வீதி கலை இலக்கியக்களம்-கூட்டம் 19
நாள்:27.9.15
இடம் :புதுகை
இன்று வீதி கலை இலக்கியக்களம் கூட்டம் 19 வழக்கம் போல் ஆக்ஸ்போர்டு உணவகக்கலைக்கல்லூரியில் நடந்தது.
கூட்டம் துவங்கும் முன் தங்களது அனுபவங்களைக்கூறும் நிகழ்வில்
ஸ்ரீமலையப்பன் தங்களது விதைக்கலாம் அமைப்பைப்பற்றியும்,வலைப்பதிவர் கையேடு தயாரிப்புக்குறித்தும் ,,
சுகன்யா ஞானசூரி வீதிக்கூட்டம் பற்றியும்,
கீதா வலைப்பதிவர் விழாப்பணிகள் குறித்தும் பகிர்ந்து கொண்டார்கள்.
மண்ணுக்கு மரம் பாரமா?
மரத்துக்கு கொடி பாரமா?
பாடலை எழுதிய 97 வயது மூத்த பாடலாசிரியர் நாமக்கல் மாவட்டம் புதுப்பட்டிக்கிராமத்திலிருந்து வர விழா துவங்கியது..
தலைமை:பாவலர் பொன் .கருப்பையா அவர்கள்
வரவேற்புரை
செல்வா அவர்கள் வரவேற்புரையே தற்கால நிகழ்வுகள் நிறைந்த கவிதையாகக்கூறி வரவேற்றார்...
”வீதிக்கு வந்து விட்டோம்
வேறு வழியே இல்லை
எரிந்தே கிடந்தாலும்
இழுத்துச் செல்ல வேண்டும் தேரை”
வீதியின் குரல்கள் ஒலித்துக்கொண்டே உள்ளன”என்றார்.
கவிதை -மாலதி
அப்துல் கலாம் பற்றியும் மாணவர்கள் குறித்தும்சிறப்பான கவிதைகளை வாசித்தார்
“சினங்கொள்ளச்செய்யும் சேட்டைகள்
நமைச் சீண்டிப்பார்க்கும் சிற்றுளிகள்”
என்ற வரிகள் அனைவராலும் பேசப்பட்டன...
கட்டுரை -”மீண்டும் விதைக்கலாம் தமிழ்”-அப்து ஜலீல்
கனிம வளங்கள் வற்றுவதைப்போல தாய் மொழியான தமிழும் வற்றிக்கொண்டு வருகிறது.மீண்டும் விதைக்க நான் தானே முயலவேண்டும் ,,..என தமிழ்மொழி வளர்ச்சி மற்றும் தமிழர்களின் தாய் மொழி குறித்த அக்கறையின்மை,தன் பாரம்பரியத்திற்கு மீண்டும் நாம் வரவேண்டும் என்ற அக்கறையான கட்டுரையை அருமையாக வாசித்தார்.
நூல் விமர்சனம்.கீதா
கதவுகள் திறக்கும் வானம்- கவிதை நூல்
இந்தியப்பெண்கவிஞர்களின் கவிதைத்தொகுப்பு -புதியமாதவி...காவ்யா பதிப்பகம் வெளியிட்டுள்ள நூல் .
விலை ரூ 110
11 மொழியில் 19 கவிஞர்கள் எழுதியுள்ள 45 கவிதைகளை உள்ளடக்கியது.
மும்பையில் வாழும் கவிஞரான புதிய மாதவி தனது முன்னுரையில்
” பெண் மொழிக்கு தேசங்கள்,மொழிகள்,இனங்கள் இல்லை”எனக்கூறி இந்தியப்பெண்ணியம் என்ற கட்டுரைக்காக தேர்வு செய்யப்பட்ட கவிதைகளின் தொகுப்பு இந்நூல் என்கிறார்.
எந்த மொழியாக இருந்தாலும் பெண்ணின் உணர்வுகள் தங்களது மனக்குமறலை,தனக்கென ஒரு வீடில்லாத ,காலமில்லாத நிலையை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளன..பெண் நிலை எந்த நாட்டிலும் ஒரே மாதிரியாக உள்ளதை உணர முடிகின்றது.சமூக அக்கறையுள்ள இருகவிதைகள் மனதை ஆக்ரமித்துக்கொண்டது...சமூகச்சிந்தனை உள்ள பெண்ணுக்கு நேரும் வன்முறைகளை ஒரு கவிதை விளக்குகின்றது.ஒரு கவிதை சிரியா நாட்டில் குழந்தைகள் கூடச்சிறைச்சாலையில் இருப்பதையும் அந்நாட்டு மக்களின் நிலையையும் எடுத்துக்காட்டுகிறது என்றார்..
சிறுகதை-அண்டனூர் சுரா.
இலங்கை வாழும் ஒரு குடும்பம் அகதியாக ஆஸ்திரேலியாவை நோக்கி கள்ளத்தோணியில் பயணம் செய்வதைக்காட்சிகளாக்கினார்.இலங்கை மொழிநடையில் எழுதி,அவரே பாத்திரமாக மாறி வாசித்த விதம் அனைவர் மனதிலும் கதையின் வலியை உண்டாக்கியது.
சிறப்பு அழைப்பாளர் அறிமுகம் -மீரா .செல்வா
பாடலாசிரியர்,நாடக ஆசிரியர்,வசனகர்த்தா என பன்முகப்பரிமாண பி.கே.முத்துச்சாமி அவர்களை அறிமுகம் செய்தார்.
நேர்காணல்.
பாடலாசிரியர் முத்துச்சாமி அவர்கள் நேர்கானலில் பாடல் எழுதப்பட்ட சூழ்நிலைகள்,தமிழக முதலமைச்சர்களுடன் திரைத்துறையில் ஈடுப்பட்ட விதம்,தனது கதையை பிறர் திருடி ஏமாற்றிய கோபம்,காலத்தால் அழியாத பாடல்களை தனது நடுங்கும் குரலால் பாடிக்காட்டினார்...
9 நாடகங்கள்,30,000 வெண்பாக்கள் இயற்றிய வெண்பா வேந்தர் என பட்டம் பெற்றவர்..முன்னால் முதலமைச்சர் காமராசர் இவரைத்தேடி வீட்டுக்கு வந்து சென்றதாக கூறினார்.
”மண்ணுக்கு மரம் பாரமா?”
”மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான்
மாட்டு வண்டியில..”
”சின்னச்சின்ன நட நடந்து
செம்பவள வாய்திறந்து”
போன்ற புகழ் பெற்ற பாடலைப்பாடியுள்ளார்.
வறுமை சூழ்ந்து வாழ்கின்ற மாபெரும் பாடலாசிரியர் பி.கே .முத்துச்சாமி பற்றிய ஆவணப்படம் திரையிடப்பட்டது.
நலிந்த அக்கலைஞருக்கு வீதிக்கூட்டம் சார்பாக ரூ 5000/-வழங்கப்பட்டது..
.தமிழகம் மறந்த மாபெரும் கலைஞரை வீதி அனைவருக்கும் அறிமுகப்படுத்தியது.இம்முயற்சியை செய்த விழா ஒருங்கிணைப்பாளர்கள் மீரா.செல்வா & செல்வா ஆகியோருக்கு வீதி அமைப்பு மனம் நிறைந்த வாழ்த்துகளை கூறியது...
அவரைப்பற்றிய ஆவணப்படம் தயாரித்த இளைஞருக்கு கௌரவம் செய்யப்பட்டது.
வீதியில் சிறப்பு விருந்தினராக திருச்சியைச்சேர்ந்த வி.சி.வில்வம் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
நன்றியுரை :மீரா.செல்வா
எதிலும் புதுமையாகச் செய்து பாரட்டுக்கள் பெறும் செல்வா & செல்வா கூட்டணி இன்றும் வீதிக்கூட்டத்தை சிறப்பாக நடத்தியதை அனைவரும் பாராட்டி மகிழ்ந்தனர்.