'புர்ஃகா ' திரைப்பட விமர்சனம்.
இயக்குனர் சர்ஜூன் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்துள்ள 'புர்கா' திரைப்படம் வித்தியாசமான முறையில் எடுக்கப்பட்டுள்ளது.
இதில் இருவர் மட்டுமே நடித்துள்ளனர்.
திருமணமாகி ஏழு நாட்களில் கணவனின் ஸ்பரிசம் கூட படாத நிலையில் விபத்தில் அவனை இழந்து 'இக்தா' என்னும் காத்திருக்கும் காலத்தை அனுபவிக்கும் பெண்ணாக 'நஜீமா'வாக மிர்னா வாழ்ந்துள்ளார்.அவரது கண்கள் பேசும் மொழி அற்புதம்.
கலவரத்தில் அடிபட்டு இவரது வீட்டில் அடைக்கலமாகும் 'சூர்யா'வாக கலையரசன்.மிக இயல்பாக நடித்துள்ளார்.பெண்களுக்கான குரலை அவர் எழுப்பும் விதம் சிறப்பு.
இருவரும் ஒரு நாள் முழுக்க தனியாக இருக்கும் சூழல்.
இருவருக்கும் நடக்கும் உரையாடல் மூலம் பெண், தனக்குள்ளேயே தன் நிலை குறித்தான கேள்வியைக் கேட்பதன் மூலம், இந்தச் சமூகத்தின் மீது எழுப்புகின்ற விமர்சனங்கள் அற்புதமான காட்சிகளாக எடுக்கப்பட்டுள்ளது.
மிர்னாவுடன் சூரியனின் ஒளிக்கதிரும் நடித்துள்ளது என்று கூறும் அளவிற்கு ஒளியின் இசைவு சிறப்பு.
பெண்ணின் வலியை,தன்மையைக் காட்சிகளால் உணர்த்தும் இயக்கம் ஆசம்.
.
தனது வாழ்வை அவளே கூறுவதாக துவங்கும் படம்,திருமணத்தின் போது நிறைய மனிதர்களைச்சந்தித்த மகிழ்ச்சி, தற்போது இந்தக் கொடுமையான காத்திருப்புக் காலத்தில் ஒரு
மனிதரையாவது சந்திக்க மாட்டோமா என்ற தவிப்பு, மனித வலியின் தனிமை வேதனையின் உச்சம்.
இவளை புரிந்து கொண்டு நடக்கும் கணவனை, நேசிக்கத் துவங்கும் காலத்தில் அவனை இழந்துவிட்ட கொடுமை.
தனிமையின் துயரில் சூர்யாவின் வரவு இதமான ஒன்றாக அதே நேரத்தில் தான் செய்வது சரி என்ற உறுதியோடு,அடிபட்ட மனிதனை காப்பாற்றுவது தனது கடமை என்ற அறம்.
தெரியாத ஆணை கூட எப்படி தங்க சொல்றீங்க என்ற கேள்விக்கு போட்ட தையலை பிரிக்க எவ்வளவு நேரம் ஆகும் என்ற தன்னம்பிக்கை .
இப்படம் எழுப்பும் கேள்விகள்
*ஏன் இக்காலத்தில் ஆண்களும் பார்க்கக்கூடாது.?.
*இந்த உலகம் ஒரு பொண்ண கட்டாயமாக பூட்டி வச்சி அழகு பார்ப்பது சரியா?
*பெண்கள் உங்களுக்கு என்ன தேவைனு வெளில சொல்லமாட்டீங்களா?
* இந்த மதம் சாதி எல்லாம் ஏன் எல்லோரையும் கஷ்டப்படுத்தனும்?
என் அடக்குமுறைகளை எதிர்த்து கேள்விக்கணைகளைத் தொடுக்கிறது.
இருவருக்கும் இடையே மெல்ல அரும்பும் நேசம் நம்மணத்தில் நறுமணத்தை வீசி மயிலிறகால் தடவுகிறது.
இருவரை மட்டுமே வைத்து திரைப்படத்தை வெற்றிகரமாக இயக்கிய இயக்குனருக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
இது போன்ற பல படங்கள் உருவாகி மனித வாழ்வியலை அதன் சிக்கல்களை எடுத்துக்கூற துணிய வேண்டும்...
மு.கீதா