World Tamil Blog Aggregator Thendral: வீட்டிற்கு வந்த உறவுகள்

Thursday, 11 June 2020

வீட்டிற்கு வந்த உறவுகள்

இன்று வீட்டிற்கு வந்த உறவுகள்...

           வீடு விலைக்கு வாங்க பார்த்த போது ஒரே மாதிரி இரண்டு வீடுகள் இருந்தன.... சற்று உள்ளே இருந்த வீடு தான் வேண்டும் என்று வாங்கினோம்.
அதில் கொஞ்சம் தோட்டம் வைக்க இடமிருந்ததே காரணம்.சிறு வயதில் வாழ்ந்த அரியலூர் வீட்டில்....ரோஜா , கனகாம்பரம், டிசம்பர் பூ,மல்லிகை. என பூச்செடிகள் வளர்த்ததுண்டு.
ஆயிரக்கணக்கில் பூக்கும் டிசம்பர் பூக்களை எனது ஆத்தா (அப்பாவின் அம்மா) அருகில் உள்ள வீடுகளுக்கு கொடுப்பது வழக்கம்... என்னையும் தம்பியையும் பூக்கொய்து தர கேட்பார்கள்.100 பூ  கொய்தால் எங்களுக்கு 5பைசா.ஒப்பந்தப்படி காலை எழுந்தவுடன் பறித்து கொடுத்து கிளம்புவோம்.
தோட்டத்தில் நேர் எதிரே பெரிய மஞ்சள் கனகாம்பரம்... அதன் பக்கத்தில் விதை ஊன்றி டேலியா பூ வரும் என்று காத்திருந்தால் கடலைச் செடி தான் காய்ந்தது....
 வீட்டில் வளர்த்துவந்த  கிளிகள் தினமும் அந்த செடியில் உட்கார்ந்து காலையில் கீ கீ என்று கத்தத் துவங்கினால் மேலே பறக்கும் கிளிகளெல்லாம் சுற்றுச் சுவரில் வரிசையாக அமர்ந்து கத்தும் காட்சி இப்போதும் கண்முன்னே...
அரியலூருக்கு அருகே உள்ள கலியபெருமாள் கோவில் திருவிழாவிற்கு செலவழிக்க தந்த பணத்தில் இந்த கிளிகளை வாங்கினோம் அப்பா அம்மாவின் சம்மதத்துடன்...
ஒருநாள் மதியம் வீட்டுக்கு சாப்பிட வந்த போது கிளி இல்லை..எங்கேம்மா என்று கேட்ட போது அதுக்கு முடியல‌அப்பா டாக்டர் கிட்ட தூக்கிட்டு போயிருக்காங்க என்று அம்மா சொன்ன போது மனசே சரியில்லை.
கொஞ்ச நாட்களில் ஒரு கிளி இறந்து விட மற்றதை தூரத்தில் கொண்டு விட்டுவிட்டு வந்து விட்டாங்க...
அப்போது கிணற்றில் நீர் இறைத்து தான் செடிகளுக்கு ஊற்ற வேண்டும்... அதெல்லாம் சொர்க்கம் என்று அப்போது புரியவில்லை..
சமையலறைக்கு அடுத்து உள்ள மண்தரையில் ரோஜா செடி வாங்கி ஊன்றி வைத்த சில நாட்களில்.... பள்ளி சென்று வந்து பார்த்தால் செடிக்கு மேல் இரண்டு மாடுகள்.... எங்கள் பாலுமாமாவிற்கு மாடுகள் என்றால் அத்தனை ஆசை...அதை எங்கிருந்தோ வாங்கி ஓட்டி வந்து கட்டி போட்டு இருந்தார்கள்.காலையில் ஊருக்கு ஓட்டிபோவாங்கன்னு அம்மா சொன்ன போது... மாடுகளின் கால்களில் தலையாட்டி சிரித்த ரோஜா செடி பத்திரமாக இருக்க வேண்டுமே என்ற கவலையோடயே தூங்கி எழுந்தேன்...கொஞ்சமாக நசுக்கப்பட்டாலும் என்னை ஏமாற்றாமல் நன்கு வளர்ந்தது சன்னலின் ஊடே பூக்களை காட்டி சிரித்தது ....
சில நாட்கள் செடிகள் கூடவே பேசிக்கொண்டு இருப்பேன்... நான் பள்ளிக்கூடம் போயிட்டு வரேன் பத்திரமா இரு என்று டிசம்பர் செடியிடம் அடிக்கடி பேசுவதுண்டு .. அந்த இடத்தில் முருங்கைக் கன்று வைக்கணும்னு அம்மாவின் ஆசை...
ஒரு நாள் டிசம்பர் தனது வாழ்விடத்தை முருங்கைக்கொடுத்து மறைந்து போனபோது இரண்டு நாட்கள் பேசாமல் கவலையாக இருந்தேன்..அப்றமென்ன முருங்கையுடன் பேச்சு தான்....
சங்க காலத்தில் இருந்தே பெண்களின் பேச்சுத் துணைக்கு தாவரங்கள் தான் உதவியாக இருக்கின்றன...
அதற்கு பின் காலனி வீடுகளில் செடிகளுக்கு வாய்ப்பே இல்லை.
புதுக்கோட்டையில் வீடு வாங்கும் போது கொஞ்சம் மண்தரையாவது கட்டாயம் இருக்க வேண்டும் என்ற எண்ணப்படி வீடு அமைந்தது.
ஒரு பக்கத்தில் சிறிய இடம் தான் இருந்தது.அதில் சுவரை ஒட்டி வெல்வெட் ரெட்ரோஸ், குண்டு மல்லிகை, மருதாணி, பப்பாளி இருக்கும்...
அதற்கு எதிராக கற்பூரவள்ளிவாழைமரம்.. இரண்டு தென்னை மரங்கள் , மஞ்சள் பூச்செடி பட்டு போல் நிறைந்து காணப்படும்...பெட் போல குரோட்டன்ஸ் வரிசையாக நிற்கும்....
 எனக்கு சூரியகாந்தி பூ பிடிக்கும் அரியலூர் வீட்டில் இருந்தது...
பத்தாவது படிக்கும் போது சின்ன பூவை தலையில் வைத்து செல்வதும் அதை எங்கள் சோபியா டீச்சர் தொட்டு பார்த்து ஏய் உண்மையான பூவாடி என ஆச்சரியமாக கேட்டதும் மறக்க முடியாத நினைவுகள்.
இந்த வீட்டிலும் தட்டு தட்டாக சூரியகாந்தி பூத்து குலுங்கும்..
மல்லிகையின் மணம் சன்னலைத் திறந்தால் வீட்டிற்குள் நிறைந்து மகிழ வைக்கும்.
வீடு புதுமனை புகு விழாவில் புவனா அக்கா இரண்டு தேக்கு மர கன்றுகள் பரிசுகளுடன் கொடுத்தாங்க... அதில் ஒன்று மட்டும் பதிமூன்று வருடங்கள் மளமளவென்று வளர்ந்து நின்றது ..
ஒரு நாள் தண்ணீர் ஊற்றி அதை தடவி கொடுத்து நல்லா வளர்ந்துட்ட டா... நான் இருக்கும் வரை நீயும் இருக்கனும்னு சொல்லி ஊருக்கு சென்ற ஒரு வாரத்தில் கஜா புயலில் தேக்கு மரம் விழுந்து விட்டது என்று எதிர் வீட்டில் உள்ள அனிதா கூறிய போது மனம் அதிர்ச்சியில்.... வீட்டிற்கு எந்த பாதிப்பும் இல்லாமல் கேட்டில் தலை சாய்த்து விழுந்திருந்தான்....
இதோ இரண்டு வருடங்களுக்கு மேலாக நின்றவன் படுத்திருக்கும் காட்சி கஜாவை நினைவூட்டியபடி.
மாடிக்கு மேல் வளர்ந்து சிரித்த கிறிஸ்துமஸ் மரமும் கருகி போனது.
நல்லவேளை வீட்டின் முன் புறம் இருந்த புங்கை மரமும்,வேப்பமரமும் தப்பித்தன.
வாழை மரங்கள் இருந்த இடத்தில் சிறிய அறை கட்ட வேண்டி வந்தது.
தென்னைமர வேர்கள் வீட்டிற்குள்ளே...சுற்றுச்சுவரை பாதிக்கவும் அதுவும் இல்லை..
இதை அடுத்து தினமும் காலையில் தோட்டத்தில் வேலை பார்த்து தண்ணீர் ஊற்றி பிறகு தான் சமையலறை வரும் வழக்கம் மறைய.....எழுத்துப்பணி காரணமானது.. அதற்கு பிறகு மூலிகை செடிகள் சித்தரத்தை,ஆடுதொடா,நொச்சி,ஓமவல்லி,
துளசி,தூதூவளை, திருநீற்றுப்பச்சை, கருவேப்பிலை, மருதாணி இவையுடன் செம்பருத்தி இருந்தன...
 தண்ணீர் ஊற்றிய பிறகு திருநீற்றுப்பச்சை தனது மணத்தை பரிசாக பரப்பும் பாருங்கள்..சே.. என்ன மகிழ்ச்சி டா இது எனத் தோன்றும்.
வெண்பூச்சிகள் அவற்றை அவ்வப்போது அழித்து விடும்...
நீண்ட வருடங்களுக்கு பிறகு இன்று வீட்டில் மீண்டும் செடிகள் வைத்தேன்...
மறுபடியும் மூலிகை செடிகள் மணம் பரப்ப வந்துள்ளனர்.... புதிதாக மஞ்சள் பூ கொடியும், மஞ்சள் அரளியும், அடுக்கு நந்தியாவட்டை யும், சிறியாநங்கை (நிலவேம்பு),பெரியாநங்கையும், எலுமிச்சை யும், செம்பருத்தியும் வந்துருங்காங்க.
தங்கை ஜீவாவும்.. அவர்களின் மகன் தீனாவும் செடிநடும் மகிழ்வில் வீட்டிலிருந்து சில செடிகளை கொண்டுவந்து தந்து மகிழ்ந்தனர்...
இனி காலை நேரம் இவர்களுடன் கழியும்...

வீட்டில் பெய்யும் மழைநீர் முழுவதும் மழைநீர் சேகரிப்பு தொட்டிக்குள் சென்று. விடும்...
மோட்டார் தண்ணீரில்PHஅளவு 4800 இருந்ததுமுன்பு இப்போது ph1200நம்பமுடியாத விஷயம்.. உப்புத்தன்மை குறைந்து வாயில் வைக்கும் அளவுக்கு வந்துவிட்டது.... இயற்கை எப்போதும் மகிழ்வையே தருகின்றது.. நாம் தான் சரியாக புரிந்து கொள்ள வில்லை.

2 comments :

  1. வீட்டில் தோட்டம் - ஒரு வரம் அது. நெய்வேலி நகரில் இருந்தவரை பெரிய தோட்டம், எண்ணற்ற மரங்கள், செடிகள், கொடிகள் என இயற்கையோடு ஒன்றி இருந்த வாழ்க்கை. தலைநகர் வந்த பிற்கு ஒரே கான்க்ரீட் காடுகள்.... இப்போதைய அடுக்கு மாடிக் குடியிருப்பில் தோட்டம் பற்றிய கனவுகளோடு போகிறது வாழ்க்கை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ .உண்மை தான் அடுக்கு மாடித் தோட்டம் கொஞ்சம் ஆறுதல் ..

      Delete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...