World Tamil Blog Aggregator Thendral

Thursday, 3 April 2014

Wednesday, 2 April 2014

போர்

பருகும் நீருக்காய்
போர்
கடல் சாட்சியாய்

Monday, 31 March 2014

தெங்கின் கொடையாய்



சிதறிக்கிடக்கும் குரும்புகள்
தொப்பென்று விழும் நீர்க்குடுவை
சிறு பூச்சிகளின் உறைவிடம்
அணிலின் துள்ளோட்டம்
குருவிகளின் கீச்சொலிகள்
கூடுகளின் தளம்
கீற்றுகளில் ஒளிந்து விளையாடும்
கதிரவனும் நிலவும்
பாலையிலும் தண்மை
யாவும்

கலைந்து போன கனவுகளாயின

மதில் காக்க
தலையாலே தான் பருகிய
நீர் தந்த தெங்கு
தலைகொடுத்து நிற்கிறது
கண்களை குளமாக்கி.....!

Sunday, 30 March 2014

தகனம்

வெட்டியாளின் வலியில்
மனம்
தகனமாய்ச் சருகுகள்

நட்பு

நல்ல நட்பில் மேலும் சில பூக்களென
..................................................................

 ஒரு பொன் மாலைப்பொழுதில் தஞ்சை புத்தகக்கண்காட்சியை காணும் வாய்ப்பு தற்செயலாக நேர்ந்தது.தஞ்சை சென்றால் கரந்தை ஜெயக்குமார் சகோதரரை பார்த்து வாங்கன்னு முத்து நிலவன் அய்யா கூறியிருந்தார்.நானும் ஜெயக்குமார் சகோதரரிடம் பேசிய பொழுது அவசியம் வருகின்றேன் என்றார்.

முதன்மை கல்வி அலுவலரால் வழங்கப்பட்ட கணினி பயிற்சியில் அவர் எங்களுக்கு வலைத்தளத்தில் என்ன எழுதுவது?என பயிற்சி அளித்தார்.ஆசிரியர் என்றாலே ஒரு மரியாதையும் அச்சமும் வருமல்லவா? அவரைப் பார்த்ததும் அப்படித்தான் தோன்றியது .மிக எளிமையாக என்னை காண அவரின் துணைவியாரையும் அழைத்து வந்தது மிகவும் மகிழ்வாய் உணர்ந்தேன்..

புன்னகை பூத்த முகத்துடன் தஞ்சை மண்ணுக்கே உரிய பாசத்துடன் அவரின் துணைவியாரைப் பார்த்ததும் வேற்று ஆளாகத்தோன்றவில்லை நீண்ட நாள் பழகிய உணர்வில் பழகினேன்.நல்ல உறவுகள் வாழ்வில் கிடைப்பது அரிது.வலைத்தளம் எனக்கு வழங்கிய கொடையில் இவர்களும் உறவுகளாக ....

   கீழே  அவரின் வலைத்தளத்தில் இருந்து ..
.நன்றி சகோதரருக்கும் ,தோழிக்கும்..

” நல்லாரைக் காண்பதுவும் நன்றே

------------------------------------------------------------
 நல்லாரைக் காண்பதுவும் நன்றே, நலம்மிக்க
நல்லார்சொல் கேட்பது வும்நன்றே – நல்லார்
 குணங்கள் உரைப்பதுவும் நன்றே, அவரோடு
 இணங்கி இருப்பதுவும் நன்று

      நண்பர்களே, ஔவையின் அமுத வரிகளில், எளிமையும், இனிமையும், பொருள் வளமையும் நிறைந்த, இப்பாடலைப் பலமுறைப் படித்துப் படித்து, நீங்கள் நிச்சயம் பரவசப்பட்டிருப்பீர்கள். இப்பாடலின் பொருளினை நேரிடையாய் உணர்ந்து, அனுபவிக்கும் ஓர் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.
      கடந்த 14.2.14 முதல் 23.2.14 வரை பத்து நாட்கள், தஞ்சையில் ரோட்டரி புத்தகக் கண்காட்சி நடைபெற்றதைத் தாங்கள் நன்கறிவீர்கள். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு தமிழறிஞரின் சொற்பொழிவு இனிதாய் அரங்கேறியது.

 நண்பர்களே, புத்தகத் திருவிழாவின்
நிறைவு நாளான, 23.2.2014 ஞாயிற்றுக் கிழமை, காலை அலைபேசி அழைத்தது. மறு முனையில் தென்றல் தவழ்ந்து வந்தது.

 தேங்கிய குட்டையல்ல
துள்ளும் அருவி
பாய்ந்தோடும் ஆறு
அள்ளிச் செல்வேன் அனைத்தையும்....

 தென்றலாய் தொடங்கி, தேவைபெனில் பெரும் சுழற் காற்றாய் மையம் கொள்ளவும் தயார், என, இலக்கிய வானில், தனக்கென ஒரு இடத்தினைப் பிடித்தவரும், உயர் சிந்தனைகளும், சமூகக் கவலையும், துயரம் துடைக்கும் தன்னம்பிக்கையும் கொண்ட கவிஞர், வேலு நாச்சியாரின் விழுது,


கவிஞர் கீதா அவர்கள்
தென்றல்

http://velunatchiyar.blogspot.com/

பேசினார்



     நான் தஞ்சைக்கு வந்திருக்கிறேன். மதியம் புத்தகக் கண்காட்சிக்கு வருகிறேன். உங்களைச் சந்திக்க வேண்டுமே என்றார்.

இதைவிட வேறு என்ன வேலை. பிற்பகல் எனது மனைவியுடன் சென்று சந்தித்தேன். நான் பேசியது குறைவுதான். அவர்கள் இருவரும் நெடுநாள் பழகிய தோழிகள் போல் பேசி மகிழ்ந்தனர்.

சகோதரியார் கவிஞர் மு.கீதா அவர்கள்,

விழி தூவிய விதைகள்

என்னும், தனது கவிதை நூலினை வழங்கினார்.

 டீச்சர்
  எனக்குப் பிறந்த நாள் என
 மழலை கொடுத்த இனிப்பை
மாணவிகளுக்கு ஊட்ட
பிறந்தனர்  எனக்கு
நாற்பது குழந்தைகள்

----

”ஏன் படிக்கல?
கலங்கிய சிறுமியை
ஏன்டாம்மா? என்னாச்சு
சாப்டியா?
தலைவருடி இதமான வார்த்தைகளால்
பதமாய் மனம் வருட
விழி மேகம் மடை திறக்க
சாப்டல டீச்சர் .... பசிக்குது...”

   கவிஞராய் மட்டுமல்ல, நல்லாசிரியராய், மழலைகளின் உள்ளத்தில், விதைகளைத் தூவி, நல் விருட்சங்களாய் வார்த்தெடுக்கும், வளர்த்தெடுக்கும் கவிஞர் மு.கீதா அவர்களின

   கவிஞராய் மட்டுமல்ல, நல்லாசிரியராய், மழலைகளின் உள்ளத்தில், விதைகளைத் தூவி, நல் விருட்சங்களாய் வார்த்தெடுக்கும், வளர்த்தெடுக்கும் கவிஞர் மு.கீதா அவர்களின், எண்ணங்கள், பெண்ணியச் சிந்தனைகள் எல்லாம், எழுத்துக்கள்ய், வார்த்தைகளாய், வரிகளாய், கவிதை மொழிகளாய், பக்கத்துக்குப் பக்கம் ததும்பி வழிகின்றன.

   நண்பர்களே, நீங்களே கூறுங்களேன், வலையுலக உறவுகளை, நல்லாரைச் சந்தித்த இவ்வாரம், நட்பு வாரம்தானே.

ஒருநாள் பழகினும் பெரியோர் கேண்மை

இருநிலம் பிளக்க வேர்வீழ்க் கும்மே

                          - வெற்றி வேற்கை





30.03.2014 இன்று என் வாழ்வில் மறக்க முடியாத நாள்.தூப்புக்காரி எழுதிய மலர்வதியிடம் நட்பான நாள்.என் வாழ்வில் மேலும் ஒரு நட்பு சமூக அக்கறையே எங்களை இணைத்தது எனலாம்.
தூப்புக்காரி படித்தவுடனே மலர்வதியிடம் பேச வேண்டுமென்ற ஆவல் துளிர்விட்டது.அது இன்றே நிறைவேறியது.

”ஒருவரிடம் இரந்து அன்பை பெறுவது கேவலம் என்றும்,ஒரு பெண் எந்த அளவில் வலியில் சாகின்றாளோ அந்த அளவு விழித்தெழுவாள் ,பெண்களின் சமூகம் விழிப்புணர்வு பெறுவதே வாழ்வின் நோக்கமாக கூறுகின்றார் ”
மலர்வதி.
அவரின் முயற்சி வெற்றியடைய மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

Saturday, 29 March 2014

விண்மீன்

கங்குலில்
மொட்டை மாடியில்
மலரும் கனவுகளோடு
துயில் கொள்ளும் வேலையில்
கண்சிமிட்டி வம்பிழுத்தவர்களை
வலைவீசி பிடிக்க இயலாது
வாடிய என்னை

தேற்றும் விதமாய்
அத்துணை பேரையும்
புவியீர்ப்பு விசையென
கிளைதனில் ஈர்த்து
என் காலடியில்
காலையில் சமர்பித்தது
வேம்பு
பூக்களாய்...!

Friday, 28 March 2014

தமிழரின் சிறப்புகள்

நிலம் பகுத்து
முதற்பொருளும்
கருப்பொருளும்
அமைத்து
நாகரீகம் கற்பித்தவன்
நற்றமிழன்....!


தமிழனின் மொழி...தமிழ்


பாடல்....தமிழ்த்தாய் வாழ்த்து



தமிழ்நாட்டுச்சின்னம்

 விலங்கு....வரையாடு

 பறவை.......................மரகதப்புறா
மரம்.....பனை













 கருவி.......பறை..            
நடனம்....பரதம்
                                            
மலர்...செங்காந்தள்
                                           
பயிர்.....நெல்
                                                 
காய்......கத்திரிக்காய்
                                                     




 கனி.....அத்திப்பழம்
                                               


விளையாட்டு.....கபடி


தமிழனுக்கென்று
தமிழ்நாட்டுக்கென்று
தனித்தன்மை உண்டென
அறியாது வாழ்கிறது
தமிழினம்......!.

Thursday, 27 March 2014

புங்கைபூக்கள்

காலையில் 
வாசலில் பூப்படுக்கை
புங்கைமரத்தின் கைவண்ணமாய்..

அழகில் மயங்கி கூட்ட
தயங்கி அள்ளிக்கொட்டி
திரும்பும்முன்

அடுக்கிவைத்த பொருட்களை
கலைத்து சிரிக்கும் குழந்தையென
மீண்டும் பொரியரிசியாய்...

புங்கைப்பூக்கள்...

தேர்தல்
------------
நல்லவர்களை
தேர்.......

தீயவர்களை...
தல்..{ள்}..

Wednesday, 26 March 2014

எது தேர்வு?

இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு
------------------------------------------------------------

தேர்வறை மாணவர்களின் எண்ணங்களை வெளிக்கொணரும் பரவசத்தில் இருந்தது.

முள்புதரில் வீழ்ந்த விதையொன்று முளைத்தெழுவதாய் வறுமையின்  பிடியில் சிக்கி,நாளை நகர்த்த பாடுபடும் ,குடும்பச் சிக்கல்களை கண்முன் கண்டு அதற்குள்ளே உழன்று வாழும் முதல்தலைமுறை கல்வி பயிலும் அழுக்கடைந்த உடையில் புரியாத உலகில் அடியெடுத்து வைக்கும் அரசுப்பள்ளி மாணவர்கள் ஒருபுறமும்,

வளமான நிலத்தில் விதைக்கப்பட்ட விதை உலகு காணும் மகிழ்வில் முளைத்தெழுவது போன்று வசதியான ,வறுமையறியாத,கல்வி ஒன்றே நோக்கமாய் ,வாழ்வின் சிக்கல்களை அறியாத,தூய்மையின் முகங்களாய், இரண்டு அல்லது மூன்றாம் தலைமுறை கல்வி பயிலும் தனியார் பள்ளி மாணவர்கள் மறுபுறமும் அந்த அறையில் நிறைந்திருந்தனர்...தேர்வெழுத வேண்டி...!

அரசுப்பள்ளி மாணவர்களில்....
ஒரு மாணவன் விடைத்தாளை பெற்றதும் குனிந்த தலைநிமிராமல் எழுதிக்கொண்டிருக்க, மற்றொருவனோ திருவிழா கூட்டத்தில் தொலைந்தவனாய் திருதிருவென...கேள்வி மட்டுமே பார்த்து எழுத அத்தனை சிரமப்பட்டுக் கொண்டிருந்தான்.நண்பன் படத்தில் வருவது போல எழுத்துக்கள் அவனைப் படாத பாடு படுத்தியக் காட்சியை காணமுடியவில்லை.அவனை எழுத பயிற்றுவிக்க அந்த ஆசிரியர்களின் சிரமங்கள் கண்முன்னே விரிய,அதை விட அவனுக்கு பிடிக்காத கல்வியைப் பயில அவன் என்ன பாடுபட்டிருப்பான் என்ற நினைவுகளோடு நான்.....

தனியார் பள்ளி மாணவர்கள் மூளைக்குள் நிரப்பியதை அங்குமிங்கும் திரும்பாமல் கொட்டிக்கொண்டிருந்தனர் விடைத்தாளில்.

வர்க்க போராட்டத்தின் சாட்சியாய் தேர்வறை காட்சியளித்தது.

எனக்குப் புரியவில்லை எந்த அரசுப்பள்ளி மாணவர்களும் தோல்விக்காக மரணத்தை நாடியதில்லை .வாழ்க்கை அவர்களுக்கு தோல்வியை ஏற்க,போராட கற்று கொடுத்துள்ளது.அவர்கள் வாழ்வில் போராடும் துணிவைக் கற்றிருக்கின்றனர்.மேலும் பெற்றோர்களும் மதிப்பெண்களை விட குழந்தையைப் பெரிதாகவே மதிக்கின்றனர்.

கல்வியைத் தவிர வேறொன்றரியாத மாணவர்களே தோல்வியை எதிர்கொள்ள முடியாமல் தற்கொலையை நாடுகின்றனர்...

யார் மீது தவறு?

குடும்பம் வளமுடன் இருக்க இருவரும் சம்பாதிக்க ஓடி குழந்தைகள் நினைத்தை எல்லாம் வாங்கித்தந்து,தோல்வியைக் கற்றுத்தராத பெற்றோர்களா?

குழந்தமையை நினைத்துப்பாராத கல்விநிலையங்களா?
மதிப்பெண் நோக்கி ஓடும் சமூகமா?

Monday, 24 March 2014

தூப்புக்காரி-மலர்வதி

2012-ஆம் ஆண்டு இளம் படைப்பாளருக்குரிய சாகித்திய அகாதமியின் இளம் எழுத்தாளர் விருது பெற்ற நாவல்.


பூமி மடியைச் சுத்தப்படுத்தும் உயர்ந்த மனிதர்களுக்காக சமர்ப்பிக்க பட்டிருக்கும் நூல்.

       அறிந்த ஆனால் முழுமையாக அறியாத ஒரு சமூகம் படும் அவலத்தை அவர்களின் மொழி வாயிலாக அறியவைக்கும் நூலாக “தூப்புக்காரி

“அசுத்தப்படுத்துகிறவனுக்கு அழுக்கின் கொடூரம் தெரியாது.ஆனால் அதை அள்ளுகிறவனை மட்டும் சாதியில் குறைந்தவன் என தள்ளி வைக்க முடிகின்றது.ஈக்களிலும் ,புழுக்களிலும்,நாற்றத்திலும் உழைத்து வாழ்வு ஆதாரம் தேடுபவர்களுடன் ஒரு நிமிடமாவது சென்று அமரும் உயிர் நேய எண்ணம் பிறக்க வேண்டுமென்ற எண்ணத்தில் எழுதப்பட்ட நூல்”என ஆசிரியர் மலர்வதி கூறுகிறார்.

முற்றிலும் புதிய உலகை,சிறு வயதில் பார்த்து அருவருத்து ஒதுக்கப்பட்ட மனிதர்களின் வாழ்வியலை...காட்சிப்படுத்துகிறது..சாக்கடையில் வாழ்ந்தாலும் சந்தனமாய் மணக்கின்றது அவர்களிடையே மனித நேயம்.

ஜெயமோகனின்” ஏழாம் உலகை” தொடர்ந்து படிக்க இயலாமல் கண்ணீர் கண்களை மறைக்க அமர்ந்திருந்த நிலையை மீண்டும் இந்நாவல் தந்துள்ளது.

வேற்று கிரகத்தில் வாழ்வதற்கான வழி தேடும் உலகில், இப்படி ஒரு அவல வாழ்க்கை வாழும் மக்களை கண்டு கொள்ளாமல் வாழ எப்படி முடிகின்றது .

எளிய மக்களின் யதார்த்த வாழ்வை கனகம் ,பூவரசி, மாரி மூலமாகவும்,அவர்களை விட மேல் நிலையில் உள்ளவர்களின் சுயநலப்போக்கையும்,சாதீய வன்முறையையும் தூப்புக்காரி படம் பிடித்துக்காட்டுக்கின்றாள்.

உண்மை வாழ்வை படிக்க முடியாமல் சாப்பிட்டதெல்லாம் வாந்தியாய் வெளியே வரத்துடித்தது சில இடங்களில்.ஆனால் இதையே வாழ்வாகக் கொண்ட மக்களின் நிலையை உணர்கையில் மனம் வலிப்பதை தடுக்க முடியவில்லை.
மனித நேயம் உள்ளவர்கள் படிக்க வேண்டிய நூல் “தூப்புக்காரி”
முடிந்தால் முழுவதும் படியுங்கள்....




 

Sunday, 23 March 2014

தேர்வறை

தேர்வறையின் இறுக்கம்
கலைத்து
பூக்கள் பூத்தன...
வண்ணத்துப்பூச்சியின் வரவு

Wednesday, 19 March 2014

மனு

காலில் பிறந்தோன்
உந்தியில் உதித்தோனுக்கும்

உந்தியில் பிறந்தோன்
மார்பில் பிறந்தோனுக்கும்

தீட்டெனெ தீயிட்டுக் கொள்கிறார்கள்

மூடர்களே மூவருமே தீட்டு
நெற்றியில் பிறந்தோனுக்கு

இந்து தர்மத்தின்
உயிர்நாடி இதுவே.... ?!

சாதி வேரை
அடியோடு தகர்க்க
எரிக்கும் எரிமலையாய்
வெண் தாடி கிளம்ப
தணலின் வெப்பம்
தாக்காமலிருக்க

அவரை
கடவுளின் எதிரியாய்
சித்தரித்தே

குளிர்காயும் ஓரினம்
உண்மையறியா தமிழினம்....

Tuesday, 18 March 2014

விண்

விண்தொடும்
விதையின் முயற்சிக்கு
கைகொடுக்கும்
விண்

சுட்டி காற்று...!

காற்று வேண்டி
சன்னல் திறக்க..

மோதும் காற்றோ
கதவைச் சாத்த..
 மூடி,திறந்த
விளையாட்டில் அழுத்தி திறந்து
வென்ற மகிழ்வில் நகர்ந்த
என்னை நகர விட்டு
விருட்டென சாத்தி
வெறுப்பேற்றியது....

சலிப்பாய் மவுனிக்க

ஒளிந்து தலை நீட்டும்
குழந்தையாய்
மெல்ல கதவு திறந்து
எட்டிப் பார்த்தது
சுட்டி காற்று...!

Monday, 17 March 2014