டோராதி
டோரதி திரைப்பட பற்றி கேள்விப்பட்டு அவசியம் பார்க்க வேண்டும் என்று நினைத்து நேற்று சனிக்கிழமை மாலை காட்சிக்கு சென்றோம் .
முதல் பாதி அடிதடி வன்முறை ,ஆணாதிக்க சிந்தனை, சாதீயம் என செம்மண் காட்சிகளோடு கிராமத்து மக்களின் சாதியச் சிந்தனைகளை பெண் அடிமைச் சிந்தனைகளை சித்திரமாக தீட்டி அஸ்திவாரமிட்டு அதன் மேலே எழிலான வண்ண வீடு போல இரண்டாம் காட்சி மெதுமெதுவாக மனதிற்குள் குடி புகுந்தது சுப்புவை கொன்று விட்டேன் என்று கூறும் கார்த்திக்கின் வலி நிறைந்த மனதுடன் சுப்புவோடு அவன் வாழ்ந்த இளமைக் கால நினைவுகளை அசைபோட்டுக் கொண்டே லாரியில் நாம் கார்த்திக்குடன் பயணிக்கிறோம்.
இப்படத்தில் இரண்டாம் பாதியில் டோரதி என்று பெயருடைய அண்ணன் மனைவியான கீர்த்தி சுரேஷிடம் கொண்டிருந்த நட்பு, தன்னுடன் படித்த தோழியுடன் கொண்டிருந்த நட்பு என சுப்புவின் மறைக்கப்பட்ட பெண் தன்மையை இருவரும் உணர்ந்தவர்களாக, இருவரிடம் மட்டுமே வெளிப்படுத்திய சுப்பு தனக்கு விருப்பமான நண்பன் கார்த்திக் நட்பை இழந்து விடக்கூடாது என்பதற்காக பெண் தன்மையில் ஆண் வேடமிட்டு உன்னுடன் இருந்தேன் என்று கூறும் காட்சியில் அவனது உள்ளார்ந்த நட்பை, காதலை இயக்குனர் மனதில் பதிய வைத்து விடுகின்ற அற்புதம் நிகழ்ந்துவிடுகிறது.
சுப்புவை வெறுக்கும் கார்த்தி, சுப்புவை கொலை செய்ய சுப்புவின் அப்பா கட்டாயப்படுத்தி அனுப்பிய போதும் ஒவ்வொரு முறையும் கொல்ல முடியாமல் அவன் மீது கொண்டிருந்த அன்பு தடுக்க,முதலில் கோபமாக இருந்து மெல்ல மெல்ல அவனைப் புரிந்து கொண்டு அவனுடன் இணைந்து பயணிக்கும் காட்சி அற்புதம் .
படத்தை சித்திரமாக நம் மனதில் வரைந்து விடுகிறார் இசைஞானி இளையராஜா தனது இசையாலும் உயிரை உருக்குகின்ற குரலாலும் படத்தை பார்த்த பின்னும் நீண்ட நாட்கள் படம் பற்றிய அழுத்தமான சிந்தனையை உண்டாக்கி ,திருநங்கைகள் குறித்த இந்தச் சமூகம் கற்பித்த பார்வையை புரட்டிப் போடுகின்ற வல்லமை படைத்தவராக இசையால் நம்மை மூழ்கடிக்கும் இளையராஜாவின் இசைத்திறன் முன்னால் அனைவரும் அடிமையாகி விடுகிறோம் என்பதே உண்மை .
படத்தின் கருத்தும் இளையராஜாவின் இசையும் இந்த சமூக மாற்றத்திற்கு சமூக பார்வைக்கு வித்திடுகின்றன என்பது உண்மை.
எனக்கு தெரிந்து சிறுவயதில் ஒருதலை காதல் படத்தில் திருநங்கைகளை கும்மி அடித்து பாடுகின்ற அந்த காட்சி பின்னாளில் அவர்களை கேளிக்கும் கிண்டலுக்கும் உள்ளாக்குவதாக, அவர்கள் மீது ஒரு எள்ளலை உண்டாக்குவதாக, அவர்கள் மீது ஒரு அருவருப்பை உண்டாக்குவதாக, அவர்களைப் பற்றி தவறான சிந்தனையை பரப்புவதாக வந்த அத்தனை திரைப்படங்களும் திரைப்படங்களை இயக்கிய இயக்குனர்களும் இந்த படத்தை பார்க்கும் பொழுது ஏன் நாம் இவர்களைப் புரிந்து கொள்ளாமல் இப்படி ஒரு காட்சிகளை அமைத்தோம் என்று எண்ணத்தக்க வகையில் கார்த்திக் சுப்புராஜ் மிகச்சிறப்பாக டோரதி படத்தை ஒரு சிறந்த விருதுக்கான படமாக அமைத்து இருப்பது பாராட்டுதற்குரியது அதில் நடித்த அத்தனை பேரும் அதில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதே உண்மை விசில் அடித்துக் கொண்டிருக்கக் கூடிய அப்பாவாகட்டும் சண்டையிட்டுக் கொண்டிருக்கக் கூடிய அண்ணன்கள் ஆகட்டும் ஏன் சிலிர்த்துக்கொண்டு முட்டி மோதும் சேவல் ஆடுகள் உள்ளிட்ட அத்தனையும் இயல்பாக எதார்த்தமான கிராமத்தை கண் முன்னே நிறுத்துவது உண்மை .
வீதி நிகழ்விற்கு தோழர் பிரியா பாபுவை சிறப்பு விருந்தினராக அழைத்து வந்த புதுகை செல்வா தோழர் பத்து ஆண்டுகளுக்கு முன்பே திருநங்கைகள் குறித்த உரையாடலை வீதியில் துவங்கி வைத்தார்.
அதற்கு பிறகு தோழர் நர்த்தகி நடராஜ் அவர்களின் நட்பு விரிந்த பார்வையை உண்டாக்கியது .