுவதாகக் விளம்பரம் வருகின்றது”
.பெண்களைப் பற்றிய என்ன சிந்தனை இவர்களுக்கு?
பாரதி கண்டால்
“மோதி மிதித்து விடு பாப்பா “
என்றே ஆத்திரம் கொள்வான்.உரசலும்,தொடலும்,பார்வை வக்கிரங்களும்,அசிங்கமான சொல் அம்புகளும் குடும்பத்தில்,பணியில் ,சமூகத்தில் பெண்களை தாக்கி மனச்சிதைவிற்கு உள்ளாக்குவதை ஏற்றுக்கொள்வானா அந்த முண்டாசுக் கவி?
பாஞ்சாலியின் கூற்றாய் முழங்கினானே....
”பேயரசு செய்தால் பிணம் திண்ணும் சாத்திரங்கள்” என அடிமைப் பட்ட பெண் இனத்தின் அழுங்கிய உணர்வின் வெளிப்பாடும்,விடுதலையின் வெளிப்பாடும் பாஞ்சாலியின் குரலில் காட்டினானே....
”கற்பு நிலையென்று சொல்ல வந்தால்
இரு கட்சிக்கும் அதை பொதுவில் வைப்போம்”
என்றானே ஒத்துக்கொள்வார்களா!முடியுமா?
பெண்களை சக்தியாக,தேவியாகக் கொண்டாடிய அவனால் இந்நிலையைப் பொறுத்துக் கொள்ள இயலுமா?
” உலகம் முழுவதும் ஒரு வருடத்தில் 20 இலட்சம் பெண் குழந்தைகள் கடத்தப் பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப் படுகின்றனர்”
என்பது Freedom Firm என்ற உலகு தழுவிய அமைப்பின் பொறுப்பாளர் அனிதா அவர்களின் ஆய்வு கூறுகிறது.
இந்தியாவில் 10 ஆண்டுகளில் 33இலட்சம் பெண்குழந்தைகளும் ,,தமிழகத்தில் மட்டும் 2 இலட்சம் பெண் குழந்தைகளும்காணவில்லையாமே....இதுவா பரதி கண்ட கனவு.?
பெண்ணுக்கு எதிரியாக குடும்பத்தில்,உறவினரில்,நண்பர்களில், அண்டைவீட்டாரிடத்தில் என விடக் காளான்கள் முளைத்து தூணிலும் துரும்பிலுமாய் காணப்படுகின்றனரே இருக்க வேண்டிய கடவுள் எங்கே?எங்கே?
வீட்டில் அம்மாவிற்கும்,மனைவிக்கும் வித்தியாசம் உணரும் ஆண்களுக்கு வெளியில் காணப்படும் பெண்கள் எல்லாம் போகப் பொருளாய்த் தெரிவதால் தானே
2 வயது குழந்தை முதல் 70 வயது மூதாட்டி வரை பாலியல் வன்புணர்வு செய்ய முடிகின்றது
காதலில் தன்மறுப்பைக் காட்டினால் அமிலம் வீசி சிதைக்கத் தோணுகிறது.
நிர்பயா,அமுதா, என பட்டியல் நீண்டு கொண்டே போகின்றதே...நீதி கிடைக்கலாம் வழியின்றி..ஆனால் பாதிப்பு பெண்களுக்குத்தானே..
பிரபல வார இதழில்
”ஆண் திமிர் அடக்கு” என்ற கட்டுரையில். இந்த பூமியிலேயே பெண்கள் வாழ்வதற்கு மிகவும் அபாயகரமான நாடுகளில் ஒன்று இந்தியா என பி,பி,சி யின் ஆவணச் செய்தி குறித்து கூறப்பட்டுள்ளதே...
.பெண்ணைத் தெய்வமாக மதிக்கும் நாட்டில் தான் நிலப் பாகுபாடின்றிபாலியல் வன்முறையாட்டம் நிகழ்ந்து கொண்டுள்ளது .
20 நிமிடங்களுக்கு 1பெண் இந்தியாவில் இக்கொடுமைக்குள்ளாகின்றாள் மறுக்க முடியுமா?
அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த
மிக்கலா கிராஸ் என்ற மாணவி அளித்தப் பேட்டியில்
” நான் இந்தியாவில் இருந்த நாட்களில் 48 மணி நேரத்தில்2முறை பாலியல் வன்முறையில் இருந்து தப்பித்தேன்.இந்தியா அழகான நாடு .ஆனால் ஆண்கள் அருவெறுப்பாக நடந்து கொள்கிறார்கள்”
என குமறியுள்ளார். .இதுவா பாரதியின் கனவு.....
காரணம் என்ன?
சமூகத்தில் ஆணும் பெண்ணும் சம உரிமை உள்ள உயிரியல் கூட்டாளிகள் என்பதை ஆண் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை ,கற்றுத்தரப் படவில்லை.பெண் தன்னை விடத் தகுதி குறைந்தவள் என்ற எண்ணமே ஆண்களின் மனதில் மேலோங்கி உள்ளது.
வாச்சாத்தி முதல் சிதம்பரம் பத்மினி ,திண்டிவனம் ரீட்டா மேரி என நீளும் பட்டியல் காவல்துறை பலாத்காரங்களும்,சூரியநெல்லி போன்ற அரசியல்வாதிகள் சம்பந்தப்பட வழக்குகளையும் பார்க்கும் போது பெண்கள் வாழத்தகுதியற்ற நாடாக உள்ள இந்தியாவில்
எங்கே பாரதியின் கனவு நனவாகியுள்ளது?
கனல் கனல் என்பவரின் முகநூல் கவிதையொன்று
மகளிர் மொழியாக
கற்பாம்
ஒழுக்கமாம்
விதவையாம்
வேசியாம்
யாரடா தந்ததிந்த பட்டம்?
கொண்டு வா அவனை இந்த பக்கம்..
மலடியாம்
வறடியாம்
மகவு ஈனாப் பெண்டீராம்
எவனடா தந்திந்த பட்டம் ?
இழுத்து வா அவனை இந்த பக்கம்..
தீட்டாம்
புனிதமாம்
திருட்டுப் பயல்களே
எவனடா வச்சதிங்கு சட்டம்?
பிடித்து வா அவனை இந்த பக்கம்..
அச்சம்,மடம்,நாணம்.துவரம் பருப்பென்றாம்
எவனடா வச்சதிங்கு சட்டம்?
அடித்து வா அவனை இந்த பக்கம்..
அடுப்படியே திருப்பதி
வாசல்படியே வைகுந்தம்
எவனடா சொன்னதிந்த சொலவடை?
பிடித்து வா சொர்க்கம் இந்த பக்கம்..
பெட்டை கோழி கூவியா
பொழுது விடியப்போகிறது?
சொன்னவனைக் கொண்டு வா இந்த பக்கம்..
சேவல் முட்டையிடப் போவதையும்
பார்ப்போம்.
உங்கள்
சாத்திரம் ,சடங்குகள்,சம்பிரதாயங்கள்
புழுகுகள், புழுக்கைகள்
புராணக்குப்பைகள்
எங்களை அடிமைகள்
என்றே சொல்லட்டும்.
முதுகெலும்பில்லா புழுக்களே
உங்களை புதைபட புதைபட
நசுக்கியே கொல்வோம்”
என்கின்றது.பாதிக்கப் பட்ட பெண்ணினத்தின் ஆக்ரோசமான வெளிப்பாட்டையல்லவா காட்டுகிறது.
ஆனால் உன்மை நிலை இப்படி எத்தனை பேர் பாடினாலும் பென்ணின் மீது செலுத்தப்படும் அடக்குமுறை கடலலை போல ஓயாமல் பெருகும் போது
எங்கே பாரதியின் கனவு முழுமையாக நனவாகியுள்ளது?
என்று என் வழக்கை முன் வைத்தேன்.
இதற்கு நடுவரின் தீர்ப்பு
பெண்களுக்கு எல்லா சுதந்திரமும் கிடைத்துவிட்டது.அவர்கள் இரவில் வெளியே ஏன் செல்ல வேண்டும?அரைகுறையான ஆடைகளை அணிவதே அவர்களின் துன்பத்திற்கு காரணம்.இனி அவர்கள் பாதுகாப்பான நேரங்களில் பாதுகாப்பான இடங்களுக்கே செல்ல வேண்டும் .என்பதே தீர்ப்பானது.
பார்வையாளர்களின் கருத்துக்களைக் கேட்ட போது
தமிழாசிரியரும் ,கவிஞரும்,பட்டிமன்ற பேச்சாளருமான
திரு.முத்துநிலவன்.அய்யா தனது கூற்றாக
ஆடை தான் பெண்களின் மேல் ஏற்படும் பாலியல் வன்முறைக்கு காரணமெனில் 2 வயது குழந்தையும்,சீருடை அணிந்த குழந்தையும் பாலியல்
வன்முறைக்கு ஆளாகியுள்ளனரே.அவர்களிடம் எந்த ஆடையைக் கண்டனர் ஆண்கள் .ஆண்களின் வக்கிரமான எண்ணங்களே இதற்கு காரணம்.இதை நாம் ஒத்து கொள்ள வேண்டும்.ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு தான் காரணம் என்று கூறினார்.மனித நேயமுள்ளவராய்...
இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த திரு பொன்.க அய்யாவும் இதை ஏற்றுகொண்டார்.பெண்ணியம் பற்றி பேச விரிந்த பார்வை வேண்டும் என்றார்.இவர்களை போன்றவர்களால்
மனிதம் வாழ்கிறது இன்னும்.நன்றி