World Tamil Blog Aggregator Thendral: 2021

Friday, 24 December 2021

blood money film

Blood money
தமிழ் சினிமா புதிய பாதையில் தடம் பதிக்கத் துவங்கி உள்ளது மனதிற்கு சற்று நிறைவாக உள்ளது...
ஊடக அறம் பேசும் படம் Blood money
Sarjun இயக்கத்தில் பெண் நிருபராக பிரியாபவானிசங்கர் நடித்திருக்கும் இப்படம்...உண்மையை பேசத் துவங்கி உள்ளமைக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்...
குவைத் நாட்டில் பணிபுரியும் சென்ற பட்டுக்கோட்டை  சகோதரர்கள் இருவருக்கும் அந்நாடு தூக்கு தண்டனை அறிவிக்கிறது...
பிரசவத்தில் தாயை இழந்த பெண் குழந்தை தன் தந்தையை பார்க்கத் துடிக்கும் கதை..
விபத்தில் இலங்கை இஸ்லாமியப் பெண்ணை கொன்றதாகவும் இழப்பீடாக  இறந்த பெண்ணிற்காக தரும் தொகை ரூ 30,00,000 (Blood money) கொடுத்தப் பிறகு எதற்காக தூக்குதண்டனை...என பெண் நிருபர் பிரியா பவானியின் போராட்டமே கதை..

முடிவில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடைக்கும் மன்னிப்பு கடிதம் அவர்களைக் காப்பாற்றுதிறது...
ஒரு குழந்தை தன் தந்தையைக் காணத்துடிக்கும் துடிப்பை சிறுமி இயல்பாக கடத்துகிறாள்..
மகன்களைக் காப்பாற்றத்துடிக்கும் தாய்,பெண் என்பதால் அவளை ஏளனம் செய்து அலட்சியம் செய்யும் ஊடக பணியாளர் ...

அரசு மற்றும் ஊடக நிறுவனர் இவர்களை எதிர்த்து துணை நிற்கும் மேலதிகாரி...

சிறப்பு... வழக்கமான டூயட் சண்டை காட்சிகள் இல்லாமல் பெண்ணை மரியாதையாக திறமைசாலியாக போராடி வெற்றி பெறுபவளாக காட்டியது சிறப்பு... பாராட்டுக்கள் இயக்குநருக்கு..

தூக்கு தண்டனை குற்றவாளிகளாக நடிக்கும் கிஷோர், ஷிரிஷ் கண்கலங்க வைத்துள்ளனர்..

படத்தில் அனைவரும் வாழ்ந்துள்ளனர்.. மனம் நிறைந்த வாழ்த்துக்கள்... தமிழ்த் திரைப்படம் தரமான படங்களைத் தந்து தடம் பதிக்கட்டும்.

ஆனால் பணி இஸ்லாமிய நாடு,இஸ்லாமிய பணக்காரர் தன்னிடம் பணி புரியும் இலங்கை இஸ்லாமியப் பெண்ணை கொலைசெய்ய அதை தன்னிடம் பணிபுரியும்  தமிழர்கள் மேல் சுமத்தி தண்டனை பெற்றுத்தருகிறார் என்பது சற்று உறுத்தவே செய்கிறது...

மதம் சாராத படம் எனில் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்....

Thursday, 11 November 2021

சமூகம்

இறுகிய பாறையோ
இளகிய மணலாக
வேருக்கு இடமளிக்க,

இளகாத மனிதனோ
சாதிப்பாறையால் இறுக்கமாக...
அதிகார போதையில் இறுக்கமாக..
அந்தஸ்து திமிரில் இறுக்கமாக..

Tuesday, 9 November 2021

சொற்களற்ற வீட்டில்

சொற்களற்ற வீட்டில்
சொல்ல முடியா தவிப்புடன்
காலத்தின் வரிகள் தாங்கிய
முதுமையின் விளிம்பில்
வாழும் அவர்களுக்கு
பால்ய கால நினைவுகளே 
துணையாக.
வீட்டை இடித்து
அவர்களுக்கு வசதியாக கட்ட
விரும்பும் மகனுக்கு,
தடைபோடும் காரணம்
புரியவில்லை...
யாருமற்ற வீடாகயிருந்தாலும்
முதுமையைக் கடக்க
வாழ்ந்த வீட்டை தவிர
வேறென்ன உதவிடும்.
வீடியோவில் சிரிக்கும் குழந்தைகளை
தடவி பார்த்து உள்ளுக்குள்
தவிப்பை காட்டாது சிரிக்கின்றனர்.
உடல் நலக்குறைவு செய்தி கேட்டு
அம்மாவின் மனம் கைவைத்தியம்
கூறி பதறுகிறது...
பார்த்து பார்த்து
சிறுகச் சிறுக சேமித்து
எந்த மகிழ்வையும் அனுபவிக்காமல்
சேர்த்தவை அனைத்தும்
குப்பையானதை பொறுக்க முடியாமல்
குமறுகின்றனர்...
அயல்நாட்டில் மகன், மகள் 
பெருமையல்ல,
அண்மையிருந்து அன்பாக
கரம் பிடித்து நான் இருக்கிறேன்
என்ற சொல்லைவிட.

கடல்

முட்டம் கடலில்
மூழ்கிய காலை
நனைத்து மகிழ்ந்து வரவேற்றது.
ஆரஞ்சு வண்ணம் போர்த்தி
அதிசயம் காட்டியது...
சட்டென்று சிறுமியாக்கி
மணல் வீடு கட்ட வைத்தது..
முழுதும் அணைத்து
முத்தமிட்டு கொஞ்சியது..
கொஞ்சலில் கரைந்தவளைக் கண்டு
பொறுக்காத ஆதவன் ஒளிய ,
பிரியாது பிரிந்தவளின்
பாதம் தொட்டு தொடர்ந்தது.
உடலில் படிந்த உப்பு 
கண்களில் வழிய...
வீடடைந்த என் உடை உதற
கொள்ளென சிரித்து சிதறி
வீடு நிறைந்தது...
மணலுண்ட கடல்...

Wednesday, 6 October 2021

முதல் கார் பயணம்

இன்றென் வாழ்வில் மறக்க முடியாத நாள்...7.10.21

தனியாக காரில் நான் காரைக்குடிக்கு  நேற்று மாலை சென்று காலையில் திரும்பி வீட்டை அடைந்த போது எனது சிறகுகள் படபடத்தன...

நானா! நானே நானா! காரை ஓட்டி வந்தது.நம்ப முடியாமல் மகள் நிலா, சித்தி, தம்பி அதிர்ச்சியில் உறைய... நானும் நம்ப முடியாது உறைந்து நின்றேன்..

ஊருக்குள் ஓட்டி பழக முடிவு செய்து காரை எடுத்து பிறகு ஏன் காரைக்குடி செல்லக்கூடாதென்று மாலை 5.30 மணிக்கு கிளம்பினேன்...

எதிரில் வந்த வாகன ஓட்டிகள் நான் புதிதாக காரை ஓட்டுகிறேன் என அறிந்து எனக்கிசைவாக ஓட்டினர்..அன்பு சூழ் ஓட்டுநர்களால் நான் சென்று வர சாத்தியமானது..

மாமா சைக்கிள் பழகக்கற்றுக்கொடுத்த போது விழுந்து எழுந்து பிறகு சைக்கிளில் பறக்க துவங்கிய போது முளைத்த சிறகு பிறகு முதன்முறையாக இருசக்கர வாகனத்தை ஓட்ட  கற்கத்துவங்கிய போது வளரத்துவங்கியது...
பத்தாம் வகுப்பில் வண்டி ஓட்ட அனுமதித்த அம்மா இன்று எனைப் பார்த்தால் உச்சி முகர்ந்து இருப்பார்கள்.

மழையூரில் எனது தலைமை ஆசிரியராகப் பணி புரிந்த சரஸ்வதி குமாரி அவர்கள் கார் பயிற்சி எடுத்து லைசன்ஸ் வாங்க அடித்தளமிட்டார்.. அதற்கு பிறகு சிலமுறை ஓட்டி இருந்தாலும் சொந்தக்காரில் ஓட்டுவதே குறிக்கோளாக இருந்தது.

ஒரு மாத காலமாக லக்கி ஸ்டார் டிரைவிங் கிளாஸ் சகோதரர் பிரசாத் அத்தனை பொறுமையாக காரை ஓட்ட பயிற்சி அளித்து வருகிறார் அவருக்கு முதல் நன்றி...

தம்பி சாக்ரடீஸ் காரை ஓட்ட முடியும் என்ற தன்னம்பிக்கை அளித்து பயிற்சி அளித்தது எனது அச்சத்தை நீக்கியது.

இதோ இன்றென் சிறகுகள் விரியத் துவங்கி விட்டது.... மனதில் சிறிது அச்சமும் நிறைய தன்னம்பிக்கையும் சுமந்து காரை ஓட்டி வந்தது த்ரில்லர் படம் பார்ப்பது போல....

வீட்டில் நிறுத்தி எனக்கு நானே கை கொடுத்து கொண்டேன்..

நான் வந்துவிட்டனா என உறுதி செய்து மகிழ்ந்த தோழி வேணி  என எனது வளர்ச்சியில் பேரன்பு கொண்ட உறவுகள் தோழமைகள் சூழ வாழ்தல் வரம்...

Thursday, 16 September 2021

பயணம்

பயணம் தொடர்கிறது
பேரூந்தில் இறங்கும் பயணிகள்
தொடர் வண்டியில் பிரியும் பயணிகளென
 பயணிகளுடனான வாழ்வில்
எனது இறக்கத்திற்கான
காத்திருப்பில் .
எனக்கான இடமளித்து
இதயமளித்த உள்ளங்களை அசைபோடுகிறேன்...
என்னுடன் பயணிப்பவர்களின்
எண்ண அலைகளால் பயணம்
நிர்ணயிக்கப்படுகிறது..
ஆற்றுநீரில் தவழும் சருகாய்
அமைதியான பயணத்தில்
முழுமையை நோக்கி நகர்கிறேன்..
பிறை நிலவு பூரணமாவதைப்போல..


மு.கீதா

Friday, 20 August 2021

அசுரனின் தூரிகை

அசுரனின் தூரிகை

வரிசையாக நிற்கின்றன
விலங்குகளின் அணிவகுப்பில்
நிறைகிறது சூழல்..
ஒவ்வொன்றாய் வரச்சொல்லி
வரையும் அசுரனின் கைகளில்
கோடுகளாய் குறிப்பேட்டில்
ஒளிந்து கொள்கின்றன.
சிங்கம் அருகில் ஆடு
கம்பீரமாய் சிரித்துக்கொண்டே
யானை மீது ஒட்டகம் அமர்ந்து
இன்னும் உயரமாகிறது..
முயலுடன் கை கோர்க்கும் 
டைனோசரின் நீண்ட கைகளில்
வழிகிறது பேரன்பு..
சட்டென்று அம்மம்மாவும்
சடுதியில் கோட்டிற்குள் மறைகிறார்...
அம்மா அப்பா ஆயா வட்டத்திற்குள் மறைய....மீனாக்கா புள்ளியாகிறாள்....
அசுரனது ஓவியங்களில் உயிர்க்கும் 
அவர்களைக் காண முடிந்தால்
நீங்கள் பாக்கியவான்கள்...
கீதா

Wednesday, 21 July 2021

இனியச்சொல்

மேட்டிமைத்தனம் நிறைந்த இடத்தில்
முகங்களில் கவலைசூழபரபரவென
மக்களின் சலனம்...
அச்சமற்ற முகங்களின் பின்னே,
அதிகாரமும் பணமும் மறைந்திருக்க
பொருத்தமில்லா ஆடையுடன் தயங்கி தயங்கி,
நுழையும் காலத்தின் வடுதாங்கிய
மூத்த மகளின் கைகளில் நடுக்கம்..
மூச்சுக்காற்றிற்காக தவிக்கும் முதியவனின் உயிர்ப்பிற்காக வாழ்க்கையோடு போராட்டம்..
அவளைப் புறந்தள்ளும் கைகளில் 
மரணத்தின் வாசனை..
அக்கறையாய் விசாரிப்பு
அன்பாக சேவை செய்கின்றனரா?
ஆதரவோடு நடக்கின்றனரா?
தூய்மை தூய்மையாக உள்ளதா?
எந்தக் குறையிருந்தாலும் கூறுங்கள்.
பின்னிற்கும் கண்களின் தவிப்புகளைக் காண்கையில்
எதையும் கூறிடக்கூடாதென்கிறது மனம்..
இத்தனை கவனிப்பும் உண்மையான தல்ல...
இனிமையான சொற்களைத் தீர்மானிக்கிறது
பணமும் அதிகாரமும்...
பலகணியில் காணும்
இயல்பாக வளரும் முட்காடு சிரிக்கிறது...

Thursday, 8 July 2021

தாய்

அலறல் சத்தம் தாளாமல் துடித்தாள்
அழும் குழந்தையின் பசி வெடிப்பின்.
முதுகில் குழந்தை அழ அழ
எடுத்த கணை இரையில் தைத்து 
எம்பி விழச்செய்தது....
பசி நீக்கிய தாய்க்கு முத்தம் தந்த
பச்சிளம் குழந்தையின் அண்மை
மலையைப் பெயர்க்கும் வல்லமை உடையது.
தூற்றும் காற்றை புறந்தள்ளி புறப்பட்டவளை
சற்றும் தடுக்க முடியாது புயல் ஒதுங்கியது.
இயற்கை அரவணைத்து மகிழ்ந்தது...
பாதை சமைத்தவழியில் பயணிக்கவில்லையே
என்பது ஒன்றே அவளின் கவலை....

Wednesday, 16 June 2021

a kid like jake

a kid like jake English film 2018

என் குழந்தை திருநங்கை ஆக இருந்தால் நான் என்ன செய்வேன்....
இந்த கேள்விக்கு பதில் தர இன்னும் சமூகம் தயாராக இல்லை ...
இத்தனை ஆண்டு கால அனுபவம், வாசித்த நூல்கள் என்னைப் பக்குவப்படுத்தி இருப்பதால் அதிர்ச்சியிலிருந்து மீண்டு அவனை(ளை) ஏற்க தயாராக இருப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது.
ஆனால் சிறு வயதில் இத்தனை பக்குவம் இருக்க வாய்ப்பே இல்லை.எனக்குள் குமைந்து ,என் குழந்தையையும் ஏற்க முடியாது வதைத்து ,நானும் இறப்பை நாடி இருக்கக் கூடும்.
ஆண் பெண் இருவருக்கான சமூகத்தில் திருநங்கைகளுக்கு திருநம்பிகளுக்கான சமூகத்தை நாம் ஏற்று உருவாக்கி இருக்கிறோமா? என்றால் இல்லை என்ற பதிலே கிடைக்கும்
அவர்களை சாதாரண குழந்தைகளுடன் இணைத்து பழக விடுவதில்,அவர்களுக்கான தனிப்பட்ட வசதிகளை செய்து தந்துள்ளோமா என்றால் இல்லை.
இன்னும் நமது இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளை பேரூந்துகளில்,பொது இடங்களில்,தியேட்டர்களில் எங்காவது அவர்களுக்கான வசதிகள் உள்ளதா?
இந்த உலகில் அவர்களுக்கான இடம் இல்லையா?
உணவு விடுதிகளில் கூட அவர்களுக்கான இடம் இல்லாத நிலையில் அவர்களை கொஞ்சமாவது திரும்பி பார்க்க அரசு துவங்கி உள்ளது.
பெரும்பான்மையோரின் நலத்திற்கு தரும் முக்கியத்துவம் சிறுபான்மை குறைபாடுள்ள மக்களுக்கு தருவதில்லை என்பது மனித நேயம் அற்ற நிலை.
இப்படி யோசிக்க வைத்த திரைப்படம் 
"a kid like jake"
தனது 4 வயது மகனின் மாறுபாடான செயல்களை குழப்பத்துடன் உற்று நோக்கி பள்ளி தலைமையாசிரியருடன் கலந்து என்ன தான் சமாதானம் செய்து கொண்டாலும் ஏற்க முடியாது தவிக்கும் அம்மா அப்பாவாக நடித்துள்ளவர்களின் மனநிலையை நாமும் அடையும் படியான சிறப்பான தேர்வு...
இன்னும் மனிதன் வளர வேண்டும்... அதுவும் நமது நாட்டில் இந்த குழந்தைகளை ஏற்றுக்கொள்ள காலம் பக்குவப்படுத்த வேண்டும்...
தமிழ் நாடு இந்தியாவிற்கு முன்னுதாரணமாக தோழி நர்த்தகி நடராஜை உயர் பதவியில் வைத்து சிறப்பித்துள்ளது .
அவர்களின் துன்பங்களுக்கு மருந்தை தர முன்வந்துள்ளது போற்றத்தக்கது.
உணர்வுள்ளவர்கள் பார்க்க வேண்டிய படம்.. நன்றி ஆசிரியர் ரெ.சிவாவிற்கு..
மு.கீதா
புதுக்கோட்டை

Tuesday, 15 June 2021

திரைப்படம்wonderfilm

Wonder cinema
ஆகி முதல் நாள் பள்ளி செல்கிறான்‌பள்ளியின் முதல்வர் அவன்மீது மிகுந்த அன்பு காட்டுகிறார்.எப்போதும் அவனது உணர்வுகளைப் புரிந்து செயல்படுகிறார்.ஆகியை கேலி செய்த மாணவனை பள்ளியை விட்டு அனுப்புகிறார்.
ஏனெனில் ஆகி Treacher collins syndrome ஆல் பாதிக்கப்பட்டு 27 முறை அறுவைச் சிகிச்சை செய்து தற்போதுள்ள முகத்தைப் பெற்று இருக்கிறான்.
எப்போதும் அவன் விண்வெளி வீரரின் முகமூடியை அணிந்து தனது சிதிலமான முகத்தை மறைத்துக் கொள்கிறான்.அவனது அன்னை நல்ல எழுத்தாளர்.அவரது உலகமாக ஆகி . ஆகி பிறந்த பிறகு அவளது அக்கா தனிமையை உணர்கிறாள்.அவளது பாட்டியே அவளுக்கு பிடித்த நபராக இருந்திருக்கிறார்.பாட்டியின் இறப்பு மேலும் அவளுக்கான நபரைத் தேட வைக்கிறது .அவளது தோழியின் விலகலும் அவளால் தாங்கிக் கொள்ள முடியாத சூழல்.
ஆகி பள்ளி சென்று படிக்கும் காலம் வந்துவிட்டது என அவனது அம்மா அவனை பள்ளியில் சேர்க்கிறார்.
பள்ளியில் மாணவர்கள் செய்யும் கேலியில் மனம் உடைந்து அழுகிறான்.
அவனது அம்மா நீ பள்ளிக்குச் செல்லும் போது விண்வெளிக்குச் செல்வது போல மகிழ்வுடன் செல் என்ற வார்த்தை அவனது துன்பங்களில் இருந்து அவனை மீட்டெடுக்க முயல்கிறது.
தனது முதல்நாள் பள்ளி அனுபவத்தை தனது பெற்றோரிடம் கூற மறுப்பவனைக் கண்டு அம்மா வேதனைப்படுகிறாள்.பள்ளிக்குப் போக வேண்டாம் என்று அவள் கூறுகையில் பள்ளிக்குச் செல்வேன் என்று அவன் உறுதியாகக் கூறுகிறான்.
அறிவியல் பாடத்தில் அவனது ஆர்வம் நண்பர்களைத் தருகிறது.ஒவ்வொரு குழந்தையும் ஆகியின் மேல் அன்பு செலுத்தத் துவங்குகின்றனர்.
குழந்தைகளுக்கான உலகை பெரியவர்கள் புரிந்து கொள்ள முயல்வதே இல்லை.
அவர்களின் துன்பங்களுக்கு மருந்தை அவர்களே கண்டு பிடிக்கின்றனர்.
அவனது ஒவ்வொரு அசைவையும் புரிந்து கொண்டு நடக்கும் அம்மா அப்பா அக்கா அவர்கள் வளர்க்கும் நாய் கூட.
முகமூடியை கழற்றி எனது மகனின் முகத்தை நான் காண வேண்டும் என அன்பு ததும்பி கூறும் அப்பா .
அவனது மகிழ்வே தனது வாழ்வாக எண்ணி வாழும் அம்மா...
மனதை நெகிழ வைத்த உண்மைக் கதை.ஆசம்.
குழந்தைகளுக்கான உலகை உலகம் எப்போது படைக்கப் போகிறது?
இப்படிப்பட்ட படங்கள் தமிழில் வரும் காலம் எப்போது?
இப்படத்தை அறிமுகம் செய்த ஆசிரியர் ரெ.சிவா விற்கு மனம் நிறைந்த நன்றி.
மு.கீதா
புதுக்கோட்டை

Friday, 7 May 2021

முதன்மை தலைமைச் செயலாளர் உதயச்சந்திரன் இ.ஆ.ப

மதிப்பிற்குரிய முதன்மைச் செயலர் இ.ஆ.ப உதயச்சந்திரன் அவர்களின் மாண்பு.
பாடநூல் தயாரிப்புக் குழுவில் ஆறாம் வகுப்பு தமிழ்ப் பாடநூல் குழுவில் மதிப்பிற்குரிய உதயச்சந்திரன் அய்யாவின் கீழ் பணி செய்த காலங்கள் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம்.
ஒவ்வொரு நாளும் பாடங்களின் தன்மை குறித்து மாணவர்களின் மனநிலையில் நின்று அவர் படும் கவலை வியப்பாக இருக்கும்.
இரவு ஒரு மணிக்கு கூட நாங்கள் எழுதித்தந்த பாடங்களைத் திருத்தம் செய்து அனுப்புவார்கள்...எப்போது தான் தூங்குவார்கள் என்ற சந்தேகம் வரும்.

தமிழ் எழுத்துகளில்' ரகர ' எழுத்து பிழையாகவே அச்சிடப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டிய போது , ஏன் இதை இத்தனை நாட்களாக கவனிக்க வில்லை என்று கூறி உடனே அச்சு இயந்திரத்தில் மாற்றம் நடவடிக்கை எடுத்தார்.

தமிழ் மொழி மீது அவர் கொண்டிருந்த தீராக்காதலை அவரின் செயல்களில் ஒவ்வொரு முறையும் உணர முடிந்தது..

உங்கள் அறிவை எல்லாம் பாடநூலில் காட்ட வேண்டாம் என்று நினைக்காதீர்கள்.அவர்கள் சின்னஞ்சிறு குழந்தைகள் அவர்கள் விரும்பி படிக்கும் படி வண்ணப் படங்களுடன் கண்களைக் கவரும் வகையில் பாடநூல் அமைய வேண்டும் என்று வலியுறுத்துவார்...

அவரது நல்ல எண்ணத்தை செயலாக்கம் செய்ய பிடிவாதமாக இருப்பார்.அவரது எண்ணப்படியே பாடநூல்களில் புதிய பல கருத்துக்கள் செயலாக்கம் பெற்றன.

மகத்தான தலைமையின் கீழ் பணிபுரியும் பெருமையுடன் ஏற்பட்ட அத்தனை சிரமங்களையும் புறந்தள்ளி புன்னகையுடன் வலம் வருவோம்...

பாடநூலில் தொழில்நுட்பங்களைப் புகுத்தி விரைவுக்குறியீடைப் பயன் படுத்தி இந்தியாவிலேயே முதல் மாநிலமாக திகழ அவரது சீரியத் தலைமையின் கீழ் முனைவர் நா.அருள்முருகன் அய்யா வழிநடத்த பணிபுரிந்த காலங்கள் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம்.

அவரது அனுபவங்களைத் தொகுத்து 'மாபெரும் சபைதனில்' என்ற நூலில் அவர் சந்தித்த எளிய மனிதர்களின் உன்னதமான பண்புகளை எழுதியுள்ளார்...

எந்த நிலையிலும் குறை கூறாமல் நிறையை மட்டுமே கூறும் அவரது பண்பு போற்றத்தக்கது...

இரு மாதங்களுக்கு முன்பு வீதி கலை இலக்கியக் களம் நிகழ்வில் அவரது 'மாபெரும் சபைதனில்'நூல் அறிமுகம் செய்த போது முழுமையாக கலந்து கொண்டு தனது ஏற்புரையைக் கூறிய போது ஒரு மயிலிறகு வருடலாக அவரது தன்மையை உணர்ந்தோம்....
அனைவரும் வாசிக்க வேண்டிய நூல்களில் முதன்மையான நூல் அது.

இன்று மதிப்பிற்குரிய ஆட்சியர் இறையன்பு அவர்களின் உடன் பணியாற்ற உள்ளார்...

தொழில் நுட்பங்களின் உதவியோடு தமிழகம் வளர்ச்சிப் பாதையில் பயணிக்க உள்ளது .

தகுதியான அதிகாரிகளைத் தேர்வு செய்து ஆட்சி செய்ய புறப்பட்டுள்ள மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் அவர்களின் பண்பாடு அனைத்து மாநிலத்திற்கும் எடுத்துக்காட்டாக அமையும் என்பது மறுக்க முடியாத உண்மை...

மனம் நிம்மதியாக உள்ளது....

Tuesday, 30 March 2021

தேர்தல் பணி

நானும் தேர்தல் பணியும்...
1988 இல் ஆசிரியராகப் பணியில் சேர்ந்த அடுத்த வருடமே சட்டமன்றத் தேர்தல் பணி.திருமானூர் அருகே அழகிய மணவாளன் என்ற ஊரில்...
தேர்தல் நாளுக்கு
முதல் நாள் தான் தெரியும், எந்த ஊரில் பணி  என்பதால் எனது அப்பாவும் கூட துணையாக வர ..பேரூந்தே இல்லாத ஊருக்கு எப்படி போவது?
பணிபுரியும் பள்ளிக்கு இரண்டு பஸ் ஏறி இரண்டு கிமீ நடந்து செல்ல வேண்டும்.பேருந்து இல்லாத போது சிமெண்ட் ஆலைக்கு ஜிப்சம் எடுத்து செல்லும் டிப்பர் லாரியில் ஏறி பல நாட்கள் சென்றிருக்கிறேன்.
அழகிய மணவாளன் ஊருக்கு முதலில் செம்மண் லாரியில் சென்று பிறகு சைக்கிளில் அப்பா கொண்டு விட்டார்கள்..
ஒரு உடைந்த ஓடுகளால் ஆன பள்ளி அது.இரண்டு வகுப்பறைகள் கொண்ட ஒரே ஒரு கட்டிடம்.
ஒரு பக்கம் போலீஸ்காரர் உறங்கிக்கொண்டிருக்க மறுபக்கம் செய்வதறியாது அமர்ந்திருந்தேன்.நல்லவேளையாக இன்னொரு பெண் ஆசிரியர் துணைக்கு வந்த பிறகு அப்பா சென்றார்கள்...
இரவு இருபது வயதில் முதன் முறையாக தனியே அத்துவானக் காட்டில் தங்கிய உணர்வு...
காலையில் குளிக்க கழிவறை எங்கே என்று கேட்டபோது பள்ளிக்கு பின்புறம் சற்று தொலைவில் குளத்தைக் காட்டி போக சொன்னார்கள்..

பயத்தில் குளிக்காமல் முகம் மட்டும் கழுவிக் கொண்டு தேர்தல் பணி செய்தேன்...இரவு ஒரு மணிக்கு கடைசி பூத் என்பதால் தாமதமாக வந்தனர்.வாக்குப்பெட்டியை ஏற்றிய  லாரியில் நல்லவேளையாக எங்களையும் ஏற்றிக்கொண்டு அரியலூரில் இறக்கிவிட்ட போது மணி இரண்டு...

இரண்டு கிமீ தொலைவில் உள்ள வீட்டிற்கு ,முதன் முறையாக தனியே நாய் ஊளையிடும் சத்தத்திற்கு அஞ்சி ஓடாத குறையாக ஓடி அடைந்தேன்.அப்போதெல்லாம் அலைபேசி இல்லை என்பதால் தகவல் தெரிவிக்க முடியாத நிலை...

அடுத்து வந்த அத்தனை தேர்தல் பணிகளும் இதே நிலை தான்.
இரண்டு வருடங்களுக்கு முன்
 32 வருடங்கள் கழித்து பாராளுமன்ற தேர்தல் பணி இலுப்பூருக்கு அருகே ஒரு கிராமத்தில்... அங்கு ஒரு மோட்டார் ரூம் போல தொங்கிய கதவு தான் கழிப்பறை என்றதும்..சொல்ல முடியாத துயர்..
பெண்கள் தங்கள் மாதவிடாய் துன்பத்திலும் தேர்தல் பணிக்கு வரும் போது இப்படி கழிவறை இருந்தால் என்ன செய்வது?
சில நேரங்களில் ஐந்து கிலோமீட்டர் கூட நடந்து சென்று பணி பார்த்து திரும்பியது உண்டு...

முகநூலில் வேதனையைப் பகிர்ந்ததும் பதறித் துடித்த தலைமைஆசிரியர் பள்ளிக்கு பின்புறம் இருந்த வீட்டின் கழிவறையைப் பயன்படுத்தி கொள்ள அனுமதி வாங்கி தந்தார்.. ஒரு வழியாகப் பணி முடித்து, வாக்குப்பெட்டி எடுக்க பதினோரு மணி ஆயிற்று..

வாக்கு பதிவு முடியும் வரை சில ஊர்களில் உணவு ஏற்பாடு செய்து தருவார்கள்.முடிந்ததும் மாலை டீக்கடைகள் கூட அடைக்கப்பட்ட நிலையில் உணவுக்கு வழி ஏது?
இரவு வீடு வந்தபிறகு தான் உணவு..

கார் இருந்த ஆசிரியர்கள் உடனே கிளம்ப மற்ற பெண் ஆசிரியர்கள் அந்த நள்ளிரவில் பேரூந்தே இல்லாத பேரூந்து நிலையத்தில் காத்து இருந்தார்கள்.ஒரு நாள் முழுவதும் சாப்பிட நேரமின்றி பணியாற்றி தேர்தல் பணிக்கான கடமையைச் செய்யும் ஆசிரியர்களின் நிலைமை இது தான்...

ஒரு கழிப்பறை தண்ணீர் வசதியுடன் கேட்கிறோம் அதைக்கூட தர இயலாத நிலை தான்  சுதந்திர இந்தியாவில்...
இதோ அடுத்த தேர்தல் பணிக்கு தயாராகி விட்டோம்... 
இந்த கோடைகாலத்தில் எந்த பள்ளியில் பணி என்று தெரியாமல் தவிக்கும் நிலை.எனது தோழி தேர்தல் பணி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் அவருக்கு கீழே மூன்று ஆண் ஆசிரியர்கள்...இரவு பாதுகாப்பு இல்லாத பள்ளியில் இவர்களோடு வாக்குப் பெட்டிகளைப் பாதுகாத்து மறுநாள் பணி புரிய வேண்டும்...

எங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை..அதற்கு துணிந்தே தான் பணியை ஏற்கின்றோம்..பல ஆசிரியர்களை தேர்தல் பணியில் இழந்து உள்ளோம்.. இருந்தாலும் இந்த நிலையில் சற்றும் மாற்றமில்லை என்பது  வேதனையான உண்மை....

Wednesday, 10 February 2021

அசுரனதிகாரம்

மென்மலரை தீண்டுவதாய்
தட்டிக்கொடுக்கிறான்
அவனது ஆணைக்கு கட்டுப்பட்டு துயில்வதாய் நடிக்கின்றன சின்னாவும பின்னியும்.
அருகில் அவனது அண்மையை ரசித்து 
கண்சிமிட்டிக் கொள்கின்றன.
அவைகளின் உறக்கத்தை கலைத்து விடாத
அக்கறையுடன் மெதுவாய் அருகில் படுக்கிறான் மலர்மண்மீது உறங்குவதாய்.
சத்தமிடாது அகன்ற என்னைக் 
கடைக்கண்ணால் அதட்டி அழைக்கின்றான்..
கண்களால் ஏனென்று கேட்க..
கையால் உத்தரவிடுகிறான் படுஎன...
அவனெழுந்த இடத்தில்..
முயல்குட்டியின் வாஞ்சையுடன்
குட்டிப்பூனை  உரசுவதாய்..
உறங்க முயல்கிறேன்..
சின்னாவும் பின்னியும் அடக்க முடியாத சிரிப்பையடக்கி
கைதட்டி கண்கொள்ளாத குறையாய்
அவனின் அதிகாரத்திற்கு நடித்து
கண்மூடிக் கிடக்கின்றன.
காலம் சற்று உறைந்து ரசித்து
நகர்கின்றது...

Tuesday, 26 January 2021

திரை விமர்சனம் The last colour

The last colour -Hindi film 2019

மனதை விட்டு நீங்காத படிமமாக மனதில் உறைந்து நிற்கிறது..
சமூகத்தின் மறைக்கப்பட்ட பக்கங்களை யாரும் அறிந்திராத அல்லது அறிய விரும்பாத ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வினை கண் முன் காட்சிப் படுத்துகிறது" தி லாஸ்ட் கலர் ."
எழுதி, இயக்கி ,தயாரித்த விகாஸ் கண்ணாவிற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
ஒளிப்பதிவாளர் subhrasnu kumar dass
நீனா குப்தா நூராக,
Princy suthakaran நூர் சக்ஸேனாவாக
,Aqsa Siddique,சோட்டியாக ,சிண்ட்டுவாக ராஜேஸ்வர் கண்ணா ,ருத்ராணி செட்ரி அனார்கலியாக,ராஜாவாக aslam shaik வாழ்ந்துள்ளனர்.
ஏன் மதத்திற்கு எதிராக, சமூக பண்பாட்டிற்கு எதிராக போராடுகிறீர்கள் என்ற கேள்வியுடன் படம் துவங்குகிறது.
எந்த மதமும் ஒருவரை மோசமாக நடத்த அனுமதிக்காது.யாருக்கு எதிராகவும் போராடவில்லை.உரிமைக்காக போராடுகிறேன் என்று கூறும் நூர் சக்ஸேனா திருநங்கைகளுக்கான ,தெருவோர குழந்தைகளுக்காக போராடி வெற்றி பெற்ற வழக்கறிஞர்.
தற்போது விதவைகளும் ஹோலி பண்டிகை கொண்டாட உரிமை கேட்டு போராடி வெற்றி பெறுகிறார்.
இதனால் இந்தியாவில் மாற்றம் வருமா என்ற கேள்விக்கு இது துவக்கம் என்ற பதில் மாற்றத்திற்கு விதையாகிறது.
விதவை நூராக நடிக்கும் நீனா குப்தா அவரது மென்மையான உணர்வுகளை எளிதாக நம்மீது கடத்தி விடுகிறார் இயல்பான நடிப்பால்.யாரோடும் பேசாமல் மந்திரங்களைக் கூறிக்கொண்டு உணர்வற்ற சடப்பொருளாக வாழும்  நூரை, சோட்டி தனது அன்பால் அவரது இறுகிய மனதில் வேர் விட்டு பாசத்தால் கட்டிப் போடுகிறாள்.
படிக்கத்தெரியாத நூர் தாகூரின் கீதாஞ்சலி புத்தகத்தோடே வாழ்கிறாள்.தாத்தா படிக்க வைக்க ஆசைப்பட்டும் குடும்பத்தினர் சம்மதிக்காத காரணத்தால் படிக்க முடியாத நூர் படிக்க கற்றுத்தர ஆசிரமத்தலைவியிடம் கேட்கும் காட்சி பெண்கல்விக்கான வித்து.
ஏன் வண்ணங்களைப் பிடிக்காது என்றவளின் கேள்வி சமூகத்தின் முகத்தில் அறையப்படுகிறது.

நூருக்கு பிடித்த பிங்க் வண்ணம் பூசி ஹோலி கொண்டாட நினைக்கும் சோட்டியின்  வாழ்க்கை படிக்க காசு சேர்ப்பதற்காக கழைக்கூத்தாடியாக கயிற்றிலும் வாழ்விலும் ஊசலாடுகிறது.
நண்பனாக சோட்டியைக் காக்கும் சிண்ட்டு தவிக்கும் தவிப்பு நம்மையும் தவிக்க வைக்கிறது.
தெருவோர குழந்தைகளின் வலியை ,திருநங்கைகளின் துயரங்களை நாம் அறியாத சமூகத்தை அறிய வைக்கிறது இப்படம்.
பெண்குழந்தை பிறக்காததற்காக காவலராக வரும் ராஜாவின் மனைவி படும் துயரம்,கல்விக்காக பெண்குழந்தைகள் ஏங்கும் நிலை,கணவனை இழந்த பெண்களின் நிலை ,திருநங்கைகளின் நிலை, தெருவோரக் குழந்தைகள் நிலை என ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்வியலைக்  காட்சிப்படுத்துகிறது.
இறுதியாக வழக்கறிஞராகி அம்மாவாக நினைத்த நூரிடம் கொடுத்த  உங்கள் மீது நிச்சயமாக ஹோலியன்று வண்ணம் பூசுவேன் என்ற வாக்குறுதியை ,சட்டத்தின் துணைகொண்டு ஆசிரமத்தில் வாழும் அத்தனை விதவைகளுடன் வண்ணங்களை இறைத்து பூசி கொண்டாடி நிறைவேற்றுகிறாள் பெயரே இல்லாது வாழ்ந்த சோட்டி .
வயதான ஆண்களுக்கு சிறுமிகளை திருமணம் செய்து அவர்கள் இறந்த பிறகு விதவையாக்கி அவர்களை தீண்டத்தகாதவர்களாக ஒதுக்குவது எந்த மதமாக இருந்தாலும் ஏற்க முடியாத ஒன்று...
Water என்கிற படத்தை சமீபத்தில் பார்த்து முடித்த நிலையில் The last colour என்ற இந்தி படம் பெண்கள் சட்டங்களை வெறும் பேப்பரில் மட்டுமே படிக்காமல் போராடி வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தை விதைப்பதாக உள்ளது.

இன்னமும் தமிழ்ப்படங்கள் நான்கு பாடல்கள்,நான்கு சண்டைகள் என்று ஹீரோயிசத்தை ஒழித்து சமூகத்திற்கான பாதையில் எப்போது பயணிக்கப்போகிறது என்பதை காலம் தான் உணர்த்த வேண்டும்.

மு.கீதா