World Tamil Blog Aggregator Thendral: காக்காமுட்டை

Sunday 14 June 2015

காக்காமுட்டை

தமிழ்சினிமாவின் புதிய பாதையாய் -காக்காமுட்டை திரைப்படம்
-------------------------------------------------------------------------------------------------------------------

தனக்கான இடத்தை தக்க வைத்துக்கொள்ளும் பாதையை நோக்கி தமிழ் சினிமா நகரத்துவங்கியுள்ளதை உணர முடிகின்றது.

நாலு பாட்டு ஆறு சண்டை,ஒரு கவர்ச்சி நடனம்..என்ற சூத்திரத்தைப் புறந்தள்ளி யதார்த்தை காட்டுபவையாக,சமூக அக்கறையுள்ளவையாக பரிணமிக்கத் துவங்கியுள்ளது..தமிழ்சினிமா.

 சமீபத்திய படங்களான 36 வயதினிலே,புறம்போக்கு,காக்காமுட்டை என புதிய களங்களைக்கொண்ட தமிழ்சினிமா,  தொலைக்காட்சியை விட்டு மக்களை திரையரங்கிற்கு அழைத்து வரத்துவங்கியுள்ளன...என்பதை அரங்கு நிறைந்த கூட்டமே சான்றாகின்றது.

மக்கள் விருப்பம் எனக்கூறி பணத்தையேகுறிக்கோளாய் எண்ணி வித விதமாய் யோசித்து மன வக்ரங்களை தூண்டி விடும் சினிமாக்களுக்கு மத்தியில் நாம் பார்க்க மறந்த அல்லது மறுத்த மக்களின் வாழ்க்கையை காக்காமுட்டையில் காட்டிய இயக்குனருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

உலகமயமாக்கல் என்ற வணிகச்சூழ்நிலை, வறுமையால் பாதிக்கப்பட்டோரை எப்படி தாக்குகின்றது என்பதை போகிற போக்கில் சொல்வதாய் அமைந்துள்ளது இப்படம்.

குப்பத்தை கண்முன் நிறுத்தி அவர்களின் வாழ்வை உணர வைக்கின்ற முயற்சியில் இயக்குனர் வெற்றி பெறுகின்றார்.

எல்லாமே விளம்பரமாகிவிட்ட வாழ்க்கையில் ஒருவரையொருவர் எப்படி ஏமாற்றப்படுகின்றார்கள் என்பதை அழகாக காட்டியுள்ளார்.

அரிசி இல்லாத ரேசனில் டிவி எளிதாக கிடைப்பது என்பது சாட்டையடி.
இப்படி இவர்கள் அறியாமையோடு இருப்பதையே விரும்புகின்றது...மேல்தட்டு வர்க்கம்.

முட்டைவாங்கமுடியாத போது காக்காமுட்டை குடித்தாலென்ன என்ற கேள்வி யோசிக்கவைக்கின்றது.இருக்கின்ற மூன்று முட்டைகளில் காக்காவிற்கு ஒரு முட்டை என்பது அவர்களின் உயிர்களை நேசிக்கும் பண்பைக்காட்டுவதாய்...உள்ளது.சுயநலத்திற்காக நாம் மரங்களை வெட்டும் போது அங்கு வாழும் பறவைகளின் நிலையை குழந்தைகள் மூலம் யோசிக்க வைக்கின்றார்.

அந்த சிறுவர்கள் நடிக்கவில்லை யதர்த்தமாய் வாழ்ந்துள்ளார்கள் படத்தில்......அருமையான நடிப்பு...

அப்பா சிறையில் இருக்க குடும்ப வருமானத்திற்காக குழந்தைகள் பணி புரிவது...தொடர்கதையான ஒன்றாகின்றது...

பணக்காரச்சிறுவனின் நாயின் விலை ரூ 25000 என்பதை அறிந்து சட்டை வாங்க தனது நாட்டு நாய்க்கு விலை ரூ25000 எனக்கூறுவது அவர்களின் அறியாமையைக்காட்டுவதுடன்.நம்நாட்டில் உள்ள  எதற்கும் மதிப்பில்லை என்பதைக்கூறாமல் கூறுகின்றது.நம் தாய்மொழியையெ மதிக்காத மக்களுக்கு இது புரிந்தால் சரி.

ஏழ்மையிலும் அவர்களின் தன்னம்பிக்கை,நேர்மை,உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் பாராட்டுதற்குரியதாய்...

அப்பா வேண்டாம் பீட்சா வேணும் என்பது இக்காலக்குழந்தைகள் உறவுகளை புறந்தள்ளுவது...வெளிநாட்டு மோகம் அதிகரிக்க அதிகரிக்க நம்நாட்டில் முதியோர் இல்லங்கள் அதிகமாவதைத் தடுக்க இயலாது...என்பதை சுட்டுவதாய்...

ஏழைக்குழந்தைகளின் மனநிலையை அப்பட்டமாகக்காட்டி அவர்கள் நகரத்தோடு ஒட்டி வாழ முடியாமல் தவிக்கும் நிலையை படமாக்கியிருப்பது மனதில் வலியை ஏற்படுத்துகின்றது.

சிறுவர்களின் அவமானம் தொலைக்காட்சிகளுக்கு அவலாகவும்.அதைத்தடுக்க நிறுவன உரிமையாளர் எடுக்கும் முயற்சிகள், தனது வியாபாரத்திற்கு எந்த பங்கமும் வரக்கூடாதென்பதில் உள்ள அக்கறை...

இறுதியில் பீட்சாவை விட பாட்டிசுட்ட தோசையே பிடித்துள்ளதாக முடித்திருப்பது...இனியாவது நாம் ஆரோக்கியமான நம் நாட்டுப்பொருள்களையே விரும்ப வேண்டும் என்பதாய் அமைந்துள்ளது.காக்கா முட்டை திரைப்படம்...

நடிகர் தனுஷ் தான் நடித்த படங்களை விட இந்தப்படத்தை தயாரிக்க துணிந்ததன் மூலம் வெற்றிபெறுகின்றார்.வாழ்த்துகள் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் குழுவினருக்கும்.


1 comment :

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...