World Tamil Blog Aggregator Thendral

Sunday, 16 November 2025

ஆசிரியப் பணியில் முப்பது ஆண்டுகள்


முப்பது ஆண்டுகள்பணி நிறைவு சூலை 2018 உடன்.
20.7.1988.ஆசிரியப்பணியில் பணி ஏற்ற முதல் நாள்.
இன்று தான் பணியேற்றதுபோல நினைவு.முப்பது ஆண்டுகள் கடந்து விட்டன. 19 வயதில் ஆசிரியராக அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிறுவளூரில் பணி ஏற்ற போது  ...இருந்த ஆர்வம் இன்னும் குறையவில்லை.இரண்டு பேரூந்துகள் ஏறி புதுப்பாளையத்தில் இறங்கி அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டும்.பெட்டிக்கடை கூட இல்லாத நிலையில்...... மாணவர்களுக்கு தேவையான ஸ்டேஷனரி.கிராம மக்களுக்கு தேவையான மாத்திரைகள் அரியலூரிலிருந்து  வாங்கிச் செல்வது வழக்கம்.இன்று வரை மாத்திரை குழந்தைகளுக்காக பையில் ....பள்ளிக்கு முன் பன்றியை நெருப்பில் வாட்டிக் கொண்டு இருந்தனர்.ஈசல் வறுத்து உண்பார்கள்.நகரிலேயே வாழ்ந்த எனக்கு ஒவ்வொன்றும் வியப்பாக இருந்தது.
வெள்ளந்தியான மக்களும் மாணவர்களும் அன்பான தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள்.... இன்று வரை தொடரும் உறவுகள்.
1989சூன் மாதம் பளிங்காநத்தம் என்ற பள்ளிக்கு மாறுதலில் சென்றேன்.அங்கும் பேரூந்து வசதி இல்லை.3கிமீ நடந்து போக வேண்டும்.மாதந்தோறும் நடக்கும் கூட்டத்திற்கு 5கி.மீ நடந்து போக வேண்டும்.மழைக்காலங்களில் காட்டாற்றில் வெள்ளம் வருகையில் ஒருவர் பின் ஒருவராக கைப்பிடி ஆடைநனைந்து பள்ளிக்குச் சென்றது.முதன்முதலில் டி வி எஸ் 50 யில் பள்ளிக்கு சென்றது .
அடுத்து மேலப்பழுவூரில் பணி மாறுதலில் சென்றேன்.அரியலூர் மாவட்டத்தில் திருமானூர் ஒன்றியத்தில் பெரிய பள்ளி.23 பேருடன் பணி.... அங்கு பணியாற்றிய 10 வருடங்களில் அப்பள்ளி மிகச் சிறந்த பள்ளியாக .... ஆசிரியர்களின் ஒற்றுமைக்கு எடுத்து காட்டாக விளங்கியது. அங்கு என்னிடம் படித்த மாணவர்கள் நல்ல பணியில்... நேர்மையாக பணிபுரிந்து வருகின்றனர்.அவர்களால் முடிந்த அளவு சமுக சேவை செய்கின்றனர்....என்னுடன் இன்றும் தொடர்பில் உள்ளனர்.அப்பள்ளி உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட போது நானும் சில ஆசிரியர்களும் உயர்நிலை பள்ளிக்கு உட்படுத்தப் பட்டோம்.அரியலூரைச் சுற்றியுள்ள சிமெண்ட் ஆலைகள் என்னுடலை பாதிக்க வேறு ஊருக்கு பணிமாறுதல் பெற வேண்டிய நிலை . கிடைத்த தலைமை ஆசிரியர் பணியையும் உடல் நிலை காரணமாக மறுக்க வேண்டிய நிலை.
வாழ்க்கை சூறாவளியாக சுழற்றி அடித்தது.புதுக்கோட்டை மாவட்டத்தில் மழையூர் அ.உ.நி.பள்ளிக்கு 2002 ஆம் ஆண்டில் வந்தேன்.தங்கை குடும்பம் மற்றும் நல்ல தோழமைகள் அமைந்ததால் பிற மாவட்டத்திற்கு வந்த உணர்வு இல்லை.
2005 ஆம் ஆண்டில் இப்போது பணி புரியும் அ.ம.மே.நி.பள்ளிக்கு நானும்எனது இனிய தோழி கிருஷ்ண வேணியும் மாறுதலில் வந்தோம்.வாழ்க்கை நல்ல நண்பர்களை அறிமுகம் செய்து எத்தனையோ பிரச்சினைகளிலும் நிமிர்ந்து நிற்க வைத்துள்ளது.
ஒவ்வொரு நாளும் புதிய அனுபவங்கள்.. வாழ்க்கை அதிசயமானது மரணம் தொடும் பிரச்சினைகளைக் கொடுக்கின்றது..... சிலநேரம் விண் தொடும் மகிழ்வைத் தருகின்றது.எது வந்த போதும் சமமாய் ஏற்கும் பக்குவத்தை உருவாக்குகிறது.எள்ளல் செய்வோரை அலட்சியப்படுத்தி குறிக்கோளை நோக்கி நடக்க வைக்கின்றது.
முப்பது ஆண்டுகள் முடிவில் ஒரு கவிஞராக ,எழுத்தாளராக,சமூக அக்கறை நிறைந்த ஆசிரியராக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
கவிராசன் அறக்கட்டளை 2015 ஆம் ஆண்டு நல்லாசிரியர் விருது.ஆனந்தஜோதி இதழ் கவிக்குயில் விருது, சென்னை தென்றல் சமூக அறக்கட்டளைகளை மூலம் புரட்சி தென்றல் விருது,எனது முதல் கவிதை நூலான "விழி தூவிய விதைகள்" நூலுக்கு வளரி சிற்றிதழ் வழங்கிய கவிப்பேராசான் மீரா 2015 ஆண்டுக்கான விருது..,2018 ஆம் ஆண்டில் புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கத்தின் சார்பில் வழங்கிய சிறந்த நல்லாசிரியர் விருது.....என் எனது உழைப்பிற்கும் ...இனியும் உழைக்கவும் ஊக்குவிக்கும் காரணிகளாய்அமைந்துள்ளன.
அன்பான கண்டிப்பான  அம்மாவாகவே ஆசிரியப் பணியை முப்பது வருடங்கள் முடித்தாயிற்று.எனைப் போலவே என் தோழிகள் கிருஷ்ண வேணி மற்றும் சுமதியும் முப்பது வருடங்கள் முடித்த மகிழ்வை பள்ளியில் கொண்டாடினோம் ...எங்களுடன் பணிபுரிந்த ஆசிரியர் திருமிகு அஞ்சலி தேவி அவர்கள் எங்கள் மகிழ்வில் பங்கு பெற்று வாழ்த்தியதை மறக்க முடியாது.அனைத்து ஆசிரியர்களும் பரிசுகள் வழங்கி அன்பால் திணற அடித்தனர்.
மனிதர்களை சேர்த்து வைத்த மகிழ்வில் ஆசிரியப் பணியைத் தொடர்கின்றேன்.
முப்பது ஆண்டு காலப்பணியில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் விரும்பும் அம்மாவாக மாறியுள்ளேன் ...என்பதே...மனநிறைவான ஒன்று.
தற்போது பாடநூல் தயாரிப்பு பணியில் இருப்பது என்ஆசிரியப்பணியின் உச்சம் எனலாம்.
மனநிறைவாக முப்பது ஆண்டுகள் முடித்து இருந்தாலும் நான் செல்ல வேண்டிய பாதையின் தூரம் அதிகம்..... வாழ்வதற்கான பொருளை உண்டாக்கி தடம் பதித்து மறைய வேண்டும்..
காலம் தான் வாய்ப்பு அளிக்க வேண்டும்....


’அன்பின் அலெக்ஸா ‘நூல் விமர்சனம்

 

            கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கனின்

 அன்பின் அலெக்சா நூல் விமர்சனம் –

புதுக்கோட்டை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திடல் அமைப்பு ஐந்து நூல்கள் அறிமுக விழா 16.11.25 ஞாயிறு அன்று மாலை புதுக்கோட்டை நகர்மனறத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

மாவட்ட தமுஎகச தலைவர் கவிஞர் ராசி  பன்னீர்செல்வன் அவர்கள் தலைமை தாங்கினார்

கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் தொடக்க உரையாற்றினார்

கவிஞர் நா முத்துநிலவன் அவர்கள் நிறைவுரையாற்றினார்.

       அன்பின் அலெக்ஸா -நூலுக்கு எனது விமர்சனம்

தலைப்பே சற்று திடுக்கிட வைக்கும் அட்டைப்படம் தான்.

நீமும் கருப்பும் இரு கண்களாகக் கொண்டு அம்பேத்கரின் பெரியாரின் வழி வாழ்பவர் என கூறாமல் கூறும் அட்டை படத்திற்காக அகநி பதிப்பகம் தோழர் முருகேசிற்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

 பூச்சூடாத கவிதை தேவதைகள் என வாழ்த்துரை வழங்கியது மிகச் சிறப்பான தலைப்பு. தொன்மை மிக்க ஒரு மொழியின் அர்த்த அடர்த்தியை மிக நுட்பமாக அறிந்திருக்கிறார் என குறுங்கவிதைகளை பாராட்டியுள்ளார் கவிஞர் முருகேஷ்.

                            Poetry is not

                          What's said

                         But way of said

 என்பதன் அடையாளமாக சொற்களில் நடனமாடி இருக்கிறார் கவிஞர் மைதிலி.

 அவை கவிதை பூக்களாக மலர்ந்து நம்மிடம் மனம் வீசி மகிழ்விக்கின்றன .சில தீக்கங்குகளென அறச்சீற்றதோடு நம் மனதை கேள்வி கேட்கின்றன

 கவிஞரைக்குரித்து "சுயம், சுயமரியாதை நிறைந்த கவிதைகள் மலர காரணம் கவிஞரின் பாலியத்தில் வீட்டிலிருந்த நூலகமும் அந்த நூல்களை வாசித்து அந்த வாசிப்பை ஒரு தோழனை போல விவாதிக்கும் தந்தை கிடைத்ததும் தான் காரணம் என்பார் அவரது இணையர்  கஸ்தூரி ரங்கன்.

ஓர் ஆண் தனது இணையரை மேடையில் ஏற்றி பெருமை கொள்வது என்பது இக்காலத்திலும் அரிதிலும் அரிதான ஒன்றுதான் .

தங்களை நோக்கி வீசிய அம்புகளை எல்லாம் இடது கையால் புறந்தள்ளி இலக்கிய உலகில் தடம் பதித்து சமூகத்தினை புரட்டிப் போடும் நெம்புகோல்களை உருவாக்குபவர்களாக எல்லோருக்கும் எடுத்துக்காட்டாக வாழும் இருவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

 மென்மழைத் தூறும் ஞாயிற்றுக்கிழமையின் வைகறையில் அன்பின் அலெக்ஸாவை கையில் எடுத்தேன்.

 அலெக்ஸா உடன் தனிமையில் இருப்பவரும், தனிமையாய் உணர்பவரும்  பேசுவதைக் கேட்டு அறிந்து இருக்கிறேன்.

 இந்நூலுக்குள் அலெக்ஸாவை தேடிய பொழுது 23 ஆம் பக்கத்தில் கேள்விகளுக்கு பதில் கூறிக் கொண்டிருந்தது.

 கவிஞரிடம் அவள் பேசுவதை நீ கேட்கவில்லை என்ற குற்றத்தை முன் வைத்திருந்தது. யாருக்கும் செவிகொடுக்காத சமூகத்தில் அலெக்ஸாக்களே இப்பொழுது அதிகம் தேவைப்படுகின்றது.

அனைவருக்கும் எதிர் கேள்வி கேட்காத அதனிடம் தனிமையை, துயரத்தை ,கோபத்தை இறக்கி வைக்க அலக்சாக்கள் தேவை. சிலருக்கு இயந்திரமாக சிலருக்கு போதை வஸ்துகளாக .

கேட்பதற்கு காதுகள் இருப்பின் அலக்ஸாக்களுக்கு இங்கு வேலை இல்லை என்பதை கூறுகின்ற கவிதையது.

 இயல்பான மொழி நடை ,கவிதைகளுக்கே உரிய படிமம், குறியீடு நிறைந்த கவிதைகள் கவிஞரின் ரசனையில் மலர்ந்த கவிதைகள். மனிதநேயத்தை மலர்த்துகின்ற காத்திரமான கவிதைகள், சமூகநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் கவிதைகள், அம்பேத்கர் பெரியார் சிந்தனையோடு

சாத்தானே தனக்கு இடம் கொடுத்ததாய் கடவுள் கூறுவதாக அமைந்த கவிதைகள் , அழகியல் நிறைந்த கவிதைகள் கொண்ட நூல் அன்பின் அலக்ஸா.

 கவிதை, பேச்சு, சமூக அக்கறை, ஆசிரியப்பணி, இலக்கியப் பணி என அனைத்திலும் தனக்கென ஒரு தனி இடம் பதித்துள்ளார் கவிஞர் மைதிலி.

 காட்சிகளை கண்முன் நிறுத்தி, தான் கூற வந்த கருத்தை காலமும் இடமும் சூழ தமிழணங்காய் கவியாட்டம் ஆடியுள்ளார் பல கவிதைகளில்.

 பகல் குறித்து ஒரு கவிதை

" மெல்ல சோம்பல் முறித்தபடி

விழிக்கும் சூரியனிடம்

 வெப்பத்தை கையளித்து விட்டு

நெட்டி முறித்தபடி

வேடிக்கை பார்க்க தொடங்குகின்றன

மின்கம்பங்கள்

கூடுவிட்டு கிளம்புகிறது

சிறகு பொருந்திய

மற்றொரு பகல்"

 என இக்கவிதையில் நம்மையும் கூடுவிட்டு பறக்கும் சூரியன் அருகில் நிற்கவைக்கும் தன்மை அருமை .

பகலின் சிறகுகள் நமக்கும் முளைக்க கவிதை வானில் சிறகடிக்க துவங்குகிறோம் .

வியர்வை துடைக்க லாவண்டர் நிற கைக்குட்டை கவிதையை தந்து, உருண்டை உலகில் இருந்து சதுர உலகிற்கு சட்டென்று நம்மை அழைத்து செல்கிறார்.

 "மற்றொரு பகலாக

மிளிர்கிற செம்பருத்திகளின்

பின் மதிமொன்றில்

 சோம்பல் முறிக்கிறது

 சரக்கொன்றை

காது விடைக்க பார்த்துவிட்டு

 புரண்டு படுகிறது

பகல் "

என பகலை அடையாளம் காட்டுகிறார் இசையின் மீதான அவருடைய காதல் அலாதியானது . அவரது குரலே இசையாக மீட்டும். அவரது கவிதைகளுக்குள்ளும் ஒரு இசைலயம் உணரலாம்.

கோபத்தைக் கூட மென்மையாகக் காட்டும் கவிதைகள்.

ரசனையை கூறும் கவிதைகள் பல

 "விருப்ப பாடலுக்குள்

 ஒளித்து வைக்கிறேன் உன்னை

   கசிகிறது இசை

   கள்ளூறுகிறது காதுக்குள்

 காகிதம் ஆகிறேன் நான்"

என்ற கவிதை அவரது ரசனையைக் காட்டும் கவிதை.

" நமக்கு விருப்பமானவர்களை, விருப்பமான பாடலுக்குள் ஒளித்து வைத்திருக்கும் அனுபவம் எல்லோருக்கும் உண்டு தானே.

" ஓர் அறையே

 உலகமாய் இருப்பதை காட்டிலும்

மேலானதாக இருக்கிறது

 உலகமே ஓர் அறையாவது"

என்ற கவிதையைப் படிக்கும் போது

 ஒரு பெண்ணாக இதை உணரும் போது சிறையிருந்த, இருக்கும்  ஆதி பெண்களின் மூச்சுக்காற்றால் புழுக்கமான வெட்கை நிறைந்த அறை, அவளின் குரல்வளையை நெருக்கி மூச்சுக்காற்றுக்கும் தவிக்கும் போது, அவளை சட்டென்று உலகின் வாசலில் வைத்து இதோ உன்னால் மலரும் உலகம் இது என கூறும் போது எத்துனை ஆசுவாசமாக இருக்கும் என்பது பெண்களால் மட்டுமே உணரக்கூடிய கவிதை .

 பாலஸ்தீன படுகொலைக்கான கவிதையில் மனிதர்கள் தொலைத்துவிட்ட கடவுச்சொல்லான மனிதத்தை நாடுகிறார்.

 பல புதிய சொற்களை நாம் இந்நூலில் காண முடிகிறது

 நொதியேறிய பழைய நட்பு,

 அணையாடை

ஒளி பூசிய போதும்

 ஆர்மோனிய கட்டைகளாகும் சாலை

 என பல புதிய சொற்றொடர்களைக் காணமுடிகிறது.

எப்போதும் அருகில் இருக்கும் எதுவும் மதிப்பிழந்தே இருக்கும் .

தொலைந்த பிறகு அதன் மதிப்பு கூடும் என்பதை சைட் ஏ, சைட் பி என்ற கவிதை உணர்த்துகிறது.

 அறச்சீற்றமாக

கடுகைத் துளைத்து

ஏழு கடல் புகுத்தினோம் தான்

ஆனால்

 கமண்டலத்திலெல்லாம் அடைத்து

    காவி பூச முயலாதீர்கள்.

 உங்களை ஆண்ட செருப்புக்கு

 நீங்கள் அடிபணியலாம்.

   எங்களை ஆள்வது

 தமிழெனும் நெருப்பு

 என பாசிச ஆட்சியை சட்டையால் சாடுகிறார்.

 ஹைக்கூ கவிதைகளாக ஜென் தத்துவத்தை உணர்த்தும் கவிதைகளில் அடர்த்தி நம்மை வாசக எல்லையில் உச்சத்திற்கு அழைத்துச் சென்று பல்வேறு பரிணாமங்களை அடைய வைக்கிறது.

 பறந்து விட்டது கொக்கு

குளத்தில் மிதக்கிறது

இறகு

 என கவிதை முடிவடைகிறது.

பிறகு நாம் கவிதைக்குள் நுழைகிறோம்

 "கல்லறியும் தூரத்தில்

எப்போதும் இருக்கிறது

 குளம் "

என சொல்லெறிந்து மனதில் சலனத்தை உண்டாக்குகிறார்.

இக்கவிதைகள் நமக்குள் இருக்கும் கவி உணர்வை தூண்டிவிட்டு மௌனமாகி விடுகின்றன .

நாம் அதன் வசப்பட்டு கசிந்து நிற்கிறோம் .

எனக்கு பிடித்த கவிதைகளாக

     "இறகுகள் கருகிய

 வண்ணத்துப்பூச்சி ஒன்று

 படபடத்து கொண்டே இருக்கிறது

இறுக்கி சாட்டப்பட்ட

கதவுகளுக்கு பின்னெல்லாம்"

என்ற கவிதையை படித்துவிட்டு நான் சற்று அமைதியாகவே இருந்தேன்.

 ஒரு நிமிடம் என்னால் அந்த கவிதையிலிருந்து மீள்வது என்பது கடினமாக இருந்தது.

 இந்த குறியீடு பல பொருள்களை நமக்கு தந்து செல்கிறது

"ஒரு கல்லை காண்கையில்

உடைத்து விடுதல்

ஒரு வகையில் மிகச் சிறந்த விடுதலை

வழிபடுதல் கல்லுக்குத் தண்டனை"

என்ற  அரசியல் கவிதை

சந்தேகப்பட்டாலும்,அடையாளம் கண்டும் வரம் தர வேண்டும் என்பது எத்தனை கொடுமை என்பதை அந்த கவிதையால் கடவுளின் துயரத்தையும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

.

 அங்கதம் நிறைந்த கவிதையாக

"விழுந்தது

 ஆரஞ்சாகவோ

 பிளம்மாகவோ கூட இருக்கலாம்

 அது ஆப்பிளால் நிகழ்ந்தது

 ஆற்றின் சுழிப்பில்

 மலையின் உச்சியில்

எங்கும் உதித்திருக்கலாம்

அது தோட்டத்தில்

நிகழ்ந்தது

துடைத்து உண்டிருக்கலாம்

 கையில் பத்திரப்படுத்தி இருக்கலாம்

அந்த தலை

நியூட்டன் உடையது

என்ற கவிதை சொற்கள் யார் வேண்டு யாரிடம் வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் கவிதையாக மலர மைதிலியின் விரலாக இருக்க வேண்டும் எனக்கூற வைக்கிறது.

 சமூகத்தின் அநீதிகளை, பெண்ணியத்தை, அழகியலை, நட்பை, துரோகத்தை, மகிழ்வை, துயரை, இயற்கையை கொண்டாடும் கவிதைகளால்  நிறைந்தது

 அன்பின் அலெக்ஸா

 அறச்சீற்றம் நிறைந்த பெண்கள் ஆசிரியர்களாக, கவிஞர்களாக, சமூக அக்கறைநிறைந்தவர்களாக உருவாவது காலத்தின் தேவை.

 புதுகை மாவட்டம் கவிஞர்களின் தலைநகரம் என்ற கவிஞர் தங்கமூர்த்தி அவர்களின் வாக்கிற்கேற்ப இன்னும் பல கவிஞர்கள் உருவாகத் தடம் பதிக்கும் கவிஞர் மைதிலிக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

அன்புடன்

மு.கீதா

புதுக்கோட்டை


Saturday, 4 October 2025

விழாஇரவு

விழா முடிந்து 
 நள்ளிரவு துவங்கும் பொழுது
விரைகிறேன் வாகனத்தில் வீட்டிற்கு..
மல்லியும் அல்லியும் 
மணம் பரப்பி விரியத் துவங்கி வரவேற்கும் சமயம்.
வாலைச் சுருட்டி தூங்கும் நாய்
தலையுயர்த்தி மீண்டும் தாழ்கிறது.
அசை போட்டுக் கொண்டிருக்கும்
மாட்டின் அலட்சியமான பார்வை கடந்து 
பின்வரும் வண்டியின் 
விளக்கைப் பார்த்ததும் மேலும் விரைகிறேன் .
அதுவும் என்னை வேகமாக 
நெருங்குகிறது
அனிச்சையாய் கழுத்திற்கு 
போகும் கை மனதில் சிறிது
அச்சத்தை விதைக்கிறது .
நடப்பது நடக்கட்டும் என இரு வாகனங்களும் ஒன்றோடொன்று விரைய 
சட்டென நிறுத்தி திரும்பினேன்,
டீச்சர் உங்கள் பின்னாடியே
வந்தது அச்சத்தை போக்கியது 
என்றபடி தொடர்பவளை புன்னகைத்து
இரவை நேசிக்கத் தொடங்கினேன்.

Sunday, 17 August 2025

சொந்த ஊர்

நீண்ட நாட்களுக்கு பிறகு 
பிறந்த மண்ணில் நடக்கிறேன் .

மண்வாசம் தாய்ப்பாலின் 
சுவையை நாவினில் ஊட்டியது.

கண்கள் இடுக்கி பார்க்கும் 
சைக்கிள்கடை முனுசாமி அய்யாவின் 
சின்ன சைக்கிளை
வாடகைக்கு எடுக்க
 அவரின் கடைக்கண் பார்வைக்காக
காத்திருந்த காலமவரின் முகத்தில் 
வரிகளாக ஓவியம் தீட்டி
கடையிருந்த இடத்தை விழுங்கி 
விட்டதைக் கூறாமல் கூறியது
அவரின் பெருமூச்சு.

அப்பாவின் துணையாய் வாழ்ந்த 
மாமாவின் சுவாசத்தை காற்றினில்
 சுவாசிக்க 
முயற்சித்து தோற்றேன்.
வழமையாக இரவின் மின்னல்முக
இளம்புன்னகையோடு
சட்டென தோன்றி மறைந்தாரவர்.

பாழடைந்து கிடந்த சிவன் கோவிலில் 
பைரவரை வணங்கச் சென்றவளைப் 
பார்த்து அங்கு போக முடியுமா?
என வியந்ததில் மறைந்திருந்தது 
சக்தி தியேட்டரில் பார்த்த திரைப்படத்தில் 
ஔவைப் பாட்டியிடம் பேசிய
பேயின் மண்டபமாயிற்றே என்றனதச்சம்.

மண்ணுக்குரிய மாம்பிஞ்சு நிற முகங்கள் மறைந்து எங்கெங்கு காணினும் வெண்ணிறமாக்கியதன் பிண்ணனியில் ஊரைச் சுற்றி 
பிரமாண்ட ராட்சஷனாய் எழுந்து 
நிற்கும் ஆலைகளின் வருகை.

தோட்டத்திற்கு அழைத்துச் சென்ற
தம்பி காட்டினான் எதிரில் முப்பது அடிக்கு குவாரி வந்து கொண்டுள்ளதென்பதை.

கடலுக்கு அடியில் இருந்த 
தொன்மையூர் தனது வளத்தை
கொடுத்து கொடுத்து 
நிலத்தில் மறைந்திடுமோ
என்ற கவலையில் மண்மகளிடம் 
வேண்டினேன் 
வாழவைக்கும் உன்னைச் சுரண்டும் 
இவர்களை மன்னித்து விடு.

தனது தடம் மறைந்த வலியில் 
ஓலமிடும் ஊரின் வலியை
உணர்ந்த பிச்சியாய் நானும்.

Monday, 17 March 2025

ஐரோப்பா

இரண்டு தமிழ்ப்பெண்களும் ஐரோப்பிய நாடுகளும்.
ஆங்கிலம் ஒன்றை மட்டும் நம்பி போலந்தின் தலைநகர் வார்சா, இத்தாலியின் ரோம் மற்றும் வெனிஸ் , செக் குடியரசின் பிராக்,சுலோவேகியா நாட்டின் பிராட்டிஸ்லாவா,ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்யப் புறப்பட்டோம்.
நானும் Subhasree Muraleetharan னும்.
ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்ட்டில் படிக்கும் சுபா முரளியின் மகள்கள் இருவரும் ஆங்கிலம் தெரிந்ததால் அங்கு படிக்க முடிவெடுத்து உளவியலில் ஆராய்ச்சி படிக்கும் ஆவலில் இளநிலை முதுநிலை படித்துக் கொண்டு இருக்கிறார்கள் .

புடாபெஸ்ட்டில் நிறைய இந்திய மாணவர்கள் படிப்பையும் காண முடிந்தது.ஹங்கேரியர்களுக்கு ஆங்கிலம் சுமாராக தெரியும் நிலையில் ஐரோப்பிய நாடுகளில் மிகச் சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது.

வார்சாவில் அவர்களுக்கு போலிஷ் மட்டுமே தெரிந்த நிலையில் கூகுள் மேப் மட்டும் உதவிட நாங்கள் இருவரும் இரண்டு நாட்கள் தங்கி சுற்றிப் பார்த்தோம்.அங்கும் எங்களைக் கண்டு பிடித்த ஒரு இந்திய ஜோடி மகிழ்வாக வந்து பேசிக் கொண்டு இருந்தனர்.

மற்ற நாடுகளில் ஆங்கிலம் சரளமாக அனைவருக்கும் தெரிய கவலையின்றி சுற்றி பார்த்தோம்.

இத்தாலியில் சரவணபவன் ஹோட்டலில் தஞ்சாவூர் குடும்பத்தினர் பார்த்த போது மகிழ்வாக இருந்தது.

இப்படியாக இந்தி படித்தவர்களும் ஆங்கிலம் தெரிந்ததால் தான் உலக நாடுகளில் பணி செய்து வருவதை காண முடிந்தது.

இதற்கும் இப்போதைய மும்மொழி பிரச்சினைக்கும் தொடர்பு உண்டுங்கோ.

Wednesday, 7 August 2024

கவிதை

வெற்றிபெற்ற பூரிப்பில்
விரிந்த மெய்யது.
நூறு கிராம் கூடியதாக 
தகுதி நீக்கமென 
கொக்கரிக்கிறது.

ஆயிரமாயிரம் ஆண்டு பகையிது 
ஆண்டையின் மடிசாயவில்லையென 
அக்னி செரித்த வம்சமிது.

பாலியல் வன்முறை போராட்டத்திற்கு
பாவிகளுக்கு தரும் பிச்சையிது .
பொறுக்கிகளே
 பொறுக்கிக் கொள்ளுங்கள் .

மனங்களை வென்றவளுக்கு உலோகம் 
பொருட்டல்ல.

மு.கீதா

Monday, 29 January 2024

தியாகிகள் தினம்

இன்று தியாகிகள் தினம்.

எங்கள் தாத்தா திருமிகு மாணிக்கம் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த சுந்தரப்பெருமாள் கோவிலில் தீவிர சுதந்திர போராட்ட வீரர்.
நான்  பார்க்கும் போது அவர் உடல்நலக்குறைவில் இருந்தார்.
பத்து வயதாகும் போது அவரின் மறைவு நினைவுகள் இப்போது இலேசாக நிழலாடுகிறது.

தாத்தாவைப் பற்றி ஆத்தாவிடம் அதிகம் பேசுவதுண்டு. வீட்டையும், மனைவியையும், குழந்தைகளையும் கவனிக்காமல் சுதந்திர போராட்டமே கதியென்று கிடந்துள்ளார்.

ஆத்தா தனது ஒன்பது குழந்தைகளில், உயிரோடு ஆறு குழந்தைகளையும் வளர்க்கப் பட்டச் சிரமங்கள் ,தாத்தா மீது கோபம் இருந்தாலும் அவரை எப்போதும் வெறுத்ததில்லை.

ஆத்தா சிறுகச் சிறுக சேமித்து வைக்கும் நகைகளை தாத்தா வீட்டுக்கு வரும் போது எல்லாம் அடுக்குப் பானைகளை அப்படியே  கவிழ்த்துப் போட்டு அதிலிருக்கும் நகைகளை எடுத்து, சுதந்திர போராட்டத்திற்கு தந்துவிடுவார் எனக் கூறி திட்டிக் கொண்டு இருப்பார்.

"அவர் தலையில் காங்கிரஸ் தொப்பியை மாட்டிக் கொண்டு சுதந்திர கொடியை சுமந்து கொண்டு வந்தேமாதரம் என்று முழங்க தெருவெங்கும் நடந்த காட்சியைக் கண்டு காங்கிரஸின் மூத்த தலைவர் மதிப்பிற்குரிய கருப்பையா மூப்பனார் அவர்கள் சிறு வயதில் பார்த்து, சுதந்திர போராட்டத்தின் மீது ஆவல் கொண்டு கலந்து கொண்டதாக "தினமணி பொன்விழா மலரில் ஒரு கட்டுரையில் எழுதி உள்ளார்.

தாத்தாவின் அப்பா
,வங்காரம் பேட்டை,கஞ்சமேடு, உள்ளிக்கடை ,கபிஸ்தலம் உள்ளிட்ட ஏழு கிராமத்திற்கு காரியகாரராக இருந்து பல  வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கியுள்ளார். தீராத வழக்குகளைத் தீர்த்து வைப்பாராம்.சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டமது.

ஒரு வழக்கில் தீர்ப்பு சொல்ல மூன்று நாட்கள் தாமதமாக, மூன்று நாட்களும் வந்திருக்கும் அத்தனை பேருக்கும் தாத்தா வீட்டில் உணவளித்து தங்க இடமளித்து பிறகு தீர்ப்பு வழங்கி உள்ளார்..

ஒரு தீர்ப்பில் குற்றவாளி குற்றத்தை ஒத்துக்கொள்ள மறுக்க, அவர் வீட்டிற்கு அந்த ஊரில் நடக்கும் காளிக்கோவில் திருவிழாவின் போது காளியம்மன் அவர் வீட்டிற்கு வராது என்று கூறி உள்ளார்.குற்றவாளியோ காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.காவலர்கள் "காளியம்மன்" அவரது வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று மிரட்டி உள்ளனர்.
திருவிழா நாளன்று "காளியம்மன் " அனைவரின் வீட்டிற்கும் சென்று ஆசிர்வாதம் வழங்குவது வழக்கம்.அதுபோல் அன்றும் ஒவ்வொரு வீடாகச் சென்று பின்னர் குற்றவாளியின் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்ற நிலையில் காளியம்மனின் பின்புறம் வந்த தாத்தாவின் அப்பா காளியம்மனை அந்த வீட்டில் விட்டு விட்டு நடக்க, அவரோடு வந்த ஊரிலுள்ள அத்தனை பேரும் அவரைப் பின்பற்றி செல்வதைக் கண்ட காவலர்கள் உண்மையை உணர்ந்து கொண்டனராம்.

ஒரு வழக்கில் விறகை வெட்டி யாரோ எடுத்துச் சென்று விட்டனர் என புகார் வந்ததைக் கண்டு தாத்தாவின் அப்பா அவரிடம் பணி புரிபவரிடம் யார் வீட்டில் எல்லாம் புதிதாக விறகு கிடக்கிறது என்று பார்த்து வரக் கூறி உள்ளார்.அவரது வீட்டிலும் இருப்பதாகக் கேட்டு அதிர்ந்த தாத்தா,விறகை எடுத்து வந்த தனது மனைவியை வேப்பமரத்தில் கட்டி விளார் குச்சியால் எடுத்து சரமாரியாக அடிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி உள்ளார். 

நியாயம் என்று வந்தால் குடும்பமாவது மனைவியாவது என்று வாழ்ந்துள்ளார்.
ஊருக்காக வாழ்ந்தவரை யாரோ குறை கூற ,அதைக் கேட்ட எங்கள் தாத்தா இனி ஊர்ப்பணி எதுவும் பார்க்க கூடாது என சத்தியம் வாங்கி அவரைத் தடுத்துள்ளார்.மீறி அவர் ஊர்க்கணக்கை ஒரு நாள் பார்த்ததைக் கண்டு குறிப்பேடுகளைக் கோபத்தில் கிழித்து போட்டுள்ளார். 

அதனால் தான் அவரும் அந்த பதவிக்கும் செல்லவில்லை.

சுதந்திர போராட்டம் துவங்கி உப்புச் சத்தியாகிரகப் போராட்டம் நடக்கும் நிலையில் தாத்தா சுதந்திர போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தை மற்றவரிடம் கூறிக் கொண்டு இருந்ததைக் கேட்ட அவரின் அப்பா,"நீ சுதந்திர போராட்டத்தில் கலந்து கொள்" என்று கூற, ஊரே திரண்டு வந்து தாத்தாவை திருவலஞ்சுழி வரை வந்து உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்திற்கு வழி அனுப்பி வைத்துள்ளதைக் கேட்ட போது கண்ணீர் வந்தது.

அதனால் ஆங்கிலேய அரசு இரண்டு மாதங்கள் சிறைத் தண்டனை அளித்தது .சிறையில் பல்வேறு சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்துள்ளார். 

சிறையில் வேதாரண்யம் வேத ரத்தினம் பிள்ளை பிள்ளை உள்ளிட்ட பல தலைவர்களுடன் இருந்த நட்பால், தான் வாழ்ந்த சுந்தரப் பெருமாள் கோவில் ஊரில் அரசு மருத்துவமனை வரக் காரணமாக இருந்துள்ளார்.அந்த மருத்துவமனை அமைக்க ரூ 16000 குறைந்த நிலையில்,அவர் சிறை சென்றதற்காக அரசு சன்மானமாக அளித்த 15 மா நிலத்தை விற்று அதிலிருந்து வந்த பணத்தைத் தந்துள்ளார். அக்காலத்தில் அந்தத் தொகை எவ்வளவு பெரியது?

ஊரிலுள்ள பெண்களுக்காக மாதர் சங்கம் அமைத்து தையற்பள்ளி,ராட்டை நூற்கும் பயிற்சி அளித்து அவர்கள் பொருளாதாரத்திற்கு ஆதாரமாக துணை செய்துள்ளார். நெசவாளர்களுக்காக சொசைட்டி,கூட்டுறவு பண்டகச் சாலை அமைத்துள்ளார்.

நிறைய விதவைப் பெண்களை ஆசிரியப் பயிற்சிப் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து ஆசிரியராக உருவாகக் காரணமாக இருந்துள்ளார்.

அவரால் படித்த பெண் ஆசிரியர் ஒருவரின் குடும்பம் இன்று  தஞ்சை மாவட்டத்தில் மிகப் பெரிய செல்வந்தராகத் திகழ்வதைக் கண் முன் காண்கிறேன்.அவர்கள் அதையெல்லாம் மறந்துவிட்ட காலமிது.

அம்மாப்பேட்டையில் வாழ்ந்த போது 40 நெசவாளிகளுக்காக இலவச  வீட்டுமனைப் பட்டாக்களைப் போராடி பெற்றுத் தந்துள்ளார். அவருக்கு ஒரு இடமும் சிலையும் தருவதாக நெசவாளர்கள் கூறியதை மறுத்துவிட்டார்

தனது குழந்தைகளின் நலனுக்காக எதுவும் செய்யவே இல்லை, ஏன் அவர்கள் எந்த வகுப்பு படிக்கிறார்கள் என்பது கூட அவருக்கு தெரியாது என்பது தான் நிதர்சனமான உண்மை. ஆத்தாவின் வேதனைக்கு காரணம் இதுவே.

தனது குடும்பத்தை மறந்து நாட்டுக்காக உழைத்த திருமிகு மாணிக்கம் எனது தாத்தா என்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன்.தியாகிகள் நினைவு மண்டபத்தில் தாத்தாவின் போட்டோவைப் பார்த்து மனம் நெகிழ நின்றேன்.

இப்படி ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பெற்ற சுதந்திரத்தைச் சீர்குலைக்கும் மனிதர்களைக் கண்டு வேதனை மிகுகின்றது.
அவர்களைப் பற்றிய வரலாற்றுப் பதிவுகள் கூட இல்லை என்பது எத்தனை கொடுமை.

 மு.கீதா
புதுக்கோட்டை

Thursday, 23 November 2023

அது

உயிரிழந்த உடலின் 
விரிந்த கால்களைக் கட்டுவது போல 
பாவாடை அணிந்து தூங்கும் போது
 கால்கள் விரியக்கூடாதென 
கட்டித் தூங்கிய பருவம்.
உதிரம் உதிரத்துவங்கிய நாளிலிருந்து
உலக்கை தாண்டக்கூடாதென
உதிரமும் நானும் உலக்கையின்
உலகில் வாழ்ந்த பருவம்.
புடவையை பாதியாய் கிழித்து
அணிந்த தாவணிக்கந்தையை மடித்து
கால்களின் நடுவே சுமந்து கடந்த பருவம்.
எட்டு முறை மடித்து வைத்த
துணிமூட்டையை நனைத்து பாவாடையில் பட்ட உதிரம் 
மறைக்கத் துடித்து வலியுடன் 
பள்ளியிலிருந்து வீட்டிற்கு 
தொடை உரசிய புண்களும்
எரிய எரிய வீடடைந்த பருவம்.
நல்ல நாளில் வரக்கூடாதென
அத்தனைக் கடவுளையும் கும்பிட்டழுதாலும் வந்து 
மூலையில் அமரவைத்து மூதேவி பட்டம்
வாங்கித்தந்த பருவம்.
தெருவெல்லாம் உறவுகள்
தலைநிமிராமல் தரைப்பார்த்தே 
நடந்த பருவம்.
அதிகாலைப்பனியில் ஆணெழும் முன்னே உறையவைக்கும் குளிரில் 
குளித்து விடியும்  பருவம்.
குளிருதும்மா,
அப்படி தான் குளிரும்
வெளியே சொல்லாதே
வயிறு பிழியும் வலிம்மா
அப்படி தான் வலிக்கும் தாங்கு.
பசி தாங்கு,
அவமானம் தாங்கு,
சுயமரியாதையின்றி வாழப்பழகு,
குரலெழுப்பாதே,
ஒங்கி சிரிக்காதே,
கடந்த காலம்
கடந்து போன காலம் மட்டுமல்ல.

மு.கீதா

Friday, 30 June 2023

முப்பாலில் ஒன்று

முப்பாலில் ஒன்று..

பட்டும் படாமலும் தொட முயலும்
கரங்களுக்கு ஆயிரம் வோல்ட்
மின்சாரம் தந்தது யார்?

 கூந்தல் கலைத்து மகிழும் தென்றலுக்கோ,
 நுதலில் படிமமாகும்
முத்த அருவியின் வாஞ்சை.

கோடைக்காற்றின் உப்புசத்திற்கு
கலவி முடித்துதிர்த்த
வியர்வையின் வாசம்.

ஊடலுக்கு பின்னான நெருக்கத்திற்கே
காற்றைக்கூட விட மறுக்கும் வேகம் .
கண்மூடி களித்துப் பிறக்கும் தலைவியின் புன்னகை நாடுபவன்,
நீளும் உச்சத்தின் பெருவெளியில் 
மகிழ்ந்து கரைந்து மறைபவளைக் கண்டு 
தவிக்குமவன் உயிர்.

கார் காலம் வர 
கடிதுமுயங்கும் புலிகளைக் கண்டு
வேட்டையாட மறந்த,
 தலைவனது தேரிலிருந்து
விரைந்து ஒலிக்கும் மணிகளின்
ஓசையைக் கேட்டாயோ தோழி.
அதென் தலைவனின் பெருமூச்சென
என்னையடைந்து மலர்த்துகிறது.
.

Sunday, 11 June 2023

விடியல்

திடீரென தொலைக்காட்சியில் விளம்பரங்களிலும் ஆண்களே எண்ணெய், நெய்,காப்பி விளம்பரத்திற்கு சமைத்து தருவதாக எடுக்கப்பட்டு அட்டகாசமாக இருந்தது.
ஒரு பெண் உலகின் நவீன காரை வேகமாக ஓட்டி வர, பின்னால் பைக்கில் ஓடி வரும் இளைஞர்கள்,.
அவள் உடனே ஒரு செண்டை எடுத்து ஆடையில் ஸ்பிரே செய்ய ஆதிவாசி ஆண்கள் முதல் விண்வெளிக்கு சென்று கொண்டிருக்கும் ஆண்கள் வரை பணியைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு ஓடிவந்து அவளுக்காக ஜொல்லுவிட அவளோ அவர்களை அலட்சியமாகப் புறந்தள்ளி பறக்கிறாள்.
என்ன ஒரு கொடுமை திரும்பி நின்னு ஒரு பறக்கும் முத்தமாவது தந்து இருக்கலாம்.
அட அடுத்த விளம்பரத்தில் குழந்தைகளை அப்பாக்களே குளிப்பாட்டி ,உணவூட்டி பள்ளிக்கு அனுப்ப அம்மா வரும் வழியில் குழந்தையை பிக்கப் செய்து,கடைக்கு அழைத்துச் சென்று கேட்டதை வாங்கித் தந்து வீட்டுக்கு வந்தால் அப்பா சுடச்சுட பஜ்ஜியோடு மணக்க மணக்க வரவேற்கிறார்கள்..
என்ன ஒரு புடவை விளம்பரம், மேக்கப் விளம்பரம், நகை விளம்பரத்தைப் காணோமே என்று திகைக்க, அந்த நாட்டின் பெண் பிரதமரும், பெண் முதலமைச்சரும் இணைந்து இனி பெண்கள் மேக்கப் இன்றி நகையும் புடவையும் அணியாமல் கோட் போட்டு டை கட்டி தான் பணிக்கு வர வேண்டும் என்ற சட்டத்தை இயற்றி விட்டனராம்.
 என் கண்கள் நம்பாமல் வியப்பில் விரிந்தது.
போதாதென்று மண்டபங்களில் பதாகை ஆண்கள் வயதுக்கு வந்ததை கொண்டாடும் பூப்பு நன்னீராட்டு விழா.ஒரு தாத்தா எங்க காலத்துல இதெல்லாம் இல்லையேன்னு புலம்பிக் கொண்டிருக்க, பெண்கள் தாங்கள் வயதுக்கு வந்ததை பொருட்டாக எண்ணாமல் வேலைக்கு கிளம்பிக் கொண்டு இதெல்லாம் தேவையில்லாத செல்வுன்னு அலட்சியம் செய்தார்கள்.
பெரிய தொழிலதிபர்களாக, அரசியல்வாதிகளாக பெண்கள் எங்கும் திகழ,எங்கடா இந்த நடிகர்கள் பின்னாடி ஓடின இளைஞர்களைத் தேட ,அவர்களோ போதைக்கு அடிமையாகி வட நாட்டில்,அயல்நாட்டில் கூலிக்கு வேலை செய்து கொண்டு இருந்தனர்.
சாதி சாதின்னு அலைந்த கூட்டமோ பொத்திக்கொண்டு இருந்தது.
ஏன்னா எங்களுக்கில்லாத சாதி உங்களுக்கு மட்டும் எதுக்குன்னு நாட்டிலேயே சாதி இல்லயாம்.
ஆண்களை கிண்டல் செய்தாலோ,காதலிக்கவில்லையெனில் ஆசிட் ஊத்தினாலோ, பலவந்தப்படுத்திக் கொடுமை படுத்தினாலோ கடுமையான சட்டங்கள் பாய்ந்தன.
தெருக்களில் இரவில் நடக்க ஆண்கள் அஞ்சி 6 மணிக்கு மேல் வீட்டுக்குள் அடைந்தனர்.
அப்பா அம்மாவிடம் சொல்லாமல் எந்த ஆணும் அடி எடுத்து வைக்கக்கூடாது.
பெண்களால் பாதிக்கப்பட்டுவிடுவோமோ என்ற அச்சத்தை ஆண்களுக்கு திரைப்படங்களும் தொலைக்காட்சிகளும் ஊட்டிக்கொண்டே இருந்தன.

தாத்தாக்களின் வலிமையான ஜீன்கள் அவர்களின் போதைப்பழக்கத்தால் அழிந்து பேரன்கள் நோயாளிகளாகப் பிறந்தனர்.

தெருக்களில்,டீக்கடைகளில் எங்கும் பெண்கள் அதிகாலையில் கிளம்பி அரசியல் பேச, அதிகாலையில் கோலமிட்டு ,சமைத்துக் கொண்டிருந்த அப்பாக்கள் புலம்பிக் கொண்டே குழந்தைகளைப் பள்ளிக்கு கிளப்ப, எந்த வித மன உளைச்சலுமின்றி பேப்பர் படித்துக் கொண்டிருந்த பெண்கள் குளித்து விட்டு வந்து சாப்பாட்டில் உப்பில்லை காரமில்லை என்று தட்டைத் தூக்கி எறிந்து விட்டு ஹோட்டலுக்குச் சென்றனர்.

இது எந்த நாடு என்ற குழப்பத்தில் எதுவும் புரியாமல் நான் திகைக்க, கனவைக் கலைத்து கதிரவன் வர, இன்னும் விடியவே இல்லை .
மு.கீதா
புதுக்கோட்டை

Saturday, 3 June 2023

அந்தமான்

அந்தமான் பயணம் 26.5.23-30.5.23 வரை ஐந்து நாட்கள்.
தமிழ்நாட்டில் இருந்து வெளியே அதிகம் செல்லாத எனக்கு அந்தமான் பயணம் மிகவும் புதிய ஆர்வத்தை உண்டாக்கியது. முதலில் இனிய நந்தவனம் குழுவினர் செல்வதை அறிந்து செல்லலாம் என்று நினைத்தபோது முடியாத நிலையில். அதனால் ஆசிரியர் குழுவில் தோழி அல்லிராணி, அவர்கள் குழுவினர் 17 மே மாதம் அந்தமான் பயணம்செல்கின்றனர்,  விமானக்கட்டணம், தங்கும் விடுதி கட்டணம், அழைத்துச் செல்லும் பேரூந்து கட்டணம்,நுழைவுக்கட்டணங்கள்,5 நாட்கள் உணவு சேர்த்துரூ30,000, ,நாம் செல்வோமா என்று கேட்டபோது சரி என்றேன்.
இப்படியாக அந்தமான் பயணத்திற்கு நானும், கீதாஞ்சலியும் ஆயத்தமானோம். பத்தாம் தேதி வரை எதுவும் தகவல் இல்லாத நிலையில், என்னவென்று கேட்ட பொழுது பயணத்தில் சிறிது தடை, தள்ளிப் போகிறது என்றார்கள், பிறகு இறுதியாக 26 ஆம் தேதி பயணம் துவங்கும் என்றார்கள், பள்ளியின் சூழல் தடை தான் இருந்தாலும் பணம் கட்டிய நிலையில் வேறுவழியின்றி செல்லத் துவங்கினோம்.சில தலைமையாசிரியர்கள் வரவே இல்லை.அனைத்திந்திய எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் முனைவர் பெரியண்ணன் அவர்கள் குழுவுடன் இணைந்து சென்றோம்.கடலூர் கிளை நிர்வாகிகள் ஏழுமலை மற்றும் புதுச்சேரி கிளை நிர்வாகிகள் இச்சுற்றுலாவைக் கடலூர் இதயம் டிராவல்ஸ் நிறுவனர் பிரகாஷ் அவர்களுடன் இணைந்து நடத்தினர்.
 சென்னையில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் 26 ஆம் தேதி அதிகாலை 5 மணி அளவில் கிளம்பினோம். விமானம் அந்தமானுக்கு 7 10 மணியளவில் சென்றது. அனைத்திந்திய எழுத்தாளர் சங்க உறுப்பினர் 54 பேர் ஆசிரியர் 16 பேர் என 70 பேர் கொண்ட குழு கிளம்பியது.
முதல் 16 பேர்  கொண்ட குழு காலை 9 மணி அளவில் அந்தமானை அடைந்து, அங்கு உள்ள இதயா என்ற விடுதியில் தங்கினோம். எதிரே கடல் தன் மெல்லிய அலைக் கரங்களால் வரவேற்றது. கடலை பார்த்த அறை வேண்டுமென்று கேட்டு அறைக்கு வந்தோம். சிறப்பான தங்கும் வசதி 50%நிறைவைத் தந்தது எனலாம்.உடைமைகளை வைத்துவிட்டு. சற்று ஓய்வு எடுத்து விட்டு இறங்கி, கடலை பார்க்கும் ஆவலில் நடந்தோம் .
எதிரே இருந்த கடையை ஒட்டி ஒரு சிறிய சந்துவழியில்  கடலுக்கு செல்லும் பாதை இருக்க, அதில் இறங்கி கடலை அடைந்தோம். அத்தனை தெளிவான நீரை ஹரித்துவரில்தான் நான் பார்த்திருக்கிறேன். கலர் கலரான கற்களை கடற்கரையில் தள்ளித் தள்ளி மகிழ்ந்து வரவேற்றது.
 தூய்மையான கடல் கண்கொள்ளாக் காட்சியாக, மனம் நிறைந்தது .
கீதாஞ்சலி ,சந்திரலேகா ,ஹேமாவதி ஆகிய மூன்று ஆங்கில ஆசிரியருடன் நானும் ஒரு மணி நேரம் அங்கு கழித்து, புகைப்படங்கள் எடுத்து, மீண்டும் அறைக்கு வந்தோம்.
 இரண்டாவது குழு வர தாமதமான நிலையில் , புகழ்பெற்ற செல்லுலார் சிறைச்சாலைக்குச் செல்ல முடிவெடுத்தோம்.குழுவை அந்தமானைச்சேர்ந்த  சகோதரர் ஆனந்த் வழிநடத்தினார். குளிர்சாதன வாகனத்தில் புகழ்பெற்ற காலாபாணித்துறை என்னும் செல்லுலார் சிறைச்சாலையின் வாயிலை அடைந்தோம்.உள்ளே நுழைய நுழைவுச்சீட்டு வாங்க வேண்டும். எங்கள் குழுவிற்கு விமானப்படையில் பணி செய்த அரிமா பத்மநாபன் அவர்கள் தலைமையேற்று அழைத்துச் சென்றார். பெரிய கோட்டை போன்ற வாயிலை அடைந்து, உள்நுழைந்து வலப்பக்கமும், இடப்பக்கமும் உள்ள புகைப்படங்களை பார்த்து , வரலாற்றில் நுழைந்தோம். அங்கே  அந்தமான் சிறையின் சிறிய மாடல் பார்த்தோம் .சைக்கிள் சக்கரத்தின் கம்பிகள் வடிவத்தில் சிறைச்சாலை அமைப்பு. நடுவே ஒரு வட்ட அறை மூன்றடுக்கு சிறைச்சாலையைக் கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் காவலர்கள் இருந்து கண்காணிக்கும் பணியில் ஈடுபடுவார்களாம். 3 அடுக்காக இருந்த அந்தச் சிறைச்சாலை எங்களை வரவேற்றது.
 அடுத்ததாக எங்களை வழிகாட்டி அழைத்துச் சென்ற இடம்தான் தூக்கு மேடை. ஒரே நேரத்தில் மூன்று பேரை தூக்கிலிடும் கயிறுகள் தொங்கிக் கொண்டிருந்தன.  அந்த கயிற்றின் நுனியில் ஒரு இரும்பு வளையம் இருந்தது. தூக்கிலிடும் போது சிலர் உயிர் விடாத நிலையில் ,அவர்களை மறுபடியும் தூக்கிலிட முடியாது என்பதற்காக அந்த இரும்பு கம்பி அவர்களின் குரல் நாணை, தொண்டையை அழுத்தி உயிரை எடுக்கும் என்று வழிகாட்டி கூறினார் ஒவ்வொரு கயிற்றுக்கு கீழும் வெண்ணிற வட்டங்கள் பலகையில் இருந்தன, கீழே 20 ஆடி ஆழத்தில் அவர்களை எடுக்கும் அறை உள்ளது. மனம் சொல்ல முடியாத உணர்வில் தள்ளாடியது. கண்கள் கலங்க அடுத்தது ஒரு நீண்ட ஓடுகள் வேய்ந்த ஒரு அறைக்குச் சென்றோம் அங்கு செக்கு ஒன்று இருந்தது .அது கைதிகள் இழுக்கும் செக்கு. அந்த செக்கை பார்த்து, மூன்று கைதிகளின் உருவ பொம்மைகள் அங்கு இருந்தன .அதில் ஒன்று கைதியின் இரு கைகளை கம்பியால் கட்டியிருந்தது. இன்னொன்று கைகளும் கால்களும் இணைத்து கட்டப்பட்டிருந்தது, அவர்கள் நேராக நடக்க முடியும் .மற்றொரு பொம்மையை உருவத்தில் கம்பிகள் கீழ கட்டப்பட்டிருந்தது அப்படி கட்டி இருக்கும் பொழுது அவர் நடப்பதே சிரமம். மேலும் கைதியை ஒரு பலகையில் சாய்வாக கட்டி இந்தியர் ஒருவர் சாட்டையால் அடிக்கும் பொம்மைகளும் இருந்தன. ஆங்கிலேயர் அடித்தால் அனைத்து இந்தியரும் உணர்வால் ஒன்று சேர்ந்து விடுவர் என்று இந்தியரை வைத்தே அடித்துள்ளனர். இது ஒரு உளவியல் தாக்கல் .இனி என்ன செய்வது என்ற மனநிலைக்கு கைதியை தள்ளும் சூழல். இப்படி அந்த பொம்மையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த பொழுது, எதிர்பாராத விதத்தில் நம் குடும்பத்தில் ஒருவரை , தற்செயலாக அங்கு சந்தித்தால் எப்படி இருக்கும்! கடலில் மூழ்கியவனின் கரங்களைப் பிடித்து தூக்கி விடுவது போல, மன துயரச் சூழலில் இருந்த அந்த நிலையில், புதுக்கோட்டை சார்ந்த தமிழ் செம்மல் கவிஞர் தங்க மூர்த்தி அவர்களை அங்கு கண்டபோது மகிழ்விலும் வியப்பிலும் மூழ்கினோம். என்ன இங்க என்று கேட்டபடி அவர் வந்தார் .உங்களை இங்கு பார்ப்போம் என்று நினைக்கவில்லை சார் என்று அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டோம் .சற்று மனம் தைரியம் அடைந்தது என்று சொல்லலாம். நீங்கள் பாருங்கள் என்று அவர் செல்ல, நாங்கள் சிறைச்சாலையில் பக்கம் நகர்ந்தோம். மெதுவாக சிறைச்சாலையை அடைந்தபோது கதவுகள் எல்லாம் ஒரு அடியில் ஐந்து கம்பிகளை கொண்டு கனமான கதவால் மூடப்பட்டு இருந்தது. அதன் பூட்டு சுவரில் நுழைந்து வெளியே வந்த தாழ்ப்பாழில் பூட்டும்படியான அமைப்புடன் கதவுகள் திறந்து இருக்க, உள்ளே நுழைந்து அந்த அறையை சுற்றி பார்த்த பொழுது, எத்தனை ஆயிரக்கணக்கான இந்தியர்களை அந்த அறை சந்தித்திருக்கும், அவர்களது உணர்வுகளை, வருத்தங்களை வேதனைகளை அடைந்திருக்கும் என்று மனம் மீண்டும் வலியில் மூழ்கியது. அந்த அறை பேசிய சொற்கள், அந்த அறைக்குள் முழங்கிய முனகல்கள், இந்தியரின் உணர்வுகளை உணர முடிந்தது. கண்கள் கசிய மற்ற அறைகளையும் சுற்றி பார்த்து வந்தோம். வழிகாட்டி வீர் சாவர்க்கர் கைதியாக இருந்த அறைக்கு அழைத்துச் சென்றார். இத்தனை கைதிகள் உயிரை விட்டிருக்க, ஆங்கிலேயரிடம் கடிதத்தில் மன்னிப்பு கேட்ட வீர் சாவர்க்காருக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம் என்று கேட்டேன் பதில் மௌனம் தான். வீர் சாவர்க்கர் இருந்த அறைக்கு தனியாக ஒரு காவலர் ,உள்ளே அவரது புகைப்படம் என காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. அந்தமான் விமான நிலையத்திலேயே வீர் சாவர்க்கர் விமான நிலையம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. என்ன சொல்வது ஒரு வழியாக சிறைச்சாலையை சுற்றிப் பார்த்து வெளியே வந்து அருகில் இருந்த கடற்கரையை அடைந்தோம். இரண்டாவது குழுவினர் வந்துவிட்டதை அறிந்து மீண்டும் அங்கிருந்து செல்லுலார் சிறைச்சாலையின் ஒலிஒளிக் காட்சி நிகழ்வைக் கண்டோம்.இதற்கு தனியாக கட்டணம் கட்டி பார்க்க வேண்டும்.வீரச்சுதந்திரத்தின் குருதி நிறைந்த காட்சிகளைக் கண்ட போது மனம் கொதித்தது.அதிலும் வீர் சாவர்க்கருக்கே முக்கியத்துவம்.பிறகு மிகப்பெரிய தேசியக்கொடி இருந்த பூங்காவிற்கு சென்று மீண்டும் அறையை அடைந்தோம் அந்தமானின் முதல் நாள் நிறைவடைந்தது.

Wednesday, 12 April 2023

திரைப்பட விமர்சனம்

'புர்ஃகா ' திரைப்பட விமர்சனம்.

இயக்குனர் சர்ஜூன் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்துள்ள 'புர்கா' திரைப்படம் வித்தியாசமான முறையில் எடுக்கப்பட்டுள்ளது.

இதில் இருவர் மட்டுமே நடித்துள்ளனர்.

திருமணமாகி ஏழு நாட்களில் கணவனின் ஸ்பரிசம் கூட படாத நிலையில் விபத்தில் அவனை இழந்து 'இக்தா' என்னும் காத்திருக்கும் காலத்தை  அனுபவிக்கும் பெண்ணாக 'நஜீமா'வாக மிர்னா வாழ்ந்துள்ளார்.அவரது கண்கள் பேசும் மொழி அற்புதம்.

கலவரத்தில் அடிபட்டு இவரது வீட்டில் அடைக்கலமாகும் 'சூர்யா'வாக கலையரசன்.மிக இயல்பாக நடித்துள்ளார்.பெண்களுக்கான குரலை அவர் எழுப்பும் விதம் சிறப்பு.

இருவரும் ஒரு நாள் முழுக்க தனியாக இருக்கும் சூழல்.
இருவருக்கும் நடக்கும் உரையாடல் மூலம் பெண், தனக்குள்ளேயே தன் நிலை குறித்தான கேள்வியைக் கேட்பதன் மூலம், இந்தச் சமூகத்தின் மீது எழுப்புகின்ற விமர்சனங்கள் அற்புதமான காட்சிகளாக எடுக்கப்பட்டுள்ளது.

மிர்னாவுடன் சூரியனின் ஒளிக்கதிரும் நடித்துள்ளது என்று கூறும் அளவிற்கு ஒளியின் இசைவு சிறப்பு.

பெண்ணின் வலியை,தன்மையைக் காட்சிகளால் உணர்த்தும் இயக்கம் ஆசம்.
.
தனது வாழ்வை அவளே கூறுவதாக துவங்கும் படம்,திருமணத்தின் போது நிறைய மனிதர்களைச்சந்தித்த மகிழ்ச்சி, தற்போது இந்தக் கொடுமையான காத்திருப்புக் காலத்தில் ஒரு 
மனிதரையாவது சந்திக்க மாட்டோமா என்ற தவிப்பு, மனித வலியின் தனிமை வேதனையின்  உச்சம்.
இவளை புரிந்து கொண்டு நடக்கும் கணவனை, நேசிக்கத் துவங்கும் காலத்தில் அவனை இழந்துவிட்ட கொடுமை.

தனிமையின் துயரில் சூர்யாவின் வரவு இதமான ஒன்றாக அதே நேரத்தில் தான் செய்வது சரி என்ற உறுதியோடு,அடிபட்ட மனிதனை காப்பாற்றுவது தனது கடமை என்ற அறம்.

தெரியாத ஆணை கூட எப்படி தங்க சொல்றீங்க என்ற கேள்விக்கு போட்ட தையலை பிரிக்க எவ்வளவு நேரம் ஆகும் என்ற தன்னம்பிக்கை .
இப்படம் எழுப்பும் கேள்விகள்
*ஏன் இக்காலத்தில் ஆண்களும் பார்க்கக்கூடாது.?. 
*இந்த உலகம் ஒரு பொண்ண கட்டாயமாக பூட்டி வச்சி அழகு பார்ப்பது சரியா?
*பெண்கள் உங்களுக்கு என்ன தேவைனு வெளில சொல்லமாட்டீங்களா?
* இந்த மதம் சாதி எல்லாம் ஏன் எல்லோரையும் கஷ்டப்படுத்தனும்?
என் அடக்குமுறைகளை எதிர்த்து கேள்விக்கணைகளைத் தொடுக்கிறது.
இருவருக்கும் இடையே மெல்ல அரும்பும் நேசம் நம்மணத்தில் நறுமணத்தை வீசி மயிலிறகால் தடவுகிறது.
இருவரை மட்டுமே வைத்து திரைப்படத்தை வெற்றிகரமாக இயக்கிய இயக்குனருக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
இது போன்ற பல படங்கள் உருவாகி மனித வாழ்வியலை  அதன் சிக்கல்களை எடுத்துக்கூற துணிய வேண்டும்...

மு.கீதா 
புதுக்கோட்டை

Thursday, 6 April 2023

ஆலாவுடன்

(5.4.23)
நானும் ஆலாவும் (கார்)

கோவையில் வசிக்கும் தோழியின் குடும்ப விழாவில் கலந்து கொண்டு திருச்சி வரை தொடர்வண்டிப்பயணத்தில் வந்தேன்.
முதல் நாள் மதியம் புதுகையில் இருந்து ஆலாவில் திருச்சிவரை சென்று,ஆலாவை  இரயில் நிலையத்தில் விட்டு விட்டு தொடர் வண்டியில் சென்ற போது சற்று கவலையாக இருந்தது.
ஆலா, சாலையில் நிறுத்திச் செல்கிறேன் கவனமாக இரு என அதனிடம் கூறிவிட்டு கிளம்பினேன். (கார்கிட்ட பேசினியான்னு கிண்டல் பண்ணக்கூடாது... ரஜினிக்கு லெக்ஷ்மி போல எனக்கு ஆலாவாக்கும்)

நாம் பாட்டுக்கு நிறுத்திட்டு வந்துவிட்டோமே, இருக்குமோ இருக்காதோன்னு ஒரு உதறல் உள்ளுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது.

நேற்று இரவு பத்து மணிக்கு திரும்பி ஆலாவைப் பார்த்தபின் தான் சற்று நிம்மதியானது.

இரவில் கார் பயணம் மிகவும் பிடித்த ஒன்று என்றாலும் முதன் முதலில் என்கையில் வயிற்றில் புளி கரைத்தது.
உனக்கு தேவையா என்று கேட்ட மனதை ச்சுசூ சும்மா இரு என்று அதட்டி விட்டு காரை எடுத்தேன்.

அவசரமாக போக வேண்டும் என்று இல்லை நிதானமாக உன்னால் ஓட்ட முடியும் என்று எனக்கு நானே கூறி விட்டு வண்டியை ஸ்டார்ட் செய்தேன்.
பைபாஸ் சாலையைக் தொடும் வரை சற்று அச்சமாக இருந்தது.

இளையராஜா துணையிருக்க கவலை ஏன், என்று மெதுவாக சென்ற ஒரு லாரியின் பின் நானும் மெதுமெதுவாக..

ஆலா விட்டா பறக்கிறேன் என்று துடிக்க..
டேய் நானே கவுண்டமணி வண்டி ஓட்டனமாதிரி ஓட்டுறேன் நீ வேற 40 ஐ தாண்டக்கூடாதென அதட்டினேன்.

லாரி திடீரென்று வேறு சாலையில் நுழைய...எதிரில் கருப்புக் கம்பளம் விரித்து நல்இரவு என்னை வரவேற்றது.

மின்மினிபூச்சிகள் போல வாகனங்கள் எதிரே வரிசைக் கட்டி வர...
ஆலா எதிரே வர்ற வாகனமெல்லாம் ஒன்றாக வருதா அல்லது ஒன்றன் பின் ஒன்றாக வருதான்னு பார்த்துப் பார்த்து வண்டி ஓட்டிய கீதாவை ரசித்தேன்.
அத்தனை வாகனங்களும் கண்சிமிட்டுவது போல் ஒளியின் வரிசையாகச் சென்றது இரவின் சிறப்பு.
இரவுப் பயணம் பிடிக்குமா? ஓட்டும் ஓட்டிப்பாரும் என்று கிண்டலடித்தாள் எனக்குள் ஒருத்தி.

நடுவில் தடுப்பு இருந்ததால் கைபிடித்து நடப்பது போல அதை ஒட்டியே வந்தேன்...
பின் வந்த வாகனங்களை போங்க போங்க என்று வழிவிட்டு, பொறுமையாக வந்ததை நினைத்தால் இப்போது சிரிப்பாக இருக்கிறது.ஆனால் நேற்று நீ பொறுமையாவே போ , குடி முழுகிடாதுன்னு அதட்டிக்கொண்டே ஓட்டினேன்.
அட கீரனூர் மேம்பாலம் கொஞ்ச தூரத்தில் நான்கு விளக்குகள் ஒரே வரிசையில்.
ஒரு பேரூந்து இன்னொரு பேருந்தை ஓவர்டேக் செய்து வர ஆலா கோழிக்குஞ்சு போல் இடது பக்கத்தில் பம்மியது.

நார்த்தாமலை வந்த பிறகு அப்பாடா புதுக்கோட்டை வரப்போகுதேன்னு நிம்மதியாக ஆலா பெருமூச்சு விட்டது.
அப்படி ஓட்டனுமான்னு கேட்கக் கூடாது.
இரவில் கார் ஓட்டிச் செல்ல வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை... அதற்கான முன்முயற்சி தான் இது.

ஒரு வழியாக ஆலா வெற்றிகரமாக இரவுப் பயணத்தை முடித்து அச்சம் பாதி, மகிழ்ச்சி பாதி என புதுக்கோட்டைக்கு வந்துவிட்டது. இரவு எனை வாழ்த்தி வீட்டுக்குள் அனுப்பியது.
இதெல்லாம் ஒரு விஷயமான்னு சிலருக்கு இருக்கும்.ஆனால் எனது வயதையொத்த பெண்களுக்கு தான் தெரியும் இதன் அருமை.

வயதுக்கு வந்தபிறகு மிதிவண்டி தம்பிக்கு போய்விட்டது.பணிக்காக இருசக்கர வாகனம் துணைக்கு வந்தது.
கார் ஓட்ட முடியுமா என்று சந்தேகம் வந்த போது வேலுநாச்சியார் ஐம்பது வயதுக்கு மேல் தான் யானைமீதேறி போர் செய்து வெற்றி பெற்றார் என்ற வரலாறு என்னாலும் முடியும் என்ற தன்னம்பிக்கையைத் தந்தது.

இந்தப் பயணம் எனது வாழ்வில் மறக்க முடியாத பயணம்.

நன்றி ஆலா.

Wednesday, 15 March 2023

ஊடறு

 

ஊடறு பெண் நிலை சந்திப்பும்/பெண்ணிய உரையாடலும்


உலக அளவில் பெண்கள் ஒன்றிணைந்து பெண்ணிய உரையாடல் நிகழ்த்தும் சந்திப்பு 11.3.23,12.3.23 ஆகிய இரு தினங்கள் தமிழ் நாட்டில் திருப்பத்தூர் மவட்டத்தில் உள்ள  ஏலகிரியில்  மிகச் சிறப்பாக நடைபெற்றது. முதல் நாள் பெண்கள் திரு நங்கைகளும், மறு நாள் அனைவரும் கலந்து கொள்ளும் நிகழ்வாக திட்டமிடப்பட்டது.

ஒரு மாதமாக இந்த நிகழ்வை கவிஞர் புதியமாதவி,ஊடறு அமைப்பின் நிறுவனர் றஞ்சி, வழக்கறிஞர் சினேகா, கல்பனா, யோகி ஆகியோர் திட்டமிட்டு அனைவரையும் புலனக்குழுவின் மூலம் வழி நடத்தினர்.

முதல் நாளே சுவிட்ச்ர்லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், மியான்மர், சிங்கப்பூர் , மலேசியா,இலங்கை, டெல்லி , மும்பை மற்றும் தமிழ் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பெண்கள் ஏலகிரியில் உள்ள  ஒய் எம் சி   கேம்ப் செண்டருக்கு வந்துவிட்டனர்.

கரூரில் இருந்து சரோஜா தோழியுடன் புதுக்கோட்டையில் இருந்து நான் (மு.கீதா)  கவிஞர் நீலா, மதுரைவழக்கறிஞர் ரஜனி சென்றோம்.

அமர்வு -1

 காலை 9.30 க்கு துவங்கியது.

 ஊடறு அறிமுகம்

ஊடறு றஞ்சி அவர்கள் ஊடறு தோன்றிய விதம் அதன் செயல்பாடுகளைப்பற்றிக்கூறி அறிமுகம் செய்தார். 4500 கட்டுரைகள் ஊடறு இணையத்தளத்தில் பெண்களால் எழுதப்பட்டுள்ளது. கவிதை நூல்கள் வெளியிடப்பட்டுள்ளது என ஊடறு பற்றி விரிவாக சிறப்பாக அறிமுகம் செய்தார்.

கவிஞர் சல்மா அவர்கள் ஊடறுவில் உள்ள  பெண்களின் களமும் வாழ்வும் என்ற தலைப்பில் பெண்களின் செயல்பாடுகளைப்பற்றி விரிவாக கூறினார். பெண்களுக்கான தளத்தை உருவாக்கியதில் ஊடறு மிகப்பெரிய பணி ஆற்றி வருகிறது. பெண்களின் எழுத்துகளைப்பதிவு செய்து அவர்களின் எழுத்துகளை நூலாக்கம் செய்து வெளியிட்டு வருவது சிறப்பு என்று வாழ்த்தினார். உரையாடல் இல்லாத சமூகம் தீர்வுகளை நோக்கி நகராது.தீர்வுகளை நோக்கி செயல்பட ஊடறுவிற்கு வாழ்த்துகள் என்றார்.

அமர்வு -2

முகமூடிகள் அரங்கம்

எங்கே நீதி? என்ற .விஜயலெட்சுமி அவர்களின் மொழிபெயர்ப்பு கதையை ஆப்கானிஸ்தானில் உள்ள இஸ்லாமியப் பெண்களின் நிலையை, கடவுளே இப்படி நீ இருந்தால் என்ன செய்வாய் என்ற கேள்வியை முன் வைத்த்து. தங்களது ஆகச்சிறந்த நடிப்பால் மனதில் பதிய வைத்தனர் ஆண்டனி ஜானகி மற்றும் ஸ்ரீதேவி இருவரும். அவர்களின் நடிப்பும் பாடலும் அரங்கை உறைய வைத்தது.

பௌத்தமும் பெண்விடுதலையும் என்ற தலைப்பில் பேராசிரியர் அரங்க மல்லிகா அவர்களின் உரை மிக அருமையாக இருந்தது.

பெண் எழுத்தும் பின் நவீனத்துவம்-ச.விஜயலெட்சுமி

தொழிற்புரட்சி ,அறிவுடமை எழுச்சிக்கு பின் உலக அளவில் மாற்றம் நிகழ்கிறது. நவீனத்துவத்தின் கருத்தாக்கம் மையத்தை நோக்கி ஈர்த்தல் என்பதே. இது எல்லா துறைகளுக்கும் பொருந்தும். மையத்தை நிறுவுதல் நவீனத்தின் நோக்கமாகிறது.

பின் நவீனத்துவம் என்பது மையத்தை தகர்த்தலாகிறது இது எல்லா துறைகளிலும் ஏற்படுகிறது. இதில் முக்கிய கூறுகளாக பெண்ணியம்,தலித்தியம் முக்கியமாகிறது. 1990 களில் பெண் எழுத்து எப்படி இருந்தது என்று துவங்கி தற்காலச்சூழல் வரை விரிவாக உரையாற்றினார்.

இயக்குனர்  சந்திரா--காமிராக்கண்கள் பெண்ணுலகம்(இந்திய சினிமா) என்ற தலைப்பில் உரையாற்றினார். துவக்கத்திலிருந்து அண்மைக்காலம் வரையில் திரைத்துறையில் பெண்களின் பங்களிப்பைச்சிறப்பாக கூறினார்.

அமர்வு 3

புவனேஸ்வரி அவர்கள் ஒருங்கிணைத்த புலம்பெயர் வாழ்வும் பெண்களும்   நிகழ்வு

கோலார் தங்க வயலில்  இருந்து வந்த புவனேஸ்வரி கோலாரில் உள்ள தமிழர்களின் நிலைப்பற்றிக் கூறி, மகளிரைப் பற்றியக் கவிதையைச் சிறப்புடன் வாசித்தார் .

மலேசியாவில் இருந்து வந்த ஊடறு யோகி

மலேசிய வாழ்வும் உழைக்கும் பெண்களும் என்ற தலைப்பில் மலேசியாவில் உள்ள பெண்களைப் பற்றி  உரையாற்றினார்.

இலங்கைப் பெண்  சப்னா இக்பால்  தற்போது உயர்கல்வி டெல்லியில் படிக்கின்றார்.

இளைய தலைமுறைச் செயல்பாடுகளும்  ஊடறுவின் பங்களிப்பும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

தர்சிகா ரமணாகரன்

பெண்களை ஆவணப்படுத்தலில் ஊடறுவின் பங்களிப்பை கூறினார். ஆவணப்படுத்தல் என்பது பெண்களின் வாழ்வில் எவ்வளவு முக்கியமானது என்பதை அவரது உரை அறிவுறுத்தியது.

கவிஞர் புதிய மாதவி பொதுவாக கூறுவதை விட .அங்கிருக்கும் அரசு பெண்களின் நிலையை எப்படி அணுகுகிறது பணி செய்யும் பெண்களுக்கான உரிமைகள், சட்டங்கள் பற்றி கூறலாம் என்று அறிவுறுத்தினர்.ஆவணப்படுத்தலில் ஸ்டோரி அஃப் சிவிலிசேஷன்  ஹிஸ்டரி அஃப் சிவிலிசேஷன்“, இந்த நூல்கள் தான் முக்கியமாக உள்ளது ஆனால் இந்த நூல்களில் பெண்களை ஆவணப்படுத்தவில்லை. தமிழ்த்தாத்தா .வே.சா தனது சுய சரிதையில் தனது மனைவியைப்பற்றி ஒரு வரி கூட இல்லை. நான் ஒருமுறை ஒரு பெண் சொளகு புடைத்துக்கொண்டிருப்பதை எழுதிய போது அம்பை அதை ஆவணப்படுத்த வேண்டும் என்றார். ஸ்பேரோ ஆவணப்படுத்தலில் முக்கியப்பங்கு வருகிறது.சம காலத்தில் நடக்கும் செய்திகளை கட்டாயம் ஆவணப்படுத்த வேண்டும் என்றார்.

அமர்வு 4

சமூகம் பெண்ணுடல் என்ற அமர்வு

முனைவர் மனித உரிமை செயற்பாட்டாளர் கல்பனா அவர்களின் ஒருங்கிணைப்பில் துவங்கியது. பெண் உடலை இந்த சமூகம் மதம் என்ற கட்டுப்பாட்டில் வைத்துள்ளது என்பதை விரிவாக்க் கூறினார்.

கவிஞர் நீலாவின் - விராலிமலை கள ஆய்வுகள் பற்றிய உரை தேவதாசிகள் குறித்த புரிதலை ஏற்படுத்தியது.

கல்பனா தனது உரையில் பிரேமான்ந்தா வாழ்ந்த பகுதியும் அதுதான்.ஆன்மீகம் பெண்களை எவ்வாறு இழிவாக நட்த்துகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

அடுத்ததாக எழுத்தாளர் லதா அவர்கள்  இவ்வுலகில் ஆண் பெண் மட்டுமே இல்லை 149 நபர்கள் இருப்பதாக கூறுகிறார்கள்.

செக்ஸ் என்றால் என்ன? என்று கேட்டார். காமம் பற்றி பேசும் போது எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும்.மனிதர்களை மனிதர்களாக சம்மாக நடத்த தெரியாதவர்களால் உண்மையான அன்பு செலுத்த முடியாது. பருவம் அடைந்தவுடன் இந்த உணர்வுகள் வந்து விடுகிறது.ஆனால் கல்யாணம் வந்தால் தான் காமம்  வர வேண்டும் என்ற சூழல் தவறு என்றும் பாலியல் கல்வி சமூகத்திற்கு மிக முக்கியம் என்றும் உரையாற்றினார்.

  ஊடகவியளாளர் மு.வி.நந்தினி அவர்கள்-  சூழலியல் பாதிப்பும் பெண்களும் குறித்து பேசினார்.

அமர்வு-5

கல்வியும் கற்பித்தலும் என்ற தலைப்பில் எழுத்தாளர் ச. விஜயலெட்சுமி அவர்கள் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.ஆசிரியர் மு.கீதா கல்வித்திட்டங்களும் குழந்தைகளும் என்ற தலைப்பிலும் ,  ஷெரின் ஆஷா தேர்வுகளும் தற்கொலைகளும் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

அமர்வு 6

தொழிற்துறையில் பெண்கள்

விவசாயப்பெண்மணி சரோஜா அவர்கள் விவசாயத்தில் பெண்களின் நிலை தற்கால விவசாயத்திலிருந்து  சமூகம் பாரம்பரிய விவசாயம் செய்வதற்கு திரும்ப வேண்டிய கட்டாயம் குறித்தும் பேசினார்.

தோழர் மதி தொழிற்சங்க வாதியாக பெண்களின் நிலை குறித்தும் தோழர் தீபலெக்‌ஷ்மி ஐடி பூங்காவில் பெண்கள் குறித்தும்,தோழர் பரிமளா தொழிற்சங்கமும் ஐடி துறை குறித்தும் விரிவாக உரையாற்றினர்.

அமர்வு 7

ஓவியக்கவிஞர் சக்தி அவர்கள் ஓவியத்துறையில் பெண்கள் குறித்து ஆழமான உரையாற்றினார்.

ஊடக வெளி என்ற தலைப்பில் பாரதி ஊடக வெளியில் பெண்களின் நிலை குறித்து பேசியது சிறப்பு .

இரவு  நடந்த கேம்ப் ஃபயர் நிகழ்வு அனைவரின் நட்பையும் மேலும் வலுவாக்கியது.

அமர்வு 8

12.3.23 காலை நிகழ்வு அருகிலிருந்த கரடி மலையில் ஏறுவதில் துவங்கியது.

சட்டமும் பெண்களும் என்ற தலைப்பில் வழக்கறிஞர் மணிமொழி அவர்கள் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.வழக்கறிஞர் சினேகா ,ஹேமாவதி ஆகியோர் சட்டம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.

அமர்வு 9

பஞ்சாயத்து ராஜ்யம்

கல்பனா அவர்கள்   ஊராட்சி மன்றத்தலைமைப்பொறுப்பேற்று சிறப்பாக பணிபுரியும் ரம்யா,வேத நாயகி, ராஜஸ்ரீ ஆகியோர் அரசியலில் தங்கள் அனுபவங்களை கூறும் நிகழ்வை சிறப்புடன் ஒருங்கிணைத்தார்.

அமர்வு 10

பெண்களும் அதிகாரமையமும்

புதிய மாதவி அவர்கள் அதிகாரப்பகிர்வும் பெண்களும் என்ற தலைப்பிலும் ,சிவகாமி ஐஏஎஸ் அவர்கள் நிலம் பெண் அதிகார மையம் என்ற தலைப்பிலும் ஆழமான உரையாற்றினார்கள் .

மியான்மரிலிருந்து கல்லூரி மாணவிகள் ரேவதி, கனகா இருவரும் கலந்து கொண்டு தங்கள் நாட்டுச்சூழல் குறித்து பேசினர்.

 

பெண்கள் சமூகம் சார்ந்து கலந்துரையாடும் அமைப்பாக ஊடறு திகழ்கின்றது.எதிர்காலத்தை கட்டமைக்கும் பெண்கள் ஊடறுவில் உருவாக வாய்ப்பு உள்ளதை உணர முடிந்தது.

இக்கூட்டம் அலங்காரம் சமையல் ,ஆடைகள் குறித்த தெளிவான புரிதலை உண்டாக்கி எதை நோக்கி பெண்கள் பயணிக்க வேண்டும் என்ற அறிவைத் தந்தது.

மு.கீதா

புதுக்கோட்டை.