World Tamil Blog Aggregator Thendral: February 2016

Monday, 29 February 2016

ஆரஞ்சு வண்ணத்தது

தோன்றியது முதல் அவளுக்காகவே காத்திருந்த
பிங்க் கலரை விடுத்து
ஆரஞ்சை தேர்வு செய்தாள்
குதூகாத்துலத்துடன் ஆரஞ்ச் மகிழ
கலங்கி நின்றது பிங்க் .

கூடவே வந்த ஆரஞ்சு நிறத்ததுவை கொஞ்சினாள்...
தடவித்தடவி மகிந்தாள்..குட்டிமா.
 அவளுடன் துள்ளலுடன் வீடு வந்தது
வீட்டின் மகிழ்வைக்கூட்டி
அவளுடனே விளையாடியது...

 இரவு தூங்கும் முன்
 காற்றுனக்கு ஆகாதெனக்கூறி
காற்றில்லா அறையில் வைத்தவளை
 நடுஇரவில் கதவின் வழி வந்த
 காற்றின் துணையால்
அவளை மெல்ல எட்டிப்பார்த்து குதித்தது.
அம்மம்மாவுடனான போட்டியில்
அவளே வெல்லத்துடித்தது...


குட்டிமாவின் கைப்படும் போதெல்லாம்
கீறீச்சிடும் கதவென
சத்தமிட்டு கொண்டாடியது..
 போட்டியில் வெல்ல ஆரஞ்சை
போர்டிக்கோவில் வைத்து
இங்கயே இரு என்று உள்ளே நுழைந்தவளின்
 பிரிவு தாளாமல் வெடித்து சிதறியது
ஆரஞ்சு வண்ணத்தது....

Friday, 26 February 2016

குளிச்சீங்களா?

மகாமகத்துல குளிச்சேன்னு வெளில சொல்லிடாதீங்க.. குளத்து நீரை அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் ஆய்வு செய்த போது 28% மலக்கழிவும்,40%சிறுநீரும் இருந்ததாம்.... பாவத்தக்கழிக்கப்போய் நோய்க்கிருமிகளை வாங்கிக்கொண்டு வந்துள்ளார்கள்... அங்கு வேலைப்பார்த்த காவலர்களுக்கு தொற்று நோய்,தோல்நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாம்... போய் குளிச்சவங்க எல்லாம் முதல்ல டெட்டால் ஊத்தி குளிச்சிட்டு ஒருமுறை டெஸ்ட் பண்ணிக்குங்கபா..

Wednesday, 24 February 2016

கூழாங்கற்கள்-கனவுப்பிரியன்

கூழாங்கற்கள்-கனவுப்பிரியன் -----------------------------------------------

நான் மிகவும் நேசிக்கும் ரத்தினவேல் அய்யாவிடமிருந்து எனக்கு எழுத்தாளர் கனவுப் பிரியன் அவர்களின் கூழாங்கற்கள் புத்தகம், வந்து 15 நாட்கள் இருக்கும் .சில காரணங்களால் அந்நூலை வாசிக்கும் காலம் இன்று தான் கிடைத்தது...

கனவுப்பிரியன் என்ற பெயருக்கு பொருத்தமான நூல் -கூழாங்கற்கள் நான் இப்ப எந்த நாட்டில் இருக்கேன்னு தெரியல...எந்த நாட்டினரோடு இருக்கேன்னும் தெரியல..செலவின்றி உலகம் சுற்றிய உணர்வைக்கொடுத்த நூலாசிரியருக்கு மிக்க நன்றி.

அழகிய வண்ண அட்டையுடன் 21 கதைகளை ,256 பக்கங்களில் ,விலை ரூ200 ,கவிஞர் வதிலைப்பிரபா தனது ஓவியா பதிப்பகம் மூலம் தரமான தாள்களைக்கொண்டு மிகச்சிறப்பாக இந்நூலை அச்சிட்டு உள்ளார். முகநூல் நண்பர்கள் திருமிகு நாறும்பூ நாதன்,திருமிகு ஷாஜகான் உள்படநால்வர் இந்நூலுக்கு அணி செய்துள்ளனர்.
 இனி கதைகளுக்கு வருவோம். ________________________________________

 யதார்த்தமான,நேர்மையான,சமூக அக்கறை நிறைந்த,வெளிநாட்டில் வாழும் இந்தியரின் மனதை காட்சிப்படுத்துகின்ற.... அரபு நாடுகளில் வாழும் பன்னாட்டு மனிதர்களின் வாழ்க்கையை அடையாளம் காட்டுகின்ற கதைகளாக அனைத்தும் உள்ளதை அறிய முடிகின்றது.

 1]இந்தமடம் இல்லன்னா சந்த மடம் - கதையில் வரும் ஐயப்பன் கதாபாத்திரத்தின் திறமைகளை யாரும் கண்டுகொள்ளாததன் விளைவே நம் நாட்டுக்கலைகளை நாம் இழந்து நிற்கிறோம்...என்ற உணர்வைத்தந்தது ...இக்கதை.
 2]கூழாங்கற்கள்- இக்கதையில் உறவுகளுக்குள் திருமணம் செய்யும் ஒருவன் தனது குழந்தை திக்குவாய் பிரச்சனை இருப்பதை தீர்க்கவே ...வெளிநாட்டில் ஒரு தீவில் பணிக்குச்செல்லும் ஒருவன் படும் வேதனைகள்,நேர்மையாக இருப்பதால் வரும் பாதிப்பை,குழந்தைக்காக சேர்த்து வைத்த கூழாங்கற்களால் அவன் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை அழகாக கூறுகிறது.
 3]களிமண் வீடு சிறுவயதில் பெற்றோருடன் நாம் இணைந்து வாழ்ந்த வாழ்க்கையை நாம் நம்குழந்தைகட்கு தந்திருக்கோமா என சிந்திக்க வைக்கும் கதையாக.....கதைமாந்தர்களுடன் நம்மையும் வாழ வைத்துள்ளார்.

 4]குண்டு பாகிஸ்தானி பாகிஸ்தானி என்றாலே எதிரி மனப்பான்மையை நம் ஆழ்மனதில் புதைத்து வைத்துள்ளோம் என்பது மறுக்கவியலா ஒன்று...சுத்தமற்ற குண்டு பாகிஸ்தானியைக்கண்டு அருவருத்து...அவர் செய்யும் செய்யும் உதவிகளை எல்லாம் சந்தேகக்கண் கொண்டே பார்த்து முடிவில் தெளிவடைவதாகக் கதையை எழுதியுள்ள பாங்கு மிக அருமை. 

5]வடிவு- இக்கதையில் வடிவை நேரில் பார்க்கும் உணர்வு...உண்டாக்கிவிடுகின்றார்...ஆசிரியர். ஒவ்வொரு கதையும் தனக்கென ஒரு பாணியில், ஒரு நாட்டில்,அறிவியல் செய்திகளை உள்ளடக்கியதாக,பணி செய்பவர்களின் மனநிலையைப்படம் பிடித்துக்காட்டுவதாக நேர்த்தியுடன் எழுதியுள்ளார்...வர்ணனைகள் குறைவு என்றாலும் காட்சிப்படுத்துவது இவருக்கு வசமாகியுள்ளது...
 காட்சிப்பிழை -கதை மனதைத்தொடுவதாக ...உயிரோட்டத்துடன் .அமைந்துள்ளது.
 உப்புக்காற்று -கதை கிராமத்து மக்களின் அன்பையும்,பாசத்தையும் காட்டுவதாக அமைந்துள்ளது.அப்பெண்களின் உணர்வுகளை அழகாக கடத்துகின்றார் நம்மிடையே..
 பனங்கொட்டை சாமியார் -கதை மிக அருமையாக முதியோர் இல்லங்களை ஒளிவீசச்செய்யும் தன்மையுடையதாக அமைந்துள்ளது...
 அவரு அணில்கும்ப்ளே மாதிரி-ஆஹா நல்ல நகைச்சுவை படித்து விட்டு நீண்ட நேரம் சிரித்துக்கொண்டே இருந்தேன்...தன்னைத்தானே கிண்டலடித்துக்கொள்ளும் வடிவேலுவைக்காண்பது போல் இருந்தது... மொத்தத்தில் பெரும்பாலானக் கதைகள் வெளிநாட்டில் பணிபுரிபவர்களின் உளவியலை.சிக்கல்களை, அவர்கள் தனக்கு பிடித்த உணவைக்கூட ஒதுக்கி வைத்து சூழ்நிலைக்கைதிகளாகக் பரிணமிப்பதைக்காட்டுகின்றன...
 தொடர்ந்து எழுதினால் நல்ல நாவலைப்படைக்கும் நாவலாசிரியராக கனவுப்பிரியன் ஆகக்கூடும் என்பதில் ஐயமில்லை... மனம் நிறைந்த வாழ்த்துகள் கனவுப்பிரியன் அவர்களுக்கு.இந்நூலை அன்புடன் அனுப்பி வைத்த ரத்தினவேல் அப்பாவிற்கு மனம் நிறைந்த நன்றி..அனைவரும் படிக்க வேண்டிய நூலாகக் கூழாங்கற்கள்...

Sunday, 21 February 2016

காந்தி கனவு

நட்டநடு இரவு
பன்னிரண்டு மணி
உடல் நிறைய நகைகளுடன
ஒற்றைப்பெண் ஊர்வலமாய்
ஆண்கள் புடைசூழ
இந்தியாவா இது?!
மாரியம்மன்...

Tuesday, 9 February 2016

வாழ்த்துகளுடன் செல்வோமே....இவர்களுடன்

வாழ்த்துகளுடன் செல்வோமே....இவர்களுடன்
--------------------------------------------
விதைக் Kalam-25ஆவது வார வெற்றிவிழா

மாண்புக்குரிய அப்துல்கலாம் நம்மை விட்டு நீங்கிய கணத்தில் அவரின் நினைவாக தோற்றுவிக்கப்பட்ட அமைப்பு.விதைக் Kalam.


விதைக் Kalam குழுவினர்.சகோ கஸ்தூரிரங்கனின் அவர்களின் ஊக்கத்தாலும்,மலையப்பன்,கார்த்திக், போன்ற 20 இளைஞர்களால் துவங்கப்பட்டு இன்று 50 உறுப்பினர்களாக வளர்ந்துள்ளது.

வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையன்று இவ்வமைப்பினர்... 5 மரக்கன்றுகள்,கடப்பாறை,கூண்டு சகிதம் கிளம்பி பாதுகாப்பான பள்ளிகளில் 5 மரக்கன்றுகளை ஊன்றி வருவதுடன் மட்டுமின்றி அவற்றின் வளர்ச்சியை கவனித்து மகிழ்கின்றனர்.

எல்லோருக்கும் முன்னுதாரணமாகத்திகழும் இந்த இளைஞர்கள் தனது பாதையில் 25 ஆவது வாரத்தை தொட்டுள்ளது பாராட்டுதற்குரியது.

வரும் ஞாயிறு14.02.16 அன்று காலை சேங்கைத்தோப்பில் 300 ஆவது மரக்கன்றை ஊன்றி மேலும் 50 மரக்கன்றுகளை ஊன்ற உள்ளனர்.

பேசியே பொழுது போக்குபவர்களின் மத்தியில் தன்னாலான முயற்சியை நிறைவேற்றிக்கொண்டிருக்கும் அக்குழுவினர் இவ்வாரத்தைக்கொண்டாட அனைவரையும் அழைக்கின்றனர்..

மனமுள்ள நல்லவர்கள் புடைசூழ இந்நிகழ்ச்சி சிறப்புடன் நடக்கட்டும்...

14.02.16 அன்று காலை 6 மணியளவில் பனிப்புகை சூழ மகிழ்வுடன் கொண்டாட அழைக்கின்றனர்.

புதுகை இன்னும் கொஞ்சம் வருடங்களில் இவ்வமைப்பினரின் முயற்சியால் பசுமை சூழ மலர்ந்து,குளிர்ந்து மணம் பரப்பும் என்பதை மறுக்க முடியாது..

Monday, 8 February 2016

அனைவருக்கும் இடைநிலைக்கல்வித் திட்டம்.

அனைவருக்கும் இடைநிலைக்கல்வித் திட்டம்.

மன்றச்செயல்பாடுகள் பயிற்சி

நாள்8.2.16
இடம் :அருள்மிகு ஸ்ரீபிரகதம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி.

பள்ளியின் தலைமையாசிரியர் திருமிகு ராஜேந்திரன் அவர்களும்,திட்டக்குழு உறுப்பினர்கள் திருமிகு ராசிப்பன்னீர்செல்வம் மற்றும் திருமிகு ராஜா ஆசிரியரும் பயிற்சியின் முக்கியத்துவம் கூறி துவக்கி வைத்தார்கள்.

சமூகச்சீர்கேட்டில் மூழ்கித்திணறும் குழந்தைகளைக் கரைசேர்க்கும் முயற்சியென அரசுப்பள்ளிகளில் மூன்று மன்றங்கள் துவங்குவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது.

குமரப்பருவமன்றம்,கலை பண்பாட்டு மன்றம்,விழிப்புணர்வு மன்றம்...

நானும் என் தோழி கிருஷ்ணவேணியும் கருத்தாளர்களாகப்பயிற்சி அளித்தோம்..ஆசிரியர்கள் மனதில் குழந்தைகளுக்கான விதையைத்தூவிய நிறைவு...



Friday, 5 February 2016

குமரப்பருவப் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கலாமா?

குமரப்பருவப் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கலாமா?

எப்போதும் ஒரு தலைமுறை அடுத்ததலைமுறையை குறைக்கூறிக்கொண்டே வாழ்கின்றது...

நம்மையும் இப்படித்தான் இதுங்க பொறுப்பில்லாம இருக்குது எங்க விளங்கப்போகுதுன்னு திட்டியவர்கள் வியக்கும்படி முன்னேறியவர்கள் ஏராளம்...

ஏன் குமரப்பருவத்தைக்கடந்து வந்தும் நாம் அவ்வயதினரைப்புரிந்து கொள்ளாமல் குறைகூறிக்கொண்டே இருக்க வேண்டும்....

அவ்வயதிற்கே உரிய வேகத்தை,எதையும் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை ,நேர்மையை நோக்கிச்செல்லும் பண்பை உணர மறுக்கின்றோம்...

குழந்தைகள் நல்லவர்களாகவே தான் பிறக்கின்றார்கள்...சமூகம் தான் அவர்களின் சீர்கேட்டிற்கு காரணம் எனத்தெரிந்தும் அவர்களை ஏற்க மறுப்பது ஏன்?

Wednesday, 3 February 2016

ஏன் கூடாது?

ஏன் கூடாது?

தோழர் செல்வக்குமாரின் கொய்யாவுல என்ற வலைப்பதிவைப்படித்த போது....குழந்தைகளின் மிட்டாய்களில் கலந்திருக்கும் சீனக்கொய்யா மிட்டாய்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை படித்திருக்கின்றேன்...

இன்று தோன்றியது...

ஏன் முடிந்தவரை நாம் நம் நாட்டுப்பொருட்களையே வாங்கக்கூடாது?

ஏன் நம் அருகில் உள்ள சகோதரர் கடையில் மளிகைச்சாமான்களை வாங்கக்கூடாது...?

புதுகையில்”பதஞ்சலி”சுதேசிப்பொருட்கள் மட்டுமே விற்கப்படும் என்ற விளம்பரத்தைப் பார்த்த போது மீண்டும் ஒரு சுதந்திரப்போருக்கு நாம் தயாராகின்றோமோ...என்ற கவலை வந்தது.மேலும் அந்தக்கடையில் அத்தனை பொருட்களும் மிகவும் விலைக்குறைவு....

குருடாயிலில் தான் ரீபைண்ட் ஆயில் தயாரிக்கப்படுகிறது தெரிந்தும் ஏன் நாம் பாரம்பரியக்கடலை எண்ணெய் வாங்கக்கூடாது...?

நான் கடலை எண்ணெய் வாங்கிய போது பாதிக்கு பாதி விலை உள்ளதை அறிந்தேன் ...அதிக விலை கொடுத்து மாரடைப்பை உண்டாக்கும் ரீபைண்ட் ஆயிலை வாங்குவதைத் தவிர்க்கலாமே எனத்தோன்றியது.

எனக்கு தெரிந்து அனைவரும் செக்கு எண்ணெய்க்கு மாறிக்கொண்டு வருகின்றார்கள்..

குழந்தைகட்கு வாங்கும் திண்பண்டங்களில் பாரம்பரிய தின்பண்டங்களே முதன்மை பெறட்டும்...

மாற்றத்தை நம்மிலிருந்து துவங்குவோம்..பேசுவது மட்டுமல்ல ..செயலிலும் முகநூல் முன்னோக்கி செல்லட்டும்..


இத்தனை நண்பர்களில் [4522] ஒரு ஆயிரம் பேராவது மாறினால் நன்மைதானே..