World Tamil Blog Aggregator Thendral

Wednesday, 15 March 2023

ஊடறு

 

ஊடறு பெண் நிலை சந்திப்பும்/பெண்ணிய உரையாடலும்


உலக அளவில் பெண்கள் ஒன்றிணைந்து பெண்ணிய உரையாடல் நிகழ்த்தும் சந்திப்பு 11.3.23,12.3.23 ஆகிய இரு தினங்கள் தமிழ் நாட்டில் திருப்பத்தூர் மவட்டத்தில் உள்ள  ஏலகிரியில்  மிகச் சிறப்பாக நடைபெற்றது. முதல் நாள் பெண்கள் திரு நங்கைகளும், மறு நாள் அனைவரும் கலந்து கொள்ளும் நிகழ்வாக திட்டமிடப்பட்டது.

ஒரு மாதமாக இந்த நிகழ்வை கவிஞர் புதியமாதவி,ஊடறு அமைப்பின் நிறுவனர் றஞ்சி, வழக்கறிஞர் சினேகா, கல்பனா, யோகி ஆகியோர் திட்டமிட்டு அனைவரையும் புலனக்குழுவின் மூலம் வழி நடத்தினர்.

முதல் நாளே சுவிட்ச்ர்லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், மியான்மர், சிங்கப்பூர் , மலேசியா,இலங்கை, டெல்லி , மும்பை மற்றும் தமிழ் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பெண்கள் ஏலகிரியில் உள்ள  ஒய் எம் சி   கேம்ப் செண்டருக்கு வந்துவிட்டனர்.

கரூரில் இருந்து சரோஜா தோழியுடன் புதுக்கோட்டையில் இருந்து நான் (மு.கீதா)  கவிஞர் நீலா, மதுரைவழக்கறிஞர் ரஜனி சென்றோம்.

அமர்வு -1

 காலை 9.30 க்கு துவங்கியது.

 ஊடறு அறிமுகம்

ஊடறு றஞ்சி அவர்கள் ஊடறு தோன்றிய விதம் அதன் செயல்பாடுகளைப்பற்றிக்கூறி அறிமுகம் செய்தார். 4500 கட்டுரைகள் ஊடறு இணையத்தளத்தில் பெண்களால் எழுதப்பட்டுள்ளது. கவிதை நூல்கள் வெளியிடப்பட்டுள்ளது என ஊடறு பற்றி விரிவாக சிறப்பாக அறிமுகம் செய்தார்.

கவிஞர் சல்மா அவர்கள் ஊடறுவில் உள்ள  பெண்களின் களமும் வாழ்வும் என்ற தலைப்பில் பெண்களின் செயல்பாடுகளைப்பற்றி விரிவாக கூறினார். பெண்களுக்கான தளத்தை உருவாக்கியதில் ஊடறு மிகப்பெரிய பணி ஆற்றி வருகிறது. பெண்களின் எழுத்துகளைப்பதிவு செய்து அவர்களின் எழுத்துகளை நூலாக்கம் செய்து வெளியிட்டு வருவது சிறப்பு என்று வாழ்த்தினார். உரையாடல் இல்லாத சமூகம் தீர்வுகளை நோக்கி நகராது.தீர்வுகளை நோக்கி செயல்பட ஊடறுவிற்கு வாழ்த்துகள் என்றார்.

அமர்வு -2

முகமூடிகள் அரங்கம்

எங்கே நீதி? என்ற .விஜயலெட்சுமி அவர்களின் மொழிபெயர்ப்பு கதையை ஆப்கானிஸ்தானில் உள்ள இஸ்லாமியப் பெண்களின் நிலையை, கடவுளே இப்படி நீ இருந்தால் என்ன செய்வாய் என்ற கேள்வியை முன் வைத்த்து. தங்களது ஆகச்சிறந்த நடிப்பால் மனதில் பதிய வைத்தனர் ஆண்டனி ஜானகி மற்றும் ஸ்ரீதேவி இருவரும். அவர்களின் நடிப்பும் பாடலும் அரங்கை உறைய வைத்தது.

பௌத்தமும் பெண்விடுதலையும் என்ற தலைப்பில் பேராசிரியர் அரங்க மல்லிகா அவர்களின் உரை மிக அருமையாக இருந்தது.

பெண் எழுத்தும் பின் நவீனத்துவம்-ச.விஜயலெட்சுமி

தொழிற்புரட்சி ,அறிவுடமை எழுச்சிக்கு பின் உலக அளவில் மாற்றம் நிகழ்கிறது. நவீனத்துவத்தின் கருத்தாக்கம் மையத்தை நோக்கி ஈர்த்தல் என்பதே. இது எல்லா துறைகளுக்கும் பொருந்தும். மையத்தை நிறுவுதல் நவீனத்தின் நோக்கமாகிறது.

பின் நவீனத்துவம் என்பது மையத்தை தகர்த்தலாகிறது இது எல்லா துறைகளிலும் ஏற்படுகிறது. இதில் முக்கிய கூறுகளாக பெண்ணியம்,தலித்தியம் முக்கியமாகிறது. 1990 களில் பெண் எழுத்து எப்படி இருந்தது என்று துவங்கி தற்காலச்சூழல் வரை விரிவாக உரையாற்றினார்.

இயக்குனர்  சந்திரா--காமிராக்கண்கள் பெண்ணுலகம்(இந்திய சினிமா) என்ற தலைப்பில் உரையாற்றினார். துவக்கத்திலிருந்து அண்மைக்காலம் வரையில் திரைத்துறையில் பெண்களின் பங்களிப்பைச்சிறப்பாக கூறினார்.

அமர்வு 3

புவனேஸ்வரி அவர்கள் ஒருங்கிணைத்த புலம்பெயர் வாழ்வும் பெண்களும்   நிகழ்வு

கோலார் தங்க வயலில்  இருந்து வந்த புவனேஸ்வரி கோலாரில் உள்ள தமிழர்களின் நிலைப்பற்றிக் கூறி, மகளிரைப் பற்றியக் கவிதையைச் சிறப்புடன் வாசித்தார் .

மலேசியாவில் இருந்து வந்த ஊடறு யோகி

மலேசிய வாழ்வும் உழைக்கும் பெண்களும் என்ற தலைப்பில் மலேசியாவில் உள்ள பெண்களைப் பற்றி  உரையாற்றினார்.

இலங்கைப் பெண்  சப்னா இக்பால்  தற்போது உயர்கல்வி டெல்லியில் படிக்கின்றார்.

இளைய தலைமுறைச் செயல்பாடுகளும்  ஊடறுவின் பங்களிப்பும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

தர்சிகா ரமணாகரன்

பெண்களை ஆவணப்படுத்தலில் ஊடறுவின் பங்களிப்பை கூறினார். ஆவணப்படுத்தல் என்பது பெண்களின் வாழ்வில் எவ்வளவு முக்கியமானது என்பதை அவரது உரை அறிவுறுத்தியது.

கவிஞர் புதிய மாதவி பொதுவாக கூறுவதை விட .அங்கிருக்கும் அரசு பெண்களின் நிலையை எப்படி அணுகுகிறது பணி செய்யும் பெண்களுக்கான உரிமைகள், சட்டங்கள் பற்றி கூறலாம் என்று அறிவுறுத்தினர்.ஆவணப்படுத்தலில் ஸ்டோரி அஃப் சிவிலிசேஷன்  ஹிஸ்டரி அஃப் சிவிலிசேஷன்“, இந்த நூல்கள் தான் முக்கியமாக உள்ளது ஆனால் இந்த நூல்களில் பெண்களை ஆவணப்படுத்தவில்லை. தமிழ்த்தாத்தா .வே.சா தனது சுய சரிதையில் தனது மனைவியைப்பற்றி ஒரு வரி கூட இல்லை. நான் ஒருமுறை ஒரு பெண் சொளகு புடைத்துக்கொண்டிருப்பதை எழுதிய போது அம்பை அதை ஆவணப்படுத்த வேண்டும் என்றார். ஸ்பேரோ ஆவணப்படுத்தலில் முக்கியப்பங்கு வருகிறது.சம காலத்தில் நடக்கும் செய்திகளை கட்டாயம் ஆவணப்படுத்த வேண்டும் என்றார்.

அமர்வு 4

சமூகம் பெண்ணுடல் என்ற அமர்வு

முனைவர் மனித உரிமை செயற்பாட்டாளர் கல்பனா அவர்களின் ஒருங்கிணைப்பில் துவங்கியது. பெண் உடலை இந்த சமூகம் மதம் என்ற கட்டுப்பாட்டில் வைத்துள்ளது என்பதை விரிவாக்க் கூறினார்.

கவிஞர் நீலாவின் - விராலிமலை கள ஆய்வுகள் பற்றிய உரை தேவதாசிகள் குறித்த புரிதலை ஏற்படுத்தியது.

கல்பனா தனது உரையில் பிரேமான்ந்தா வாழ்ந்த பகுதியும் அதுதான்.ஆன்மீகம் பெண்களை எவ்வாறு இழிவாக நட்த்துகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

அடுத்ததாக எழுத்தாளர் லதா அவர்கள்  இவ்வுலகில் ஆண் பெண் மட்டுமே இல்லை 149 நபர்கள் இருப்பதாக கூறுகிறார்கள்.

செக்ஸ் என்றால் என்ன? என்று கேட்டார். காமம் பற்றி பேசும் போது எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும்.மனிதர்களை மனிதர்களாக சம்மாக நடத்த தெரியாதவர்களால் உண்மையான அன்பு செலுத்த முடியாது. பருவம் அடைந்தவுடன் இந்த உணர்வுகள் வந்து விடுகிறது.ஆனால் கல்யாணம் வந்தால் தான் காமம்  வர வேண்டும் என்ற சூழல் தவறு என்றும் பாலியல் கல்வி சமூகத்திற்கு மிக முக்கியம் என்றும் உரையாற்றினார்.

  ஊடகவியளாளர் மு.வி.நந்தினி அவர்கள்-  சூழலியல் பாதிப்பும் பெண்களும் குறித்து பேசினார்.

அமர்வு-5

கல்வியும் கற்பித்தலும் என்ற தலைப்பில் எழுத்தாளர் ச. விஜயலெட்சுமி அவர்கள் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.ஆசிரியர் மு.கீதா கல்வித்திட்டங்களும் குழந்தைகளும் என்ற தலைப்பிலும் ,  ஷெரின் ஆஷா தேர்வுகளும் தற்கொலைகளும் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

அமர்வு 6

தொழிற்துறையில் பெண்கள்

விவசாயப்பெண்மணி சரோஜா அவர்கள் விவசாயத்தில் பெண்களின் நிலை தற்கால விவசாயத்திலிருந்து  சமூகம் பாரம்பரிய விவசாயம் செய்வதற்கு திரும்ப வேண்டிய கட்டாயம் குறித்தும் பேசினார்.

தோழர் மதி தொழிற்சங்க வாதியாக பெண்களின் நிலை குறித்தும் தோழர் தீபலெக்‌ஷ்மி ஐடி பூங்காவில் பெண்கள் குறித்தும்,தோழர் பரிமளா தொழிற்சங்கமும் ஐடி துறை குறித்தும் விரிவாக உரையாற்றினர்.

அமர்வு 7

ஓவியக்கவிஞர் சக்தி அவர்கள் ஓவியத்துறையில் பெண்கள் குறித்து ஆழமான உரையாற்றினார்.

ஊடக வெளி என்ற தலைப்பில் பாரதி ஊடக வெளியில் பெண்களின் நிலை குறித்து பேசியது சிறப்பு .

இரவு  நடந்த கேம்ப் ஃபயர் நிகழ்வு அனைவரின் நட்பையும் மேலும் வலுவாக்கியது.

அமர்வு 8

12.3.23 காலை நிகழ்வு அருகிலிருந்த கரடி மலையில் ஏறுவதில் துவங்கியது.

சட்டமும் பெண்களும் என்ற தலைப்பில் வழக்கறிஞர் மணிமொழி அவர்கள் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.வழக்கறிஞர் சினேகா ,ஹேமாவதி ஆகியோர் சட்டம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.

அமர்வு 9

பஞ்சாயத்து ராஜ்யம்

கல்பனா அவர்கள்   ஊராட்சி மன்றத்தலைமைப்பொறுப்பேற்று சிறப்பாக பணிபுரியும் ரம்யா,வேத நாயகி, ராஜஸ்ரீ ஆகியோர் அரசியலில் தங்கள் அனுபவங்களை கூறும் நிகழ்வை சிறப்புடன் ஒருங்கிணைத்தார்.

அமர்வு 10

பெண்களும் அதிகாரமையமும்

புதிய மாதவி அவர்கள் அதிகாரப்பகிர்வும் பெண்களும் என்ற தலைப்பிலும் ,சிவகாமி ஐஏஎஸ் அவர்கள் நிலம் பெண் அதிகார மையம் என்ற தலைப்பிலும் ஆழமான உரையாற்றினார்கள் .

மியான்மரிலிருந்து கல்லூரி மாணவிகள் ரேவதி, கனகா இருவரும் கலந்து கொண்டு தங்கள் நாட்டுச்சூழல் குறித்து பேசினர்.

 

பெண்கள் சமூகம் சார்ந்து கலந்துரையாடும் அமைப்பாக ஊடறு திகழ்கின்றது.எதிர்காலத்தை கட்டமைக்கும் பெண்கள் ஊடறுவில் உருவாக வாய்ப்பு உள்ளதை உணர முடிந்தது.

இக்கூட்டம் அலங்காரம் சமையல் ,ஆடைகள் குறித்த தெளிவான புரிதலை உண்டாக்கி எதை நோக்கி பெண்கள் பயணிக்க வேண்டும் என்ற அறிவைத் தந்தது.

மு.கீதா

புதுக்கோட்டை.

 

 

 

 

 

 

 

 

 

 

 

Sunday, 5 March 2023

அயலி திரை விமர்சனம்

அயலி
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
இன்று மாலை அயலி இணையத் தொடர் குறித்த விமர்சனம் நடத்தியது..
த.ம.அ ப.அமைப்பின் தலைவர் சகோதரி சுபாஷிணி அவர்கள் நிகழ்வின் முக்கியத்துவத்தை குறித்து பேசினார்.
பல நாடுகளில் இருந்தும் பெண்கள் கலந்து கொண்டு அயலி குறித்து விமர்சனம் செய்தனர்.
எட்டு பெண்கள் அயலியை பற்றி அவரவர் கோணத்தில் பேசினர்.
புதுக்கோட்டை ஜெயலெட்சுமி மகளைப் பற்றி பேராசிரியர் வெண்முகில் அவர்கள் பாராட்டிய போது பெருமையாக இருந்தது.அவள் நாசா செல்ல துணை நின்ற கவிஞர் நா முத்துநிலவன் அவர்களும் நிகழ்வில் கலந்து கொண்டு மகிழ்ந்தார்.

ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையுடன் அயலியைத் தொடர்பு படுத்தி பேசியது அருமை.நிகழ்வை சகோதரிகள் பாப்பா மற்றும் பாமா ஒருங்கிணைத்தனர்.தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் குழுவினர் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் 
எனது உரை இறுதியாக
அயலி புதுக்கோட்டை வீரப்பண்ணை கிராமத்தில் நடந்தது என்பதும், அதற்கு வசனம் எழுதியவர்களில் புதுக்கோட்டை தோழர் சச்சின் ஒருவர் என்பதும், அதில் அப்பாவாக நடித்த திருமிகு மதன் புதுக்கோட்டைக்காரர் என்பதும் எங்களுக்கு மிகவும் பெருமை.

திரைப்பட வரலாற்றில் பெண்கள் குறித்து இதுவரை பேசப்படாத பொருளைக் கருவாகக் கொண்டு இயக்கப்பட்டுள்ள படம் இது மட்டுமே.
சமயம், கடவுள் பெயரைக் கூறி பெண்களை அடிமைப்படுத்துவதைத் தான் பண்பாடு கலாச்சாரம் எனக் கூறித் திரியும் ஆதிக்கவாதிகளின் தோலை உரித்து காட்டுகிறது.
பெண்கள் தெளிவாகச் சிந்தித்து சரியான முடிவு எடுத்து உறுதியாக நின்றால் அனைவரும் ஏற்றுக் கொள்வர் என்று கூறுகிறது.
பெரியாரின் பெயரை, அம்பேத்கரின் பெயரை எந்த இடத்திலும் இயக்குநர் கூறவில்லை ஆனால் பார்ப்பவர் அனைவரையும் கூற வைக்கிறார்.
வசனங்கள் ஒவ்வொன்றும் கூர் தீட்டப்பட்ட கத்தியாக மூளைச் சலவை செய்யப்பட்ட மனிதர்களைப் பதம் பார்க்கின்றன.
பெண்கள் தங்கள் சிக்கல்களைத் தீர்க்க ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று கற்றுக் கொடுக்கிறது.
கல்வி ஒன்றே நமது துணை என பத்தாம் வகுப்பு முடித்தால்  திருமணத்திற்கு பணம் தருவதை மாற்றி உயர்கல்வி படித்தால் பணம் என்ற திராவிட அரசின் கொள்கையை உணர்த்தி கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
மூடநம்பிக்கைகளால் சீழ் பிடிக்கப்பட்ட சமுதாயத்தை திருத்தும் கடமை பெண்களுக்கும் உண்டு என்று பெண்களுக்கான சமுதாயக் கடமையை உணர்த்துகிறது.
குடும்பத்தோடு உட்கார்ந்து பார்க்கலாம் என்ற நம்பிக்கை அளிக்கிறது.
பெரியாரை அம்பேத்கரை மார்க்ஸை படிப்பவர்கள் சமுகச் சீரழிக்கும் காரணிகளின் ஆணிவேரை அசைத்து பார்ப்பர் என்று இயக்குநரின் மேன்மையை உணர்த்துகிறது.
தந்தையின் தாயின் பாசம் எப்படி இருக்க வேண்டும் என்று கற்றுக் கொடுக்கிறது.
மொத்தத்தில் திரை உலகம் எதை நோக்கி பயணிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.
திரைக் குழுவினர் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

Saturday, 14 January 2023

துயர வகுப்பு

அரசுப்பள்ளி மாணவிகளின் துயரங்கள் நிறைந்த வகுப்பு 
நேற்று காலை எட்டாம் வகுப்பு மாணவிகளுடன் சில மணித் துளிகள் இருக்க விரும்பிச் சென்றேன்.. 

அவர்கள் மிகவும் சேட்டை செய்கிறார்கள் கட்டுப்படுத்தவே முடியவில்லை என்று குற்றச்சாட்டுகள். அதனால் என்ன தான் பிரச்சினை என்று அறிந்து கொள்ள உரையாடலைத் துவங்கினேன்.

அவர்களிடம் இக்கால மாணவிகள், மாணவர்களின் இயல்பை குறித்து மூன்று குழுவாக பிரிந்து பேச வேண்டும் என்று கூறினேன். 
ஒரு குழு மாணவிகள், பெண்கள் அக்காலத்தில் படிக்க வாய்ப்பு இல்லை இக்காலத்தில் படிக்க வாய்ப்பு உள்ளது, இருந்தாலும் சிலர் படிப்பதில்லை. அவர்கள் செல்லிற்கு அடிமையாக இருக்கிறார்கள் என்றாள்.
 இன்னொரு மாணவி ஆண்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக ஆடை அணிகிறார்கள் அலங்கரித்துக் கொள்கிறார்கள் என்று கூறினார் . 
நான் இது பொதுவாக எல்லோரும் கூறும் கருத்து நான் உங்களிடம் இன்னும் ஆழமாக எதிர்பார்க்கிறேன் .
நீங்கள் என்ன விரும்புகிறீர்கள்? எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் ?என்று கேட்டேன்.
 இக்கால பெண்கள் பேண்ட் சர்ட் போட்டுக்கிட்டு கடை தெருவுல சுத்துறாங்க .அதனாலதான் அவர்களுக்கு பாதிப்பு வருது என்றாள்.
 அப்படி என்றால் பெண்கள் விரும்பி ஆடை அணியக்கூடாது விரும்பிய இடத்திற்கு போகக்கூடாது என்று கூற வருகிறாயா?
 ஆண்கள் சுதந்திரமாக செல்லும்போது பெண்கள் ஏன் செல்லக்கூடாது? உன்னுடைய கருத்து சென்ற தலைமுறையின் கருத்து .நமது மூலையில் சலவை செய்யப்பட்ட கருத்து. இது உன் அம்மா கூறலாம். நீ பெண்களுக்கு எங்கு சென்றாலும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று கருதுவது நியாயம்.
 சமூகம் பெண்களை உடல் பொருளாக பார்க்கிறது அதனால் அவர்களுக்கு பாதிப்பு வருகிறது ஆண்கள், பெண்களை சமமாக கருத அவர்கள் குழந்தையிலிருந்து கற்றுத் தர வேண்டும்.
 ஆண் பெண் சமத்துவம் குழந்தை பருவத்தில் இருந்து வரவேண்டும். இருவரும் வேலைகளை பகிர்ந்து செய்வது இயல்பாக வேண்டும் என்று கூறினேன்.
இப்படி பேசிக்கொண்டு இருக்கும் போது ஒரு மாணவி அம்மா நான் சொல்கிறேன் என்று எங்கள் வீட்டில் அப்பா அண்ணன் நான் தம்பி தான் இருக்கிறோம் அம்மா கோபித்து கொண்டு ஊருக்கு போய் பல வருடங்கள் ஆச்சு.எங்கள் அப்பா தான் எங்களை வளர்க்கிறார்கள்.நான் இன்ஸ்டாகிராமில் இருக்கிறேன் எது செய்தாலும் அப்பா அண்ணனிடம் சொல்லி விடுவேன்.அப்பா என்னை செல்லமாக வளர்க்கிறார்.அம்மா மாதிரி இதுவும் போயிடும் என்று சிலர் திட்டும் போது வலிக்கும் அண்ணன் என்னை அம்மா போல வளர்க்கிறான்.
அவனே சில நேரங்களில் சமைப்பான்.இன்று கூட பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போதும் விடுப்பு எடுத்து பொங்கல் வேலை பார்க்கிறான் என்றாள்.
 இன்னொரு பெண் மாணவி அம்மா, நான்  பிறக்கும் முன், எனது அப்பா இறந்து விட்டார்கள். 18 வயதிலிருந்து என் அம்மா எங்களை வளர்க்கிறார்கள். என் அம்மா யாரிடம் பேசினாலும் தவறாக  பேசுபவர்கள், இப்போது என்னையும் தவறாக பேச ஆரம்பித்து விட்டனர் என்று ஒரே அழுகை. அவளை தேற்றுவதற்குள், இன்னொரு மாணவி அம்மா ,எனது அப்பா வீட்டு சண்டையில் தூக்கு மாட்டிக் கொண்டார்கள். நான் தான் காரணம் என்று எல்லோரும் என்னை அப்பாவை விழுங்கி விட்டு பிறந்த என்று கூறுவார்கள் அம்மா என்று கதறினாள்.
 இப்படி ஒவ்வொரு மாணவிக்கும் ஒரு துயரம். ஒரு மாணவி கூறுகிறாள் நான் ஒரு முறை தவறு செய்து விட்டேன் ஆனால் அதை உணர்ந்து இப்போது திருந்தி விட்டேன் ஆனால் என் வீட்டில் யாரும் என்னை நம்புவதில்லை .நான் எதை செய்தாலும் அதில் குற்றம் கண்டுபிடித்து அடிக்கிறார்கள். எனக்கு உயிரோடு இருக்கவே பிடிக்கவில்லை அம்மா என்றாள். அவளது கண்ணீரை கட்டுப்படுத்த முடியாது நானும் அழத் துவங்கினேன். இன்னொரு மாணவி எனக்கு இருவரும் இருந்து பிரயோஜனம் இல்லை அம்மா. எனது அப்பா இன்னொரு திருமணம் பண்ணிக் கொண்டார்கள், அம்மா எங்கேயோ சென்று விட்டார்கள். எங்கள் அப்பாயி தான் என்னை வளர்க்கிறார்கள். அப்பா அம்மாவை பற்றி எல்லோரும் பேசும்பொழுது எனக்கு இல்லையே என்று வருத்தமாக இருக்கும் என்று அழுத போது கையறு நிலையில் தவித்தேன் .
இப்படி 51 மாணவர்கள் இருந்த அந்த வகுப்பறையில் 40 குழந்தைகள் தனித்தனி சிக்கலிலும்ஃ பிரச்சனைகளிலும் சிக்கி கேட்பதற்கு ஆளின்றி தவித்துக் கொண்டிருந்ததை உணர்ந்தேன். 
வகுப்பே அழுது நின்ற காட்சி, என்னால் இந்த 34 வருட ஆசிரியப் பணியில் கண்டறியாத ஒன்று. மனம் கனத்து செய்வதறியாது கலங்கி கலங்கி நின்றேன் இன்னும் பல நாட்களுக்கு இந்த நினைவுகள் என்னை கனக்கச் செய்யும். 
 கனம் நிறைந்த அந்த பொழுது அந்த குழந்தைகள் வாழ்வில் எல்லாவற்றையும் பெறுவதற்கு துணை நிற்க வேண்டும். உன்னை கேவலமாக பேசுபவர்கள் முன் நீ நேர்மையாக வாழ்ந்து அவர்கள் உன்னிடம் பேசவே தயங்கும்படி வளர்ந்து காட்ட வேண்டும் என்று ஆற்றுப்படுத்தவே முடிந்தது.
 ஒரு அரசு பள்ளியின் துயர வகுப்பாக அமைந்தது. இன்னும் எத்தனை மாணவிகள் இப்படி ஆறுதலுக்கான கரங்களையும், மனதையும் நாடி நிற்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் இத்தனை துயரங்களையும் வென்று சாதிப்பார்கள் என்ற நம்பிக்கை அவர்களுக்கு கொடுக்க என்னால் முடியும்.
 ஆசிரியர்கள் தோழர்கள் பாடம் நடத்துவதை விட ,மாதத்தில் ஒரு நாள் குழந்தையின் சிக்கல்களை, பிரச்சனைகளை கேளுங்கள் அவர்களின் துயரங்களை துடைக்கும் கரங்களை நாடுகிறார்கள் கேட்கவாவது காதுகள் கிடைக்கட்டும் 
கண்ணீருடன் ,
மு.கீதா புதுக்கோட்டை.

Tuesday, 8 November 2022

film pathombatham noottandu

பத்தொன்பதாம் நூற்றாண்டு
Pathombatham noottandu 2022malayalam film 
Prime video 
கேரள மாகாணத்தில் தாழ்த்தப்பட்டவர்களை நம்பூதிரிகள் சாஸ்திரம் எனக் கூறி செய்த கொடுமைகளை உண்மை சம்பவத்தின் அடிப்படையில் வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம்.
19 ஆம் நூற்றாண்டில் திருவாங்கூர் ஈழவ குடும்பத்தில் பிறந்து மகாவீரனாக வாழ்ந்த ஆராட்டுபுழா வேலாயுத பணிக்கரின் வீரத்தை போராட்டங்களை ,ஈழவக்குடும்பத்தில் பிறந்த முலைவரி கட்ட மறுத்த வீராங்கனை நங்கேலியின் தீரத்தை ,உயர்சாதியினர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இழைத்த  வன்மத்தை அக்கிரமங்களை கண்முன் காட்டும் வலியின் உச்சம்.
மார்பைமறைக்க பெண்கள் படும் துயரங்களை ஆங்கிலேயர்களுடன் இணைந்து அவர்களுக்கு செய்த துரோகங்களை காட்சிப்படுத்தி உண்மையை முகத்தில் அறைந்து நாம் வந்த வரலாற்றைக் காட்டும் திரைப்படம் இக்கால இளைஞர்கள் கட்டாயம் காண வேண்டிய படங்களில் ஒன்று.
வேலாயுத பணிக்கராக வாழ்ந்துள்ள சிஜுவில்சன்,நங்கேலியின் வீரத்தை உணர்த்திய காயாடு லோகரை மனதார பாராட்ட வேண்டும்.
கற்பனையை வரலாறாக்கி பணம் கொழிக்கும் திரைத்துறையில் உண்மை வரலாற்றை உலகுக்கு எடுத்துக்காட்டிய இயக்குநர் வினையனுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் பார்க்க வேண்டிய படம்.

மலையாளத்திரைப்படங்கள் உண்மைக்கு அணுக்கமாக உள்ளதும் தமிழ்த் திரைப்படங்கள் இன்னமும் நாயக் பிம்பத்தினை வைத்தே பிழைப்பு நடத்துவதும் முரண்களின் உச்சம்.

Thursday, 20 October 2022

நானும் தீபாவளியும்

நானும் தீபாவளியும்
சிறுவயதில் தீபாவளிஎன்பது அத்தனை ஆனந்தமானது .துணி எடுத்து தைத்து தருவார்கள்.தீபாவளிக்கு மட்டும் தான் புத்தாடை.நான்கு நாட்கள் முன்னதாகவே சொசைட்டியில் வெடி வாங்கி வந்து விடுவோம்.. அதை தினமும் காலையில் காயவைத்து எடுத்து வைக்க வேண்டும்.அப்பா தீபாவளி முதல் நாளில் நான் தம்பி மாமா வீட்டு பிள்ளைகள் சீனு ஆஷா எல்லாருக்கும் பிரித்து தருவார் .சில நேரங்களில் எங்கள் இருவருக்கு மட்டும் கிடைக்கும்.துப்பாக்கி வைத்து பொட்டுவெடி வெடிப்பதும் ஒத்தைவெடி வெடிப்பதும் நீண்ட நேர மகிழ்வைத் தரும்.
ஒரு வாரமாக முறுக்கு ஓலைபக்கோடா தட்டை மிக்சர் அதிரசம் தேங்காய் பர்பி ,சோமாஸ் , மைசூர் பாகு என வீடு அதகளம் ஆகும்.சிறுவயதில் மகிழ்வைத்தந்த பலகாரங்கள் வளர்ந்த பிறகு எவன் இதைக்கண்டுபிடிச்சான்னு கோவமா. வரும் வேலை பெண்டு எடுக்கும்.
தீபாவளி அன்று காலை நான்கு மணிக்கு ஆத்தா எழுந்து எண்ணெய் வெடி வைத்து சாமி கும்பிட்டு தலையில் வைத்து விடுவார்கள்...பெரிய செப்புத் தவலையில் தண்ணீர் கொதிக்கும் ஆவி பறக்க குளித்து விட்டு வெடியை முதலில் வைப்பது யாரென்று எங்களுக்கும் பக்கத்து வீடுகளில் செல்வி வீடு கண்ணகி வீடுகளுக்கும் போட்டி நடக்கும்.இதில் தம்பி முதலில் வெடி வைக்கணும்னு துடித்துக் கொண்டு இருப்பான்.

மறுபடி புத்தாடைகள் பலகாரங்கள் வைத்து சாமி கும்பிட்டு (தீபாவளி பலகாரங்களை சுடும் போதே சாப்பிடலாம் என்பதால் காலியாகிக்கொண்டே இருக்கும்.

பத்து வீடுகளுக்கு மேல் சென்று தர தனித்தனி பாத்திரங்களில் எடுத்து வைப்பார்கள் அந்த கால இரும்பு டின்களில் வரிசையாக பலகாரம் எண்ணி அடுக்கி இருக்கும்.
முதலில் மும்தாஜ் வீட்டுக்கு பிறகு கண்ணகி வீடு, செல்வி வீடு கொடுத்தபின் அடுத்த தெருவில் எஸ் ஆர் மாமா வீடு ஆத்தாவின் அண்ணன் வீடு என்பதால் நல்லதா பார்த்து ஆத்தா வைத்திருப்பார்கள்.
அடுத்தது மாமா வீடு அங்கு மாமா வீட்டு பிள்ளைகள் மற்றும் எங்களுக்கும் புத்தாடை இருக்கும்.காலில் விழுந்து கும்பிட்டு ஆடையுடன் ஒரு ரூபாய் பணமும் வாங்கிக் கொண்டு அடுத்தது ஆத்தாவின் அக்கா வீடான சத்திரத்திற்குச் செல்வோம்..அங்கு ஒரு தாத்தா காதில் கடுக்கனுடன் இருப்பார்கள்.அங்கு பெரியம்மா லெச்சுமி அக்கா எல்லாரையும் பார்த்துவிட்டு பலகாரம் கொடுத்து அவர்கள் தரும் தீபாவளி காசையும் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வருவோம்..
அப்பறம் வெடி வெடிப்பது தான் வேலை மதியம் மாமா வீட்டிற்கு அனைவரும் சென்று விடுவோம்.மாலை ஏதாவது ஒரு திரைப்படம் ...இப்படியாக தொலைக்காட்சி வரும் வரை சொந்தங்களுடன் கழிந்தது.மறுநாள் கௌரி நோன்பு மிகவும் சுத்தபத்தமாக ஆத்தி இப்போ நினைச்சாலும் கண்ணீர் வரும் வேலை வேலை என்று அடி நிமிர்த்தி விடுவார்கள்.
தொலைக்காட்சி வந்த பிறகு காலையில் பத்து மணிக்குள் அனைத்தையும் முடித்துவிட்டு சாலமன் பாப்பையா பட்டி மன்றம் என தொடர்ந்து டிவி தான்...டிவி பார்க்கும் போது ஏதாவது வேலை சொன்னால் வரும் பாருங்க கோவம்...காலை உதைத்து கொண்டு செய்வோம்.
வேலைக்கு வந்த பிறகு இந்த ஆவல் இல்லை என்றாலும் சேலை எடுக்கப்போவதே திருவிழாவிற்கு செல்வது போல அனைவரும் போவோம்.அதென்னவோ மலைபோல் குவித்து வைத்தாலும் அடுத்ததைப் பார்த்து இறுதியாக முதலில் பார்த்ததை வாங்கி வருவோம்...சினிமாக்கு போவது தான் பிடித்த பொழுது போக்கு.

பதினோராம் வகுப்பு படிக்கும் போது தேவகோட்டை சித்தப்பா வீட்டிற்கு வர பெரியார்  அறிமுகம்  ஆனார்... அதெப்படி சாமி கும்பிடாமல் இருப்பது ....

பாலகுமாரன் ரமணிசந்திரன் நாவல் படிக்கும் போது கடவுளர் கதைகள் நூலை படிக்க நேர்ந்தது... இருந்தாலும் விழாக்கள் கொண்டாட்டம் தான்.வாசிப்பு தெளிவைக் கொடுக்க தீபாவளிக்கு சித்தப்பா வீட்டிற்கு வரத்துவங்கினோம் பிறகு தீபாவளி அன்று ஏதாவது சுற்றுலா செல்வது வழக்கமானது . உறவினர்கள் சூழ அது தனி கொண்டாட்டமானது.. ஒவ்வொரு தீபாவளியும் எங்களுக்கு சுற்றுலாக்காலமானது.
காலையில் மாணவர்கள் ஏன் நீங்கள் தீபாவளி கொண்டாட  மாட்டீர்கள் என்று கேட்ட போது அசுரன் என்பது தமிழரைக் குறிக்கும் மேலும் ஒருவர் இறந்த நாளை கொண்டாடுவது என்பது பிடிக்காததால் . பொங்கல் தான் எங்களுக்கு மட்டும் அல்ல தமிழர்களின் திருநாள் அதை மிகச் சிறப்பாக கொண்டாடுவோம் என்றேன்.

ஒவ்வொரு இடத்திற்கும் தீபாவளியின் காரணங்கள் வெவ்வேறாக உள்ளது . ஆனால் பொங்கல் அப்படி அல்ல இயற்கையைக் கொண்டாடுவது என்றேன்.சிறுவயதில் பொங்கலும் நான்கு நாட்கள் பெண்டெடுக்கும் விழா தான்.முதல் நாள் முற்றம் வைத்த பெரிய வீட்டை கிணற்றில் இருந்து தண்ணீர் இறைத்து கழுவி பித்தளை பொருட்களை விளக்கி போகி அன்று மாலை கொழுக்கட்டை செய்து சாமி கும்பிட்டு நிமிர்ந்தால் அடுத்த நாள் காலையில் மீண்டும் வீட்டைக் கழுவி மறுபடி அத்தனை விளக்கு பித்தளைப் பாத்திரங்களைப் கழுவி சாமி கும்பிட்டு நிமிர்ந்தால் மீண்டும் மூன்றாவது நாளாக வீட்டுச்சாமிகும்பிட காலையில் மாவு இடித்து அதிரசம் செய்து ஆமைவடை உளுந்து வடை சுழியன் செய்து சாமி கும்பிட வேண்டும்...
இந்நாட்களில் மாதவிலக்கு வந்து விட்டால் அவ்ளோதான் மூதேவி நாளும் கிழமையுமா ஒதுங்கி நிக்குது பாருன்னு அம்மாவின் கோவம் ஏன்னா அவ்ளோ வேலையும் அவர்களே செய்யனும்னு ...பரந்த மாதிரிகாட்டி நானும் புத்தகமும்னு ஜாலியா உலக்கைக்கு பின் எனது நாட்கள் கழியும்..

அசைபோடும் எண்ணங்கள்
தொடரும்
மு.கீதா
புதுக்கோட்டை

Friday, 9 September 2022

காதல்

எட்டிப் பிடித்து ஒட்டிக்கொள்ளச் செல்கிறாள்..
அத்தனை வேகத்துடனும் பிடிவாதத்துடனும்.
உலகே கைவிட்ட மனதோடு செல்பவளின்
கரம்தொட பறந்து செல்கிறேன்.
அவளின் பறத்தல் வேகமானது.
உடைந்த மனதை ஒட்டும் சொற்களைத் தாங்கி விரைகிறேன்..
சில்லுக்கண்ணாடி மனதுடன்
குருதி வடிய செல்பவளை 
சில நொடிகள் காணாது
குலைகிறேன்..
இத்தனை வீரியம் காட்டுபவள்
சற்று பொறுத்திருந்தால் கரம் பிடித்திருப்பேனெனக்கதறுகிறேன்...
விநாடிகளைத்தொலைத்தவளாய்.
மரணத்தைக்காதலித்தவளை
கண்டால் கரம் கொடுங்கள்..