புதுக்கோட்டை மாவட்ட த.மு.எ.க.ச கூட்டம் நடத்திய புகழஞ்சலி
கவிஞர் ஞானக்கூத்தனுக்கு கவிதாஞ்சலி
நாள்:13.9.16
இடம்:அறிவியல் இயக்கக்கூடம் புதுகை.
சொல்லில் அடங்காது ஓங்கி நிற்கின்ற
சர்ரியலிசக் கவியே
”கடதபற”வல்லினமே
”சூரியனுக்கு பின்பக்கம் ”
காணச்சென்றாயோ
”
அன்று வேறு கிழமை” என்றாய்
இன்று கிழமைகளற்று மறைந்தாய்.
”கடற்கரையில் சிலமரங்களை”
”
பென்சில் படங்களாய்”த் தந்தாய்-அவை
”
ஞானக்கூத்தன் கவிதைகளாய் ”மலர்ந்தன .
ஒட்டக்கூத்தன் வழி வந்தவனோ..
ரெங்கநாதன் ஞானக்கூத்தனானாய்.
மரபில் தாலாட்டி வளர்ந்தவனே
மண்ணில் புதுக்கவிதையாய்த் தழைந்தவனே
மரபுக்கும் புதுக்கவிதைக்கும் பாலமாய் நீ...
உனக்கென தனிமொழி,தனிநடை
தந்து தலைநிமிர்ந்தவனே..
அங்கதமும்,பகடியும் உன்னில் சரணடைந்தனவோ
நீயின்றி அலைகின்றன காற்றில்...
உன்கவிதைகள் எனக்களித்த காட்சிகளையா
நீ யாதறிந்து கவிதைகள் யாத்தனை..
அழகாகச் சொன்னாய்
அறியாமையின் கதவுகள் இரண்டு
ஒன்று அறியாமை
மற்றொன்று அதனை அறியாமை
உனையறியா கவி உலகு
வாழ்வதும் அறியாமையாலா...
என்ன பொருளில் எழுதினாயோ
எனக்கென்ன பொருள் தந்ததுவோ
வேறு பொருளும் உண்டோ...
விரிந்து விஸ்வரூபமாகும்
அச்சம் தரும் கவிதைகள் உனது.
”மருதானி பூசிய சிறுவிரல் போல் சிவந்திருக்கும்
பழங்களுக்கு கூச்சலிடும் பறவைகள் சூழும் ஆலின் கீழ்”
என கதை கூறியவனே
பிரிந்த கதையைத் தேடிச்சென்றாயோ
”மெல்ல பிரிகிறது ஜூலையின் பிற்பகல்” என்றாய்
நீயும் ஜூலையுடன் கலந்தாயோ
சொல்வாயோ காரணம்..
உன் அகவை வரையிலாவது வாழ்ந்திருக்கலாம்
முத்துக்குமாரனும்,திருவுடையானும்
ஆகச்சிறந்த கவிகள் கண்முன் மறைந்தீரே
தமிழ் இருக்கும் வரை
உங்கள் கவிதைகளால் நீவிர் வாழ்வீர்
”என் உளம் நிற்றி நீவிர்”