World Tamil Blog Aggregator Thendral: தங்கல்---திரைக்காவியம்

Thursday 5 January 2017

தங்கல்---திரைக்காவியம்

பெண்களுக்கு பெருமை சேர்க்கும் படம் “தங்கல்”

பெங்களூருவில் சாலையில் நடந்த பெண்ணை போற போக்கில் பாலியல் வன்முறை செய்யலாம் என்ற பொதுப்புத்தியை ஆண்களுக்கு உண்டாக்கியுள்ள இந்த சமூகத்தில் தான் இப்படிப்பட்ட படங்களும் வந்து கொஞ்சம் சுவாசத்தையும்,ஆறுதலையும் தருகின்றன..

முதலில் இப்படத்தின் இயக்குநருக்கும்,தயாரித்து அப்படத்தில் வாழ்ந்து இருக்கின்ற அமீர்கானுக்கு பெண் இனத்தின் சார்பில் தலைவணங்கி நன்றியை கூறிக்கொள்கின்றேன்..

அதில் வாழ்ந்து இருக்கின்ற நடிகர்கள் மட்டுமல்ல,தொழில்நுட்பக்கலைஞர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்...

ஒரு தலைசிறந்த ஓவியமாக,சிற்பமாக”தங்கல்”மிளிர்கின்றது எனில் மிகையில்லை..

வாழ்ந்து கொண்டிருக்கின்ற சாதனைப்பெண்களின் வலி மிகுந்த பாதையை மிக அருமையாக காட்சிப்படுத்தியுள்ளார்கள். 
 
திறமையான விளையாட்டு வீரர்களுக்கு நம் தேசம்? தரும் அவமானங்களை,அலட்சியங்களை....அதிகார வன்முறைகளைக்கண்டும் காணாமலும் வாழ்ந்து கொண்டிருக்கும் நடைபிணங்களுக்கு சரியான சாட்டையடி.

இப்படிப்பட்டவர்களால் தான் ஒலிம்பிக்கில் மட்டுமல்ல உலக அளவில் தலைகுனிய நேரிடுகின்றது அதையும் மீறி நாட்டுக்கு வெற்றியைத்தரும் வீரர்களையும்,வீராங்கனைகளையும் எப்படி புறந்தள்ளுகின்றது..நம்நாடு...என்பதை தோலுரித்து காட்டுகின்றது..
 
பத்துவருட போராட்ட வாழ்க்கைக்குப்பின்னே புதுக்கோட்டை சாந்திக்கு வாழ்வாதாரத்திற்கான வேலை கிடைத்துள்ளது என்ற உண்மை மனதைச் சுடுகின்றது..

இத்தனையையும் மீறி பெண்குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் படத்தின் ஓவ்வொரு துளியும் அமைந்துள்ளது என்பது மறுக்க முடியாத ஒன்று.,

ஆண்குழந்தைக்கு தவமிருக்கும் சாதாரண அப்பாவாக, தன் இலட்சியத்தை நிறைவேற்ற மகன் பிறக்கவில்லை என்று வேதனைப்படும் அப்பாவாக,எப்படி அடித்தாய் என மகள்களிடம் கேட்கும் போது அவர்களின் திறமையை கண்கள் ஒளிர காணும் அப்பாவாக,கண்டிப்பான குருவாக,அன்பான அப்பாவாக வாழமுடியவில்லை எனத்தவிக்கும் அப்பாவாக,அவர்கள் நாட்டுக்கு தங்கப்பதக்கம் வாங்கித்தருவார்கள் என்ற ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவராக,தன்னம்பிக்கை கொடுப்பவராக....அடடா வாய்ப்பே இல்லை ”அமீர்கான் “
வாழ்த்துகள்,வாழ்த்துகள்.

அவர்களின் குழந்தைகளாக நடித்த சிறுமிகள் ”ஆசம்”

ஒரு படம் மனதில் உறைந்து நிற்குமெனில் அதை இப்படம் செய்கின்றது...

உனது எதிரி அவளல்ல...ஆணாதிக்கத்திற்கு எதிராக ,பெண்களால் முடியும் என உலகிற்கு எடுத்துக்காட்டுவதற்கு நீ தங்கப்பதக்கம் வாங்கியே தீர வேண்டும் என்ற வெறியை ஊட்டும் அப்பாக்கள் எத்தனை பேர் இருக்கின்றார்கள்?

ஒரு தந்தை பெண்குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதற்கு உதாரணம் இந்தப்படம்...

ஒரு ஆண் எப்படி பெண்களை மதிக்க வேண்டும்...என்பதற்கு எடுத்துக்காட்டு “தங்கல்”

காசுக்கு விலை போகும் நடிகர்களும்.நடிகைகளும்,இயக்குநர்களும்,தயாரிப்பாளர்களும்..சமூகத்தை சீரழிக்கும் படங்களை கொடுப்பதை விட..சும்மா இருக்கலாம் அல்லது இது போன்ற தரமான படங்களைத்தந்து தங்களால் வீணாய்ப்போன சமூகத்தின் கறைகளைத்துடைக்கலாம்..
13 comments :

 1. சிறப்பான படம்... உற்சாகமூட்டும் விமர்சனம்...

  ReplyDelete
 2. நல்லதொரு திரைப்படம்..பார்த்துவிட்டோம் அருமையான படம்!!!!

  கீதா: உண்மைதான் கீதா! பெண்களுக்குப் பெருமை சேர்க்கும் படம்! இப்படிப்பட்ட பெற்றோர் எத்தனை குழந்தைகளுக்குக் கிடைப்பார்கள்??!!! அந்தத் தந்தை பேசும் ஒவ்வொரு வரியும் நச்!!!! பெண்கள் சளைத்தவர்கள் அல்ல! வெல்ல முடியும் என்று சொல்வதும், போராட்டங்களையும் காவியமாகப் படைத்திருக்கிறார்கள்!!! இது போன்ற தரமான படங்கள் வர வேண்டும்!!! பல காட்சிகள் கண்களில் நீர் வரவழைத்துவிட்டது. அதுவும் இறுதிக் காட்சி!!! ஹையோ!!! சான்சே இல்லப்பா..

  விமர்சனம் தூள்!!!

  ReplyDelete
 3. விமர்சனம் ஸூப்பர்

  ReplyDelete
 4. நல்லதொரு திரைப்படம். இன்னும் பார்க்கவில்லை. பார்க்க வேண்டும்.

  ReplyDelete
 5. உங்களின் உள்ளார்ந்த ஆழத்திலிருந்து பீறிட்டுக் கிளம்பியிருக்கும் வார்த்தைகள்..
  ஒரு சின்ன கவிதை வரிகள் நம்மை பல நாள்கள் உறங்க விடாது...
  இந்தக்காவியம் மனம் கவர்ந்த நீளக்கவிதை..

  பழமை மூடிப்போயிருக்கும் ஹரியானா மண்ணின் வாசனை..

  பார்ப்பதற்கு மிகவும் சலிப்பூட்டும் ஒரு விளையாட்டென்றால் இதுவரை எனக்கு மல்யுத்தம் தான் இருந்தது..இந்த படத்தை பார்க்கும் வரை..
  ஆனால் அதன் ஒவ்வொரு புள்ளியையும் விளங்கவைத்து இந்த விளையாட்டுக்கான முன் தயாரிப்புகளை நம்மையும் அந்த புழுதி பறக்கும் மணற் களங்களில் அலைய விட்டிருக்கும் அமீர்கானும்,இயக்குனரும் கண்ணில் காணும் பிரம்மா ஆகியிருக்கிறார்கள்...

  மயிரை வெட்டிக்கொள்ளும் போதும் அழும் பிள்ளைகள் நடிப்பில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார்கள்..

  தங்கல் பார்த்துவிட்டு நான் அந்த பிரமிப்பிலிருந்து இன்னும் மீளவில்லை...ஏதோ அந்த மாய உலகு என்னை கட்டிவைத்துவிட்டது...

  அதையும் தாண்டி உங்கள் விமர்சன வார்த்தைகள் என் வார்த்தை அணையில் பெரிய விரிசலை ஏற்படுத்தி விட்டது..

  நல்லவை யாதெனினும்...படபடவென கரங்களை தட்டி உச்சிமுகர்ந்து பாராட்டும் உங்கள் மனோநிலையை இந்த படம் மிக நன்றாகவே பயன்படுத்தி இருப்பது ஒவ்வொரு எழுத்திலும் பட்டவர்த்தனமாகிறது..

  உங்கள் எழுத்துக்கும்,,தங்கல் படத்துக்கும் பின்னால் மல்யுத்தப்பெண்களின் மார்பகங்களைப் பார்க்காமல் மனசையும்,வலியையும் ஒரு ஜோடிக்கண்களேனும் பார்க்குமெனில் அதுவே நாம் நம் சமூகத்துக்கு செய்யும் நன்மை...

  அதை கண்டிப்பாக பலர் செய்வார்கள் என்ற நம்பிக்கை பிறக்கிறது...
  தங்கல் பற்றிய தங்கள் விமர்சனம் இந்த ஆண்டின் முத்தாய்ப்பான எழுத்து..
  இன்னும் வாருங்கள் எழுந்து..

  ReplyDelete
 6. அருமையான விமர்சனம். பாராட்டுகள்!

  ReplyDelete
 7. விரைவில் காண வேண்டும்...

  ReplyDelete
 8. இந்த வாரம் பார்த்த்து விடுவேன். Pink பார்த்தீர்களோ?

  ReplyDelete
 9. திரை விமர்சனம் எழுதுவதும் ஒரு ஆய்வுக்கட்டுரை போன்றதே! மிகச்சிறப்பான பதிவு.பாராட்டுகள்.

  ReplyDelete
 10. "காசுக்கு விலை போகும் நடிகர்களும். நடிகைகளும், இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும்... சமூகத்தை சீரழிக்கும் படங்களைக் கொடுப்பதை விட... சும்மா இருக்கலாம் அல்லது இது போன்ற தரமான படங்களைத் தந்து தங்களால் வீணாய்ப் போன சமூகத்தின் கறைகளைத் துடைக்கலாம்..." என்ற கருத்தை ஏற்கிறேன்.

  அருமையான பதிவு

  ReplyDelete
 11. நல்ல, ஆழ்ந்த கருத்துகளைக் கொண்ட விமர்சனம். பாராட்டுகள்.

  ReplyDelete
 12. நல்ல விமர்சனம் அக்கா...
  இன்னும் படம் பார்க்கவில்லை... பார்க்கணும்...

  ReplyDelete
 13. wanted to see but not time
  maki was ill
  now getting well

  ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...