நாங்க கொடுக்கிறோம்மா!
------------------------------------
கற்பித்தலின் போது எப்போதும் குழந்தைகளை படிக்கலன்னு தண்டிப்பது இப்போது இல்லை .
பணிக்கு சேர்ந்த புதிதில் அடித்து விட்டு ,நான் அழுவதைப்பார்த்து மாணவர்கள் ஏன் மிஸ் அழுவுறீங்க எங்க நல்லதுக்கு தானே அடிச்சீங்கன்னு சொல்வாங்க..இன்று அந்த மாணவர்கள் என்னுடன் தொடர்பில் மிகுந்த அன்புடன் என்னுடன் தொடர்பில் உள்ளனர்.
27 வருட அனுபவம்
குழந்தைகளை குழந்தைகளாகப் பார்க்க கற்றுக்கொடுத்துள்ளது...
குழந்தைகளிடம் இருந்தும் நாள் தோறும் கற்றுக்கொண்டே வருகின்றேன்.
குழந்தைகளுக்கு என்ன படிக்க விருப்பமோ அதைப்படியுங்கள் என்று சொல்லி விடுவேன்.ஒருமதிப்பெண் வினா மட்டும் தான் என்றாலும் என்னைப்பொறுத்தவரை கற்றலில் பின் தங்கியுள்ள குழந்தைகளுக்கு ஓகே தான்.
குழுவாகப்படிக்கும் போது கண்காணிப்பாளராக மட்டும் என் செயல் பாடுகள் இருக்கும்..
படிப்பது அவர்களுக்காக தான் என்ற எண்ணத்தை எப்போதும் அவர்கள் மனதில் ஊன்றி விடுவேன்.
யாருக்காக படிக்கிறீங்கன்னு கேட்டால் கோரஸாக எங்களுக்காகன்னு பதில் வரும்.
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு பணிக்கு போறேன்மா.நான் இல்லன்னு படிக்காம இருக்க கூடாதுன்னு பாவமா கேட்டதும் இல்ல அம்மா நாங்களே டெஸ்ட் எழுதி படிக்கின்றோம்னு சொன்னாங்க...
இன்று வகுப்புக்கு சென்றபோது குழுத்தலைவிகள் அருகே ஓடி வந்து அம்மா பரிசு கொடுங்கம்மான்னு சத்தம் என்ன பரிசுடான்னு கேட்ட போது ..
அம்மா நாங்களே தேர்வு வச்சோம்மா...நல்ல மதிப்பெண் எடுத்தவர்களுக்கு பரிசு வாங்கிட்டு வந்திருக்கோம்மா நீங்க கொடுக்கனும்னு குழுத்தலைவிகள் சொன்ன போது கண்கலங்கி விட்டேன்...
நீங்க தானே வாங்கி வந்தீங்க நீங்களே கொடுங்கன்னு சொன்னதும் அனைவருக்கும் பரிசளித்தனர்.
இதில் வருடத்துவக்கத்தில் எதைப்பேசினாலும் மந்தமாகவே இருக்கும் முத்துலெட்சுமி கார்த்திகா,ஆஃப்ரின்,அகல்யா,அஸ்வினி,என்ற குழந்தைகளும் நல்ல மதிப்பெண்கள் எடுத்து பரிசு வாங்கிய போது மனம் நெகிழ்ந்து விட்டேன்.
பரிசு என்னவோ பென்சிலும் ,லெட் பேனாவும் .,ரப்பரும் தான் என்றாலும் அதை கொடுக்கனும்னு தோன்றிய குட்டி மனங்கள் என் மனதை நெகிழச்செய்து விட்டனர்.
இதைவிட பரிசு வாங்கிய குழந்தைகள் எங்களுக்கு பரிசு கொடுத்த லீடருக்கு நாங்க எல்லாரும் சேர்ந்து ஒரு பரிசு கொடுக்கிறோம்னு சொன்னது தான் ஹைலைட்...
வேறென்ன வேண்டும்...எனக்கு...இதைவிட..