World Tamil Blog Aggregator Thendral: November 2020

Monday, 23 November 2020

உவமைக்கவிஞர் சுரதா

உவமை கவிஞர் சுரதா நூற்றாண்டுவிழா
தமிழ் வளர்ச்சித் துறை நாகப்பட்டினம்.

உயிரில் கலந்து உணர்வில் உறைந்த
உன்னதத் தமிழே தாயே!
மேதினி வியக்கும் உயர்ந்தோர் போற்றும்
மேன்மையானவளே!
வணங்குகின்றேன் உனையே!

நல் ஏரென்றே
சொல் ஏரெடுத்து
பல்லோர் போற்ற
பாரினில் சிறக்கும் தலைவா!
சின்னவள் நானும்-உனையே
சீரியத் தமிழால் வணங்குகின்றேன்.

கவிச்சரம் தொடுத்து
கனிவுடன் படைத்து
மணியென தந்திடும்
மக்காள்!
மலைவாழைத்தமிழை 
பாமாலையெனவே
மகிழ்ந்தே படைத்திடுவோம் வாரீர்!

கனித் தமிழைச் சுவைக்கவே
அணிஅணியாய் திரண்ட
சான்றோரே!
படைக்கின்றோம்
செவிமடுத்து கேளீரென வணங்குகின்றோம்.

உவமைக்கவிஞர் சுரதா
--+++++++++++++++++++++
சங்கம் போற்றியத் தமிழே!
அங்கம் மரபாயான தமிழே!
சங்கத் தமிழ் மலர்ச்சோலையில்
சிந்தும் தேனை எடுத்தே
சிதறாமல் தமிழைச் சுவைத்தீர்.
தங்கத் தமிழே!- எங்கும்
பொங்கி முழங்கிடும் சிங்கத் தமிழே!
மங்கா புகழுடைய வேந்தே
தங்கிடும் புவியில் நிலைத்தே
எங்கும் சிறந்திடும் உம்பாட்டே!

ஏற்றிடும் தமிழில், கற்றோர்
போற்றிடும் தேன்தமிழ் கவிதனை
சாற்றிடும் அமிழ்தென படைத்திட்டீர்.
நாற்றென செழித்து வளர்ந்திடவே
ஏற்றமிகு கவிதனைப் பதியமிட்டீர்.

ஊற்றென உவமைகள் உம்மில் முகிழ்த்திட
காற்றென கவிமழை பொழிந்தே
நூற்றாண்டு கடந்தும் வாழ்கின்றீர்!
நூறாயிரம் வாழும் தமிழெனவே!

பாட்டினில் கற்பனை எதற்கென்றே-தமிழ்
காட்டினில் இயல்பாய் உவமைகளை
ஏட்டினில் எழுதிட உரைத்திட்டீர்.
நாட்டினில் நிலவிடும் தீமையெல்லாம்
வாட்டிடும் துன்பத்தீயில் என்றே
தீட்டிய வரிகளில் சுடர்விட்டே
சாட்டியே நீரும் தமிழ்ச்சாட்டையை எடுத்தீர்.
கூட்டினில் பறவையென இருந்தமிழை
பாட்டினில் படைத்தே விண்புகச் செய்தீர்.

கற்றிடு மரபை ,கற்றிடு சங்கத்தமிழை
பெற்றிடு உயர்வை, ஏற்றிடு பெருமை என்றீர்.

உன்னதத் தமிழால் உலகு பாடியே
கன்னல் தமிழைக் களிப்புடன் தந்தீர்.
மலரினில் வழிந்திடும் மதுஉண்ட வண்டென
மயங்கியே உம்மால் கிடக்கின்றோம்.


என்றென்றும் தமிழாய் வாழ்ந்தீரே
நன்றே நன்றே உம்பாட்டு
சென்றே திக்கெட்டும் சிறத்திடுமென்றே
வாழ்த்தியே நானும் அமைகின்றேன்.

மு.கீதா
புதுக்கோட்டை
 





,

Wednesday, 18 November 2020

சிறகுகள்

சிறகுகள் கண்டு வியக்கின்றாய்...
முளைத்த வலி கூறும்
 ஒவ்வொரு சிறகும்,
ஒவ்வொரு மரணத்தைக் தொட்டு உதித்ததென்பதை..
பறவைகளுக்கானதைப் போல இயல்பானதல்ல அவை.
அன்பில் முளைத்ததொன்று
ரௌத்திரத்தில் மற்றொன்று
பிடிவாதத்தில் பிறந்த சிறகு
பெற்ற வலியை அகங்காரம் என்பர்.
அவை பறக்கத் துடிக்கையில்
அன்பின் கத்தி கொண்டு
அறுத்து மகிழ்ந்தனர் .
திமிறி பறக்கத் தவிக்கையில்
திடீரென வெட்டிச் சிரித்தனர்.
பகடிகள்,ஏளனங்கள்,அலட்சியங்கள்
பரிகாசங்கள், அதிகாரங்கள்,அவமானங்களைக் உணவாக உண்டு முளைத்த சிறகுகளவை.
வெட்டவெட்டத் துளிர்ப்பது கண்டேனுக்கு
அச்சம்...
இது ஆதித்தாயின் மரபின் எச்சம்..
துளிர்க்கவே பிறந்த சிறகுகள்...

Thursday, 12 November 2020

சூரரைப் போற்று

வாழ்த்துக்கள் சூர்யா மற்றும் சுதா கோங்கராவிற்கு
தனது அட்டகாசமான நடிப்பை காட்டியிருக்கும் சூர்யாவின் உழைப்பு அசாத்தியமானது.எளிய மக்கள் விமானத்தை வானில் பார்த்து அதிசயிப்பதை விட்டு அவர்களும் அந்த பயணத்தின் மகிழ்வை அடைய வைத்த கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறு கண்முன் காட்சியாக அமைத்துள்ள சுதாவிற்கு வாழ்த்துக்கள்..
படத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பை மிகச் சிறப்பாக செய்துள்ளனர்.
பணம் இருந்தால் எதையும் செய்யலாம் என்ற கார்ப்பரேட் எதேச்சாதிகார செயல்களுக்கு எதிரே போராடி வெற்றி பெறுகையில் கண்கள் கலங்குகின்றன.அது உண்மைக்கு கிடைத்த வெற்றி என்பதை எண்ணி.
பேக்கரி கடை வைப்பதை குறிக்கோளாகக் கொண்டு அதில் வெற்றி பெறும் அபர்ணாவை வழக்கமான சினிமா கதாநாயகிகளின் முன் உயர்ந்து நிற்க வைத்து சுதாவிற்கு பாராட்டு.
முதலாளித்துவத்திற்கும் ஏழைகளுக்கும் இடையே நடக்கும் போராட்டம் என்றும் தொடர்கதை.
பெண் இயக்குநர்கள் எடுக்கும் படத்தில் பெண்களை எப்போதும் சுயமரியாதை உள்ளவர்களாக காட்டுவதை தொடர்ந்து பார்க்கிறோம்... ஆணாதிக்க ஆண் இயக்குநர்கள் இன்னும் கதாநாயகிகளை ஊறுகாயாக, போகப் பொருளாக காட்டுவதை நிறுத்த வேண்டும்...
இனியும் தொடர்ந்தால் பெண்இயக்கங்கள் நிச்சயமாக எதிர்த்து குரல் கொடுக்கும்..
பெண்களை மதிக்கும் பாத்திரத்தில் சூர்யா தொடர்ந்து நடிப்பது மிகவும் மகிழ்ச்சி...
சூர்யாவை வெறும் நடிகராக பார்க்க முடியவில்லை.மாணவர்களின் கல்விக்காக குரல் கொடுப்பவராகவும் தெரிவதை தடுக்க முடியவில்லை.. எங்கள் பள்ளி மாணவிகள் அகரத்தால் தொடர்ந்து பயன்பெற்று வரும் மகிழ்வு சூர்யாவை எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே நினைக்கத் தோன்றுகிறது....
படத்தில் குறைகள் இருக்கலாம்... ஆனால் சமுதாய பிரச்சினையை எடுத்து அதை சிறப்பாக காட்சிப்படுத்திய சுதாவை பாராட்டாமல் இருக்க முடியாது...
வாழ்த்துக்கள் சூர்யா... நீண்ட நாட்கள் கழித்து ஒரு நல்ல படம்... தந்தமைக்கு