World Tamil Blog Aggregator Thendral: நூல் விமர்சனம்.-ஸ்லெட்டாவின் நாட்குறிப்பு

Thursday, 2 April 2020

நூல் விமர்சனம்.-ஸ்லெட்டாவின் நாட்குறிப்பு

நூல் விமர்சனம்
#reading_marathan_2020_25
RM261
3/25

"ஸ்லெட்டாவின் நாட்குறிப்பு'
சராஜீவோவில் ஒரு குழந்தையின் வாழ்க்கை.
ஸ்லெட்டா ஃபிலிப்போவிக்.
தமிழில்
அனிதா பொன்னீலன்.
புலம் வெளியீடு
விலை ₹170
பக்கம் 208.
தனது முதல் மொழிபெயர்ப்பு நூலிலேயே பிரகாசமான எழுத்தாற்றலின் மூலம் இந்நாட்குறிப்பை நமக்கு மிக அருமையாக மொழி பெயர்த்து உள்ளார்.ஒரு குழந்தையின் மனநிலையில் இருந்தால் மட்டுமே இந்நூலின் உணர்வினை நாம் புரிந்து கொள்ள முடியும்.அந்த வகையில் ஸ்லெட்டாவின் நாட்குறிப்பை நாமும் உணரும் வகையில் சிறப்பாக மொழி பெயர்த்து உள்ளார் திருமிகு அனிதா பொன்னீலன்.
ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு,ஆனி ஃபிராங்க் நாட்குறிப்பு பற்றி கேள்வி பட்டு உள்ள நிலையில் சராஜீவோவின் ஆனி ஃபிராங்க் என்று அழைக்கப்படும்" "ஸ்லெட்டாவின் நாட்குறிப்பு" படிக்கும் வாய்ப்பு...ஊரடங்கு போது கிடைத்தது.
கொரோனா அச்சத்தில் ஊரடங்கின் நாட்களில் நான் இந்த நூலை வாசித்தது முழுமையாக பதுங்கு குழியில்.... மூன்று மாதங்களுக்கு மேலாக வீட்டை விட்டு நகராத ஸ்லெட்டாவின் மனதை நுண்மையாக  அறிந்து கொள்ள முடிகிறது.

யூகோஸ்லாவியா நாட்டிலிருந்து போஸ்னியாவும்,ஹெர்ஸகோவினாவும் விடுதலை அடைந்ததாக அறிவித்ததும், அங்கு வாழ்ந்து கொண்டிருந்த குரோஷியரும், இஸ்லாமியரும் விடுதலை பெற முயல ,அதை எதிர்த்து செர்பியர்கள் நடத்திய போரினை  ஸ்லெட்டா  தனது நாட்குறிப்பின் மூலம் நமக்கு காட்சிப்படுத்தி குழந்தையின் பார்வையில் போரின் தன்மையை உணர வைத்து மனதை அதிர வைக்கிறாள்.
வசதியான குடும்பத்தில் பிறந்து தந்தை வழக்கறிஞரான மாலிக், வேதியியல் வல்லுநரான அம்மா அலைகா இருவரின் ஒரே செல்ல மகளாக வசதியாக எந்த வித கவலையுமின்றி படிப்பு,இசை,பியானோ வாசித்தல், புத்தகம் வாசித்தல் ,வார இறுதியில்  தாத்தா பாட்டியின் கிராமத்திற்கு சென்று மகிழ்வாய் இயற்கையை நேசிப்பவளாக, மக்கள் மீது தீராத அன்பை பொழிபவளாக ,வானொலி கேட்பவளாக.... ஸ்லெட்டா.
போர் எதற்காக ஏன் என்று கேள்வி கேட்பவளாக பத்து வயது சிறுமியான ஸ்லெட்டா  நம்மை காலத்தின் பின்னே அழைத்து சென்று மனிதர்களின் கோர முகத்தைக் காட்டுகின்றாள்
ஆனி ஃபிராங்க் தனது நாட்குறிப்பிற்கு கிட்டி என பெயர் வைத்ததை அறிந்ததும் தனது நாட்குறிப்பிற்கு "மிம்மி" என பெயர் வைத்து தனது உணர்வுகளை எண்ணங்களை அதனிடம் பதிவு செய்கிறாள் ".மிம்மி" அவளுக்கு சிறந்த தோழியாக அமைதியாக அவளது சோக எண்ணங்களை  நிரப்பப்படுவதற்காக பொறுமையாக காத்திருக்கின்றது.
குழந்தைகள் உயிரற்றவைகளுக்கும் பெயர் வைத்து உயிர்ப்பிக்கும் வல்லமையுடையவர்கள்.

செப்டம்பர் 1991 முதல் அக்டோபர் 1993 வரை எழுதப்பட்ட நாட்குறிப்பு நமக்கு செரஜீவோவில் நடந்த போரின் நிலைமையை கூறி மக்கள் படும் துயரங்களை எடுத்து உரைக்கின்றது.
குழந்தைகளுக்கே உரிய தன்மையுடன் எதற்காக இந்த போர்.?.ஏன்? எப்போது முடியும்? என தனக்குள் கேள்வி கேட்கிறாள்.வீட்டின் அருகேயுள்ள குன்றிலிருந்து வீசப்படும் குண்டுகளுக்கு பயந்து வீட்டின் அடிப்பகுதியில் இருட்டாக இருக்கும் நிலவறையில் அடிக்கடி செல்ல
நேரிடும் போதெல்லாம் எப்போது இந்த போர் முடிந்து நண்பர்களுடன் விளையாட முடியும்.... தாத்தா பாட்டியின் கிராமத்திற்கு செல்ல முடியும் என்று ஏங்குகிறாள்.
"போர் எங்கள் படிப்பிற்கு இடையூறு செய்து,பள்ளிகளை மூட வைத்து, குழந்தைகளை வகுப்பறைகளுக்கு பதிலாக பதுங்கு குழிகளுக்கு அனுப்புகின்றது . போர் வெறியர்களுக்கு அன்பைப் பற்றியோ, எதையாவது காப்பாற்ற வேண்டும் என்ற ஆசையோ எதுவும் தெரியாது.எப்படி அழிப்பது, எரிப்பது, ஏதாவது பொருட்களை எடுத்து செல்வது என்பது மட்டுமே அவர்களுக்கு தெரியும்."என மிம்மியிடம் பதிவு செய்கிறாள்.
      போரின் விளைவாக படுகொலை, கொன்று குவிப்பு, பயங்கரம், இரத்தம், ஓலங்கள், கண்ணீர், பரிதவிப்பு....இவையே ஸ்லெட்டா அறிகிறாள்.ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமியின் வளமான வாழ்க்கை அழிந்து மின்சாரமின்றி, தண்ணீரின்றி,எரிவாயு இன்றி,உணவின்றி ரொட்டிக்கு ஏங்கும் நிலை ஏற்க முடியாத வேதனையாக உள்ளது. அவளுக்கு பிடித்த பிஸாவிற்காக மூன்று மாதங்களாக குழந்தை ஏங்குவதை எப்படி தாங்கிக் கொள்வது.
மஞ்சள் பறவை சிக்கோவும் ,சிஸி பூனையும் அவளுக்கு ஆறுதலாக இருந்து.   இறந்து விடுகின்றன.
இந்த போர்  அவளிடமிருந்து வருடக்கணக்கான வாழ்க்கையையும்,குழந்தைமையையும்,
முதியவர்களின் அமைதியான முதுமைக் காலத்தையும் திருடிச் சென்றுவிட்டதாக கோபப்படுகிறாள்.
ஒன்றுமறியாத பதினோரு வயது சிறுமி தனது வாழ்வில் விருப்பமின்றி நுழையும் போரின் காரணமாக தான் நேசிக்கும் நாட்டை, உறவுகளை,நண்பர்களை இழந்து தனிமையில் வாடி , அவள் நேசிக்கும் அற்புதமான பிள்ளை பருவத்தை அருவருப்பான போர் கொண்டு செல்வதை எண்ணி கதறுகின்றாள்.
அவளுக்கு போர் வாழ்க்கை பழகிவிடுகிறது.
அவள் எழுதிய நாட்குறிப்பு 1993 ஜுலை 17  நூலாக வெளியிடப்பட்ட விழாவைப் பற்றி மிம்மியிடம்(அந்த நாட்குறிப்பு) கூறுவது சிறப்பு.
அவளது தோழி மஜாவின் முயற்சியில்
செராஜீவோவின் பாதிப்பு மிம்மியால் உலகமெங்கும் அறியவைக்கப்படுகிறது.
மிம்மியை உலகமே நேசிக்கத் துவங்குகிறது.
ஸ்பெயின், பிரான்ஸ்,யு.எஸ்.ஏ., இங்கிலாந்து போன்ற நாடுகளில் இருந்து ஸ்லெட்டாவை பேட்டி எடுக்க வருகிறார்கள்.
உலக அளவில் அவளுக்கு பேனா நண்பர்கள் கிடைக்கின்றார்கள்.அவர்களின்  ஆறுதலான கடிதங்கள் போரின் நடுவே அவளுக்கு காலங்கழித்து கிடைத்தாலும் மகிழ்வைத் தருகின்றன.
நண்பர்களை இழந்து வாடும் அவளுக்கு அவர்கள் நல்ல நண்பர்கள் ஆகிறார்கள்.
இந்த அற்ப போர் விளையாட்டின் முடிவில் 15,000 பேர் பலி.அவர்களில் 3000 குழந்தைகள் என்பது ஏற்க முடியாத வன்முறை.50,000 பேர் நிரந்தரமாக வாழத் தகுதியற்றவர்களாகிறார்கள்.
இதற்கு நடுவே வருகின்ற பிறந்தநாள் விருந்துகள் மருந்தாக அமைகின்றன.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்கள் ஆறுதலாக இருக்கின்றன.
குழந்தைகள் எப்போதும் போரை விரும்புவதில்லை.
ஸ்லெட்டாவை பேட்டி காணும் நிருபர் அவள் அருகே குண்டு விழுந்தாலும் கவலைப்படாமல் இயல்பாக இருக்கும் நிலை கண்டு அதிர்ச்சி அடைகிறார்.
அவள் தன்னைத்தானே தேற்றி தன்னம்பிக்கையுடையவளாக இருக்கின்றாள்.
பெரியவர்களின் பேராசைக்கு குழந்தைகள் எல்லா நாடுகளிலும் பலியாகின்றனர்....
அவர்களுக்கான உலகத்தை எப்போது உருவாக்க போகின்றோம் என்ற எண்ணத்தை விதைக்கிறது மிம்மி.
மு.கீதா
புதுக்கோட்டை.


4 comments :

  1. சிறிய விமர்சனமே மனதில் பதட்டத்தை ஏற்படுத்துகிறது...

    ReplyDelete
  2. பெரியவர்களின் பேராசைக்கு குழந்தைகள் எல்லா நாடுகளிலும் பலியாகின்றனர்....

    வேதனைதான் சகோதரியாரே

    ReplyDelete
  3. மிக நுட்பமான பார்வையுடன் எழுதப்பட்ட விமர்சனம்
    வாழ்த்துகள்

    ReplyDelete
  4. ஆங்கிலத்தில் வாசித்தது.
    தமிழிலும் வாசிக்கத்தூண்டும் நூலறிமுகம்...
    அருமை.வாழ்த்துகள்

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...