World Tamil Blog Aggregator Thendral: வீதி கலை இலக்கியக்களம்-33

Sunday, 11 December 2016

வீதி கலை இலக்கியக்களம்-33

வீதி கலை இலக்கியக்களம்-33

இம்மாத வீதிக்கூட்டம் 27.11.16 அன்று காலை 10 மணியளவில் துவங்கியது.இம்மாதம் ஆட்டிசம் குழந்தைகளுக்கான சிறப்பு வீதியாக நிகழ்ந்தது.
வரவேற்புரை:”விதைக்கலாம்”பாலாஜி அனைவரையும் அன்புடன் வரவேற்று மகிழ்ந்தார்.

தலைமை:கவிஞர் அமிர்தா அவர்கள் தலைமையேற்று வீதிக்கூட்டத்தை சிறப்பாக நடத்தினார்.
பாடல்:கவிஞர் முருகதாஸ்[மாட்டைப்பற்றி பாடிய விதம் மிகச்சிறப்பு],பாவலர் பொன் .கருப்பையா,கவிஞர் மாலதி ஆகியோர் ஆட்டிசம் குழந்தைகளுக்கான பாடல்களைப்பாடி அனைவரையும் கவர்ந்தனர்...

கவிதை:கவிஞர் சிவக்குமார்,கவிஞர் செல்வா,கவிஞர் பவல்ராஜ்,கவிஞர் செம்பை மணவாளன் ஆகியோர் கவிதை வாசித்து வீதிக்கு மெருகூட்டினர்.

நூல் விமர்சனம்:எழுத்தாளர் பாலபாரதியின்:ஆட்டிசம் பற்றி சில புரிதல்கள் “என்ற நூலை கவிஞர் சோலச்சி அறிமுகம் செய்து அவரது ஆசிரியப்பணியில் சந்தித்த ஆட்டிசம் குழந்தைகளின் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.
சிறுகதை:கவிஞர் இந்துமதி ஆட்டிசம் பெற்றொரின் சிக்கல்களை கதையாக பின்னியிருந்த விதம் மிக அருமை.

கட்டுரை:கவிஞர் ரேவதி 
ஆட்டிசம் குறித்த விரிவான,தெளிவான,புள்ளிவிவரங்களுடன் மிகவும் ஆழ்ந்து கட்டுரையை தந்த விதம் அவரது இலக்கியப்பணியில் உள்ள முன்னேற்றத்தைக்காட்டியது..அனைவராலும் பாராட்டப்பட்டது.
காணொளிக்காட்சி:ஆட்டிசம் குழந்தைகளுக்கான ஒரு வீடியோ கிளிப்பிங் காணொளிக்காட்சியாக பாலாஜி படைத்தார்.
சிறப்பு விருந்தினர்
பேராசிரியர் டாக்டர் .பிரபாகர் இம்மானுவேல்..M.Sc,M.Phil,M.S.Ed[USA],M.Phil,Ph.d.
திருச்சி ஹோலிக்கிராஸ் சர்வீஸ் சொசைட்டியின் இயக்குனர்.
  35க்கும் மேற்பட்ட நூல்களை சிறப்புக்குழந்தைகள்/மாற்றுத்திறனாளிகளுக்காக  எழுதியுள்ளார்.
மூவாயிரம் குழந்தைகட்கு மேலாக தனது துணைவியாருடன் சேர்ந்து பயிற்றுவித்துள்ளார்.அவர்களும் கூட்டத்தில் காந்து கொண்டு பெருமை சேர்த்துள்ளார்.
கீரனூர் மற்றும் பிற ஊர்களில் இக்குழந்தைகளுக்காக பயிற்சி அளித்து வருகின்றார்.
புதுகையிலும் இடம் தந்தால் இங்கிருந்து திருச்சிக்கு வரும் குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இவரது ”தாய்மை மற்றும் குழந்தை வளர்ச்சி “என்ற நூல் ஒவ்வொரு பெண்ணும் அறிந்து கொள்ள வேண்டிய உண்மைகளைத்தாங்கி உள்ளது.குழந்தை பெற்றவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய நூலாக உள்ளது.
சிறப்புரை
சமுதாயத்திற்கு பயன்படும் செயல்களைச்செய்யும் போது குழந்தைகளைப்பற்றி யாரும் நினைப்பது இல்லை.தீர்வற்ற சிந்தனைகளால் பயன் இல்லை.
ஆட்டிசம் ஒரு நோய் அல்ல...உடற்குறைபாடு என்பதை உணரவேண்டும்.அக்குறை உள்ளவர்கள் தனித்து இருப்பதையே விரும்புவார்கள்.தனியே இருப்பதை ஆட்டோ என்பதால் ஆட்டிசம் என்ற வார்த்தை உருவானது.

வளர்ச்சி பருவக்குறைபாடே ஆட்டிசம் ஆகும்..அறிவுத்திறன் சார்ந்தவை இல்லை.
இதன் தன்மைகள்
*சமூகப்பங்கேற்பு கொள்வது இவர்களுக்கு சிரமமான ஒன்று
*மொழி/தொடர்பு கொள்ளுதல்/பேச்சு ஆகியவை கடினமான ஒன்றாகும்.
*மாறுபட்ட குணாதிசயங்களை கொண்டவராக இருப்பர்.
சிறுவயதிலேயே தற்காலத்தில் செல்லை வைத்து பார்த்துக்கொண்டிருக்கும் குழந்தைகள் நாளடைவில் ஆட்டிசம் குழந்தைகளுக்கான தன்மைகளைப்பெறும் என்ற அதிர்ச்சி தரக்கூடிய செய்தியைக்கூறினார். 
மருத்துவம்
இக்குறைபாட்டிற்கு மருந்து இல்லை...ஆனால் பெற்றோர்கள் அறியாமையினால் மருத்துவரிடம் காட்டுவதால் அவர்களும் ஊட்டச்சத்து மாத்திரைகளைத்தந்து  உண்மையை கூற மறுக்கின்றனர்.
எனது நண்பர் கூட சிறந்த மருத்துவர் ஆனால் இவ்வாறு ஏன் செய்கின்றாய் எனக்கேட்ட பொழுது..நான் சொன்னால் அவர்கள் உணர மாட்டார்கள்.மேலும் இந்த மருத்துவர் சரியில்லை என எல்லாரிடமும் சொல்ல வாய்ப்பு உண்டு எனக்கு வரும் நோயாளிகளை குறைத்துக்கொள்ள நான் விரும்பவில்லை என தெளிவாகக் கூறினார் என்று சொன்ன போது என்ன சொல்வது எனத்தெரியாமல் அமர்ந்திருந்தோம்.
இவர்களிடம் கற்றல் குறைபாடு 80%,அறிவுத்திறன் குறைபாடு 20% இருக்கும் சிலருக்கு அளவு வேறுபடலாம்.
முதல் படி 
3 மாதம் முதல் ஒண்ணரை வயதுக்குள்
வளர்ச்சியில் பின் தங்கிய குழந்தைகளாக இருப்பார்கள்..பெற்றோருக்கு இவ்வறிவு இருப்பின் எளிதில் கண்டு பிடித்து தொடர் பயிற்சியினால் இக்குறைப்பாட்டை போக்கி ,நடத்தையில் மாற்றத்தைக்கொண்டுவந்து விடலாம் என்பது மறுக்க முடியாத உண்மை.ஆனால் அம்மாவிற்கு குழந்தையை எவ்வாறு வளர்க்க வேண்டும் என்ற அறிவை, பொறுப்பை கல்வியோ,சமூகமோ கற்றுத்தருவதில்லை என்பதே வேதனையான உண்மை.
இரண்டாம் படி 
மூன்று வயதிற்குள் கண்டு பிடித்தால் இவர்களுக்கென உள்ள சிறப்பு பள்ளியில் சேர்த்து பயிற்சி அளித்து 80% குறைப்பாட்டை நீக்கி, அவர்களை சாதாரண பள்ளியில் சேர்க்க வாய்ப்பு உள்ளது. 
நரம்பு மண்டல ஒருங்கிணைப்பில் ஏற்படும் தாமதமே இவர்களுக்கு குறைபாடாகும்.

5 வயதிற்குள்  தூண்டப்படும் நியூரான்களே கற்றலுக்கு பயன்படுகின்றன.
8 வயதிற்கு மேல் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் குறைபாட்டைக்காண்கையில் அவர்கள் நிரந்தரமான ஆட்டிசக்குழந்தையாகவே மாறிவிடுகின்றனர்.அவர்களின் குறைபாட்டை களையும் காலம் முடிந்துவிடுகின்றது..

மொழிதான் கல்வியின் ஆதாரமாக உள்ளது.குழந்தை தான் கற்றதை வெளிப்படுத்தினால் மட்டுமே கற்றல் நிகழ்ந்துள்ளது என்று பொருள்...ஆனால் இக்கால குழந்தைகளில் கற்ற என்பது மிகவும் குறைவு என்பது மறுக்க முடியாத உண்மை.மனப்பாடம் செய்யவே பயிற்றுவிக்கப்படுகின்றார்களே ஒழிய அவர்கள் கற்றதைப்பயன் படுத்தி தானாக செய்யும் அறிவைப்பெறுவதில்லை என்பதே உண்மை என்று கூறிய போது வீதியே உறைந்து நின்றது..

ஒரு குழந்தை எப்படி வளரும்?எப்படி வளர்க்க வேண்டும் என்பதை யாரும் கற்றுக்கொடுக்கவில்லை...பின் எவ்வாறு இப்படிப்பட்ட குழந்தைகளை அடையாளம் கண்டு குணப்படுத்துவது..


அவர் பள்ளிகளில் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தயாராக உள்ளார்..பள்ளிகள் அவரைப்பயன்படுத்திக் கொண்டால் மிகப்பெரிய விழிப்புணர்வு உண்டாகும் என்பதில் ஐயமில்லை
அவரின் பேச்சு அனைவருக்கும் விழிப்புணர்வை தந்ததுள்ளது...இத்தனைக்கூட்டங்களை விட மிகச்சிறப்பான வீதியாக இவ்வீதி அமைந்தது.

வீதிக்கூட்டத்திற்கு திருச்சியிலிருந்து சமூக ஆர்வலர் வில்வம்,காரைக்குடியிலிருந்து முனைவர் கண்மணி மற்றும் கவிஞர் ம.கு. வைகறை,ஆசிரியர் மா.தவமணி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நன்றியுரை
கவிஞர் கீதா அனைவருக்கும் நன்றி கூற வீதி சிறப்புடம் முடிந்தது.

இம்மாதக்கூட்டத்தை சிறப்பாக நடத்திய அமைப்பாளர்கள் கீதா மற்றும் பாலாஜிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
4 comments :

 1. தகவல் பகிர்வுக்கு நன்றி. ஒவ்வொரு மாதமும் சிறப்பாகச் செயல்பட்டு வரும் வீதி நண்பர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

  ReplyDelete
 2. ஆட்டிசம் குழந்தைகளாகிய அவர்களை எப்படி கவனத்துடன் புரிந்துகொண்டு கல்வி சொல்லிக்கொடுத்து வளர்க்கணும் என்பது பற்றிய மிகவும் பயனுள்ள விழிப்புணர்வு நிகழ்ச்சியைப் பற்றி தனிப்பதிவு கொடுத்துள்ளது பலருக்கும் பயன்படக்கூடும்.

  பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 3. மிகச் சிறப்பாக விழா நடந்தது குறித்து மகிழ்ச்சி.

  ReplyDelete
 4. நேரில் வராதவர்களுக்கு வராத குறை தெரியாத அளவு அனைத்தையும் பகிர்ந்த விதம் அருமை. தொடர் முயற்சிக்குப் பாராட்டுகள்.

  ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...